(ஃபிப்ரவரி 2020 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)
வானத்திற்கு கீழே அனைத்தையும் பற்றி காந்தி சில கருத்துக்களை கொண்டிருந்தார். எழுதி, நிறுவி, முன்னகர்ந்து என ஓயாமல் அலையடித்துக்கொண்டிருந்தது அவருடைய கருத்துலகம். இத்தனை பரந்த விரிந்த கருத்துலகம் என்பதாலேயே அவரை வரையறுப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. நமக்குத் தேவையான காந்தியை மேற்கோள்களின் ஊடாக வெட்டியொட்டி உருவாக்கிவிட முடியும். காந்தி இங்கு எல்லாருக்கும் தேவைப்படுகிறார். சில நேரங்களில் கரம் கோர்க்கவும் சில நேரங்களில் எதிர் நிறுத்தவும்.
காந்திக்கு இந்திய பண்பாட்டின் மீது, கிழக்கத்திய நாகரீகத்தின் பெருமதிப்பு உண்டு. ஒருவகையில் அது காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்த பெரும் உரையாடலின் ஒரு பகுதி. இந்தியர்களை உய்விப்பது ‘வெள்ளையரின் பளு’ எனும் கருத்தியலுக்கு எதிராக ஒரு பண்பாட்டு/வரலாற்று பொற்காலத்தை கற்பிதம் செய்ய வேண்டி இருந்தது. இந்த பொற்காலமும் கூட வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்ற இந்தியவியலாளர்களின் பங்களிப்புகளால் உருவானது என்பது சுவாரசியமான முரண். காந்தியின் இந்திய பெருமிதம் பிறரிடமிருந்து திட்டவட்டமாக சில புள்ளிகளில் வேறுபடுகிறது. நவீன நாகரீகத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை கொண்டிருந்தபோதும், சுவாமி தயானந்த சரஸ்வதியைப் போல் ‘வேதங்களுக்கு திரும்புங்கள்’ என அறைகூவல் விடுக்கவில்லை அவர். “கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டை கருதுகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன் “ என்று சொன்னவர்.
காந்தியின் புரிதல்களை அறிந்துகொள்ள அவர் இந்தியாவின் தொன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தின் மீது கொண்டிருந்த பார்வையை பரிசீலிக்கலாம். ஆயுர்வேதத்தின் எழுச்சி இந்திய தேசிய கட்டுமானத்தோடு இணைத்து புரிந்துகொள்ளத்தக்கது. அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸ் எனும் அமைப்பும் உருவானது. சுதேசிய கட்டமைப்பின் ஒருபகுதியாக வேகம் பெற்றது. வங்காளத்தைச் சேர்ந்த கவிராஜர் கணநாத சென் அவ்வகையில் ஒரு முக்கியமான ஆயுர்வேத வரலாற்று ஆளுமை. ஆயுர்வேத மறுமலர்ச்சியின் முகங்களில் ஒருவர். காந்திக்கும் அவருக்குமான உறவு மதிப்பும் விலகலும் கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆயுர்வேதத்தை பற்றி அவர்கள் இருவரும் கொண்டிருந்த கருத்துக்களை நூறாண்டுகளுக்கு பின்னர் இன்று வாசிக்கையிலும் கூட பெரிதாக நிலைமை மாறிவிடவில்லை என்பது மிரட்சியை அளிக்கிறது.
காந்திக்கு தொடக்க காலங்களில் ஆயுர்வேதத்தின் மீது பெருத்த நம்பிக்கையும் மதிப்பும் இருந்துள்ளது. 1915 ஆம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தில், ‘எனக்கு ஆயுர்வேதத்தின் மீது மிகப்பெரிய மதிப்பு உண்டு. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஆரோக்கியத்தை உறுதி செய்த தொன்மையான அறிவு துறைகளில் அதுவும் ஒன்று. ஆயுர்வேத கோட்பாடுகளின் படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவுரை அளிக்கிறேன்.’ என்று எழுதினார். CWMG -VOL 13, 15)
காந்திக்கு நவீன மருத்துவத்தின் மீதும் மருத்துவர்கள் மீதும் கடும் விமர்சனம் இருந்தது. இந்து சுயராஜ்ஜியத்திலேயே அதை வெளிப்படுத்துகிறார். மருத்துவம், நீதித்துறை, ரயில்வே என எவையெல்லாம் காலனிய ஆட்சியின் கொடை எனக் கருதப்பட்டதோ அவற்றுக்கு எதிராக தீர்க்கமான விமர்சனங்களை காந்தி எழுப்பி இருப்பார். நவீன அறிவியலையே புறக்கணிக்கிறார் என அவருடைய இக்கருத்துக்களின் பொருட்டு விமர்சிக்கப்பட்டார். உலகையே தங்களுக்கான விற்பனை சந்தையாக ஆங்கிலேயர்கள் காண்கிறார்கள் என்றொரு விமர்சனத்தை முன்வைத்த காந்தி, அந்த சந்தையின் ஒரு பகுதியாகவே ஆங்கிலேயர்களின் கல்வி, ரயில்வே, மருத்துவம், நீதியமைப்பு என எல்லாவற்றையும் பார்த்தார். ‘நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆங்கிலேயர்கள் வைத்திய தொழிலைச் சரியானபடி உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.’ என குற்றம் சாட்டுகிறார். கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயலினால் விளையும் நோயை குணப்படுத்துவதன் வழியாக நவீன மருத்துவம் மனிதர்களை பலவீனப்படுத்துகிறது என்றொரு வாதத்தை வைக்கிறார். ‘பாபங்களை பரப்பும் ஸ்தாபனங்களே ஆஸ்பத்திரிகள்’ என குற்றம் சுமத்துகிறார்.
காந்தியின் நவீன மருத்துவ விமர்சனத்தை அவருடைய வாழ்வுடன் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டபோது நவீன அறுவை சிகிச்சையின் உதவியை நாட அவர் தவறவில்லை. நவீன மருத்துவமோ நவீன அறிவியலோ அவருக்கு எதிரியில்லை. நவீன மருத்துவத்தின் அமைப்பாக்கத்தன்மையைத்தான் விமர்சித்தார். நவீன மருத்துவத்தை விமர்சிக்கும் காந்தி அதற்கு மாற்றாக மரபு மருத்துவத்தை நிறுத்தவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸ் காந்தியும் இந்திய தேசிய காங்கிரசும் ஆயுர்வேதத்திற்கு போதிய அளவு ஆதரவு அளிக்கவில்லை என வருந்தியதை ழான் லாங்க்போர்ட் குறிப்பிடுகிறார். ஆயுர்வேத மறுமலர்ச்சி காலகட்டத்தில் ஆயுர்வேதமும் நவீன மருத்துவத்தை பின்பற்றி அமைப்பாக்க வழிமுறையில் பயணித்து கொண்டிருந்ததை காந்தி உணர்ந்திருக்கக்கூடும். ஆகவே காந்தி இவற்றுக்கு மாற்றாக அவர் இயற்கை மருத்துவத்தை தனது முறையாக கொண்டார். இயற்கை மருத்துவத்தில் மனிதனை இயற்கையே குணப்படுத்துகிறது. மருத்துவன் அதற்கு ஊரு விளைவிக்காமல் உதவ வேண்டும். இயற்கையை செயலாற்ற அனுமதிக்க வேண்டும். காந்திக்கு இது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை இல்லை. அவர் அன்றாடம் பின்பற்றிய முறை. பெரினிசியஸ் அனிமியா என கஸ்தூரிபாவுக்கு நோய் கண்டறிந்தபோது காந்தி இயற்கை மருத்துவத்தையே கையில் எடுத்தார். தென்னாப்பிரிக்காவில் ப்ளேக் பரவியபோது அவருடைய தனிப்பட்ட பொறுப்பில் மூவருக்கு மண் சிகிச்சை அளிக்கிறார். அவர்களில் இருவர் பிழைக்கின்றனர். முகாமில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட பிறர் மரிக்கின்றனர். மில்லி கிரகாம் போலாக் காந்தி மட்டும் ஒரு அரசியல் தலைவராக ஆகியிருக்காவிட்டால் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹீலர்களில் ஒருவராக ஆகியிருப்பார் எனக்குறிப்பிடுகிறார்.
.
கவிராஜ் கணநாத சென்னின் அழைப்பின் பேரில் தான் காந்தி கொல்கத்தா அஷ்டாங்க ஆயுர்வேத கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவுக்கு செல்கிறார். கணநாத் சென்னின் ‘ஆயுர்வேத அறிவியல்’ எனும் புத்தகம் காந்தியின் புத்தக சேகரிப்பில் உள்ளது. 1916 ஆம் ஆண்டு வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு மதன் மோகன் மாளவியாவால் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். அதே கூட்டத்தில் கணநாத் சென்னும் ஆயுர்வேதம் குறித்து உரையாற்றியிருக்கிறார் என்றவகையில் காந்திக்கு அவர் அறிமுகம் ஆகியிருக்கக்கூடும். அங்கே கணநாத் சென் ‘பிற அனைத்து மருத்துவமுறைகள் மொத்தமாக எத்தனைப்பேரை காப்பற்றியதோ அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இந்திய மக்களை ஆயுர்வேதம் காப்பாற்றி வருவது மட்டுமின்றி பெரும்பாலும் முழுமையாக குணப்படுத்தவும் செய்கிறது. அதன் வெளிநாட்டு போட்டியாளர்கள் பலவும் அதை விட்டு விலகிச்சென்ற அதனுடைய வாரிசுகள்தான்’ என கூறியுள்ளார்.
காந்தி கொல்கத்தா அடிக்கல் நாட்டுவிழாவில் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. “நான் பதின்ம பிராயத்திலிருந்தே, அவரவர் பகுதிகளில் பேர் போன பல வைத்தியர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். ஒரு காலத்தில் நான் ஆயுர்வேத மருத்துவத்தை முழுமையாக நம்பினேன், மேற்கத்திய மருத்துவத்தை நாடிய எனது நண்பர்களுக்கும் இந்த ஆயுர்வேத மருத்துவர்களை காணுங்கள் என நான் பரிந்துரை செய்வேன். ஆனால் உங்களிடம் நான் ஏமாற்றப்பட்டேன் என ஒப்புகொள்ள கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நமது ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவர்களுக்கு கொஞ்சம் அறிவு மட்டு. அவர்களிடம் பணிவே கிடையாது. மாறாக தங்களுக்கு எல்லாம் தெரியும் எனும் திமிரே இருந்தது, அவர்களால் குணப்படுத்தமுடியாத வியாதியே இல்லை என்று எண்ணினார்கள். வெறுமே நாடி பிடித்து பார்ப்பதன் வழியாக நோயாளிக்கு அப்பெண்டிசைடிஸ் இருக்கிறதா அல்லது வேறு நோய்கள் இருக்கிறதா என கண்டறியமுடியும் என அவர்கள் நம்புகிறார்கள் என அறிந்தேன். பெரும்பாலான சமயங்களில் அவர்களுடைய நோயறிதல் பிழையானது மற்றும் முழுமையானதல்ல என அறிந்த போது, இது வெறும் ஏமாற்று எனும் முடிவுக்கு வந்தேன். மருந்துகளுக்கான விளம்பரங்களை பார்த்த போது – கவிராஜை கூறவில்லை, யுனானி ஹகீம்கள் மற்றும் வைத்தியராஜ்களின் விளம்பரங்கள், அவமானமாக இருந்தது. என்னை வெட்கமடையச் செய்தது , மிகவும் கடைநிலையில் உள்ள மானுட இச்சைகளை பேசும் இந்த விளமபரங்கள் நமது செய்திதாள்களையும், வாரந்திரிகளையும் அலங்கோலப்படுத்துகின்றன”. (CWMG – Vol 27 – 43)
காந்தியின் இந்த விமர்சனங்கள் பல ஹகீம்களையும் வைத்தியர்களையும் புண்படுத்தியது. ஒருவகையில் அவர் அதை எதிர்நோக்கியிருந்தார். காந்தி “ஆயுர்வேதத்தை விமர்சிக்கவில்லை ஆனால் அதை பின்பற்றுபவர்களாக சொல்லிகொள்ளும் சிலரை தான் விமர்சித்தேன்” என்றார். நட்பார்ந்த ரீதியில் தான் செய்த விமர்சனத்தை நிராகரிக்கும் உரிமை வைத்தியர்களுக்கு உண்டு, அப்படி செய்தால் தான் வருந்துவேன், தான் சொன்ன எல்லாவற்றிற்கும் பல அனுபவங்களும் ஆதாரங்களும் உண்டு என்றார். ‘தொன்மையாகவும் மேன்மையாகவும் இருப்பவை எனக்கும் பிடிக்கும் தான், ஆனால் அவற்றின் கேலிக்குள்ளாகும் நகல்களை முழுமையாக வெறுக்கிறேன். மேலும் பண்டைய நூல்கள் அவை பேசுபவற்றின் இறுதி சொல் எனும் நம்பிக்கையிலிருந்து மதிப்புடன் என்னை விலக்கிகொள்வேன். மூதாதைகளின் அறிவார்ந்த வாரிசாக, நம்மை வந்தடைந்திருக்கும் மரபை வலுப்படுத்தவும் மேம்படுத்தவுமே விழைகிறேன்.’ என்றார். மேலும் ‘சிறுபான்மையினர் என்றாலும், அடக்கத்துடன் அறிவியல் ஆய்வுகளை செய்து வரும் சில கவிராஜர்கள் தனது விமர்சனத்தை வரவேற்றுள்ளதாகவும், அந்த சிலர் எண்ணிக்கையில் பெருக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் எழுதினார் (CWMG 0 vol 27 – 344)
இந்த சர்ச்சையை ஒட்டி கணநாத சென் காந்திக்கு கடிதம் எழுதுகிறார். வங்காள செய்தி இதழ்களிளும் ஆயுர்வேத வட்டாரத்திலும் அவருடைய உரை சர்ச்சை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டி, ஒட்டுமொத்தமாக ஆயுர்வேதத்தை குறைசொல்லவில்லை, அதை பின்பற்றும் சிலரின் குறைகளையே விமர்சனம் செய்தேன் என விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என கோருகிறார். காந்தியும் அதை ஏற்று விரிவாக ஆயுர்வேதம் குறித்த தனது பார்வையை, விமர்சனத்தை எழுதினார். மருத்துவம் ஆன்மாவை கருத்தில் கொள்வதில்லை, உடலை மட்டுமே கருத்தில் கொள்கிறது என பொதுவாக தனக்கு மருத்துவ முறைகள் மீதிருக்கும் விமர்சனத்தை சொல்லிவிட்டு, குறிப்பாக ஆயுர்வேத மருத்துவர்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுகிறார். “பெரும்பாலான ஆயுர்வேத வைத்தியர்கள் போலியானவர்கள், தாங்கள் அறிந்திருப்பதை காட்டிலும் அதிகமாக தெரிந்தது போல் நடிப்பவர்கள்....அவர்கள் ஆயுர்வேதத்தை முறையாக கற்று உலகறியாமல் புதைந்து கிடக்கும் அதன் ரகசியங்களை வெளிகொனர்வதில்லை. ஆயுர்வேதத்திற்கு இல்லாத சர்வ வல்லமையை அவர்கள் ஆயுர்வேதத்தின் மீது சுமத்துவார்கள். அப்படி செய்வதன் வழியாக ஒரு காலத்தில் மிகவும் முற்போக்காக இருந்த அறிவியலை தேங்க செய்கிறார்கள். மேற்கத்திய மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் பெருமையுடன் பறைசாற்றிகொள்ளும் அபாரமான கணக்கற்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடத்தக்க ஒரேயொரு ஆயுர்வேத வைத்தியரின் கண்டுபிடிப்பை கூட நான் அறிந்ததில்லை.” நாடி நோக்கி நோயறியும் முறை மீதான நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறார். தாவரம் மற்றும் உலோகங்களின் மருத்துவ பயன்பாட்டை பற்றிய அறிவை மட்டுமே அவர்கள் உரிமை கோர முடியும். அதுவும் பிழையாக கணிக்கப்பட்ட நோய்க்கு அளித்து நோயாளிகளுக்கு வாதையை அதிகரிக்கிறது என எழுதுகிறார். ‘மிகவும் கீழ் தரமான விளம்பரங்களை ஆயுர்வேத வைத்தியர்கள் செய்கிறார்கள். அவ்வகை வைத்தியர்களுக்கு ஆயுர்வேத சமூகத்தில் நன்மதிப்பும் இருக்கிறது என அறிகிறேன். நானறிந்தவரை எந்த ஒரு ஆயுர்வேத சங்கமும் இவ்வகையான அற வீழ்ச்சியை கண்டித்ததில்லை’ என்கிறார். மேலும் இறுதியாக “நான் பட்டியலிட்ட கேடுகளை ஆயுர்வேதம் மேற்கத்திய மருத்துவத்திடம் இருந்து நகலெடுத்து கொண்டது என கூறப்படும் சாக்கு எல்லாம் ஒரு பதிலே அல்ல. அறிவுள்ளவன் பிறரிடமிருந்து நல்ல விஷயங்களையே நகலெடுப்பான், மோசமானவைகளை அல்ல. நமது கவிராஜர்கள், வைத்தியர்கள், ஹகீம்கள் மேற்கத்திய மருத்துவர்கள் காட்டும் அறிவியல் முனைப்பை நகலெடுக்கட்டும். அவர்களுடைய பணிவை பிரதி செய்யட்டும். அவர்களை ஏழ்மையில் ஆழ்த்திக்கொண்டு மண்ணின் மருந்துகளை ஆய்வு செய்யட்டும், அவர்களிடம் இல்லாதவற்றை மேற்கத்திய மருத்துவத்திலிருந்து திறந்த மனதுடன் ஏற்று தமதாக்கி கொள்ளட்டும். மேற்கத்திய மருத்துவத்தின் ஆன்மீகமற்ற தன்மையை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். உடலை குணபடுத்தவும், அறிவியலின் பேரால் தன்னை விட கீழான பிராணிகளை கூருபோட்டு வதைக்கிறார்கள். ஆயுர்வேதத்திலும் பிராணிகளை கூருபோட அனுமதியுண்டு என சிலர் சொல்லக்கூடும். மன்னிக்க வேண்டும், நால்வேதங்கள் கூட பலியை புனிதபடுத்த முடியாது.’ CWMG- 27. (யங் இந்தியா 1925)
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு பின்னர் காந்தியின் இந்த சொற்களை இன்று வாசித்தபோது அப்படியொன்றும் நிலைமை மாறிவிடவில்லை என்றே தோன்றுகிறது. பத்திரிக்கைகளில் இருந்து காட்சி ஊடகத்திற்கு மாறியிருக்கிறார்கள். நோயறிதல், சிகிச்சை என எல்லா சிக்கல்களும் இன்றும் தொடர்கின்றன. காந்தியின் விமர்சனம் நிச்சயம் ஒரு தீர்க்கத்தரிசனம்தான். கணநாத் சென்னின் உரைகளை வாசிக்கும்போது ஆயுர்வேதத்தை அறிவியல் படுத்தும் முயற்சியில், அதன் தொன்மை சார்ந்த பெருமையில், நவீன அறிவியல் ஆயுர்வேதம் எனும் எதிரீடில் எந்த புதிய போக்குகளையும், பதில்களையும் யாரும் உருவாக்கவில்லை என்பதையும் உணர முடிகிறது. அன்றைய வைத்தியர்கள் செய்துகொண்டிருந்த/ சொல்லிக்கொண்டிருந்த அதே தவறுகளையும் சாக்குகளையும் தான் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் எனும் நிதர்சனம் ஆயுர்வேத மருத்துவனாக பெரும் சங்கடத்தை அளிக்கிறது.
காந்திக்கு முன்னரே சுதேசிய கோட்பாடு திலகரால் முன்னெடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சுதேசி கோட்பாடு அங்கிருந்தே வேர்கொண்டது. காந்தியுடைய சுதேச கோட்பாடு அவர்களிடமிருந்து மாறுபட்டது. சுதேசி கோட்பாட்டின் படி மேற்கத்திய மருத்துவத்தை புறக்கணித்து ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தை முன்னெடுப்பதை ஆதரிக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது ‘அந்நிய தேசத்தை சேர்ந்தது என்பதற்காகவே பயனளிக்கும் அத்தியாவசியமான ஒன்றை தவிர்ப்பது சுதேசி கோட்பாட்டை சுருக்குவதாகும்’ என பதில் அளிக்கிறார். (CWMG – vol 31- 12)
காந்தியின் வழிமுறை என்பது நடைமுறை லட்சியவாதம் சார்ந்தது. ‘சத்திய சோதனையில்’ அவர் பொதுப்பணத்தில் செயலபடும் அமைப்புகள் குறித்து எழுதும்போது அவற்றுக்கான தேவையை மக்கள் உணர்ந்தால் அது செயல்படும், அப்படியில்லை என்றால் அது மறைந்துவிடும், அதை செலவழித்து நிறுவக்கூடாது என சொல்கிறார். காந்திக்கு இருக்கும் இந்த நம்பிக்கை இயற்கை வைத்திய நம்பிக்கையுடன் சேர்ந்ததே. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பேரறத்தின் மீது நம்பிக்கை கொண்டார். இயல்பாக காந்தியை நாம் செயல்வழி யோக மார்க்கத்தை சேர்ந்தவர் என்றே புரிந்துகொள்கிறோம். அங்கே மனிதன் விழிப்புணர்வுடன் வகுக்கப்பட்ட கடமையை செய்கிறான். ஆயுர்வேதத்தின் மீதான பார்வையையும் அப்படியே புரிந்துகொள்ளமுடியும். நல்ல பலனளிக்கும் விலை மலிந்த ஆயுர்வேத மருந்துக்களை மேற்கத்திய மருத்துவம் பயின்றவர்கள் புறக்கணிப்பதையும் அவர் ஏற்கவில்லை. ஆயுர்வேதத்தின் மீதிருந்த மதிப்பு என்பது பெருமிதத்தின் பகுதியாக வந்தது அல்ல மாறாக அதன் நடைமுறை பயன் கருதியே. இந்த மதிப்பீடு அவரை வழிநடத்தியதால் அவரால் ஆயுர்வேதத்தை கடுமையாக விமர்சிக்கவும் முடிந்தது.
கங்காதர் சாஸ்திரி ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில், ‘ஆயுர்வேதம் நீங்கள் முன்வைப்பது போல் எளிமையான, மலிவான, மிகுந்த பலனளிக்கும் மருத்துவ முறையாக இல்லை. இன்றைய தேதியில் ஆயிரம் ரூபாய் வரை வாங்கும் வைத்தியர்கள நான் அறிவேன், ஆகவே மேற்கத்திய மருத்துவர்களுக்கு ஈடாகவே இவர்களும் வசூலிக்கிறார்கள். ஆயுர்வேதத்தின் செயல்திறன் மீது நம்பிக்கை இழந்து தான் நவீன மருத்துவத்தை நாடுகிறார்கள். நேரெதிராக நடப்பதும் உண்டு, எனில் முன்னவர்களே அதிகம். எனது அனுபவத்தில் மலேரியாவுக்கு க்வினைன் அளவுக்கு, சாதாராண மேல் வலிக்கு அயோடின் அளவுக்கு, கிருமிநாசினியாக கோண்டி (condy’s)எண்ணெய் அளவுக்கு பலனளிக்கும் வேறெதையும் கண்டடையைவில்லை என்கிறார். (CWMG 34, 199). காந்தியின் விமர்சனம் ஆயுர்வேதத்தின் அன்றைய நிலையை கருத்தில் கொண்டது. அதன் தொன்மை மேன்மை சார்ந்து அல்ல. இன்றைய தேதியில் அது மக்களிடமிருந்து விலகியதாக, விலை உயர்ந்ததாக இருக்கிறது என்றே சொல்கிறார்.
ஆயுர்வேதத்தின் தற்கால பங்களிப்பு என்ன? அதன் கண்டுபிடிப்பு என்ன எனும் கேள்வி காந்தியுடைய கவலையாக இருந்திருக்கிறது. தற்கால அறிவியல் பங்களிப்பின் பொருட்டே அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆயுர்வேதத்தில் புதிய திசை நோக்கிய பயணம் நிகழவில்லை என்பதை தீர்க்கமாக சுட்டிக்காட்டுகிறார். ‘நமது வைத்தியர்கள் அச்சிடப்பட்ட உள்ளடகத்தையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆயுர்வேத மருந்துகள் கூறும் பல்வேறு பலன்களை நானும் அறிவேன். ஆனால் இன்று நிரூபிக்க முடியவில்லை என்றால் அதனால் என்ன பயன்?’ என கேள்வி எழுப்புகிறார் (யங் இந்தியா 8-8-1929)
தேன் பயன்பாடு பற்றிய ஒரு கடிதத்தில், ‘நூலில் உள்ளவற்றை அப்படியே சொல்வதோடு ஆயுர்வேத வைத்தியர்கள் தேங்கி விட்டார்கள், தங்களது அனுபவத்தில் பொருத்தி பார்க்கவில்லை’ என விமர்சனம் செய்கிறார். வைத்தியர்கள் அனுபவம் மற்றும் பரிசோதனையின் பாதையை தேர்வதற்கு பதிலாக வெறுமே நூல்களில் இருந்து ஸ்லோகங்களை மேற்கோள் அளிப்பதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். (நாராயண குல்கர்னிக்கு எழுதிய கடிதம், 20/10/1932). காந்தி மறைப் பிரதிகளை விடவும் தன்னனுபவங்களை மேலாக கருதியவர்.
1941 ல் படேலுக்கு எழுதிய கடிதத்தில் கூட ஆயுர்வேத வைத்தியர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றே எழுதுகிறார். மற்றொரு தருணத்தில், ‘ஆயுர்வேத வைத்தியர்களின் மீதான விமர்சனம் என்பது வேறு. அரசு ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு நிதி அளிப்பதை நிச்சயம் எதிர்க்க மாட்டேன், அது காலத்தின் அவசியம்’ என எழுதுகிறார்.
‘ஆயுர்வேதத்தை பணத்தாலோ அல்லது அரசாங்க உதவியாலோ காப்பாற்ற இயலாது என உங்களிடம் முன்னரே கூறியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் ஆயிரகணக்கான ரூபாய்களை அரசாங்கம் மரபு மருந்துகளை செய்பவர்களுக்கு அளித்தால் ஆயுர்வேதத்தை மீட்டிட இயலுமா?
ஆயுர்வேதாச்சாரியர் கணநாத சென் வெளியூருக்கு சென்றால் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார். யாகமின்றி எதையும் சாதிக்க முடியாது. யாகம் என்றால் வியர்த்து சோர்ந்து போகும் அளவுக்கு தொடர்ந்து அறிவுழைப்பை அளிப்பது. ஆயுர்வேதம் இன்னும் அறிவியலாகவில்லை, அறிவியலில் எப்போதுமே முன் செல்வதற்கான இடமுண்டு. அப்படி எதாவது வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறதா?’ (வல்லப்ராம் வைத்தியருக்கு எழுதிய கடிதம் 28/6/1942)
கணநாத் சென் பெயரை குறிப்பிட்டு அவர் மீதான குற்றத்தை சுமத்துகிறார். முன்னரே காந்தி அரசல்புரசலாக ஆயுர்வேத வைத்தியர்கள் அதிகம் வசூலிக்கிறார்கள் என சொல்லிவந்தாலும் கணநாத் சென்னின் மீது குற்றம் சுமத்துவதை தவிர்த்து வந்தார். ஆயுர்வேதத்தின் முகம் என அறியப்பட்டவரின் நிலை அவரை வெகுவாக சீண்டியிருக்க வேண்டும்.
1946 ஆம் ஆண்டு ஒரு விவாதத்தில் ஏன் வைத்தியர்களை நாடாமல் எப்போதும் மருத்துவர்களையே நாடுகிறீர்கள் என ஒரு கேள்வி காந்தியிடம் எழுப்பப்பட்டது. அப்போதும் காந்தி ஆயுர்வேத வைத்தியர்களின் நோயறிதல் முறையை விமர்சனம் செய்கிறார். ‘ஒன்று முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும். உலகத்தில் எதுவுமே அப்படியே தேங்கி நிற்பதில்லை. தேங்கி நிற்பவர்கள் உயிரற்றவர்கள் ஆகிறார்கள்.’ என கூறுகிறார்.(CWMG – vol 84 212)
ஆயுர்வேதத்தை முழுக்க அறிவியல் காரணங்களுக்காக நிராகரிக்கவில்லை. ஏனெனில் 1946 வாக்கில் ராமநாமமே எல்லா நோய்களுக்கும் தீர்வு. ஆயுர்வேதத்தின் அடிப்படை அதுவே என தன்னிடம் கூறப்பட்டுள்ளது என சொல்கிறார். ராமநாமம் நோய்களை தீர்க்கும் என்பதொரு நம்பிக்கை மட்டுமே. அதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆனால் அவருடைய அனுபவ உண்மையாக அந்த நிலையை வந்தடைகிறார். காந்தியின் வழிமுறை தர்க்கம் சார்ந்தது. அவரை ஏற்கச்செய்யும் தர்க்க வலிமை அன்றைய ஆயுர்வேத தரப்பிற்கு இல்லை. இன்றளவும் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆயுர்வேதத்தின் மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் கொண்டவராக இருந்தவர் காலப்போக்கில் அதன் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைப்பவராகவும், பிற்காலத்தில் மொத்தமாகவே நிராகரிப்பவராகவும் பரிணாமம் கொள்கிறார். காந்தி இந்திய பெருமிதம், கிழக்கத்திய பண்பாடு, இந்திய தேசியம், ராமநாமம் என பலவற்றையும் விடுதலைக்கான கதையாடலில் நடைமுறை பயன்பாடு கருதியே பயன்படுத்தினார் என புரிந்துகொள்ள இடமுண்டு. கோபராஜூ ராமச்சந்திர ராவ் என்கிற கோரா “காந்தியுடன் ஒரு நாத்திகன்” எனும் சிறு நூலை எழுதி இருக்கிறார். மிக சுவாரசியமான அந்நூலின் இறுதி கட்டுரையில் காந்தி நாத்திகவாதத்தை ஏற்க நெருங்கி வந்தார் என எழுதுகிறார். “பாபுஜியின் மனமானது எப்போதும் விரிந்து முன்சென்றுகொண்டே இருந்தது.அவர் மனிதத்தை புதிய எல்லைகளுக்கு முன்னகர்த்தினார்,அவர் மனிதத்தின் போக்கிலேயே முன்னகர்ந்தார்.அவரது மானுட பார்வை ரகுபதி ராகவ வகை கடவுள்களில் தொடங்கியது, அவர் முன்நகர முன்நகர வாய்மையே கடவுள், கடவுளே வாய்மை போன்ற நிலைகளை கடந்தார்.பழம் சுமைகளை எக்காலத்திலும் வளர்ச்சிப்பாதைக்கு தடையாக அவர் வளரவிட்டதில்லை.மனிதகுலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மனிதன் கடவுளை துறக்க வேண்டும் எனும் நிலை வந்தால்,அவர் நிச்சயம் அதை செய்ய தயங்கிட மாட்டார்.”
காந்தியிடம் சித்தாந்தங்கள் என ஏதுமில்லை அவரிடம் வழிமுறைகள் மட்டுமே இருந்தன ஆகவே அவர் மெய்யியலாளர் அல்ல என விமர்சிப்பவர்கள் உண்டு. ஒருவகையில் அது உண்மைதான், ஆனால் இந்தக் கூறே காந்தியத்தை ஒருபோதும் அடிப்படைவாதம் கைகொள்ளமுடியாததாக ஆக்குகிறது. மாறுபட்ட சித்தாந்தங்கள் உடையவர்களை எதிர்தரப்புகளை நோக்கி உரையாடச் செய்கிறது. காந்தியம் முற்றதிகாரத்திற்கு எதிரான ஆற்றல் வாய்ந்த எதிர்வினையாகிறது.
-