Sunday, November 3, 2019

களி


(2019 ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வெளியான கதை. சற்றே தணிக்கை செய்யப்பட்டு இந்தக்கதை மலரில் வெளியானது. இங்கே தணிக்கை எய்யாமல் அளிக்கிறேன்) 

விசையுடன் சுந்தரின் அடிவயிற்றை நோக்கி சீறி வந்த இறகுப் பந்தை தடுப்பதற்கு முடியவில்லை. அடிவயிறு சுரீர் என எரிந்தது. கணேசன் எகிறிக் குதித்து ஸ்மாஷ் அடித்து முடித்ததும் முதுகை வளைத்து ஷட்டில் ராக்கெட்டை அவருடைய ஆண்குறிக்கு நேராக ஆட்டி “ஒம்மால..” என்றார். ஒவ்வொருமுறை புள்ளி எடுக்கும்போதும் இப்படிச் சரளமாக ஏதோ ஒரு ஆபாச வசை வந்து விழும்.  வியர்த்து சோர்ந்து தலைக் கவிழ்ந்து நடந்தான். நெஞ்சுக்கூட்டில் இதயம் அதிவேகமாக அதிர்ந்தபடி இருந்தது. உடல்முழுவதும் அதன் துடிப்பை உணர்ந்து கொண்டிருந்தான். ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசிக்க முயன்றான். இப்போதெல்லாம் வழமைக்கு மீறி இதயம் துடிக்கும்போது அச்சத்தால் உடல் மேலும் வியர்த்து ஒழுகுகிறது. அண்மைய சில மாதங்களாக ஆடுகளத்தில் மட்டுமே அவன் இந்த பதட்டத்தை உணர்கிறான். ஏழு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனுடைய தந்தை சந்திரன் இதே ‘நந்தவனம்’ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் ஆட்டத்தின் உச்சக் கணத்தில்  மயங்கிச் சரிந்தார். மருத்துவமனைக்குள் நுழைந்தபோதே சடலம் என அறிவித்தார்கள் மாரடைப்பு உயிரை நிறுத்தியிருந்தது. அதன்  பின் ஒவ்வொருமுறை ஆடுகளத்தில் இதயம் கட்டு மீறும் தோறும் சுந்தர் அச்சத்தால் பீடிக்கப்பட்டான். ஆவேசமும் ஆற்றாமையும் சேர்ந்துக்கொள்ளும். நெற்றிப்பொட்டில் நாளத் துடிப்பை உணர்வான். அப்போது அவனுடைய முகமும் கரங்களும் சில்லிட்டு உணர்வற்று போகும்.  

தனித்து தளும்பிக் கொண்டிருக்கும் கீழ் ரப்பைகளும் ரத்தச் சிவப்பு சிடுக்குவரிகள் பாயும் கண்களும் கணேசனை பெரும் குடியன் என நிறுவும். பனியனைக் கழட்டி வியர்வையைப் பிழிந்தார். “என்ன சார் நைட்டு குடிச்ச பீரெல்லாம் வேர்வையா ஊத்துதா” சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜேஷ், விளையாட்டில் சில மாதங்களாக அவருடைய இணை. மெலிந்த தேகம். அவர் உடல் சற்றே கூடுகட்டி விலா எலும்புகள் ஆர்மோனியக் கட்டைகள் போல் மேலும் கீழுமாக துருத்திக்கொண்டிருந்தன. குடியர்களுக்கே உரிய பானை வயிறு. “ராஜேஷு அதெல்லாம் ஒன்னுக்கு வரதாவைங்க குடிக்கிறது. நமக்கு எதுக்கு அந்த கருமம். எப்பவுமே ஹாட் தான்”. சுந்தர் நிலைக்காற்றாடிக்கு முன் தன்னை உலர்த்திக் கொண்டிருந்தான். இதயத் துடிப்பு இன்னும் சமனடையவில்லை. விளையாட்டு அரங்கத்தின் கூரைத் தகரத்தில் விழுந்த தூறல் பேரோசையாக உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஷட்டில் ராக்கெட்டை எரிச்சலில் அசட்டையாக நாற்காலியின் மீது வீசினான். கணேசன் நமுட்டுச் சிரிப்புடன் அவனைக் கடந்தார். 

ஒரேயொருமுறை ஒருமுறை இந்தக் கிறுக்குக் கிழவனை வென்றாக வேண்டும். இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட அது இயலவில்லை எனும் எண்ணம் ஆற்றமையாக அவனுள்ளிருந்து குமைந்தது. முன்பைப்போல் அவர் இப்போது ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல. மற்ற இரண்டு இணையர்களிடம் அவ்வப்போது தோற்றிருக்கிறார். அவரை வென்றவர்களை சுந்தர் பலமுறை வென்றிருக்கிறான். இன்று என்றும் இல்லாத அளவிற்கு வெற்றிக்கு வெகு அண்மையில் இருந்தான். எப்போதும் வலையை சீய்த்துக்கொண்டு வரும் கணேசனின் ஸ்மாஷ்கள் வலையைக் கடக்க முடியாமல் திணறின. வெகு அரிதாகவே அவர் அடிப்பது களத்திற்கு வெளியே விழும். அன்று ஏதோ லயப் பிசகு போல் நான்கைந்து முறை இறகுப்பந்து வெளியே சென்று விழுந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சுந்தரும் சந்தானமும் முன்னிலையில் இருந்தார்கள். ஒருகட்டத்தில் 19-13 என்ற புள்ளிக் கணக்கில் ஏறத்தாழ வென்றுவிட்ட மதர்ப்புடன் இருந்தபோது கணேசன் தொடர்ச்சியாக எட்டுப்புள்ளிகள் எடுத்து ஒற்றை ஆளாக அவர்களை மூச்சிறைக்கச் செய்து வென்றார். அவர் வயதிற்கு சந்நதம் கொண்டவர் போல் ஆடினார். ஆடுகளத்தின் எல்லா மூலைகளுக்கும் முழு விசையுடன் ஓடினார். டிராப்பும் ஸ்மாஷும் மாறி மாறி விழுந்தன. இறுதி புள்ளிக்காக மட்டும் இரண்டு நிமிடம் போராடினார்கள். ஆனால் எல்லாம் வீண். 

கணேசன் அணிந்திருந்த விளையாட்டு சப்பாத்துக்களில் இருந்து இரண்டு கால்களின் கட்டைவிரல்களும் கிழிசலை மீறி எட்டிப்பார்த்தன. அவர் காலுறை அணிவதில்லை. அவை சந்திரனுடைய பழைய சப்பாத்துக்கள்.   ‘நந்தவனத்தில்’ கணேசன் விளையாடுவதற்கான வருடச் சந்தாவை சந்திரன் தான் அளிப்பார். ‘வசந்த மாளிகை’ அணியின் வரவு செலவுகளை அவரே பார்ப்பார் என்பதால் கணேசனிடம் அவர் எந்தத் தொகையும் கேட்டதில்லை. 
முப்பது வருடங்களுக்கு முன் முதன்முறையாக பச்சைநிற அம்பாசிடர் கார் வாங்கியது முதல் கணேசன்தான் சந்திரனுடைய காரோட்டி. அதற்கும் முன்பு அவர்கள் பத்தாம்  வகுப்புவரை வகுப்புத் தோழர்கள். அப்போது அவர்கள் வேலங்குடி ‘போல் ஸ்டார்’ கால்பந்து அணியின் நட்சத்திரங்களாக ஊர் ஊராக பயணித்தார்கள். சுற்றித்திரிந்த சந்திரனை பொடனியில் போட்டு அவருடைய தந்தை ராமநாதன் கல்லூரிக்கு அனுப்பினார். கல்லூரி முடித்து வந்ததும் சந்திரன் அவருடைய அப்பாவின் நகைக்கடையை நிர்வகிக்கத் தொடங்கினார். கணேசன் அப்போது கால்பந்து வட்டாரத்தில் பிரபலமான கோலி. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் ஊராக விளையாடச் சென்றார். தென்காசிக்கு விளையாடச் சென்ற இடத்தில் ஒரு கள்ளவீட்டுப் பெண்ணை காதலித்து, அவளை தனித்து சந்திக்க முயன்று வகையாக சிக்கினார். “பறப் பயலுக்கு எங்கூட்டு பொண்ணு கேக்குதோ” என மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி கட்டிவைத்து அடித்தார்கள். செய்தியறிந்து ராமநாதன் தான் மெய்யப்பன் அம்பலத்தையும் கூட்டிக்கொண்டு நேரில் பேசி அழைத்து வந்தார்.  மொட்டைத்தலையுடன் ஊருக்கு வந்த கணேசன் மனம் கசந்து விளையாட்டை நிறுத்திவிட்டு, சிங்கப்பூருக்கு பிழைக்கச் சென்றார். சந்திரனுக்கும் பூரணிக்கும் திருமணம் ஆகி மூன்றாண்டுகளுக்கு பின்னர் கணேசனுக்கு மணமானது. அதுவும் ஒரு துரதிஷ்ட நிகழ்வுதான். ஊருக்கு வந்திருந்த கொஞ்ச காலத்தில் சித்தாள் ஒருத்தி அவரால் கர்ப்பமானதாக பஞ்சாயத்து கூடியது. ஒரேசாதி என்பதால் பெரியவர்கள் பேசி முடித்து வைத்தார்கள். திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூருக்குத் திரும்பினார். அவருடைய ஒரே மகன் ஒன்றரை வயது கடந்தும் தவழவில்லை என்பதால் ஊர்த் திரும்பியவர் பின்னர் சிங்கப்பூர் செல்லவில்லை. ஆறேழு வருடங்கள் அவனைச் சுமந்துகொண்டு ஆசுபத்திரி ஆசுபத்திரியாகத் திரிந்தார். வலிப்பும் சேர்ந்துகொண்டது. ஒரு மழைநாள் இரவில் அவன் மூச்சுத் திணறி இறந்தும் போனான். கட்டற்று குடித்தார். வைத்தியச் செலவிற்கு வாங்கிய கடன் வேறு அவர்களை நெருக்கியது. ஆறேழு மாதங்கள் பொறுத்துப்பார்த்த அவருடைய மனைவி “உன் சங்காத்தமே வேணாம்... அத்துவிடுங்க” என்று பிறந்த வீட்டிற்கே போய்விட்டார். எலி மருந்து குடித்து ஆசுபத்திரியில் கிடந்தவரை  சந்திரன்தான் மெதுவாக மீட்டு கூடவே வைத்துக்கொண்டார். மண் தரையின் மீது உயரமான ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் போட்டு, மூலைக்கு ஒரு குழல் விளக்கை நட்டு ‘நந்தவனத்தை’ உருவாக்கிய  தொண்ணூறுகளின் மத்தியில் இருந்தே இணைந்து இறகுப்பந்து விளையாடத் தொடங்கினார்கள். இருவருமே இறகுப்பந்திற்கு புதியவர்கள். ஆனால் குறுகிய காலத்தில் அதன் நுண்மைகளை பழகினார்கள். விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும், ஏனெனில் எல்லா விளையாட்டின் அடிப்படைகளும் ஒன்றே என்று உணர்ந்தார்கள். ‘வசந்த மாளிகை’ எனும் பெயரில் எட்டு பேர் கொண்ட அணியை உருவாக்கினார்கள். ‘நந்தவனத்தின்’ சிறந்த ஆட்டக்காரர்கள் மட்டுமே அவ்வணியில் விளையாட முடியும். ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் நடக்கும் மூன்று டோர்னமென்ட்களில் பங்கேற்றார்கள். எப்போதுமே வெற்றியாளர்கள் அல்லது இரண்டாம் இடம். 

நாளடைவில் அவர்களுக்கு காலை ஒருமணிநேர விளையாட்டு பெரும் போதையென ஆனது. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்து ஐந்தரைக்கு எல்லாம் ‘நந்தவனத்தில்’ விளையாடத் தொடங்கினார்கள். ஒருநாள் விளையாடவில்லை என்றால் கூட சோர்வு தொற்றிக்கொள்ளும். நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும். சந்திரனின் ஆட்டத்தில் தேவையற்ற அசைவு என எதுவுமே இருக்காது. எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். வயதிற்கும் உடல்வாகிற்கும் சம்பந்தமில்லாமல் உடல் வளையும். பரபரப்பு ஏதுமின்றி நிதானமாக ஆடுவார். எதிராளியின் ஆற்றலை வற்றச் செய்வதே அவர் வழிமுறை. முழுவதும் சோர்ந்ததும் எளிதாக கவனத்தை குலைத்து, போக்கு காட்டி வெல்வார். மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல. கணேசன் நேரெதிராக மின்னலைப் போல் விளையாடுவார். அவருடைய ஆட்டம் ஆக்ரோஷமும் அளப்பறியா வேகமும் கொண்டது. கட்டற்றவர். பல நேரங்களில் அவர் எப்படி இப்படி அடித்தார், எப்படி இந்தப் பந்தை எடுத்தார் என தர்க்கப்பூர்வமாக விளக்கிக்கொள்ள முடியாது. சந்திரனின் மொழியில் சொல்வதானால் “கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிரி”. ஒருவரையொருவர் நிரப்பினார்கள். விளையாட்டின் இந்த இயல்புகள் அவர்களுடைய தனிவாழ்விலும் தொடர்ந்தன. செருப்பை வாயிலில் கழட்டி வைக்கும் முறையிலிருந்து, மது அருந்துவது வரை எல்லாவற்றிலும் சந்திரன் நிதானம் கடைப்பிடித்தார். கணேசனுக்கு எல்லாமும் மீறல்தான். கணேசன் நாள் முழுக்க சந்திரனுடனேயே திரிவார். 

வெளியே தூறல் வலுக்கத் தொடங்கியது. அவர்களுடைய களத்தில் அடுத்து ஆட வேண்டிய இஞ்சினியர்கள் அணி சரியாக காலை 6.30 க்கு வந்து ‘டச்சு’ ஆடத் தொடங்கியிருந்தார்கள். கணேசன் மழைக்கு ஒதுங்கி புகையிழுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இரவெல்லாம் தூறி பாதையில் சிறு சிறு செம்மண் குட்டைகள் தோன்றின. இரவுக்கு முந்தைய கணம் போல் அந்தக் காலையில் வானம் கறுத்திருந்தது. சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன. கணேசன் புகைத்து முடிக்கும் வரை சுந்தர் காத்திருந்தான். சிகரெட்டின் இறுதி கனல்துண்டு தேங்கிய நீரில் சீறி அணைந்தது. கணேசன் ஓடிச்சென்று சற்று தொலைவில் இருந்த சாம்பல்நிற ஸ்கோடா காரை எடுத்துக்கொண்டு வந்தார். கறுப்புச் சக்கரங்களில் செம்மண் சேறு படிந்திருந்தது. சுந்தர் ஏறிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் இடையே உறைந்த மௌனம் அவர்களை வெகுதொலைவில் நிறுத்தியது. மகரநோன்பு பொட்டலைக் கடந்து செல்லும்போது சுந்தரை இளம் வயது நினைவுகள் சூழ்ந்தன. சிறுவனாக இருக்கும்போது கணேசன் அவனை சைக்கிளில் அமர்த்தி இந்தப் பொட்டலைக் கடந்ததும் உள்ள ஆனந்த் டாக்கீஸில் “ராஜா சின்ன ரோஜா” பார்க்க அழைத்து வந்தார். ஏற்காட்டு உண்டு உறைவிட பள்ளியில்  படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை காலங்களில் அவனுக்கு இறகுப் பந்தை பழக்கியவர் அவர்தான். பிலானியிலிருந்து கல்லூரி விடுமுறைகளில் ஊருக்கு வரும்போது அவருடன்தான் விளையாடுவான். சந்திரன் எப்போதும் அவனுடன் சேர்ந்து விளையாட மாட்டார். “ஒரு குடும்பத்துக்காரங்க ஒண்ணா வெளாடக் கூடாது” என்பார். கணேசனின் இணையாக சுந்தர் எத்தனையோ முறை விளையாடி வென்றிருக்கிறார்கள். “தம்பி நம்மள விடவும் நல்ல ஆட்டக்காரன்” என்று சந்திரனிடமே கணேசன் சொன்னதுண்டு.  

வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியதும். “இந்தாங்க அண்ணே காபி” என்று பூரணி கணேசனிடம் லோட்டாவை நீட்டினார். சுவரில் சாய்ந்து மடிப்பு குலையாத நாளிதழை விரித்துக்கொண்டு ஆற அமர குடித்தார். சுந்தரின் குழந்தைகள் அஜயும் ஆராதனாவும் இரவுடைகளோடு வெளியே வந்து உற்சாகமாக தாத்தாவின் அருகே அமர்ந்தார்கள். தாளை மடித்துவிட்டு அவரும் வாயால் பீப்பி ஊதுவது, வாத்து போல் ஓசை எழுப்பது, காசை காணாமல் ஆக்கும் வித்தையை செய்வது என உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார். சுந்தர் சிறுவயதில் இருந்தபோது அவனுக்கு செய்து காட்டிய அதே வித்தைகள்தான். கடுப்புடன் “ஸ்கூலுக்கு கெளம்பனும்” என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான். ராஜியிடம் எரிச்சலுடன் “அந்தக் கிழவரிடம் குழந்தைகளை அனுப்பாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்” என ஆங்கிலத்தில் கடிந்தான். ஒன்றும் சொல்லாமல் பிள்ளைகளை முறைத்தபடி அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். இரவாடையில் இருந்தாள். கோபித்து கடந்து சென்றபோது உள்ளுக்குள் கிளர்ந்தான். திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகளில் அவள் மேலும் மேலும் என அழகாகிக் கொண்டிருப்பதாக எண்ணினான். அவர்களுடையது காதல் திருமணம் இருவீட்டு சம்மதத்துடன் நிகழ்ந்தது.    

குளித்து தந்தநிற சட்டை கால்சட்டையை அணிந்து வந்தான். அது சந்திரனின் பாணி. பூரணியின் கால்தொட்டு வணங்கினான் “இன்னிக்கு ரெஜிஸ்ட்ரேஷன்” என்றான். “ஒன்னும் ஓராயிரமா இருப்ப... அப்பாட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கப்பா” என்றார். படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தந்தையை கண்மூடி வணங்கும்போது ஏனோ உள்ளே ஒரு கடும் கசப்பை உணர்ந்தான். உணவு மேஜையில் உண்டுகொண்டிருக்கும்போது பூரணி அவனருகே அமர்ந்து 

“தம்பி..கணேசண்ணன் பணம் கேட்டிருந்துச்சே” என்றார்.
“எதுக்கு?”
“ஓடு மாத்தணும்னு சொன்னாருன்னு அன்னிக்கே சொன்னேனப்பா”
“ம்”
“ஐப்பசிக்கு இன்னும் ஒருவாரம் தான இருக்கு..இப்பவே ஒழுகுதாம்”
“ம்.. பாப்போம். காசு கொடுத்தா குடிச்சு அழிக்கிறது. அந்தாளு குடிச்சது பத்தாதுன்னு உம்புருசனயும் குடிக்க வெச்சு கொண்ணேப்புட்டாரு”
“விடுப்பா, அதெல்லாம் பழய கத, உங்கப்பாரு எப்பவுமே அளவு தாண்ட மாட்டாரு. எல்லாம் விதி!” 

“சரி. ஏன் இத அவரு வாயத்தொறந்து கேக்க மாட்டாராமா?”
“என்கிட்டே கேட்டா என்ன.. உன்கிட்ட கேட்டா என்ன.. எல்லாம் ஒண்ணுதானே”

“நிச்சயம் ஒண்ணு இல்ல. மொதலாளி விசுவாசம் கூட கெடயாது அந்த ஆளுக்கு. காலேல ஆட்டத்துல ஜெயிச்சுட்டு எவ்வளோ அசிங்கமா செஞ்சாரு தெரியுமா? நிதம் இதேமாதிரி தான். வாயதொறந்தாலே நாராசம். அந்த ஆளால நமக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்ல.” இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியதை உணர்ந்தான். 

பூரணி மெளனமாக அகன்றாள். சுந்தர் தயாராகி வரும்போது பூரணி கணேசனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் அவர்களைக் கடந்து காருக்குச் சென்றான். உரையாடலை விட்டுவிட்டு வேகவேகமாக அவனுக்கு முன் காருக்குள் ஏறினார் கணேசன். ‘வசந்த மாளிகையை’ நிர்வகிக்க சுந்தர் அவனுடைய லண்டன் வேலையை விட்டுவிட்டு வர வேண்டி இருந்தது. வந்த சில மாதங்களில் கடையின் அமைப்பை மாற்றினான். சென்னையிலிருந்து விளம்பர நடிகர்களை அழைத்து புதிய விளம்பரப்படம் ஒன்றை படமாக்கினான். முழுவதும் குளிர்சாதன வசதி செய்து, சீருடை அணிந்த இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தினான். சந்திரன் செய்துகொண்டிருந்ததைக் காட்டிலும் இருமடங்கு அதிக வியாபாரத்தை ஆடி சீசனில் செய்து காட்டினான். அப்பாவின் ஆட்கள் எவரையும் அவனாக வேலையை விட்டு நீக்கவில்லை என்றாலும் மாறிவரும் சூழலை உணர்ந்தவர்கள் இனியும் தங்கள் அழுக்கு வேட்டியுடன் சைக்கிளில் கடைக்கு வரமுடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். தங்களைப் பொருத்திக்கொள்ள முடியாத திகைப்பில் ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வெளியேறினார்கள்.  

கடையில் நாள் முழுக்க சுந்தரின் கண் பார்வை படும் இடத்திலேயே கணேசன் நின்றிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் நாற்காலிகளை இழுத்துப் போட்டார். கண்காணிப்பு கேமரா அறையில் அமர்ந்து கடையின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது கதவைத்தட்டி காபி கொண்டு வந்து கொடுத்தார். முகம் பார்த்து சிரிக்கக் கூட செய்தார். சுந்தர் அவற்றை கவனித்தாலும் ஒருவித அசட்டையுடன் அவரைக் கடந்தான். இரவு கணக்குப் பார்த்து முடித்ததும் சுந்தர் கிளம்பியபோது மழை தூறிக்கொண்டே இருந்தது.
“தம்பி..” கணேசனின் தயக்கமான குரல் ஒலித்தது. கண்ணாடி வழி அவனைப் பார்த்தார். என்ன என்பது போல் தலையுயர்த்தினான். 

“வீட்டுல ஒழுகுதுப்பா, ஓடு மாத்தோனும், தங்கச்சிக்கிட்ட காசு கேட்டிருந்தேன்” என்றார் தயங்கித்தயங்கி. கணங்கள் நீடித்த மௌனம் கணேசனுக்கு பெரும் வாதையாக இருந்தது. சிலைந்து அமர்ந்திருந்தவன் சில கணங்களுக்கு பிறகு   
“மாமா வண்டிய உங்க வீட்டுக்கு விடுங்க” என்றான்.
நான்கைந்து மாதங்களாக அவன் கணேசனை மாமா என்று அழைப்பதில்லை. அவர்களுக்குள் மிகத் தேவையான ஓரிரு சொற்களுக்கு அப்பால் எதுவுமே இந்த மாதங்களில் பரிமாறிக்கொள்ளப்படவில்லை எனும் சூழலில் சுந்தர் அப்படி அழைத்தது அவரை நெகிழச் செய்தது. “இருக்கட்டும் தம்பி, இருட்டிருச்சு, இப்ப வேணாம் இன்னொருநாள் போவோம்”       
  
“உங்க வீட்டுக்கு ஓட்டுங்க” என்றான் தீர்மானமாக. 

வண்டி ஒரு குறுகிய சந்தின் முனையில் நின்றது. வண்டியைவிட்டு இறங்கி இருவரும் நடந்தார்கள். சற்றே பெரிய நீர் மொட்டுக்கள் மண்ணில் தெறித்துக்கொண்டிருந்தன. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் இருந்து அழுகிய நாற்றம் வீசியது. சிறிய பாலத்தைக் கடந்ததும் இறங்கிய சரிவில் மூன்றாவது வீட்டிற்குள் நுழைந்தார்கள். உள்ளே போய் விளக்கைப் போட்டார். மது புட்டிகளும், புகையிலை பாக்கெட்டுகளும், சிகரெட் துண்டுகளும் இறைந்து கிடந்தன. நிறம் உதிர்ந்த பச்சைச் சுவரில் அவருடைய ‘ஆஷ்பி’ ஷட்டில் ராக்கெட்டை ஒரு ஆணியில் மாட்டியிருந்தார். அதையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தர்தான் அவருக்காக ஒருமுறை லண்டனில் இருந்து அதை வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கணேசனும் சந்திரனும் அரைக்கால் சட்டையில் தங்கள் ராக்கெட்டுகளுடன் ஒரு கோப்பையை கையில் ஏந்தி வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சட்டமடிக்கப்பட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. தரையில் ஐந்தாறு பாத்திரங்களை வைத்திருந்தார். அவற்றில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அதைத்தவிர இன்னும் மூன்று நான்கு இடங்களில் தரையில் நீர் வினோத உருவங்களில் பரவியிருந்தது. வீட்டில் இருந்த ஒரே பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துவந்து “உக்காருங்க தம்பி” என்றார். “இருக்கட்டும் மாமா. உள்ளார ரொம்ப வாடகாத்து வருதே.” என்றான். பிறகு சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு “ஓடு மாத்த வேணாம், நம்ம கண்ணன் கிட்ட சொல்றேன், குரோமியம் தகடு போடச் சொல்லுவோம், வெய்யக் காலத்துலயும் நல்லா குளுகுளுன்னு இருக்குமாம். நாளைக்கே ஆள வரச்சொல்றேன்” என்று சொல்லியபடியே புதர் மண்டிய வெளிப்புறத்தை கடந்து வண்டிக்கு நடந்தான். கணேசன் வீட்டைப் பூட்டிக்கொண்டு பின்னாடியே வந்தார். வண்டியைக் கிளப்பிக்கொண்டு சுந்தரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கணேசனுக்குள் உணர்வுகள் தளும்பிக் கொண்டிருந்தன. அவர் முகத்தில் குடிகொண்ட நிலையின்மையை பார்த்தபோது சுந்தருக்கு உள்ளுக்குள் நிறைவாக இருந்தது. சொற்களை பற்களுக்கு நடுவே இறுக்கி கிட்டித்து வைத்திருந்தார். சுந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் “தம்பி ராஜேஷ வேணாம் சந்தானத்தோட ஆடச்சொல்லுவோமா? நா உன் கூட வாரேன்” என்றார். சொல்லி முடித்ததும், அன்றைய நாள் முழுவதும் இருந்த இறுக்கம் அகன்று முகம் தளர்வதைக் கண்டான். பொங்கிய எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு, வேண்டியதில்லை என்பதுபோல சைகை செய்தபடி “காலேல பாப்போம்” என்று சொல்லிவிட்டு  வீட்டிற்குள் சென்றான். சந்திரன் இறந்தபிறகு சுந்தர் விளையாட வந்தபோது, சுந்தர்தான் தன்னுடைய இணையாக விளையாட வருவான் என அவர் எதிர்பார்த்தார்.  ஆனால் அவன் ஏன் எதிரணிக்குச் சென்றான் என்பதை இப்போதுவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டிற்கு செல்லும்போதே வி.எஸ்.ஒ.பி இரண்டு புட்டிகளை வாங்கிக்கொண்டுதான் போனார். இரவெல்லாம் குடித்தார். மழை புதிய பொத்தல்கள் வழியாக தரையை நிறைத்தது. கண்ணீர் பெருகியது. எதற்கென்று இல்லாமல் எல்லாவற்றுக்காகவும் அழுதார். அவருடைய ‘ஆஷ்பி’ ராக்கெட்டை எடுத்து மடியில் ஒரு குழந்தையைப் போல் கிடத்தி அரற்றினார். இறுதித் துளி மது உள்ளே சென்றபோது உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலையில் அவருடைய உருவம் உடலுக்கு வெளியே நீர்பிம்பம் போல் தளும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது சந்திரனின் குரலை அவரால் வெகு அணுக்கமாக கேட்க முடிந்தது.   
காலை ஐந்தேகால் ஆகியும் கணேசன் வரவில்லை என்பதால் சுந்தர் தொலைபேசியில் அவரை அழைத்தான். “நீங்க போங்க தம்பி, நா நேரா வந்துர்றேன்” என்று சொன்னபோது அவருடைய நா குழறியது. சுந்தர் விளையாடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய மனதில் கணேசன் வராதது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறு மணிக்கு மேல் கணேசன் வந்தபோது முந்தைய இரவின் மது நெடி காற்றில் பரவியது. வழமைக்கு மாறாக, ‘வார்ம் அப்’ செய்யாமல், டச்சு போடாமல் வெறுமே அமர்ந்துவிட்டு நேரடியாக களத்திற்கு விளையாட வந்தார். முதல் மூன்று புள்ளிகள் சுந்தர் அணியினர் எடுத்தார்கள். அவருடைய ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. ஆட்டத்தை நிறுத்தி கழிவறைக்கு சென்றுவிட்டு வந்தார். இடது மூலைக்கும் வலது மூலைக்கும் வலையை ஒட்டியும் என மாறி மாறி ஆடினார். சுந்தருக்கு இது அவருடைய வழமையான ஆட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. ஒருவகையில் அது சந்திரனின் ஆட்டப் பாணியை ஒத்திருந்தது. சலிக்காமல் மாறி மாறி ஆடிக்கொண்டே இருந்தார். வேகத்தைக் கட்டுபடுத்தி, கவனத்தை திசைத்திருப்பி  புள்ளிகளை வென்றார். ஒருகணம் சுந்தர் தான் யாருடன் விளையாடுகிறோம் என குழம்பினான். போட்டி கடுமையானது. சுந்தர் அடித்த இரண்டு ஸ்மாஷ்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றன. முதன்முறையாக அவனுக்குள் ஒருவித சிலிர்ப்பு நேர்ந்தது. வியர்வையை வழித்துக்கொண்டு நீர் அருந்திவிட்டு வந்தார். எப்போதும் இருக்கும் அதிரடித்தன்மை இல்லை. புள்ளிகளுக்கு இடையே வந்து விழும் வசை சொற்களும் இல்லை. அவருடைய பதட்டமின்மை சுந்தருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. கால்கள் எப்போதையும் போல் வேகம் கொள்ளவில்லை. சற்றே பின்னித் தடுமாறியது. இரண்டு அணிகளும் 17 புள்ளிகள் எடுத்து சமமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சளைக்காமல் ஆடினான். கணேசன் ஆடிய அதே முறையை அவனும் கைக்கொண்டான். சந்தானமும் ஈடுகொடுத்தான். 6.30 தாண்டியும் ஆட்டம் நீண்டு கொண்டிருந்தது. அடுத்த செட் ஆட்டக்காரர்கள் களத்திற்கு வெளியே இவர்களின் உக்கிரமான ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சட்டென பொறுமை இழந்து ஸ்மாஷ் அடித்து புள்ளிகளில் முந்தினான். அதற்கு அடுத்து தூக்கி போட்ட சர்வீசை ராஜேஷ் ஸ்மாஷால் எதிர்கொண்டு புள்ளிகளை சமமாக்கினான். இழுத்துக்கொண்டே போனது. ஒரு சமயத்தில் கணேசன் எகிறிக் குதித்து அடித்த அடி சுந்தரின் காது நுனியில் உரசிச் சென்றது. தீக்காயம் போல் கனன்றது. நிமிர்ந்து அவர் முகம் நோக்க முயன்றபோது அவர் தலைக்கவிழ்ந்து அவன் பார்வையைத் தவிர்த்தார். சந்தானம் அடித்தது வலைக்குள்ளேயே விழுந்தது. ஒரேயொரு புள்ளி. கணேசனின் சர்வீசை எதிர்கொண்டு சுந்தர் அவர் தலைக்கு மேலே தூக்கி போட்டான். களத்தின் முற்பகுதியிலிருந்து அவர் கால்கள் பரபரத்து பின்னால் ஓடியது. எகிறி அடித்தபோது சுந்தர் வெறும் பார்வையாளனாக ஆற்றாமையுடன் அதன் விசையை வேடிக்கைப் பார்த்தபடி நின்றான். ராஜேஷ் உற்சாகமாக கூவிய அதே கணத்தில் கணேசன் தனது ராக்கெட்டை ஆவேசமாக பக்கச் சுவரில் வீசி எறிந்தார். தலை நசுங்கி அகோரமாக கிடந்தது. தன் வலக்கையை சுவரில் ஓங்கி குத்திவிட்டு கையை உதறியபடி விழுந்துக் கிடக்கும் ராக்கெட்டின் அருகே குந்தியமர்ந்து தலையில் கைவைத்தப்படி விசும்பினார். 
  
    




No comments:

Post a Comment