Wednesday, December 23, 2020

வரம் சிறுகதை- மரப்பாச்சி கூடுகையில் ஒரு விவாதம்


 மார்ச் ஒன்றாம்தேதி எழுத்தாளர் எஸ். செந்தில்குமாருடனான சந்திப்பிற்கு பிறகு இந்த மாதம் 20 ம் தேதிதான் மரப்பாச்சி கூடுகை நடத்தினோம். இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று இணையவழி கூடுகைகள் செய்தோம். ஆனால் அவை அலுத்துவிட்டன. இணைய வழி உரையாடல் திகட்டிவிட்டது. நேரில் சந்திக்கவும் இயல்பாக பயணிக்க கிளம்பவும் காத்திருந்தோம். நாங்கள் வழக்கமாக கூடும் காவேரி மருத்துவமனை நான்காம் மாடிக்கு செல்லவில்லை. காரைக்குடி காவேரி மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களாக கோவிட் சிகிச்சை மையமாக செயல்பட்டுவருகிறது. இப்போது நோயாளிகள் இல்லை என்றாலும் தயக்கம் இருந்தது. ஆகவே எங்கள் வீட்டில் புதிதாக உருவாக்கிய படிப்பறையில் புத்தகங்கள் சூழ அமர்ந்து பேசினோம்.

மூன்று சிறுகதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டோம். துரை அறிவழகனின் 'வண்டித்தாத்தாவும் சொரூபராணியும்' ச. பிரபாகரனின் 'ஒளிந்திருக்கும் வானம்' மற்றும் ஜெயமோகனின் 'வரம்'. துரை அறிவழகன் காரைக்குடியில் வசிப்பவர் சிற்றிதழ் சூழலில் இயங்கியவர். உடல் நலம் மீண்டு இயங்கத்தொடங்கியுள்ளார். நினைவொடைத்தன்மை கொண்ட அவருடைய கதை நகர்வு இணைய இதழில் வெளிவந்தது. ச. பிரபாகரன் உருவாகிவரும் இளம் கவி. அரூ போட்டியில் பங்குகொண்டு இறுதி சுற்றுக்கு தேர்வான கதையை விவாதித்தோம். கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட டிஸ்டோபிய அறிவியல் புனைவு. இவர்கள் இருவருமே மரப்பாச்சியில் பங்களிக்கும் எழுத்தாளர்கள். 

ஜெயமோகனின் கரோனா கால நூறுகதைகளில் இறுதி கதை 'வரம்'. வாழ்க்கைபாதையை தடம் மாற்றும் மந்திரகணத்தை சொல்லும் அபாரமான கதை. இரண்டு கதைகளை நினைவுபடுத்தின. ஒன்று யுவன் சந்திரசேகரின் 'நச்சுப்பொய்கை'. அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. உடைந்து விழும் மனிதர்களை தொட்டு மீட்கும் மாயக்கணங்களால் நிறைந்த கதை. 'தர்மன் தான் விரும்பிய வரத்தைக் கேட்ட சப்த அதிர்வில்,அதுவரை நஞ்சாய் இருந்த பொய்கையின் நீர் குடிதண்ணீராய் மாறியதல்லவா? அந்த மந்திரக் கணம் அப்போதைய கணம் மட்டும்தானா,இல்லை கடந்து போகும் எல்லாக் கணங்களுமே மந்திர கணங்கள்தானா?' எனும் வரியே 'வரம்' இத்தகைய ஒரு அமானுட கணத்தை உருவாக்கிக்காட்டுகிறது. இரண்டு கதைகளின் தரிசனமும் ஒன்றே. இரண்டாவது கதை நாஞ்சில் நாடனின் 'பூனைக்கண்ணன்'. ஒரு திருடன் சித்தனாக ஆகும் கதை என சொல்லலாம். பூனைக்கண்ணன் கதையில் சித்தரிக்கப்படும் வழிபாடற்ற கோயில், இழிந்த நிலையில் உள்ள பூசகர், திருடனின் துணைகொண்டு தெய்வம் ஆற்றலை அடைவது என பலபொதுத்தன்மையும் தொடர்ச்சியும் இவ்விரண்டு கதைகளுக்கு இடையே உள்ளன. ஒரு வகையில் பூனைக்கண்ணனுக்கு எழுதப்பட்ட ட்ரிப்யூட் கதையாக 'வரம்' கதையை வாசிக்க முடியும். பூனைக்கண்ணன் விக்கிரகத்தை களவாடிச்செல்லும் திருடன் அறியமுடியாத விசைகளால் ஆட்கொள்ளப்பட்டவனாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்திற்கு சேர்க்காமல் எங்கோ மலையடிவாரத்திற்கு செல்கிறான். கதையின் இறுதியில்.  அம்மன் உரையாடுவது அவனால் மட்டுமே கேட்கமுடிகிறது. 'பூனைக்கண்ணன் அம்மனிடம் ஒருநாள் கேட்டான். “கெட்டவன்னு தெரிஞ்சும் தண்டிக்கலேன்னா நீயெல்லாம் என்ன சாமி?”அம்மன் சொன்னாள் “நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?”“போட்டி, புத்திகெட்டவளே” என்றான் பூனைக்கண்ணன். முற்றிலும் மறைஞானத்தன்மை கொண்ட முடிவு. 

எது 'வரம்'? அதை யாருக்கு யார் அளிப்பது? இரண்டு கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்.  மேப்பலூர் ஸ்ரீ மங்கல பகவதி பார்கவன் போற்றியின் மகள் ஸ்ரீதேவிக்கு அளித்ததாக நம்பும் வரம். அவளை மரணத்தின் விளிம்பிலிருந்து காக்கிறது. வாழ்வை மீட்டு அளிக்கிறது. மேப்பலூர் பகவதி வழியாக திருடன் ஸ்ரீதேவிக்கு அளித்த வரம் என்பது மற்றொரு வாசிப்பு. ஸ்ரீதேவி நிமிர்ந்து கோயிலை புனரமைத்து பகவதியை மீண்டும் ஆற்றல் கொண்டவளாக நிறுவுகிறாள். கடவுளுக்கு ஸ்ரீதேவி அளித்த வரம். அல்லது ஸ்ரீதேவி வழியாக கடவுளுக்கு திருடன் அளிக்கும் வரம். எது வரம்? எனும் கேள்விக்கு கதையின் இறுதிவரியை பதிலாக கொள்ளலாம். 'அந்த வீட்டிலிருந்து தடமே இல்லாமல் நீங்கும்போது அந்த துயர் நிறைந்த முகத்தில் உலர்ந்த உதடுகளில் அவன் ஒரு முத்தமிட்டிருந்தான்.'  அந்த முத்தம் தான் வரம். நல்லூழின், காலத்தின், கனிந்த கடவுளின் முத்தம். காளிதாசனின் நாவில் காளியின் விரல்நுனி தொடுகை நிகழ்ந்த மாயக்கணத்திற்கு இணையானது. கதையில் உறங்கும் இளவரசியை போல் நைந்த நிலையில் உறங்கும் ஸ்ரீதேவியின் உதடுகளில் பதிந்த முத்தமும் பொன்னொளியில் முழுதணிகோலத்தில் நள்ளிரவில் பகவதி ஸ்ரீதேவிக்கு காட்சியளிக்கும் தருணமும் வாழ்நாள் முழுக்க மீட்டுக்கொள்ளத்தக்க அக காட்சி. 

பஷீரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி எம்.டி.வி குறிப்பிடுகிறார். வடநாட்டில் பணத்தை பறிகொடுத்த பஷீர் கொடுக்க பணமில்லாமல் உண்ட குற்றத்துக்காக அவமதிக்கப்படுகிறார். ஆடைகளை களையச்சொல்கிறார்கள். உண்டுக்கொண்டிருந்த மற்றொருவன் அவருக்காக பணம் கொடுக்கிறான். கொடுத்தவன் அவரை அழைத்துக்கொண்டு போய் இதில் எது உங்கள் பணப்பை என பார்த்து எடுத்துக்கொள்ளவும் என சொல்கிறான். ஜெ இந்த கதையில் பஷீரிய கனிவை நோக்கி செல்கிறார். எனினும் இந்த கதை திருடன் மனம் நெகிழ்ந்த மானுட நேய கதை மட்டும் இல்லை. பிற கதை ஆசிரியர்களின் நீட்சியாக வரும் ஜெயமோகன் வேறுபடுவது துலக்கமாக தெரிவது திருடனின் சித்தரிப்பில் தான். உண்மையில் யாரந்த திருடன்? கதை இப்படி தொடங்குகிறது 'திருடனுக்கு எல்லாம் தெரியும் ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது. அவன் மிகக்கூர்மையாக பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை. அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.' கதை முழுக்க திருடனுக்கென ஒரு ஆளுமையோ தோற்றமோ துலங்கிவரவே இல்லை. நீல கைலியும் சாம்பல் சட்டையும் அணிந்து நிழலோடு நிழலாக கலந்து விடுபவனாக திகழ்கிறான். கதை முடிவில் கூட அவன் தடமேயில்லாமல் நீங்குபவன் என குறிப்பிடப்படுகிறான். எங்கும் நிறைந்த யாவற்றுக்கும் சாட்சியாய் உள்ள எதனுடனும் உறவுகொள்ளாத ஒன்று நம் மரபில் உண்டு. கண்ணன் கரியவன், கள்ளன். இந்த வரிசையிலேயோ வருக்கை கதையில் கண்ணனின் சாயல் கொண்ட கள்வன் வருகிறான். வேதாந்தத்தில் திருடன் முக்கியமான உருவகம். அருகே புதையல் உண்டு என அறிந்த திருடனின் விழிப்புடன் வேதாந்தி திகழ வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. இந்த கதைக்குள் அல்லது பொதுவாக இந்த கதைகளுக்குள் ஊடுபாவாக கிடக்கும் வேதாந்த மெய்யியல் நோக்கு கதையை ஆழங்களுக்கு கொண்டு செல்கிறது. 


Monday, December 21, 2020

பேய்ச்சி தடை



நண்பரும் மலேசிய எழுத்தாளருமான ம. நவீனின் 'பேய்ச்சி' நாவல் மலேசியாவில் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. தமிழர்களை இழிவு படுத்துகிறது, ஆபாசமாக உள்ளது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறது என மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு நாவல் வெளிவந்த முதல் நன்கு கவனம் பெற்று வருகிறது. என் வாசிப்பின் எல்லையில் நின்று உறுதியாக சொல்ல முடியும் 'பேய்ச்சி; கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்று, மலேசிய இலக்கியத்தில் வெளி வந்த முன்னோடி ஆக்கம்.  நவீனுடன் அரண் செய் யூ ட்யூப் ஊடகத்திற்காக ஒரு நேர்காணல் செய்தேன். 




நாவல் தடை செய்யப்பட்டது வருத்ததிற்குரிய விஷயம். அதுவும் இதற்கு காரணமாக இருந்தவர் மலேசியாவில் இருக்கும் இன்னொரு எழுத்தாளர். நோக்கம்- நவீன் விமர்சன ரீதியாக நிராகரிக்கிறார் என்பதே. பசவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஹெச். எஸ். சிவப்பிரகாஷின் மகாசைத்ரா நாடகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிங்காயத்துகளில் ஒரு சாரார் ஒரு மடாதிபதி தலைமையில் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்நிகழ்வை விஷ்ணுபுர விழாவில் நினைவுகூர்ந்தவர் மடாதிபதியின் முன் இழுத்து செல்லப்பட்டபோதும் தனக்கு அவர்கள் மீது வருத்தமில்லை என்றார். அவர்களின் நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது என்பதற்கு எழுத்தாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றார். பெருமாள் முருகன் விஷத்தில் மாதொருபாகனின் சில பகுதிகள் வாட்சப் வழி பொது சமூகத்தின் பார்வைக்கு பரவியது. நாவலும் பகிரப்பட்டது‌. இந்த இரு விவகாரங்களில் உள்ள ஒற்றுமை என்பது நவீன இலக்கிய வாசிப்பு பயிற்சியில்லாத ஒரு சிலரிடம் தற்செயலாக புனைவு எதிர்பட்டு அது பெரும் விளைவை ஏற்படுத்தியது. சாம்ராஜின் ஒரு கவிதை சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்தபோது பல கண்டனங்கள் எழுந்தன. ஜெயமோகனின் தொப்பி திலகம் விகடனில் விவாதிக்கப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டது. ஒருவகையில் அந்த சர்ச்சைக்கு நான் நன்றியுடையவனாவேன். யார்ரா இந்த ஜெயமோகன் எம்ஜியார் சிவாஜியவே நக்கல் செய்றான் என்றே அவரை தேடி வாசிக்கத்தொடங்கினேன்.  சிற்றிதழ் சூழலில் நவீன இலக்கியம் குழுஉக்குறி போல் ஒரு சாராரிடம் உரையாடிக்கொண்டிருந்தது. சமூக ஊடகம் ஊடகத்தை மக்கள்மயப்படுத்தியபின் வெவ்வேறு விசைகளாக தனித்து இயங்கிக்கொண்டிருந்த எழுத்துப்போக்குகள் தெறித்து ஒன்று கலக்கின்றன. நவீன இலக்கியத்தின் பரப்பு அதிகரித்தபோது இயல்பாக அதன் சிக்கல்களும் அதிகரித்தன. இணைய பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பகடியை பொதுவெளியில் நவீன இலக்கிய போக்குக்கு பழக்கப்படாத வாசகரின் முன் நிறுத்துவதன் வழியாக எழுத்தாளரை சிறுமை செய்வது அல்லது கணக்கை நேர்செய்வது என்பதை விகடன் தொப்பி திலகம் வழியாக தொடங்கிவைத்தது. விகடனில் இருந்தவர்களுக்கு வாசிப்பு பரிச்சயம் உண்டு. இலக்கியம் செயல்படுவது எப்படி என்பதும் தெரியும். அந்த செயல் நிச்சயம் உள்நோக்கம் கொண்டதுதான். நாஞ்சில்நாடனின் புத்தக கண்காட்சி உரையை அம்பேத்கர் எதிர்ப்பாக திரித்த தமிழ் தி இந்து கட்டுரையும் இந்தவகைதான். ஆனால் ஒருவகையில் இந்த செயல்பாடு தவிர்க்கமுடியாதது. கூட்டுச்சமூகத்தின் இறுக்கங்கள் புனிதங்கள் தயக்கங்கள் மீது இருக்கும் பற்று குறையும். தொட்டா சிணுங்கித்தனம் குறையும். சமூகமாக நாம் அகமுதிர்வுகொள்ள இது ஒரு வாய்ப்பு. மலேசியாவில் மதியழகன் பேய்ச்சிக்கு செய்ததும் இதேதான். ஆபாசம் என்றும் சாதியவசை என்றும் பொதுவெளியில் ஒன்றை சுட்டிக்காட்டி நவீனின் மீது அந்த வெறுப்பை திருப்பப்பார்க்கிறார். பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட சிதறிய சமூகமாக இருக்கும் புலம்பெயர் சமூகம் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக காணும். எத்தனை சுமாராக எழுதினாலும் கூட மதியழகனும் ஒரு எழுத்தாளர்தான் அவர் செய்தது அவருக்கு எதிராக திரும்புவதற்கு வெகுகாலம் ஆகாது. கும்பலின் ஆற்றலை தனிமனிதனாக இருக்கும் எழுத்தாளர் மீது ஏவிவிட்டு அவரை வழிக்கு கொண்டுவரும் முயற்சி. ஆனால் ஏவிவிடுபவர்களுக்கு கும்பலின் ஆற்றல் தெரியாது. அது அவர்கள் கட்டுக்குள் இருப்பதில்லை. சிங்கப்பூரிலும் இலக்கிய விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் அரசின் பக்கம் நின்று எழுத்தாளரை வழிக்கு கொண்டுவரும் உத்தி பின்பற்றப்படுகிறது. இலக்கியம் என்பதே தன்னளவில் கலகம்தான். அரசின் போஷாக்கில் அதன் கரங்களை எதிர்நோக்குவதுவரை அது குறித்த அச்சமும் பாதுகாப்பின்மையும் நிலவும். அதை மீறி ஆக்கப்பூர்வ எதிர்சக்தியாக கலையும் இலக்கியமும் நிலைகொள்ளும்போதே ஒரு மண்ணில் இலக்கியம் பெருகும். அரசியல் சரிநிலைகளுக்காகவும் அதிகார காழ்ப்புக்காகவும் கலை பலியிடப்பட்டால் இழப்பு அந்த சமூகத்திற்கே. கலையும் இலக்கியமும் அரிசியும் பருப்பையும் போல் மக்களின் வாழ்வை செழுமைப்படுத்தாது ஆனால் ஏன் ஒருவன் அரிசியையும் பருப்பையும் விளைவிக்க வேண்டும் எனும் அடிப்படை கேள்விக்கு விடையளிக்கும். விளைபொருள் கொண்டு கலையை மதிப்பிடமுடியாது. கலையின் இன்மையைக்கொண்டே அதன் பயன்மதிப்பை உய்த்துணர இயலும். ஆர்வெல்லின் 1984 ல் நாவல் இயந்திரங்களை கற்பனை செய்திருப்பார். கலையின்மை எந்தமாதிரியான உலகை உருவாக்கும் என்பதற்கான கொடிய கற்பனை.  'பேய்ச்சி' நாவலை அதன் முதல் வரைவிலிருந்து இறுதி வரைவுவரை மூன்றுமுறை வாசித்திருக்கிறேன். என் வாசிப்பின் எல்லையிலிருந்துகொண்டு சொல்கிறேன் மலேசிய இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. கடந்த ஆண்டு வந்த தமிழ் நாவல்களில் பேய்ச்சி மிக முக்கியமான ஆக்கம். புலம்பெயரும் முதல் தலைமுறை தொடங்கி அங்கே நிலைகொண்டு மக்கள் தங்களது தெய்வங்களையும் நட்டு வளர்த்து வேர் பிடித்து தழைக்கும் பெரும்சித்திரத்தை நாவல் காட்டுகிறது. வரலாற்று ரீதியாக ரப்பரிலிருந்து செம்பனைக்கு மலேசியா மாறும் காலகட்டத்தை சித்தரிக்கிறது. ஆக்கும் அன்னை அழிக்கும் அன்னை எனும் தொன்மையான தாய்தெய்வ உருவகத்தை வளர்த்தெடுக்கிறது. சாமான்ய தமிழர்கள் குறித்து மிகுந்த பரிவுடனும் நேசத்துடனும் எழுதப்பட்ட ஆக்கம். நாஞ்சில் நாடன் ஒரு நேர்காணலில் சொல்கிறார் என்று சாலையில் செல்லும் ஒருவன் பாலியல் தொழிலாளி மகனே என்று திட்டுகிறானோ அன்று நானும் கதையில் எழுதுகிறேன் அதுவரை ஒரு கதைமாந்தர் தேவடியா மகனே என்றுதான் திட்டும். மக்களின் புழங்குமொழியை புனைவுக்கு பயன்படுத்துவது இயல்பானது. எல்லா இலக்கியங்களையும் குழுந்தைகளை முன்வைத்து சிந்திக்க வேண்டியதில்லை. கிளர்ச்சியூட்டும் விதமாக காமத்தை எழுதுகிறார் என்பதை இலக்கிய விமர்சனமாக சொல்லலாம். அது கவனத்தை தக்கவைப்பதற்கான ஒரு உத்தி, வாசகரை இன்புறச்செய்ய ஏமாற்ற கைக்கொள்ளும் முறை போன்ற விமர்சனங்கள் ஒரு படைப்பின் மீது வைக்கப்படலாம். ஆனால் அப்படி எழுதவேக்கூடாது என சொல்வதற்கில்லை. பேய்ச்சியை பொறுத்தவரை சின்னிக்கும் மணியத்திற்கும் இடையிலான உறவு அதில் சின்னி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் கதைக்கு தகுந்தது. அதை உணர்வுப்பூர்வமாக சித்தரித்துள்ளார் நவீன். அந்த சித்தரிப்பை மிகை என ஒருவர் வாசிப்பின் ஊடாக சுட்டிக் காட்ட இடமுண்டு. ஒன்றை ஆபாசம் என சொல்வதில் சொல்லும் நம் மனதின் ஆபாசமே வெளிப்படுகிறது. 

நவீன் இதை துணிவுடன் எதிர்கொள்கிறார். இந்த தருணத்தில் நண்பராகவும் சகபடைப்பாளியாகவும் அவருடன் இருக்கிறேன். இந்த சர்ச்சைகளுக்கு அப்பால் பேய்ச்சி மலேசிய இலக்கிய வரலாறில் முக்கியமான முன்நகர்வு என்பது உணர்ந்துக்கொள்ளப்படும். https://youtu.be/KkRylkdA4q8

Tuesday, November 3, 2020

நீலகண்டம் குறித்து ஜெயமோகன்

நீலகண்டம் வாங்க 

(வல்லினம் இதழில் வெளியான கட்டுரைகள் குறித்து விரிவான குறிப்புகளை எழுதியுள்ளார். அனோஜன் எழுதிய கட்டுரைக்கு சுட்டி அளித்துவிட்டு நாவல் மீதான பார்வையையும் இணைத்து அளித்துள்ளார். நன்றி ஜெ)

 சுனீல் கிருஷ்னனின் நீலகண்டம் நாவலைப்பற்றி அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். நாம் அன்பென நினைப்பது எப்போதுமெ மூன்று வகையானது. நம்மை நாம் நிகழ்த்திக்கொள்ளும் களமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் சில உறவுகளை, உணர்வுநிலைகளை அன்பு என எண்ணிக்கொள்கிறோம். குடும்பம், குழந்தைகள், உறவுகள் மீதான அன்பு அத்தகையதே. அந்த அன்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது எனும்போது ஒருவகை சமூகஏற்பு, ஒருவகை தன்னிறைவு ஆகியவற்றுக்ககாவே என்று நாமே அறிவோம்


அதற்கப்பால் இருவகை அன்புநிலைகள் உள்ளன. உயிரியல் சார்ந்த உணர்வு என எழும் அன்பு. பெண்ணுக்கு எக்குழந்தைமேலும் எழும் அன்பு ஓர் உதாரணம். சகமானுடனின் மேல் நமக்கு உருவாவது இன்னொரு உதாரணம். மூன்றாவது அன்பு ஓர் உயர்விழுமியமாக, ஓர் அறமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அன்பு.நாம் எப்போதுமே முதல் இருவகை அன்பை மூன்றாம் வகை அன்பென ‘தூய்மைப்படுத்திக்கொள்ள’ ‘உன்னதப்படுத்திக்கொள்ள’ முயல்கிறோம். ஒரு சாதாரணமான காதலில்கூட அதை தெய்வீகக்காதலாக ஆக்கிக்கொள்கிறோம்


நீலகண்டம் இந்த அன்புகளுக்கு இடையேயான ஊசலாட்டங்களைச் சொல்லும் நாவல். ஏன் இதில் தொன்மமும் புராணமும் ஊடுருவுகின்றன என்றால் அவைதான் அன்பு என்னும் விழுமியத்தை ஆழுள்ளத்தில் நிலைநிறுத்துபவை. நடைமுறையில் அன்பு ஒவ்வொரு கணமும் தன்னலத்தால், சமூகத்தடைகளால், சூழ்நோக்குகளின் அழுத்தத்தல திரிபடைந்துகொண்டே இருக்கிறது. நீலகண்டம் அந்த இரு எல்லைகளை திறம்பட அருகருகே வைத்து ஒர் அகவிவாதத்தை வாசகனின் உள்ளத்தில் எழுப்பும் ஆக்கம்.

நீலகண்டம் - பிரியத்தின் திரிபு- அனோஜன்

(வல்லினம் இணைய இதழில் நீலகண்டம் குறித்து அனோஜன் எழுதியுள்ள கட்டுரை)

நீலகண்டம் வாங்க 



இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது.


நவீன வாழ்க்கையில் குழந்தைப் பேற்றுக்கான ஏகப்பட்ட மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும் அதற்கு அப்பாலும் மீறித் தீர்க்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளாக அந்தச் சிக்கல் பல்வேறு புறநிலை, அகநிலைக் காரணங்களால் பின்னிப்பிணைந்து இருக்கின்றது.


சுனீல் கிருஷ்ணன் எழுதிய ‘நீலகண்டம்’ நாவல் குழந்தையின்மை என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதை மட்டும் பேசும் நாவல் அல்ல, குழந்தை வளர்ப்பு, ஆட்டிச குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கல், பெற்றோரின் மனநிலை மாற்றங்கள், அறச் சிக்கல் என்று பல்வேறு இழைகளில் விரிகிறது.


பொதுவாகக் குழந்தையின்மை பிரச்சினைகளைப் பேசக்கூடிய நாவல்கள், சிறுகதைகள் யதார்த்த தளத்தில் மட்டுமே அதற்கான தீர்வை நோக்கிச் சென்று இருக்கின்றன. நீலகண்டம் யதார்த்த கதை சொல்லல் முறையிலிருந்து மீறியிருக்கின்றது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரம்யாவும், பிராமண சமூகத்தைச் சேராத செந்திலும் காதலித்து பெற்றோர் விருப்பத்துக்கு விரோதமாக மணம் முடிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும், பொருளாதாரச் சூழலில் நகர்ப்பகுதியில் சௌகரியமாக வசிக்கின்றனர். ரம்யா தன்னைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தனது அம்மாவினால் அதிகம் தொந்தரவுக்கு உள்ளாகிறார். செந்தில் அலுவலக வேலையில் மேலும் மேலும் மூழ்குகின்றார். தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் குழந்தையின்மையும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களும்,  முடிச்சுகளும் பல்வேறு முரண்களுடன் நகர்கின்றன.


நீலகண்டம் யதார்த்தத்தில் மட்டுமன்றி மரபில் குழந்தையின்மை என்பதற்கான தீர்வு, அதன் தேவை என்ன என்பதை ஆராயவும் செய்கிறது. யதார்த்தையும் தொன்மத்தையும் இணைக்கும் கதை சொல்லல் முறை இக்களத்தின் பல்வேறு சிக்கல்களை பல பரிமாணங்களில் அணுகி ஆராய வாய்ப்பளிக்கிறது.


நவீன நாவல்கள் அது எடுத்துக்கொள்ளும் களம், அதை வெளிப்படுத்தும் வடிவம் சார்ந்து அதன் முன்நகர்தல் நிகழ்கிறது. ஆனால், அவை சேதன முறையின்றி அசேதன முறையில் எழுதப்பட்டிருக்கும்போது ‘செய்யப்பட்ட’ போலி நாவலாகி விடுகின்றது. நீலகண்டம் நாவலில் பயன்பட்டிருக்கும் உத்திகள் கதையின் போக்கில் அதற்கான தேவையினால் உருவாகி இருப்பதால் அசேதன முறையில் இருக்கும் போலித்தன்மை உருக்கொள்ளாமல், அதுவே இலக்கியத் தன்மையையும் அளித்து விடுகின்றது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்ஷினியின் அக உலகம் சித்தரிக்கப்படும்போதும் நிமோ, இசட் பாத்திர உத்தி, வர்ஷினிக்கும் சாகருக்கும் இடையிலான உறவைச் சொல்லும்போது கடைப்பிடிக்கப்படும் நீல யானையின் ஒப்புதல் வாக்குமூலம் போன்றவற்றை அவற்றிற்கான நல்ல உதாரணங்களாகச் சொல்லலாம்.


வர்ஷினியின் அகவுலகத்தை யதார்த்த கதைச் சித்தரிப்புடன் சொல்லும்போது எதிர்ப்படும் எல்லைகளை நுட்பமாக இன்னுமொரு உத்தியுடன் ஆசிரியர் கடக்கிறார். அது கார்ட்டூன் பாத்திரங்களான கடலாமை, பேக் மேன், நிமோ, டோரா, மிஸ்டர் இசட், நிஞ்சாஸ், சோட்டா பீம் எனத் தோன்றும் வண்ணமயமான உலகம். அந்த உலகம் கொடுக்கும் நெகிழ்வு அழுத்தமற்ற ஓர் உலகைக் கதைக்குள் நிகழ்த்துகிறது. வர்ஷினியின் அக உலகம், யதார்த்தமான உலகத்துடன் இணையும் புள்ளி இயல்பாக ஆர்ப்பாட்டமின்றி இருக்கின்றது. மருத்துவமனையில் ரொட்டித்துண்டுகளை எறும்புகளுக்குப் போடும் வர்ஷினியை எரிச்சலுடன் பார்க்கிறான் செந்தில்; ஆனால், செயல் நிகழும் நேரத்தில்தான் அவளது உணர்வுகள் இன்னுமொரு உலகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு கண்ணிகளைப் பொருத்தும், அல்லது கலைக்கும் இடத்தில் ஆசிரியர் விழிப்புடன் செயல்பட்டுள்ளார்.


பிள்ளை வளர்ப்பில் இருக்கக்கூடிய அணுகுமுறைகள், தலைமுறை வித்தியாசங்களினால் வேறுபட்டு இருந்தாலும், பெற்றோரின் அன்பு திரிபடையும் இடங்கள் அதிக வித்தியாசங்களை அடைந்ததில்லை என்றே தோன்றுகின்றது. அன்பையும், அன்பின்மையையும் அமுதம், விஷம் என்ற குறியீட்டு அர்த்ததுடன் நாவலின் மையத்தை விசாரித்துப் பார்க்கிறது. இங்கு தீர்ப்புகள் இல்லாமல் விசாரணையே முதன்மைப் பணியாக இருப்பதால் கிளைக்கதைகள் நாட்டார்  கதைகள், தொன்மக் கதைகள், புராணக் கதைகள், குழந்தைக் கதைகள் என்று பல்வேறு தளங்களுக்குள் நகர்ந்து மீண்டும் மையம் எழுப்பும் ஆதர கேள்வியுடன் பிணைந்து நிற்கின்றன. ரம்யா ரயில் ஓட்டுனரின் மகளைச் சந்திக்கும் தருணத்திலும், செந்தில் சீராளனைச் சந்திக்கும் தருணத்திலும் வரும் உரையாடல்கள் நேரடியாக இவற்றை எழுப்புகின்றன.


திருவிளையாடல் புராணத்தில் வரும் சீராளன் அவனது தாய், தந்தையினரின் மிதமிஞ்சிய சிவபக்தியால் பலியிடப்படுகின்றான். பின்னர் அது இறைவனின் திருவிளையாடல் என்று அறியப்பட்டு, சீராளன் சிரஞ்சீவியாக எழுந்தருள்கிறான். உணர்ச்சிமயமான இக்கதையில் சில கேள்விகளை இணைத்துக் கேட்கும்போது, அங்கே கட்டப்பட்ட உணர்வுகள் தலைகீழாக்கம் பெறுகின்றன. பெற்றோர் தங்களது பக்தியைக் கட்ட என்னுயிரைக் கொடுப்பது நியாயமா?, என்கிற கேள்வி தொந்தரவு செய்யும் கேள்வியாகவே காலம் முழுக்க அவனுடன் இருக்கிறது.


பெற்றோரின் அன்பு திரிபடைந்து விஷமாவதை அறிந்து துயருரும் சீராளனின் கதை ஒரு திசை என்றால், அதன் மறுதிசையில் தன்னைக் காக்க ஐந்து குழந்தைகளை வேறுவழியின்றி இறப்புக்குள் வீழ்த்திய ரயில் ஓட்டுனரின் கதையாக இருக்கிறது. இரண்டிலும் அன்பின் திரிபு இருக்கிறது. இரண்டின் பொதுவான அம்சம் விரிந்து சென்று சங்கமிக்கும் இடம் சுயநலமா என்ற ஐயம் எழுகிறது. அதற்கு பிரியத்தின், பக்தியின் அதீதம் என்று அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், அதன் கடின ஓட்டை விலக்கிப் பார்க்கும்போது தெரிவது என்ன என்பதின் அலைச்சல் நாவல் முழுக்க விரவியிருக்கிறது. அது எழுப்பும் பெற்றோர் X பிள்ளைகள் உறவின் கேள்விகள்தான் வெவ்வேறு திசையில் ஒரே கேள்வியை ஆராய்கிறது. அமுது எங்கு நஞ்சாகிறது? அது ஏன்?


தத்தெடுத்தலில் இருக்கக்கூடிய தேர்வு எனும் தற்செயல் உருவாக்கியிருக்கக்கூடியNL_large_1536241621 விளைவுதான் இத்தனை அலைக்கழிவுக்கும் காரணமோ என்றும் யோசிக்க வைக்கின்றது. அது செந்திலின் தெரிவாகத்தான் இருக்கிறது; ரம்யாவின் தெரிவாக இருந்திருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம். மருத்துவ பரிசோதனையில் தன்னுடைய ஆணுறுப்பு தீண்டப்படும்போது செந்தில் அடையும் அவமானங்கள், அவனது உள்ளகச் சிக்கலுடன் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அவனது பூர்விக வீட்டில் பரவியிருந்த கரையான் என்ற படிமம் பல்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடியது. தலைமுறையாக நீளும் பாவத்தின் அல்லது தீமையின் தொடர்ச்சிதானா கரையான் அளிக்கும் தொல்லைகள்? அவன் வீட்டிலிருந்து முற்றாக நீங்கிய பின்னர் அவனது பூர்வீக வீடு இயல்பாகிறது. ஆனால், அவனது தேர்வுகளில் நஞ்சு இருக்கிறதா என்ன? செந்திலின் தேர்வில் இருக்கக்கூடிய பிறழ்வை இப்படியான வாசிப்பில் கொண்டு செல்லவும் இயல்கிறது. செந்திலின் நண்பனான ஹரியுடனான உரையாடல்கள் ஒருவகையில் தனது நிழலுடன், இதுவரை தான் எடுத்த முடிவுகளின் எதிர் பக்கத்துடன் உரையாடுவது போன்றதாக இருக்கிறது. குடும்ப அமைப்பு, காதல், பிள்ளைப்பேறு  என்பவற்றின் மீதான அனார்கிஸ்ட் அணுகுமுறையாக அவனது வாதங்கள் இருக்கின்றன. ஹரி தனது தந்தையை இழந்த பின்னரும் அதே உறுதியுடன் இருப்பது செந்திலை வியப்புக்குள் வீழ்த்தத்தான் செய்கிறது.


ரம்யாவின் அகவுலகம் அவளது நாட்குறிப்பின் ஊடாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் அம்மாவின் புறக்கணிப்பு பற்றிய துயரம் பதிவுகளாக இருக்கின்றன. ரம்யாவிடம் ஒரு கணத்தில் எங்கேயோ வளர்ந்த நஞ்சு வர்ஷினியை புறக்கணிக்க வைக்கின்றது. அதேபோல இன்னுமொரு நஞ்சுதான் ரம்யாவின் அம்மாவிடம் இருந்து புறக்கணிப்பாக வெளிப்படுகிறது. அகங்காரத்தின் நஞ்சு நீங்கிச் செல்லும் இடம் ஒரு நாடகீயத் தருணமாக இருக்கின்றது. புற்றுநோயும், இறப்பின் மீதான பயமும் அந்த நச்சை அம்மாவிடம் இருந்து விலக்குகிறது. அந்த நச்சு நீங்கிய பின்னர் அங்கு இருப்பது வெற்றிடமா? அல்லது பிரியமா? பிரியமும், அன்பும் கடையப்படும் உறவின் நுணுக்கங்களை மன நகர்வின் ஊடாக ஆசிரியரால் திறம்படவே எழுத முடிந்திருக்கிறது. ரம்யாவின் அம்மாவுடனான உறவிலிருக்கும் நச்சு நீங்கிய பின்னர், வர்ஷினி மீது ரம்யாவுக்கு பரவும் விஷம் ஏன்? பின்னர் எதற்கு இந்தக் குழந்தை வேண்டும் என்ற வேண்டுதல்கள் அலைக்கழிவுகள் எல்லாம்? இந்த இடத்தில் ஹரியின் பதில்கள் இன்னுமொரு விசாரணையை நிகழ்த்துகின்றது.


நாகம்மையின் தொல் கதை இருவேறு வடிவங்களில் செந்திலுக்கு சொல்லப்படுகின்றன. ஒன்றில் அண்ணாமலை அடையும் சந்தேகத்தின் விளைவால் நிகழும் துர்மரணமாக இருக்கிறது; மற்றையது இறைவனே திருப்பி தன்னிடம் அழைத்துச் செல்லும் துயரம் நிறைந்த இறப்பாக ஆகிறது. நாகம்மையின் சலங்கைச் சத்தமே இன்னும் எஞ்சி இருக்கிறது. நாகம்மையின் கதையும், வர்ஷியின் கதையும் இணையும் கண்ணி பச்சை நிற ஆடையில் இருக்கும் பிரியம் சார்ந்து குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அது நாவலுக்கு ஒரு அந்தரங்கத்தன்மையை அளித்து, பகுத்தறிவு நவீன மனம் புரிந்துகொள்ள முடியாத இழைகளை ஊகத்தில் விடுகிறது.


சீராளன், வர்ஷினி, நாகம்மை, வரலக்‌ஷ்மி என்று நீளும் சிறார்களின் பாத்திரங்களில் இருக்கும் ஒற்றுமை அவர்கள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது. அக மொழி உருவாகி இருக்கின்றனவே தவிர புறவயமாக பேச மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிறழ்வுதான் பெற்றோர்கள் தம் மீது வஞ்சத்தைக் காட்டக் காரணமா என்ற கேள்வி சீராளன் மூலம் எழுப்பபடவும் செய்கிறது. இவர்களது உடனடி எதிர்வினை மௌனம்தான். ஆனால், அந்த மௌனம் சலனமாக உருக்கொண்டு பின்னர் அதீத விசையுடன் கேள்விகளாக விரிகின்றன.


ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் படிமங்களை உள்ளே கொண்டிருக்கின்றன. அவற்றை மற்றைய கதைகளுடன் பொருத்திப் பார்க்க பெரியதொரு படிமம் வளர்கிறது. அது இறுதி அத்தியாயத்தில் தேவர்கள், அசுரர்கள் கடையும் அமுதத்துடன் விரித்துச் சொல்லப்படுகிறது. ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிவைத்த ஸ்டிக்கர் போல உரிக்க உரிக்க கதைகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பக்க அளவையும் தாண்டி இந்த நாவலுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆழத்துக்கும் விரிவுக்கும் காரணம் புத்திசாலித்தனமான கதை சொல்லும் உத்திகள் என்றே எனது வாசிப்பில் சொல்ல முடிகிறது.


தேவர், அசுரர் சித்தரிப்பு குறியீடாக ரம்யாவையும், செந்திலையும் சுட்டுகிறது. அவர்கள் தங்களுக்குள் மாறி மாறி உணர்ந்துகொள்ளும் பிரியமும், விஷமும் வர்ஷினியின் உலகத்தோடு உணர்த்தப்படுகிறது. வெளியே வந்த விஷம் தொண்டையில் முள்ளாக இருக்கவே போகிறது. சமயத்தில் அதன் துருத்தல்கள் ஒரு வடுவாக இருக்கப் போகிறது.


ஒன்று அமுதாகவும் மற்றொன்று நஞ்சாகவும் ஆவது எப்போது? என்ற வேதாளத்தின் கேள்விக்கு, வேதாளமே விக்கிரமனுக்கு விடையும் சொல்கிறது. எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள். அது ஒரு இனிய நினைவுகூரலாக, அன்பின் முத்தமாகத் தொண்டையில் எப்போதும் நிரடும். ஏறக்குறைய ஆசிரியர் இந்த நாவலில் கண்டடைந்த தரிசனமாக நாவலைப் படித்து முடித்தபோது அடைந்த உணர்வோடு இதனைச் சொல்லத் தோன்றுகிறது.

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

(வல்லினம் இதழில் சுளுந்தீ குறித்து வெளியான கட்டுரை

ஜெயமோகன் இந்த கட்டுரை குறித்தும், நாவல் குறித்தும் சிறு குறிப்பை அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவலைப் பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு புனைவுப்பாவனை உண்டு. சுளுந்தீ தன்னை ஒரு மாற்றுவரலாறாக, நாட்டாரியல் ஆவணமாக உருவகித்துக்கொண்டு பேசுகிறது. அவ்வகையில் முன்னோடியான படைப்பு கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம். அவ்வரிசையில் அதிகமாக இங்கே எழுதப்படவில்லை.



கிராமிய யதார்த்தவாதத்திற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. கிராமத்தை ஒரு முற்போக்கு யதார்த்தவாத நோக்கில் பார்த்து எழுதப்பட்ட நாவல்களில் முன்னோடியானது ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டிசுட்டது’. அதன்பின் ஹெப்ஸிபா ஜேசுதாசனின்  ‘புத்தம்வீடு‘ முதல் தோப்பில் முகமதுமீரானின் ‘ஒரு கடலோரக்கிராமத்தின் கதை’, ஜோ டி குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ வரை பல நாவல்கள் உள்ளன. அவற்றிலுள்ள வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றின் நீட்சி. மாறாக கி.ராவில் தொடங்கும் நாட்டாரியல் யதார்த்தவாதம் இன்னொரு வரலாற்றைச் சொல்ல முற்படுகிறது. இணைவரலாறு, மாற்றுவரலாறு


பக்கம் பக்கமாக அறியப்படாத செய்திகளுடன் ஓர் ஆவணத்தொகையெனவே அமைக்கப்பட்டுள்ள முத்துநாகுவின் சுளுந்தீ அவ்வகையில் கி.ரா உருவாக்கிய அழகியலில் ஒரு முன்னோக்கிய நகர்வு. இச்செய்திகளில் பெரும்பாலானவை நாட்டாரியலில் இருந்து பெறப்பட்டவை. நாட்டாரியலில் செய்திகள் தொன்மத்துக்கும் நம்பிக்கைக்கும் தரவுகளுக்கும் நடுவே ஊசலாடுபவை. நாட்டுமருத்துவம், மந்திரவாதம், குலக்கதைகள், சிறுதெய்வக்கதைகள் என அவை விரிந்து கிடக்கின்றன. சுளுந்தீ அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஓர் இணைவரலாற்றுப் படலமாக நெய்கிறது. நன்றி ஜெ.)

----

வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும் நன்கு கவனம் பெற்ற இரா. முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ வரலாற்று இடைவெளிகளைச் சாமானியரின் கோணத்திலிருந்து அணுகுகிறது. இதுவரை தமிழகத்தில் பதிவாகாத வரலாற்றுக் கோணங்களை இன வரைவியல் நோக்கில் ஆவணப்படுத்துகிறது.


நாவலின் முதன்மை பாத்திரங்கள் என அரண்மனை நாவிதன் எனும் நிலையிலிருந்து மாபண்டுவனாக நிலைபெறும் இராமப் பண்டுவன் மற்றும் அவனுடைய மகனான செங்குளத்து மாடனையும் சொல்லலாம். நாவல் இன்று கொடைக்கானல் என்றறியப்படும் ‘பன்றி மலையை’ உள்ளடக்கிய கன்னிவாடியைக் களமாகக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லை சுற்றிய குன்னுவரயான்கோட்டை போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருச்சி, மதுரை, செஞ்சி, ராமேஸ்வரம் என தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நாவல் விரிந்து செல்கிறது. நாயக்கர் ஆட்சியில் சொக்கநாத நாயக்கர் (1662-1682) மதுரை மன்னராக இருந்த காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. நாவலில் வரும் பாதிரியார் ஆல்வரஸ், பன்றிமலை சித்தர், கொன்றிமாயன்- வங்காரகன், அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கர் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள் என்று குறிப்பிடும் எழுத்தாளர் தரவுகள் வழியாக அவர்களைத் தேடி ஆவணப் படுத்தியுள்ளார். முத்துநாகு அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும் கூட. ‘தமிழகத்தில் நிலவும் பெரும்பாலான மரபுகள், அரசியல், சமூகப் பழக்கங்கள், பாதிப்புகள் யாரால் எப்போது வந்தன? என்பதற்கான பதிலைப் பன்நெடுங்காலமாக மக்களிடம் தேடினேன். எனக்குக் கிடைத்த தரவுகளே ‘சுளுந்தீ’ என்ற பெயரில் வரலாற்றுக் கதைக்களத்தைத் தந்தது.’ என நாவலின் மைய பேசுபொருள் குறித்து எழுதுகிறார் முத்துநாகு. மேற்சொன்ன கேள்விகளை நாவித சமூகத்தின் வரலாற்றுடன் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். தரவுகளை வெளிப்படுத்த கதைகளத்தைத் தேர்ந்ததாக முத்துநாகு குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.


நாவிதர்களின் சமூக நிலை எப்படியிருந்தது? அவர்களின் நிலை ஏன் கீழே இறங்கியது? எனும் கேள்வியைப் புனைவினூடாக எழுப்புகிறார். நாவிதர்களிடம் இருந்த பண்டுவம் எனும் மரபு மருத்துவம் அவர்களை விட்டுச் சென்றது குறித்தான கேள்வியையும் எதிர்கொள்கிறார். தனிப்பட்ட முறையில் ஆயுர்வேத மருத்துவனாக இந்த வரலாற்றுக் கோணம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆயுர்வேதத்தில் இருபெரும் நூல்களான சரக சம்ஹிதையும் சுசுருத சம்ஹித்தையும் முறையே பொது மருத்துவத்தையும் அறுவை சிகிச்சையையும் பேசுகின்றன. ஆனால் காலபோக்கில் அறுவை சிகிச்சை ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் இழந்தது. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மயக்க மருத்துவம் இல்லாததால் அறுவை சிகிச்சை பெரும் வலி ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது. பவுத்த சமண மதங்களின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானது என்பது ஒன்று. உடலைத் தொடுவது தீண்டுவது சார்ந்து உருவாகி வந்த இறுக்கங்கள் மற்றொன்று. பண்டுவம் என சொல்லப்படும் ரச சாத்திர மருத்துவம் மெல்ல மைய மருத்துவ போக்குடன் பனிரெண்டாம் – பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இணைந்து கொண்டது. திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயர்களுக்காக மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த கொவ்சாஜி என்பவருக்குப் போரில் மூக்கு அறுபட்டது. அதை ஒரு குயவர் சீர் செய்தது பிளாஸ்டிக் சர்ஜரியின் தொடக்கம் என கருதப்படுகிறது. இரு ஆங்கிலேய மருத்துவர்கள் விரிவாக இந்த reconstructive rhinoplasty முறையை ஆவணப்படுத்தி உள்ளார்கள். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, சுமார் ஆயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன் சுசுருத சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முறை பதினெட்டாம் நூற்றாண்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதே. வழக்கொழிந்த செல்வாக்கிழந்த மருத்துவமுறை என நம்பப்பட்ட ஒன்று மக்கள் மருத்துவத்தில் ஒரு பகுதியாகப் புழங்கி வந்துள்ளது என்பதற்கான மிக முக்கியமான சாட்சியம். கத்தி பயன்பாடு கொண்ட நாவித சமூகமும் இயல்பாக அறுவை சிகிச்சையில் நிபுணர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் பொது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. தமிழக பின்புலத்தில், இத்தனை செல்வாக்குடன் மருத்துவத்தைப் பேணி வந்தவர்களிடமிருந்து அறிவு தொடர்ச்சி இற்றுப்போனதற்கு அரசியல் அதிகார காரணிகளை முத்து நாகு சுட்டுகிறார்.


சுளுந்தீ எந்த அளவிற்கு வரலாற்றுப் பிரதியோ அதேயளவிற்கு ஒரு அரசியல் பிரதியும் கூட. ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக மக்களின் விதவிதமான கிளர்ச்சிகளை ஆவணப் படுத்துகிறது. பஞ்சத்தில் வரி கொடுக்க இயலாமல் குலவிலக்கம் செய்துகொண்டு ஆடு மாடுகளை ‘நாசமா போ’ என அவிழ்த்துவிட்டு இரவோடு இரவாக, வாழ்ந்த வீட்டையும் மண்ணையும் விட்டுச் செல்கிறார்கள் மக்கள். வழி தப்பாமல் இருக்க ஊணாங்கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு ‘தாம்பில புனைந்த மாடுபோல காட்டுக்குள்ள புகுந்து’ செல்கிறார்கள். இப்படி வெளியேறிச் செல்லும் திரள் அரண்மனை மீதுள்ள எதிர்ப்பைக் காட்டும்விதமாகக் கண்மாயில் இருக்கும் சொற்ப நீரில் கச்சமுட்டிக் காய், எட்டிக்காய், அரளி விதையை அரைச்சு கலக்கி நஞ்சாக்குகிறார்கள். அதை குடிப்பவர்களுக்கு வயிற்ரோட்டம், வாந்தி பேதி ஏற்பட்டுப் பண்டுவம் இல்லாமல் பலரும் மடிகிறார்கள். மண்ணை நக்கி வெயிலில் அலைந்து திரிந்த ஆடு, மாடுகள் குளத்து நீரைக் குடித்துக் கழிச்சல் கண்டு மடிகின்றன. தரிசாக உள்ள நிலத்தில் நாய்க்கடுகு விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். மக்கள் திரளிடம் இயல்பாக இருந்த அரசின்மைவாத கூறுகளையும் மக்களை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விரிவாக ஆவணப் படுத்துகிறது. பண்டுவ மருந்துகள் வெடி மருந்துகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அவற்றைக் கொண்டு ஆளும் அரசை அச்சுறுத்த முடியும் என கருதியதால் அவற்றின் பயன்பாடு தடைசெய்யப்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்குப் பண்டுவர்கள் வெடி மருந்தைக் கொடுத்து உதவி இருப்பார்கள் என சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர், குலநீக்கம் செய்யப்பட்டனர்.


வெவ்வேறு பகுதிகளில் பண்டுவர்களைக் குடிப்படையினர் அடையாளம் காட்டுகிறார்கள். மன்னரின் படை ஊர் மந்தையில் அவர்களைக் கட்டி  புளியம் விளாரால் அடித்து, கொடுவாளால் கழுத்து அறுத்து வீசியெறிகிறார்கள். ‘பழனியில் மட்டும் இருபத்தி மூணு பண்டுவன், மூணு சித்தர்கள் பொணம் தெருவில் கெடக்குது. பொணத்த பார்த்த சனங்கள் அரண்மன, பெரியதனம், நாட்டாம, குடிப்படைகளுக்கு இந்திரியம் வேல செய்ய மட்டும் மருந்து கொடுபானங்க இவனுங்க. குடியானவன் கையறுத்தக் காயத்துக்குப் பழைய சுண்ணாம்பு கேட்டாக்கூட தரமாட்டானுங்க. சாகட்டும் இந்த நாய்க.’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள் என எழுதுகிறார். பண்டுவர்களுக்கும் மக்களுக்குமிடையே இருந்த உறவு- விலகல் சார்ந்து ஒரு முக்கியமான மாற்றுப்பார்வையும் கூட. மரபாகக் கற்ற பண்டுவத்தை நாவிதர்கள் கைவிட நேர்ந்தது. உயிரச்சத்தின் காரணமாகப் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைக்க நேர்ந்தது. அவர்களிடமிருந்து பண்டுவம் ‘வைத்தியமாக’ ஆனது என்பதே முத்துநாகு அளிக்கும் சித்திரம். ஆனால் முன்னுரையில் குறிப்பிடப்படும் இம்மாற்றம் நாவலில் ஒரேயொரு வரியில் வாய்மொழியாகக் கடந்து செல்லப்படுகிறது.


அயோத்திதாசரும் பறையர்களிடமிருந்து பிராமணர்களுக்கு மருத்துவம் சென்றது எனும் கூற்றை முன்மொழிகிறார். இது ஒரு வரலாற்றுக் கோணம். சமஸ்கிருத ரச சாத்திர நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. விஜய நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இடம்பெயரும் குடிகளைக் குடியமர்த்த பூர்வக்குடிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டு குலநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடும்ப பகை, சொத்து மீதான ஆசை என பல காரணங்களுக்காகக் குடிநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடிகளுக்கு இடையேயான உட்பூசல் அரசிற்கு எதிரான கிளர்ச்சியை மட்டுப்படுத்தும் என்பதே அரசின் கணக்கு. அப்படிச் செய்யப்பட்டவர்களுடன் இருந்த கொண்டு – கொடுத்த உறவையும் நுட்பமாகப் பதிவாக்குகிறார். இப்படி விலகியவர்கள் அரசிற்கு எதிராகக் கலகம் புரிய முயல்கின்றனர். ஆல்வரஸ் பாதிரியார் பாத்திரம் வழியாக அரசிற்கு எதிரான கொந்தளிப்பு மடைமாற்றப்படுகிறது. அரசிற்கும் மத நிறுவனத்திற்கும் இடையே அதிகாரத்தை நிலைநிறுத்த எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இயற்கையின் ஆற்றல்கள் மீது அரசு தன் ஆளுகையைச்  செலுத்துவதன் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்கிறது. கலகத்தைத் தடுக்க நெருப்புப் பயன்பாட்டை மொத்தமாக அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. தீகொளுத்தி என்றொரு பதவி உருவாக்கப் படுகிறது. இதே அரசுதான் பஞ்சத்தில் பாசனமின்றி தவிக்கும் மக்களுக்குக் கிணற்றுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்துகிறது. பாளையங்களுக்கு இடையேயான உறவும் பூசலும், அதிகாரப் போட்டியும், அவை எதிர்கொள்ளப்பட்டு வெல்லப்பட்ட அரசியல் சதிராட்டமும், அதில் நாவிதர்களின் பங்களிப்பும், அதனால் ஏற்பட்ட விளைவும் நாவலில் பேசப்படுகிறது. இந்த அரசியல் ஆட்டங்களும் அதிகாரப் போட்டியும் சாமானியர்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகளை மாடனின் பாத்திரம் வழியாக சித்தரிக்கிறது.


தந்தை இராமப் பண்டுவன் பெரும் திறமை இருந்தும் அரசிடம் பணிவும் பக்தியும் கொண்டவனாக இருக்கிறான். அரண்மனையாரின் கமுக்கங்களைப் பேணுகிறான். அவர்களுக்காகப் பகைகளை முடித்து வைக்கிறான். பலமுறை தளபதி அவனை அழிக்க முயற்சித்தும் அரண்மனையாரின் நம்பிக்கைக்குரியவனாக வாழ்கிறான். மரணத்திற்குப் பிறகு அரண்மனையாரே அவனுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார். மகன் மாடன் ராமனுக்கு நேரெதிரானவன். துடுக்கும் மீறலும் நிறைந்தவன். அவனுடைய மனப்பாங்கை எடுத்துக்காட்ட முத்துநாகு சித்தரிக்கும் ஒரேயொரு காட்சியைச் சுட்டலாம். எந்த ஊரிலும் எவரும் அவனிடம் சவரம் செய்துகொள்ள முன்வராதபோது ஒரேயொரு கிழவருக்குக் குதிரையில் அமர்ந்தபடியே சிரைத்து விடுகிறான். மாடனின் பாத்திரம் உண்மையில் ‘ஒரு கோபக்கார இளைஞனின்’ வார்ப்புடையது. முந்தைய தலைமுறையிலிருந்து விலகி கலகம் ஏற்படுத்த முனைவது. சித்தருக்குக் காணிக்கையாக அளிக்கப்படும் அரபுக் குதிரையை அவருடைய சீடனான ராமனுக்கு அளித்துவிடுகிறார். ராமன் ஊருக்குள் வரும்போது நேராக அரண்மனையாரை சந்தித்துக் குதிரையை  அரண்மனைக்கு அளிக்க முன்வருகிறான். அவனுடைய பண்பைப் பாராட்டி குதிரையை அவனே வைத்திருக்க அனுமதிக்கிறார். ராமன் நாவிதன் நிலையிலிருந்து பண்டுவனாக சித்தரின் வாரிசாகத் தன்னிடத்தை நிறுவிக் கொள்கிறான். மனைவி வல்லத்தாரையை குன்னுவராயன்கோட்டைக்கு அழைத்துச் செல்லும்போது அவளைக் குதிரையில் அழைத்துச் செல்கிறான். குடிப்படைகள், அரண்மனையார் யாரும் இல்லாதபோதே வல்லத்தாரை குதிரையில் ஏறுகிறாள். ராமன் குதிரையில் வரும்போது உறுத்தாதது அல்லது சன்னமான உறுத்தலாக இருந்தது மாடன் குதிரையில் வரும்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மாடனைப் படைவீரனாக்க வேண்டும் எனும் ராமனின் கனவு பொய்த்துப் போகிறது. அவனுடைய பிறப்பு விதித்தப் பணியை சமூகம் மீறுவதற்கு அனுமதிக்கவில்லை. இணக்கமும் மதிப்பும் எந்த எல்லைவரை எனும் கேள்வியை இந்தப் பாத்திர வார்ப்புகள் எழுப்புகின்றன. கலகம் ஏற்படுத்தாத வரையில், எதையும் பெரிதாகக் குலைக்காத வரையில் விதிவிலக்குகளை சமூகம் அனுமதிக்கிறது.


ராமன் – மாடன் பாத்திர வார்ப்பு மிகுந்த சமகாலத்தன்மை உடையது. தலித் அடையாளத்துடன் பொருந்திப் போகக் கூடியதும் கூட. ‘மரங்க விளைஞ்ச பின்னாலதான் வைரம் பாயும். ஆனா சுளுந்தீ மரம் மட்டும் பூமிய விட்டு முளைச்சு வெளியேறி தழைக்கும் போதே வைரமா வெளியேறும். சுளுந்தீ மரம் கெண்டைக் காலளவுக்கு மேல் பெருக்காது. மலை அடிவாரமும் உச்சியும் இல்லாத இடைப்பட்ட இடத்தில், காக்காபின் தாது மண் வாகுள்ள நிலத்தில மட்டும் முளைக்கும். வருசக் கணக்கா மழையில்லேன்னாலும் கழுமரம் போல உசுர உள்ளே வச்சுக்கிட்டே இருந்து மழ பெஞ்ச ரெண்டாம் நாள் தழைக்கும்.’ எனும் விவரணை ‘சுளுந்தீ’ என்பதையே ஒடுக்கப்பட்ட மக்களின் போரியல்பின்  குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. குலநீக்கம் செய்யப்பட மக்களுடன் தனது வருடக் கூலியைப் பகிர்ந்துகொள்ளும் மாடன் மருதமுத்து ஆசாரியால் சுளுந்தீ என்றே சுட்டப்படுகிறான்.


பன்றிமலை சித்தன், குலகுரு, மருதமுத்து ஆசாரி ஆகியோர் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள். மருதமுத்து ஆசாரி ஒரு புரட்சியாளனாக மக்களைத் திரட்டுகிறான். இலக்கற்ற கோபம் கொண்டிருந்த மாடனை அரசிற்கு எதிரான ஆயுதமாகப் பட்டைத் தீட்டுகிறான். குலகுரு மக்களிடம் நெருக்கமான உறவைப் பேணுபவன் சைவ மடாதிபதி. மக்களின் சிக்கல்களை மன்னரிடமும் அரண்மனையாரிடமும் கொண்டு செல்பவர். ஆனால் அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது. மக்களின் சிக்கலை மன்னரிடம் பேசவரும் குலகுருவை அவமதிக்கும்விதமாக இனி குலகுரு சீடர்களைக் கொண்டு பள்ளிகள் நடத்தக்கூடாது, மக்களை சந்திக்கக் கூடாது என அரசாணை இடுகிறார் மன்னர். ‘மன்னருக்குக் குலகுரு ஆசிகள் எப்போதும் உண்டு.’ என்று சொல்லிக் கிளம்பியபடி, ‘வௌவால் வாழும் மான்களில் நூலாம்படைகளும் பூச்சிகளும் எங்களுடன் சேர்ந்து வாழட்டும்.’ என அறம்பாடிச் செல்கிறார். பன்றிமலை சித்தர் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர். தமிழ், தெலுங்கு, பாரசீக மொழி என எல்லாவற்றிலும் பேசக் கூடியவர். பெரும்பாலும் மவுனத்திலும் தவத்திலும் மூழ்குபவர். வெளியே நிகழும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு எவ்விதத்திலும் உளம் அளிக்காதவர். அவரே கூட திண்டாடும் குடிநீக்கம் செய்யப்பட மக்களுக்கு மனமுவந்து வழிகாட்டுகிறார். சித்தர் ராமனை வாரிசாகத் தேர்வதும், மக்கள் புடைசூழ மறைந்து போவதும் நாவலின் உயிர்ப்பான பகுதிகள்.


தளபதியின் அந்தரங்க ரகசியத்தை அறிந்து கொண்டவன் எனும் முறையில் ராமன் மீது அவருக்குத் தொடக்கம் முதலே வெறுப்பு. தளபதி ஒரு சதிகாரராக சித்தரிக்கப்படுகிறார். இறுதியில் அவருடைய வலைப்பின்னல் அவரையே சாய்க்கிறது. பூர்வகுடிகள் வந்தேறிகள் என இனரீதியான ஒரு கண்ணோட்டத்தை நாவலின் முன்னுரையில் முத்துநாகு கோடிட்டுக் காட்டினாலும் நாவலின் அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர், விருப்பாச்சியார் போன்றோரின் சித்தரிப்புகள் முழுக்க கருப்பு வெளுப்பாக இல்லாமல், கலவையாக உயிர்ப்புடன் திகழ்வதால் நாவல் முழு இனவாத பிரதியாகவில்லை. நாவலில் குறிப்பிடத்தக்க பெண் பாத்திரங்கள் என வல்லத்தாரை மற்றும் அனந்தவல்லியைச் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு நாவலில் பெரிய பங்கு ஏதுமில்லை. வழமையான வார்ப்புருவில் உருவாகி வந்தவர்கள்.


நவீன இலக்கியத்தின் முதன்மையான விதிகளில் ஒன்று ‘சொல்லாதே காட்டு’ என்பதே. முத்துநாகு இந்த விதியைத் தலைக்கீழாக்கம் செய்திருக்கிறார். ‘காட்டாதே சொல்’ என்பதது. அவரே முன்னுரையில் குறிப்பிடுவது போல் தரவுகளுக்கான வெளிப்பாடாகத்தான் கதைகளத்தைத் தேர்ந்திருக்கிறார்.  இதனால் நாவலின் செய்திறன் சார்ந்து சில குறைகளைக் கண்டுகொள்ள முடிகிறது.  இரண்டு மூன்று உதாரணங்களைச் சொல்லலாம். ‘பொன்மான்துரையில  அம்மன் கோயில்ல எரிந்துகொண்டிருந்த அக்கினி குண்டத்த குடிப்படை தண்ணிய ஊத்தி அணைச்சாங்களாம். இதப் பார்த்த அம்மன் கொண்டாடி மயங்கி விழுந்து அங்கனையே உசுரு பிரிஞ்சுதாம். ஊரிலிருக்கிற அத்தன பேருக்கும் சாமிவந்து ஆடி ஊரே தலைவிரிக் கோலமா கிடந்துச்சாம்.’ இது ஒரு மிகத்தீவிரமான தருணம் ஆனால் இந்த ஒருபத்தியில் சொல்லிக் கடக்கிறார். மற்றொரு இடத்தில், குள்ளப்ப கவுண்டன் சதுர்வேதி மங்கலத்தில் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிர்வினையாக வயோதிகர் சங்கரப் பிள்ளை ‘நாக்க புடுங்க கை அகல துணியும், நாண்டுக்கிட்டுச் சாக நாலுமுழ கயிறும் வச்சு பிழைங்கடா’ என சபித்துவிட்டுக் கட்டியிருந்த வேட்டியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறார். இதுவும் ஒருபத்தியில் ஒற்றர் கூற்றாகச் சொல்லப்படும் தீவிரமான தருணம்தான்.  மூன்றாவதாக ஓர் உதாரணம், அரண்மனை தீக்கொளுத்தி கதிரி வாடனுக்கும் அரண்மனை ஏவலாளி எத்துலாவுலுக்கும் இருக்கும் தனிப்பட்ட பகையின் காரணமாகக் கதிரி வாடன் மகனை வீரப்பூர் படைகளிடம் பிடித்துக் கொடுத்துக் கழுகுகளுக்கு இரையாக்குகிறான். இவையும், இவைத்தவிர இக்கட்டுரையில் சுட்டப்படும் அத்தனை தீவிரமான நிகழ்வுகளும் எவரோ ஒருவரின் கூற்றாகச் சொல்லப்படுகின்றன.


நாவல் முழுக்க பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வரலாற்றுத் தகவல்கள், வெவ்வேறு இனங்களின் வாழ்க்கை முறை பதிவுகள், சொல் ஆராய்ச்சிகள் என கதை மாந்தர்கள் தகவல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். ஏகாலி துணி வெளுக்க வெள்ளாவியில் அடுக்கும் முறை, சாணார்களின் பிணக்கு, குல நீக்கத்திற்கான காரணிகள், குலத்தில் சேர்த்துக்கொள்ள செய்யப்படும் சடங்குகள், கோவில் காளை எப்படி உருவாகியிருக்கும் என பலவும் உரையாடல் வழியாகச் சொல்லப்படுகின்றன. முனி, பிசாசு போன்றவற்றுக்கு அவர் அளிக்கும் விளக்கம், பூசாரி எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்தே வேண்டுதல்கள் இருக்கும். பாம்பை விரட்ட வயல் ஓரத்தில் தூவப்படும் சாம்பல் போன்ற அசலான அவதானிப்புகள் கண்டடைதல்கள் தெறிப்புகளாக ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. இயற்கை சார்ந்த அவதானிப்புகள் வழியாகப் பருவ மாற்றங்கள் அடையாளம் காணப்படுகின்றன. கூவக சாத்திரம் பகுதியை உதாரணமாகக் காட்டலாம்.    குறைந்த பட்சம் ஒரு மருத்துவ தகவலேனும் இல்லாத பக்கமே நாவலில் இல்லை எனும் அளவிற்கு ஏரளமான மருத்துவத் தகவல்கள், மருந்து செய்முறைகள் கூறப்பட்டுள்ளன. நாவலில் மிக சுவாரசியமான தகவல் என்பது கொடைக்கானலில் புகழ்பெற்ற சுற்றுலாதளமான தற்கொலை முனை எனும் சூசைட் பாயின்ட் குறித்து முத்துநாகு விவரித்திருக்கும் பகுதிதான். ஓர் அமானுட கிளர்ச்சியை அளித்தது. அரண்மனை நீதி கிடைக்காதவர்கள் இந்தக் கரட்டில் ஏறி மனச் சுமையை வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் பெறுவதாக நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் இடம் என்கிறார். கரட்டில் ஏறி சுழிக் காத்தால கால் தடுமாறி கீழே விழுந்து உயிரை விட்டவர்கள் எழுப்பும் பெருமூச்சுதான் இந்தச் சுழிக்காற்று என மக்கள் நம்பினர். முறை மீறிய உறவுகளில் ஈடுபட்டவர்கள், குலவிலக்கான பெண்கள், உடன்கட்டை  ஏற மறுக்கும் அரண்மனை பெண்கள் போன்றோரை உறுமிக் கரட்டிற்கு இழுத்துப் போய் விட்டுவிடுவது அரண்மனைத் தண்டனை. இந்தக் குன்றில் ஏறினால் மரித்தவர்களின் ஆவிகள் ஒன்று கூடி காற்றுடன் சேர்ந்து கரட்டில் எரியவர்களை அழைத்துச் சென்றுவிடும்.  ‘கரட்டில் பொண்ணுக ஏறினா கரட்டின் கீழுள்ள பட்டாளம்மன் கோயில் பூசாரி உறுமிய எடுத்து அடிப்பான். உறுமிச் சத்தம் பன்றிமலையில் சிலாரடித்துக் கரட்டில் ஏறிய பொண்ணுக அடிவயிற்றில ரெட்டிப்பாக்கி பித்தம் கலங்கும். கதி கலங்கியவங்க மூளைக்குள்ள உறுமிச் சத்தத்த தவிர வேறேதும் கேட்காது. கரட்டில ஏறினவங்க தடுமாறி விழுகுற வரைக்கும் உறுமிய அடிச்சிக்கிட்டே இருக்க அரண்மனை உத்தரவு இருக்கு. கரட்டில ஏறின சில உசுருகள் வேகமாக விழுந்து தொலையாது. இதனால நாலைஞ்சு உறுமிக சேந்து அடிச்சு உசுர எடுத்துருவாங்க.’ என ஒரு சன்னதத் தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.


பல்வேறு கிளை கதைகள் நாவலின் ஊடாகச் சொல்லப்படுகின்றன. இந்தக் கதைநாகு தொகையிலிருந்து நாம் சில கதைகளைத் தனித்து விரித்து சிறுகதைகளாகவோ நாவலாகவோ ஆக்க முடியும். சமண முனிவர்கள் மருத்துவம் பரப்பிய கதையும் அவர்களின் நினைவாகக் காது வளர்க்கும் வழக்கம் உருவானதையும் சொல்கிறார், முத்துரங்கன் மாட்டு பஞ்சாயத்து கதை, பட்டிவீரன் கதை, ஆண் கல் பெண் கல் கதை நல்லதொரு காதல் கதையென சொல்லலாம், சடாமுனி கட்டகாமன் – மண்டுகருப்பி கதை தன்னளவில் தீவிரமானது. பெர்சிய அடிமையை குதிரையை அடக்கியதால் கட்டிக்கொண்ட விருப்பாச்சி அரண்மனையார் கதை, குப்பு அய்யர் வளர்க்கும் பட்டாபி காளை மஞ்சுவிரட்டில் அணையப்பட்டதும் அதன் கொம்பை வெட்டி முறித்து அவிழ்த்து விடுகிற கதை, ராவுத்த படைவீரன் கபார்கான் பெண் கேட்டு வரும்போது அரண்மனையிடம் கலந்துகொண்டு சொல்வதாகச் சொல்லிவிட்டு மருதையன் இரவோடு இரவாக மந்தையைக் காலி செய்துக்கொண்டு வேறிடத்திற்குச் செல்வது, கொன்றிமாயனை சடாமுனி ஆசிர்வதித்த கதை, வங்காரகன் கிடாவிடம் முட்டி முட்டி தலையை வலுப்படுத்திய கதை என பல கதைகளும் தன்னளவில் சுவாரசியமானவை.


இந்நாவலின் தனித்தன்மையும் எல்லையும் இதுவே. சித்தரிப்புகளும் தகவல்களும் கதையின் மையத்திற்கு வலு சேர்ப்பவையாக, குறியீட்டு ரீதியாகத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பது நவீன இலக்கிய வாசகர் / விமர்சகரின் எதிர்பார்ப்பு. இராமப் பண்டுவன் ஒரு பெரும் மருத்துவன், அவனுடைய ஆசிரியர் பன்றி மலைச் சித்தர் மருத்துவ மேதை. ஓரிரு தருணங்களில் இது நிறுவப்பட்டாலே போதும், ஆனால் நாவலில் அவர்களைச் சந்திக்கவரும் அத்தனை பேருக்கும் விதவிதமான உடல் உபாதைகள் உள்ளன. அத்தனை பேருக்கும் மருத்துவம் சொல்கிறார்கள். மருத்துவ தகவல் இல்லாத ஒரு பக்கம் கூட நாவலில் இல்லை என சொல்லிவிடலாம். புனைவின் முதன்மை பணி ஆவணப்படுத்துதல் அல்ல. அது ஒரு கூடுதல் பலம். இந்தத் தகவல் குவிப்பு என்ன செய்கிறது? வாசகரைப் புனைவு ஊடுருவி அந்தரங்கமாகத் தொந்தரவு செய்து, தன்னை விசாரணைக்கு உட்படுத்த விடுவதில்லை. தகவல்களின் விந்தைத்தன்மையில் ஈடுபட்டுக் கொள்கிறது. கதை மாந்தர்களின் சித்தரிப்புகளிலும் துண்டுபடல்களை உணர முடிகிறது. மாடன் தன் தந்தையின் மரணம் ஒரு கொலை சதி என்பதை உணர்கிறான். மருதமுத்து ஆசாரி அவனை அரசிற்கு எதிராகத் திருப்புகிறார். ஆனால் அதன் பின்னரும் கூட அரண்மனையாரை நேரில் சந்தித்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என நம்புகிறான். சித்தர் குளித்து எழுந்து மறைந்த குளத்தில் ஊரார் முன் முங்கி எழுகிறான் ராமன். அரண்மனையார் அவனை மரியாதையுடன் கன்னிவாடிக்கு அழைக்கிறார். ஆனால் அதன் பின், முந்தைய தருணத்தில் அவன் அடைந்த உயரத்தை அடையவே இல்லை. சித்தர் அடங்கப்போகும் செய்தியை அரண்மனையாரிடம் சொல்ல மறந்துவிடுகிறான் மீண்டும் நினைவுக்குவந்து சொல்கிறான். மாடனுடன் மல்யுத்தம் செய்யத் தயார் என அறிவித்துக்கொண்டு கிளம்பிய சின்ன பூதன் முந்தைய நாள் இரவு புலியடித்து இறக்கிறான். தற்செயல்களும், விபத்துகளும் மறதியும் நிதர்சன வாழ்வில் முக்கியமானவற்றைத் தீர்மானிப்பது உண்மைதான். ஆனால் புனைவில் அவற்றின் பயன்பாடு ஒரு குறையாகவே கருதப்படும். மாடனைத்தவிர நாவலின் வேறு கதை மாந்தர்கள் மனதில் ஊன்றி வளரவில்லை. குலகுரு, ராமன், சித்தர், புலவர் என அனைவரும் ஒரே தொனியில் கதைகளைச் சொல்கிறார்கள்.


வரலாற்று நாவலின் மிக முக்கியமான சவால் என்பது அங்கு நாயகர்களையும் எதிரிகளையும் உருவாக்காமல் இருப்பது என்பதே. வரலாற்று நிகழ்வைத் தரப்புகளாக ஒருபோதும் சுருக்கி எளிமை படுத்திவிடக் கூடாது. நல்ல வரலாற்று எழுத்து என்பது நிகழ்வின் வெவ்வேறு சிடுக்குகளை, பிணைப்புகளை விரித்துக் காட்டும். வரலாறு குருதி சிந்தவைக்கும் கொடுவாளாகக் காலம்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாற்றுப் புனைவு பழைய காயங்களை நோண்டுவதற்கு, கணக்குத் தீர்ப்பதற்குப் பயன்படக் கூடாது. Historical fiction should never trivialize the event, but it should complicate the event. இதை ஒரு பொன்விதியாக வரலாற்றுப் புனைவில் போட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே இங்குள்ள வடுகர் தமிழர் ஆதிக்கம் சார்ந்த அரசியலுக்கு சில விவாதக் கருக்களை சுளுந்தீ அளிக்கிறது, முன்னுரையில் முத்துநாகு குறிப்பிடுவதும் அதைத்தான். எனினும் நாவலின் தரவுகளும் தகவல்களும், கதை மாந்தர்களின் மீதான கரிசனம் கூடிய சித்தரிப்புகளும்  சுளுந்தீயை காக்கிறது.


அம்பாரமாகக் குவியும் தகவல்கள் சில சுவாரசியமாகவும் உள்ளன. உதாரணமாக மரணச் சடங்கில் நாவிதர்களின் பங்களிப்புப் பற்றி சொல்லும் இடத்தைச் சொல்லலாம். வரலாற்றுப் புனைவில் வரலாற்று அம்சம் கூடுதலாகவும் புனைவம்சம் குறைவாகவும் உள்ளது. தகவல்களும் தரவுகளும் புனைவாக்கம் (fictionalizing the data) நிகழாமல் இருப்பதால் அரிய, புதிய நிகழ்வுகள் கூட மனதில் வலுப்பெற்று வளராமல் குன்றி விடுகின்றன. முத்துநாகு வரலாற்று ஆய்வாளராக, நாட்டாரியல் அறிஞராக மிளிரும் அளவிற்குப் புனைவாசிரியராக மிளிரவில்லை. ஆனால் அவருடைய புனைவாக்கத் திறன் இந்நாவலில் வெளிப்பட்ட இடங்கள் என சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும். அவை அவருடைய புனைவுத்திறன் சாத்தியத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த நாவலின் ஆகச்சிறந்த பகுதி என நான் கருதுவது, கன்னிவாடி எல்லையில் குலநீக்கம் அடைந்தவர்களை ராமேஸ்வரத்தில் இருந்து செஞ்சிக்கு மீட்டுச் செல்லும் பலராமனின் கதையைச் சொல்லலாம். அதிலும் திருக்கோஷ்டியூர் கோவிலில் முத்துநாகு சித்தரிக்கும் நிகழ்வின் உக்கிரம் அபாரக் காட்சி அனுபவத்தை அளிக்கிறது. மாடன்- வங்காரகன் யுத்தம், பன்றிமலை சித்தர் சமாதியில் அடங்குவது போன்றவையும் மிக நல்ல காட்சி அனுபவத்தை அளித்தன. ஐயமின்றி முத்துநாகு இந்த சித்தரிப்புகளில் புனைவெழுத்தாளராக மிளிர்கிறார். நாவலில் இத்தகைய தருணங்கள் அரிதாகவே உள்ளன என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது இந்தத் தருணங்கள் மனதில் எப்படி ஊடு புகுந்தன என யோசித்தால் இவை ‘சொல்லாதே காட்டு’ விதியை பின்பற்றியவை என்பதினால் எனக் கண்டுகொள்கிறேன்.


‘சுளுந்தீயை’ நவீன இலக்கிய அழகியல் நோக்கில் அணுகுவது சரியா என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இந்நாவல் மீதும் எழுப்பப்படும் விமர்சனங்கள் அந்த நோக்கிலிருந்தே எழுகின்றன. விரிந்து செல்ல வாய்ப்பிருக்கக்கூடிய பல இடங்கள் வெறுமே உரையாடலில் கடக்கப்படுகின்றன.  ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என்றால் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைத்து உயிர் பிழைப்பது. ராமன்- மாடன் கதையை மைய சரடாக உருவகித்துக் கொள்வதால், அதனுடன் பிற பகுதிகள் இயைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுகிறது. அப்படி ஒரு மைய சரடை உருவகிக்காமல் சுளுந்தீயை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் வேறு அளவுகோலைப் பயன்படுத்த முடியுமா எனும் கேள்வியை எழுப்பிக் கொண்டேன். இந்நாவலை ‘நாட்டார் கலைகளஞ்சியத் தன்மை’ (encyclopedic) கொண்ட நாவல் என வகைப்படுத்தலாம். நாட்டார் வரலாற்றுக் கோணத்தில் தமிழில் எழுதப்பட்ட முன்னோடி நாவல் என கி.ராவின் கோபல்ல நாவல்களைக் குறிப்பிடலாம். பூமணி, கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால் உட்பட வெவ்வேறு நிலம் சார்ந்த எழுத்தாளர்கள் நாட்டார் கூறுகளைக் கதையில் கையாண்டுள்ளார்கள். அடிப்படையில் இவர்கள் நவீன இலக்கியவாதிகள்தான். கதைக்குத் தேவையான அளவு அதன் ஆழத்தை அதிகரிக்க நாட்டார் கூறுகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியது. நாட்டார் நோக்கில் மகாபாரதத்தை அணுகிய ‘கொம்மை’ அதன் அடுத்தக்கட்ட பரிணாமம் எனச் சொல்லலாம். நவீன இலக்கிய அழகியலுக்கு ஒரு மாற்றாக நாட்டார் அழகியலை உருவாக்கும் முயற்சி. அவ்வரிசையில் முழுக்க முழுக்க நாட்டார் அழகியல் கூறுகள் கொண்ட வரலாற்று நாவல் என்பதே சுளுந்தீயின் முக்கியத்துவம். சடங்குகள், அதன் குறியீட்டு மற்றும் நடைமுறை பொருள், வாழ்க்கை முறை, வாய்மொழியில் உலவும் கிளை கதைகள், சொலவடைகள் போன்றவை நாட்டார் அழகியலின் கூறுகள் என சொல்லலாம். நாட்டார் அழகியலில் வாய்மொழி கதை சொல்லல் என்பது இன்றியமையாத கூறு. முரண்களும் சிதறல்களும் தொடர்ச்சியின்மையும் கூட அதன் பகுதியாகக் கொள்ளமுடியும். இயல்பாக சில பின்நவீனத்துவ கூறுகளையும் நாவல் அடைந்துள்ளது. இந்தக் கோணத்திலிருந்து அணுகும்போது சுளுந்தீ தான் தேர்ந்துகொண்ட பாணிக்கு நேர்மையான வெளிப்பாட்டு முறையைக் கொண்டுள்ளது. ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை இனிதான் கவனிக்க வேண்டும். இவை அனைத்தையும் விட, விமர்சனங்களுக்கு அப்பால், வெகுமக்கள் வரலாறைச் சொல்லும் சுளுந்தீயின் ஆக முக்கியமான பங்களிப்பு என  வெகுமக்களின் நுண்ணறிவை ஆவணம் செய்ததைச் சொல்ல வேண்டும்.  சாமானிய மக்களிடம் புதைந்து கிடக்கும் அன்றாட வாழ்க்கை சார்ந்த நுண்ணறிவை சுளுந்தீ அளவிற்கு ஆர்வத்துடன் கொண்டாடிய வேறு நாவலைத் தமிழில் நான் அண்மையில் வாசிக்கவில்லை.

Sunday, October 25, 2020

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

(சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை) 

விடுதலைக்கு முன்பான இந்தியாவில், டெல்லியில் ஓர் பனிக்காலத்தில் அந்த ஆயுர்வேத வைத்தியரைக் காண பெருங்கூட்டம் விடிகாலையில் வரிசையில் நிற்கும் விந்தை ஆங்கிலேயர்களுக்கு விளங்கவில்லை. அவ்வைத்தியர் நாடி பிடித்து நோயறிவதில் பெரும் விற்பன்னர் என பெயர் பெற்றவர். அது எப்படி சாத்தியம் என வினவிக்கொண்ட அவர்கள், அவரை சோதிக்க முடிவு செய்தார்கள். எங்களிடம் ஒரு நோயாளி இருக்கிறார்,ஆனால் அவர் எவரையும் காண மாட்டார், அறையை விட்டு வெளியே வா மாட்டார், அவருடைய நோயை நீங்கள் கண்டறிய  வேண்டும் என்றார்கள். வைத்தியர் இச்சவாலை ஒப்புக்கொண்டார். மெல்லிய கம்பியை அந்நோயாளியின் மணிக்கட்டு நரம்பையொட்டி கட்டி மறுமுனையை என்னிடம் அளியுங்கள் என்றார். மூடிய வீட்டின் உள்ளறையில் இருந்து நீண்ட கம்பியை அனைவரும் பார்க்க வாயிலில் அமர்ந்துக்கொண்டு வைத்தியர் அக்கம்பியின் அதிர்வுகளின் ஊடாக நாடியை நோக்கினார். பெரும் கூட்டம் அவருடைய சொற்களுக்காக காத்திருந்தது. நாடியை நோக்கிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் ஒன்றுமில்லை மூன்று வேளை புல் கொடுங்கள், கஞ்சித்தண்ணி வையுங்கள், உங்கள் நோயாளி நலமாகவே உள்ளார் என்று கூறிவிட்டு எழுந்து சென்றார். மூடிய கதவுக்கு அப்பால் ஒரு பசுமாடு நின்றிருந்தது. ஆங்கிலேயர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.


பிரபல ஆயுர்வேத வைத்தியர் ப்ருஹஸ்பதி தேவ திரிகுணாஜி அவர்களைப் பற்றி ஒரு வாய்மொழிக்கதைதான் இது.


தற்காலத்தில் நவீன ஆயுர்வேதம் பல்வேறு பொதுப் போக்குகளை உள்ளிழுத்துக் கொண்டு மாற்றமடைந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் பல சவால்களை அளித்தாலும் அவற்றைச் சாதகமாக்கி கொள்ள முனைகிறது. மானுடவியல் ஆய்வுகள் மற்றும் சுய அவதானிப்புகளைக் கொண்டு தற்கால ஆயுர்வேதத்தின் நிலை மற்றும் அதன் வரலாற்று பரிணாமங்களை சற்றே ஆராய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.


இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.


இவை கறாரான வகைப்பாடுகள் எனச் சொல்ல முடியாது. மரபான வைத்தியர் நவீன நோயறியும் முறைகளை பயன்படுத்தலாம். நவீன ஆயுர்வேத மருத்துவர்களில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, நவீன மருந்துகள் மற்றும் ஆயுர்வேதம் எனக் கலந்து பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, முறைப்படி ஆயுர்வேத மருத்துவக் கல்வித் தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களில் முற்றிலும் நவீன மருத்துவ அமைப்பில் தம்மை கரைத்து கொள்பவர்களும் உண்டு. ஆயுர்வேதத்தை முற்றிலும் வணிகமாக அணுகும் நிறுவனங்கள்கூட தங்களுக்கென்று ஒரு மரபார்ந்த அடையாளத்தை முன்வைக்கவே முயலும்.


மரபு வைத்தியர்கள் பெரும்பாலும் குடும்ப பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள். முந்தைய தலைமுறை வைத்தியர்கள் பட்டப் படிப்பை அவசியம் என கருதவில்லை. உண்மையில் பட்டப்படிப்பின் மீது அவர்களுக்கு மரியாதையில்லை. ஏளனமாகவே அணுகினர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் தந்தையர் வழியாக மிக இளம் வயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். என் தாத்தா பதிமூன்று வயதிலிருந்து தனியாக மருத்துவம் பார்க்கத் துவங்கியதாகச் சொல்வார். மரபு மருத்துவர்களின் அனுபவப் புலம் நிச்சயமாக நவீன மருத்துவர்களின் உலகிலிருந்து வேறானது. மருந்துகள் செய்வதிலும், மூலிகைகளை, மருத்துவ தாவரங்களை  அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. உடை, தோரணை என நவீன மருத்துவர்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பார்கள்.



இங்கு சட்டென நினைவுக்கு வருபவர் ஜெயமோகனின் ‘மீட்சி’ கட்டுரையில் வரும் பால வைத்தியர் கங்காதரன் நாயர். மரபு வைத்தியர்களிடம் கிட்டத்தட்ட முட்டாள்தனம் எனத் தோன்றும் அளவிலான தன்னம்பிக்கை வெளிப்படும். பட்டப்படிப்பு பெற்ற நவீன ஆயுர்வேத மருத்துவன் நிச்சயம் கங்காதாரன் நாயர் போல் துணிவுகொண்டு மரபணுச் சிக்கல் என முத்திரை குத்தப்பட்ட நோயை கையில் எடுத்திருக்க மாட்டான்.


மரபு மருத்துவர்களே இன்று எளிதாக நகலெடுக்கப்படுபவர்கள். ஆனால் நானறிந்த வரையில் ஆழ்ந்த புரிதல் கொண்ட மரபு மருத்துவர்களுக்கு தங்கள் எல்லை தெரியும். மரபு வைத்தியர்களின் நகல்களோ அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உடற்கூறு மற்றும் உடலியியங்கியல் புரிதல் ஏதுமின்றி புற்று நோய் முதல் மரபணுக் குறைப்பாடு வரை எல்லாவற்றையும் தீர்க்க முடியும் என மார்தட்டிக் கொள்கிறார்கள். அரிதான சில சமயங்களில் தற்செயலான வெற்றிகூட கிட்டிவிடுகிறது. அந்த தற்செயல் வெற்றியை ஒவ்வொரு முறையும் ருசிக்க முயன்று தோற்கிறார்கள். உச்சிக் கிளை மாங்கனியை விழச்செய்ய மூட்டை கற்களை தூக்கி வீசுவது போலத்தான். எந்தக் கல் வீழ்த்தியது என வீசியவன் அறிய மாட்டான்.


நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் என பொதுவாக பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்களையே சுட்டுவோம். பள்ளித் தேர்ச்சி வரை ஒருவிதமான கல்வியும் அதன் பின்னர் முற்றிலும் வேறுவிதமான கல்வியும் அவர்களுக்கு வாய்க்கிறது. மரபு அடையாளத்தை ஏற்ற நவீன ஆயுர்வேதிகளும் உண்டு, வணிக அடையாளங்களைச் சூடிய மருத்துவர்களும் உண்டு. நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை அவர்களின் மிகை அறைகூவல்களின் காரணமாக போலிகளாக கருதுகிறார்கள். அவர்களை ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள். தொழில் போட்டியாளர்களாகவும் எண்ணுகிறார்கள். கேலி செய்யப்பட்டாலும் கூட அவர்களின் வருமானமும் செல்வாக்கும் ஒரு வித மிரட்சியுடனேயே அணுகப்படுகிறது. இச்சிக்கல்களைத் தவிர்க்க, மரபு மருத்துவர்களின் அடுத்த தலைமுறையினர் பட்டப்படிப்பை தேர்கின்றனர். மரபு போலி மருத்துவர்களின் வாரிசுகளும் இதையே தேர்கின்றனர்.


ஆய்வாளர் ஜீன் லாங்ஃபோர்ட் பண்டைய ஆயுர்வேத நூல்களில் அசல் போலி என வைத்தியர்களை வகைபடுத்தவில்லை, மாறாக தரப்படுத்தல் சார்ந்து ஒரு வரிசை முற முன்வைக்கப்படுகின்றது என்கிறார். ‘உயிரை வளர்ப்பவன்’ (பிரானபிசார), ‘நோயை வளர்ப்பவன் ( ரோகாபிசார) என இருவகை வைத்தியர்களின் இயல்புகளைப் பற்றியும் அவர்களைச் சந்தித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சரக சம்ஹிதை பதிவு செய்கிறது. ஞானமற்ற மருத்துவன் அழிவையும் இறப்பையும் ஏற்படுத்துவான். அவனுடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பதற்கு பற்றி எரிவதே மேல்  என்கிறார் சரகர். ஞானமற்றவன் என்றாலும்கூட அவனை மருத்துவன் என்றே வகைப்படுத்துகிறார், நிராகரிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.


சரகர் காலத்தில் தரமற்ற ஆயுர்வேதமே போலி ஆயுர்வேதமாக கருதப்பட்டது. நவீன காலகட்டத்தில் நகல் செய்வதையே போலியெனக் கருதும் போக்கு நிலவுகிறது. நவீன மருத்துவர்களுக்கு  பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன நோயறியும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களை நகலெடுக்கிறார்கள் எனும் மனக்குறை உண்டு. ஆகவே அவர்கள் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கத்திய மருத்துவத்தை நகலெடுக்கிறார்கள், தங்கள் மருத்துவ முறை மீது போதுமான நம்பிக்கை இல்லை என குற்றம் சாட்டி மரபு மருத்துவர்கள் நிராகரிக்கிறார்கள்.


இங்கு உண்மையில், நகலெடுப்பது அல்ல பிரச்சனை. ஆனால் எதை என்பதிலேயே சிக்கல். நல்ல வைத்தியர் என்பவர் வேறொரு நல்ல வைத்தியரின் இயல்புகளைப் பிரதி எடுப்பவர் என்பதே ஆயுர்வேதத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்து மருத்துவர்கள் தங்களை அதிகாரபூர்வமான, உண்மையான ஆயுர்வேத மருத்துவர்களாக அறிவித்துக்கொள்ள மரபின் மீது தங்களுக்கு ஆளுகை இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும், அல்லது மருத்துவ அமைப்பின் பிரதிநிதி என்பதை ஆழ நிறுவ வேண்டும்.


ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவது மட்டுமின்றி ஊசிகள், கிருமிக்கொல்லிகள் போன்ற நவீன மருத்துவ சிகிச்சை முறைகளின் பயன்பாட்டையும் இன்றைய ஆயுர்வேத மருத்துவர்கள் கற்கிறார்கள். இது பலவாறான விவாதங்களை எழுப்புகிறது. முறையான பஞ்சகர்ம சிகிச்சைகள் இன்று வெகுவாக குறைந்து விட்டன. ஆயுர்வேதம் காலப்போக்கில் தனது முரட்டு வைத்திய முறைகளை கைவிட்டு சாத்விகமான அகிம்சை மருத்துவ முறையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, எழுபதுகளில் கிருமிக்கொல்லிகளின் பக்க விளைவுகள் பெரும் விவாதமாக எழுந்த சூழலில் ஆயுர்வேதம் உடலை வதைக்காத மருத்துவமுறையாக நவீன மருத்துவத்திற்கு எதிர்நிலை எடுத்தது. மரபான ஆயுர்வேத வைத்திய முறை நோய்த் தடுப்பிற்கும் சிகிச்சைக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு எதிர்வினையாக கட்டமைக்கபட்ட நவீன ஆயுர்வேதம் சிகிச்சையுடன் பொதுவாக நிறுத்தி கொள்கிறது. மரபார்ந்த வைத்தியர்கள் பத்தியம் பின்பற்ற வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்கள். அது நோய்த் தடுப்புடன் தொடர்புடையது. ஆனால் நவீன மருத்துவர்கள் நோய்க்கு உரிய மருந்துகளை மட்டுமே அளிக்கிறார்கள், பத்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதே நிதர்சனம். நோயாளிகளை தக்கவைத்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.


மேலும், மருந்துகளை அதன் மரபார்ந்த வடிவிலிருந்து பெயர்த்து வேறு வடிவங்களில் அளிப்பதில் அவர்களுக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை.  உதாரணமாக, ஆயுர்வேத மருந்துகளில் கஷாயங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு, ஆனால் அதன் கடுமையான ருசியின் விளைவாக அதை உட்கொள்ளும் நோயாளி வேண்டா வெறுப்பாகவே அணுகுகிறார். நவீன ஆயுர்வேத மருந்தகங்கள் இச்சிக்கலை எதிர்கொள்ள கஷாயங்களை மாத்திரைகளாக அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். அதன் செயல்திறன் குறித்து எப்போதும் மரபு வைத்தியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றாலும் இதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் வரவேற்பு பெருகி வருகிறது என்பதே நிதர்சனம்.


நவீன ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலிகைகளின் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதிகபட்சம் ஐம்பது முதல் எழுபது மூலிகைகளின் வெவ்வேறு கூட்டிலேயே நிறுவனங்கள் மருந்துகளை தயாரிக்கின்றன. செவ்வியல் ஆயுர்வேதம் மீது பிடிப்புள்ள மருத்துவருக்கு உள்ள தேர்வுகள் இவர்களுக்கு இல்லை. கல்லீரல் நோய்களுக்கு சந்தையில் மிக வெற்றிகரமான மருந்தாக தன்னை நிறுவிக்கொண்ட Liv-52ன் உள்ளடக்கம் எதுவோ அதை வெட்டியும் ஒட்டியுமே பெரும்பாலான மருந்து நிறுவனங்களின் மருந்துகள் அமைகின்றன. கால்வலி, தோல் நோய், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள், மலட்டுத்தன்மை என சுமார் முப்பது அறிகுறிகள் அல்லது நோய்களுக்கு உகந்த மருந்துகளே செல்வாக்கடைந்து உள்ளன.


மருந்து நிறுவன விற்பனைப் பிரதிநிதிகளை சார்ந்து இயங்கும் தற்கால ஆயுர்வேத மருத்துவர்களை எனது ஆசிரியர் ‘பட்டியல் மருத்துவர்’ (Catalogue doctors) என கிண்டல் செய்வார். பட்டியலுக்கு வெளியே அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதே நிதர்சனம். ஆயுர்வேதத்தில் இருந்து நவீன மருத்துவத்தை வெட்டியெடுக்கும் செயல் என இதைச் சிலர் விமரிசித்தாலும்கூட இதுவே தவிர்க்க முடியாத நிதர்சனம்.


வணிக ஆயுர்வேதம் நோயாளிகளை கணக்கில் கொள்வதே இல்லை. அவர்களைத் தவிர்த்து ஆரோக்கியவான்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை பேணவும் பராமரிக்கவும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் தன்னை நிறுத்திக் கொள்கிறது. இத்தகைய வணிக அமைப்புகளில் கல்வி கற்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை. ஆயுர்வேத உதவியாளர்களை (தெரபிஸ்ட்கள்) கொண்டு அதிக செலவின்றி அவர்களுடைய நிறுவனத்தை நடத்திவிட முடியும் எனும் சூழலில் ஆயுர்வேத மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவது ஒரு அவசியமற்ற, கட்டாயச் செலவு மட்டுமே. சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு இவை இயங்குகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உயர்த்தட்டு மக்களை இலக்காக கொண்டு இயங்குகிறது. ஆயுர்வேதத்தின் சர்வதேச அடையாளமாக இவர்களே திகழ்கிறார்கள். இத்தகைய மையங்களில் பணியாற்றும் ஆயுர்வேத உதவியாளர்கள் கொஞ்ச காலம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிவிட்டு நல்ல சுற்றுலா தலங்களில் அவர்களே சொந்தமாக ஆயுர்வேத நிறுவனங்களை அமைத்துகொள்வதும் நடந்துகொண்டு  தானிருக்கிறது.


ஆயுர்வேத மருத்துவ முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள், மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதிகள், பாட்டி வைத்தியம் போன்ற அனுபவக் குறிப்புகள், சாமானியர்களுக்கான ஆயுர்வேத நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை மக்களிடம் கொஞ்சம் பிழையாகவும் கொஞ்சம் சரியாகவும் ஆயுர்வேதத்தைப் பற்றிய ஒரு வரைபடத்தை உருவாக்கியிருக்கிறது. புண்ணைப் பழுக்க வைக்க துணி துவைக்கும் சோப்பைக் குழைத்து பூசுவது, வாசலினுடன் மஞ்சள் பொடி சேர்த்து புண்ணுக்கு கட்டுவது, நகச்சுத்திக்கு வடிகொலோன் இடுவது என உடனடியாக பலனளிக்கும் அனுபவ முறைகள் நவீன கால கண்டடைதல்கள். காய்ச்சலின்போது மிளகு ஜீரக சாதம் உண்பது, தொண்டைச்சளிக்கு மஞ்சள் தூளும் மிளகும் சேர்த்த பாலைக் கொடுப்பது போன்ற வழக்கங்களுக்கு ஆயுர்வேத தர்க்கத்தில் இடமுண்டு. கேரள பண்பாட்டில் ஆயுர்வேதம் வெகுவாக காலூன்றியுள்ளதால் தசமுலாரிஷ்டம், நீலி பிருங்காதி போன்ற மருந்துகள் அவர்களுக்கு நன்கு பரிச்சயம். சில நேரங்களில் இந்திய மருத்துவத்தை மருத்துவர்களைக் காட்டிலும், அமைப்புகளைக் காட்டிலும், சாமானிய மக்களின் வழக்கங்களே காத்து வந்திருக்கிறது என்று தோன்றுவதுண்டு. மருத்துவர்களோ அமைப்புகளோ இன்றியும்கூட எப்படியோ இது எஞ்சிப் பிழைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு வலுவாக உண்டு.


அண்மைய ஆண்டுகளில் வெகுஜன ஊடகங்களில் ஆயுர்வேதம் குறித்து அதிகம் எழுதப்படுவதை கவனிக்க முடிகிறது. பொது மக்களுக்கான அறிமுக நூல்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வு நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மிகக் குறைவாகவே வருகின்றன. இது ஒரு மிக முக்கியமான சமூகப் போக்கை உணர்த்துகிறது. பொதுமக்களுக்காக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களிலும் இணையதளங்களிலும் உடல் எடை குறைப்பு, யோகா, தியானம், இயற்கை உணவின் மகத்துவம், மாதவிடாய் வலிக்கான தீர்வு போன்றவைகளே மீண்டும் மீண்டும் காணக்கிடைக்கின்றன. ஆயுர்வேத நூல்களில் மருத்துவமாகவும் உணவு முறையாகவும் அசைவ மாமிச வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை வசதியாக பேச வெகுஜன ஊடகங்கள் மறுத்துவிடுகின்றன. பெரும்பாலான இணைய தளங்கள் ‘பஞ்சகர்மா’ எனும் பெயரில் எண்ணெய் தேய்ப்பு முறைகளையும், வியர்வை வரவழைக்கும் சிகிச்சைகளையும் பற்றியே எழுதுகின்றன. உண்மையான பஞ்சகர்ம சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி சிகிச்சை, உதிர சிகிச்சை, நசியம் போன்றவை நுகர்வோரை அச்சுறுத்தக்கூடும் எனும் காரணத்தினால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.


தற்கால இந்திய மருத்துவ அடுக்குகள் பற்றிய ஒரு எளிய வரைபடம் நமக்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவத்தின் பல்வேறு அடுக்குகள் இன்று நேற்று உருவானவையல்ல. செவ்வியல் ஆயுர்வேத மருத்துவமும் நாட்டு மருத்துவமும் தனித்த மரபாகவும், அதே சமயம் ஒன்றையொன்று சார்ந்தும் பிணைந்திருந்தன. காலனியவாதிகள்கூட இந்த இருவேறு அடுக்குகளைப் பிரித்தறியத் தவறினர் என டி.ஜெ.எஸ். பேட்டர்சன் பதிவு செய்கிறார். அறுவை சிகிச்சையில் நாவிதர்கள் விற்பன்னர்களாகக் கருதப்பட்டனர். இன்றளவும் அவர்களை மருத்துவர்கள் என்றழைக்கும் வழக்கம் உண்டு. ஐரோப்பாவிலும் நாவிதர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக நவீன காலம் வரையில் கருதப்பட்டனர் எனும் சித்திரம் உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது. கூர்முனைக் கருவிகளின் பயன்பாடு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவச்சிகள் ஒரு சரடு. நாவிதர், வண்ணார் வகுப்புக்களைச் சார்ந்த பெண்கள் தாய்-சேய் நல மருத்துவத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். குழந்தைகளுக்கு வரும் இசுகு (வெட்டு), நீர்க்கணை (இழுப்பு), செருகல் போன்ற சிக்கல்களை தீர்ப்பவர்களாகத் திகழ்ந்தனர்.


டாக்டர். ப்ரிஜ்ஜிட் செபாஸ்டியா சாணர்கள் பனை மரங்களில் ஏறும்போது விழுந்து அடிபடுவதைச் சீர் செய்ய உருவாக்கி வளர்த்தெடுத்த சிகிச்சை முறைதான் தென் தமிழகத்துக்கே உரித்தான வர்ம சிகிச்சை எனப் பதிவு செய்கிறார். சரக சம்ஹிதையிலும் சுசுருத சம்ஹிதையிலும் வர்ம புள்ளிகள் பற்றிய விவரணைகள் உள்ளன. அடிபட்டால் நேரும் விளைவுகள்  குறிப்பிடப்பட்டுள்ளன. நுட வைத்தியம் பாரம்பரியமாக சில குடும்பங்களால் இன்று வரை முன்னெடுக்கப்படுகிறது.


தமிழக பேருந்து நிலையங்கள் முழுக்க மூலம், பவுத்திரம் மஞ்சள் சுவரொட்டிகள் வழியாக நாம் அறிந்த மருத்துவர் பிஸ்வாஸ் ஒரு விராட புருஷன் அல்ல. எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிஸ்வாஸ்கள் வங்காளத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். எனினும் அறுவை மருத்துவம் தென்னிந்திய நாவிதர்களிடம் சென்றது. அங்கிருந்து அவர்கள் வங்காளத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்றோர் பார்வையை டாக்மர் உஜாஸ்டிக் வைக்கிறார். மூலம் மற்றும் பவுத்திர நோய்களுக்கு இவர்கள் கையாளும் முறை சுசுருத சம்ஹிதையை அடிப்படையாக கொண்டது. க்ஷார சூத்திரம் எனும் அம்முறையில் கனமான நூலில் மருந்தை தடவி பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டி புண்ணை ஆற்றுவார்கள்.


ஜோசப் ஆல்டர் அறுபது – எழுபதுகளில் இந்தியாவெங்கும் பரவலாக இருந்த ஆண்மை பெருக்கி ‘ரகசிய சிகிச்சை’ மையங்களை பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கிறார். காந்தியின் அகிம்சை கொள்கையை ஒரு முக்கியமான காரணியாக வைக்கிறார். எனினும் அது விவாதத்திற்குரியது. இன்றும் இந்திய மருத்துவத்தின்  மிக முக்கியமான சரடுகளில் ஒன்று இந்திய மருத்துவ பாலியல் சிகிச்சை மையங்கள். தாளாத குற்ற உணர்வில் தள்ளி, தாட் (dhat syndrome) சின்ட்ரோம் போன்ற இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான நோய்களை உருவாக்கிய பெருமை இந்த மருத்துவர்களுக்கு உண்டு.


கேரளத்து அஷ்ட வைத்திய குடும்பம் உண்மையில் ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் என கூறப்படுவதுண்டு. விஷ வைத்தியர்கள் இன்றளவும் கேரளத்தில் புகழோடு திகழ்கிறார்கள். சோட்டானிக்கரை, குணசீலம் போன்ற ஆன்மீக தலங்கள் பேயோட்டுதல் போன்ற மனச் சிக்கல்களை எதிர்கொள்ள உருவான மையங்கள்.


பழங்குடி மருத்துவம் மற்றுமொரு சரடு. கேரள காணிகள் பயன்படுத்தும் ஆரோக்கிய பச்சையின் (Trichopus zeylanicus) மருத்துவப் பயன் எண்பதுகளில் ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.  மருத்துவ தாவரங்களை அடையாளம் காண்பதில் கால்நடை மேய்ப்பர்களுக்கும் வனவாசிகளுக்கும் நல்ல தேர்ச்சி உண்டு என்பதை சரகர் பதிவு செய்கிறார் (சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம், அ 1, 120, 121). மருத்துவன் அடையாளம் காண்பதோடு நின்றுவிடக் கூடாது அதன் மருத்துவ பயன்களை அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். பழங்குடிகளிடம் இருந்து அறிவுப் பரிமாற்றம் செவ்வியல் ஆயுர்வேதத்தில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக முக்கியமான சான்று இது.


இந்திய மருத்துவத்தைப் புரிந்துகொள்ள அதன் வெவ்வேறு அடுக்குகளையும் அவற்றுள் இருந்த சமன்பாடுகளையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும் . திப்பு சுல்தானின் படை கொவாஸ்ஜி எனும் மாட்டுவண்டிக்காரனின் மூக்கை  போரின்போது வெட்டியது. மகாராஷ்டிரத்து குயவர் ஒருவரால் அது சீர் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த ஆங்கிலேயர்கள், தாமஸ் குருசோ மற்றும் ஜேம்ஸ் ஃபின்ட்லே, இங்கிலாந்தின் ஜெண்டில்மேன் மேகசினுக்கு 1794 ஆம் ஆண்டு இத்தகவலை கொண்டு சென்றார்கள். செவ்வியல் ஆயுர்வேத நூலான சுசுருத சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மூக்குச் சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு மிக நெருக்கமான வழிமுறையை கொண்டிருந்தது குயவரின் முறை. அக்கி போன்ற தோல் நோய்களுக்கும் விஷக்கடிகளுக்கும் மரபாக குயவர்களைக் காண செல்வது நம் வழக்கம். வழக்கொழிந்து போன இம்முறை எப்படி குயவர்களின் ஒரு சாராரிடம் மட்டும் நிலைத்திருந்தது?


அயோத்திதாச பண்டிதர் மருத்துவத்தை கைகொண்டிருந்த பூர்வ பவுத்தர்களைத் தாழ்த்தி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றனர் என்றொரு சித்திரத்தை அளிக்கிறார். வைத்தியர்களின் வீட்டில் உணவு உண்ணக்கூடாது என மனு சாத்திரம் சொல்வதாக மேற்கோள் காட்டுகிறார். பெரும்பாலான வைத்திய நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களால்தான் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது என்கிறார்.


ஜார்ஜ் டுமிசில்  பண்டைய இந்திய – ஐரோப்பிய சமூகத்தை மூன்று அடுக்குகளாக வகுக்கிறார். ப்ரோகிதர், போர்வீரர்கள் மற்றும் சாமானியர்கள். சாமானியர்கள் வேளாண்குடி மற்றும் வேறு வேறு தொழில்கள் புரியும் உழைக்கும் மக்களால் ஆனது. கென்னெத் ஜிஸ்க் அதர்வ வேதத்தின் இயல்பை ஆராயும்போது வேளாண்குடிகள் நிறைந்த மூன்றாம் அடுக்கிலிருந்தே அது உருவாகியிருக்க வேண்டும் என்கிறார். இந்த மூன்றாம் அடுக்கில் மருத்துவர்களே பூசாரிகளாகவும் இருந்தார்கள். முதன்மை அடுக்கைச் சேர்ந்த, சடங்குகளை நிர்வகிக்கும் பூசாரிகள், தூய்மைவாதத்தால் தனித்து செயல்பட்டார்கள். மருத்துவ பூசாரிகள் சுதந்திரமாக செயலாற்றினார்கள். எனினும் சடங்கு பூசாரிகள் உயர்வாக கருதப்பட்டார்கள் என்கிறார்.


வேதத்தின் மாந்த்ரீக மருத்துவ கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளி செவ்வியல் மருத்துவம் மேலெழுந்து வந்தது. எனினும், சரகம் மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் சிறிய அளவில் மாந்த்ரீக மருத்துவத்தின் எச்சங்கள் உண்டு. நன்மையையும் தீங்கும் விளைவிக்கக்கூடிய கடவுள்கள் மனிதர்களை பாதிக்கின்றனர் எனும் வேத சிந்தனையிலிருந்து புறச்சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலை பேணுதல் எனும் பார்வையை ஆயுர்வேதம் வந்தடைவது மிகப்பெரிய தாவல். ஆனால் இது எப்படி நிகழ்ந்தது?


முதல் அடுக்கின் சடங்குப் பூசாரிக்கும் மூன்றாம் அடுக்கின் மருத்துவப் பூசாரிக்கும் இடையிலான சர்ச்சையின் காரணமாக,  சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவப் பூசாரிகள் ஒரு சிறிய விளிம்புக் குழுவாக மாறி பயணித்தனர் என்கிறார் ஜிஸ்க். இது தொடர்பாக, பி.சி. குடும்பையா அதர்வ வேதக் குறிப்புகளில் இருந்து சில சான்றுகளை அளிக்கிறார். நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் இருக்கின்றன, ஆனால் அவை என்ன நிகழ்த்துமோ அதை மந்திரித்த காப்பு கட்டுவதன் மூலம் நிகழ்த்த முடியும் (A.V. 2. 9.3). மறுபடியும் A.V. 2.9.5 ல் எவர் மந்திரித்த காப்பு கட்டுகிறானோ அவனே சிறந்த மருத்துவன் எனும் குறிப்பு காணக் கிடைக்கிறது. ஆக வேத காலம் தொட்டே மாந்த்ரீக மருத்துவமும், பகுத்தறிவு மருத்துவத்தின் முன்னோடி வடிவமும் இரு தனித்த சரடுகளாக திகழ்ந்தன என்பது புலப்படுகிறது. மனு சாத்திரத்தில் வேதமும் மந்திரங்களும் அறிந்த வைதிக மருத்துவனுக்கும் பிஷக், அம்பஷ்தா (நாவிதர்களை அம்பட்டன் என்றழைக்கும் வழக்கம் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது) சிகித்சக போன்ற பெயர்களில் அறியப்படும் வேற்று பிரிவு மருத்துவனுக்கும் இடையிலான சர்ச்சைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு வெளியேறிய பயணிக்கும் துறவிகளில் பல பவுத்த பிக்குகளும் அடங்குவர். அவர்களே புதிய அறிதல்களை உருவாக்கினர். பல்வேறு மருத்துவ தகவல்களை தொகுத்தனர். சட்டகங்களை வடிவமைத்தனர் என்கிறார் ஜிஸ்க் .


துவக்க கால பவுத்த  நூல்களில் மனிதனுக்கும் இயற்கைக்குமான புரிதல் பற்றிய கருத்துக்கள் ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளோடு வெகுவாக நெருங்கி இருக்கின்றன. சுய மறுப்புக்கும் அதீத ஈடுபாடு எனும் இரு எல்லைக்கும் நடுவே மத்திம மார்க்கத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் இடையிலான சமநிலையைப் பேணுதல். பவுத்தத்துடன் மருத்துவம் இணைந்தே பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. பின்னர் முறைப்படுத்தபட்டு, பிராமணர்களால் தொகுக்கப்பட்டது, மருத்துவம் முதல் அடுக்கைச் சேர்ந்தவர்களால் கைகொள்ளப்பட்டது எனும் சித்திரத்தை கென்னெத் ஜிஸ்க் பல்வேறு தரவுகளோடு நிறுவுகிறார்.


முக்கியமான ஆயுர்வேத நூல்களை இயற்றியவர்கள் என்றொரு வரிசை உருவாக்கினால் அவர்கள் பெரும்பாலும் பிராமண – க்ஷத்ரிய வர்ணங்களை சேர்ந்தவர்களாகவே திகழ்ந்தனர். சரகர் கனிஷ்கரின் அவையில் இருந்திருக்கலாம் என்றொரு வரலாற்று ஆவணம் கூறுகிறது. சுசுரதர் காசி அரசன் திவோதாச தன்வந்தரியின் வழி வந்தவர் என கூறுகிறார். பிராமணரா பவுத்தரா என வாக்பட்டரின் அடையாளம் சார்ந்து பல்வேறு குழப்பங்களிருக்கின்றன. சக்ரபாணி தத்தர், ஷாரங்கதரர், பாவ மிஸ்ரர் துவங்கி முகலாய அவையில் இருந்த தோடரமல்லர் வரை பலரும் பிராமணரே. அரச மருத்துவர்களாக அல்லது அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். சரகர் சுசுருதர் போன்றவர்கள் பெயர்கள் காரணப் பெயர்களை போல் உள்ளதால் அவர்கள் துறவிகளாக இருக்கவும் கூடும். நாகர்ஜுனர் ஆயுர்வேதத்திற்கு பங்களிப்பாற்றிய மிக முக்கியமான பவுத்தர். கல்யானகாரக எனும் நூல் சமணரால் எழுதப்பட்ட ஆயுர்வேத  நூல்.


வேதகாலத்தில் புலப்படும் சடங்கு மருத்துவம்- பகுத்தறிவு மருத்துவம் இருமை பிற்காலங்களில் செவ்வியல் மருத்துவம்- மக்கள் மருத்துவம் எனும் இரு பெரும் போக்குகளாக பிரிகிறது. மக்கள் மருத்துவத்தில் இருந்தே செவ்வியல் மருத்துவம் உருவாக முடியும். மக்கள் மருத்துவம் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியது. நிலப்பரப்பு எங்கும் அலைந்து திரிந்து மருத்துவ தகவல்களைப் பரப்பி ஆவணப்படுத்தும் அலையும் துறவிகளால் ஆன அடுக்கு அதில் முக்கியமானது. பிற்காலங்களிலும் இந்த அடுக்கு தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது. இவ்வடுக்கில் இருந்தே ஹத யோகமும், தாந்த்ரீகமும், இரசவாதமும் உருவானது. பின்னர் இவை மருத்துவத்துடன் முயங்கி மைய நீரோட்டத்தில் இணைந்தன. சித்தர்கள் மக்கள் மருத்துவச் சரடைச் சார்ந்தவர்கள் என உறுதியாகச் சொல்லலாம். இரசவாதமும் ஹத யோகமும் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தின. சாதி அடுக்குகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதை மீறிச் செல்பவர்களாகவே திகழ்ந்தார்கள்.


ஒட்டுமொத்தமாகக் காண்கையில் தொடர்ந்து புதியவற்றை கற்று பரிசோதிக்கும் அறிவு முனை ஒரு சரடாகவும் நிலை பெற்றவை அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி முறைப்படுத்தும் அறிவுக் களன் ஒரு சரடாகவும் விளங்கி, பிரமிக்கத்தக்க வகையில் இந்திய மருத்துவ வலைப்பின்னலை உருவாக்கி உயிர்ப்புடன் வைத்திருந்த உண்மை புலப்படுகிறது.  ஆனால் இன்றைய உலகளாவிய சூழலில், மேற்கத்திய மருத்துவ முறை மட்டுமே இவ்விதத்தில் செயல்படுவதைக் காண்கிறோம். அரசு ஆதரவு, மக்கள் வரவேற்பு இரண்டும் குன்றிய நிலை மட்டுமல்ல, மருத்துவர்களே தன்னம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் பரிசோதனைகளில் ஈடுபடுவதோ, புதியனவற்றைக் கற்பதோ, தம்மைச் சுற்றியுள்ளவற்றை தொகுத்து ஆவணப்படுத்துவதோ மேற்கத்தைய  மருத்துவ முறைகளுக்கு வெளியே சாத்தியமா என்று தெரியவில்லை. அறிவு முனை மழுங்கி, அறிவுக் களம் வரண்ட இச்சூழலில் சித்த, ஆயுர்வேத முறைகள் மீண்டும் இந்தியாவில் தலையெடுக்குமா என்பதே இன்று கவலைக்குரிய கேள்வியாக இருப்பது நிதர்சனம்.


இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள வைத்தியர் ப்ருஹஸ்பதி திரிகுணா 1920 ஆம் ஆண்டு பிறந்து 2013 ஆம் ஆண்டு மறைந்தவர். காலனிய காலகட்டத்திற்கும் விடுதலைக்கும், உலகமயமாக்கல் காலத்திலும் வாழ்ந்தவர். பத்ம விருதுகளை பெற்றவர், மகரிஷி மகேஷ் யோகியின் ஆயுர்வேத பிரிவை சர்வதேச மக்களிடம் கொண்டு சென்றவர். இக்கதையின்தர்க்க சாத்தியத்தையும், உண்மைத்தன்மையையும் விட்டுத்தள்ளிவிட்டு நோக்கினால் இந்த தொன்மத்தின் வடிவம் தென்படும். இத்தகைய தொன்மங்கள் ஏன் அக்காலகட்டத்து இந்திய மனதிற்கு தேவையாக இருந்தது? ஓர் மரபான எளிய இந்திய மருத்துவன் பகுத்தறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சியால் உச்சத்தில் நிற்கும் மேற்கத்தியவனை வென்று செல்வது. காமா பயில்வான் உடல் ரீதியாக எதை நிகழ்த்தி காட்டினாரோ அதை அறிவு ரீதியாக திரிகுணா நிகழ்த்தி காட்டினார். நல்லதொரு டேவிட் கோலியாத் கதை. திரிகுணா ஒரு தனி மனிதர் அல்ல. இந்த கதையை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களுடனும் சூழல்களுடனும் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. பாய்ச்சலுக்கான ஏக்கம், தன்னை நிறுவிகொள்வதற்கான துடிப்பு. ஆனால் அதற்கான வழிமுறைதான் புலப்படவில்லை.


இந்திய மருத்துவ முறைகள் தம் முதல் நிலை இடத்தை மீண்டும் எட்டுவதானால், அதற்குரிய இந்திய அறிவுச் சூழல் உருவாக வேண்டியது அவசியம். அப்போதுதான், சாத்திர அடிப்படையிலான மரபு ஆயுர்வேதம், பள்ளிக் கல்வி வழி புகட்டப்படும் நவீன ஆயுர்வேதம், பெருவாரி மக்களைச் சென்றடையும் வணிக ஆயுர்வேதம், மக்கள் மத்தியில் பரவலான அறிவு ஏற்பட்ட காரணத்தால் தன்னார்வத் தேர்வாகப் பயன்படும் ‘கை மருத்துவ’ ஆயுர்வேதம் ஆகிய நான்கு பயன்பாட்டு தளங்களிலும் ஆரோக்கியமான ஆயுர்வேத வளர்ச்சியை நாம் காண இயலும். இதற்கு மிக முக்கியமான ஒரு அறிவுச்சட்டக நகர்வு (paradigm shift) ஏற்பட்டாக வேண்டும். அதை எதிர்நோக்கியே இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்- 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு மரபார்ந்த சீன மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

Monday, September 28, 2020

யதார்த்தங்களின் சங்கமம் - ரா. கிரிதரன் - நீலகண்டம் குறித்து

 சொல்வனம் இணைய இதழில் நண்பர் எழுத்தாளர் கிரிதரன் 'நீலகண்டம்' குறித்து  எழுதியுள்ள விமர்சன கட்டுரை. நன்றி  

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக நீலகண்டம் நாவல் உருவாகியுள்ளது. பல காலங்களாக நம்மிடையையே இருந்துவந்து சமகாலத்தில் நாம் ஏற்றுக்கொண்டு ஆராயத் துணிந்திருக்கும் பல துறைகளில் ஆட்டிஸ ஆய்வுகள் இன்று கேன்சருக்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன. அதைப் பற்றி மிக உணர்வுபூர்வமான புனைவாகத் தந்தமைக்கு முதலில் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.



ஆட்டிஸம் பாதித்த தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கும்போது, பெரிய கவலைகள் ஏதுமற்ற தகப்பனாகச் செந்தில் அறிமுகம் ஆகும்போதே கதைச் சூழல் வாசகர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பிவிடும். வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் செந்திலின் அலட்சியத்துக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்? மனைவி மீதான வெறுப்பு, வேறு ஒரு பெண்ணோடு காதல் எனத் தொடங்கிப் பல காரணங்களை நாம் நினைக்க முடியும். தத்து எடுத்த குழந்தை என வாசகர் தெரிந்துகொள்ளும்போது கதையின் சிக்கல்கள் வேறு தளங்களை அடைகின்றன. ஒரு நவீனத்துவ மனம்கொண்ட ஆண் மற்றும் பெண்ணுக்குப் பிள்ளைப்பேற்றில் சிக்கல் இருப்பதென்பது நான்கு சுவர் வாழ்க்கை முறையில் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடியது. நகரச் சூழலில் தேற்றி ஆறுதல் தரக்கூடிய உறவுகள் அருகில் அமையாது. அதுவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செந்திலும் பிராமண சமூகத்தைச் சேந்த ரம்யாவும் பெற்றோருடன் சுமூகமான உறவைப் பேண முடிவதில்லை. ரம்யாவின் அம்மா அவளை முற்றிலும் புறக்கணிக்கிறார். பெண்ணுக்குத் தேவையான உணர்வுபூர்வமான அரவணைப்பு ரம்யாவுக்குக் கிடைக்கவில்லை. இத்தனை சிக்கல்களும் நாவலுக்கு வலுவான கட்டமைப்பைத் தந்திருக்கின்றன.


ஆட்டிஸம் பாதிப்புக்கு ஆளான வர்ஷினி செந்தில் எனும் பெண், விலங்கியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம்பெற்று விலங்கியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக வேலை செய்துகொண்டே எழுதிய முதல் நாவல் என நீலகண்டம் கடைசி பக்கத்தில் நமக்குத் தெரியவருகிறது. குழந்தைகளின் அக உலகில் வரும் விளையாட்டு மாய உலகங்கள், அப்பாவுக்கு இருந்த அலட்சியம், அம்மாவுக்கும் அவள் பிறந்த வீட்டாருக்கும் இடையே இருந்த சிக்கல் என அனைத்தையும் ஆட்டிஸக் குழந்தையின் பார்வையில் பதிந்துள்ள சம்பவங்கள் போன்ற மிகவும் நுணுக்கமான இடங்களை ஆசிரியர் எழுதியுள்ளார்.


சுனில் எழுதிய அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்புக்குப் பின்னர் வெளியான முதல் நாவல் இது. சிறுகதை உலகில் அவர் பிரதானமாகக் கையாண்ட கருக்களே இந்த நாவலிலும் வருகின்றன. நம் உயிர் பயனற்ற ஒன்றாக எப்போது பிறருக்கு மாறுகிறது எனும் ஆதாரக் கேள்வியிலிருந்தே வர்ஷினியின் உலகைப் புரிந்துகொள்ளலாம். சுனில் எழுதிய ‘வாசுதேவன்’ சிறுகதையில் இதே கருவைக் கையாண்டிருந்தாலும், வர்ஷினியின் உலகில் இந்தக்கரு மேலும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பிறந்த உடனேயே தேவையற்ற உயிராக உதாசீனப்படுத்தப்பட்டுக் காப்பகத்தில் இருப்பவள் வர்ஷினி. தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தில் மற்றொரு குழந்தை பிறந்ததும் ரெண்டாம் முறையாகத் தேவையற்றவள் ஆகிறாள். ஆட்டிசக் குழந்தையின்மீது இந்த நிராகரிப்பு மேலும் பல வழிகளில் பாதிப்பைச் செலுத்தலாம் எனும் சாத்தியத்தையும் நாவல் கையாள்கிறது. வர்ஷினி தனக்குள் ஒரு மாய உலகைச் சிருஷ்டித்துக்கொள்கிறாள்.


நீலகண்டம் நாவல், வாசிப்புக்குப் பின்னான பல சிந்தனைகளைத் தூண்டிவிட்ட படைப்பு. பிள்ளைப்பேறு வாய்ப்பில்லாத தம்பதியினர் தத்தெடுத்தபின் சந்திக்கநேரும் சிக்கல்களில் பலவகை உண்டு. பொதுவாக அவர்கள் சந்திப்பது சமூகச் சிக்கல்கள் சார்ந்தவையாகவோ குழந்தையின் உளச்சிக்கல் களமாகவோ இருக்கும் வாய்ப்புகளே அதிகம். இந்த நாவலில் தத்தெடுத்த பெண் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு இருப்பது தெரிந்தபின்னர் பெற்றோரின் மனநிலை அடையும் ஊசலாட்டத்தை விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளார். இவர்களுக்கான சிக்கல் பல வலைப் பின்னல்களைக் கொண்டது. ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால் வரும் பெற்றோரின் விலகலைச் சந்திக்கும் பெண். பிள்ளைப் பேறில்லாமல் இருவரும் கூடுதல் நேரங்களில் அதிக பொறுப்புள்ள வேலைகளைத் தத்தமது அலுவலகத்தில் எடுத்துக்கொண்டதால் வரும் மன உளைச்சல். தொடர்ந்து அது தரும் சோர்வு இட்டுச்செல்லும் உறவு தரிக்க இயலாமை என ஒரு தொடர் சங்கிலியாக இருவரையும் சிக்கல்கள் தொடர்கின்றன.


தத்தெடுப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை மீறி ஒரு காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருந்த பிணக்கும் உதாசீனமும் தீரத் தொடங்கும் நேரத்தில் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். மனித உறவில் ரத்த பந்தத்தை மீறி நிகழும் கரிசனத்துக்கு வாழ்வில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் பெருமதிப்பு உண்டு. தாய்-மகன், தந்தை -மகள், தாத்தா-பேத்தி எனும் ரத்த உறவுகளுக்கு இருக்கும் ரத்தபந்தத்தின் தொடர்ச்சிக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் உறவுகளில் சுயநலம் பெரும்பங்கு வகிக்கிறது. சொந்தக் குழந்தை பிறந்தபின் ரெண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கும் காலகட்டம் முன்னர் நம் சமூகத்தில் இருந்துவந்துள்ளது என்றாலும் இன்றைக்கு வெகு சிலரே அதைச் செய்கிறார்கள். ஒரு விதத்தில் தங்கள் இருப்பைத் தொடரவைக்கும் ஆசையே இதற்குக் காரணம் என்றாலும் வீடுபேற்றுக்குப் பிள்ளை குட்டியோடு முழு கிரகஸ்தனாக இருக்கவேண்டிய கட்டாயமும் சமூக அழுத்தத்தையும் உருவாகிறது.


இந்த நாவலில் பல நாட்டார் கதைகளும், கர்ண பரம்பரைக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் பேசலாம். ரெண்டாயிரத்துக்குப் பிறகான இலக்கிய மற்றும் சமூகச் சூழலில் குழந்தைமை குறித்துப் பெரிதும் பேசப்பட்ட கருத்து என்றால் அது ஆட்டிஸம் எனலாம். ஆட்டிஸத்துடனேயே கூடவே வரும் மிகைப்படுத்தல்கள் அந்தக் குறைபாடுக்கு ஒருவித மாயத்தன்மையை அளித்துவிட்டன. ஐன்ஸ்டீனும், நியூட்டனும், மொசார்டும் இந்தக் குறைபாடுகளோடு பிறந்ததாலேயே அவர்கள் விசேஷத் திறமையுடன் இருந்தார்கள் எனும் பொய்யான எதிர்பார்ப்போடு வாழும் பெற்றோராகச் செந்திலும் ரம்யாவும் இருக்கிறார்கள்.


ஆட்டிஸம் குறைபாடோடு இருக்கும் வருவைத் தத்தெடுப்பதில் தொடங்கும் சிக்கல், அவள் மீது அன்பு பாராட்டாமல் ஒதுக்கி வைப்பதில் உச்சம் கொள்கிறது. செந்திலுக்கும் ரம்யாவுக்கும் ரெண்டாவதாகப் பிறக்கும் சாகர் மீது அவர்களது அன்பு மடைமாறும்போது வரு தன்னுடைய உலகினுள் முழுமையாக ஐக்கியம் கொள்கிறாள். அந்தத் தேசம் ‘அக்‌ஷரா’. அந்தத் தேசத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிகளும் இல்லை.


நாவலின் கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் ஆசிரியரின் சில குறிப்பிட்ட கூறுமுறைத் தேர்வால் அமைந்துள்ளது என்பதை இரண்டாம் முறை படிக்கும்போது உணர்ந்தேன். சதா நழுவிச்சென்றபடி மையச் சரடிலிருந்து விலகிச்செல்லும் கதைகள் புனைவு உத்தியை இரு விதங்களில் கையாளும். மையத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலவித புனைவு முடிச்சுகளைப் போட்டபடி கதையை ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலாக மாற்றிவைக்கும். இன்னொரு வகை, கருவின் சிக்கலான முடிச்சை வாசகர் பின்தொடர முடியாதபடி பலவித உபகதைகள் வழியாக புதிர்ப்பாதைகளைப் போட்டபடி இருக்கும். இரண்டாம் வகையில் விரிந்துகொண்டே சென்றபடி இருக்கும் முப்பரிமாணப் பாதையில் வாசகரின் கதை உருவாக்கும் திறமை சிறு சிறு மையங்களை உருவாக்கியபடி செல்லும். கற்பனை வளமிக்க வாசகரால் சிறு சிறு உபகதைகளையும் புது கருக்களையும் நெய்தபடி கதையை வாசிக்கமுடியும். அப்படிப்பட்ட உபகதைகளின் முடிச்சுகளில் ஆதாரமான கருவுக்கான மையத்தை அவனால் எட்டிப்பிடிக்க முடியலாம். இது ஒரு விளையாட்டு மட்டுமே. நகுலனின் வாக்குமூலம், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ், உள்ளிருந்து சில குரல்கள், பா.வெங்கடேசனின் வாரணாசி எனப் பல உதாரணங்கள் பின்னதுக்கு உண்டு. இரா.முருகனின் அரசூர் வம்சம், சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி முதல் சமீபத்தில் வந்த சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல் வரை முன்னதுக்கான உதாரணங்கள் பல உண்டு.


நீலகண்டம் இந்த இரு போக்குகளில் பலவீனங்களை அதிகப்படியாக எடுத்துக்கொண்டு பலங்களைக் குறைவாகக் கையாண்டிருக்கிறது. தத்து எடுத்துக்கொள்ளும் குழந்தைக்குப் பிறகு முறையாகக் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை எனும் குழப்பத்துடன் முதல் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு என்பது மிகவும் தனித்துவமான மற்றும் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கக்கூடிய மிகச் சிறப்பான கரு. நிகழ்கால உளச் சிக்கல்களையும், அவசர கதி வாழ்க்கை முறையையும் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மிக நல்ல புனைவம்சமுள்ள கதை நீலகண்டத்தில் இருக்கிறது. இலை மறைவுகளில் வெளிப்படும் நிலவு வெளிச்சம்போல (எத்தனை பழைய உருவகம், சொற்பிரயோகம்!) கதை தன் போக்கில் சில புதிர்ப்பாதைகளுக்கு இடையே ஆங்காங்கு வெளிப்படுகிறது. புனைவு எழுத்தாளனாக இதற்கு இரண்டு காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது – மையச் சிக்கலிலிருந்து வெளிப்படக்கூடிய புனைவு ஓட்டத்தை நாவலில் அமைக்க முடியாதபடி எழுத்தாளனே சிக்குண்டிருப்பது மற்றும் நேர்கோடாகக் கதை ஓட்டத்தை அமைக்காது கருவுக்குப் பின்னான தத்துவார்த்த அலசல்களை மனித வரலாறு மற்றும் சிந்தனை மீது ஏற்றிப் பார்க்க நினைக்கும் எழுத்தாளரின் மன அமைப்பு. முடிவுகளை முன்வைத்தே ஆகவேண்டும் எனும் தலைவிதி நாவலாசிரியனுக்குக் கிடையாது. ஆனால், அதற்கான சாத்தியங்களை வாசகன் ஊகிக்கத் தேவையான கச்சாப்பொருள் நாவலில் இருக்கவேண்டியது அவசியம். அல்லது, தத்துவ விசாரத்தை முன்வைக்க நினைத்தால் மிகக் கச்சிதமான தர்க்க அமைப்பு கதையில் இருக்கவேண்டியது அவசியம். இக்காலகட்டத்தின் உளவியல் சிக்கல்களையும் அவற்றை ஒரு நவீன மனம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், ஆட்டிஸம் எனும் குறைபாடு குறித்த நவீன ஆய்வுகளையும் முன்வைக்கும் தத்துவ அலசல் நாவலுக்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான சாளரத்தைத் திறந்து வைத்திருக்கும்.


நாவலின் பெரும்பான்மையான பகுதிகள் நம் மரபுக் கதைகளில் குழந்தை வளர்ப்பும் பலியும் உறவுகளை ஏற்கவும் எதிர்க்கவும் நினைக்கும் மனதையும் புராணக் கதைகள் வழியாகவும் மிக மேலோட்டமாகத் தொட்டுக் காட்டுகிறது. மையத்தை அலசும் கதைகள் நவீன மனமும் பழைய மனமும் முட்டி நிற்கும் இடங்களாக அமையாமல் புராணக் கதைகளாகவும், குழந்தைகளின் உலகமாகவும் இருப்பது நாவலின் பலவீனம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் சில உறவுகளையும் சந்தர்ப்பங்களையும் உருவகப்படுத்தி நீலகண்டம் எனும் தலைப்பு வைத்திருப்பது கதையின் மையத்தோடு அழகாகப் பொருந்தியுள்ளது. ஆனால், அதை நீலகண்டனின் கதையில் புராணக் கதையும் தத்துவமும் இரண்டரக் கலந்திருப்பதை உருவகம் சந்திக்கத் தவறியுள்ளது. இந்த இரு எல்லைகளில் ஒரு சூழலுக்கும் தருணத்துக்கும் பொருந்திவரும் கதையம்சத்தை எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியதாகக் காட்டும் பார்வை கதையில் திரளவில்லை.


தலைப்பிலேயே ஓர் உருவகமாகத் தொடங்கும் கதை மேலதிகமான படிமங்களை உருவாக்கவில்லை. செந்திலின் காமக் கீற்றுகள் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும் அவை கதையின் பின்பலமாகக் குற்ற உணர்ச்சியின் ஊற்றாக மாறியிருக்க வேண்டிய இடம். அப்படி அமையாமல் விட்டது செந்திலின் குணவார்ப்பு வளரவிடாமல் தடுத்துவிட்டது. நச்சுப்பர்வம் எனும் பகுதி நாவலின் மையத்தோடு விலகி அமைந்திருக்கிறது. வாரிசு இல்லாதவர்கள் பல பரிகாரங்களை நிவர்த்தி செய்தபின் பிறக்கும் குழந்தையிலிருந்து எப்படி விலகிப்போகின்றனர் எனும் இடத்தில் மையச்சிக்கல் தொட்டுச் சென்றாலும், பல முக்கியமான கிளைக் கதைகளில் நச்சுப்பர்வம் சற்றே விலகி இருப்பதை இரண்டாம் வாசிப்பில் உணர முடிந்தது.


ஆட்டிஸம் குறித்து இப்போது பல புரிதல்கள் வந்தாலும், இக்குறைபாடு பற்றிய ஆழமான சித்திரத்தைக் கொடுத்த முதல் நாவல் எனும் வகையில் ஆசிரியர் பாராட்டுக்குரியவர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆட்டிஸத்தின் உளவியலுக்குள் ஊடுருவப் பார்க்கும்தோறும் சிக்கல் பல வகையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. கேன்சர்போல ஒவ்வொரு ஆட்டிஸ நிறமாலையும் குழந்தையின் தன்மைக்கேற்பத் தனித்துவமானது. புனைவில் இந்த சாத்தியங்களைக் கையாண்டிருப்பதில் நாவல் வெற்றிபெற்றுள்ளது எனச் சொல்லலாம். கூறல் முறையில் மேலும் பல திறப்புகளைக் கொண்டிருக்கலாம் எனும் ஆதங்கம் முழு நாவலாக வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. பல இடங்களில் உணர்வுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்பட்டதாகத் தோன்றியது – குறிப்பாக கரையான் அரித்த வீடு, வர்ஷினி காணாமல் போகும் கடைசிப் பகுதி எனச் சில இடங்களைக் குறிப்பிட முடியும். செந்திலின் குணவார்ப்பு அதிகம் மாறாமல் இருந்ததும் அப்பாத்திரத்தின் மன ஓட்டங்களைத் தொடரத் தடையாக இருந்தது.

Sunday, September 20, 2020

விஷக் கிணறு - கிஷோர் கடிதம்

 அன்புள்ள சுனீல்,

விஷக் கிணறு' வாசித்தேன். அபாரமான குறுநாவல்.

 உங்கள் 'பேசும் பூனை' நான் வாசித்ததில் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று, பல நாள் அதன் தாக்கம் நிலைத்தது, குறிப்பாக அதன் இறுதி தற்கொலை கணத்தில் வரும் நினைவுக் கொப்பளிப்புகள்.... நினைத்தால் இப்போதும் உடல் சிலிர்க்கிறது....


இப்போது விஷக் கிணறு. ஒரு குறுநாவலில் வானின் பொன்மஞ்சள் குருவிக்கும் ஆழ்விஷக் கிணற்றுக்குமான மானுட இனத்தின் ஊசலாட்டத்தைத் தொட்டுக் காட்டியுள்ளீர்கள். 


கதைகளில் சொல்லப்படாமல் விடப்பட்டவற்றின் பங்கு மிக முக்கியமானவை, அதன் முழு ஆற்றலை இக்கதையில் உணரமுடிகிறது. நான் வாசித்து முடித்த உடனே இக்கடிதத்தை எழுதுகிறேன். என்னால் சரியாகத் தொகுத்து தர்க்கப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மறு வாசிப்புகளில் கைகூடலாம். ஆனால் இவ்வாசிப்பு அனுபவம் என்னுள் அப்படியே கனவாக நீடிக்கவே விரும்புகிறேன்.


நான் இயற்பியல் மாணவன், அதன் வரலாற்றை அறிவதிலும் ஆர்வம் உடையவன். அணுகுண்டு சோதனையின் போது Oppenheimer "சதகோடி நூறாயிரம் சூரியர்களின் ஒளி" என்று கூறினார் என்று வாசித்துள்ளேன். ஆனால் இக்கதை அவ்வனுபவத்தைப் பலமடங்கு உணர்வுப்பூர்வமானதாக ஆக்கியது. Oppenheimerஐப் பற்றி இப்படி ஒரு கதை தமிழில் வந்துள்ளது என்று யாராவது கூறி இருந்தால் சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன். நிறைய புதிய பெயர்களையும் அறிந்துகொண்டேன். இக்கதைக்காக உங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.


உலகப்போர் காலகட்டத்தில் அறிவியல்(குறிப்பாக இயற்பியல்) கட்டவிழ்த்துவிடப்பட்டு அதன் முழு ஆற்றலையும் வெளிக்காட்டியது. அதன் உடனடி விளைவுகள் நஞ்சாக இருந்தாலும், இன்று நவீனத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் புரியும் சாதனைகளின் ஊற்று மூலம் அக்காலகட்டமே.


லௌகீகம் - தொன்மம் - கலை - அறிவியல் , என மானுடத்தின் அத்தனை கோணங்களிலும் அதனுள் ஊரும் விஷக்கிணற்றை எழுத்தாக்கிய இக்குறுநாவல், எனக்கு மகத்தான வாசிப்பனுபவத்தை அளித்தது. அதற்கு மிக்க நன்றி.



தங்கள்,

கிஷோர் குமார்

திருச்சி.

[பின் குறிப்பு : உங்கள் பழுவேட்டரையர் கதைகளின் ரசிகன் நான். நானும் என் தங்கையும் அவற்றை வாசித்து (குறிப்பாக 'நாவல்முகாம்') விழுந்து விழுந்து சிரித்துள்ளோம். அவற்றைப்பற்றி இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்.]


Friday, September 11, 2020

விஷக் கிணறு - ஒரு வாசிப்பு- ஸ்வேதா

 

விஷக் கிணறு 


ஜெவின் இலக்கிய முன்னோடிகள் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  "வாழ்க்கையின் ஒரு தளம் மூலம் அடையப்படும் உண்மை மறு தளத்தால் மறுக்கப்பட்ட படியே உள்ளது. அப்படி பற்பல உண்மைகளை அதன் பரப்பில் மோதவிடும் ஒன்றாகவே எப்போதும் பெரிய படைப்பு உள்ளது." என்னும் வரியை உள்வாங்கிய அதே நாளில் "விஷக் கிணறு" வாசித்தேன். 

"தற்செயலாக ஏதோ ஒரு கதவைத் திறப்பது அல்லவா லாகிரியின் இயல்பு?" என அவதானிக்கும் கவிஞனுக்குத் தான் விழுந்து கொண்டிருக்கும் கிணறு குறித்த பிரக்ஞை அருங்காட்சியக  அனுபவம் வழி  கிடைக்கிறது. 

விஷக் கிணற்றின் வதையை எந்நேரமும் உணர்பவர் மீனாவின் அப்பா. அந்த விஷக் கிணற்றின் இருப்பை அவர் மூலம் தற்செயலாக அறிந்து கொள்பவன் அக்கவிஞன்.  கவிஞனாக அல்லாமல் கலகக்காரனாக நினைவுக் கூறப்படும் அவனுக்கு ஒரு வகையில் அந்த கிணறு    தேவைப்படுகிறது. உருவகக் கதையில் வரும் இறைக்கு அந்த கிணறு தேவைப்படுவது போல.  அவன் கைகள் படைக்க  எழுவதும்  அவ்விசையிலே. 

சமகால அவதானிப்புகள், கூரிய அங்கதம், நுண்ணிய சித்தரிப்பு என ஈர்ப்பது மலேசியா சார்ந்த கதைச் சரடு. இதற்கு எதிர் தளத்தில் தன் கவி நடையால்  ஈர்க்கிறது ஆதி யுகத்தில் விரியும்  உருவகக் கதை.  

பொன் மஞ்சள் குருவி ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒவ்வொன்றாகக் காட்சியளிக்கிறது. வெளிர் நிற கண்ணனை வரலாற்றுப் பாவையாகப் பாவிக்கும் லாஸ் அலமோஸ் பகுதியிலும் அக்குருவி தன் அழைப்பை விடுக்கிறது. மன்ஹட்டன் மாந்தர்களை ஆழத்திலிருந்து எழும் தீப்பிழம்பென ஒவ்வொருவறையும் அவ்விஷக் கிணறு சீண்டுகிறது. குறுநாவலின் மையம் இப்பகுதியில் முழுமை கொள்ளக் காண்கிறேன். 

"விஷக் கிணறு” - வரலாற்றின் ஒரு சிறு துளியைப் பிரவாகத்தின் ஒரு பகுதியாக அணுகிச் சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும் கதை.


ஸ்வேதாவின் வலைப்பூ 

Tuesday, September 8, 2020

விஷக் கிணறு - குறுநாவல்

வல்லினம் செப்டம்பர் மாத இதழில் வெளியான குறுநாவல். 

 1

சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால்  இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன்.

Poisoned Well

“ஃபோர் வில்லர் எஸ்டேட் ரோட்டுக்கு தோதன காடிப்பா” என சிரித்தபடி மீனாவும் பிள்ளைகளும் இறங்கினார்கள். ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களுக்கு இடையே கார் நிறுத்த வரையப்பட்டிருந்த வெள்ளை எல்லைகளுக்குள் கச்சிதமாக  வண்டியை நிறுத்தியிருந்தான் நவீன். பெயர்ப் பலகையைப் படித்தபோது கோலா சிலாங்கூரில் மெலாவாத்தி மலை பிரபலமானது என நேற்றிரவு ஹரீஷ் சொன்னது நினைவுக்கு வந்தது.  காரின் உயரம் காரணமாக ஏறுவதும் இறங்குவதும் சற்று சிரமமாக இருந்தது. பெரிய அளவு சக்கரங்களுடன் உயரமாக இருந்தது வண்டி. நவீன், மீனாவின் கணவன். காரின் கதவடைக்கும் ஓசை கேட்டதும் எங்களை நோக்கி திமுதிமுவென குரங்குகள் பாய்ந்து வந்தன. சட்டென பார்க்கும்போது முதுமலை காடுகளில் உள்ள சுள்ளிய சாம்பல் குரங்கின் தோற்றம். அடர்தாடி மட்டும் இல்லை.


குரங்குகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப் பழங்களை விற்றுகொண்டிருந்த மலாய்க்காரனிடம் நவீன் பழங்களை வாங்கி வந்ததும் ஹரீஷும் பிரியாவும் அவனிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டு ஓடினார்கள். குழந்தைகள் மீது அவை பாய்ந்து ஏறின. ஹரீஷ் கையை உயர உயரத் தூக்கி விளையாட்டுக் காட்டினான். குரங்குகள் எம்பி எம்பி பழங்களைக் கைப்பற்றின. பிரியாவின் முதுகில் குரங்குகள் தொற்றி ஏறின. அவள் கூச்சல் இட்டபடி பழங்களை நீட்டிக்கொண்டிருந்தாள். மீனாவின் தலை மீதேறி ஒரு குரங்கு அமர்ந்து வாழைப்பழத்தை நிதானமாகத் தின்றுகொண்டிருந்தது. கண்ணாடியை பிடித்து இழுத்துவிடும் எனும் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அவளுக்குள்ளும் மகிழ்ச்சி கொப்பளித்து முகத்தில் வெளிப்பட்டது.


“அப்பா… நீங்களும் கொடுங்க, ஒன்னுஞ்செய்யாது”என்றாள் என்னிடம். நவீனின் இரண்டு கைகளிலும் இரு குரங்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. கறுக்கும் வெள்ளிப்பாத்திரத்தின் நிறம் என குரங்குகளைப் பார்த்ததும் தோன்றியது. சாம்பல்நிறக் கம்பிகள் வெயில் பட்டு மினுங்கின. முகம் மட்டும் கறுத்திருந்தன. மனிதர்களுக்கு காட்டுவதற்கென அம்முகத்தில் ஒரு அப்பாவித்தனமும் போட்டியிடும் சக குரங்கிற்கு காட்டுவதற்கென ஒரு எரிச்சல் முகமும் வைத்திருந்தன.


குரங்குகள் இயல்பாக ராமப்பனின் நினைவுகளை கொணர்ந்தன. ராமப்பன் தோட்டக் கிணறில் குரங்குகள் கொன்னிப் போய் விரைத்து மிதந்தது  இப்போது நடப்பதுபோல் கண்முன் விரிகிறது. நானும் இன்னும் பல சிறுவர்களும் தோட்டத்திற்கு எல்லோரோடும் சேர்ந்து ஓடினோம். ஊருக்குள் எப்போதுமே குரங்குகளின் தொல்லை உண்டு. அவற்றை விரட்ட எல்லோர் வீடுகளிலும் வேட்டு கையிருப்பில் இருக்கும். வேட்டு வீசப்பட்டால் இரண்டு நாட்களுக்கு அண்டாது‌.  ராமப்பன் நெடுங்காலம் மலேசியாவில் இருந்து பெரும்பணத்துடன் ஊர் திரும்பியவன். முப்பது மைலுக்கு அப்பால் உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவன். நொடிந்து கிடந்த ஆறுமுக சேர்வையின் தோட்டத்தை வாங்கினான். மா, பலா, தென்னை, வாழை என கடினமாகப் பாடுபட்டான். குரங்குகளை அவனால் பொறுக்க முடியவில்லை. வாழைக்குலைகளைச் சரித்தன. மாமரங்களைச் சூரையாடின. ஊர்ப் பொதுவில் இதைப்பற்றிப் பேசத் தொடங்கும்போதெல்லாம் “வேட்டு போடு… காவலுக்கு ஆள் நிறுத்து” என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.


“உள்ளத சொல்லுங்க… நான் அசலூரான்… இம்புட்டு காசு பாக்குறேனான்னு வவுத்தெரிவு… சும்மா ஒன்னும் பாத்துடல…  இம்புட்டுதானே… அதான் தோட்டம் நாசமாப்போனா  நமக்கென்னன்னு தண்ணிய தெளிச்சு விடுறீக. இனி உங்கள கேக்கமாட்டேன். நானே ஆவுறத பாத்துக்கிறேன்” எனத் துண்டை உதறி கிளம்பிச் சென்றான். மூன்றாம் நாள் சினைக்குரங்குகள் குட்டிகள் என எல்லாம் மரித்துக் கிடந்தன. அவனுக்கு எதிராகக் கூட்டம் போட்டபோது அப்பச்சியுடன் நானும் சென்றேன். மொத்தம் இருபத்தி ஏழு குரங்குகளை விஷம் வைத்துக் கொன்றதாகச் சொன்னார்கள். ஒரு குரங்கின் குதத்தில் வெடிவைத்து சிதைத்து உடல் பிய்ந்து ரத்தம் தெறிக்க கிடந்ததால் பொண்டு, பொடுசுகள் தோட்டத்திற்குள் நுழையக்கூடாது என சொல்லிவிட்டார்கள்.


“காசு நிறைய இருந்தா குண்டி கொழுக்குமா?”என யாரோ ஒருவர் கூட்டத்தில் கத்தினார்.


“வித நெல்ல திங்குதுன்னு மயிலுக்கு வெஷம் வச்சவய்ங்கதான. வெசம் வைக்காத சம்சாரி இங்க உண்டுன்னா அவன வரச்சொல்லு கால்ல விழுந்து கும்புட்டுக்குறேன்” என ராமப்பன் சொன்னதும் மொத்த ஊரும் அமைதியானது‌. அப்பச்சி எழுந்து “அதுவும் இதுவும் ஒண்ணாப்பா. தவிச்சு தண்ணி குடிக்க வந்து கிணத்துல உசுர விட்டுபோச்சு. இதெல்லாம் பெரிய பாவம்பா” என பதமாக பேசினார்.


“உங்கள தெரியும்யா… உங்களுக்கு உபகாரம் செஞ்சவன்னு உள்ளார தெரியும். செஞ்சவன் உங்க ஆளு கிடையாது… உங்க ஊரு கிடையாது… இம்புட்டுத்தான்யா” எனக் கத்தினான்‌.


சற்றுநேரத்தில் என்ன ஏதென்று பிரித்தறிய முடியாத கூச்சல். அப்பச்சி ரத்த திட்டுடன் வாயைத் துடைத்தபடி வெளியே வந்தார். ராமப்பன் காட்டுக்கும் தோட்டத்திற்கும் யாரும் புழங்கக்கூடாது என ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிணறு பாசி மூடிக் கிடந்தது. ஊரார் அரசமரத்தடியில் குரங்குகளைப் புதைத்து அதன் மேல் லிங்கங்களை நட்டார்கள். கருவிக்கொண்டிருந்த ராமப்பன் தோட்டத்தை விற்றுவிட்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு ஊரிலிருந்து வெளியேறினான். இரண்டு ஆண்டுகள் வெள்ளாமை பொய்த்தது. சோழி போட்டுப் பார்த்ததில் ராமப்பன் தோட்டத்துக் கிணற்றைத் தூத்த சொன்னார் பரியாரி. அப்பச்சி ஏற்றுக்கொண்டு ஊருக்காகச் செய்து முடித்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் ராமப்பனின் வாரிசுகள் என சிலர் ஊருக்கு வந்து அரசமரத்தடியில் ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினார்கள். அது ராமப்பனின் இறுதி ஆசை என்றும், அதற்கென ஒரு தொகையை வைத்துக்கொண்ட பிறகுதான் பங்கு பிரித்தளித்தார் என்றும் சொன்னார்கள். சில மாதங்களுக்கு முன் அதே கோயிலில் அனுமர் ஜெயந்திக்கு உண்ணாவுடன் சேர்ந்து ராமாயணக் கதை கேட்க பந்தலுக்கு சென்ற காட்சி நினைவில் வந்தது.


சுழலிலிருந்து தூக்கி எறியப்பட்டதுபோல் தலையை உலுக்கி எழுந்தேன். ஒவ்வொருமுறையும் இது இப்படித்தான். உண்ணா இறந்த தினத்திலிருந்து அவ்வப்போது தரையறியா ஆழ்ந்த கிணற்றுக்குள் விழுவது போன்று ஒரு உணர்வு இடம் பொருள் ஏவலைப் பொருட்படுத்தாமல் பீடிக்கிறது. முடிவுற்று நீளும் என அஞ்சும் போது  ஒரு  நினைவில் தலைமுட்டி விழிப்பேன். எல்லாமும் கொடும் நினைவுகள் மட்டுமே.  இயல்பாகவே அனைவரிடமிருந்தும் விலகியிருக்க விரும்பினேன்.


பழங்களை விற்றுக்கொண்டிருந்த மலாய்க்காரனருகே சென்றேன். கரமில்லா சட்டையிலிருந்து அவனுடைய மஞ்சள் நிறக் கைகள் தெரிந்தன. இக்குரங்குகளின் பெயர் என்ன என ஆங்கிலத்தில் கேட்டேன். அழுத்தமான ஆங்கிலத்தில் ‘சில்வர் லீஃப் மங்கீ’ என்றான். பழம் வாங்குவேனா எனும் ஆர்வத்துடன் என்னருகே இன்னும் சில நொடிகள் நின்றான். நான் அவனைக் கவனிக்காமல் எங்கோ வெறித்திருப்பதை பார்த்ததும் ஆர்வமிழந்து நகர்ந்தான்.


வெயிலுக்குரிய வெக்கை இல்லாத, குளிர் மலைகளுக்கே உரிய இதமான வெப்பம். ஹரீஷும் பிரியாவும் குன்றின் மீது ஓடி ஏறினார்கள். மீனா அழைக்கும் வரை நான் தனித்து நின்றிருக்கிறேன் எனும் போதம் எனக்கில்லை. “என்னங்கப்பா… உங்களுக்காகத்தான வந்தோம்… அவருக்கும் நெறைய வேல கெடக்கு. இப்புடி தனியா வந்து நின்னா எப்புடி? என்னயும்  கொஞ்சம் நெனச்சு பாருங்க. இப்பவர நீங்க அவரோட முகங்கொடுத்து பேசவே இல்ல. இன்னமும் உங்களுக்கு எங்க மேல கோவம் தீரலையா, ரெண்டு பேத்துக்கு இடையில குறுக்கமறுக்க ஓடிக்கிட்டே இருக்க முடியுமா சொல்லுங்க?”என மூச்சிரைக்கச் சொன்னாள்.


“கோவமெல்லாம் ஒண்ணுமில்லம்மா.”


“பின்ன வேற என்ன? அம்மா நெனப்பா? அவதான் போய் சேந்துட்டாலே, எம்புட்டு கஷ்டத்த கொடுத்தா, சாவுலகூட சந்தி சிரிக்க வெச்சுட்டா. இப்பவாச்சும் நிம்மதியா இருங்க”என்றாள். மெளனமாக அவளைத் தொடர்ந்தேன். நெடிதுயர்ந்த மரங்களின் மீது பறவைகளின் கெச்சல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கோலாசிலாங்கூர் கடல் பறவைகளின் சரணாலயம் என்றும் அதன் மையமான வனப்பகுதி அருகில் இருப்பதாகவும் நவீன் கூறினான்.


மலேசியா வந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. நவீன் அவ்வப்போது இப்படி ஏதேனும் சொல்வான். ஆனால் அவை அரிதாகவே என் மனதில் பதியும். உண்ணாமலை தற்கொலை செய்துகொண்ட பிறகு போலீஸ் வரை வழக்கு சென்ற சூழ்நிலையில் என்னைத் தனியாக விடவேண்டாம் என இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வந்த மீனாவிடம் திரும்பத் திரும்ப சொன்னார்கள். உண்ணாவின் அக்கா, “இங்கேரு மீனா, நல்லாக் கேட்டுக்க, உங்க ஆத்தாவ எனக்கு நல்லாத்தெரியும். உடம்பொறந்தவங்காட்டி சொல்லல. என்ன இருந்தாலும் கொடுஞ்சாவு, ஆத்துமா இங்கனதா சுத்தி சுத்தி வரும், இருக்குற காலத்துலேயே உங்க அப்பச்சிய நிம்மதியா உறங்க விட்டவ இல்ல. இப்ப சும்மா கெடக்குமா. அவருக்கும் பாக்க கொள்ள வேற ஆளு யாரு இருக்கா? தம்பிகிட்ட பழச எல்லாம் மனசுல வெச்சுக்க வேணாம்னு சொல்லு. தங்கமான புள்ள. புரிஞ்சுக்கும். உங்கப்பச்சிய கூட்டிக்கினு போயி கொஞ்சநாள் வெச்சுக்க.”என்றாள் .


நவீனின் தந்தை மலேசியாவில் முக்கியமான ஆள்‌. கெடாவில் அவருக்கு எஸ்டேட்டுகள் உண்டு. தமிழக தொடர்புகளும் நிறைய உண்டு என்பதால் அவருடைய செல்வாக்கைக்கொண்டு வழக்கை சீக்கிரம் முடித்தார்கள். எவரும் உண்ணாமலையின் மரணத்தின் மீது சந்தேகம் எழுப்பவில்லை. ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் கிடந்து செத்தாலும் அவளும் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. நடுநடுவே பேசினாலும்கூட ஏன் இப்படி செய்தாய் என யாராவது கேட்டால் அழுத்தமாக மவுனத்திற்குள் புகுந்து விடுவாள். விசாரணையில் உண்ணா ஆச்சி முன்னரே இரண்டு மூன்று முறை அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை முயற்சிகள் செய்து ஆஸ்பத்திரியில் படுத்து எழுந்தவள்தான் எனத் தெரியவந்ததால் காவலர்களும் பெரிதாக குடையாமல் வழக்கை முடித்து வைத்தார்கள். மீனா பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினாள்.


நவீன் மீது கோபம் வருத்தம் எல்லாம் இருந்தது உண்மை. ஆனால் இப்போது இல்லை.  மீனா எங்களிடம் விஷயத்தை சொன்னபோது நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சாதி விட்டு சாதியில் திருமணம் செய்வித்துவிட்டு சிற்றூரில் வசிப்பது பெரும் சங்கடம். ஆனாலும் சங்கடம் எங்களுக்குத்தானே ஒழிய மலேசியாவில் வாழவிருக்கும் அவளுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்ள எங்களுக்கு சில மாதங்கள் ஆனது. எனக்குள் என்ன நடக்கிறது எனச் சொன்னால் நிச்சயம் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றுவிடுவார்கள் என்பதால் விலகியிருக்கவே விரும்புகிறேன். என்னால் இனி ஒளிய முடியாது. உண்ணாவிற்கு என்னிடமிருந்து எதுவும் எடுக்க வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளட்டும். என்னை முட்டி சாய்த்து வீழ்த்த வேண்டும் என்றால் அப்படியே நடக்கட்டும். வேறெப்படியும் நான் அவளிடம் மன்னிப்புக் கோர முடியாது. காவலர்களிடம் இறுக வாய் மூடி இருந்ததை நான் என்னை மன்னித்துவிட்டதன் அடையாளம் என எண்ணிக்கொண்டேன். ஆனால் அவள் உத்தேசித்தது மேலதிக வாதையை எனப் புரிந்துகொண்டேன்.

Kuala Selangor District Historical Museum 2020, #5 top things to do in kuala  selangor, selangor, reviews, best time to visit, photo gallery |  HelloTravel Malaysia

சற்று இடைவெளி விட்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன். மீனா வேகவேகமாக ஏறிச்சென்று நவீனோடு இணைந்துகொண்டாள். ஹரீஷும் பிரியாவும் ஆளுக்கொரு இரும்பு பீரங்கி மீது அமர்ந்துக்கொண்டு சுடுவதாக பாவனை செய்துகொண்டிருந்தார்கள். டச்சுக்காரர்கள் ஆண்டபோது முக்கிய துறைமுகமாக இருந்த இப்பகுதியில் பாதுகாப்புக்காக அமைத்த சுவடுகளின் மிச்சம் என சொல்லிக்கொண்டிருந்தான் நவீன். இப்போது அது ஒரு அலங்காரப்பொருள். “என்னோடது செம பவர் தெரியுமா… சுவரெல்லாம் உடஞ்சி எல்லாத்தையும் அழிச்சிடும்”என சொல்லிக்கொண்டிருந்தாள் பிரியா. “இதெல்லாம் ஓல்ட். இதவிட செம பவரான பாம் எல்லாம் இருக்கு…” ன்றதும் பிரியா அவனிடம் ஓடிவந்தாள். இருவரும் மீனாவின் கைப்பேசியை இயக்கி ஏதோ ஒரு காணொளியைப் பார்க்க தொடங்கினார்கள். கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். “செமையா இருக்கு, வாட் இஸ் இட்ஸ் நேம்?”எனக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


புல் போர்த்திய ஒரு படியில் அமர்ந்தேன். புல்லீரம் ஆடையில் தொற்றிப் பரவியது. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அது ஏன் எனக்குள் பதட்டத்தை ஏற்படுத்துகிறது? எப்போதும் வாள் ஒன்று வெட்ட ஓங்கிய கரத்துடன் அருகிலேயே நிற்பதாகத் தோன்றுகிறது. தோளில் மீனாவின் தொடுகைபட்டதும் காட்சிகள் சிதறி கவனம் மீண்டது. “அப்பா போவோமா”என்றாள். இறங்கி வண்டியருகே சென்றபோது எதிரே இருந்த அருங்காட்சியகம் தென்பட்டது. நவீன் இங்கு வரும்போதெல்லாம் அவனுடைய வரலாற்று ஆர்வம் காரணமாக அங்கும் சென்று வருவான் என்றாள் மீனா. “நீங்களும் போயிட்டு வாங்க” என்றாள். எங்களுக்கிடையேயான இறுக்கம் குறையட்டும் என எண்ணியிருக்கக்கூடும். பிள்ளைகள் கால் சோர்ந்திருந்தன. பிள்ளைகளுடன் வண்டியிலேயே இருப்பதாக மீனா சொல்லிவிட்டாள். நானும் நவீனும் உள்ளே சென்றோம். கோலா சிலாங்கூர் மாவட்ட வரலாற்று அருங்காட்சியகம் என எழுதி இருந்தார்கள். உள்ளே இருந்த புகைப்படங்களை, குறிப்புகளை ஒவ்வொன்றாக நவீன் நிதானமாக வாசித்து வந்தான். அருங்காட்சியகத்துக்கு பலமுறை வந்து சென்றவன் இத்தனை நிதானமாக வாசித்து வருவது வியப்பாக இருந்தது. அரசர்கள், ஆயுதங்கள், கப்பல்கள் உடைகள் என விதவிதமான புகைப்படங்கள். எதையும் வாசிக்காமல் படங்களை மட்டும் வேடிக்கை பார்த்தபடி சுற்றி வந்தேன். அப்போது அந்த வரிசையில் ஒரு கிணற்றின் புகைப்படம் மாட்டியிருந்தது. கம்பி அடைப்புகள் கொண்ட சிமிண்டெ கட்டுச் சுவர் கொண்ட சாம்பல் நிறத்து சாதாரண கிணறு. அதை ஒருவன் ஏன் இங்கு மாட்ட வேண்டும் ஆர்வத்துடன் அதனருகே சென்று வாசிக்கத் தொடங்கினேன்.


மெலாவாத்தி மலையின் அருகில்தான் இக்கிணறு உள்ளது. பூகிஸ் மன்னர்கள் துரோகிகளை தண்டிக்க இக்கிணற்றைப் பயன்படுத்துவார்கள். இதில் அரிப்பு ஏற்படுத்தும் செடிகள், விஷச் செடிகளின் சாறுகள், மூங்கில் குருத்துக்கள், முட்கள், போன்றவற்றை இட்டு நிரப்புவார்கள். கழுத்து வரை இறக்கிவிடப்படும் ஒருவன் துடித்து பெரும் வலியை அனுபவித்து இறுதியாக இறப்பான்.


உடல் நடுங்கத் தொடங்கியது. புகைப்படத்தில் இருந்த கிணறு நீர் பிம்பம்போல் அலையடித்தது. நான் அறிந்த கிணறுகள் எல்லாம் ஒன்றையொன்று முட்டி மேலெழும்பின. ஆழ்துளைக் கிணறுகள், பாசனக் கிணறுகள், நன்னீர் கிணறுகள் என ஆயிரம் கிணறுகள் பார்த்திருப்பேன். அவற்றில் பெரும்பாலும் நீர் பொங்கி வளமாக்கும். என்னால் எத்தனை முயன்றும் அவை எவற்றையும் நினைவில் கொணர முடியவில்லை. தொழில் தொடங்கிய புதிதில் ஒண்டியாளாக நாட்கணக்காக இயந்திரத்தின் மாறாத லயத்தை கேட்டபடி பூமியில் துளையிட்டிருக்கிறேன். பலநூறுமுறை பீறிட்டு வரும் செந்நீரைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். உண்ணா அவளுடன் சேர்த்து இனியவை என நான் பொதித்து வைத்திருந்த எல்லாவற்றையும் வழித்துச் சுருட்டிக்கொண்டாள். எஞ்சியவை எல்லாவற்றையும் பற்றிய இழிவான கோரமான நினைவுகள் மட்டுமே. வெட்டி வயலில் ஒரு கிணற்றைத் தூரெடுக்கும்போது வேலையாட்கள் அதற்குள்ளிருந்து ஒரு சிறு குழந்தையின் மண்டையோட்டை எடுத்தார்கள். வட்டானத்தில் ஒரு கிணற்றை தூரெடுக்கச் சென்று பிணமாக மேலேறி வந்தார்கள் குமரேசனும் சேகரும். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நீரில்லா வறண்ட கிணற்றுக்குள் மண்டை பிளந்து இறந்து கிடந்தாள் சிவகாமி. கட்டிட இடிபாடுகளை இட்டு நிரப்பி அந்த கிணற்றை நான்தான் மூடினேன். முத்துமாரி பால்குடத்தின்போது ராமநாதன் காட்டில் உள்ள கிணற்றில் உடல் உப்பி மிதந்த ஆடையற்ற பெண் உடல். மயங்கி விழுந்து விடுவேன் எனத் தோன்றியது. நவீன் அதற்குள்ளாக வந்திருந்தான். கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றான். குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதும் சற்று ஆசுவாசமாக இருந்தது.


அங்கிருந்து வெளியேறி செல்லும் இறுதி நொடியில் அந்தக் கிணறு வேறொன்றாக கணநேரம் தோன்றி மறைந்தது. நொறுக்கிய கண்ணாடிச் சில்லுகளை விழுங்கி குடல் கிழிந்து ரத்தம் கசிந்து இறந்த உண்ணாவின் பிளந்த வாய்தான் அது.


2


முன்பொரு காலத்தில் சான்றோர் அதை ஆதி யுகம் எனச் சொல்வார்கள். அப்போது எல்லாமும் எல்லோருக்கும் கிடைத்து வந்தன. மானுடர்கள் வசிக்கவும் வாழவும் மகிழ்ந்திருக்கவுமாக இறை ஒரு மாபெரும் தோட்டத்தை அளித்திருந்ததாம். அப்போது அங்கு வாழ்ந்தவர்களுக்கு  மரணம் என்பது முதிர் கனியின் வெடிப்பாக, ஒரு இனிய விடைபெறலாக மட்டும் இருந்ததாம். இக உலகமும் பர உலகமும் ஒன்று மற்றொன்றின் தொடர்ச்சியாக, மாற்றமில்லா சுவர்க்கபுரியாக இருந்தனவாம். ஓருயிர் உதிர வேறொரு உயிர் முளைக்க என சமநிலை பேணப்பட்டதாம். தூய இருதயமும் பழுதற்ற உடலும் மாசற்ற மனமும் கொண்டிருந்தனராம் மானுடர்கள். விண் சொரியும் நீர் மண் செழிக்க போதும். பிறவாமையை விரும்பினால் தேரலாம் என்றபோதும் பிறந்து இறையின் மடியில் தவழ்ந்து வளர்ந்து மறையவே அவர்கள் விரும்பினர். எந்நாளும் இன்பத்திலிருக்க எப்போதும் இறையுடன் இருந்தனராம். இறையொரு முது தாதையாக, பச்சிளம் பாலகனாக, அரவணைக்கும் அன்னையாக வாளைக் குமரியாக பசும் புல்லாக வானேகும் புள்ளாக என விரும்பும் உருவெடுத்து அவர்களுடன் விளையாடி களித்திருந்தது. வினைச் சக்கரம் பசையிழந்து இறுகியிருந்தது. நிகழ்வதுயாவும் மானிடரின் முழு சுய தேர்வின் பாற்பட்டதே. விளையாடிக் களித்த இறைக்கு ஆட்டம் அலுக்க தொடங்கியதும் ஆட்டத்தை சுவாரசியமாக்க புதியதோர் விதி வகுத்ததாம். திசையற்று விரிந்த தோட்டத்திற்கு எல்லைகள் வகுக்கப்பட்டதால் திசை பிறந்ததாம். ஒருபோதும் தோட்டத்தை விட்டு வேளியேறக்கூடாது. மீறினால் அத்தனை எளிதில் மீளமுடியாது என்றது. வெளி என ஒன்று வகுக்கப்பட்டதால் உள் என ஒன்று உருவானது. அதிலிருந்து வெளியை அறியும் விழைவும் பிறந்தது. எல்லை வரை சென்று வேடிக்கை பார்த்து இறையாணையை மீறாமல் திரும்பினர்.  தோட்டம் நிகழ்காலத்தின் நடனமென இருக்கையில்,  கடந்தகாலமும் வருங்காலமும் மட்டுமேயானதாக விரிந்தது தோட்டத்திற்கு அப்பாலான பாழ்வெளி நேற்றைய நசிந்த பொம்மைகளையும் ஒருங்கமைக்கபடாத நாளைய முன்மாதிரிகளையும் இறை சேமித்து வைக்கும் கிடங்கு.


ஒரு நண்பகலில் இறை கண்ணயர்ந்தபோது மானுடர்கள் யாவரும் தன்னை மறந்திருப்பதாக ஒரு தீங்கனா கண்டு விழித்ததாம். பதைப்புடன் செய்வறியாது திகைத்த இறை தீங்கனாவை நினைவிலிருந்து அகற்றும் பொருட்டு அதை வழித்து திரட்டி தோட்டத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு ஆழ் கிணற்றைச் செய்வித்து அதில் இட்டதாம். ஒளிபுகா ஆழத்தில் தீங்கனா நிறமற்ற திரவமாக மிதந்தது. தீங்கனாவிற்கு காரணம் அறியமுடியாமல் வெருண்டது இறை. ஆட்டத்தை சுவாரசியமாக்கவும், கனவை சோதித்தறியவும் முடிவு செய்த இறை தோட்டத்தில் மகிழ்ந்திருந்த மக்களிடம் புதிய நிபந்தனை ஒன்றை இட்டது. தென்மேற்கு மூலையிலிருக்கும் கிணற்றுக்கு மட்டும் எவரும் செல்லக்கூடாது‌ அது தடுக்கப்பட்ட பகுதி. மீறினால் வெளியேற்றப்படுவர் என அறிவித்துவிட்டு வழக்கம்போல் எல்லோருடனும் களியாடியது. தாமறியா இரவுகளில் அங்கு எவரேனும் செல்கிறார்களா என விழிப்புடன் நோக்கியபடி இருந்தது. ஆனால் இறைவாக்கை எவரும் மீறவில்லை. தன் கனா வெறும் அச்சம் என்றெண்ணி ஆசுவாசமடைந்த இறை இங்கு எந்த மீறலும் நிகழப்போவதில்லை எனும் நம்பிக்கையை அடைந்து ஐயம் நீங்கித் தளர்வடைந்தது.


அன்றொருநாள் தோட்டத்தில் பழங்களை வீசிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தsuneel 02 குழந்தைகள், விளையாடி விளையாடி தென்மேற்கு மூலைக்கு களிப்பில் வந்துவிட்டிருந்தனர். எங்கிருக்கிறோம் என்றறிவதற்கு முன் விளாம்பழம் ஒன்று கைத்தவறி கிணற்றுக்குள் விழுந்து ஒலியையும் அலையையும் எழுப்பியது. திரவத்தின் துமிகள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் மீது தெறித்தன. துமியின் குளிர்ச்சி அவர்கள் அதுவரை அறியாதது. அனைவரும் கிணற்றைச் சுற்றி வட்டமிட்டனர். ஒவ்வொருவராக நாம் இப்போதே செல்வோம் இது இறையாணைக்கு விரோதமானது என மாறி மாறி விளம்பினர். சொன்னவர் சில அடிகள் கிணற்றை விட்டு அகன்று செல்வதும் பின்னர் எவரும் உடன்வராததால் மீண்டும் வந்து நிரையில் அமர்வதுமென தொடர்ந்தது விளையாட்டு.  கிணற்றில் இறங்கப் படிக்கட்டுக்கள் தோன்றின. அவற்றில் ஒருவர் இறங்குவதும் பிறர் வேண்டாம் இது மீறல் என எச்சரிப்பதும், அதைக்கேட்டு பின்வாங்குவதும் என அடுத்த சுற்று விளையாட்டு நீண்டது. பின்னர் தங்களிடமிருந்த கனிகளை அதனுள் வீசி, தெறிக்கும் துமிகளை எதிர்பார்த்திருந்தனர். பழங்களை வீச வீச திரவம் உயரே உயரே எழுந்தது. தெள்ளிய நீர் என அவர்களின் முகங்கள் துலங்கியது. ஏழு படிகள் இறங்கி சென்றான் முதலாமவன். நீரைத் துழாவி ஒரேயொரு மென்மையான ஒளி ஊடுருவும் கூழாங்கல்லை எடுத்து வந்தான். ஒவ்வொருவரும் அதைக் கையில் பெற்று நோக்கினர். பிறகு ஒவ்வொருவராக படியிறங்கத் தொடங்கினர். படிகளில் இறங்குவது காலம் பிடிப்பதாக ஆனது. ஆகவே பொறுமையிழந்து குதித்தனர். அவர்கள்  ஒவ்வொருவராக நீர்பரப்பை தொடும் தோறும் அது ஆழத்திற்கு சென்றபடி இருந்தது. அவர்கள் எடுத்துவரும் கற்களின் அளவு பெருகி நுனி கூர்மையடைந்த வண்ணமிருந்தன. எல்லோரும் விதவிதமான கற்களை கண்களுக்கு அருகே வைத்து நோக்கினர். தூக்கிப்போட்டுப் பிடித்தனர். மரத்தின் மீது வீசியபோது பால் வடிந்தது. கூர்முனைகளால் பட்டைகளை உரித்தபோது அவர்கள் அதுவரை அறியா கிளர்ச்சியை உணர்ந்தனர். கற்களை ஒன்றுடன் ஒன்று மரப்பட்டைகளால் பிணைத்து விதவிதமாக உருவாக்கிப் பார்த்தனர். இருபக்கமும் தட்டையான கற்கள், இரு பக்கமும் கூர்மையான கற்கள், ஒரு பக்கம் கூர்மையான ஒரு பக்கம் தட்டையான கற்கள். அவர்கள் மீது ஏறி விளையாடிச் செல்லும் அணில் ஒன்றை ஒருவன் பிடித்தான். தட்டையான கல்லைகொண்டு அதன் தலையை நசுக்கினான். தெறித்த ரத்தம் சூழ்ந்திருந்தவர்களின் கண்களை மினுங்கச் செய்தது. பிறகு அவர்களுடன் இப்படி விளையாடும் ஒவ்வொரு பிராணியாக இட்டு வந்தார்கள். நிகழ்வதேதன்று அறியாத அப்பிராணிகள் விளையாட்டு எனக் கருதி அவர்களுடன் மகிழ்வாகப் பங்கெடுத்தன. ரத்தம் தெறிக்கத் தெறிக்க விளையாட்டுக்கள் வேறு வேறு என பரிணாமம் கொண்டன. தலைகீழாகத் தொங்கவிட்டு குறிபார்த்து எறிவது, கை, கால்களைத் தனித்தனியாக நசுக்கி எஞ்சிய உயிறாற்றலுடன் அது நகர்வதைக் காண்பது, வாயிலும் குதத்திலும் கூர்முனையால் கிழிப்பது, உடலை குறுக்கும் நெடுக்குமாக கூறு போடுவது எனத் தொடர்ந்தது.‌ கிணற்றில் இறந்காதவன் ஒரேயொருவன் எஞ்சியிருந்தான். அவன் இவை எல்லாவற்றையும் விலக்கத்துடன் நோக்கும் வெளிர்நீல கண்கள் உடையவன். தனித்து அமர்ந்திருப்பவன். தயங்குபவன். பிறர் அவனை நோக்கிச் சிரித்தனர். அவனை உந்தினர். உற்சாகப்படுத்தினர்.  மிரட்டினர்.  மெதுவாக, பீடிக்கப்பட்டவன்போல எழுந்து சென்றான். கிணற்றின் ஆழத்திற்குச் சென்று ஆயிரத்தி எட்டு படிகள்; மேலேறி வருவதற்குள் வதைக்கப்பட்ட உயிரினங்கள் மலையெனக் குவிந்திருந்தன. எல்லோரும் குழந்தைமையை உதிர்த்து வளர்ந்திருந்தனர்‌‌. உள்ளே சென்றவனைக் குறித்து மறந்திருந்தனர். அவனுடைய காலடிகளை இடியோசை என கேட்கத் தொடங்கியதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிணற்றைச் சூழ்ந்து கொண்டனர். அவன் கொண்டுவரப்போவது என்ன என்று அவர்கள் கனவுகண்டார்கள். பெரும் கல்லை சுமது வருவான் என்றார்கள் இல்லையில்லை கூர்மையான நீள் கல்லை எடுத்து வருவான் என்றார்கள். அவன் காலடி ஓசையும் அவர்களின் இதயத்துடிப்பும் ஒரே லயத்தில் இணைந்தன. அவன் முழுக்க நனைந்து வெளியேறி வந்தபோது கையில் ஒரு கவண் இருந்தது. குளிரில் உடல்நடுங்க மூச்சிரைத்தபடி அதைக் கீழே வைத்துவிட்டு நகர்ந்தான். அதை என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றி அமர்ந்து அதைப் பார்த்தார்கள். வெளிர்நீல கண்ணன் கூட்டத்திலிருந்து விலகி தனித்து அமர்ந்திருந்தான். அவனிடம் அதைக் கொண்டு சென்று என்ன செய்வதென்று வினவினார்கள். முதலாமவனின் கூழாங்கல்லைப் பொருத்தி, அதைச் செலுத்திக் காண்பித்தான். கல் வெகுதூரம் சென்று விழுந்தது. அவனிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டார்கள். மரத்தின் மீதிருந்த குருவியின்மீது குறி பார்த்து ஏவினான் ஒருவன். ஒரு துளிக் குருதி குறித்துக் கொடுத்த இடத்தில் வீழ்ந்தது குருவி. ஒவ்வொருவரும் அதை தமதாக்கிக்கொண்டு உயரத்தில் இருப்பவை, தொலைவில் இருப்பவை என ஒவ்வொன்றாகக் குறி பார்த்து ஏவி வீழ்த்தினார்கள். மீண்டும் ஒரு களியாட்டுத் தொடங்கியது.

Golden bird wallpaper by Y0SH1zzzz - fb - Free on ZEDGE™

அப்போது அதுவரை அவர்கள் எவருமே கண்டிராத ஒரு பொன் மஞ்சள் குருவி உச்சிக்கிளையில் தென்பட்டது‌. ஒரே நேரத்தில் வெகு அருகிலும் வெகு தொலைவிலும் என ஒரு சேர மயக்குரு அளித்தது. ஒவ்வொருவராக அதை நோக்கிக் குறிபார்த்துத் தோற்றனர். தொடக்கத்தில் தோல்விகள் ஏளனத்தோடும் சிரிப்போடும் வரவேற்கப்பட்டன. போகப்போக அதை வீழ்த்துவது ஒரு வெறியாகிப்போனது. சேகரித்து வைத்த அத்தனை ஆயுதங்களையும் அதன்மீது வீசி எறிந்தனர். மரங்கள் மீது ஏறி அதைத் தொடர்ந்தனர். கூட்டமாக ஓடியதில் தோட்டம் சிதைந்தது. அதுவரை ஒதுங்கியிருந்த தோட்டத்தின் பிற பகுதியில் இருந்தவர்கள் அக்குருவியைக் கண்டதும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அதைத் துரத்தி ஓடினர். வெறியேறிய சிலர் குருவியை வீழ்த்த வேறு ஆயுதங்களை தேடிக் கிணற்றுக்குள் செல்லத் திட்டமிட்டபோதுதான் அதன் வாய் குறுகி சுருங்குவதைக் கவனித்தார்கள். உள்நுழைய முயன்றதில் இருவரை உள்ளிழுத்துக்கொண்டு கிணறு மூடியது. முதல்முறை அவர்கள் இழப்பையும் மரணத்தையும் வலியென உணர்ந்தார்கள். ஓலமெழுப்பினார்கள். வெளிர் நீலக்கண்ணன் எல்லாவற்றையும் வெறுமே பார்த்திருந்தான். மறைந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த குருவியை வீழ்த்தியாக வேண்டும் என வெறிகொண்டு ஓடினர். குருவி எல்லா தாக்குதல்களில் இருந்தும் தப்பிப் பறந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசையில் குருவி தென்பட்டது. அவரவர் கண்ட குருவியை பிறர் காண முடியவில்லை. எல்லோரும் பிழையாக குறிவைப்பதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் உருண்டு பிரண்டார்கள். ஆயுதங்களை கையில் எடுத்து உக்கிரமாக தாக்கி வீழ்த்தினார்கள். ஒருவரையொருவர் வெறிகொண்டு வேட்டையாடினார்கள். குருவி அமைதியாக தோட்டத்தின் எல்லையில் ஒரு கிளையில் அமர்ந்திருந்து எல்லாவற்றையும் நோக்கிக்கொண்டிருந்தது. வினைச் சக்கரம் முழுவிசையில் சுழன்றுகொண்டிருந்தது. நிணம் வடிய நின்றவர்கள் சட்டென அபத்தம் உறைக்க எல்லையில் நின்றிருந்த குருவியை நோக்கினர். எஞ்சிய ஆற்றலைத் திரட்டிக்கொண்டு ஆவேசமாக ஓடிவந்து அதை எல்லா பக்கங்களிலுமிருந்தும் சூழ்ந்துகொண்டார்கள். பொன் குருவி அவர்கள் ஓய்ந்த கணநேரத்தில் சட்டென சிறகடித்து தோட்டத்திற்கு வெளியே வெட்டவெளிக்குப் பறந்தது. சந்நதம் கொண்ட அவர்கள் எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு அதைத் துரத்தி ஓடினார்கள். வெளிர்நீலக் கண்ணனும் கடைசியாகப் புட்டத்து மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். பொன் குருவி ஒரு காய்ந்த மொட்டை மரத்துக் கிளையில் அமர்ந்தது. வெக்கை எரிந்த விரிநிலத்தில் பித்தேறி ஓடினார்கள். பொன் குருவி ஒரு நிழலென சாம்பல் கொண்டு கருமையில் கரைந்தது. துரத்திச் சென்றவர்கள் திகைத்தார்கள். திரும்பி நோக்குகையில் தோட்டம் அங்கிருந்து மறைந்திருந்தது. ஓய்ந்து அமர்ந்து விசும்பினர். அன்று தொடங்கி அவர்கள் வெளியேற்றப்பட்ட தோட்டத்தைத் தேடினர். இறை மீது கோபம் கொண்டு தாங்களே தங்களுக்கான தோட்டங்களை உருவாக்க முயன்றனர். மீண்டும் மீண்டும் அத்தோட்டத்தின் நகல்களை உருவாக்கி அது முழுமையின்றி இருப்பதை உணர்ந்து மருண்டனர். அவர்களை வெளியேற்றிய பொன் குருவியைத் தேடினர். மீண்டும் அழைத்துச் செல்லும் பாதையை அது மட்டுமே அறியும். பொன் குருவியை நெருங்கும் தோறும் கனவிலிருந்து கிணறு மேலெழுந்து வந்தது. அதன் ஆழத்திலிருந்து அள்ள அள்ள விதவிதமான கொலை எந்திரங்கள் பிறந்தவண்ணம் இருந்தன. வற்றாத நீரூற்றாகப் புதியவற்றைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. மேலும் மேலும் என பொன் குருவி அவர்களை விட்டு அகன்றபடி இருந்தது. வெகு சில தனியர்கள் கிணற்றின் ஊற்றுமுகத்தில் நுழைந்து மறுபக்கத்தில் எழுந்து தோட்டத்தை அடைந்தனர். வேறு சிலர் கிணற்றை அறியாத பேதைகளாக அதைக் கடந்து பொன் குருவியை தொடர்ந்தனர். தோட்டம் அவர்களுக்குத் திறந்தே இருந்தது.


அயர்ச்சியின் கணத்தில் மனிதர்கள் தோட்டத்தை மறந்தார்கள். அப்போது இறைக்கு தன்னிருப்பு பற்றிய ஐயம் எழுந்தது. தோட்டத்தைப் பற்றிய கனவு இருக்கும் வரை மட்டுமே தான் இருப்போம் என புரிந்துகொண்டது. ஆகவே தோட்டத்தைப் பற்றிய கனவை, கதைகளை விதைத்தபடி இருந்தது. கிணறும் குருவியும் தோட்டமும் அறுபடாது தோன்றியும் மறைந்தும் களியாடி வருகின்றன.


 


3


சரவணனின் யமஹா ஆர்.எக்ஸ் 115 வண்டியிலிருந்து, அது ஒரு பழைய வண்டிதான் ஆனால் அதற்கு அவன் புத்துயிர் அளித்திருந்தான், நான் இறங்கியபோது எதிரே இருந்த கட்டிடத்திலிருந்து, அது ஒரு மாவட்ட அருங்காட்சியக கட்டிடம், ஒருவரை அணைத்தவாறு வெளியே கொண்டு வந்தார்கள். என்னைவிட நான்கைந்து வயது மூத்தவராக இருக்கலாம், ஆனால் தமிழ் முகம், மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது, தொண்டையைக் கமறினார். ஒரு திட்டில் தலையைப் பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தார். அருகே செல்லலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஃபோர் வீலர் காரிலிருந்து இறங்கிய ஒரு பெண் அவரை நோக்கி ஓடிய அக்கணத்தில் தன்னிச்சையாக அவரை  நோக்கி நடக்கத் தொடங்கினேன். சரவணன் எனக்கு முன் ஓடிக்கொண்டிருந்தான். இத்தகைய தருணங்களில் நான் என்னுடன் வருபவர்களின் முகத்தை நோக்குவதையோ நோக்கப்படுவதையோ விரும்புவதில்லை. சூழல் மறந்து சிரித்துவிடுவோம் எனும் அச்சம்தான் காரணம்.


சரவணன் நேராக நீர் புகட்டிக்கொண்டிருந்த அந்த பெண்ணை நெருங்கி என்ன ஏதென்று விசாரித்து ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டான். நாங்கள் அடித்திருந்த வாசனைத் திரவியத்தின் வீரியத்தை மீறி எங்கள் உடலிலிருந்து எழுந்த உக்கிர மது நெடியை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். நேற்றைய இரவின் சிவாஸ் ரீகலும் இன்று காலை இறங்கிய பீரும் தோல் துளைகளிலும் மூச்சுக் காற்றிலும் ஆவியாகிக்கொண்டிருந்தன. மூச்சிரைத்து கொண்டிருந்தவர் சட்டெனத் தலைத்தூக்கி ஒன்றுமில்லை கிளம்பலாம் எனச் சொல்லிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டதை கண்டபோது ஏதோ ஒருவகையில் எங்களை அவர் உணர்ந்துகொண்ட சஹ்ருதயர் எனத்தோன்றி புன்னகை அரும்பியது. பாம்பின் கால் பாம்பறியும். எனினும் அவரை வெளியே அழைத்து வந்தவன் இளைஞன். அவனுக்கு சரவணன் வயதிருக்கலாம்.


ஆம் இப்போது  சரவணனைப் பற்றிச் சொல்ல வேண்டும்- சரவணன் மலேசியாவின் இளையதலைமுறை எழுத்தாளர்களில் பொருட்படுத்தத்தக்க ஒருவன், ஒரேயொருவன் எனச் சொல்ல மனம் சபலப்படுகிறது, எனினும் என்னை அழைத்ததாலே சரவணனை இப்படி மிகையாக புகழ்கிறேன் என நீங்கள் எண்ணிவிடக்கூடாது. தமிழகத்தில் அப்படிச் சிலமுறை செய்திருக்கிறேன். பிறகு அவர்கள் என்னை மழிக்கப்பட்ட அக்குள் மயிர் என கடாசி இருக்கிறார்கள். கட்டி உருண்டு பற்களை பெயர்த்துக்கொண்ட கதைகள் எல்லாம் உண்டு. சரவணனின் அழைப்பின் பேரிலேயே நானிப்போது இங்கு கவிதைப் பட்டறை நடத்த வந்திருக்கிறேன். தமிழகத்திலேயே எவரும் நான்   மேடையில் முழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை என்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னை அழைத்திருந்தான். மலேசியாவிற்கு வரமுடியுமா என்றழைத்தபோது,  தமிழில் என்னை விடப் புகழ்பெற்ற கவிகள் பலர் இருக்க என்னை எதற்கு அழைக்கிறாய் என அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில் விநோதமானது. சில ஆண்டுகளுக்கு முன் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மேடையிலேயே அந்நூலை கிழித்து போட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தான். ‘நீங்கள் ஒரு சமரசமற்ற கலகக் குரல். இங்கே அத்தகைய குரல்களே தேவை.’ என்றான். ஒருவேளை நீங்கள் தலைசிறந்த கவி என சொல்லியிருந்தால் அவனை நம்பியிருக்கமாட்டேன். ‘முதலாளித்துவம் கலகத்தையும் பண்டமாக்கியுள்ளது இல்லையா’ என்றேன். அவன் மறுமுனையில் அமைதியாகி விட்டான். சில நொடிகளுக்கு பின் நான் உரக்க சிரிக்கத் தொடங்கியதும் அவனும் சிரித்தான்.


வெளியே அழைத்து வந்தவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். பெரியவரின் நடத்தையால் நாங்கள் புண்பட்டுவிடக்கூடாது என்றெண்ணி, அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களை  பார்த்துக்கொண்டிருந்தவர் சட்டெனச் சரிந்துவிட்டார் எனவும் கீழே விழுவதற்குள் சற்றுத் தொலைவில் தொடர்ந்து கொண்டிருந்தவன் அவரை தாங்கிப் பிடித்து வெளியே அழைத்து வந்ததாக ஒருவரியில் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடி கூறினான்.  இப்போது இயல்பாக இருக்கிறார் என விட்டுவிட வேண்டாம் எதற்கும் மருத்துவரிடம் அழைத்து சென்று காட்டுங்கள் எனச் சொல்லி முடிப்பதற்குள் வண்டி நகரத் தொடங்கியிருந்தது.


இருவரும் சிரித்துக் கொண்டோம். குரங்குகளுடன் விளையாடினோம். அவற்றுக்கு எங்கள் மதுநெடி பித்தூட்டுவதாக இருந்திருக்க வேண்டும். கிறங்கி சுற்றி வந்தன. புல்வெளிகளில் அமர்ந்து இலக்கிய உள்வட்ட வம்புகளையும் நகைச்சுவைகளையும் பரிமாறிக்கொண்டோம். இளமைக் காலத்தில் நான் இலக்கியக் கூட்டங்களில் செய்த கலகங்கள், கூட்டத்திற்கு பின்பான கைகலப்புகள் போன்றவை தொன்மமாக உலவுகின்றன என்பதை அவன் வழியே அறிந்துகொண்டேன். அவன் கேள்விப்பட்ட ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு ‘இது உண்மையா’ என வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். கருத்து முரண்பாட்டுக்காக இப்படி கட்டி உருள்வீர்களா எனக் கேட்டான். மூளை சூடாகி குருதி கொதித்துக் கொண்டிருந்த காலம். அதுவொரு போதை. எல்லாவற்றையும் புரட்டிப்போடப் போகிறோம் எனும் வேகம். ‘எனக்கு இலக்கிய நோபல் அறிவிக்கப்பட்டால் அப்போது அதை ஏற்க மறுத்து ஆற்றவேண்டிய உரையை முப்பது வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா?’ அவன் உரக்கச் சிரித்தான். இப்போது அவையாவும் பொருளற்ற அபத்தங்களாக தெரிவதால் அவை பொய் என்றாகிவிடுமா? தெரியவில்லை. சிரிப்பினூடே அதைக் கடந்து சென்றேன்.


என் மனதில் வேறொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அருங்காட்சியகத்தில் ஒரு மனிதன் எதைப் பார்த்து மயங்கக்கூடும்? அல்லது ஏன் மயங்கக்கூடும்? இருதயக் கோளாறு, சர்க்கரை குறைவு, சுவாசக் கோளாறு, என சரவணன் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் இவையெதுவும் காரணமாக இருக்கமுடியாது எனத் தோன்றியது. உள்ளே சென்று பார்க்க வேண்டும் என சரவணனிடம் கூறியபோது அவன் அதுவொரு மொக்கை அருங்காட்சியகம் என்றான். ஒருவனை மயங்கி விழச் செய்யக்கூடிய ஒன்று இருக்கும் அருங்காட்சியகம் மொக்கையாக இருக்கமுடியாது எனக் கூறி அவனை அழைத்துச் சென்றேன்.  கப்பல்கள், படைக்கலங்கள், புகைப்படங்கள் எனப் பெரிதாக ஈர்க்காத தகவல்களை ஒவ்வொன்றாக கடந்து வந்தோம். எலும்பை நொறுக்கவும், குடலை உருவவும், நரம்புகளைக் கத்தரிக்கவும், தலையை உடைக்கவும் சதையைப் பெயர்க்கவும் என எத்தனை விதமான ஆயுதங்கள்! கற்பனையின் அரிய ஆற்றல் வடிவம் கொண்டு நிற்கின்றன. ஆனால் ஏன்? மனம் எதையோ தேடிச் சலித்தது. இவை எல்லாவற்றையும்விட, பயங்கரமான அல்லது குரூரமான ஏதோ ஒன்று கோரைப் பற்களை நீட்டிக்கொண்டு நிற்கும் என எதிர்பார்த்திருந்தேன். எதிலும் மனம் ஊன்றவில்லை. சரவணன் காட்சிப் பொருள்களையும் தகவல்களையும் திருட்டுத்தனமாக கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் ஒருமுறை மேய்ந்துவிட்டு வெளியே வந்தேன். சரவணன் எனக்கு முன்பாக வெளியே வந்திருந்தான்.

Travel Guide to Kuala Lumpur, Malaysia

சைனா டவுனுக்கு அழைத்து சென்று பேரம் பேசி ஒரு கடிகாரம் பரிசளித்தான். விதவிதமான வர்ணங்கள் நிறைந்த நெரிசலான தெருவில் ஒருவித மூளைக் களைப்பை உணர்ந்தேன். விதவிதமான பொருட்கள். ஒவ்வொன்றையும் ஆயுதமாக எப்படிப் பயன்படுத்த முடியும் என மனம் தன்னிச்சையாகக் கற்பனை செய்யத் தொடங்கியது. எலெக்ட்ரிக் ட்ரிம்மரின் ஒயரை கழுத்தைச் சுற்றி நெரிக்க முடியும், ஹேர் கிளிப்புகளின் கூர்முனையால் மணிக்கட்டில் கீறிவிட முடியலாம், ரப்பர் பொம்மைகளை வாயில் திணித்து மூக்கை மூடினால் போதும், வண்ண மலர்களில் செய்யப்பட பூங்கொத்தை கண்டபோது இதை எப்படிப் பயன்படுத்தலாம் என மனம் துழாவிக்கொண்டிருந்தது. சட்டென மனம் விழித்துக்கொண்டது. கடைத்தெரு ஆளரவமற்ற இன்னொரு தெருவில் சென்று முடிந்தது. சரவணன் ஏதும் சொல்லாமல் நான்கைந்து கட்டிடங்கள் தள்ளி ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்து மாடியேறினான். ஒரு சிறிய சதுர வளாகத்தில் சின்னஞ்சிறிய அறைகள். வாசலில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் நுழைந்ததும் பரபரப்பானார்கள். விதவிதமான அழைப்புகள். மாமா இங்க வா மாமா என ஒரு தமிழ் குரலும் ஒலித்தது. “காலேல பாத்தோமே அவ மூஞ்சியும் முலையும் படுத்துது சார்” என சொல்லி சரவணன் நாற்பது ரிங்கிட்டுகள் அளித்துவிட்டு உள்ளே சென்றான். எனக்கான பணத்தையும் தானே அளித்துவிடுவதாக வெளியே நின்றிருந்த தரகனிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். நான் நிதானமாக ஒவ்வொரு அறையாக நோக்கினேன். பருத்த புட்டமுடைய சீனப் பெண் ஒருத்தி இருந்தாள். தரகனிடம் அவளைச் சுட்டிக் காட்டினேன். நாற்பது ரிங்கிட் என்றான். அவரிடம் வாங்கிக்கொள் என அறைக்குள் சென்றேன்‌. ஆடைகளை களையத் தொடங்கினாள். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ‘நோ செக்ஸ்’ எனச் சொல்லி கையை அவள் புட்டத்தில் அடிப்பதுபோல் தட்டினேன். அவள் சிரித்தபடி ‘யூ வான் ஸ்பாங்க் மை பட்?’என கேட்டுவிட்டு இருபது முறை மட்டுமே அடிக்கலாம் அதுவும் கையால் மட்டுமே அடிக்க வேண்டும் என்றாள். தரகனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் மேலும் இருபது ரிங்கிட் இங்கேயே இப்போதே கொடுக்க வேண்டும் என்றாள்.  ஒப்புக்கொண்டேன்.


வெளியே வந்ததும் பசித்தது. புக்கிட் பித்தாங் அழைத்துச் சென்றான். இடையில் என்னைத் தனியாக நிற்க வைத்துவிட்டு நீள் முடியும் உடல் முழுவதும் பச்சையும் குத்தியிருந்த  தமிழ் இளைஞனிடம் ஏதோ ஒன்றை விலை பேசி வாங்கினான். நாசி லெமாக்கில் பொரித்த கோழி இறைச்சி நல்ல இணை. கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது. சரவணன் உண்டது கொய்தியாவ் கோரெங். அதை சீனர்கள் போல ச்சோப் ஸ்டிக்கில் அள்ளித் தின்றான். நாளை முதலைக் கறி சாப்பிட ஜாலான் ஈப்போவில் ஒரு ரகசியக் கடைக்குச் செல்வோம் என்றான். “முதலைக் கறியா?” என அவனிடம் கேட்ட என் குரலில் இருந்த வியப்பைக் கண்டுகொண்டவன். “நர மாமிசம் புசிக்க வேண்டுமா? அதற்கும் யாம் வழி செய்வோம்” என நாடகத் தமிழில் பேசிச் சிரித்தான்.


தெருவில் ஆங்காங்கு சிறிய சிறிய குழுக்களாக நின்று இசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குருவியைப் போல் மனம் தத்தி தத்தி பறந்து கொண்டிருந்தது. அதை எந்தக் கிளையிலும் அமரவைக்க முடியவில்லை. சாலையில் செல்லும் எவரையேனும் இழுத்து இரண்டு குத்துவிட்டால் மனம் நிலை திரும்பிவிடக்கூடும். அல்லது இரண்டு குத்து வாங்கினால்கூட போதும்.


இருவரும் சொல்லற்று பயணித்து நள்ளிரவு அறையை வந்தடைந்தோம்.  சரவணன் நிதானமாக பையில் வைத்திருந்த  சிவமூலியை வெளியே எடுத்தான். தூள் கலக்காத அசல் வஸ்து கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றான்.


குடி, கஞ்சா, பெண்கள் என எல்லாவற்றையும் சில ஆண்டுகளாக விட்டிருந்தேன். மிகுந்த கட்டுக்கோப்புடன் இரண்டு ஆண்டுகளாக என்னைப் பிடித்து வைத்திருந்ததெல்லாம் மலேசிய மண்ணில் காலடி வைத்த உடனேயே கரைந்தழிந்தது. முன்பைப்போல் பேனா பிடித்து எழுத முடியாத அளவிற்கு கை நடுக்கம். கணினியிலோ, கைபேசியிலோ படைப்புகளை எழுதப் பழகிக்கொள்ளவில்லை. உடல் சன்னமாக அதிர்ந்துகொண்டிருந்தது.


உலகம் அலையடிக்கத் தொடங்கியது. அடியற்ற கிணற்றில் வீழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அச்சம் மேலேறியது. கண் விழித்தேன். மீண்டும் கிணற்றுக்குள் செல்ல விழைந்தது. முன்பைக் காட்டிலும் சில நொடிகள் அதிகமாக கண் மூடியிருக்கலாம். மீண்டும் விழித்தேன். கால்கள் துணிச்சுருள்கள் எனத் தொய்ந்தன. நாம் விரும்பும் உள்ளத்தின்  அடுக்குக்கு மெஸ்காலும் எல்‌எஸ்‌டியும் கொண்டு செல்லும் என ஆல்டஸ் ஹக்ஸ்லி நம்பினான் என்றேன். ஆனால் விரும்பும் அடுக்குக்கு செல்வதில் என்ன இருக்கிறது? தற்செயலாக ஏதோ ஒரு கதவை திறப்பதல்லவா லாகிரியின் இயல்பு என சொல்லிக்கொண்டிருந்தேன்‌‌. ஆமாம் நீங்கள் சொல்வது மிகச் சரி, மலேசியாவில் மகாதீர் பல சிக்கல்களை கொண்டிருப்பவர்தான் என்றான் சரவணன். ஒரேயோருமுறை தற்செயலாக நாம் எதிர்பாராத கதவைத் திறந்துகொண்டால் போதும். அந்தக் கதவைத் தேடித்தேடி துழாவி,  அந்தத்  தற்செயல் எனும் மந்திரகணம் மீண்டும் நிகழாதா என ஏங்கிச் சாவோம் என்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, ஹிண்ட்ராப் காலத்தின் கட்டாயம் என்றான் அவன். சரவணன் சிரிக்கத் தொடங்கினான். சிரிப்பின் ஊடே நீங்கள் அசலான பிரபஞ்ச கவி, எத்தனை விஷயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். அவனிடம் “காலையில் கேட்டாயே மாற்றுக் கருத்திற்காக சண்டையா என, பாதுகாப்பாக நின்றுகொண்டு வாழை மட்டையில் கம்பி மத்தாப்புச் சொருகி சுற்றும் உங்களுக்கு அது விளங்காது. உங்கள் தலைமுறையில் எல்லோரும் மிகவும் புத்திசாலிகளாகி விட்டீர்கள். இன்னும் கழுத்துப் பட்டையும், அடையாள அட்டையும் தான் இல்லை. திறமையான வேலைக்காரர்கள்” என்றேன். “ஆம் எங்கள் தமிழ் அடையாளம் உலக அளவில் சினிமாக்களால் சிறுமைப் படுத்தப்பட்டுவிட்டது நாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை” என்றான்.


அப்போது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது வேறொரு காலத்தில் வேறு எங்கோ தட்டப்படுவதின் எதிரொலியைபோல் சன்னமாக ஒலித்தது. மறுகணம் அந்தத் தட்டுதல் என் தலைக்குள் ஒலிக்கத் தொடங்கியது. சீரான தாளத்தைப்போல. உந்தி எழ முடியவில்லை. ஓசை வலுக்கத் தொடங்கியது. கதவைத் தாழிடவில்லை என்பதை அப்போது உணர்ந்தோம். கதவைத் திறந்துகொண்டு பொன்னிற முடியுடைய ஒட்டிய கன்னம் கொண்ட நெடிய வெள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்தான். கறைபடிந்த முன்பற்களுடன் எங்களைப் பார்த்து இளித்தான். “ஐ ஸ்மெல் வீட். கேன் ஐ ஜாயின்?” எனக்கேட்டான். சரவணன் இல்லையெனத் தலையசைத்தான். அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை‌. நாங்கள் வெறுமே குடித்திருக்கிறோம். சிரித்துக்கொண்டே, தயவுசெய்து சென்றுவிடுங்கள் என்றான். அவன் வான் நீலக் கண்களில் வெறி சுடர்வதைக் கண்டேன். அவன் கெஞ்சினான். எங்களைச் சுற்றி சுற்றி வந்தான். என்னை உந்தி எழுப்பிக்கொண்டு அமர்ந்தபோது உடல் முன்னே சரிந்தது. சரவணன் இல்லையென சிரித்துக்கொண்டே மறுத்தான். வேறொரு அறையிலிருந்து வந்திருக்கலாம். தயவுசெய்து சென்றுவிடு எனச் சொன்னான். அவன் குரல் வலுத்தது. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உன் சிரிப்பை பார்த்தாலே தெரிகிறது என சரவணனைச் சுட்டிச்சொன்னான். எழுந்து நிற்க முயன்ற என்னை நெஞ்சில் நெட்டித் தள்ளினான். நான் மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். நீர் இருந்த கண்ணாடி லோட்டாவை உடைத்து அதன் கூர்முனையை எங்களை நோக்கி நீட்டினான். பிறகு சட்டென அமர்ந்து அவன் கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டு தயவுசெய்து கொடுங்கள் என அழத் தொடங்கினான். சரவணன் சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்றான். அவனை அமைதியடையும்படி கூறியபடி மெல்ல நெருங்கினான். அப்போதும் சிரிப்பதை நிறுத்த இயலவில்லை. நானும் என்னைத் திரட்டிக்கொண்டு எழுந்து நின்றேன். அறை இடவலமாகக் குலுங்கியது. சரவணன் அவனருகே சென்று அமர்ந்து கால்சட்டைப்பையில் கைவிடுவதாக பாவனை செய்த அந்நொடியில் அவன் மீது பாய்ந்தேன். அவன் கையில் வைத்திருந்த கண்ணாடி என் புறங்கையை கிழித்துக்கொண்டு விழுந்தது. சரவணன் அவன் கன்னத்தில் ஓங்கிக் குத்தினான். உதடு கிழிந்து உதிரம் கசிந்தது. அவன் தேம்பி அழத் தொடங்கினான். மெதுவாக எழுந்தவன் கண்களை நோக்கினேன். சற்று முன் மின்னிக்கொண்டிருந்த ஒன்று அப்போது இல்லை. எல்லாவற்றிலிருந்தும் விலகிய வெறும் வெறிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. என்னிடம் ‘சாரி’எனச் சொல்லிவிட்டு  எங்கள் அறையைவிட்டு தேம்பிகொண்டே மெல்ல நடந்து சென்றான்.


உடல் அயர்ந்தது. ஆனால் மனம் மட்டும் விழிப்படைந்திருந்தது. சரவணன் எஞ்சிய சிவமூலியை கழிவறையில் போட்டு நீரூற்றிவிட்டு என்னருகே வந்து, சிரிப்பின் ஊடே மிழற்றி மிழற்றி சிரிப்பை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை மன்னித்து விடுங்கள் என்றான். சற்று நேரத்திற்கு எல்லாம் உறங்கிப்போனான். அந்த வெள்ளைக்காரன் சென்றபிறகும் கூட கதவை தட்டும் ஓசை நிற்கவில்லை. என்னால் உறங்கமுடியவில்லை. தலை கனத்தது. எழுந்து அமர்ந்தேன். அதிகாலை மூன்று மணி. பத்து மணிக்கு கவிதைப் பட்டறை. புரையோடிய கண்களுக்கு முன் இரு சிறு பூச்சிகள் ஓடித் திரிந்தன‌. சரவணனின் கைபேசியை எடுத்தேன். அவனுடைய கட்டைவிரலை அழுத்தி அதைத் திறந்தேன். முகம் மறைத்த மேலாடையற்ற பெண்களின் புகைப்படங்கள் சில அவனுடைய கைபேசி கேலரியில் இருந்தன. அன்றைய நாளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கினேன். பத்துமலைக்கோவில் அடிவாரம், பழங்குடி அருங்காட்சியகம், ரெட்டைக் கோபுர நீரூற்று அருகே ஒரு வெளிநாட்டுப் பெண்மணியுடன், எல்லாப் புகைப்படங்களிலும் என் முகத்தில் ஒரு அசட்டுக்கலை. கோலாசிலாங்கூர் புகைப்படங்கள் வந்தன. ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டு வந்தபோது,  சிமெண்டு மேடை கொண்ட சாதாரணக் கிணற்றின் புகைப்படத்தையும் குறிப்பையும் பார்த்ததும் உடல் நடுங்கத்தொடங்கியது. கழுவுதொட்டிக்குச் சென்று வாந்தி எடுத்தேன்.


பெரியவர், அவரை அழைத்து வந்தவன், அப்பெண்,  அவளுடைய குழந்தைகள்,  அவர்களின் வண்டி, பழக்காரன், அக்கிணறு, சீனப் பெண்னின் சிவந்த புட்டம், நீலக்கண் வெள்ளையன் என அன்றைய நிகழ்வுகளும் முகங்களும் துல்லியமாக மனதில் துலங்கின.  ஒன்றுடன் ஒன்று பிணைந்து பொருள்கொள்ளத் தொடங்கின. பெரியவரின் வாழ்க்கை என்முன் கதையாக விரிந்தது. ஆனால், அதில் ஒரு கண்டுபிடிப்பை மட்டுமே என்னால் அளிக்க முடிந்தது. அது ஏன் எனும் கேள்வியை எதிர்கொள்ளவில்லை. மனம் பரபரக்கத் தொடங்கியது. ஒரு காலாதீதமான கேள்விக்கு காலாதீதமான கதை வடிவத்தைதான் தேற முடியும். கிழக்கு  மட்டும் மேற்கின் தொன்மங்கள் குழைந்து ஒரு கதையாக உருத் திரண்டது.  சொற்கள் மத்தள ஓசையென விழத்தொடங்கின.


எட்டு மணிக்கு சரவணன் எழுந்து அமர்ந்தபோது கவிதை பட்டறைக்காகத்  தேர்ந்தெடுத்த கவிதைகள் அச்சிடப்பட்டிருந்த தாளின் காலியான மறு பக்கங்களில்  நான் எழுதிக்கொண்டு இருந்தேன். அவன் முகம் கறுத்து இறுகியிருந்தது. கண்ணாடித் துண்டங்களைப் பொறுக்கிக் குப்பைத்தொட்டியில் இட்டுவிட்டு ரூம் சர்வீசுக்கு அழைத்தான். நேற்றைய நாளின் நினைவுகள் அவனுக்கு குற்ற உணர்வை அளித்திருக்கும். என்ன எழுதுகிறீர்கள் என கேட்டான். கதை என்றேன். கவிஞர்கள் எல்லாம் கதை எழுத வந்துவிட்டால் பிறகு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் கவிதை எழுதினால் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். கிண்டல் செய்வீர்கள் என இளித்தான்.


புன்னகைத்தேன். அங்கே வந்தது முதல் அவன் என்னுடைய ஒரேயொரு கவிதை வரியைக் கூட நினைவுகூரவில்லை என்பதை அப்போது உணர்ந்தேன். நான் அவனுக்கு யார்? பேனாவை கீழே வைத்துவிட்டுச் சாய்ந்தேன். நான் ஒருபோதும் என் கவிதைகளுக்காக நினைவுக்கூரப்படப் போவதில்லை. கவிதையைவிட கலகம் எனக்கு எளிதா? எழுதிக்கொண்டிருந்தவரை கைகள் நடுங்கவில்லை என்பதை அப்போது நடுங்கிய கரங்கள் உணர்த்தின. உங்கள் கண்கள் சிவந்திருக்கின்றன. உறங்கவில்லையா என்றான். இல்லை ஒரு பதினைந்து நிமிடங்கள் கண்மூடிக்கொண்டால் போதும் குளித்து கிளம்பியதும்  என்னை எழுப்பு என சொல்லிவிட்டுப்  படுத்தேன். காபி வேண்டும் போலிருக்கிறது உங்களுக்கும் சொல்லவா எனக் கேட்டான். சொல் எனச் சொல்லிவிட்டு கண் மூடினேன். கண் மூடியிருந்தபோது எல்லாவற்றுக்குமான, பாவ மன்னிப்பைபோல், வெளிறி நிறமிழந்த எல்லாவற்றுக்கும் விடை போல், எல்லாவற்றுக்கும் சேர்த்து இந்த கதை. ஒரேயொரு கதை. எனக்கு நானே நட்டுக்கொள்ளும் நடுகல். கதையின் இரண்டு பகுதிகள் எழுதிவிட்டேன் ஆனாலும் நிறைவின்மை வதைத்தது. இப்போது முற்றிலும் வேறொரு பெரும் பூதம் என் முன் அதன் விளைவைச் சுட்டி எழுந்து நின்றது. நான் அதன் அடிமை. சரவணன் குளித்து வெளிவரும்போது சிவந்து எரிந்த கண்களில் தாளை மறைத்து கட்டியிருந்த நீர் வழிய நடுக்கமற்ற வலக்கரம் கதையை எழுதிக்கொண்டிருந்தது.


4


நீங்கள் வெஸ்டர்ன் டானேஜர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அழகிய மஞ்சள் பறவை. மைனாவைவிடப் பெரியது ஆனால் காக்கையைவிடச் சிறியது. அரிய பறவை என சொல்லிவிட முடியாதுதான். வட அமெரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளின் பாலை நிலங்களில், பசிபிக்  கடற்கரைகளில் நீங்கள் இந்தப் பறவையை பார்த்திருக்கக்கூடும். அதன் அலகும் சிறகும் கரிய நிறத்தில் இருக்கும். ஆண் குருவியின் தலைக்கு மட்டும் அந்திச் சூரியனின் சிவப்பு. நான் பறவையியலாளன் அல்ல. பறவைகளை கவனிப்பவனும் இல்லை.

Featured Feathers: Western Tanager | by U.S. Fish & Wildlife Service |  Medium

இந்தப் பறவை எனக்கு நினைவிலிருக்க சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. லாஸ் அலமோஸுக்கு நான் சென்று சேர்ந்த முதல்நாள் அப்பறவையை ஓப்பி எனக்கு காண்பித்தார். மறைந்து கொண்டிருந்த சூரியன் முகில் முனைகளில் சுடரேற்றி இருந்தது.  ‘அழகிய பறவை. நெருப்பை தலையில் சூடிக்கொண்டிருக்கிறது பார். முகில் சிவப்பின் அதே நிறம்’ என சாம்பல்நிற வட்டத்தொப்பி அணிந்து எனது தோள்மீது கைபோட்டு பைப் புகைத்துக்கொண்டே சொன்னார். துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் காவல் காத்து சுற்றும் ஆய்வுக்கூடம் முதலில் எனக்கொரு விலக்கத்தை அளித்தது. அதை அவர் உணர்ந்திருக்கக்கூடும். ஆகவே அவரே என்னுடன் வந்து ஆய்வுகூடத்தைச் சுற்றி காண்பித்துக்கொண்டிருந்தார். அந்தக் கணம் அவர் மீது எழுந்த பெரும் வாஞ்சை இப்போது வரை நீடிக்கிறது. அவருக்காக நான் எதையும் செய்வேன் என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


ஓப்பி எங்களுக்கு அப்படித்தான். ‘ஐன்ஸ்டீன் கடவுள் என்றால் ஓப்பன்ஹைமர்தான் அவருக்கு பிறந்த ஒரே தேவகுமாரன்.’ என்பார்கள். அவருடனிருந்த காலத்தில் ஏறத்தாழ நான் உணர்ந்தது போலத்தான் அங்கே பெரும்பாலானவர்கள் உணர்ந்தார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் அவருக்கென அங்கு நண்பர்கள் என எவரேனும் இருந்தார்களா? அப்படி நாங்கள் யாராவது அவரை அறிந்த நண்பர் எனச் சொல்லிக்கொள்ள முடியுமா? தெரியவில்லை. கடலின் மத்தியின் தனித்து நின்றிருக்கும் பாறை. பிற்காலத்தில் அவருடைய வெவ்வேறு முகங்களை அணுக்கமாகக் கண்டிருக்கிறேன். அவற்றில் எது அசல் எது போலி என மருண்டிருக்கிறேன்.  பல இரவுகள்  அவரைக் கடுமையாக வெறுத்திருக்கிறேன். பெர்லின் மீதும் டோக்கியோ மீதும் குண்டு வேச வேண்டும் என சூளுரைத்தவரையா? நாகசாகி மீது இரண்டாம் குண்டு வீசப்பட்டபோது அமைதியிழந்து வருந்தியவரையா? தன் நண்பரையும் மாணவர்களையும் தன்னை காப்பாற்றிக்கொள்ள கம்யுனிஸ்ட் என சாட்சி சொன்னவரையா? ஹைட்ரஜன் குண்டை உருவாக்க ஆனமட்டும் தடைபோட்டவரையா? இயற்பியலாளர்கள் பாவத்தை அறிந்துவிட்டார்கள், எங்கள் கரங்களில் உதிரம் படிந்துள்ளது திருவாளர். ட்ரூமன் என தருக்கி நின்றவரையா? ஃபெர்மி விருதை ஏற்றுக்கொண்டவரையா? உண்மையில் எனக்கு எந்த ஓப்பியை தெரியும்? எவரையும் தெரியாது அல்லது எல்லோரையும் தெரியும்.  இப்போது ஓப்பி மரணமடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் யோசிக்கும்போது நான் மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து அதே வாஞ்சையை எதிர்பார்க்கும் முதிரா வளரிளம் பருவத்தவனாக இருந்திருக்கிறேன் என தோன்றுகிறது. எனது கசப்புகள் யாவும் ஓப்பி எனது எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யவில்லை என்பதில் வேர் கொண்டிருக்கிறது.

J. Robert Oppenheimer | Atomic Heritage Foundation

ஓப்பி, நாங்கள் ராபர்ட் ஓப்பன்ஹைமரை அப்படித்தான் அழைப்போம், ஓப்பியை எப்படி விவரிப்பது? ஒரு வேடிக்கையான நிகழ்வை நண்பர்கள் சொல்வார்கள். லாஸ் அலமோஸ் நிர்மாணிக்கப்பட்ட புதிதில் ஓப்பி தன்னை ராணுவத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினாராம். ஆனால் அதற்குரிய குறைந்தபட்ச உடல் எடையில்லை எனத் திருப்பி அனுப்பி வைத்தார்களாம். மாலை விருந்தில் அவரிடம் நண்பர்கள் இதைப்பற்றி கிண்டல் செய்தபோது ‘என்ன செய்ய சிந்தனையின் எடையை உடல் வெளிக்காட்டுவதில்லை’ என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னாராம். தான் இங்கில்லை எனக் காட்டும் வெளிர்நீலக் கண்கள் அவருக்கு. அவை பரிசுத்தமானவை. கிறிஸ்துவின் கண்களைப்போல. பரிசுத்தமானவற்றின் மீது இயல்பாக ஒரு துயரச் சாயல் கவிந்துவிடுகிறது. ஆனால் உள்ளரங்கு உரையாடல்களில் அதே கண்கள் துளைக்கும் கூர்மையைச் சூடிக்கொள்ளும். எனினும் அது வெகுநேரம் நீடிக்காது. ஒரு கவியின், அல்லது  அலைவுறும் கனவுலக வாசியின் கண்கள் அவருடையவை.


ஓப்பியை நான் பார்த்த அத்தனைமுறையும் ஒன்று அவர் பைப் புகைத்துக் கொண்டிருந்தார் அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பார். நான் பார்த்தவரையில் அவர் கையிலிருந்த புத்தகங்கள் அறிவியல் தொடர்பானவையாக ஒருபோதும் இருந்ததில்லை. என்ன புத்தகம் வைத்திருக்கிறார் என அறிந்துகொள்ள நான் சிரமப்படுவதை பார்த்துவிட்டு அவரே என்னிடம் புத்தகத்தைக் கொடுத்தார். அப்படித்தான் எனக்கு பகவத் கீதை அறிமுகம் ஆனது. அதன்பிறகு எப்போது என்னைச் சந்தித்தாலும் கையில புத்தகம் இருந்தால் அதை எனக்கு அளிப்பார்.


நான் ஒரு இளம் விஞ்ஞானியாக ஓப்பியை பெர்க்லேயில் அறிந்தவன். அவருடைய அழைப்பின் பேரில்தான் நானும் என்னைப்போன்ற வேறு பலரும் இங்கு வந்து சேர்ந்து கொண்டோம். விஞ்ஞானி என்பது ஒரு வாழ்க்கைமுறை என அவர் சொல்வதை உண்மையென நம்பி அதற்கென என்னை ஒப்புக்கொடுத்தவன். விஞ்ஞானியின் கடமை, அவன் இச்சமூகத்திற்கு ஆற்றும் சேவை என்பது அறிதலை பெருக்குவது மட்டும் தான். இப்போதும் நான் இதை நம்புகிறேனா? அன்றிருந்த உறுதியும் நம்பிக்கையும் எனக்கு இன்றில்லை. இரண்டாம் உலகப்போரை ‘இயற்பியலாளர்களுக்கு இடையிலான யுத்தம்’ எனச் சொல்வார்கள். மறுபுறம் ஜெர்மனியில் ஹீசன்பேர்க் அவர்களுடைய அணுத் திட்டத்தில் இருந்தார். அவர் முதல் தர பியானோ கலைஞர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தப் போரின் மன்னிக்கமுடியாத குற்றம் எது தெரியுமா? வரலாற்றில் காலந்தோறும் மானுடத் திரள் வெறும் பூச்சிகள் என நசுக்கப்பட்டு மறைந்தார்கள். ஆம் வெறும் பூச்சிகள். அதை மாற்றக் கனவு கண்ட கவிகளையும் கலைஞர்களையும் மேதைகளையும் இப்போர் குருதிச் சேற்றில்  இழுத்துவிட்டது. அவர்களைப் பேரழிவிற்குச் சாட்சியாக நிறுத்திக் கேலிப் பொருளாக்கியது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தாங்கள் ஆடையற்றவர்கள் எனும் தன்னுணர்வை புகட்டும் ஆபாசத்தைப்போல. நமக்கு உன்னதங்களும், தூய்மைகளும் ஒரு பொருட்டல்ல. சாதாரணதத்துவம் காலகாலமாக கருவாகச் சேர்த்து வைத்திருந்த வன்மத்தை எல்லை வெளிக்காட்டி கணக்குத் தீர்த்துக் கொண்டது.


லாஸ் அலமோஸ் உண்மையில் ஒரு தனித்தீவு. முன்னூறு மீட்டர் உயரமுள்ள தட்டை நிலம். அங்கே நாங்கள் ஒவ்வொன்றாகக் கட்டி எழுப்பினோம். வெளியே பெரும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் மனித உயிர்கள் ஆவியாகிக்கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் இங்கே வேறொரு உலகத்தில் அவற்றால் எவ்விதத்திலும் சீண்டப்படாமல் பணியாற்றிக்கொண்டிருந்தோம். இப்போது இதனை முடிவுக்கு கொண்டுவரும் ஆற்றல் அமெரிக்காவிற்கே இருப்பதாக உலகம் நம்பியது. ஐன்ஸ்டீன் ரூஸ்வெல்ட்டுக்கு அணு ஆற்றலை பயன்படுத்துமாறு கடிதம் எழுதியது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மன்ஹட்டன் செயல்திட்டம் உருப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக லாஸ் அலமோஸ் உருவாக்கப்பட்டது. அதுவரை கல்விக்கூடம், ஆய்வுக்கூடம் என முடங்கி இருந்த சூழலிலிருந்து அறிவியல் விடுதலை அடைந்ததாகத்தான் தொடக்கத்தில் நான் கருதினேன். ஒருவகையில் எங்கள் எல்லோருக்கும் உண்மையில் நகரத்தின் நெருக்கடியும் சந்தடியும் அற்ற விடுமுறை வசிப்பிடம் இது என்றே முதலில் தோன்றியது. உற்சாகமான நட்புக் கூடல்கள், கொண்டாட்டங்கள் என்றே தொடக்க நாட்கள் நகர்ந்தன. ஆனால் அடிப்படையில் இது ஒரு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வுக்கூடம். ஜெனரல் கிரோவ்ஸ் அதைக் காலப்போக்கில் மெல்ல உணர்த்தினார். ராணுவத்தின் உறுதியான கரங்கள் எங்களை நெருக்குவதை உணரமுடிந்தது. அது எங்களைப் பாதுகாக்கவும் தேசத்தைப் பாதுகாக்கவும் சூழ்ந்த கரங்கள் என்பதால் நாங்கள் அதிலிருந்து விடுபடும் துணிவையும் பெறவில்லை. படிப்படியாக ஒப்புக்கொடுத்தோம். ஆனால் ஓப்பி எல்லாவற்றையும் எதிர்கொண்டார். அதிகாரத்தை சமன் செய்யும் அறிவியலின் தரப்பாக எங்களுக்காக நின்றார். அல்லது அப்படித்தான் நாங்கள் எண்ணினோம். அறிவியலாளர்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு விவாத அமைப்பை ஏற்படுத்த விரும்பினோம். கிரோவ்ஸ் அதில் எங்கள் துறை சார்ந்தவற்றை தவிர வேறு எதுவும் பேசப்படுவதை விரும்பவில்லை. எதையும் விவாதிக்கலாம் என அவரை ஏற்க செய்தது ஓப்பிதான்.


ஏழரைக்கு காலை மணி ஒலிக்கும். ஒவ்வொருநாளும் என் வசிப்பிடத்திலிருந்து பணிக்குச் செல்லும்போது டானேஜர் பறவைகளைக் கண் தேடும். சில நாட்கள் அதை காணாமலேயே அலுவலகத்திற்குச் செல்ல நேரிடும்போது மனம் பணியில் நிலைகொள்ளாது. இது வெறும் மூடநம்பிக்கைதான், அற்பமான மிகையுணர்வு என்றெல்லாம் என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆனால் அவை எதுவும் சோர்வையும் பாதிப்பையும் ஆற்றுவதில்லை. அப்படியான ஒரு நாளில் ஓர் உள்ளரங்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தபோது சாளரத்தின் வெளியே டானேஜர் பறவையின் குரலைக் கேட்டதும் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அணு குண்டை எடுத்து செல்வதற்குரிய ‘ஜம்போ’ உருவாக்கத்தில் உள்ள சிக்கலைப் பற்றி ஓப்பி பேசிக்கொண்டிருந்தார். எனது கவனச் சிதைவும் அந்த பறவையின் ஓசையும் அவரைத் தொந்தரவாக்கியிருக்க வேண்டும். சட்டென உரையை நிறுத்திவிட்டு நேரே என்னை நோக்கினார். மொத்த அரங்கும் என்னை நோக்கித் திரும்பியது. நான்கைந்துமுறை பைப்பில் இழுத்து புகைவிட்டார். பறவையின் ஓசை ஒரு நிமிடத்தில் மறைந்து போனது. என்னைப் பார்த்து ‘தொடரலாமா?’ எனக் கேட்டுவிட்டு மீண்டும் உரையைத் தொடர்ந்தார். அன்றைய இரவு என்னை அவருடைய வசிப்பிடத்திற்கு அழைத்தார். வான்காவின் ஓவியங்களை பற்றிப் பேசியபடி ஒயின் அருந்தினோம். காலை நிகழ்வு குறித்து ஒரு சொல்கூட நாங்கள் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் எல்லாம் இயல்பாகியிருந்தது.


காலை அலுவலக முதல் மணி ஒலித்து நாங்கள் செல்லும்போதே ஓப்பி அவருடைய அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். ஒருமுறையாவது அவருக்கு முன்பே பணிக்கு செல்ல வேண்டும், அதை அவர் பார்த்து வியக்க வேண்டும் எனும் அற்ப ஆசை எனக்கிருந்தது. ரோட்ப்லாட்டிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது “அப்படியென்றால் நாம் முந்தைய நாள் இரவு வீடு திரும்பாமல் அங்கேயே இருந்துவிட வேண்டும்” எனக் கேலி செய்தான்.  மாலை பணி முடிந்து செல்வதற்கென ஒலிக்கும் மணியோசைக்கு பொருளேதும் இல்லை. நள்ளிரவு வரைகூட எங்கள் பணி நேரம் நீளும். ஒருமுறை எங்கள் துறைக்கும் நீர் அறிவியல் துறைக்கும் இடையே நீராவிப் பயன்பாடு சார்ந்து மிக முக்கியமான சர்ச்சை. ஒரு முடிவிற்கு வரமுடியாமல் நள்ளிரவைத் தாண்டி இரு தரப்பினரும் வாதித்து கொண்டிருந்தோம். ஓப்பி உள்ளே வந்ததும் இரு தரப்பினரையும் ஐந்து நிமிடங்களுக்குள் தத்தமது யோசனைகளையும் மறுப்புகளையும் எடுத்துரைக்கச் சொன்னார். ஓப்பியின் நிபுணத்துவம் இத்துறைகளில் இல்லை என்பதால் இதில் அவர் பங்களிக்க ஏதுமில்லை என்பதே என் உணர்வாக இருந்தது. எனினும் நாங்கள் எங்கள் தரப்புக்களை விளக்கிச் சொன்னோம். மேஜையில் கால் பின்னி சாய்ந்துகொண்டு பைப் புகைத்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் நிதானமாக இருவரின் கருத்துக்களையும் தொகுத்து மூன்று மூன்று புள்ளிகளாக எழுதிவிட்டு அவற்றில் உள்ள பொதுத்தன்மைகளை சுட்டிக்காட்டி இரு தரப்புகளும் ஒன்றையே சொல்வதாக நிறுவியபோது உண்மையில் எனக்கு வியப்புத் தாங்கமுடியவில்லை. எல்லோரும் ஆம் என உணர்ந்துகொண்டு கைகுலுக்கி, செயல்திட்டத்தை இறுதி செய்தோம். நிபுணத்துவம் அறிவியலைத் துண்டாடிய ஒரு யுகத்தின் இறுதி அறிஞன் என ஓப்பியைச் சொல்ல முடியும்.

Joseph Rotblat - Wikipedia

எங்கள் ஆய்வுகூடத்திலும் கட்டுமானத்திலும் எங்களுக்கு பணிகள் பிரித்தளிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவும் அவரவர் பணியைச் செய்தால் போதும். அந்தக் குழுவிலும் தனித்தனி  மனிதர்களுக்கு பணிகள் மேலும் நுண்மையாக வகுத்தளிக்கப்பட்டன. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் என மூன்று வர்க்கத்தினரும் சேர்ந்து உழைத்தோம். பகுதிகளாக பணி பிரித்தளிக்கப்பட்டபோது அவற்றின் ஒட்டுமொத்த விளைவைப் பற்றி நாங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்பட்ட பணிக்குப் பாராட்டுக் கிடைத்தது. ஒரு விண் அளக்கும் பேருருவை அதன் விரல் நகத்தை செதுக்குபவனால் கற்பனை செய்ய முடியாது. நகத்தைச் செதுக்குபவன் நுண்மைகளை சேர்த்துக்கொண்டே செல்வான். அவன் பிய்த்து வீசப்போகும் மரங்களுக்கும் தான் செதுக்கிய நகத்திற்கும் தொடர்பில்லை என்றே எண்ணிக்கொள்வான். ராணுவம் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டிற்குள் நிர்வகித்தது. ஒவ்வொரு நிலையிலும் ரகசியம் பேணப்பட்டது. நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்த இந்த பூதத்தின் மொத்த வடிவத்தை அறிந்த ஒரே நபர் ஓப்பியாகத்தான் இருக்கமுடியும்.


முதல் அணுகுண்டு சோதனைக்காக தேர்வு செய்யப்பட இடத்திற்கு ஓப்பிதான் ‘ட்ரினிடி’ என ஜான் டானின் கவிதையிலிருந்து எடுத்து பெயர் சூட்டினார். ரோட்பிலாட் ஏறத்தாழ அணுகுண்டு உருவாக்கத்தின் இறுதிக்கட்டத்தில் தான் எங்களுடன் இணைந்து கொண்டான். மாலை நடை இருவரும் ஒன்றாக உலாவினோம். குறுகிய காலத்தில் சில முக்கியமான முடிவுகளில் அவனுடைய பங்களிப்பு இருந்தது. கவிதை, மெய்யியல், இலக்கியம் என ஓப்பியின் கையாளத்தக்க இளைய வடிவமாக அவனிருந்தான் என்பதே அவனை எனக்கு நெருக்கமாக்கியது.


என் நினைவு சரியென்றால் ட்ரினிட்டி சோதனைக் காலத்தில் அங்கே ஊழியர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் என குறைந்தது எட்டாயிரம் பேர் இருந்திருப்போம். அது ஒரு சிறிய நகரமானது. ஓப்பியை இக்காலக்கட்டத்தில் கையில் புத்தங்களுடன் காண்பது அரிதானது. எப்போதும் புகைத்துக்கொண்டே இருந்தார். உள்ளரங்கக் கூட்டத்தில் பெர்லின் மீதும் டோக்கியோ மீதும் நிச்சயம் நாம் அணு குண்டை வீசுவோம். இந்தப் போரை நிறுத்துவோம். போரில்லாத உலகத்தை நாம் உருவாக்குவோம்’ என பலத்த ஆரவாரத்திற்கு இடையே பேசினார். சிலிர்த்து மகிழ்ந்திருந்த கணத்தில் ரோட்பிலாட் கைகட்டி மெளனமாக என்னருகே நின்றிருந்ததைக் கவனித்தேன். அவனிடம் உரையாடுவதற்குள் அவன் அங்கிருந்து வெளியேறி தனித்து நடந்துகொண்டிருந்தான். அன்றிரவு அவனைச் சந்திக்கச் சென்றேன். “இது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லையா? ஏன் சோர்வாக இருக்கிறாய்?” எனக் கேட்டேன். முட்டியில் கையை கட்டிக்கொண்டு தலை புதைத்து அமர்ந்திருந்தான். “சொல். நாம் யூதர்கள். இது நமக்கான வாய்ப்பு. நம் அறிவைத் திரட்டி பழிநிகர் செய்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு. அவன் கொன்று குவித்த நம் நண்பர்களின் உறவினர்களின் முகங்கள் உனக்கு நினைவில்லையா? இப்போது என்ன தயக்கம்?” தலை நிமிர்த்தி நோக்கினான் “நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த உலக அமைதி எனும் கட்டுக்கதையை நம்புகிறாயா?” “நிச்சயம் சாத்தியம். அணு குண்டிற்கு பயந்தே நாம் போர்களைக் கைவிடுவோம். இது ஒரு மிக முக்கியமான பேர் ஆற்றலாக இருக்கும்.” என்றேன். அவன் உதடைச் சுழித்து சிரித்தபோது அதில் கசப்பு மண்டியிருந்தது. “நண்பா உன்னைப்போல் தெளிந்த நம்பிக்கை எனக்கும் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்” என்றான். அந்த இரவுக்கு பிறகு நான் அவனை லாஸ் அலமோஸில் காணவில்லை. ஆனால் அவன் அங்கிருந்து செல்வதற்கு முன் எனக்குள் சிறு பிளவை ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றான்.

Edward Teller | American physicist | Britannica

ஓப்பி ‘கேட்கட்’ சோதிக்கப்படவிருந்த தேதியை இறுதி செய்த கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறும்போது மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றார்கள். இறுதியாக எஞ்சியவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. மெதுவாக நடந்தோம். ‘நீ இப்போதும் கவிதைகள் வாசிக்கிறாயா?’ எனக் கேட்டுவிட்டு பைப்பை பற்றவைத்துக்கொண்டார். “ஆம். தினமும்” என்றேன். “நல்லது. அறிவியலால் நமது எல்லா கேள்விகளையும், தேவைகளையும் எதிர் கொண்டுவிட முடியாது. இலக்கியமும் கலையும் மட்டுமே நம் காதில் கிசுகிசுக்கும் பதில்கள் உண்டு. அவை முக்கியமானவையும் கூட” நீலக்கண்களில் பைப்பின் சிறிய கனல் ஒளிர்ந்தது. அவருடைய வசிப்பிடம் வரை மெளனமாகச் சென்றோம். உள்ளே செல்வதற்குமுன்,  “நான் பலகையை மிதித்தேன்/ அழுது அரற்றினேன்/ ஆனால் இனியில்லை/ நானும் இணைந்துவிட்டேன்/  என்ன? நான் இனி ஏன் ஏங்கவும் புலம்பவும் போகிறேன்?/ என் வரிகளும் வாழ்க்கையும் விடுதலையடைந்தன/ ஒரு சாலையைப் போல்/ காற்றைப்போல் தளர்வாக, கிடங்கை போல் விசாலமாக/ இனியும் நான் வருந்துவேனா?” எனச் சொல்லிவிட்டு புகையை ஆழமாக வெளியேற்றிவிட்டு  “நல்லிரவு”  கூறி  வீட்டிற்குள் புகுந்துகொண்டார். அச்சொற்கள் தீயெனச் சுட்டன. அன்றிரவு முழுக்க தேடி அது ஹெர்பர்ட்டின் ‘கழுத்துப்பட்டை’ எனும் கவிதை என்பதைக் கண்டுகொண்டேன். ஹெர்பர்ட் ஒரு பாதிரியார். அவருக்கு அது தேவாலயம் எனும் கழுத்துப்பட்டை அல்லது மதம் எனும் கழுத்துப்பட்டை. அதற்காக புலம்பி அழும் ஒருவன் மெய்யான இறை அழைப்பை செவி கூர்ந்ததும் அதுவரையிலான புலம்பல் மறைவதாக பொருள் கொள்ளத்தக்க கவிதை.  சட்டென எனக்கு வியர்த்தது. ஓப்பியின் கழுத்துப்பட்டை எது? புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கண்ணை மூடியபோது ரோட்பிலாட்டின் முகமும் ஓப்பியின் முகமும் தோன்றி மறைந்தன. அந்தக் கவிதையை பித்தனைப்போல் இரவெல்லாம் திரும்பத் திரும்ப கண்ணில் நீர வர வாசித்தேன்.


மஞ்சள் பறவை என் அறையின் சாளரத்தில் அமர்ந்து கிறீச்சிட்டதை கேட்டு விழித்தபோது பொழுது புலர்ந்திருந்தது. என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாகக் கற்பனை செய்துகொண்டேன். ஹெர்பர்ட்டின் ஈஸ்டர் சிறகுகள் கவிதையை எடுத்து அவற்றுக்கு வாசித்து காண்பித்தேன். ‘ஒத்திசையும் வானம்பாடிகளைபோல் நான் எழவேண்டும்/  இந்நாளில் அவன் புகழ் பாட வேண்டும்/ அந்தியில் என் பறத்தல் இன்னும் இன்னுமென நிகழட்டும்’ அவற்றுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.


ஓப்பி எப்போதும் இப்படித்தான்.  குழப்பமும் சிக்கலும் சூழ இருக்கும்போது நேரடியாக, திட்டவட்டமாக எதையும் சொல்வதைத் தவிர்ப்பார். ஆனால் அவ்விடத்தைக் கவிதை வரிகள் எடுத்துக்கொள்ளும். கீதையைப்போல் ஜார்ஜ் ஹெர்பர்ட்டை நான் அறிந்துகொண்டதும் அவர் வழியாகதான். அறையைச் சுற்றிச் சுற்றி கையைத் தேய்த்தபடி விறுவிறுவென  நடக்கிறார் என்றால் அப்போது அவரை ஏதோ ஒரு கேள்வி ஆட்கொண்டிருக்கிறது எனப் புரிந்துகொள்வோம். மீண்டும் மீண்டும் வாழ்க்கை எனும் எண்ணற்ற ஊடு வழிகள் கொண்ட வசீகர மர்மத்தை எப்படி வகுத்துக்கொள்வது என்பதைப் பற்றியே அவர் அதிகம் பேசினார்.


கேட்கட்’அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. அதைக் கொண்டு செல்ல ஜம்போ எனும் ஒரு பெரும் கலனை உருவாக்கினோம். ஹிட்லரின் மரணம் போரின் காட்சிகளை முற்றிலுமாக மாற்றியிருந்தன. ஹங்கேரிய யூத விஞ்ஞானி சிலார்ட் ஓர் அறிக்கையைத் தயாரித்து இந்த அணுகுண்டுப் பயன்பாட்டை நிறுத்தவேண்டும் எனக் கோரினார். நானும் அதில் கையெழுத்து இடவிருந்தேன். ஆனால் அந்தச் சுற்றறிக்கை விஞ்ஞானிகளுக்கு போய் சேராமல் ஓப்பியும் கிரோவ்சும் பார்த்துக்கொண்டது எனக்கு கடும் கசப்பை ஏற்படுத்தியது. சிகாகோ அறிவியல் வட்டாரத்தில் ஜப்பான் மீது பயன்படுத்துவதற்கு மாற்றாக உலகறிய நமது ஆற்றலை அறியச் செய்யும் சோதனையை நடத்திக்காட்டலாம். எனச் சொன்னார்கள். ஓப்பி அது எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. அரசாங்கமும் அதற்கு செவிசாய்க்கப் போவதில்லை என்றார். ஜோசப் ரோட்ப்லாட் இங்கிலாந்திற்குச் சென்று சேர்ந்திருந்தான். அவன் எழுப்பிய அறக் கேள்விக்கான பதிலாக அவனொரு  சோவியத் உளவாளி என எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஓப்பி இதைப்பற்றி எதுவும் பேசாமல் இருந்தது என்னைக் குழப்பியது. அவர் அதை அங்கீகரித்தோ, மறுத்தோ எதுவுமே பேசவில்லை. ஓப்பியும் கம்யுனிஸ்ட் என்பதால்தான் அவர் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை என்றார்கள். ஓப்பி ரோட்பிலாட் மீதான அவதூறை பகிரங்கமாக மறுத்து அறிவியல் உலகின் நம்பகத்தன்மையை காப்பாற்றியிருக்க வேண்டும் என்றார்கள்.


ஓப்பியை தனியாகச் சந்திக்க முயன்றேன். வெகுவாகக் களைத்திருந்தார். எப்போதும் எவரோ அவருடன் இருந்தார்கள். நான் அவரிடம் ரோட்பிலாட் பற்றிக் கேட்க விரும்பினேன். என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். எப்போதும் வேலையில் மூழ்கியிருப்பதாக காண்பித்துக்கொண்டார். ஒருநாள் பிடிவாதமாக அவருடைய அறையில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருந்தார்கள். எப்படியும் என்னைசத சந்தித்தே ஆகவேண்டிய நேரம் வரும் எனக் காத்திருந்தேன். எட்வர்ட் டெல்லரும் அவரும் மட்டுமே இருந்தார்கள். டெல்லர் ஒரு வரைபடத்தை காட்டி ஏதோ விவாதிக்க யத்தனித்தார். அவரை நிறுத்திவிட்டு. எழுதிக்கொண்டிருந்த தாளிலிருந்து விழி தூக்கி ‘என்ன?’ என்பதுபோல் நேராக என்னை நோக்கினார். ‘உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்..’ என்றேன். “பரவாயில்லை சொல். டெல்லர் மட்டும்தான் இருக்கிறார்” என்றார். “இல்லை..ரோட்பிலாட் பற்றி…” இருக்கையிலிருந்து எழுந்து அறையின் சாளரத்தருகே நின்றபடி “எனது கடவுளே, எனது மன்னவனே, நான் காணும் எல்லாவற்றிலும் உன்னைக் காண்பதற்கும், புரியும் அனைத்தும்  உன்பொருட்டுதான் என எனக்குக் கற்றுக்கொடு’ எனச்சொல்லிவிட்டு  டெல்லரை நோக்கினார். அது ஹெர்பர்ட்டின் எலிக்சிர் கவிதை.


எட்வர்ட் டெல்லர் அன்று ஒப்பிக்கு இணக்கமானவர். என்னை நோக்கி புன்னகைத்தபடி “நண்பா, நன்றாகக் கவனித்துக் கேள், எது நல்லது? எது உண்மை? எது அழகானது? என மூன்று கேள்விகளை பிளாட்டோ போன்ற மெய்யியலாளர்கள் எழுப்பி இருக்கிறர்கள். அவற்றை எதிர்கொள்வது முக்கியம் என எண்ணுகிறேன். ஆனால், நான் அவருடன் முரண்படுகிறேன். இவை மூன்றும் தனித்தனியான கேள்விகள் என்பதே என் புரிதல். இதில், எது உண்மை என்பது மட்டுமே நமக்கான கேள்வி, அதாவது இது விஞ்ஞானியைப் பொருத்தது, எது நல்லது என்பது அரசியல்வாதியை பொருத்தது அல்லது மதத் தலைவர்களைப் பொருத்தது, எது அழகானது என்பது கலைஞனைப் பொருத்தது. இவை மூன்றும் முக்கியமான கேள்விகள்தான் ஆனால் இவை எவையும் பிற பதில்கள் என்ன என்பதை பொருத்து தீர்மானிக்கப்படக்கூடாது. புரிகிறதா?” அவருக்கு எக்காலத்திலும் எந்தக் குழப்பமும் வந்ததில்லை. ஒரு மொந்தையான சமாதானம். ஆனால் அன்று அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஓப்பி அதை மறுக்கவும் இல்லை. ஆகவே அதை இறுகப் பற்றிக்கொண்டு வெளியேறினேன்.


வாழ்நாள் முழுவதும் இதே திடமான நம்பிக்கையுடன், ஒருவகையில் அப்பாவியாக,  இத்தகைய குழப்பங்கள் ஏதுமற்றவனாக இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது. ஓப்பியின் குரலில் ஒலித்த எலிக்சிர் வரிகளை மறக்க முயன்றேன். டெல்லரின் சொற்களை மந்திரம்போல் மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். ஆனால் மனம் ஓய்ந்த கணத்தில் கவிதை ஒலிக்கத் தொடங்கியது. ஆழ் கிணற்றின் இருண்ட நலுங்கள் என உணர்ந்தேன்.  லாஸ் அலமோஸ் என் வாழ்வின் ஆக இனிமையான காலகட்டம் என்றே என் மனதில் இருந்தது. இப்போது நான் அந்நினைவுகளை எவருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. எனது லாஸ் அலமோஸ் தொடர்பை முற்றிலுமாக மறைத்துக்கொண்டே கல்லூரியில் பாடம் நடத்தி ஒய்வு பெற்றேன். ஆனால் இன்றும் தனிமையில் அந்நினைவுகள் இனிமையானவையாகவே உள்ளன. ஓப்பி என்னதான் செய்திருக்க வேண்டும்? ஐன்ஸ்டீன் அல்லது சில்லார்ட் அல்லது ரோட்பிலாட் போல இருந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் இவர்கள் எவரும் அதிகாரத்தை நெருங்கியவர்கள் அல்ல. வேறெந்த விஞ்ஞானியும் அதுவரை அறிந்திடாத அரசியல் ஆற்றலை ஓப்பி அடைந்தார். அதன் ஆட்டங்களை அணுக்கமாக அறிந்தவர். பின்னர் அவரைவிட சாதுர்யமாக விளையாடத் தெரிந்தவர்களால் வெளியேற்றப்பட்டார்.


முதன்முறையாக நான் அணுகுண்டு சோதிக்கப்பட்டவிருந்த ட்ரினிட்டி களத்திற்கு சோதனைக்கு ஒரு வாரம் முன் சென்றேன். புதர் செடிகள், குட்டை மரங்கள் கொண்ட பாலை. டானேஜர் பறவைகள் வேலிகளில் அமர்ந்து ஓசையிட்டுக் கொண்டிருந்தன.  ஓப்பி பைப் புகைத்தபடி எழும்பியிருந்த கோபுரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்த பறவைகளுக்கு என்னவாகும் எனக் கேட்கவேண்டும் எனத் தோன்றியது. அவரருகே சென்று நின்றேன். அவரும் டெல்லரும் குண்டின் ஆற்றல் என்னவாக இருக்கும் என கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரம் நூறு கிலோ மீட்டர் வரை இதன் அதிர்வை உணரமுடியும் என்றார் டெல்லர் உற்சாகமாக. இந்தக் கேள்வியை கேட்பது எத்தனை அபத்தமாக இருக்கும் என்று உணர்ந்தேன். அங்கிருந்து நகர்ந்து செல்வதை நோக்கிய ஓப்பி என்னை அழைத்தார்.  “என்னுடன் நீயும் வருகிறாயா? நாம் கம்பானியன் குன்றிலிருந்து இதை நோக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எப்படியும் இங்கிருந்து இருபது கிலோ மீட்டர்கள் இருக்கும். ஜெனரல் க்ரோவ்சிடம் சொல்லவா?” என கேட்டார். “இல்லை நான் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்தே கண்டுகொள்கிறேன்” என்றேன். ஓப்பியின் துளைக்கும் விழிகள் என்னைத் தொட்டு மீண்டன.


ஒரு பெரும் எந்திரம்போல் தன்னுணர்வு ஏதுமற்று எல்லோரும் உழைத்து கொண்டிருந்தோம். முந்தையநாள் இரவு ஓப்பியிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. என்னையும் ஏற்றிக்கொண்டு கம்பானியன் ஹில்லுக்கு செல்லவேண்டிய ராணுவ வண்டி புறப்பட்டது. எந்த பட்டியலிலும், எந்த ஆவணங்களிலும் எனது இருப்பு பதிவாகவில்லை. அது க்ரோவ்ஸ்க்கு ஓப்பி அளித்த உறுதிமொழி என என்னருகே அமர்ந்து வந்த ஓப்பியின் சகோதரர் ஃபிராங் என்னிடம் கூறினார். நாங்கள் நள்ளிரவு அங்கே சென்று சேர்ந்தோம். ஒப்பி இரவு உறங்காமல் குறுக்கும் நெடுக்கும் புகைத்தபடி நடந்துகொண்டிருந்தார். அவர் கையிலிருந்த பகவத் கீதையின் ஏதோ ஒரு பக்கத்தை அவ்வப்போது விரித்து வாசிப்பதும் மூடுவதுமாக கழித்தார்.


நாற்காலியில் சாய்ந்தபடி கண்ணயர்ந்தேன். ஒரு கிணற்றைச் சுற்றி டானேஜர் பறவைகள் பறக்கின்றன. பலர் அதை சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக அதில் குதித்து எழுகிறார்கள். இறுதி வரை ஒரேயொருவன் குதிக்கத் தயங்கியபடி நிற்கிறான். இறுதியில் அவனும் குதித்து நெடுநேரம் கழித்து எழும்போது அவன் கையில் கேட்கட் இருந்தது. வெளிர்நீலக் கண்களுடன் முழுக்க நனைந்த ஓப்பி நிர்வாணமாக நின்றார். சட்டென எழுந்தேன். ஓப்பி புகைப்பதை நிறுத்தவில்லை.


ஜூலை 16, 1945. அதிகாலை மூன்று மணிக்கு எல்லோரும் தயாராகத் தொடங்கினோம். எல்லோரும் இந்த சோதனையின் விளைவை பற்றி ஊகங்களைச் சொல்லி பந்தயம் கட்டினார்கள்.  ஆனால் யாருக்கும் என்ன நடக்கும் எனத் தெரிந்திருக்கவில்லை. ஓப்பி நேரத்தை பார்த்துகொண்டு தொலைவானை நோக்கியபடி இருந்தார். அவருடைய பகவத் கீதை பிரதியை கையில் எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன். நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தாமதமானது.  சரியாக காலை ஐந்து இருபத்தி ஒன்பது மணிக்கு நான் அதைக்கண்டேன்.

Trinity Test Eyewitnesses | Atomic Heritage Foundation

அது ஒரு பேரொளி. ஆழத்திலிருந்து பொங்கி வருவதுபோல் இருந்தது. அதைத்தொடர்ந்து பெரும் ஓசையும் அதிர்வையும் நாங்கள் உணர்ந்தோம். என்னால் எவரையும் கவனிக்க முடியவில்லை. பிழம்பு என தீ நிறம் கொண்டது. பொன் மஞ்சள் நிறமானது. பிறகு பழுப்பும் வெள்ளையுமாக மாறி ஒருவித ஊதா நிறத்தைக் கொண்டது. சில களிப்பின் சிரிப்பொலிகள் காதில் விழுந்தன. சில கேவல்கள் அழுகுரல்களை கேட்டேன். ஃபிராங்கும் ஓப்பியும் என்னருகே நின்றிருந்தனர். ஓப்பியின் முகத்தில் ஒரு பெரும் அமைதி குடி கொண்டிருந்தது. ஃபிராங்கை நோக்கி திரும்பி “அது வேலை செய்துவிட்டது” எனச் சாதாரணமாக கூறி கைகுலுக்கி தோள் தழுவிக்கொண்டனர். பிறகு என்னை நோக்கித் திரும்பினார். “உனக்கு இந்த அனுபவம் எப்படி தோன்றுகிறது?” கையிலிருந்த பகவத் கீதையை பிரித்து அதிலுள்ள ஒரு பக்கத்தை அவரிடம் சுட்டிக்காட்டினேன். “நானிப்போது காலப் பேருரு, உலகையழிக்க வந்திருப்பவன்”. அவருடைய கண்கள் சுருங்கி விரிந்தன. வேறொரு பக்கத்தை புரட்டி அதை என்னிடம் திருப்பி அளித்தார். “வானில் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக தோன்றினாலும்கூட இந்த மகத்தான வடிவத்திற்கு அது ஈடாகாது.” என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.


பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நேர்காணலில் ஓப்பி இந்த மேற்கோளை ‘ட்ரினிட்டியின்’ போது நினைத்துகொண்டதாகச் சொன்னார். ஆனால் இந்த வரிகளை வந்தடைய,  சோவியத் அணு குண்டைத் தயாரிக்க வேண்டி இருந்தது, பனிப் போர் வரவேண்டி இருந்தது, ஹைட்ரஜன் குண்டு வரவேண்டி இருந்தது, கம்யுனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு அரசின் அண்மையிலிருந்து வீசி எறியப்பட வேண்டி இருந்தது.


அன்றிரவு விருந்தில் எல்லோரும் தத்தமது சொற்களில் அன்றைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். கடவுளின் கண் எனத் தெரிந்தது, ஒரு பெரும் காளான் குடை என விரிந்தது, பூமியில் ஒரு சூரியன் உதித்தது, ஆலமரத்தை போலிருந்தது என சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் முறை வந்தது. “பூமியின் ஆழத்திலிருந்து அதன் நரகத்தீ ஒரு கரமாகி பொத்துக்கொண்டு விண்ணைக் குத்தியது போலிருந்தது” என்றேன். எல்லாவற்றிலிருந்தும் விலகிய அந்த வெளிர்நீலக் கண்கள் சட்டென மின்னி மறைவதைக் கண்டேன்.


மறுநாளே நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். ஆனால் முடியவில்லை. நான் இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்னும் சில மாதங்கள் லாஸ் அலமோஸில் தொடர்ந்தேன். அங்கிருந்து வெளியேறும் வரை நான் மீண்டும் ஒருமுறைகூட என் பிரியத்திற்குரிய மஞ்சள் பறவையைக் காணவே இல்லை. ஆனால் அவை நேற்றிரவு வரை என் கனவில் மீண்டும் மீண்டும் பிறந்து பறந்து கிறிச்சிட்டு சாம்பலாகிக்கொண்டே இருந்தன.

--

https://suneelwrites.blogspot.com/2019/05/1.html - சிங்கப்பூர் மலேசிய பயணம் -1


https://suneelwrites.blogspot.com/2019/05/2.html- பகுதி- 2