புத்தகங்கள்

Pages

Thursday, November 28, 2019

இந்திரமதம் - சிவமணியன் கடிதம்

ன்புள்ள சுனீல்,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


கால் வைக்கும் தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பின் அருகிலேயே என் வீடு இருந்தாலும், வானில் பறக்கும்  பல விதமான வெளிநாட்டு, உள்நாட்டு  பறவைகளையும், சதுப்பினை ஒட்டிய மாநகர் கழித்த குப்பைகளைத் தாங்கி இருக்கும் பெருங்குடி கிடங்கு மட்டுமே என் பார்வையில் இருந்தது. மழைக்காலத்தில் தரையில் பழுப்பு நிறத்தில் காணக் கிடைந்த நீர்பாம்புகளையும், மாம்பழ அளவு ஆமையும், பல விதமான நத்தைகளும், ஒரு சில அட்டைகளையும் பார்த்த நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்தது இந்தக்கதை. 



திறமைமிக்க புதியவர்களை கவரும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கூகுள் எவ்வாறு செயல்படுகிறது?  சமீபத்தில் வாசித்த நூல்.  கூகுள் நிறுவனம் உருவானதன் சுருக்கமான பிண்ணணி மற்றும் அதன் செயல்முறை, எதிர்காலத் திட்டம் போன்ற  தகவல்கள் கொண்டது.   அதில் இணைய எத்தனிக்கும் உறுப்பினர்களுக்கான தகுதி மற்றும் பின்னர் பெறப்போகும் சாத்தியமான வாய்ப்புகளைப் பற்றி முதன்மையாக விவரிக்கும் சந்தைப்படுத்தும் புத்தகம். அதில்  H I P P O (Highest paid person’s opinion) என்கிற ஆர்வமூட்டும்  சுருக்க சொல் ஒரு ‘தீட்டு சொல்’ போல பலமுறை வருகிறது.  அதாவது அலுவலகத்தில் உன்னை விட அதிகமான ஊதியம் பெறும் சக பணியாளரின் அல்லது பலவருட அனுபவம் கொண்டவரின் கருத்து, விவாதத்தின் அறுதிக் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விவாதங்களின் போது,  அழுத்தங்களின்றி உன்னுடைய புதுமையான யோசனையை, முன் வைத்தால் அதுவே பெரிய திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம், ஆகவே ஹிப்போ விடம் மோத தயங்காதே.  என பலப் பலமுறை வேறு வேறு பகுதிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.  



அணுக்கமாக பழக நேரும் குரு , சீடர்களின் உறவு வலிமையாகத் தோன்றினாலும்,  சில உச்ச தருண நுண்ணிய சீண்டல்களால் அறுந்து விடும்  அளவிற்கு நொய்மையானது. ஆனாலும் வேறு வழியில்லை, துறை சார்ந்து, வித்தை கற்றல் சார்ந்து சீடன் குருவுடன் அணுக்கமாக இருந்து, சில சமயம் கருத்துகளை மறுத்து மோத வேண்டியதிருக்கிறது.  ‘இந்திர மதம்’  சேஷாத்ரியே தன் ஆசிரியரிடம் குன்ம நோய் இல்லை என்பதை விவாதித்து மீறி நிறுவுகிறார். அதே போன்ற, ஒரு தருணத்தில் சேஷாத்ரியை மறுக்க முடியாமல் உள்ளுக்குள் உழலும் சிவானந்தனுக்கு நிகழும் தரிசனமே கதையின் மையம். மறு வாசிப்பில், அதே சிக்கலான தருணத்தை இளங்கோ எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது கதையின் மையத்தோடு ஒட்டிய மற்றொரு முக்கியமான பகுதி எனத் தோன்றுகிறது. 


‘வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான்’


கதை மொத்தமும் இந்த வரிகளுக்குள் கூர்மையாக குவிவதாக தோன்றுகிறது. 


இருபுறமும் குருதியை உறிஞ்சும் உறுப்பு கொண்ட அட்டையின் குதம் எங்கிருக்கிறது என்பது கதை எழுப்பும் அடுத்த கேள்வி.


அன்புடன்

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

வாசித்து, நேரம் எடுத்து கடிதம் எழுதியதற்கு நன்றி. இக்கதையைப் பற்றி சில விஷயங்களை சொல்லலாம். ஒன்று, இக்கதையை முழுக்க சித்தரிப்புகள் வழியாக நிகழ்த்திக்காட்ட முயன்றிருக்கிறேன். உரையாடல் மிகக் குறைவாக அதேசமயம் உள்ளத்தையும் நேரடியாக சொல்லாமல் புறச் சித்தரிப்பு வழியாகவே கதையை சொல்ல முயன்றிருக்கிறேன். அவ்வகையில் எனக்கு இக்கதை களியைக் காட்டிலும் சவாலானது நிறைவளிப்பதும் கூட. 

இரண்டாவதாக, இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. சித்த மருத்துவர் சிவராமன்  வாழ்வில் நிகழ்ந்தது. இந்தக் கதை ஆயுர்வேதத்தை அல்லது இந்திய மருத்துவத்தை விமர்சன நோக்கில் அணுகும் கதையாக சுருக்கிவிட முடியாது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேதத்தை ஒரு பின்புலமாக மட்டும் கண்டுகொண்டால் எல்லா துறைகளிலும் சேஷாத்ரிகளை கண்டுகொள்ள முடியும். நீங்கள் அதை உங்கள் வாசிப்பின் வழியாக தொட்டுக்காட்டியது நிறைவளித்தது. 

அன்புடன் 
சுனில்  

No comments:

Post a Comment