(ஃபேஸ்புக்கில் சரவணன் மாணிக்கவாசகம் எழுதியிருந்த குறிப்பை நண்பர்கள் ஜீவ கரிகாலனும் ஸ்ரீதர் நாராயணனும் அனுப்பி இருந்தார்கள். சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி. வாசிக்க தனியாக இயந்திரம் எதுவும் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை)
ஆசிரியர் குறிப்பு:
சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் இலக்கிய உலகில் இயங்குபவர். தொழில்முறை ஆயூர்வேத மருத்துவர். அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். நீலகண்டம் என்ற இவரது நாவல் மிக முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று. இந்த நூல் இணையத்தில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
இங்கே தலைவர்கள் ஒன்று புனிதர்கள் ஆவார்கள் இல்லை கொடுங்கோலன் ஆவார்கள். இரண்டுக்கும் இடையில் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. மற்ற தலைவர்களுக்கும், காந்திக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் அவரை என்ன விமர்சனம் செய்தாலும் காந்தியவாதிகள் கைத்தடி (உண்மையில் கம்பு தான்) கொண்டு அடிக்க வருவதில்லை. மற்ற தலைவர்களை விமர்சனம் செய்தால் நாம் மட்டுமன்றி நம் குடும்பமும் நிம்மதி இழக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் காந்தி இன்றும் எளிய மனிதர்.
முதல் இரண்டு கட்டுரைகள் காந்தியக்கல்வி குறித்து. தாய்மொழியில் கல்வி, பாடப்புத்தகங்களைத் தாண்டிய கல்வி என்பது இன்றும் சாத்தியம். ஆனால் காந்தி ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்தார். அந்தக்கால சூழ்நிலை வேறு. இன்று Global village என்று பேசப்படும் காலத்தில் ஆங்கிலத்தைப் புறக்கணித்தால் நாம் தனிமைப்படுத்தப்படுவோம்.
அடுத்த இரண்டு கட்டுரைகள் காந்தியின் மதம் குறித்த பார்வையைப் பேசுகின்றன. காந்தி தன்னை இந்துவாக அடையாளப்படுத்தினார், அடையாளப்படுத்தப்பட்டார். அதனால் தான் மதங்களைத் தாண்டிய அவரது சார்பின்மையை பெரும்பாலோர் கவனிக்கத் தவறினார்கள். மதவிசயத்தில் அவருக்குத் தோல்வி தான். அவரது மரணமே ஒரு மதஅரசியலாக முடிந்தது.
அடுத்த நான்கு கட்டுரைகள் காந்தியின் அகிம்சை கொள்கையைப் பற்றி பேசுகின்றன. காந்திக்குப் பிறகு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்பட்டும், பேசப்பட்டும் இருக்கின்றன. அகிம்சையை ஆயுதமாக முதலில் கையாண்டவர் காந்தி என்பதும் மறுக்க முடியாத உண்மை.
காம்ரேட் காந்தி என்ற கட்டுரை காந்தியின் பொருளாதார சமத்துவம் பற்றிய நல்லதொரு கட்டுரை.
மில்லியின் காந்தி, மில்லி போலக்கின் பார்வையில் காந்தியும், அவரது குறிப்பிடத் தக்க புத்தகமான Mr Gandhi: The Man குறித்தும் பேசுகிறது.
ஜெயராம் தாஸ், காந்தியால் மனமாற்றமடைந்த இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்த்தனே (அந்த அரக்கன் இல்லை) எனும் செல்வந்தர் பற்றிய பதிவு.
காந்தியும் பகத்சிங்கும் கட்டுரை, இன்னொரு கோணத்தில் இருந்து விவாதிக்கிறது. ஆனால் பகத்சிங் குறித்த நூல்கள் சொல்லுவது வேறு. (இது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை)
தண்டி யாத்திரை மக்களை ஒருங்கிணைத்த ஒரு அறவழிப் போராட்டம்.
காந்தியும் 55கோடியும் ஒரு முக்கியமான கட்டுரை. பாகிஸ்தான் அதற்கான சின்ன நன்றியைக்கூட காட்டவில்லை. எத்தனையோ பிரச்சனைகளைத் தாண்டி இன்று இந்தியா ஒரு வல்லரசு. தொழில் துறை, விஞ்ஞானம் என அனைத்திலும் நாம் உலக அளவில் முன்னணி. On the other hand Pakistan is a bankrupted, terrorist state. அவர்கள் அணுஆயுதமே திருட்டிலும், நம்பிக்கைத் துரோகத்திலும் அமைக்கப்பட்டது. காலம் வரலாற்றுத் தவறுகளை சரி செய்கிறது என்பதைக் கடந்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
அன்புள்ள புல்புல் காந்தியின் நகைச்சுவை உணர்வுக்கு சாட்சியாக சில சம்பவங்களைக் கூறுகிறது.
வின்சென்ட் ஷீனின் காந்தி குறித்த முக்கியமான புத்தகம், ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரின் பார்வை.
காந்தியை அறிதல் என்ற தரம்பாலின் நூல் ஒரு முக்கிய ஆவணம்.
Freedom at Midnight, Last Vicerine போன்ற புத்தகங்களில் வெளிநாட்டவர் அளிக்கும் பார்வை வேறு. இரண்டாம் உலகப்போரின் பின் இங்கிலாந்திற்கு இந்தியாவை வைத்துக் கொள்வது எந்த வகையிலும் லாபகரமில்லை. அதே நேரத்தில், இந்து முஸ்லீம் கலவரங்களினால் ஓடும் இரத்த ஆற்றில் அவர்கள் கரங்களை கறைபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. மவுண்ட்பேட்டன் நீங்கள் தான் கடைசி வைசிராய் என சொல்லப்பட்டே அனுப்பி வைக்கப்படுகிறார்.
ஆனால் காந்தி என்னும் மகத்தான சக்தி மக்களை ஒருங்கிணைத்து விடுதலை போராட்டத்தைக் கட்டுக்கோப்பாக கொண்டு சென்றதைப் பற்றி மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. தீண்டாமை எதிர்ப்பு போன்ற எத்தனையோ புரட்சிகரமான மாற்றங்களின் சூத்திரதாரி அவர். நேரு, படேல் போன்ற வேறு துருவங்களை இணைத்த சக்தி. ( படேலின் ஒரே வளர்ப்பு மகள் வறுமையில் கண் பார்வை சரியில்லாமல் அகமதாபாத் வீதிகளில் விழுந்து எழும் நிலைக்கு மூல காரணம் நேருவும் அவர் மகளும். )
இணையத்தில் படிக்காத காரணத்தினால் சுனில் கிருஷ்ணனின் இந்த கட்டுரைகள் மிகுந்த சுவாரசியமான வாசிப்பை அளித்தன.
என் நட்பில் இருக்கும் சித்ரா பாலசுப்பிரமணியம், ரதன் சந்திரசேகர் போன்றவர்களின் காந்தி குறித்த ஆழ்ந்த வாசிப்பில் ஒரு சதவீதம் கூட எனக்கு இல்லை. எனினும் காந்தி என்னும் மாமனிதனை ஒவ்வொரு நிகழ்வாகப் பிரித்து முன்முனைவுகள் இன்றி ஆராய்ந்தால் அவரது மகத்தான சாதனைகளும் சில தோல்விகளுக்கும் காரணம் புரியும். காந்தியே கூட "புனிதம் என்பதற்காக ஆராயாமல் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று சொன்னதைப் படித்ததாக நினைவு.
No comments:
Post a Comment