Wednesday, January 22, 2020

அன்புள்ள புல்புல் - சிவானந்தம் நீலகண்டன் விமர்சனம்

சிங்கப்பூரில் வசிக்கும் சிவானந்தம் நீலகண்டன் தற்காலத்தில் எழுதி வரும் முக்கியமான விமர்சகர்களில் ஒருவர். நேரில் சந்தித்ததில்லை என்றாலும் பதாகை சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார். அவருடைய தளத்தில் அன்புள்ள புல்புல் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை அவரு அனுமதியுடன் இங்கே மீள்பதிவு செய்கிறேன். இந்த கட்டுரையை ஒட்டி அவருடன் சுவாரசியமான கடித உரையாடல் ஒன்று கட்டுரையின் வடிவம் குறித்து நிகழ்ந்தது. கட்டுரைகளில் மேற்கோள்கள் பற்றி எனக்கு அவரிடமிருந்து வேறுவிதமான கருத்து இருந்தது. அதை அவருக்கு எழுதினேன். முழு மேற்கோளை காட்டிலும் சுருக்கி paraphrase செய்வது சிறந்தது என்றார். அவருடைய கருத்துக்களை கவனத்தில் கொள்வதாக எழுதி இருந்தேன்.) 

--
அன்புள்ள புல் புல்’ ஒரு கட்டுரைத் தொகுப்பு. ஆசிரியர் சுனில் கிருஷ்ணன். யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2018. காந்தி இன்று (www.gandhitoday.in) இணையதளத்தில் காந்தி குறித்து வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 196 பக்கங்கள்.

*

இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக ஆசிரியர் காந்தியை வாசகர்க்குச் சற்று விரிவாக அறிமுகம் செய்துவைக்க முயன்றுள்ளார் எனலாம். காந்தி குறித்து முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகளை மறுக்கும் அல்லது அன்றைய சூழலை முழுமையாக விளக்கும் விதமான ஆய்வுத்தன்மையும் விரிவும் ஓரிரு கட்டுரைகளில் உள்ளது ஆனால் ஏனைய கட்டுரைகள் இலகுவான வாசிப்புக்கு ஏதுவாகவே இருக்கின்றன. மேலும் அதிகம் அறியப்படாத சில காந்தியைக் குறித்த நூல்களை அடிப்படையாகக்கொண்ட கட்டுரைகளும் உள்ளன என்பதால் காந்தி ஆர்வலர்களுக்கு அந்த நூல்களையும் தேடிப்பிடித்து வாசிக்கும் முகாந்திரமாகவும் இத்தொகுப்பு பங்களித்துள்ளது.

தான் வாசித்ததை மட்டும் சுருக்கிச் சொல்லிக்கொண்டு போகாமல் தன் கருத்துகளையும் வாதங்களையும் இணைத்து அளித்திருப்பதையே இக்கட்டுரைகளின் முக்கியமான பலமாகக் கருதுகிறேன். அது பெரும் சிந்தனையாளர்களானாலும் சரி அவர்களோடு முரண்படுவதில் ஆசிரியர் பின்வாங்கவில்லை. உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இந்தியர்களுக்குத் தாங்கள் இழைத்த அநீதிகளைக் குறித்த பிரக்ஞை இருந்ததும் காந்தியப் போராட்டங்கள் வெற்றிபெற ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தரம்பால் கூறியுள்ள கருத்தை ஆசிரியர் ஏற்கத் தயங்குகிறார். ஜாலியன் வாலாபாக்கில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்த ஜெனரல் டயர் ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்படவில்லையே, பாராட்டுதானே பெற்றார்? பிறகு என்ன பெரிய அநீதி குறித்த பிரக்ஞை? என்று எதிர்க்கேள்வி போடுகிறார்.

‘மில்லியின் காந்தி’ என்ற கட்டுரை அற்புதம். பாரதிக்கு எப்படி யதுகிரி அம்மாளோ அப்படி காந்திக்கு மில்லி போலக் என்கிறார் ஆசிரியர். காந்தியை வெகுவாக நேசித்தபோதிலும் லண்டனில் பிறந்த மில்லி, காந்தியிடம் எதைக்குறித்தும் எதிர்வாதம் செய்யத் தயங்கவில்லை. இந்து மதத்தின் உயர்ந்த வாழ்க்கை முறைகளை காந்தி எடுத்துக்காட்டினால் அங்கே பெண்களின் நிலை என்ன என்று கேட்பதும், மனித மூளையால் விளைந்த கருவிகளும் இயற்கையின் ஒரு பகுதிதான் என்பதால் அவற்றை விலக்குவது அவசியமில்லாதது என்று காந்தியிடம் வாக்குவாதம் செய்வதும் குறிப்பிடத்தக்கவை.

IMG_6939

புல் புல் என்பது காந்தி சரோஜினி நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் அவரை விளித்த பெயர். காந்திக்குத் தனக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அவ்வப்போது வெவ்வேறு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது வழக்கமாக இருந்துள்ளது. அசந்தர்ப்பமான சூழல்களிலும் காந்தி வெளிப்படுத்திய நிதானம், நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை ‘அன்புள்ள புல் புல்’ கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. ஹேராம் திரைப்படத்தில்கூட காந்தி தமிழில்பேச முயல்வதும் அதில் ‘நேற்று-நாளை’ வேறுபாடு குறித்துக் குழப்பிக்கொண்டு அதையே நகைச்சுவையாக்கி சிரிப்பதாகவும் ஒரு காட்சி உள்ளது.

பெரியார், அம்பேத்கர் போன்றோர்க்கு உள்ள ஒரு புரட்சியாளர் பிம்பம் காந்திக்கு இல்லாததற்குக் காரணம் காந்தி எதிரியாக எவரையும் உருவகிப்பதில்லை என்பதுதான் என்கிறார் ஆசிரியர் தன் முன்னுரையில். ஆசிரியர் குறிப்பிடுவதுபோல காந்தி ஆபத்தற்ற கிழவராகத்தான் தோற்றமளிக்கிறார். ஆனால் அதேநேரம் அவர் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவராகவும் இருந்திருக்கிறார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் அவரது இருப்பு பலரையும் பெருந்தொந்தரவு செய்துள்ளது என்பதை யூகிக்கமுடிகிறது.

வாசிக்கும்போது எழுந்த உறுத்தல்கள் சில உள்ளன.

காந்தியின் கருத்தோ இன்னபிறரின் கருத்தோ அவற்றின் சாரத்தை ஆசிரியர் தன் மொழியில் எழுதிக்கொண்டு போவதுதான் ஆய்வுக்கட்டுரைகள் அல்லாத பொதுவாசிப்புக் கட்டுரைகளுக்கு உகந்தது. சில சொற்களை, வரிகளைத் தாக்கம், பொருத்தம் கருதி மேற்கோளிடலாம் ஆனால் பெரும்பெரும் பத்திகளை மேற்கோள்களாகக் காட்டுவது தவிர்க்கப்படவேண்டும். மேலும் மூலத்திலிருந்து பத்திகளை உருவியெடுப்பது கட்டுரையாசிரியரின் மீதான மதிப்பை வாசகரிடம் சற்றுக் குறைக்கும்.

முன்வைக்கும் ஆளுமையின் கருத்தையும் தன் சொந்தக் கருத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் கலப்பதில்தான் இம்மாதிரியான கட்டுரைகளை சலிப்பின்றி வாசிக்கவைக்கும் சூட்சுமம் உள்ளதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் கட்டுரையின் ஒவ்வொரு பத்தியையும் என்றார், என்கிறார், எழுதுகிறார், சொல்லியிருக்கிறார், கூறியிருக்கிறார், குறிப்பிட்டுள்ளார், முன்வைக்கிறார்,  முற்படுகிறார், கவனப்படுத்துகிறார், கையாள்கிறார், சுட்டிக்காட்டுகிறார் என்று ஈற்றடியின் ஈற்றுச்சீரை மட்டும் மாற்றிமாற்றிக் காலந்தள்ளவேண்டியிருக்கும். அது கைப்புச்சுவை கூட்டிவிடும்.

கட்டுரைத் தொகுப்புகளில் தேர்வும் வைப்புமுறையும் கவனிக்கவேண்டிய அம்சம். ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து காந்தி குறித்த அனுபவம் சீராக வளர்ந்துவரும்போது ‘இந்திய வரலாற்றில் ஒத்துழையாமைப் போராட்டங்கள்’ போன்ற ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையோ அல்லது  ‘நிகழ்கண காந்தி’ போல அனுபவ வளர்ச்சியைக் குலைக்கும் ஒரு கட்டுரையையோ தவிர்க்கவேண்டும். அக்கட்டுரை காந்தி வாசிப்பு தரும் உற்சாகத்துக்கு நேரெதிராகச் சென்று முடிகிறது.

மற்றபடி எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் மலிந்துள்ளன. இது பதிப்பகத்தார் கவனிக்கவேண்டியது.  யாவரும் பதிப்பகம் தான் வெளியிட்ட ‘போர்ஹெஸ்’ நூலைத்தான் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். மெய்ப்புத் திருத்துநர்களாக உதவிய மூவருக்கு அந்த நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகச்சிறப்பான ஆக்கமாக அது இருந்தது. அந்த அளவுக்குப் போய்விட்டு அங்கிருந்து இறங்கக்கூடாது. தான் பதிப்பித்த நூலில் 50 பிழைகளைக் கண்டுபிடிப்பவருக்கு அந்த நூல் இலவசமாக வழங்கப்படும் என்று சி.வை.தாமோரம் பிள்ளை விளம்பரம் செய்தார் என்று ஒரு நூலில் வாசித்தேன். இது நடந்தது 1872ல். அதற்குப் பிறகு சுமார் 150 ஆண்டுகள் ஆன நிலையில் 5 பிழைகள் மட்டும் என்று நம் பதிப்பகத்தார் ஒரு நியதி வைத்துக்கொள்ளவேண்டும்.

சரி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காந்தியைக் குறித்து இதுவரை வாசித்திராதவர்களும் சரி ஓரளவுக்கு ஏற்கனவே வாசித்தறிந்திருப்பவர்களும் சரி, படிக்கவேண்டிய தொகுப்பாகத்தான் இந்நூல் இருக்கிறது. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை அச்சு நூலாக்கவேண்டியது அவசியமா என்ற கேள்வி இருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். நிச்சயம் அவசியம். இல்லாவிட்டால் என்னைப் போன்றோர் இக்கட்டுரைகளை வாசிப்பது அரிது.

*

காந்தி வாசிப்பு பொதுவாக ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவமாகவே எனக்கு இருந்துவருகிறது.  இனம்புரியாத உற்சாகத்தை உண்டாக்கி அதனூடாகச் செயலின்மையையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் துடைத்துக் கழுவிச்செல்லும் ஆற்றல் காந்தியின் எழுத்துகளுக்கு இருக்கிறது. எந்தத் தலைப்பிலான சிந்தனை என்பது ஒரு பொருட்டே அல்ல. அவரது பிரம்மச்சரியமோ, கல்வியோ, பொருளாதாரமோ, சுயராஜ்ஜியமோ எதுவாகவும் இருக்கலாம். ஒரு சில பத்திகளை வாசித்தாலும் உடனே வாழ்க்கையின்மீது ஒரு பிடிமானம் உண்டாவதை உணரலாம். இதை ஒரு வழிபாட்டு மனநிலையிலிருந்து அல்லாமல் அனுபவத்தின் வழியாகவே எழுதுகிறேன்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும். ‘காந்தி வாசிப்பு’ என்று காந்தியின் எழுத்துகளை நேரடியாக (மொழிபெயர்ப்பாகி வந்திருக்கலாம் அது குற்றமில்லை) வாசிப்பதைத்தான் குறிப்பிடுகிறேன். காந்தியைக் ‘குறித்து’ மற்றவர்கள் எழுதியதை, சொல்லியதை வாசித்தவர்களே நம்முள் அதிகமானவர்கள் என்பது என் கணிப்பு. இது ஆபத்தானது மட்டுமல்லாமல் அபத்தமானதும் கூட. கனியிருப்பக் காய் கவர்வானேன்?

நான் காந்தி குறித்து எழுதினாலும் பேசினாலும் இந்த விஷயத்தை மறக்காமல் குறிப்பிட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.  நான் உட்பட எந்த சாதாரண காந்தி வாசகரோ அல்லது உன்னத காந்தியவாதியோ யாருடைய சொற்களின் வழியாகவும் காந்தியைப் புரிந்துகொள்ள முயல்வது யானை தடவிய குருடர் கதையாகத்தான் முடியும். ஆகவே காந்தியைக் ‘குறித்து’ வாசிக்குந்தோறும் நாம் நினைவிற்கொள்ளவேண்டியது காந்தியை ‘நேரடியாக’ வாசிக்க மறந்துவிடக்கூடாது என்பதைத்தான்.

No comments:

Post a Comment