நண்பர் ஜினுராஜ் நீலகண்டம் குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன் இணையத்தில் வெளிவந்துள்ளது. நன்றி ஜெயமோகன்.இன் மற்றும் ஜினு. பொதுவெளியில் வந்துள்ள முதல் வாசிப்பு. நேற்று கவிஞர் ந. ஜயபாஸ்கரன் தொலைபேசியில் அழைத்து நாவல் குறித்து நேர்மறையாக தனது அபிப்பிராயத்தை அளித்தார். இயலிசை வல்லபி ஒரேயமர்வில் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் அமர்ந்து வாசித்ததாக சொன்னார். இது வானதி வல்லபிக்கு சமர்ப்பணம் செய்யப்பட படைப்பு. அவருக்கு நாவல் பிடித்திருந்தது நிறைவாக உணரச்செய்தது. வானதி இருந்து வாசித்திருந்தால் என்ன சொல்வார் என யோசித்துக்கொண்டிருந்தேன். அருண்மொழிநங்கை அக்காவும் வாசித்து விட்டார். சிறப்பாக உள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் சித்திரன் நாவலின் வடிவம் சார்ந்து சில விமர்சனங்களை முன்வைத்தார். எது எப்படியோ பொதுவெளியில் நாவல் தனக்கான இடத்தை அடையட்டும். சிலருக்கு பிடிக்கக்கூடும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். நான் என்னளவில் முற்றிலும் என்னை நாவலில் இருந்து துண்டித்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
---
சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது.இங்கு என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.
நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலுருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை.இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.
நேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்ககை சித்தம் சமைக்கிறது.
நாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை,தவிர்க்க இயலாதது.திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது.அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு.ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும்,நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.
நாவலில் இடையிடையே வரும் விக்ரமன்,வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அளிக்கிறது.கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது.நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்
தொன்மம்,நாட்டார் கதை,ஆன்மீகம்,தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.
நூலை வாங்குவதற்கு
https://be4books.com/product/நீலகண்டம்/.
நன்றி
இப்படிக்கு
தி.ஜினுராஜ்.
No comments:
Post a Comment