Thursday, January 30, 2020

அன்புள்ள புல்புல்- ஒரு வாசிப்பு- சரவணன் மாணிக்கவாசகம்

(ஃபேஸ்புக்கில் சரவணன் மாணிக்கவாசகம் எழுதியிருந்த குறிப்பை நண்பர்கள் ஜீவ கரிகாலனும் ஸ்ரீதர் நாராயணனும் அனுப்பி இருந்தார்கள். சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி. வாசிக்க தனியாக இயந்திரம் எதுவும் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை)
Image result for அன்புள்ள புல்புல்

ஆசிரியர் குறிப்பு:

சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் இலக்கிய உலகில் இயங்குபவர்.  தொழில்முறை ஆயூர்வேத மருத்துவர். அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். நீலகண்டம் என்ற இவரது நாவல் மிக முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று. இந்த நூல் இணையத்தில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

இங்கே தலைவர்கள் ஒன்று புனிதர்கள் ஆவார்கள் இல்லை கொடுங்கோலன் ஆவார்கள். இரண்டுக்கும் இடையில் என்பதில்  நமக்கு நம்பிக்கை இல்லை. மற்ற தலைவர்களுக்கும், காந்திக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் அவரை என்ன விமர்சனம் செய்தாலும் காந்தியவாதிகள் கைத்தடி (உண்மையில் கம்பு தான்) கொண்டு அடிக்க வருவதில்லை. மற்ற தலைவர்களை விமர்சனம் செய்தால் நாம் மட்டுமன்றி நம் குடும்பமும் நிம்மதி இழக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் காந்தி இன்றும் எளிய மனிதர்.

முதல் இரண்டு கட்டுரைகள் காந்தியக்கல்வி குறித்து. தாய்மொழியில் கல்வி, பாடப்புத்தகங்களைத் தாண்டிய கல்வி என்பது இன்றும் சாத்தியம். ஆனால் காந்தி ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்தார். அந்தக்கால சூழ்நிலை வேறு. இன்று Global village என்று பேசப்படும் காலத்தில் ஆங்கிலத்தைப் புறக்கணித்தால் நாம் தனிமைப்படுத்தப்படுவோம்.

அடுத்த இரண்டு கட்டுரைகள் காந்தியின் மதம் குறித்த பார்வையைப் பேசுகின்றன. காந்தி தன்னை இந்துவாக அடையாளப்படுத்தினார், அடையாளப்படுத்தப்பட்டார். அதனால் தான் மதங்களைத் தாண்டிய அவரது சார்பின்மையை பெரும்பாலோர் கவனிக்கத் தவறினார்கள். மதவிசயத்தில் அவருக்குத் தோல்வி தான். அவரது மரணமே ஒரு மதஅரசியலாக முடிந்தது.

அடுத்த நான்கு கட்டுரைகள் காந்தியின் அகிம்சை கொள்கையைப் பற்றி பேசுகின்றன. காந்திக்குப் பிறகு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்பட்டும், பேசப்பட்டும் இருக்கின்றன. அகிம்சையை ஆயுதமாக முதலில் கையாண்டவர் காந்தி என்பதும் மறுக்க முடியாத உண்மை.

காம்ரேட் காந்தி என்ற கட்டுரை காந்தியின் பொருளாதார சமத்துவம் பற்றிய நல்லதொரு கட்டுரை.

மில்லியின் காந்தி, மில்லி போலக்கின் பார்வையில் காந்தியும், அவரது குறிப்பிடத் தக்க புத்தகமான Mr Gandhi: The Man குறித்தும் பேசுகிறது.

ஜெயராம் தாஸ், காந்தியால் மனமாற்றமடைந்த இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்த்தனே (அந்த அரக்கன் இல்லை) எனும் செல்வந்தர் பற்றிய பதிவு.

காந்தியும் பகத்சிங்கும் கட்டுரை, இன்னொரு கோணத்தில் இருந்து விவாதிக்கிறது. ஆனால் பகத்சிங் குறித்த நூல்கள் சொல்லுவது வேறு. (இது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை)

தண்டி யாத்திரை மக்களை ஒருங்கிணைத்த ஒரு அறவழிப் போராட்டம்.

காந்தியும் 55கோடியும் ஒரு முக்கியமான கட்டுரை. பாகிஸ்தான் அதற்கான சின்ன நன்றியைக்கூட காட்டவில்லை. எத்தனையோ பிரச்சனைகளைத் தாண்டி இன்று இந்தியா ஒரு வல்லரசு. தொழில் துறை, விஞ்ஞானம் என அனைத்திலும் நாம் உலக அளவில் முன்னணி. On the other hand Pakistan is a bankrupted, terrorist state. அவர்கள் அணுஆயுதமே திருட்டிலும், நம்பிக்கைத் துரோகத்திலும் அமைக்கப்பட்டது. காலம் வரலாற்றுத் தவறுகளை சரி செய்கிறது என்பதைக் கடந்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

அன்புள்ள புல்புல் காந்தியின் நகைச்சுவை உணர்வுக்கு சாட்சியாக சில சம்பவங்களைக் கூறுகிறது.

வின்சென்ட் ஷீனின் காந்தி குறித்த முக்கியமான புத்தகம், ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரின் பார்வை.

காந்தியை அறிதல் என்ற தரம்பாலின் நூல் ஒரு முக்கிய ஆவணம்.

Freedom at Midnight, Last Vicerine போன்ற புத்தகங்களில் வெளிநாட்டவர் அளிக்கும் பார்வை வேறு. இரண்டாம் உலகப்போரின் பின் இங்கிலாந்திற்கு இந்தியாவை வைத்துக் கொள்வது எந்த வகையிலும் லாபகரமில்லை. அதே நேரத்தில், இந்து முஸ்லீம் கலவரங்களினால் ஓடும் இரத்த ஆற்றில் அவர்கள் கரங்களை கறைபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. மவுண்ட்பேட்டன் நீங்கள் தான் கடைசி வைசிராய் என சொல்லப்பட்டே அனுப்பி வைக்கப்படுகிறார். 

ஆனால் காந்தி என்னும் மகத்தான சக்தி மக்களை ஒருங்கிணைத்து விடுதலை போராட்டத்தைக் கட்டுக்கோப்பாக கொண்டு சென்றதைப் பற்றி மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. தீண்டாமை எதிர்ப்பு போன்ற எத்தனையோ புரட்சிகரமான மாற்றங்களின் சூத்திரதாரி அவர். நேரு, படேல் போன்ற வேறு துருவங்களை இணைத்த சக்தி. ( படேலின் ஒரே வளர்ப்பு மகள் வறுமையில் கண் பார்வை சரியில்லாமல் அகமதாபாத் வீதிகளில் விழுந்து எழும் நிலைக்கு மூல காரணம் நேருவும் அவர் மகளும். ) 

இணையத்தில் படிக்காத காரணத்தினால் சுனில் கிருஷ்ணனின் இந்த கட்டுரைகள் மிகுந்த சுவாரசியமான வாசிப்பை அளித்தன.

என்  நட்பில் இருக்கும் சித்ரா பாலசுப்பிரமணியம், ரதன் சந்திரசேகர் போன்றவர்களின் காந்தி குறித்த ஆழ்ந்த வாசிப்பில் ஒரு சதவீதம் கூட எனக்கு இல்லை. எனினும் காந்தி என்னும் மாமனிதனை ஒவ்வொரு நிகழ்வாகப் பிரித்து முன்முனைவுகள் இன்றி ஆராய்ந்தால் அவரது மகத்தான சாதனைகளும் சில தோல்விகளுக்கும் காரணம் புரியும். காந்தியே கூட "புனிதம் என்பதற்காக ஆராயாமல் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று சொன்னதைப் படித்ததாக நினைவு.


Wednesday, January 29, 2020

நீலகண்டம்- ஒரு வாசிப்பனுபவம் காணொளி

பிரியா வளைகுடாவில் வசிக்கிறார். அவருடைய நாவல் ஒன்று டிஸ்கவரி வெளியீடாக வரவிருக்கிறது. 'நீலகண்டம்' குறித்து அவருடைய வாசிப்பை காணொளியாக வலையேற்றி உள்ளார். நன்றி. ஹரி மீதான வாசிப்புகள் எனக்கு ஆச்சரியமாய் உள்ளது. கமலதேவி மற்றும் ப்ரியாவின் வாசிப்பில் ஹரி மிகுந்த நேர்மறை லட்சியமாக தெரிகிறான்.

Monday, January 27, 2020

தன்னொளி துலக்கும் காந்தி - பாலாவின் இன்றைய காந்திகள் முன்வைத்து

(ஜனவரி பத்தாம் தேதி சென்னையில் நிகழ்ந்த விஷ்ணுபுர வட்டத்தின் பத்து நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். இன்று ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ளது.) 



நம்முள் ஆன்மீக பிரக்ஞை வளர வளர நாம் இவ்வுலகத்தில் இருக்கும் எல்லாவற்றோடும் நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம்.. ஆகவே சுரண்டல் அங்கு இல்லை. நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம். நம்மை நாமே குணப்படுத்திக் கொள்கிறோம்- டாக்டர். வெங்கிடசாமி, அரவிந்த் கண் மருத்துவமனை



லாரி பேக்கர் காந்தியை முதன்முதலாக சந்தித்த தருணத்தைப் பற்றி வாசித்ததுண்டு. இந்தியர்களுக்கு உகந்த கட்டுமானத்தை எழுப்புங்கள் என பேச்சு வாக்கில் காந்தி சொனனது அவருடைய வாழ்வை திசை மாற்றியது. வெரியர் எல்வினின் கதையும் இதுதான். குமரப்பாவின், வினோபாவின், லட்சுமண அய்யரின், ஜே.பி.எஸ்.ஜெயாவர்தனேயின் என அனைவரின் கதைகளும் இதுதான். ஒரு தீண்டல், ஒரு சந்திப்பு வாழ்வின் வசதிகளை அனைத்தையும் துறந்துவிட்டு முகமறியா மக்களுக்கு பணியாற்ற இவர்களை துரத்தியது ஒருவகையில் ஒரு பித்துதான். காந்தியின் ஆற்றல் அல்லது அவர் வழிபட்ட சத்தியத்தின் ஆற்றல் இது. பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூல் அபய் பங்கின் தந்தை தாக்கூர் தாஸ் பங்கின் கதையை சொல்கிறது. அமெரிக்காவில் முழு உதவித்தொகையுடன் பொருளியல் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ‘சேவா கிராமத்தில். பாபுவின் முன்பு தன் கல்லூரி அனுமதிச்சீட்டை வைத்து வணங்கினார். “பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் படிக்க அமேரிக்கா போகிறேன். உங்கள் ஆசிகள் வேண்டும்” என்றார். “பொருளாதாரம் படிக்க வேண்டுமெனில், கிராமங்களுக்குச் சென்று ஏழை மக்களுடன் வாழ்ந்துப்படி” என்றார் பாபு. அவர்  பேச்சுக்கு மறுவார்த்தை ஏது? அனுமதிச்சீட்டை கிழித்தெறிந்துவிட்டு, சேவாகிராமம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழச்சென்றார்.’ என ஒரு நிகழ்வை பாலா குறிப்பிடுகிறார்.

Image result for dr g venkataswamy aravind eye hospital
டாக்டர். வெங்கடசாமி 

காந்தி ஒரு சுடர், பற்றிக்கொள்ளும் பதமிருந்து அவரை நெருங்கும் எவரும் சுடரை தமதாக ஏந்திக்கொள்பவர்கள். பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ அப்படி நெஞ்சில் சுடரேந்தி ஒளி வளர்க்கும் பதினோரு ஆளுமைகளை எளிய நேரடியான உணர்ச்சிகரமான வாழ்க்கை பின்னணியை விவரித்தபடி நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்னுரையில் ‘காந்தியம் என்பது சாமானியர்களிடமிருந்து வெளிப்படும் ஒளிதான்.’ என சமஸ் குறிப்பிடுவது சரியான பார்வை. பத்து நேரடி கட்டுரையும் இறுதியில் ஒரு மொழியாக்க கட்டுரையும் கொண்ட தொகுப்பிது. கடைசி கட்டுரையான ஜான் ட்ரெஸ் பற்றிய கட்டுரை ராமச்சந்திர குஹா எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம். அதை அவருடைய அனுமதியோடு பதிப்பித்துள்ளார்.

கிருஷ்ணம்மாள் அவர்களின் ஆசி, பாலாவின் என்னுரை, சமஸின் முன்னுரை, தன்னறம் பதிப்புக் குழுவின் பதிப்புரை என கட்டுரைகளுக்கு முன் நான்கு முன்னுரைகள் உள்ளன. பொதுவாக இது ஒரு சரியான பதிப்பு உத்தி அல்ல என்றே தோன்றும். பக்கங்களை ஓட்டிவிட்டு நேராக கட்டுரையை வாசிக்கத் தோன்றும். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய காந்திகள் எனும் காந்தியால் தககமுண்ட ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் நூலில் இன்று தமிழகத்தில் வாழும் மூத்த காந்தியர் கிருஷ்ணம்மாள் பங்களிப்பு ஆற்றுவது பொருத்தமானது. எளிய ஒரு வரிதான், பலரும் பல சமயங்களில் சொன்னதும் கூட தான், நாமே அறிந்ததும் கேள்விப்பட்டதும் தான் ஆனாலும் “நோக்கத்தின் உண்மை குடியிருக்கும் எச்செயலும் எச்சொல்லும் நிச்சயம் நிறைவேறும்” எனும் வரியை கிருஷ்ணம்மாள் அவர்களின் சொற்களாக வாசிக்கும்போது மனம் ஆழ்ந்த சுய விசாரணையை நோக்கிச் செல்கிறது. ஒருவகையில் இந்த நூலில் உள்ள அனைத்து ஆளுமைகளையும் கோர்க்கும் சரடு என இந்த வரியையே சொல்லலாம். இதுவே அவர்களை இயல்பாக காந்தியை நோக்கி கொண்டு செல்கிறது என எண்ணுகிறேன். சமஸ் அவருடைய முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார் “ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டகங்களுக்கு வெளியே மக்களுக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வோர் தனக்கென ஒரு அர்த்தப்பாட்டை நோக்கி நகரும் இடத்தில்தான், ஒரு சாமானிய இந்தியரின் தார்மிக அடையாளமாக காந்தி உருமாறுகிறார்.”



இந்த நூலுக்கு ஏன் இன்றைய காந்தியர்கள் என பெயர் வைக்கவில்லை என யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தியர்களுக்கும் காந்திகளுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு என தோன்றியது. காந்தியர்கள் காந்திய அமைப்புகளில் அமர்ந்து காந்தியை நகல் எடுப்பவர்களாக குறுகி விடுகிறார்கள் எனத் தோன்றுகிறது. காந்தியை ஆன்ம துணைவனாக கொள்ளாமல் அமைப்பு துணைவனாக, அச்சத்தில் பதுங்கிக் கொள்ளும் முகமுடியாக பயன்படுத்துகிறார்கள் என்றும் தோன்றியது. காதி அணிந்து, புலால் உண்ணாமல், மது அருந்தாமல், தினமும் பிரார்த்தனை செய்தபடி, ரகுபதி ராகவ ராஜாராம் பாடியபடி காந்தியை ஒரு ஆச்சாரமாக தொடர்கிறார்கள். இவ்வகையான வாழ்விற்கு முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. ஒருவகையில் அது ஆன்ம சாதனத்தின் பாதை. ஆனால் இவர்களின் சமூக பங்களிப்பு எந்த அளவிற்கு பொது போக்கை மாற்றியிருக்கிறது என தெரியவில்லை.. சாரம்சத்தை விட்டுவிட்டு ஆச்சாரங்களை  நகல் எடுக்கும் போது எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை. சட்டென சசி பெருமாள் நினைவுக்கு வருகிறார். புதிய காலத்தின் புதிய சிக்கல்களுக்கு புதிய தீர்வுகள் உருவாக்க வேண்டியது அவசியம். இன்றைய காந்திகள் அனைவரும் இப்படி உருவாகி வந்தவர்கள். சமஸ் குறிப்பிடுவது போல் காந்தியம் படைப்பூகத்தில் வாழ்கிறது. ‘காந்தியின் சாராம்சம்- அனைவரிடத்தினும் அன்பு- சமத்துவம்- கடைசி மனிதனுக்குமான அதிகாரம்- ஒட்டுமொத்த ஆன்ம விடுதலை’ என சமஸ் குறிப்பிடுகிறார். ஒருவகையில் புத்தர், இயேசு என எல்லா மாபெரும் ஆளுமைகளையும் இப்படி சாரம்சப்படுத்திவிட முடியும். இந்த சாரம்சத்தை உள்வாங்கிய ஆளுமைகள் படைப்பூக்கத்துடன் தங்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சமஸ் அண்ணாவை காந்தியராக முன்வைப்பதன் பின்னணி ஓரளவு துலங்கி வருகிறது.

பாலா ஒரு மேலாண்மை பட்டதாரி. இந்த நூலில் அவருடைய மேலாண்மை கோணம் பிரதானமாக வெளிப்படுவது ஒரு தனித்தன்மையை அளிக்கிறது. அமுல், அரவிந்த் என வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமாக செயல்படும் இரண்டு நிறுவனங்கள் பற்றி மேலாண்மை புள்ளியிலிருந்து மக்கள் நலன் நாடும் அரசு குறித்து சில கோணங்களை முன்வைக்கிறார். அமுல் கூட்டுறவு அமைப்பின் ஒரு முன்மாதிரி. மந்தன் திரைப்படம் திரையிடப்படும் போது ‘ஐந்து லட்சம் குஜராத் உழவர்கள் வழங்கும்’ என திரையில் மின்னும்போது பெரும் உணர்வு கொந்தளிப்பை பார்வையாளராக தான் அடைந்ததை பாலா குறிப்பிடுகிறார். அமுல் மூன்றடுக்கு கொண்ட சமூக அமைப்பு- அஸ்திவாரத்தில்- கிராமக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் இரண்டாவது அடுக்கில் – பாலை பதனம் செய்யும் வட்டார அமைப்புகள் மூன்றாம் அடுக்கில் – விற்பனை செய்யும் நிறுவனங்கள்  என அதன் வடிவத்தை விளக்குகிறார். கிடைக்கும் லாபத்தை தன் பங்குதாரர்களிடமே திரும்பி அளித்து விடுகிறது. அமுலும் சரி அரவிந்தும் சரி தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பங்களை தாங்களே  உருவாக்கிக்கொண்டார்கள்.

ஒரு நிறுவனத்தின் குறிக்கோள் லாபம் குவிப்பது என்பதல்ல. நுகர்வோரின் தேவையை அறிந்துகொண்டு, அதை மிகச்சிறப்பாக, விரைவாக, குறைந்த செலவில் பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்- லாபம் என்பது ஒரு நிறுவனம் சரியாக இயங்குகிறது என்பதற்கான அடையாளம் மட்டுமே எனும் பீட்டர் ட்ரக்கரின் மேற்கோள் இவ்விரு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.


அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் வெங்கிடசாமியின் கனவு ஒரு வகையில் ராபின்ஹுட்தனமான கனவு தான். பணம் உள்ளவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கும் அதே சிகிச்சையை அளித்து வரும் நிறுவனத்தை உருவாக்குவது. பணம் வாங்குவது என்பதும் கூட தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் மிகக் குறைவுதான். ஃபோர்டின் அசெம்ப்ளி லைன் தொழில்நுட்பத்தை மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மேசையில் செயல்படுத்தி பார்த்திருக்கிறார். மூலப் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்கிறார்கள். எழாயிரம்ரூபாயில் இறக்குமதி செய்யப்பட லென்ஸ்களை வெறும் 140 ரூபாய்க்கு இங்கே தயாரிக்கமுடிந்தது. இன்று உலகம்முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.. கண் சிகிச்சைக்கான மருந்துகளை அவர்களே தயாரிக்கிறார்கள்.

நான் அண்மையில் அரவிந்த் மருத்துமனையின் நிறுவனர் டாக்டர் வெங்கிடசாமியின் சகோதரி டாக்டர் நாச்சியார் அரவிந்த் மருத்துவமனை குறித்து ஆற்றிய உரையை கேட்டேன். அபார மன எழுச்சி அளித்த தருணம் அது. குறிப்பாக அவர்கள் வேலைக்கு எடுப்பது எப்படி? அளவுகோள் எவை என விவரித்தார். செவிலி வேலைக்கு வரும் பெண்ணுக்கு பேருந்து கட்டணமும் நிலத்தில் எவ்வளவு விளைந்தது என்றும் தெரிந்திருந்தால் அவள் சமூகத்துடனும் குடும்பத்துடனும் நெருக்கமாக ஊடாடி வருகிறாள் என பொருள். தங்க பதக்கம் வாங்கியவர்கள் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு தேவை எல்லாம் இத்தகைய ‘கூர்’ உடையவர்களே என்றார். ஒருவகையில் பாலாவின் புத்தகத்தில் செயல்படும் அத்தனை காந்திகளுமே சாமானியர்களின் அறிவு ஆற்றலை நம்புகிறார்கள். அதை உரிய முறையில் பயன்படுத்த முடியும் என கருதுகிறார்கள். இந்தகூற்றுக்கு உதாரணமாக நாம் மருத்துவ தம்பதியர் அபய் பங் மற்றும் ராணி பங்கின் வாழ்வை காணலாம். ‘ஆரோக்கிய சுயராஜ்ஜியம்’ தான் அவர்களுடைய இலக்கு.

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் பழங்குடி பகுதிக்கு மருத்துவ சேவை ஆற்ற வருகிறார்கள் பங் தம்பதியினர். மருத்துவமனையில் மாதந்தேஷ்வரியின் கோவில் இருக்க வேண்டும் என பழங்குடி மக்கள் விரும்பினார்கள் என்பதால் அதை நிறுவுகிறார்கள். மருத்துவமனைக்கும் அதே பெயரை இட்டார்கள். பல்வேறு நம்பிக்கைகள் வழக்கங்களுக்கு எதிராக போராட வேண்டி இருந்தது. மிகக் குறைந்த செலவில் உள்ளூரிலேயே செவிலிகளை தயார் செய்வது. இன்சுலின் ஊசி வழியாக சரியான அளவு கிருமி கொல்லியை குழந்தையின் எடைக்கு ஏற்ப அளிக்க முடியும் எனும் நுட்பத்தை செயல்படுத்துவது இவர்களின் நூதன பங்களிப்பு. ‘ஆஷா’ எனும் கருத்துருவாக்கம் அபய் பங் மற்றும் ராணி பங்கின் யோசனைதான் உள்ளூர் குழந்தை பராமரிப்பு பயிற்சி செய்து கொண்டவர்களை ஊசி போட அனுமதிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவர்களுடைய திறனை மதிப்பிட எய்ம்ஸ் மருத்துவர் குழு வருகிறது. அவர்களுடைய அறிக்கையில் ‘சாதாரணப் பெண்கள் போல நடமாடும் கட்சிரோலியின் இந்த ஆரோக்கியத் தூதர்கள், எங்கள் கல்லூரியின் மருத்துவர்களை விட குழந்தைகள் நலன் பற்றி அதிகம் அறிந்தவர்கள்.’ என்றார். “மருத்துவர்கள் மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் படைத்த அரசு கட்டமைப்பை விட இரண்டு மருத்துவர்கள், 39 ஆரோக்கிய தூதர்கள், தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மருத்துவக் கருவிகள், 28 நாள் பயிற்சி எனக் கிளம்பிய சிறுபடை பெரும் சாதனையை படைத்தது.” என எழுதுகிறார் பாலா. ராஜேந்தர் சிங் ஆர்வரி மக்களவை என்றொரு அமைப்பை உருவாக்கினார். நதிநீரை பயன்படுத்தும் 72 கிராமங்களில் இருந்தும் தலா இரு பிரதிநிதிகளை கொண்டது இந்த மக்களவை. நதிநீர் சேகரிப்பு, மேலாண்மையை கவனிப்பது போன்றவற்றை ,நதிநீரை பயன்படுத்தும் மக்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுக்கிறார்கள்.

இது ஏன் அப்படி? அரசுக்கும் மக்கள் தன்னார்வ அமைப்பிற்கும் இடையிலான செயல்திறன் இடைவெளி ஏன் வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்கள் ஒன்றை தங்கள் நலனுக்கானது என நம்பும்போது அதற்காக பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். அது தங்களுடையது, தங்களுக்கானது எனும் எண்ணம் அவ்வமைப்பை காக்க போதுமானது. இந்த உணர்வு ஏற்பட நிர்வாகம் கீழிருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டுமே தவிர மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருக்ககூடாது. காந்தி முன்வைக்கும் கிராம குடியரசு இத்தகைய ஒரு அதிகார பரவலாக்க வடிவம் தான். காந்தி தென்னாப்பிரிக்காவில் சத்த்யாகிரகம் மற்றும் சத்திய சோதனையில் பொது அமைப்புகள், நிறுவனங்களை காக்க நாம் தனித்த முயற்சி எதுவும் எடுக்கக்கூடாது என்கிறார். அதன் தேவை இருக்கும் வரை மட்டுமே அது செயல்பட முடியும். அது மக்களுக்கானது, மக்களால் வழிநடத்தப்படுவது. அரவிந்தும், அமுலும் காந்தியின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன.



‘இன்றைய காந்திகளின்’ மற்றொரு ஒற்றுமை அவர்கள் மைய அரசின் கரங்கள் சென்று சேராத இண்டு இடுக்குகளில் மக்களை திரட்டி தங்களுக்கு தேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் சிக்கலுக்கான தீர்வுகளை உள்ளூர் மனித வளத்தையும் அவர்களின் அனுபவ அறிவையும் கொண்டு எதிர் கொண்டார்கள். சோனம் வாங்கசுக்’ திரீ இடியட்ஸ் திரைப்பட உருவாக்கத்தின் பின்புலத்தில் உள்ள ஆதர்சம். லடாக் மக்களின் கல்வி சிக்கல்களை குறித்து சிந்திக்கிறார். பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக என்றே ஒரு பள்ளியைத் தொடங்கினார்.. பனி ஸ்தூபி வழி லடாக்கில் நீர் சேகரிப்பை சாத்தியாமாக்கி இருக்கிறார். பங் தம்பதிகள் தண்டகாரண்ய பகுதியில் செயலாற்றுகிறார்கள். ராஜஸ்தானில் தேவ்துங்க்ரி எனும் வறண்ட கிராமத்தில் மக்களுக்கு சேர வேண்டிய குறைந்தபட்ச கூலியை முறையாக பெற்றுத்தர தோன்றிய இயக்கம் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வேர்.  பாலாவின் சொற்களில் சொல்வதானால் நான்கு லட்சிய கிறுக்குகளால் உருவாக்கப்பட்டது தான் இன்று பெரும் ஊழல்களை வெளிப்படுத்த மக்களுக்கு கிடைத்த மாபெரும் ஆயுதம். இதில் முக்கிய பங்களிப்பு ஆற்றிய அருணா ராய் ஒரு தமிழ் ஐ.எ.எஸ்.

“எல்லோரும் வரலாற்றை மாற்றுவதாக சொல்வார்கள். நாங்கள் புவியியலை மாற்றினோம்” எனக் கூறியவர் தண்ணீர் காந்தி’ என்றழைக்கப்படும் ராஜேந்தர் சிங்.  அவர் ராஜஸ்தானில் ஆள்வர் மாவட்டத்தில் ஆர்வரி நதியை உயிர்ப்பித்தார்.  அவர் ஆயுர்வேத மருத்துவரும் கூட. பங்கர் ராய்- வெறும் பாத கல்லூரியை ராஜஸ்தானில் ஒரு ஊரக பகுதியில் தான் நடத்தி வருகிறார். நிபுணர் என்பவர் ஒரு தொழிலில் திறனும் நம்பிக்கையும் உடையவராக இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்..ஊட்டச்சத்து குறைவுக்கு அமிருத் சூர்ணத்தை அளித்தார். அவருடைய மற்றுமொரு முக்கியமான பங்களிப்பு என்பது சோலார் மாமாஸ்’ எனும் யோசனை தான். பெண்கள், அதிலும் வயதானவர்கள் தங்கள் சமூகத்துடனேயே வசிப்பவர்கள் எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி சமூகத்துக்கு நீடித்து நிலைத்துப் பயன் தருகிறது என கருதினார்.

சேவா அமைப்பு ஊரக கிராமப்புறம் சார்ந்தது இல்லை என்றாலும், நகரத்திலேயே அரசிடமிருந்து தொலைவிலிருக்கும் மக்களுக்கானது என சொல்லலாம். அனுசூயா சாராபாய் பற்றிய சுவாரசியமான சித்திரம் இலா பட் பற்றிய கட்டுரையில் உள்ளது. அவர் இங்கிலாந்தில் சஃபர்கேட் இயக்கத்தில் பங்கெடுத்தவர் என்பது நான் அறியாத பின்புலம். அமைப்புசாரா தொழிலாகளுக்கு என்றொரு சங்கம் என்பது மிக முக்கியமான முன்னெடுப்பு. ‘வங்கி தோழி’யும் ஒரு நூதன வழிதான்.

பாலாவின் கட்டுரைகள் வழியாக கிடைக்கப்பெறும் மற்றொரு சித்திரம் என்பது இந்த ஆளுமைகள் முழுக்க அரசின்மைவாதிகள் அல்லது கிளர்ச்சியாளர்கள் அல்ல. காந்தியை போலவே அவசியமான இடங்களில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசுடன் இயைந்தும், அவசியமான தருணங்களில் முரண்பட்டு போராடியும் இயங்கி வருகிறார்கள். லக்ஷ்மி சந்த் ஜெயினின் வாழ்க்கை உதாரணம் ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அரசு தலையீடும் மையப்படுத்துதலும் நிகழும்போது ஊழல் பெருகுகிறது என்பதுதான் அது.; லக்ஷ்மி சந்த் ஜெயின் வாழ்க்கை புனைவுக்குரிய தருணங்களால் நிரம்பியவை.  பாலா லக்ஷ்மி சந்த் ஜெயின் பற்றிய கட்டுரையில் தில்லி கிங்க்ஸ்வே அகதிகள் முகாமில் இருந்த அகதிகள் சிலரும் நிர்வகித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் சேர்ந்து ஒரு இஸ்லாமியரை இழுத்து வந்து காந்தி நடத்திக்கொண்டிருந்த கூட்டத்தின் முன்பு அடித்தே கொன்றார்கள் என எழுதுகிறார். இந்த நிகழ்வின் வீரியம் காட்சிகளாக உணர்வுகளாக விரிந்தபடி இருக்கிறது. .

லக்ஷ்மி சந்த் ஜெயின் வாழ்வில் மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு என்பது அவர் நிர்வகித்த அகதி முகாமில் இளைஞரான அவரிடம் கலவரக்காரர்களை வெளியேற்றவேண்டும் என முகாம் வாசிகள் சொல்கிறார்கள். அதற்கு “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவர்களும் நம் குழந்தைகள் தானே? நாம் வெளியேற்றிவிட்டால் வேறு எந்த முகாமிலும் அவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என பதில் அளிகிறார். அன்றிரவு கலவரம் செய்த இளைஞர்கள் அவரிடம் “நாங்கள் இந்த முகாமிற்கு பலத்த சேதத்தை விளைவித்தோம். ஆனாலும் நீங்கள் எங்களை ‘நம் குழந்தைகள்’ என்று சொன்னீர்கள். தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்.” எனக் கைக்கூப்புகிறார்கள்.

அகதிகள் மறு வாழ்வு, கூட்டுறவு இயக்கம், கைவினைப் பொருட்கள் வாரியம், திட்டக் கமிஷன், முதல் பெரும் சில்லறை அங்காடியை நிறுவியவர், தென்னாப்பிரிக்க தூதர் என ஓரிடத்தில் தேங்கி விடாமல் தொடர்ந்து புதிய இலக்குகளை நோக்கி பயணித்தபடி இருக்கிறார் லக்ஷ்மி சந்த் ஜெயின். குரியனும் அமைப்புகளை கட்டி எழுப்பியவர் தான். குரியன் கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்வழி பயின்றவர் எனும் பாலாவின் தகவல் எனக்கு புதிதாக இருந்தது.. குரியன் தான் தேர்ந்தெடுத்த வாரிசாலேயே அரசியல் சதுரங்க விளையாட்டில் வீழ்த்தப்படுகிறார். ஆனால் அவர் அதற்கும் அப்பால் முப்பது நிறுவனங்களை உருவாக்கி காட்டியவர்.

அரவிந்த் குப்தாவின் இணைய நூலக சேகரிப்பை பயன்படுத்தியவன் என்ற முறையில் அவருடைய பங்களிப்பு குறித்து அறிந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.

ஒட்டுமொத்தமாக இந்நூல் எனக்கு ஒரு ஆழ்ந்த மன எழுச்சியை அளித்தது. படைப்பூக்கத்துடன் சமூகத்திற்கு ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும் எனும் உந்துதலை வாசகர் பெற முடியும். அது குறைந்த காலம் நீடிப்பதாகவும் இருக்கலாம். செயலுக்கான உந்துதலை அளிப்பது சாதாரணம் அல்ல. உண்மை மனிதர்களின் ஒளிமிகுந்த வாழ்வு நம்மை செயல்படத் தூண்டுகிறது. ஜெயகாந்தனின் சொற்களை நினைவு கூர்ந்தபடி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். ‘ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்.’ அவரை அடையாளம் காட்டும் பணியை அறிவு சமூகமேற்றுக்கொள்ள வேண்டும்.



இன்றைய காந்திகள்

பாலசுப்பிரமணியம் முத்துச்சாமி

தன்னறம்

Saturday, January 25, 2020

நஞ்சைப் பகிர்ந்தளித்தல்- நீலகண்டம் குறித்து ஸ்ரீனிவாசன்

(கவர்னர் ஸ்ரீனிவாசன் என நாங்கள் அன்புடன் அழைக்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விலாஸ் சாரங்கின் கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர். ஜெயமோகன் தளத்தில் வெளியான இக்கட்டுரையில் யதார்த்த தளத்தின் கதைகளுக்கும் மீயதர்த்த தளத்து சிறுமிகளின் கதைகளுக்கும் இடையிலான வேற்றுமையை அவர் சுட்டிக்காட்டியிருப்பது முக்கியமான புள்ளி. நன்றி சார்)

உடல்/உளக்குறை கொண்ட குழந்தையை வளர்ப்பதில் உள்ள சிக்கலை யதார்த்தமாகச் சொல்லி நம் கண்ணீரை வரவழைக்கப் போகும் கதை என்பதே படிக்கத் துவங்கியதும் ஏற்படும் மனப்பதிவு. சரி, முதலிலும் இடையிலும் இந்த வேதாளம் விக்ரமன் விவகாரம் எதற்கு? யோசிக்காமல் படிப்போம்… பேக்மேன், கடலாமை கதை? இருக்கட்டும்…  திடீரென மெடியா, சுடலை நாடகம்?  ஓ, ஆசிரியர் உத்திகளை கைக்கொண்டு தான் சொல்ல வரும் கதையை ஒரு ‘நாவலா’க்க முயற்சிக்கிறார் போல. சரளமான எழுத்து என்பதால் வேகமாக படித்துச் சென்றுகொண்டிருக்கும்போதே இதெல்லாம் தோன்றிவிடுகிறது. (யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’, ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ இதையெல்லாம் நாமும் படித்திருக்கிறோம் என்ற ஆணவம் ஒன்று இருக்கிறதே!)

ஆனால் படித்து முடித்து இரவுறங்கி அதிகாலை விழித்த போது அமைதி இழக்கச் செய்தது. நம் குடும்பத்திலேயே, நண்பர் வட்டத்திலேயே இந்தக் கதையை நாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும். வானதி-வல்லபியையாவது அறிந்திருப்போம். ஆனால், நாமறிந்த, அனுபவித்த ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்வதால் மட்டும் வரும் நிலைகுலைவு அல்ல நாவல் ஏற்படுத்துவது. மனிதன் குடும்பமென, சமூகமென தொகையாக வாழத்தொடங்கிய காலந்தொட்டே நம்மை துரத்திவரும் நஞ்சை சுவைப்பதால் வருவது.



மையக்கதையின் நிகழ்வுகள், மொழிநடை எல்லாம் வாசகனின் இரக்கத்தையும் கருணையையும் கோரி நிற்பதுபோல் பிரமை எழுகிறது. (இன்றைய இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்டு இதை ஒரு குறையாகக் கூறலாம்). இதற்கு நேர்மாறாக தொன்மங்களும் குழந்தைக் கதைகளும் மெய்மையை இரக்கமின்றி முன்வைக்கின்றன. இதன் மூலம் கதையாடலில் ஒரு பெரும் சமநிலை உருவாகிறது.

கலையில் கைத்திறன் என்பதற்கு சற்று தாழ்வான இடமே தரப்படுகிறது. ஆனால் இங்கு கைத்திறன் கலை நிகழ உதவியிருப்பதாக உணரமுடிகிறது. கதையின் மையப்பிரச்சனை நிகழ்காலத்தையது மட்டுமல்ல என்பதை தொன்மங்கள் மூலம் உணர்கையில் எல்லா கதைமாந்தருமே முக்கியமானவர்களாக மாறிவிடுகிறார்கள். குறிப்பாக ஆலகாலம் பற்றிய தொன்மம் மிகச்சிறப்பாக மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது.

படிக்கும்போது இல்லாமல், முடித்தபின் வாசகனை சவாலுக்கு அழைக்கிறது. சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன், நீ முடிந்தால் இதை ஒரு ‘நாவலா’க நிறுவிக்கொள் என்று அறைகூவுகிறது. இவ்வகையில் கலையை நிகழ்த்தியிருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்!

எல்லா உறவாடல்களிலும் திரண்டு வரும் நஞ்சில் ஒரு ‘மிண்ட்’ அளவு எடுத்து ’இந்தா, அதக்கிக் கொள்’ என்று ‘நீலகண்டத்தை’ கொடுத்திருக்கும் சுனில் கிருஷ்ணனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

ஸ்ரீனிவாசன்

Wednesday, January 22, 2020

சிறுகதையிலிருந்து நாவலுக்கு

(தமிழ் இந்து திசை நாளிதழில் த. ராஜன் தொகுத்த பகுதிக்காக எழுதியது. இன்று வெளியாகியிருக்கும் பகுதியை விட ஐம்பது அறுபது சொற்கள் கூடுதலாக அனுப்பி இருந்தேன். அதை அவர் சுருக்கிப் போட்டிருக்கிறார். தமிழ் இந்து திசைக்கும் ராஜனுக்கும் நன்றி)  

‘அம்புப் படுக்கை’ தொகுதியில் உள்ள நான்கைந்து கதைகள் எழுதி இருந்தபோதே ‘நீலகண்டம்’ எழுதத் தொடங்கிவிட்டேன். நியாயப்படி நாவலாசிரியராகத்தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். ‘நாவல்’ தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படும் பார்வை எனக்கு உவப்பானது. ஒரு வாழ்க்கையை சொல்வது அல்லது ஒரு தருணத்தை சொல்வது என்பதைக் காட்டிலும் ஒரு கேள்வியின் சகல பரிமாணங்களையும் வாழ்விலிருந்தும் தொன்மங்களிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் தொடுத்து ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு ஓர் சமநிலையை அடையும் சாத்தியம் நாவலில் உள்ளது. என் 'குருதி சோறு' 'பேசும் பூனை' 'திமிங்கிலம்' மற்றும் 'ஆரோகணம்' ஆகிய சிறுகதைகளே கூட நாவல் தன்மை கொண்டவை என்றே எண்ணுகிறேன். 

என் மூன்றரை வயது மகன் வடிவங்களுக்கு வர்ணம் தீட்டுவதை பார்த்திருக்கிறேன். சதுரத்தின் கறுப்பு வரையறைகளை மீறி வர்ணங்கள் வழியும். எனினும் அது சதுரம் என்பதில் எவருக்கும் குழப்பம் இருக்காது. சிறுகதை என்பது குழந்தை தீட்டும் சதுரம்தான். கச்சிதத்தின் கலை வடிவம்.  நாவலை ஆக்டோபஸ் அல்லது ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியாசுரனுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். சகல திசைகளிலும்  நீளும் கரங்களை ஒரு மையம் பிணைந்திருக்கிறது. மையத்துடன் பிணைந்திருக்கும் வரை கணக்கற்ற கரங்கள் உருவாகியபடியே இருக்கலாம்.   

‘நீலகண்டம்’ இப்படியான ஒரு முயற்சி. ஒரு உருவகத்தை தன் உடலாக கொண்ட அதன் ஒரு கரம் நாட்டாரியலிலும், ஒரு கரம் தொன்மத்திலும், ஒரு கரம் நவீன வாழ்விலும், மற்றொரு கரம் குழந்தை கதைகளிலும் என நீள்கிறது. என் மருத்துவமனைக்கு ஒரேயொருமுறை ஆட்டிச நிலையுள்ள தன் வளர்ப்பு மகனை அழைத்து வந்த தந்தை ‘இதுக்கு நாங்க பிள்ளை இல்லாமலேயே இருந்திருப்போம் சார்’ என விரக்தியில் தழுதழுத்து கூறிய ஒரு வரி தான் ‘நீலகண்டத்தின்’ விதை.

 நாவல் எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும், அதை வாசகரின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்,  என்னளவில் நாவல் எழுதிய காலகட்டம் வாழ்வின் மிக இனிமையான நாட்களில் ஒன்று. நாவலுக்கென நாம் வகுத்த திட்டங்கள் தடம் பிறழ்ந்து வேறொன்று எழுந்து வருவதை காணும்போதெல்லாம் மனம் பெரும் உவகை கொண்டது. முதல் நாவல் என்பது ஒரு படிநிலை, அதற்கு பின் எல்லா கதைகளையும் மனம் நாவல்களாகவே புனையத் தொடங்குகிறது. எனினும் சிறுகதைகள் நாவல்கள் என இரண்டையுமே தொடர்ந்து எழுதவே விழைகிறேன்.

அன்புள்ள புல்புல் - சிவானந்தம் நீலகண்டன் விமர்சனம்

சிங்கப்பூரில் வசிக்கும் சிவானந்தம் நீலகண்டன் தற்காலத்தில் எழுதி வரும் முக்கியமான விமர்சகர்களில் ஒருவர். நேரில் சந்தித்ததில்லை என்றாலும் பதாகை சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார். அவருடைய தளத்தில் அன்புள்ள புல்புல் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை அவரு அனுமதியுடன் இங்கே மீள்பதிவு செய்கிறேன். இந்த கட்டுரையை ஒட்டி அவருடன் சுவாரசியமான கடித உரையாடல் ஒன்று கட்டுரையின் வடிவம் குறித்து நிகழ்ந்தது. கட்டுரைகளில் மேற்கோள்கள் பற்றி எனக்கு அவரிடமிருந்து வேறுவிதமான கருத்து இருந்தது. அதை அவருக்கு எழுதினேன். முழு மேற்கோளை காட்டிலும் சுருக்கி paraphrase செய்வது சிறந்தது என்றார். அவருடைய கருத்துக்களை கவனத்தில் கொள்வதாக எழுதி இருந்தேன்.) 

--
அன்புள்ள புல் புல்’ ஒரு கட்டுரைத் தொகுப்பு. ஆசிரியர் சுனில் கிருஷ்ணன். யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2018. காந்தி இன்று (www.gandhitoday.in) இணையதளத்தில் காந்தி குறித்து வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 196 பக்கங்கள்.

*

இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக ஆசிரியர் காந்தியை வாசகர்க்குச் சற்று விரிவாக அறிமுகம் செய்துவைக்க முயன்றுள்ளார் எனலாம். காந்தி குறித்து முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகளை மறுக்கும் அல்லது அன்றைய சூழலை முழுமையாக விளக்கும் விதமான ஆய்வுத்தன்மையும் விரிவும் ஓரிரு கட்டுரைகளில் உள்ளது ஆனால் ஏனைய கட்டுரைகள் இலகுவான வாசிப்புக்கு ஏதுவாகவே இருக்கின்றன. மேலும் அதிகம் அறியப்படாத சில காந்தியைக் குறித்த நூல்களை அடிப்படையாகக்கொண்ட கட்டுரைகளும் உள்ளன என்பதால் காந்தி ஆர்வலர்களுக்கு அந்த நூல்களையும் தேடிப்பிடித்து வாசிக்கும் முகாந்திரமாகவும் இத்தொகுப்பு பங்களித்துள்ளது.

தான் வாசித்ததை மட்டும் சுருக்கிச் சொல்லிக்கொண்டு போகாமல் தன் கருத்துகளையும் வாதங்களையும் இணைத்து அளித்திருப்பதையே இக்கட்டுரைகளின் முக்கியமான பலமாகக் கருதுகிறேன். அது பெரும் சிந்தனையாளர்களானாலும் சரி அவர்களோடு முரண்படுவதில் ஆசிரியர் பின்வாங்கவில்லை. உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இந்தியர்களுக்குத் தாங்கள் இழைத்த அநீதிகளைக் குறித்த பிரக்ஞை இருந்ததும் காந்தியப் போராட்டங்கள் வெற்றிபெற ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தரம்பால் கூறியுள்ள கருத்தை ஆசிரியர் ஏற்கத் தயங்குகிறார். ஜாலியன் வாலாபாக்கில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்த ஜெனரல் டயர் ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்படவில்லையே, பாராட்டுதானே பெற்றார்? பிறகு என்ன பெரிய அநீதி குறித்த பிரக்ஞை? என்று எதிர்க்கேள்வி போடுகிறார்.

‘மில்லியின் காந்தி’ என்ற கட்டுரை அற்புதம். பாரதிக்கு எப்படி யதுகிரி அம்மாளோ அப்படி காந்திக்கு மில்லி போலக் என்கிறார் ஆசிரியர். காந்தியை வெகுவாக நேசித்தபோதிலும் லண்டனில் பிறந்த மில்லி, காந்தியிடம் எதைக்குறித்தும் எதிர்வாதம் செய்யத் தயங்கவில்லை. இந்து மதத்தின் உயர்ந்த வாழ்க்கை முறைகளை காந்தி எடுத்துக்காட்டினால் அங்கே பெண்களின் நிலை என்ன என்று கேட்பதும், மனித மூளையால் விளைந்த கருவிகளும் இயற்கையின் ஒரு பகுதிதான் என்பதால் அவற்றை விலக்குவது அவசியமில்லாதது என்று காந்தியிடம் வாக்குவாதம் செய்வதும் குறிப்பிடத்தக்கவை.

IMG_6939

புல் புல் என்பது காந்தி சரோஜினி நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் அவரை விளித்த பெயர். காந்திக்குத் தனக்கும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் அவ்வப்போது வெவ்வேறு பட்டப்பெயர்கள் வைத்து எழுதுவது வழக்கமாக இருந்துள்ளது. அசந்தர்ப்பமான சூழல்களிலும் காந்தி வெளிப்படுத்திய நிதானம், நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை ‘அன்புள்ள புல் புல்’ கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. ஹேராம் திரைப்படத்தில்கூட காந்தி தமிழில்பேச முயல்வதும் அதில் ‘நேற்று-நாளை’ வேறுபாடு குறித்துக் குழப்பிக்கொண்டு அதையே நகைச்சுவையாக்கி சிரிப்பதாகவும் ஒரு காட்சி உள்ளது.

பெரியார், அம்பேத்கர் போன்றோர்க்கு உள்ள ஒரு புரட்சியாளர் பிம்பம் காந்திக்கு இல்லாததற்குக் காரணம் காந்தி எதிரியாக எவரையும் உருவகிப்பதில்லை என்பதுதான் என்கிறார் ஆசிரியர் தன் முன்னுரையில். ஆசிரியர் குறிப்பிடுவதுபோல காந்தி ஆபத்தற்ற கிழவராகத்தான் தோற்றமளிக்கிறார். ஆனால் அதேநேரம் அவர் சுட்டுக்கொல்லப்பட வேண்டியவராகவும் இருந்திருக்கிறார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் அவரது இருப்பு பலரையும் பெருந்தொந்தரவு செய்துள்ளது என்பதை யூகிக்கமுடிகிறது.

வாசிக்கும்போது எழுந்த உறுத்தல்கள் சில உள்ளன.

காந்தியின் கருத்தோ இன்னபிறரின் கருத்தோ அவற்றின் சாரத்தை ஆசிரியர் தன் மொழியில் எழுதிக்கொண்டு போவதுதான் ஆய்வுக்கட்டுரைகள் அல்லாத பொதுவாசிப்புக் கட்டுரைகளுக்கு உகந்தது. சில சொற்களை, வரிகளைத் தாக்கம், பொருத்தம் கருதி மேற்கோளிடலாம் ஆனால் பெரும்பெரும் பத்திகளை மேற்கோள்களாகக் காட்டுவது தவிர்க்கப்படவேண்டும். மேலும் மூலத்திலிருந்து பத்திகளை உருவியெடுப்பது கட்டுரையாசிரியரின் மீதான மதிப்பை வாசகரிடம் சற்றுக் குறைக்கும்.

முன்வைக்கும் ஆளுமையின் கருத்தையும் தன் சொந்தக் கருத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் கலப்பதில்தான் இம்மாதிரியான கட்டுரைகளை சலிப்பின்றி வாசிக்கவைக்கும் சூட்சுமம் உள்ளதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் கட்டுரையின் ஒவ்வொரு பத்தியையும் என்றார், என்கிறார், எழுதுகிறார், சொல்லியிருக்கிறார், கூறியிருக்கிறார், குறிப்பிட்டுள்ளார், முன்வைக்கிறார்,  முற்படுகிறார், கவனப்படுத்துகிறார், கையாள்கிறார், சுட்டிக்காட்டுகிறார் என்று ஈற்றடியின் ஈற்றுச்சீரை மட்டும் மாற்றிமாற்றிக் காலந்தள்ளவேண்டியிருக்கும். அது கைப்புச்சுவை கூட்டிவிடும்.

கட்டுரைத் தொகுப்புகளில் தேர்வும் வைப்புமுறையும் கவனிக்கவேண்டிய அம்சம். ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து காந்தி குறித்த அனுபவம் சீராக வளர்ந்துவரும்போது ‘இந்திய வரலாற்றில் ஒத்துழையாமைப் போராட்டங்கள்’ போன்ற ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையோ அல்லது  ‘நிகழ்கண காந்தி’ போல அனுபவ வளர்ச்சியைக் குலைக்கும் ஒரு கட்டுரையையோ தவிர்க்கவேண்டும். அக்கட்டுரை காந்தி வாசிப்பு தரும் உற்சாகத்துக்கு நேரெதிராகச் சென்று முடிகிறது.

மற்றபடி எழுத்துப் பிழைகளும் சந்திப் பிழைகளும் மலிந்துள்ளன. இது பதிப்பகத்தார் கவனிக்கவேண்டியது.  யாவரும் பதிப்பகம் தான் வெளியிட்ட ‘போர்ஹெஸ்’ நூலைத்தான் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். மெய்ப்புத் திருத்துநர்களாக உதவிய மூவருக்கு அந்த நூலில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகச்சிறப்பான ஆக்கமாக அது இருந்தது. அந்த அளவுக்குப் போய்விட்டு அங்கிருந்து இறங்கக்கூடாது. தான் பதிப்பித்த நூலில் 50 பிழைகளைக் கண்டுபிடிப்பவருக்கு அந்த நூல் இலவசமாக வழங்கப்படும் என்று சி.வை.தாமோரம் பிள்ளை விளம்பரம் செய்தார் என்று ஒரு நூலில் வாசித்தேன். இது நடந்தது 1872ல். அதற்குப் பிறகு சுமார் 150 ஆண்டுகள் ஆன நிலையில் 5 பிழைகள் மட்டும் என்று நம் பதிப்பகத்தார் ஒரு நியதி வைத்துக்கொள்ளவேண்டும்.

சரி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காந்தியைக் குறித்து இதுவரை வாசித்திராதவர்களும் சரி ஓரளவுக்கு ஏற்கனவே வாசித்தறிந்திருப்பவர்களும் சரி, படிக்கவேண்டிய தொகுப்பாகத்தான் இந்நூல் இருக்கிறது. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை அச்சு நூலாக்கவேண்டியது அவசியமா என்ற கேள்வி இருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். நிச்சயம் அவசியம். இல்லாவிட்டால் என்னைப் போன்றோர் இக்கட்டுரைகளை வாசிப்பது அரிது.

*

காந்தி வாசிப்பு பொதுவாக ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவமாகவே எனக்கு இருந்துவருகிறது.  இனம்புரியாத உற்சாகத்தை உண்டாக்கி அதனூடாகச் செயலின்மையையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் துடைத்துக் கழுவிச்செல்லும் ஆற்றல் காந்தியின் எழுத்துகளுக்கு இருக்கிறது. எந்தத் தலைப்பிலான சிந்தனை என்பது ஒரு பொருட்டே அல்ல. அவரது பிரம்மச்சரியமோ, கல்வியோ, பொருளாதாரமோ, சுயராஜ்ஜியமோ எதுவாகவும் இருக்கலாம். ஒரு சில பத்திகளை வாசித்தாலும் உடனே வாழ்க்கையின்மீது ஒரு பிடிமானம் உண்டாவதை உணரலாம். இதை ஒரு வழிபாட்டு மனநிலையிலிருந்து அல்லாமல் அனுபவத்தின் வழியாகவே எழுதுகிறேன்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிடவேண்டும். ‘காந்தி வாசிப்பு’ என்று காந்தியின் எழுத்துகளை நேரடியாக (மொழிபெயர்ப்பாகி வந்திருக்கலாம் அது குற்றமில்லை) வாசிப்பதைத்தான் குறிப்பிடுகிறேன். காந்தியைக் ‘குறித்து’ மற்றவர்கள் எழுதியதை, சொல்லியதை வாசித்தவர்களே நம்முள் அதிகமானவர்கள் என்பது என் கணிப்பு. இது ஆபத்தானது மட்டுமல்லாமல் அபத்தமானதும் கூட. கனியிருப்பக் காய் கவர்வானேன்?

நான் காந்தி குறித்து எழுதினாலும் பேசினாலும் இந்த விஷயத்தை மறக்காமல் குறிப்பிட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.  நான் உட்பட எந்த சாதாரண காந்தி வாசகரோ அல்லது உன்னத காந்தியவாதியோ யாருடைய சொற்களின் வழியாகவும் காந்தியைப் புரிந்துகொள்ள முயல்வது யானை தடவிய குருடர் கதையாகத்தான் முடியும். ஆகவே காந்தியைக் ‘குறித்து’ வாசிக்குந்தோறும் நாம் நினைவிற்கொள்ளவேண்டியது காந்தியை ‘நேரடியாக’ வாசிக்க மறந்துவிடக்கூடாது என்பதைத்தான்.

Monday, January 20, 2020

நீலகண்டம் வாசிப்பு - கமலதேவி

(எழுத்தாளர் கமலதேவி பதாகை மற்றும் சொல்வனம் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். சென்ற ஆண்டு அவருடைய முதல் தொகுப்பு 'சக்யை' வாசகசாலை வெளியீடாக வெளிவந்தது. இந்த ஆண்டு மற்றொரு தொகுப்பு வந்துள்ளது. அவருடைய இந்த கட்டுரை சிறுமிகளின் கதையாக, குறிப்பாக வருவின் வெவ்வேறு வடிவங்களை பற்றிய கதை என்பதொரு புதிய பார்வை. நன்றி) 

அன்புள்ள சுனில்கிருஷ்ணன் அவர்களுக்கு,

 நாவல் முடித்த இன்று முதலில் தாேன்றியது இதில் வரும் அனைத்து சிறுமிகளும் ஒருவரே தான் என்று.இதை சிறுமிகளின் கதை என்று சாெல்லலாம் என்று நினைக்கிறேன்.சதங்கை ஒலியை மாெழியாக காெண்டவள்,பெற்றாேரை தாெலைத்தவள்,இந்த உலகின் தர்கங்களுக்கு அப்பாற்பட்டவள்,மூத்தவள்,இளையவள் என்று அனைவரும் வருவின் வடிவங்கள்.வெவ்வேறு கலன்களில் ஒரே காவிரி.

நாம் வகுத்த வாழ்வியல் கடமைகளை, நம் ஊழாக மாற்றியிருப்பதும் அமுது நஞ்சான நிலைதான்.குழந்தையின்மை என்பதை எத்தனை சுமையாக மாற்றியிருக்கிறாேம்.
கர்ணனின் ராதையிலிருந்து எத்தனை ராதைகளின் வாழ்வு குழந்தை என்ற ஒற்றை நிகழ்வினால் மட்டுமே நிம்மதியற்ற ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது.அத்தனை எளியதா பெண்ணின் வாழ்வு? என்ற என் நித்யகேள்விக்கான தாெடர்ச்சியாக நீலகண்டம் என்னுடன் உரையாடுகிறது.தன் நீட்சியை உலகில் விட்டு செல்ல வேண்டும் என்ற ஆதிஉணர்வின் வெளிப்பாட்டின் தாக்கத்தின் இன்றைய நிலை நாவலில் உளவியல் ரீதியாக சாெல்லப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படும் இடங்கள் பதற்றம் தருபவை.குறிப்பாக நந்தகாேபால் கதாப்பாத்திரம் சிறுவயதில் திரிபடையும் இடம்.

வம்சக்கதைகளை சிறுவயதிலிருந்து கேட்டு கேட்டு அது செந்திலின் மனதை ஆட்காெள்ளும் இடங்களில்... நாம் நினைவாற்றலால் எத்தனை தூரத்திற்கு அஞ்சியவர்கள் என்று தாேன்றியது.
வருவின் பச்சை கவுனும் நாகம்மையின் பச்சை பாவாடையுமாக காமாட்சியம்மனை மனதில் காெண்டு வருகிறார்கள்.
நாவலின் கதாப்பாத்திரங்களின் மனசிக்கல்களுக்கான விடுதலை ஹரியிடம் இருக்கிறது அல்லது ஹரி செந்திலின் மனசாட்சியின் வடிவம்.

பெரியவீடு பற்றிய சித்தரிப்புகள் மனதில் நிற்கின்றன.எங்கள் பக்கம் அவ்வளவு பெரியவீடுகளே கிடையாது.கரையான் பரவும் இல்லம் என்ற அழிவின் சித்திரம் ஒரு நகரும் காட்சியாக மனதிலிருக்கிறது.

'எவருக்காே காத்திருந்து செம்மை ஏறிய விழிகள்' என்று வீட்டை சாெல்லும் வரி அழகானது.அந்த அமுதே நஞ்சாகிறது.காத்திருப்பின் அமுது.
ஆதியில் பாலாழி கடைவதிலிருந்து அது தாெடங்குகிறது.விக்கிரமனின் முடிவில்லாத காத்திருப்பு.குழந்தைக்கான காத்திருப்பு. நாேய்தீர்வதற்கான காத்திருப்பு என்று.காத்திருப்பு என்பதே முடிவிலியின் ஒரு சிறுகீற்றை உணர்த்துவது தானே.

அவ்வளவு பெரியவீட்டை விற்று சென்னையில் இவ்வளவு சிறிய இடம் வாங்க வேண்டுமா? என்று செந்தில் நினைக்கும் இடத்தை விரித்துக்காெள்ள முடியும்.
அன்பின் மீதான என் கேள்வி நாவலில் வலுப்படுகிறது.ரம்யாவின் பெற்றாேர் அன்பு திரிபடையும் இடத்தில்...அன்பென்பது நதி பாேல கடந்து செல்லும் நிலையா? என்று நாவலை வாசிக்கும்பாேது தாேன்றியது.உடல்வலு குறையும் நேரத்தில் 
அவரின் அன்பு என்பது நீலம்பாரித்த ஒன்று.

தூயவெகுளித்தனத்தின் மீது விழும் முதல் பாெறி.நாயனார் கதையின் சிறுவனின் கேள்வி.எதுக்காகவாவது என்ன விடுவன்னா நான் உனக்கு யார்? என்ற கேள்வி மானுடமனதில் ஒவ்வாெரு உறவிலும் முடிவில்லாமல் பற்றி எரிகிறது.

ஆலம் அளவில் குறைகையில் ஓளடதமாகும். சிறுவிலகலில் அன்பு பேரன்பாகும்.இந்தநாவலில் ஹரி அப்படியானவன்.உண்மையில் இவர்களைப்பாேன்றவர்கள் நீலகண்டர்கள் என்று தாேன்றுகிறது.அன்பை நிறுத்திவைக்கத் தெரிந்தவர்கள்.

குழந்தையை முழுதாக ஏற்க இயலாத ,ஒதுக்கமுடியாத நிலையை  நாவல் துணை கதைகள் வழியாக சாெல்வதன் மூலம் ,இதுஒன்றும் புதிதல்ல என்றுமுள்ள சிக்கல் என்கிறது.பெற்றாேர் அன்பை லட்சியவாதத்திலிருந்து யாதார்த்தத்தில் காெண்டுவந்து வைக்கிறது.

பேரன்பை எய்தஇயலாத, பெருவஞ்சத்தை எட்டிப்பிடிக்காத நிலையே சராசரி மானுடஅன்பு.ஆலமுமல்லாத அமுதமும் அல்லாத ஆலஅமுதமே நீலகண்டம்.

முதல்நாவல் என்பது எழுதுபவர்களின் அழகிய பதட்டமான கனவு.முதல் நாவலுக்கு என் வாழ்த்துக்கள்.நான் எவ்வாறு இந்த நாவலை உள்வாங்குகிறேன் என்ற தனிப்பட்ட அனுபவம் இது.அதில் தவறும் இடங்கள் இருப்பது இயல்பு.
                                                    அன்புடன்,
                                                     கமலதேவி

Sunday, January 19, 2020

அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை - அருண்மொழி நங்கை - நீலகண்டம்

(அருண்மொழி நங்கை அவர்கள் நீலகண்டம் குறித்து எழுதியிருக்கும் விமர்சன கட்டுரை. ஒருவகையில் இவ்வகையான வாசிப்புகள் ஒரு சிலருக்கேனும் நாவல் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துவதாக இருக்கிறது. பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.  ஏனெனில் எழுத்தாளராக தன் படைப்பை எத்தருணத்திலும் காபந்து செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நாம் பலவற்றை உத்தேசித்திருக்கலாம், இவற்றை எல்லாம் செய்திருக்கிறேன் என சொல்லலாம் ஆனால் அதெல்லாம் வாசகருக்கு சென்று சேர்ந்தால் தானே உண்டு. பிரதிக்கு வலுவிருந்தால் அது தன் காலில் நிற்கட்டும். இனி அடுத்த வேலையை பார்க்க போவேன். கதையின் பல சரடுகளை இணைத்து வாசிக்கும் சாத்தியத்தை அருண்மொழி அக்காவின் விமர்சனம் சுட்டிக் காட்டுகிறது. நன்றி)  
        

அமுதம் திரிந்து நஞ்சாவதும்,  நஞ்சு அமுதமாவதும் ஒரு கணத்தில் நிகழக்கூடுவதல்ல.  அதற்கு முன்பே கடையப்படுதல் உள்ளத்தில் நிகழத்தொடங்கி விடுகிறது. அது நுரைத்து ப் பொங்கும் தருணத்தையே நம் போத மனம் (conscious mind) உணர்கிறது. இந்த நஞ்சு திரள்வது பெற்றோர் குழந்தை உறவில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதனுக்கும் இன்னொருவனுக்குமான உறவிலும், நட்பு, காதல், பாசம், குரு பக்தி என்று விரித்து விரித்து ”நீல கண்டம் ” நாவலை  மேலே  எடுத்து செல்லலாம்.
     சுனில் கிருஷ்ணனின் முதல் நாவலான “நீல கண்டம்”, கிட்டத்தட்ட  நிகழ் காலத்திலிருந்து அடுத்து வரும் தசாப்தங்களுக்குள் பூதாகரமாக உருவெடுக்கப் போகும் குழந்தைப் பேறின்மையையும், அதன் அடுத்தகட்ட தீர்வான தத்தெடுப்பினையும்  எல்லா கோணங்களிலும், பல வகையான கதை சொல்லல் முறையில் முன்னெடுக்கிறது.

அருண்மொழி நங்கை; நன்றி: ஜெயமோகன் வலைப்பதிவு (புகைப்படம்)
     நகரத்தார் சமூகத்தை சார்ந்த செந்திலும், பிராமண வகுப்பை சார்ந்த ரம்யாவும் காதலித்து பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக மணம் முடிக்கின்றனர். மேல்நடுத்தர தட்டு வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கும் ஐ.டி .துறையில் பணியாற்றும் அவர்கள் பெருநகர் சார்ந்த புற நகர்பகுதியில் ஒரு  அபார்ட்மெண்ட்டில் வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைப் பேறின்மையும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களும்,  முடிச்சுகளும் நாவலாக விரிகிறது.



      சமூகம் உருவாக்கிய கட்டுமானங்களில் குழந்தைப் பேறு என்பது என்றிலிருந்து இத்தனை ஆதார உணர்வாக , ஒரு மனிதனின் நான்கு வித புருஷார்த்ததிற்கும் அடுத்ததாக கருதும் அளவு தோற்றம் கொள்கிறது.? இந்திய தொல் மரபிலிருந்து இதன் முக்கியத்துவத்தை பார்க்க நேர்ந்தால் ஒரு நவீன மனம் அதன் பன்முக வளர்ச்சி நிலைகளை கண்டு கொள்ளலாம். அது வளத்தின் குறியீடாக தோற்றம் கொள்கிறது. பிறவிக் கண்ணியை நீடிக்கச் செய்யும் ஒரு காரணியாகவும் கருதப் படுகிறது.  அந்தக் கண்ணி அறுபட நேர்கையில் பதற்றம் கொள்ள வைக்கிறது. நம் புராண காலங்களிலிருந்தே அரசர்கள் குழந்தை வரம் வேண்டி யாகம் செய்கிறார்கள்.தெய்வங்கள் கனியும் வரை தவமிருக்கிறார்கள்.தங்கள் குருதியின் துளியே மைந்தனாகி அதிகார பீடத்தில் அமர விழைகிறார்கள். தங்கள் இறப்புக்குப் பின்னும் பித்ரு லோகத்தில் தன்னை கரையேற்ற மைந்தன் இடும் பலியை எண்ணி ஏங்குகிறார்கள்.
   குருதி மைந்தன் அருளப்பெறாதவர்கள் தன் மனைவி வேறோரு குருதியிலாவது மக்களைப் பெற அனுமதிக்கிறார்கள். உ-ம் பாண்டு.
அதற்கும் நற்பேறற்றவர்கள் சுவீகாரம் செய்கிறார்கள். சுவீகாரம் செய்வதற்கான நெறிகளை மனு தர்மம் வகுத்துள்ளது. குலத்தூய்மை, இன்னபிற பேணப்படுகின்றன.
     இதிகாசங்கள் , புராணங்கள் மட்டுமல்ல, நீதி நூலான திருக்குறளிலும் மக்கட்பேறு பற்றிய அதிகாரங்கள் உள்ளன. ”குழலினிது யாழினிது” ”தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”” ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய் ”என எத்தனைவகை  சித்திரங்கள். பக்தி இலக்கியத்திலும் “பின்னிருந்து புல்கினான்” என பெரியாழ்வாரும், நம்மாழ்வாரும் கண்ணனை குழவியாக்கி புனைந்த பாசுரங்கள், சிற்றிலக்கிய பிரபந்தங்கள், பிள்ளைத் தமிழ் என்று குழந்தைப் பேறு தெய்வத்திற்கு நிகர் வைக்கப் படுகிறது. “இத்தினியே , சித்தினியே இத்தனை நாள் எங்கிருந்தாய்” என நாட்டார் பாடலும் குழந்தைப் பிறப்பின் மர்மத்தை கவித்துவமாக்குகிறது.

       தன்னை இக உலகில் எவ்வகையிலாவது சாஸ்வதப்படுத்திக் கொள்ளும் விழைவில்லாத மனிதனை கண்டிருக்கிறோமா? அவன் தன் ஆன்மாவின் ஒரு துளியேனும் மிஞ்சி இம்முடிவற்ற காலச்சுழலில் எண்ணிறந்த ஆடிகளில் பிரதிபலிக்க விரும்புகிறான். உத்தாலகன் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் இருத்தி “ நான் நீயே தான்”என்றுரைத்தது தந்தையர் ஒவ்வொருவரும் கூற விரும்பும் ஆப்த வரி அல்லவா?

      கூட்டு நனவிலி மனத்தினால் கட்டியமைக்கப் பட்ட இந்த கருதுகோளின் கண்ணியை தனி மனிதனால் எப்படி தகர்க்க முடியும்? ஆகவே தான் ரம்யாவும் செந்திலும் முதலில் மருத்துவம், கோயில் வழிபாடுகள், பரிகாரங்கள், ஜோதிடம் என அனைத்தும் கைவிட்ட  கையறு நிலையில் கடைசிப் புகலிடமாக தத்து குழந்தைக்கு செல்கிறார்கள்.   தத்துக் குழந்தையான வரூ என்று செல்லமாக அழைக்கப்படும் வர்ஷிணியோ வளர, வளர ஆட்டிசம் எனும் குறைபாடுள்ள குழந்தையாகிறாள். அவளால் ஏற்படும் மன அழுத்தம், வலி, வேதனை இருவரையும் சுழற்ற ஒரு கட்டத்தில் அவள் காணாமலாகிறாள்.

       பெற்றோரின் அன்பு எக்கணத்தில் திரிந்து நஞ்சாகிறது,  நஞ்சு அமுதமாகிறது. இந்த சிடுக்கான மையத்தையே நாவல் பேசுகிறது. மையத்தை நாவல் கட்டமைக்கவில்லை. மைய முடிச்சை பல விதமான கதை சொல்லல் முறையில் அவிழ்த்துப் பார்க்கிறது. அதற்கு யதார்த்த கதை சொல்லல் முறை போதவில்லை. நேர்கோடற்ற சொல்முறையில்[non linear  ] அமைந்த பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட உத்தி தேவையாகிறது.

      இந்த சொல்முறை தானாகவே அதற்கான வடிவத்தை தேர்கிறது. அதனால் அது நாட்டார்  கதைகள், தொன்மக் கதைகள், புராணக் கதைகள், குழந்தைக் கதைகள் என்று எல்லா வழிகளிலும் நாவலின் மையத்தை அணுகி உடைத்துப் பார்க்கிறது.

         குழந்தைக் கதைகளில் பலவாறாக வரூவின்  உலகம் காட்டப்படுகிறது. அக்‌ஷரா தேசத்தின் குட்டி இளவரசியாக வரும் வரூவின் உலகில் நவீன டிஜிட்டல் யுக தொன்மங்களான கடலாமை, பேக் மேன், நிமோ, டோரா, மிஸ்டர் இசட், நிஞ்சாஸ், சோட்டா பீம் என அனைவரும் உலவுகிறார்கள். யதார்த்த உலகத்தின் அளவுக்கே அவ்வுலகம் விரிவாக காட்டப்பட்டு அந்த மாற்று யதார்த்தம் ஒரு நிகர் உலகை கட்டமைக்கிறது. வரூ புற உலகின் எந்த கரங்களாலும்  தீண்டப்படாமல் குட்டி தேவதையாக வலம் வருகிறாள்.  வரூவின் கதைகள் வாசகனை கடும் உள நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கின்றன.

      குழந்தைக் கதையின் ஒரு இடம் மிக இயல்பாக யதார்த்த தளத்துடன் வந்து பொருந்திக்கொள்வது போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. உ-ம்  மருத்துவ மனையில் வரூ தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு  ரொட்டித் துண்டை எறும்புகளுக்கு நுணுக்கிப் போடுவதை செந்தில் எரிச்சலுடன் பார்க்கிறான். ஆனால் வரூவின் அந்த  செய்கை ,குட்டி மீன் நீமோவைக் கொண்டு கடலில் விட்டு விட்டு, தான் பத்திரமாக எறும்புத்தலைவனான மிஸ்டர் இசட்டுடன் வீடு வந்து சேர்வதை வரூவின் கோணத்தில் சொல்கிறது. மிஸ்டர் இசட் தனக்கு தாமதமாகக் கிடைத்த  உளவுச் செய்தியால் கறுப்பு எறும்புகளிடம் உணவை கோட்டை விடுகிறது. மிஸ்டர் இசட் வரூவிடம் உணவு கேட்க அதற்கு அவள் ரொட்டியை போடுகிறாள்.

      இனி துணைக் கதைகளை பார்ப்போம்.  ஒரு நவீன மனம் புராணத்தை எவ்வாறு தலை கீழாக்கம் செய்கிறது என்பதற்கு உதாரணமாக சிறு தொண்ட நாயனாரின் புராணக் கதை வருகிறது . இதுவரை பக்தியின் உச்சம் என்று மெய்சிலிர்ப்போடு வாசிக்கப் பட்ட திருவிளையாடற் புராணக் கதை,  நாயனாரின் மகனான சீராளனால் அவனுடைய தரப்பாக வைக்கப் படும்போது ஒரு நவீன வாசிப்புக்கான கோணம் திறக்கிறது.பக்திக்கு நிகர் வைக்க  என் உயிர்தானா என்று சீராளன் கேட்கிறான்.  தான் சிரஞ்சீவியாகும் சாபத்தை  பெற்றதாக கண்ணீர் விடுகிறான்.அவன் தந்தையின் அன்பில் உள்ள நஞ்சு முடிவற்ற காலத்தில் அவனை உழற்றும் பிணியாக மாறுகிறது.

    மாறி மாறி குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதும், பலியிடப்படுவதும் துணைக் கதைகளின் சாரமாக இருக்கிறது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளான வரு, வருவின் பாட்டியான வரலக்‌ஷ்மி, செந்திலின் முன்னோரான நாகப்பன் என்று ஒரு வரிசை புறக்கணிப்புக்கு உள்ளாகிறது. பலியிடப்படும் சொந்தக் குழந்தைகளின் ஒரு வரிசை சீராளன், மெடியாவின் குழந்தைகள், நாகம்மை. 

      வாழ்க்கையின் சாரமாக பெற்றோரால் கருதப்படும் குழந்தைகள் எந்த கட்டத்தில் தேவையற்றவர்களாக, சுமையாக ஆகிறார்கள்? தன் தன்முனைப்பை, அகங்காரத்தை தொல்லை செய்யாதவரை அவர்களை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள். ஏதோ ஒரு தருணத்தில் கைவிடவும் துணிகிறார்கள். அப்படியானால் ஏன் இவ்வளவு வலியும், தவமும் குழந்தைக்காக.? பலவாறான  கேள்விகளை இப்பிரதி தனக்குள்ளும், வெளியிலுமாக எழுப்பியபடியே விடை காண முயல்கிறது.

      யூரிபிடஸின் இதிகாச பாத்திரமான மெடியா தன் கணவன் ஜேசனைப் பழி வாங்க, அவனை முடிவில்லா குற்ற உணர்ச்சியெனும் நரகத்தில் தள்ள தன் சொந்தக் குழந்தைகளை பலியிடுகிறாள். துன்பத்தில் இன்பம் காண்கிறாள். கிரேக்க துன்பியல் தொன்மமான அவள் இங்கு வந்து நம் நாட்டார் கடவுளான சுடலை மாடனிடம் முறையிடுகிறாள். ”பெத்த எனக்கு கொல்ல உரிமையில்லையா” என. சுடலைமாடனும் தன்னுடைய ஒன்பதுமாத சிசுவின் குருதி குடித்து அழித்த கதையை பாடுகிறான். இருவரும் சேர்ந்து  துயரச் சாயல் கொண்ட துன்பியல் நாடகத்தை அங்கத நாடகமாக்குகிறார்கள். கடைசியில் நாடக உச்சத்தில்  எப்போதும் தவறான மேற்கோளால் தவறாகவே சித்தரிக்கப்படும்  தீர்க்கதரிசி கலீல் கிப்ரான் கோமாளியாக்கப் படுகிறார்.

        துர்மரணம் நிகழ்ந்த நீத்தார் கதையான நாகம்மை கதை இரு  வேறுபட்ட பிரதி வடிவங்களில்  செந்திலுக்கு சொல்லப்படுகிறது.  நாகம்மை பச்சை பட்டுடுத்திய அன்று துர்மரணத்தில் இறக்கிறாள். பேசா பொற்சித்திரம் போல் கொலுசின் மெல்லோசையில் மட்டுமே தன் இருப்பை அறியத்தரும் நாகம்மை  பிறகு அக்குடும்பத்தின் கன்னித் தெய்வமாகிறாள்.  எப்போதும் அழுது அடம்பிடித்து கிளிப்பச்சை ஃப்ராக்கையே வரூ அணிகிறாள். பிறவிச் சங்கிலி, மறு பிறப்பு என்று நவீன மனம் நம்ப மறுக்கும் பல தற்செயல் ஒற்றுமைகள், சாத்தியங்கள்  நிகழ்கின்றன. அனைத்தையும் மீறி தர்க்கமனதை பேதலிக்க செய்யும் மீமெய்யியல் தருணம் அது.  

      நிஜ மாந்தர்கள் கதாபாத்திரங்களாகும் மெட்டா ஃபிக்‌ஷன் எனும் வகைமைக்கு  வான்மதி- அருள்மொழி சகோதரிகளின் கதை வருகிறது. தசையழிவு நோயினால் உருக்குலைந்து  கொண்டிருக்கும் அவர்கள் ஆயிரம் கரங்களும் , ஆயிரம் கால்களுடன் லட்சியவாதிகளாய் இருக்கிறார்கள்.  அறிவு பூர்வமாக  யோசிக்கக் கூடிய, பொதுப் புத்திக்கு நல்லவனாகவே வரும் செந்தில் அவர்களை எதிர்கொள்ள தயங்குவதும் ஓடி ஒளிவதும் ஏன்? அவர்களின் லட்சியவாதத்தின் முன் கூசி நிற்கவே அவனால் முடிகிறது. யாரையும் தன்னை தொட அனுமதிக்காத வரூ, வான்மதி தன்னை  தொட அனுமதிக்கிறாள். அவளுடன்  வரூ தன்  மொழியில் உரையாடுகிறாள். இருவரும் அவர்களின் உலகில் மகிழ்ந்திருப்பதை செந்தில்  ஒரு குற்ற உணர்வுடன் பார்த்து நிற்கிறான். அவன் மனதின் நஞ்சை வான்மதியின் உள்ளுணர்வு உணர்ந்தே இருக்கும். 

     திரிந்த ஆளுமையாக வரும் நந்தகோபால், ஃபிரீக் அவுட் ஆளுமையாக வரும் ஹரி இருவரும் நுட்பமாக காட்டப்பட்டுள்ளனர்.
நீலகண்டம்
      எல்லாப் பகுதிகளுக்கும் அவற்றுக்கான பிரத்யேக மொழிநடை ஆசிரியருக்கு கைகூடி வருகிறது. மொழி சரளமாகவும், நேர்த்தியாகவும்  இருப்பதால் நாவல் வாசிக்கும் அனுபவத்தை இனிமையாக்குகிறது. அங்கத மொழி, தொன்ம மொழி, நாட்டார் மொழி, குழந்தைக்கான தேவதைக் கதை மொழி, என பல வண்ண பேதங்கள். குழந்தை உற்பத்தி முனையம் என்ற அத்தியாயம் சர்ரியலிச பாணியில் சொல்லப்பட்டு ஒரு அறிவியல் புனைவு வாசிக்கும் சுவாரஸ்யத்தை தருகிறது. நவீனத்துவ நாவலில் வரும் இறுக்கமான மொழி, கச்சிதமான விவரணைகள், குறைந்த பட்ச கூறுமுறை[  minimalistic narration] என்று கட்டுப்பாடில்லாமல் மொழி பொங்கிப் பிரவாகிக்கிறது. இதுவும் இந்நாவலின் பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றாகிறது.

        உப கதைகள் தன்னியல்பாக அல்ல ,திட்டமிட்டே தர்க்கத்திற்குள் அடங்காதவையாக, தொடர்பற்று  இருக்கும்படி காட்டப்படுவதும்  , கால ஒழுங்கு[chronological order ] மாறி மாறி வருவதும் கூட பின் நவீனத்துவ உத்திகளுள் ஒன்று. வேதாளம், விக்ரமாதித்யன் கதைகளில் வரும் வேதாளம் ஒரு நவீன கதைசொல்லியாக அவதாரம் எடுக்கிறது. ஒவ்வொரு உபகதைக்கும் ஒரு முன்வரைவை [ prelude ] அது கொடுக்கிறது.

     நாகம்மை, சீராளன், வரூ, வரலக்‌ஷ்மி, அனைவருமே பேசா குழந்தைகள் அல்லது தாமதமாக பேசத் தொடங்கும் குழந்தைகள். அவர்கள் தங்கள் பெற்றோரில் வெளிப்படும் நஞ்சின் முன் மூர்க்கமான ஒரு மௌனத்தை, எதிர்வினையை அளிப்பதே நாவலின் மையத்தை வலுப் படுத்துகிறது. ரம்யாவின் அம்மா வரலக்‌ஷ்மிக்கு வரு மேலுள்ள விலக்கம் எதனால்? தன்னைப்போலவே அவளும் ஒரு தத்துக் குழந்தை என்பதாலா?  ரம்யா தன் அன்னையிடம்  நெருங்கும் காலத்தில் தான் வரூவிடம் இருந்து விலகுகிறாள்.இது நாவலுக்கான வாசிப்பு சாத்தியங்களை செறிவு படுத்துகிறது.

         வரூ  கண்டிப்பாக ரம்யா, செந்தில் இருவரின் மனத்திலும் நஞ்சு முள்ளென முகிழ்க்கும் கணத்தை அறிந்திருப்பாள். அவளுக்கு தர்க்க மனத்தைவிட உள்ளுணர்வு மனம் கூரென திரண்டிருக்கும். சராசரி குழந்தைகளைவிட சிறப்பு குழந்தைகள் மற்றவர்களிடம் உள்ள பாவனை எனும் போர்வையை விலக்கிப்  பார்க்கமுடியும். அவள் தொலைந்து போனது கூட அவளாகவே நிகழ்த்திக் கொண்டது தானோ? நாவல் மேலும் மேலுமென வாசகன் மனதில் வளரத் தொடங்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

   மைய உருவகமான நீலகண்டம் தவிர சிதலால் உண்ணப்படும் வீடு, கடலாமை- பேக் மேன், மரணமில்லா பெருவாழ்வு விதிக்கப்பட்ட சீராளன் என அழகிய குறியீடுகள் நாவலெங்கும்  வருகின்றன.

       மீரா முரளி தம்பதியினரின் வளர்ப்பு குழந்தை இரண்டு  வயதில் தத்தெடுக்கப் படுகிறாள்.  அவள் பெற்றோரிடம் நன்றியோடு இருக்கிறாள் , விலகியே இருக்கிறாள் என்பது யதார்த்தத்துக்கு பொருந்தாமல் உள்ளது.

      ஒரு யதார்த்தவாத நாவலின் உணர்ச்சிக் குவியமோ, உச்சமோ அல்லது ஒரு கண்டடைதலோ யதார்த்தவாத சித்தரிப்பில்  கூர் கொள்ளும் அளவுக்கு மற்ற சித்தரிப்புகளில் நிகழாது போவதுபோல் தோன்றுகிறது.   அதாவது ரம்யா செந்தில்  இருவருக்குள்ளும் திரண்டிருக்கும் நஞ்சை அவர்களே உணரும் கணம்  என்பது வரூ தொலைந்து போகும் கணம். அந்த விஷத்தை அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? பிறகு அதை அவர்கள் உட்செரிக்கலாம், உமிழலாம், கண்டத்தில் சுமந்தலையலாம். அச்செயல்பாட்டை விட தன் விஷத்தை தானே உணர நேரும் கணம் ஒரு மனிதனுக்கு முழு மானுடத்தையும் உணர நேரும் தருணம். அதை ஒரு வரியில் கடந்து செல்கிறார் நாவலாசிரியர்.உடனே இருவருக்குள்ளும்  வரும் குற்ற உணர்ச்சி அதை மேலோட்டமாகவே சமன் செய்கிறது. அது அவர்களாகவே தங்களுக்கு  போட்டுக் கொள்ளும் ஒரு திரை.  

       கடைசியில் வரும் தேவாசுரர் கடைதல் மிக விரிவாக விவரிக்கப் பட்டு புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன.  நீலகண்டம் எனும் மைய உருவகத்தை விளக்கவோ,அதன் மேல் புதிய அர்த்தங்கள் ஏற்றவோ தேவையில்லை. அந்த படிமமே அனைத்தையும் உணர்த்தும் வல்லமை கொண்டது. ஈராயிரம் ஆண்டு  களிம்பேறிய உருவகம்  அது . யதார்த்தவாத நாவலில் வரும் உச்சங்கள்  தொன்மக் கதையாடல்களிலோ, , குறியீட்டு கதையாடல்களிலோ நிகழ்வதற்கான சாத்தியங்கள்  குறைவு.   

அமுது நஞ்சாவதும், நஞ்சு அமுதாவதும் எந்தக் கணத்தில் நிகழ்வது என்றறிய முடியாததே மானுடகுலத்தின் மிகப்பெரிய கேள்வி. உமிழ்ந்து அழிப்பதற்கும் உட்செரித்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப் போனது இப்புடவி. தன் கண்டத்தில் விடத்தை நிறுத்த தெரிந்த நீலகண்டர்களால் ஆனது இவ்வுலகு.

Wednesday, January 15, 2020

நஞ்சுக்கும் அமுதென்று பேர்- நீலகண்டம் குறித்து சுபா

(நண்பர் சுபஸ்ரீ சிங்கப்பூரில் வசிப்பவர் என சொல்லிக்கொண்டாலும் பெரும்பாலும் எங்களுக்கு எல்லாம் பொறாமை ஏற்படுத்தும் அளவிற்கு உலகின் வெவ்வேறு மூலைகளுக்கு பறந்து சென்று கொண்டிருப்பவர். நீலகண்டம் குறித்து இதுவரை வந்துள்ள சிறந்த பார்வைகளில் ஒன்று. எழுத்தாளர் எழுதி முடித்த படைப்பிற்கு உரிமை கொண்டாடக் கூடாது, எதிர்மறை விமர்சனத்தையும், நேர்மறை பாராட்டையும் சமநிலையில் அணுகுவதே சிறந்தது என மனதை பழக்க முயன்றபடி இருந்தாலும், இத்தகைய ஒரு வாசிப்பு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.  நன்றி சுபா)

அன்புள்ள சுனீல்,

நீலகண்டம் வாசித்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. என்னை மிகவும் பாதித்த நாவல். உறவினுள்ளேயே தத்தெடுக்கப்பட்ட எனது குழந்தைப்பருவம் இன்றுவரை அவ்வப்போது தலைசிதறும்படியான கேள்விகளை எழுப்பியபடி தோளில் கணக்கிறது.

அதனாலேயே இதை தர்க்கரீதியாகவோ விமர்சனமாகவோ அணுக முடியவில்லை என்று நினைக்கிறேன். எனினும் இயன்றவரை எனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.


குழந்தைப்பேறுக்கான சமூக அழுத்தம், ஆட்டிசக் குழந்தைவளர்ப்பின் தத்தளிப்புகள், காதலின் வண்ணங்கள் மண
உறவுக்குப்பின் வெளிறிப்போதல் எனப் பல்வேறு பேசுபொருள் வந்தாலும் சுழிமையமாக எனை ஈர்த்தது இந்நாவல் காட்டும் தாய் தந்தை - பிள்ளைகளின் உறவுதான். பெற்றோர் என்ற வார்த்தையை கவனமாகவே தவிர்க்கிறேன்.

தாய் தந்தையரால் கைவிடப்பட்டதாக உணரும் குழந்தையாக, பெற்ற குழந்தையை பலி கொடுக்கத் துணிந்த பெற்றோராக, பல சமூக நிர்ப்பந்தங்களுக்கிடையே விரும்பியேற்ற வளர்ப்புக் குழந்தையை பெற்ற குழந்தையினும் 'அதீதமாக' அன்பு செலுத்த முயலும் தாய் தந்தையராக, அவ்வன்பை நன்றியறிதலாக பிரதிபலிக்க நேரும் வளர்ப்புக் குழந்தையாக என்ற பல வாசிப்புக் கோணங்களை இந்நாவல் தருகிறது. அது ஒவ்வொன்றும் உள்ளூர உணரச் செய்யும் மெய்யான தத்தளிப்பே இந்நாவல் வாசிப்புக்குப் பிறகு கண்டத்தில் நிற்கும் நஞ்சு.

முதலாவதாக நாவலின் மையம்.

கதையெங்கும் ஒரு நீள் சரடென தத்தெடுப்பது வருகிறது. வரு, அவள் பாட்டி வரலக்ஷ்மி, செந்திலின் தாத்தா நாகப்பன், தருணிகா(மீரா-முரளி) என்று ஒரு வரிசை. பெற்றோரால் கைவிடப்பட்டவர்களின் ஒரு வரிசை - நாகம்மாள், சீராளன், ரயில் ஓட்டுனரின் குழந்தை என

தாய்-தந்தைமை, மக்கட்பேறு என்பதன் பொருட்டு மானுடம் எது வரை செல்கிறது என்ற கேள்வியை இந்தக் கதை மையமாக எழுப்பிக் கொள்கிறது. அதன் ஒரு எல்லையில் குழந்தைப் பேறுக்காக ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை கதவுகளைத் தட்டி தத்தெடுக்க முனைவதும், மறுமுனையில் தத்தெடுத்த பிறகு தடுமாறுவதும், பெற்ற பிள்ளைகளிடம் தங்கள் வழியே மண் வந்த உரிமையாலேயே பலியிடுவது முதல் புறக்கணிப்பது வரை செல்வதுமென விரிகிறது நஞ்சூறும் தருணங்கள்.

'உசிரக் கொடுத்தவ நான், எடுக்கக்கூடாதா' என்ற மெடியாவின் மனநிலையில் பெற்றோரால், தான் பெற்றெடுத்த குழந்தைகள் வாழ்வின் மீதான முடிவுகளை எடுப்பது (உயிர் எடுப்பது உட்பட) சரியோ தவறோ இலகுவாக இருக்கிறது. சுடலைமாடனால் தன் குருதியைக் குடிக்க முடிகிறது. ரம்யாவின் தாயால் தன் பெண்ணை மீண்டும் மீண்டும் உதாசீனப்படுத்த முடிகிறத. ரம்யா தனது அம்மாவின் அன்பிற்காகக் காத்திருந்தது அவள் அணுக நேரும் போது புறக்கணிப்பைத் தருகிறாள். அந்தப் புறக்கணிப்பு ஒரு வகையான உரையாடலே எனத் தோன்றியது. தாயும் மகளும் மிகச் சரியாக உணர்ந்து கொள்ளக்கூடிய உரையாடலே இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் காட்டிக் கொள்ளும் புறக்கணிப்பு போன்ற ஒன்று.

செந்தில்-ரம்யா வரு குறித்து கொள்ளும் தத்தளிப்பு அதில் இல்லை. தருணிகா தூக்கிச் சுமக்கும் நன்றியறிதல் எனும் நஞ்சு அதில் இல்லை.
பங்காளி வீட்டில் இருந்து தத்துவந்த நாகப்பன் மீது அளவுக்குமீறிய அன்பைப்பொழிவதும்,
மரகதவல்லி கருவுற்றதும் இயல்பாக நாகப்பன் மேல் கோபம் கொள்ள முடிந்தது என்பது மிகச் சிறந்த அவதானிப்பு. புறக்கணிப்பு மட்டுமல்ல, அளவுக்கு மீறிய, அல்லது நிர்பந்திக்கப்பட்ட அன்பும் நஞ்சாகத் திரியும்.

இது ஒரு புறமெனில் பெற்றோரால் வாழ்வின் கதி நிரந்தரமாக மாற்றிவிடப்பட்ட பிள்ளைகளின் பார்வை இரு எல்லைகளில் ஓன்றாகவே இருக்கிறது. தந்தையரின் பெருமை பொருட்டு தெய்வங்களுக்கு பலியிடப்படுவதன் துயரம் என்று தாய் தந்தையரால் கைவிடப்பட்டதாக உணரும் சீராளன் ஒரு முனை என்றால், தனைக் கொல்லாது ஐந்து குழந்தைகளை பலி கொண்டு வாழ்நாளுக்கும் வலி தந்து சென்றதாக உணரும் ரயில் ஓட்டுனரின் குழந்தை மறுமுனை. இரு எல்லைகளிலும் தன் மேல் 
வாழ்வின் செல்திசையை மாற்றிவிட்ட முடிவுகளை சுமத்திய பெற்றோரால் கைவிடப்பட்டதாகவே உணர்கிறார்கள். எத்திசை தேரினும் அத்திசை நஞ்சே. 


இரண்டாவதாக நாவலில் வரும் படிமங்கள்.

சிதல் கதையின் தொடர்ச்சி போல நாவலின் நடுவில் வரும் கரையான் நாவலின் பேசுபொருளின் சிறந்த படிமமாகப் படுகிறது. அம்மாவின் நினைவாக எஞ்சும் பவளமல்லிச் செடியில் மண்ணெண்ணெய் ஊற்றுவது போல, உதறவியலாத உறவின் பொருட்டு அன்பின் வேரில் நஞ்சை உமிழும் நீலகண்டர்கள்.

செந்திலின் பூர்விக வீடு - நஞ்சுமிழும் வீடு, வாழவும் வழியின்றி, கைவிடுதலின் குற்றவுணர்வைத் தந்தபடி, விற்று வெளியேறவும் விடாமல் பால்யங்களின் நினைவைச் சுமந்த வீடு. அவனது மகள் வருவைப் போல. இரண்டும் அவனை வந்தடைந்தவை. நேசத்தின் கவர்ந்திழுக்கும் நச்சு உமிழ்பவை. உட்செரிக்கவோ உமிழ்ந்து விடவோ இயலாதவை.
வீட்டைப் பார்த்து,
"ஏன் இதைக் கட்டுவானேன், கட்டிச் சீரழிய விடுவானேன்" என்ற எண்ணவோட்டத்தின் தொடர்ச்சியாக "இந்த ஊர் வருவுக்குப் பிடிக்கும்" என்று செந்தில் எண்ணுவது மிக இயல்பாக அவனுள் இந்தத் தொடர்பை தொட்டெடுக்கிறது.

வேதாளம்-விக்கிரமன் உரையாடல்கள் கதையைக் கட்டமைக்கும் உத்தியாக மட்டுமல்லாது, நஞ்சு-அமுது எழும்பொழுதுகளின் இருமை நிலையைச் சொல்கிறது.
நாம் அனைவருமே ஒரு வகையில் மனதுள் எழும் நஞ்செனும் வேதாளத்தை நீதியுணர்வினால் கட்ட முயலும் விக்கிரமர்கள்தானே.

தேவர்-அசுரர் சித்தரிப்பும் பாற்கடல் கடைதலும் மிகப் பொருத்தமாக வருகிறது. இந்நாவல் வாசிப்பு நிகழ்த்திவிடும் மாபெரும் மனக்கடல் கடைதலில் அமுதுக்கான விழைவில் உள்ளுக்குள் எஞ்சியிருக்கும் நஞ்சு வெளிவந்து அசுரர்தன்மையை உணரச் செய்கிறது, ஆழத்தில் எங்கோ நிழலென தேவனெனத் திகழும் சில தருணங்களையும் உணர்த்துகிறது. தேவரும் அசுரரும் வெறும் மனநிலைகளே என்பது மட்டுமல்ல, அமுதே நஞ்சென்பதும் இந்நாவல் காணும் மெய்மையே.

மூன்றாவதாக, வாசிப்புக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கவிடாது நாவல் மனதுள் வளர்ந்து கொண்டே இருக்கும் முடிச்சுகள்.

அலமேலுவிடம் தான் அனுபவித்த வேதனையை வரலட்சுமி என்னவாக மாற்றிக் கொள்கிறாள்? அது அவளை ரம்யா-வரு உறவை எவ்விதம் புரிந்து கொள்ள வைக்கிறது? இவை எல்லாம் நான் இன்னும் தட்டித் திறந்து கொண்டிருக்கும் கேள்விகள். இசையைத் தொலைத்த மிருதங்கம் கண்டு தளர்ந்து போன தந்தையால் வருவை உணர்ந்து கொள்ள முடிவது புரிகிறது. 

ஹரி அவனது தந்தை ஏதோ ஒரு விதத்தில் தந்த புறக்கணிப்பை அவனது நிலைகொள்ளாமை, எதிலும் இயைந்து கொள்ளும் நீர்மை, நீர்படூஉம் புணை போன்ற வாழ்க்கை என்று வாழ்வின் வழியாக அந்த நச்சை கண்டத்தில் வைத்திருக்கிறானோ என்றெண்ணிக் கொண்டேன். நஞ்சைக் கண்டுகொள்வதற்கும், அதை உமிழ்ந்துவிடாதிருப்பதற்கும், தானே உட்செரித்து அழிவதற்கும்தான் எத்தனை எத்தனை மகத்தான காரணங்கள் தருகிறது இவ்வாழ்வு!

நிகழ்கதை - கனவு - புனைவு - தொன்மம்- குழந்தையின் உலகம், நீத்தோர் கதை என்ற அனைத்து தளத்திலும் பயணம் செய்யும் இந்நாவலும், அதன் பல காட்சிகளும் ஒரு ஆழமான நதியின் அடியில் குளிர்ந்து கிடக்கும் கல் போல எனக்குள் என்றுமிருக்கும்.

மிக்க அன்புடன்,
சுபா

Monday, January 13, 2020

நீலகண்டம்- கோமளா


(கோமளா எங்கள் பகுதியில் அரசு பள்ளியில் கணக்கு ஆசிரியையாக இருக்கிறார். மரப்பாச்சி இலக்கிய வட்டத்தில் முக்கிய உறுப்பினர். தொடர்ந்து பங்களிப்பு ஆற்றி வருபவர். அவர் நீலகண்டம் நாவல் குறித்து அவருடைய வாசிப்பை எழுதியுள்ளார். நன்றி)      

  ஆலகால விஷம் அனைவரும் அறிந்ததே...இது விஷத்தைப் பற்றிய வித்தியாமான விளக்கம்..நச்சைப் பற்றி புதிய கோணம் ..ஆட்டிச குறைபாடு பற்றிய நாவலோ இது என ஆரம்பத்தில் தோன்றினாலும் போகப்போக ஆட்டிச பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட அகச்சிக்கலை பிரதிபலிக்கும் கதை என உணர முடிகிறது..நாம் அனைவருமே ஒரு வகையில் நீலகண்டர்கள் தான் என்ற உணர்வு தந்து முற்றுப் பெறுகிறது..

                   இன்றைய நவீன யுகத்தின் குழந்தையின்மை தம்பதியரின் அகச்சிக்கலே நீலகண்டத்துதுக்கு அடித்தண்டாக நான் உணர்ந்தது..செந்தில்-ரம்யா வெவ்வேறு வாழ்வியல் சூழலில் வளர்ந்த இவர்கள், மனமொத்து,குடும்பம் பிரிந்து,மணம் செய்து வாழும் நிலையில், குழந்தையின்மை  பிரச்சினை உருவெடுக்க,ஒரு குழந்தையை தத்தெடுக்க, தத்தெடுக்கப்பட்ட அக்குழந்தையோ ஆட்டிச குறைபாடுடையதாக அமைகிறது.அக்குழந்தையை வளர்க்கும் பொருட்டு விளையும் சிக்கல்கள்,உண்டாகும் அவமானங்கள்,ஏற்படும் சலிப்புகள் இவற்றோடு பயணிக்கும்போது முடிவில் மனம் கனக்கிறது.

        வரு என்கிற வர்ஷினி பேசாவிட்டாலும் உணர்வுகளால் மனதை நிரப்புகிறாள்.நீலயானை பொம்மை,சோட்டாபீம் கோஷ்டி,நீமோ,நிஞ்சாஸ் என எல்லோரும் உலா வரும் பக்கங்கள் ரசிக்க வைக்கிறது.அதுவும் சுடலைமாடன்-மெடியா ஒருங்கிணைப்பு மிகச்சிறப்பு..பரம்பரையாக குலங்களில் தோன்றி மறைந்த பெண் குழந்தை தெய்வ வழிபாடு புனைவு அல்லாத விசயமே. இன்றுமே எல்லா சமூகத்திலும்  பின்பற்றப்படும் பழக்கமே..இவ்வாறாக ஆங்காங்கு நிகழும் நிகழ்வுகள் முடிவில் ஒரு புள்ளியில் இணையும் விதம் நன்று.

         அவமானம்,புறகணிப்பு,ஒருதலைப்பட்சம்,சலிப்பு,வன்மம் இப்படி உள்ளத்துக்குள் ஊறும் நச்சை உமிழ்ந்து அழிப்பற்கும், உள்ளுக்குள்ளே வைத்து வாழ்வதற்குமான ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது இந்நாவல்...அருமை ரைட்டர் நல்ல படைப்பு..

Tuesday, January 7, 2020

மன்றம் நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் 'மன்றம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்ற சென்றிருந்தேன். கடந்த ஆண்டு மன்றம் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது இதன் நிறுவனர்களில் ஒருவரான வெங்கட்ராமனை சங்கீதா ஸ்ரீராம் அறிமுகப்படுத்தினார். சென்னையில் மூன்று நான்கு நிகழ்வுகள் நடத்தி இருக்கிறார்கள், பெங்களுரு மற்றும் கோவையிலும் நிகழ்வுகள் நடத்தி இருக்கிறார்கள். தமிழில் டெட் உரை போன்ற செறிவான முயற்சி என சொல்லலாம். துறை வல்லுனர்களை அழைத்து இருபது இருபத்தி ஐந்து நிமிடங்கள் பேச வைக்கிறார்கள். பார்வையாளர்கள் அதிகபட்சம் நூறு பேர் இருக்கலாம். உரைக்கு பின் சிறிய கேள்வி பதில் அமர்வும் உண்டு. யூ ட்யூபில் உரைகள் வலையேற்றப்படும். 'மன்றத்தை' நிறுவிய இன்னொருவர் மரகதவள்ளி. எங்கள் ஊர்க்காரர். எனது ஆசிரியரின் மகள், பள்ளியின் வகுப்பு தோழியின் மூத்த சகோதரி. இந்நிகழ்வில் தான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். மேடைகள் எனக்கு இப்போது எந்த பதட்டத்தையும் அளிப்பதில்லை. எதிர்கொண்டு பழகிவிட்டேன். ஜெயமோகன் முன் மேடையில் பேசுவது மட்டும் கொஞ்சம் பதட்டமளிக்கும் விஷயம். அதையும் கூட இப்போது ஓரளவு கடந்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும். மரகதவள்ளி முந்தைய நாள் எனக்கு அழைப்பை வாட்சப் செய்தபோது சக பேச்சாளர்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

காலை மரகதவள்ளி குடும்பத்துடன் நானும் காரில் சேர்ந்துக்கொண்டு மதுரையை வந்தடைந்தேன். பத்து மணிக்கு எங்களைத் தவிர எவருமே இல்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஆட்கள் வர காத்திருந்தோம். சேம்பர் ஆப் காமர்சில் மாடி மெப்கோ அரங்கில் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு காந்தி குறித்து பேசுவதா அல்லது ஆயுர்வேதம் குறித்து பேசுவதா என்றொரு குழப்பம் இருந்தது. ஒருவழியாக ஆயுர்வேதம் குறித்தே பேசலாம் எனும் முடிவுக்கு வந்தேன். சமீபத்தில் தான் பாலசுப்பிரமணியம் முத்துச்சாமியின் 'இன்றைய காந்திகள்' வாசித்திருந்தேன். அதில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை எனக்கு மிகப்பிடித்த ஒன்று. 

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் நண்பர் டாக்டர். ரவிச்சந்திரன் வந்திருந்தார்கள். எழுத்தாளர் சுசித்ரா வந்திருந்தார் என்று அறிந்து கொண்டேன். தாமதமாக துவங்கிய அரங்கில் முதலாவதாக பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் பேசினார். மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் 281 வகை பறவை இனங்கள் உள்ளன என்றார். பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் வாழிட நெருக்கடிகள் என செறிவான உரை.

அடுத்ததாக அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். வெங்கிடசாமியின் தங்கை டாக்டர். நாச்சியார் பேசினார். அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாடு குறித்து அவர் ஆற்றிய உரை உண்மையில் இப்போது வரை என்னை சிந்திக்க செய்தபடி இருக்கிறது. இதன் தாக்கம் நெடுநாள் இருக்கும் என்றே நம்புகிறேன். ஒரு நிறுவனம் நல்ல நோக்கத்திற்காக மக்களுக்காக தொடங்கப்பட்டால் அது மக்களால் நடத்தப்படும். அவர்கள் அதை தங்களுடையதாக ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.எங்களுக்கு தங்க பதக்கங்கள் பெற்றவர்கள் தேவையில்லை. நாங்கள் வேலைக்கு எடுக்கும் மனிதர்கள் சமூகத்துடனும் குடும்பத்துடனும் நல்லுறவில் இருக்கிறார்களா என்பதே எங்களுக்கு முக்கியம் என்றார். அபார மன எழுச்சி அளித்த உரை. ஆயுர்வேதத்தில் இப்படியான ஒன்றை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதை யோசித்து கொண்டிருக்கிறேன். தெரியவில்லை. 

அடுத்து பேசிய செந்தில்குமார் தொழில்நுட்ப வல்லுநர். பழங்குடி மக்களின் பேறுகால சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளார். செலவற்ற எளிய தொழில்நுட்பம்தான் ஆனால் நூதனமான பங்களிப்பு. அநேகமாக அவருக்கு என் வயதிருக்கலாம். ஆனால் அதற்குள்ளாக அவர் செய்திருக்கும் சாதனை அளப்பறியாதது. உணவு இடைவெளிக்கு பிறகு நான் பேச வேண்டும். முதன்முறையாக இத்தகைய ஒரு மேடையில் இருத்தலியல் கேள்விகளை கொண்ட அற்பனாக நின்று பேசுவது கூச்சத்தை அளிப்பதாக இருந்தது. காந்தியை செயல்வழியாக அல்ல அறிவார்ந்த தளத்திலேயே என்னால் அணுக முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வின் ஊடாக காந்தியை தான் நான் பல்வேறு பரிமாணங்களில் கண்டேன். எனக்கு பின் பாமயன் அறம் சார் வணிகம் பற்றியும் வேளாண்மை சமூகத்தை கட்டமைப்பது பற்றியும் பேசினார். இறுதியாக மதுரை துணை ஆணையர் லில்லி கிரேஸ் காவலர்- மக்கள் உறவு பற்றி செறிவான சிறிய உரை ஆற்றினார். எனது உரை விரைவில் வலையேற்றப்படும். 

நிகழ்விலிருந்து எனக்கு பெற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருந்தன. செறிவாக சரியான மனிதர்களை கொண்டு, உரிய நேரத்தில் சிதைவின்றி, உரிய தலைப்பில் நிகழ்ந்த உரைகள் என்பதால் மன்றம் அமைப்பின் மீது எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் கூடியது. அவர்கள் இதை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/channel/UCHoyxwXV_MwBgGCCcIJG2FQ  இத்தகைய முயற்சியை நண்பர்கள் ஆதரிக்க வேண்டும். 



ஒரு எழுத்தாளனின் வருகை

புத்தக கண்காட்சி வர இருக்கிறது. எங்கும் கலவர பரபரப்பு. இப்போது எதை எழுதினாலும், சொன்னாலும் சந்தை இரைச்சலில் கேட்குமா என தெரியவில்லை. எனினும் சொல்லத்தான் வேண்டும். 

இந்த ஆண்டு வரைவு பிரதியாக நண்பர்களின் நூல்களை வாசிக்க நேர்ந்தது. நான்கு நாவல்களை வாசித்தேன், அவற்றுள் நவீனின் 'பேய்ச்சி' முக்கியமான ஆக்கம் என தயங்காமல் சொல்வேன்.சிறுகதை தொகுப்புகளும் நான்கைந்து வாசித்திருப்பேன். 2010 க்கு பின்னர் சிறுகதை ஆசிரியர்களாக நிலைபெற்றவர்கள் சார்ந்து எனக்குள் ஒரு வரிசை உள்ளது. குணா கந்தசாமிதான் எனக்கு முதன்மை எழுத்தாளர், அவரை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், கே.என். செந்தில், போகன், கா.பா, மற்றும் சாம்ராஜ் என்பதே எனது வரிசை. சித்திரன், ரமேஷ் ரச்க்ஷன், அனோஜன், சுரேஷ் பிரதீப்,  விஷால் ராஜா, கார்த்திக் பாலசுப்பிரமணியம் மற்றும் தூயன் போன்ற நண்பர்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவர்களை நான் என் சமகாலத்தவர்கள் என்றே நம்புகிறேன். (இந்த வரிசையில் முக்கியமான விடுபடல் நான்தான்:)). இது ஒரு நிலையான வரிசை அல்ல. மாறியபடியே இருக்கும். துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை வாசித்தபோது பாலா  இந்த வரிசையில் நேரே சென்று அமர்ந்தார். பின்னர் குணாவை வாசித்தபோது அவர் பாலாவை விடவும் நெருக்கமான இடத்தை எடுத்துகொண்டார். இந்த புத்தக கண்காட்சியில் ரா.கிரிதரனின் 'காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை' தொகுப்பு தமிழினி வெளியீடாக வெளிவர உள்ளது. ஐயமின்றி சொல்வேன் கடந்த சில ஆண்டுகளில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பு இதுவே. பன்னிரண்டு கதைகளில் ஒன்பது கதைகள் அபாரமானவை. மேற்கத்திய இசை,மலையேறும் பின்புலம், அறிவியல் புனைவு, காந்தி, காலனிய வரலாறு என வெவ்வேறு அசலான பின்புலங்களில் இருந்து கதைகளை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக 'இருள் முனகும் பாதை' 'பல்கலனும் யாம் அணிவோம்' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' 'நீர்பிம்பத்துடன் உரையாடல்' ஆகியவை வாசிக்கும்போதே பெரும் உவகையை அளித்தன. எப்போதும் சொல்லிவருவது தான். ஒரு நல்ல கதையை வாசிக்கும்போது வாசகனாக எனக்கு பொறாமை எழுவதில்லை, அது என் கதை, நான் எழுதிய கதை எனும் பெருமிதமே ஏற்படும். கிரியின் தொகுப்பு இப்போது நேராக குணாவின் இடத்தை பின் தள்ளி அமர்கிறது. 

பணிச்சுமை காரணமாக குறைவாக எழுதாமல் இருக்க வேண்டும் மட்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவருடைய நாவலின் வரைவு வடிவத்தையும் வாசித்தவன் என்ற வகையில் இந்த ஆண்டின் மிக முக்கியமான வருகை என அவரை சொல்வேன். என்னை விடவும் நான்கைந்து வயது மூத்தவர், குணா - பாலா தலைமுறையை சேர்ந்தவர். நியாயப்படி முன்னரே அறிமுகம் ஆகியிருக்க வேண்டியவர். எனினும் இப்போது வலுவான சிறுகதை தொகுப்போடு வெளியே வருகிறார். எனது முதன்மை அளவுகோலில் ஒன்று, ஒரு படைப்பு எழுத்தாளனாக எனது படைப்பூக்கத்தை தூண்டுகிறதா என்பதே. பாலா, குணா வரிசையில் கிரியும் பல கதைகளில் எனக்கு அதை அளித்தார். இந்த கட்டுரையை இப்போது எழுதுவதற்கு காரணம், இந்த புத்தக கண்காட்சி அலையில் எல்லாமும் அடித்துக்கொண்டு போய்விடும் என்பதால் ஒரு சிறு கவனத்தை அளிக்க வேண்டி இருக்கிறது. 

கிரிதரனுக்கு வாழ்த்துக்கள்..

Friday, January 3, 2020

நீலகண்டம் நாவல் பகுதி- குழந்தைகள் உற்பத்தி முனையம்

(தொலைக்காட்சியில் நாளெல்லாம் குழந்தைபேறு மையம் விளம்பரத்தை பார்த்தபோது எனக்கு நீலகண்டம் நாவலின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. ஆகவே இந்நாளில் இது. ஒரு சிறுகதையை போல் தன்னளவில் தனித்த பகுதியும் கூட) 

மிக நீண்ட வரிசை அது. விடிவதற்கு முன் அவன் எழுந்து அங்கு வந்திருந்தான். அச்சமயத்திற்கு அங்கே அவன் வந்தடைய நள்ளிரவே எழுந்து கிளம்ப வேண்டியிருந்தது. அவனைக் கடந்த முதல் பேருந்தில் ஏறுவதற்கு முன்னரே அப்பேருந்து முழுமையாக நிரம்பியிருந்தது. அடுத்த பேருந்திற்காக காத்திருந்தான். இருள் கரிய சுவர்களாக அவனை சூழ்ந்திருந்தது. அடுத்து வந்த பேருந்தும் நிரம்பி வழிந்தது. அவனுக்கு வேறு மார்க்கமில்லை என்பதால் தொற்றி ஏறி படியில் தொங்கியபடி புறநகர் பகுதியிலிருந்து நகரத்தின் மத்தியில் உள்ள பிரம்மாண்டமான பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே வயலில் பறக்கும் கொக்குகள் எனப் பேருந்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பிக் கொண்டிருந்தன. அவன் அங்கிருந்து வேறு வழித்தடத்திற்கு செல்லும் பேருந்திற்கு மாற வேண்டும். ஏழாம் எண் நடைமேடையில் அங்கு செல்வதற்கான பேருந்து வரும் எனச் சொன்னார்கள். 

அவன் ஏழாம் எண் நடைமேடையைத் தேடி அலைந்தான். ஆறுக்கு பின் எட்டு வந்தது. மொத்த பேருந்து நிலையத்தையும் சுற்றி அலைந்தான். எவரும் அவனை கண்டு கொள்ளவில்லை. பச்சை சட்டை அணிந்த ஒரு மனிதன் அவனை நோக்கி வந்தான். “என்ன தேடுகிறாய்?” “ஏழாம் நடைமேடையை”. “நான் உனக்கு காட்டுகிறேன். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகும்” என்றான். நடைமேடையை காண்பிக்க இரண்டாயிரமா எனத் திகைத்து மறுத்தான். விநோதமாக விந்தி விந்தி நடந்து அவனைக் கடந்தான். சற்று தொலைவில் அவனை நோக்கி பதறியடித்து ஓடிவருபவனை கண்டான். அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தன் கையிலிருக்கும் சாக்கட்டியால் நடைமேடை 14 என்றிருந்த இடத்தில் ஏழு என எழுதினான். அப்போது அங்கொரு பேருந்து வந்து நின்று அவனை ஏற்றிக்கொண்டு உடனே புறப்பட்டதை கண்டான். விந்தி நடக்கும் பச்சை சட்டைக்காரனை நோக்கி ஓடினான். அவன் பேருந்து நிலையத்தின் கடைசி எல்லைச் சுவரருகே நின்றபோது அவனை அடைந்தான். ஏளனப் புன்னகை ஒன்று எழுந்தது. இப்போது மூவாயிரம் ஆகும் என்றான். பணத்தை வாங்கிக்கொண்டு, ‘இங்கு சிறுநீர் கழிப்பவன் நாய்’ என்று எழுதியிருந்ததற்கு அருகே சாக்கட்டியால் ஏழு என எழுதினான். அப்போது அவனை ஏற்றிக்கொள்ள அந்த பேருந்து அங்கே வந்தது. அந்த பேருந்தில் 

அவன் ஏறியபோது அதுவும் நிரம்பி இருந்தது. பேருந்தைத் தயாரிக்கும் நிறுவனமே அதில் அமரும் ஆட்களையும் தயார் செய்து விடுகிறார்களோ என்றொரு ஐயம் அவனுக்கு எழுந்தது. இவர்கள் எல்லாம் எப்போது இந்த பேருந்தில் ஏறினார்கள் என தெரியாமல் குழம்பித் தவித்தான். நகரத்தின் மறுஎல்லையில் உள்ள ஒரு புறநகர் பகுதிக்கு அப்பேருந்து சென்றது. இடையிலிருந்த எந்த நிறுத்தத்திலும் எவரும் இறங்கவில்லை. ஆனால் ஏறிக்கொண்டே இருந்தார்கள். ஒருவர் அவன் காலில் ஏறி மிதித்தான். “காலை எடுங்கள்” எனக்கத்தினான். அருகிருந்தவன் “இத்தனை நேரமாக நீ என் காலில் நின்று வருகிறாய்.நான் கத்தினேனா? ஏனெனில் நான் வேறொருவரின் காலில் நிற்கிறேன்” என்றான். பேருந்தே சிரித்தது. ஓட்டுனர் சொன்னார் “நானே வேறொரு காலைத்தான் மிதித்து கொண்டிருக்கிறேன், அந்த கால்தான் வண்டியை மிதிக்கிறது”. 

அனைத்து சாளரங்களும் மூடியிருந்தன. நடுவில் யாரோ ஒருவர் மயக்கம் போட்டுச் சரிந்தார். உடனே அவருடைய மூக்கை மட்டும் கொடுத்தார்கள். பலபேருடைய கைபட்டு அவனிடம் அவருடைய மூக்கு வந்தது. நடத்துனர் அந்த மூக்கை படிக்கட்டிலிருந்து வெளியே நீட்டினார். மயங்கியவர் தெளிந்து எழுந்தார். “நடத்துனர் அய்யா எனக்கு   பீனசம். ஆகவே இத்தனை குளிரில் மூக்கை நீட்டாதீர்கள்” என்றார். நடத்துனர் ஒரு டிக்கெட் கிழித்து கொடுத்தார். மூக்குக்காரர் பத்து ரூபாய் அளித்தார். “மூக்கைத் திரும்பப் பெறும்போது இச்சீட்டைக் காட்டவும்” என அதில் அச்சிட்டிருந்தது. மேலும் அவருடைய மூக்கின் பிரத்தியேகமான அடையாளம் என நடுத்தண்டில் உள்ள வெள்ளை முடி என குறிக்கப்பட்டிருந்தது. பேருந்தில் உள்ள பலரும் தங்கள் மூக்குகளை நடத்துனரிடம் அளித்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டார்கள். “நீங்கள் மூக்கை அளிக்கவில்லையா?” எனக் கேட்டான் காலை மிதித்தவன். “இல்லை, என் மூக்கிற்கு எந்த பிரத்தியேக அடையாளமும் இல்லை என்பதால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்” என்றான் அவன். புற்றிலிருந்து புறப்படும் எறும்புகள் என பேருந்து நின்றதும் அனைவரும் இறங்கினார்கள். 

அப்போதுதான் அந்த மிக நீண்ட வரிசையை பார்த்தான். அவனுக்கு முன் பல்லாயிரம் பேர் அந்த வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் நிற்க சென்றவனை முன்னால் நிற்பவர் அழைத்தார். “வாயில் காப்பாளனிடம் பதிந்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும்” என்றார். அவன் வாயிலை நோக்கி நடந்தான். அரைமணி நேரம் நடந்தும் வாயிலை நெருங்க முடியவில்லை. மஞ்சள் சட்டையணிந்த ஒருவன் வரிசையிலிருந்து வெளிப்பட்டான். “உனக்கு என்ன குழந்தை வேண்டும்? ஆண் குழந்தை என்றால் ஐயாயிரம் பெண் குழந்தை என்றால் ஆறாயிரம், எதுவாக இருந்தாலும் சரி என்றால் ஏழாயிரம், டோக்கன் என்னிடம் உள்ளது” எனக் காட்டினான்.  “மூவாயிரம் என்றார்களே”. என இழுத்தான். “நீ அங்கு செல்வதற்கு இன்னும் ஒருநாள் ஆகும், உன் சாமர்த்தியம்” என்றான். அப்போது முன்வரிசையில் நின்றிருந்தவர் “யோசிக்காத தம்பி, இல்லையேல் வரிசையில் நின்றே வயதாகிவிடும்” என்றார்.

 அவனிடம் ஏழாயிரம் கொடுத்து தனக்கான டிக்கெட்டை வாங்கி அவன் வரிசையைத் துவங்கிய இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு ஆயிரம் பேர் அங்கே நின்றிருந்தார்கள். மீண்டும் முன்பு டிக்கெட் கொடுத்தவனிடம் சென்றான். வரிசையில் முன்னே வருவதற்கு எதுவும் வழியுண்டா என விசாரித்தான். அப்போது முன்பு இவனை ஊக்கப்படுத்திய நபர் பேசினார். “என் இடத்தை விட்டுத்தருகிறேன் ஐந்தாயிரம் ஆகும்” என்றான். ஐந்தாயிரத்தை அளித்ததும் டிக்கெட் விற்றவனும் இடம் கொடுத்தவனும் சேர்ந்து சிரித்தபடி சென்றார்கள். வரிசையில் நிற்பவர்கள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் ஐந்து நிமிடம்வரை அவருடைய இடத்தை காப்பாற்ற அங்கே ஓர் அமைப்பு இருந்தது. அவர்கள் இருநூறு மீட்டருக்கு ஒருமுறை  நீலநிற பிளாஸ்டிக் குடையை விரித்து அதன் கீழ் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அதற்காக இரண்டாயிரம் வசூலிக்கப்பட்டது. ஐந்து நிமிடத்திற்கு மேல் கழியும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஆயிரம் மேலதிகம் வசூலிக்கப்பட்டது. பத்து நிமிடங்கள் ஆகிவிட்டால் அவருடைய இடம் ஏலத்தில் விடப்படும். அவனுக்கு மூலக்கடுப்பு இருப்பதால் சாதாரணமாக கழிவறைக்கு சென்றால் கூட இருபது நிமிடங்கள் ஆகிவிடும் என்பதால் என்ன ஆனாலும் அடக்கிக்கொள்வது எனும் முடிவுக்கு வந்தான்.  

வரிசையில் நிற்பவர்களுக்கு உணவு விற்பவர்கள் பச்சை நிற ஆடை அணிந்திருந்தார்கள். இட்லி ஐநூறு ரூபாய். அவன் ஒரேயொரு இட்லி வாங்கிக் கொண்டான். சட்னி முன்னூறு என்றார்கள். இட்லியை பிய்த்து தின்றான். அவன் பின்னால் நின்றவன் கால்சராய் பாக்கெட்டுக்குள் துழாவும்போது ஏதோ நறநறக்கும் ஒலி கேட்டது. உடனே இருவர் அவனை இரு பக்கமுமாக வந்து தூக்கி சென்றார்கள். அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ரொட்டி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீண்டும் வரிசையின் கடைசிக்கு அனுப்பப்பட்டான். மூன்று பகல் நான்கிரவு கழிந்ததும் அவன் வாயிலை அடைந்தான். பெரிய தொங்கு மீசையும் நீலநிற தொப்பியும் அணிந்த வாயிற்காப்பாளன் நான்கு நான்கு நபர்களாக உள்ளே அனுமதித்தான். உள்ளே சென்ற யாரும் வெளியே வந்ததாக தெரியவில்லை. அத்தனை பேரை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமானதா? 

அவனை விட மூன்று மடங்கு உயரமான சுற்றுச் சுவர். அதன் மீது இன்னொரு ஆள் உயரத்திற்கு மின் கம்பி சென்றது. ஒரேயொரு சிறிய சுழலும் கதவு பொருத்தப் பட்டிருந்தது. வாயிற் காப்பாளான் அவர்கள் நான்குபேரை கதவின் நான்கு இடை வெளிகளில் நிற்க வைத்தான். இரு ஆண்களும் இரு பெண்களும் இருந்தார்கள். இன்னொரு ஆண் வழுக்கைத் தலையர். வெள்ளை வேட்டி சட்டையணிந்து கையில் தங்கக் காப்பு போட்டிருந்தார். புலிநகச் சங்கிலி தொங்கியது. அவனைப் பார்த்து சிரித்தார். “கொஞ்சம் ப்ரோஸ்ட்ரெட் பிரச்சன தம்பி, மூத்திரத்துக்கு போயே கொள்ள காசு அழிஞ்சு போச்சு” என்றார். காட்டன் சுடிதார் அணிந்த பெண்ணின் தலை தும்பையாக வெளுத்திருந்தது. மற்றொரு பெண் நைட்டியும் துண்டும் போர்த்தி இருந்தாள். வாயிற் காவலன் நூதனமாக எதையோ கண்டுபிடித்தது போல் பெருமையாக சிரித்தான். பின்னர் நால்வரையும் சுழல் கதவில் கால் வைத்து நிற்கச் சொன்னான். அருகே வந்து குடை ராட்டினம் போல் அதை சுற்றி விட்டான். அப்போது “ராஜீவி ராஜீவி ராஜீவி” எனக் கத்திக்கொண்டே சிரித்தான். சுழல் வேகத்தில் காட்சிகள் நிறங்களாக, நிறங்கள் எல்லாம் வெறும் வெள்ளொளியாக மாறிக்கொண்டிருந்தன. வாயிற் காப்பாளனின் சிரிப்பொலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கண்விழித்தபோது அவன் வரவேற்பு இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தான். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் கணினியில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

அவள் ஐந்து நட்சத்திர விடுதிக்கு உரிய கோட்டு சூட்டு அணிந்திருந்தாள். அவனுடைய சீட்டைப் பரிசோதித்து. முன்பணமாக ஐந்து லட்சத்தை கட்டக் கோரினாள். அவன் முன் இருந்த தொடு திரை மின்னியது. அதில் பதினைந்து கேள்விகள் வரும் அதற்குரிய பதில்களை தேர்வு செய்யவும் என்றாள். எந்த நிறத்தில் குழந்தை வேண்டும்? என்றொரு கேள்விக்கு பதிமூன்று நிற அடர்வுகளில் குழந்தைகளை காட்டியது. மேலும் அவனுடைய மற்றும் அவனுடைய மனைவியின் நிறத்தை கணக்கிட்டு டஸ்கி பிரௌன் எனும் நிறத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. அவனுக்கு பிஸ்கட் பிரவுன் தேர்வு செய்யவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே அதை தேர்ந்தான். அதற்கான தொகை ஒரு லட்சம் கட்ட சம்மதமா எனக் கேட்டது. ஒப்புக்கொண்டதும் அடுத்த கேள்வி திரையில் எழுந்தது. உடல் வாகு எத்தகையதாக இருக்க வேண்டும்? அதற்கு மூன்று தேர்வுகளை அளித்தது. ஒல்லி, மத்திமம், பூசினார்போல். அவன் மத்திமத்தை தேர்ந்தெடுத்தான். அதற்காக ஒரு லட்சம் தொகை செலுத்த முடியுமா என கேட்டது. ஒப்புக்கொண்டதும் அடுத்த கேள்வி திரையில் தோன்றியது. 

உங்கள் குழந்தையின் ஐ.கியூ எந்த அளவில் இருக்க வேண்டும்? பல்வேறு எண்கள் திரையில் தோன்றின. அடிக்குறிப்பில் – ஐ.கியூ அதிகமாக அதிகமாக சமூகத் தொடர்பு குறையும். அத்தகைய தேர்விற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மை தேர்வு செய்யும் மத்திம அளவையே அவனும் தேர்ந்தான். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கேள்வி வந்தது. அப்போது திரையில் உங்கள் நேரம் முடிவடைய இன்னும் நாற்பது வினாடிகள் உள்ளன. அதற்குள் அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் தேர்வை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தேர்வுகள் முழுமையடையாத போது கணினி தன் போக்கில் தேர்வுகளை நிகழ்த்திக்கொள்ளும் என்றது. அவன் எல்லாவற்றிலும் மத்திமமாக உள்ளதை தேர்ந்தான். கேள்விகளை வாசித்து உள்வாங்கும் அளவிற்கு அவனுக்கு நேரமில்லை. உடற் திறன், நினைவாற்றல், உணர்வுகள், ஆயுள் என பல்வேறு கேள்விகள் தோன்றின. திரையில் இறுதி கேள்வி தோன்றும் முன்னரே அவனுடைய நேரம் முடிந்து விட்டிருந்தது. அது என்ன கேள்வி என்பது தெரியாமல் மனது குழம்பிக்கொண்டே இருந்தது. பின்னர் அவன் தேர்வு செய்த குழந்தைக்காக செலுத்த வேண்டிய தொகை என பன்னிரண்டு லட்சத்தை காட்டியது. 

வரவேற்பு இருக்கையில் அமர்ந்த பெண்ணிடம் அதற்கான காசோலையை அளித்தான். உங்கள் பிராஜக்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் தேர்வு செய்த இயல்புகளோடு ஒரு குழந்தை உங்களிடம் சரியாக அடுத்த வருடம் இதே தேதியில் கிடைக்கும். விரைந்து பெறுவதாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த எங்கள் மேலாளரை தொடர்புகொள்ளவும் என ஒரு இயந்திரப் பெண் குரல் ஒலித்தது. வரவேற்பு மேஜையில் அமர்ந்திருந்த பெண் மெனு கார்ட் போலொரு அட்டையை அவனிடம் நீட்டினாள். அதில் ஒரு நாள் துவங்கி, ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என பல்வேறு பேக்கேஜ்கான தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. கட்டுபடியாகக் கூடிய தொகை என அவன் நம்பிய ஆறு மாதத்தை தேர்வு செய்தான். அதற்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு காலவகாசம் வேண்டும் என கோரினான். இருபது சதவிகித வட்டியுடன் தவணை முறையில் செலுத்தலாம். இப்போது கால் பங்கு பணம் கொடுத்தால் போதும். எங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றாள். அதற்குரிய ஒரு பத்திரத்தை நீட்டினாள். உரிய தவணை செலுத்தப்படாதபோது உங்கள் குழந்தையை பறிமுதல் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கையெழுத்திட்டு காசோலை அளித்தான். அப்பெண் எழுந்து நின்று அவனுக்கு ஒரு கைப்பையை கொடுத்தாள். 

கூப்பிய கரங்களுடன் நன்றி என அச்சாகியிருந்த தாம்பூலப் பை. மனனம் செய்தது போல் “எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டு எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி. விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்” என்று கூறிவிட்டு மீண்டும் கணினியில் அமிழ்ந்தாள். வெளியே செல்லும் வழி வேறொன்றாக இருந்தது. அங்கே நின்றிருந்த வாயிற்காப்பாளன் முன்பு கண்டவனின் இரட்டைச் சகோதரனைப் போலவே இருந்தான். வெளியேறி சென்ற அவனிடம் பணிவாக ஒரு படிவத்தை நீட்டினான். அதில் எங்கள் சேவையைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? சிறப்பு/ மிக நன்று / அற்புதம்/ அபாரம் எனும் நான்கு தேர்வுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. கீழேயே இதை ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதை முப்பது சொற்களுக்கு மிகாமல் எழுதவும்” என்றும் குறிப்பிட்டிருந்தது. “எழுதும் தெம்பு எனக்கில்லை” என்று அதை அவனிடமே திருப்பி கொடுத்தான். “எழுதாமல் வெளியேற முடியாது. ஆனால் மூவாயிரம் செலுத்தினால் செல்லலாம்” என்றான். அவனுக்கு தலை சுற்றியது. ‘மிக நன்று’ என்பதை தேர்வு செய்து ‘வாழ்க வளமுடன்’ என்று எழுதி அளித்துவிட்டு வெளியேறினான்.