“எழுத்தாளர்கள் அடையாள அட்டையால் உருவாவதில்லை”- புல்ககாவ், Master and Margarita.
மிகேல் புல்ககாவ் எழுதிய நாவலான ‘Master and Margarita’ பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது. இதற்கு முன் பரிச்சயமற்ற இந்நாவலை, இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள் எனும் தகவல் வாசிக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் அளித்தது. இந்நாவலை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் ‘காலச்சுவடு’ நேர்காணலில் பா.வெங்கடேசன், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்ததை கவனித்தேன்.
ஆழ்ந்த கிறித்தவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் புல்ககாவ். ஸ்டாலினிய ரஷ்யாவில் வாழ்ந்தவர். மருத்துவர், நாடகாசிரியரும்கூட. ஸ்டாலின் அவர் மீது படைப்பாளியாக மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். பல்வேறு இக்கட்டுக்களின்போது ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு அவர் சிறை புகாமல் காத்திருக்கிறார். வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பிற்காலத்தில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் சோவியத்தின் கடவுள் மறுப்பு புல்ககாவ் மனதை ஆழமாகத் தொந்தரவு செய்துள்ளது தெரிகிறது. “இயேசு ஒரு இழிமகனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார்... இந்தக் குற்றத்தை என்னவென்று அழைப்பது” என்று எழுதுகிறார். இந்நாவல் ஒருவகையில் அந்த உணர்வைச் சமன் செய்ய எழுதப்பட்டது என்றுகூட தோன்றுகிறது. கற்பிதம் என்றும் பிழையென்றும்கூடச் சுட்டலாம்தான், ஆனால் வாழ்விற்கு பொருள் அளிக்கும் வல்லமை இன்னும் பெருமளவில் மதத்தையும் கலையையுமே சார்ந்திருக்கிறது. மனிதனின் ஆன்மீகத்தை அவனிடமிருந்து பிடுங்கி அழிப்பது அவனுடைய வாழ்வர்த்தத்தையும் சேர்ந்தே அழிப்பதாகும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான ரஷ்யாவை விவரிக்கும் ஸ்வெட்லானா அலெக்சியவிக் நாள்தோறும் தேவாலயங்களில் பெருகும் கூட்டத்தைப் பற்றி பதிவு செய்துள்ளார்.
எழுதி, அழித்து, திருத்தி என 1928 முதல் அவர் மரித்த 1940 வரையிலான பனிரெண்டு வருடங்கள் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் புல்ககாவ். நடுவில், மன உளைச்சலில் நாவலின் பகுதிகளை எரித்திருக்கிறார். “கைப்பிரதிகள் எரிவதில்லை” (Manuscripts don't burn) எனும் இந்நாவலின் ஒரு வரி ரஷ்யாவில் பிரபலமானது. நாவலை முடித்துச் சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தயக்கத்துடன் வாசிக்கக் கொடுத்திருக்கிறார். நாவலை வெளியிடுவதான திட்டமே அவரிடம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு நாவல் அவரிடம் இருப்பது தெரிந்தாலே அவருக்கு மிகப்பெரிய சிக்கல் எனும் சூழலே நிலவியது. அவர் மரித்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின், ஸ்டாலினின் காலம் முடிவுக்கு வந்த பின்னர், இந்நாவல் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. புல்ககாவுக்கு மறுக்க முடியாத இலக்கிய இடத்தை பெற்றுத் தந்தது.
சாத்தானின் வடிவமாக திகழும் பேராசிரியர் ஊலண்ட் மற்றும் அவருடைய சகாக்கள் மாஸ்கோவில் நிகழ்த்தும் அட்டகாசங்கள் மற்றும் மாஸ்கோவின் இலக்கியச் சூழலின் மீதான பகடி, இயேசுவின் வழக்கில் தீர்ப்பு வழங்கிய பாண்டியஸ் பைலேட்டை மையமாக கொண்டு விவரிக்கப்படும் பண்டையகால ஜெருசேலம், நாவலின் பிற்பகுதியில் அறிமுகமாகும் நாவலாசிரியரும் அவருடைய காதலியுமான மார்கரீட்டாவின் கதை என நாவல் மொத்தம் மூன்று தளங்களில் நிகழ்கிறது. கிறித்துவின் வழக்கை விசாரித்த பாண்டியஸ் பைலேட்டின் கதை சாத்தானின் வாய்மொழியாக, இவான் எனும் கவிஞன் காணும் கனவாக, மாஸ்டர் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் நாவலாசிரியரின் நாவலின் பகுதியாக என வெவ்வேறு தளங்களை இணைக்கும் சரடுகள் பின்னிச் செல்கின்றன.
சமகால மாஸ்கோவின் நிகழ்வுகள் யதார்த்தத்தை மீறிய மாந்த்ரீகத்தன்மை கொண்டவையாகவும், அற்புதங்களை செய்த இயேசு கிறித்துவின் காலகட்டத்து சித்தரிப்புகள் மிகுந்த யதார்த்தத்துடனும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தலைகீழ் திருகல் வெறும் யுத்தியன்று. பாண்டியஸ் பைலேட் ஏசுவுக்கு அளித்த மரண தண்டனை சார்ந்த குற்ற உணர்வே நாவலின் மைய உணர்வு. வெவ்வேறு தருணங்களில் ‘உள்ளதிலேயே மிக மோசமான தீயவழக்கம் என்பது துணிவின்மை’ எனும் வசனம் ஒலிக்கிறது. அதிகாரத்தின் நிழலில் நின்று தனி மனிதனாக நியாயத்தை நிலைநாட்ட முடியாத இயலாமை பாண்டியசை இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக மீட்சியின்றி வதைக்கிறது. நிலவொளியில் தூக்கமின்றி அவனுடைய உற்ற துணையான நாயுடன் வதைபட்டு கொண்டிருக்கிறான். மாஸ்டர் அவனுடைய நாவலின் முடிவின் வழியாக அவனுக்கு மீட்சியை அளிக்கிறான். யேசுவுடன் இணையாக நிலவொளிப்பாதையில் பேசிக்கொண்டே நடக்கிறான். ஒருவகையில் ஸ்டாலினால் காக்கப்பட்டு, அரசின் அடக்குமுறைக்கு எதிராக எதையும் நிகழ்த்த முடியாத தனது கோழைத்தனத்தின் பிரதியாகதான் பாண்டியசை உருவாக்கினார் புல்ககாவ் என விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். நாவலில் நிலவு மனசாட்சியின் உருவகமாக பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிலவு அவர்களை வதைக்கிறது. அமைதியிழக்க செய்கிறது.
சாத்தானும் அவனுடைய சகாக்களாக வரும் ஃபெகோட் எனும் நீள்கழுத்துக்காரன், பெஹெமோத் எனும் பேசும் பூனை, அசசெல்லோ எனும் ஊத்தப்பல்கார அடியாள் மற்றும் ஹெல்லா எனும் சூனியக்காரி ஆகியவர்கள் மாஸ்கோவில் நிகழ்த்தும் மாந்த்ரீக அற்புதங்கள் இருண்ட அங்கதத்தின் உச்சங்கள். புல்ககாவ்வின் முத்திரைப் பகுதிகள் என இவற்றை சொல்லலாம். எளிய நேரடி விவரணைகள் மற்றும் மெல்லிய பகடி வழியாக அச்சமூட்டும் ஆழங்களைச் சித்தரிக்க அவரால் முடிகிறது. மந்திரவாதிகளாக அறிமுகமாகி மாஸ்கோவின் நாடக மேடையில் இவர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியின் சித்தரிப்பும் மனிதர்களை இயக்கும் பேராசை, பொறாமை, சிறுமை போன்ற இயல்புகளின் அபார பகடி.
“மாஸ்கோ எனும் நகரத்தின் கட்டிடங்கள் மாறியிருக்கின்றன, ஆனால் மனிதர்கள் மாறவில்லை” என்கிறான் சாத்தான். பாடற்குழு இயக்குனர் என அறிமுகம் செய்துக்கொண்டு ஃபெகோட் ஒரு அரசு அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரையும் கூட்டிசை இசைக்கச் செய்யும் பகுதியை எழுதுவதற்கு அபார கற்பனை வேண்டும். பாவிகளுக்கு அளிக்கப்படும் வேனிற்கால முழுநிலவு விருந்து நாவலின் மற்றொரு மிக முக்கியமான பகுதி. நள்ளிரவில் அங்கு வந்து சேரும் ஒவ்வொரு மனிதர்களையும் விருந்து உபசரிப்பவரான மார்கரீட்டாவுக்கு அவர்களின் பாவங்களை கொண்டு அறிமுகம் செய்யும் பகுதி துணுக்குறச் செய்யும். ஃபிரைடா எனும் இளம் பெண் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து பெற்ற குழந்தையை தனது கைக்குட்டையால் அழுத்திக் கொல்கிறாள். விசாரணையின்போது குழந்தைக்கு தன்னால் பாலூட்ட முடியாததே காரணம் என்கிறாள். ஒவ்வொருநாள் இரவும் அவள் அன்று அழுத்திய கைக்குட்டை சாத்தானால் அவளுக்கு முன் கொண்டு வைக்கப்படும். மார்கரீட்டா விருந்தினர்களை உபசரித்ததற்கு பிரதிபலனாக அவளுடைய மீட்சியை கோருகிறாள். பெஹெமோத் மற்றும் ஃபெகோட் மாஸ்கோவின் இலக்கிய அமைப்பின் கட்டிடத்திற்குள் சென்று நிகழ்த்தும் குழப்பங்கள், கிளம்புவதற்கு முன் கட்டிடங்களை எரித்துச் செல்வதெல்லாம் ரகளையான சித்தரிப்புகள்.
சாத்தானிடம் உலகத்தின் பிரதியாக சிறிய அளவிலான உலக உருண்டை ஒன்றிருக்கும். உலக நிகழ்வுகளை அதில் காணலாம். மார்கரீட்டாவிற்கு போர் நடக்கும் ஓர் இடத்தை காட்டுவான். அப்போது போரை நிர்வாகம் செய்யும் சாத்தானின் மற்றுமொரு சகாவான அபாடான் குறித்து பெருமையாகச் சொல்வான். மரித்து கிடக்கும் பிறந்த குழந்தையை காண்பித்து, “பாவம் செய்வதற்கு கூட அவனுக்கு நேரமில்லை. அபாடானின் பணி அற்புதமானது. அவன் ஒரு போதும் சமநிலை தவறாதவன், போரின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இரு பக்கத்திற்கு சம அளவிலேயே பாதிப்பை அளிப்பவன்.” என்பான்.
மனநல மருத்துவமனையில் இருக்கும் நாவலாசிரியர் மாஸ்டர் தனது பக்கத்து அறையில் இருக்கும் இவானுக்கு தனது கதையை கூறுகிறார். இவான் ஒரு வளரும் கவிஞன், சாத்தானை முதன் முதலாகச் சந்தித்தவன். அவனுடைய சாட்சியங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவன். மாஸ்டர் தனது நாவலைப் பற்றியும் மார்கரீட்டாவுடன் தனது காதலையும் பற்றி சொல்கிறான். மார்க்கரீட்டா அவனது நாவலை அனுதினமும் பெருங்காதலோடு வாசிக்கிறாள், அவனுக்கு துணை நிற்கிறாள். அவனுடைய நாவலின் கைப்பிரதி சில விமர்சகர்களால் நிராகரிக்கப்படுகிறது. மனமுடைந்து போகிறான். மொத்த நாவலையும் எரிக்கிறான். மிக சிறிய பகுதியை மார்க்கரீட்டா காப்பாற்றுகிறாள். பொருத்தமற்ற மணவாழ்வில் இருக்கும் மார்க்கரீட்டா திருமணத்தை உதறிவிட்டு அவனுக்காக வருவதாக சொல்கிறாள். துணிவின்றி பித்தேறி மனநல மருத்துவமனையில் சேர்கிறான். மாஸ்டர் என்ன ஆனான் என்றறியாமல் அவள் காத்திருக்கிறாள். சூனியக்காரியாகும் வாய்ப்பை சாத்தான் அவளுக்கு வழங்கியபோது, அதை ஏற்று படைப்பை நிராகரித்த விமர்சகரின் வீட்டை நாசம் செய்கிறாள். சாத்தானிடம் மாஸ்டரை மீட்டுக்கொடுக்கும்படி கேட்கிறாள்.
புல்ககாவ் இருளையும் ஒளியையும் துருவப்படுத்தாமல் இரண்டும் இன்றியமையாதது என இந்நாவலில் காட்டுகிறார். தேவனும் சாத்தானும் சேர்ந்தே உருவாக்குகிறார்கள் இவ்வுலகை. சாத்தானையும் அவனுடைய சகாக்களையும் நம் மனம் இயல்பாக நேசிக்கத் துவங்குகிறது. மத்தேயுவிடம் சாத்தான் உரையாடும்போது “தீமை என்பது இல்லையென்றால், உனது நன்மை என்ன செய்யும்? நிழல்கள் இல்லையென்றால் இவ்வுலகம் எப்படி தோற்றமளிக்கும்? பொருட்களும் மனிதர்களுமே நிழல் அளிக்கிறார்கள். இதோ எனது கத்தியின் நிழல். மரங்களும் உயிரினங்களும்கூட நிழல் அளிக்கும். கூசும் வெளிச்சத்தை அனுபவிக்க வேண்டும் எனும் உனது கனவின் காரணமாக, உலகத்தின் தோலை மொத்தமாக உரிக்க வேண்டுமா? மரங்களையும், உயிரினங்களையும் கிழித்து எரிய வேண்டுமா? நீ ஒரு முட்டாள்”.
விஷ்ணுபுரம் விருது விழா சமயத்தில் ஒரு விவாதத்தின்போது கவிஞர் தேவதச்சன் “இவ்வுலகில் அன்பே மிகப்பெரியது என எண்ணிக் கொண்டிருந்தேன், அன்பைவிட விடுதலையே பெரியது என்பது எனது கண்டுபிடிப்பு” என்றார். நாவலின் இறுதியில் மாஸ்டரும் மார்க்கரீட்டாவும் மீட்படையவில்லை, ஆனால் அவர்களுக்கு இயேசுவின் எண்ணத்திற்கு இணங்க சாத்தானால் நிரந்தர அமைதி வழங்கப்படுகிறது. அவர்கள் காதல் செய்த அதே கட்டிடத்தின் அடித்தளத்தில் என்றென்றைக்குமாகச் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தமான, மனதிற்கு இதமானவை மட்டுமே சூழ்ந்த உலகு, ஒரு கற்பித உலகு அங்கு அவர்கள் நிம்மதியாக, அமைதியாக வாழலாம். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘Brave new world’ நாவலில் எப்போதும் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்காக தங்களை மயக்கத்தில் ஆழ்த்திக் கொள்ளும் மனிதர்களின் சித்திரம் நினைவுக்கு வந்தது. மாஸ்டருக்கும் மார்க்கரீட்டாவிற்கும் வழங்கப்பட்ட அமைதி உண்மையல்ல. சார்லஸ் யூவின் கால இயந்திரத்தைப் பற்றிய நாவலில் கதை நாயகனின் அம்மா அவளுக்குப் பிடித்த ஒரேயொரு மணிநேரத்தை வருடக்கணக்காக மீள மீள வாழ்வாள். எல்லாமும் கட்டுப்படுத்தப்படும் முற்றதிகார தேசத்தில் சுதந்திரம் என்பது எட்டாக்கனி. குறைந்த பட்சம் தனது மன அமைதியை எப்படியேனும் தக்க வைத்துக் கொள்ளவே மக்கள் விழைவார்கள். ஓரளவு நுண்ணுணர்வை சாகடித்தால் போதும், கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும். முற்றதிகாரத்தில் மக்கள் ஏன் விரும்பி கீழ்ப்படிகிறார்கள் எனும் கேள்விக்கான விடை இதுதான் என தோன்றுகிறது. ஒருவேளை அன்பைக் காட்டிலும், விடுதலையைக் காட்டிலும்கூட, மிகப்பெரியது கற்பிதமாகவேனும் அடையப்படும் அமைதியும் நிம்மதியும்தானா?
The Master and Margarita, Mikhail Bulgakov,
Penguin Classics, ரூ.192/-
Amazon