மலேசியா பற்றி இங்கே கிளம்புவதற்கு முன்னரே பலர் எச்சரித்தார்கள். கையில் அணிந்த மோதிரத்தை கூட கழட்டி வைத்துவிட்டே வந்தேன். தமிழர்கள் என நம்பி பேசிவிட வேண்டாம் என்றெல்லாம் சொல்லி கிலி ஏற்படுத்தினார்கள். இப்படிச் சொன்னவர்களில் பலரும் மலேசியா சென்றவர்கள். அலல்து மலேசியாவில் உறவினர்களை கொண்டவர்கள். ஆனால் இத்தகைய அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. கூட்டம் முடிந்தவுடன் வேதனையுடன் மலேசிய எழுத்தாளர் ஒருவர் இதை பகிர்ந்துக்கொண்டார். ஒருவகையில் மலேசிய தமிழர்கள் அனைவரையும் குண்டர் எனும் நோக்கில் சித்தரித்ததில் ‘கபாலி’ க்கு பங்குண்டு என்று வருந்தினார்.
சரண் கைக்காயம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் விடுப்பில் இருந்தது எனக்கு பல வகையிலும் நிம்மதி. அவரும் மலேசியாவிற்கு வந்தார். நவீன் ஒரு காட்டெருமையை வாகனமாக மாற்றியிருப்பது போல் ஒரு முரட்டு கார் வைத்திருந்தார். ஐந்து பேர் அமரும் வண்டி தான். ஆனால் பிற்பகுதியில் சாமான்களை ஏற்றிச்செல்லும் வசதி கொண்டது. தோட்டப்புறத்திற்கு ஏதுவான வண்டி. மலேசியாவில் பலரும் இவ்வகை காரை வைத்திருக்கிறார்கள். செந்துல் பகுதியில் ஒரு தமிழ் கடையில் நிறுத்தி காலையுணவு உண்டோம். சிங்கப்பூர் மலேசியாவில் மைலோ ஒரு முக்கிய பானம். காபி டீயைத் தவிர்த்து மைலோ அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். ஆனால் சிங்கப்பூருக்கு வந்த இரண்டாம் நாள் மூன்றுவேளை மைலோ குடித்தத்தில் ஒருமாதிரி மூளை சூடானது. கொக்கோ அதிகம் என்பதால் இருக்கலாம். அத்துடன் மைலோவையும் விட்டுவிட்டு பழச்சாறுகளை மட்டும் குடித்தேன். இங்கே எல்லா வகையான பானங்களையும் தண்ணி என்றே சொல்கிறார்கள். உணவுடன் சேர்த்து ஏதோ ஒன்றையும் குடிக்கிறார்கள். நெஸ்கபே, ப்ரூ போன்றவை எல்லாம் முக்கிய பானம், பசும் பால் வேண்டும் என்றால் சொல்ல வேண்டும். செந்துல் பகுதியில் நவீன் வழக்கமாக நிகழ்வு நடத்தும் ஹோட்டல் கிராண்ட் பசிபிக்கிற்கு சென்றோம். பல வருடங்களாக அங்கே நிகழ்வு நடத்துவதாக சொன்னார். அறைக்குள் சென்றதும் உறங்கி எழுந்தபோது மணி பன்னிரண்டு. ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் மஹாத்மன் எழுப்பினார்கள்.
உண்மையில் சிங்கப்பூர் பயிலரங்கு தயாரிப்பிற்கு நான் எடுத்துக்கொண்ட காலத்தை விட அதிகம் மலேசிய உரைக்கு எடுத்துக்கொண்டேன். சமகால சிறுகதை செல்நெறிகள் எனும் தலைப்பு. ஒரு கணக்கு போட்டு பார்த்ததில் இந்த பத்து வருடங்களில் ஐம்பது சிறுகதை எழுத்தாளர்களாவது அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். இருபது இருபத்தி ஐந்து தொகுப்புக்களாவது வாசித்திருப்பேன். இவர்களில் பத்து பதினைந்து பேர்களாவது அடுத்த பத்தாண்டுகள் தாண்டியும் எழுதுவார்கள் என நம்பினேன். மூவாயிரம் சொற்கள் கடந்தும் முடிவடையாத கட்டுரை ஒன்றை சமகால சிறுகதைகள் குறித்து எழுதிக் கொண்டிருந்தேன்.
ஸ்ரீதர் ரங்கராஜ், மஹாத்மன், சீ.முத்துசாமி |
ஸ்ரீதர் ரங்கராஜ் இணையத்தில் பழக்கம். இப்போது அவர் சமூக ஊடகங்களில் இல்லை. இருந்த காலங்களில் கொஞ்சம் பேசியிருக்கிறோம். அவருடைய மொழியாக்கங்கள் தரமானவை. உலக இலக்கிய பரிச்சயம் உடையவர். எல்லாவற்றையும் விட மதுரைக்காரர். இயல்பாகவே அவர் மீது அன்பும் மதிப்பும் கொள்ள இவை போதும். இந்த மலேசிய பயணத்தில் மேலும் நெருக்கமானவராக அவரை உணர்ந்தேன். மகாத்மனின் கதைத் தொகுப்பை நவீன் எனக்கு அளித்தார். மலேசிய சிறுகதைகளின் சிறந்த பத்து கதைகளில் ஒன்றை அவர் எழுதி உள்ளார் என்றார். மலேசியாவின் இருண்ட பக்கங்களில் புழங்கியவர். அவ்வுலகம் குறித்து அதிகம் அறிந்தவர். அவரை எப்படியாவது ஒரு நாவல் எழுத வைத்துவிட வேண்டும் என ஊக்கப்படுத்திக்கொண்டுள்ளார். மதிய உணவுக்கு செல்லும்போது சீ.முத்துசாமி அவர்களை சந்தித்தேன். அவருடைய அண்மைய நாவலான் மலைக்காடு வாசித்திருந்தேன். எனக்கு பிடித்திருந்தது. வல்லினம் நண்பர்கள் பாண்டியன் மற்றும் கங்காதுரை இணைந்து கொண்டார்கள். சரியாக ஐம்பது பேருக்கு மட்டுமே நாற்காலிகள் போட்டிருந்தார்கள். போஸ்னியா –செர்பியா போரில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை சார்பாக பங்கேற்ற மலேசிய தமிழ் அதிகாரியை நவீன் அறிமுகம் செய்தார். அவரையும் எப்படியாவது நாவல் எழுத வைக்கும் முயற்சியில் நவீன் ஈடுபட்டிருக்கிறார். இப்படியான ஒரு போரில் தமிழர் பங்கேற்று அந்த அனுபவத்தை நாவலாக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என கனவு காண்கிறார். நவீன் எல்லா லட்சியவாதிகளை போல் ஒரு கனவு ஜீவி தான்.
சரியாக இரண்டு மணிக்கு அமர்வு துவங்கியது. யதார்த்தவாத எழுத்துக்களை மட்டுமே முக்கியமாக கருதும் ஒரு சூழலில் மாற்று போக்குகள் குறித்து விலக்கம் உள்ளதால் தற்கால சிறுகதைகளை எப்படி அணுக வேண்டும் எனும் நோக்கில் உரையை தொடரச் சொன்னார். யதார்த்தவாதம், நவீனத்துவம், யதார்த்த மீறிய கதைகள் என வெவ்வேறு வகை கதைகள், பேசுபொருள் சார்ந்து உளவியல், பாலியல்,நவீன வாழ்க்கைச் சிக்கல், மாய யதார்த்தவாதம், அறிவியல் புனைவு, டிஸ்டோபிய புனைவுகள் என பலவற்றையும் சுருக்கமாக சில உதாரண கதைகளைக் கொண்டு விளக்கினேன். முக்கால் மணிநேர உரைக்கு பின் கேள்வி பதில் அமர்வு. சரியாக சொல்வதானால் சுமார் 2.15 மணிநேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. மருத்துவர் சண்முக சிவா, சீ. முத்துசாமி , ஸ்ரீதர், பாண்டியன் என பலரும் கேள்வி கேட்டார்கள். ஒரு கதைக்கு பலதள வாசிப்பு எப்படி சாத்தியம் என சில உதாரணங்களைக் கொண்டு விளக்க முற்பட்டேன். என் கதைகளைப் பற்றியும் உரையாடல் நிகழ்ந்தது. பெரும்பாலும் எல்லோரும் வாசித்து வந்திருந்தார்கள் என்பதால் கேள்விகள் அனைத்துமே ஓரளவு தரமானவையாக இருந்தன. மொத்தமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு முடிந்ததும் அர்வின், திலீப், பவித்ரா, உதயகுமார், போன்ற பலரும் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். முல்லை ராமையா எங்கள் பகுதிய சார்ந்த மொழியியல் பேராசிரியர். அவர்களையும் சந்தித்து பேசினேன். புகைப்பட படலங்கள் முடிந்த பின் எனக்கும் ஒருவித நிறைவு ஏற்பட்டது. எல்லோருமாக சேர்ந்து சிரித்தபடி ஆப்பம் தேங்காய்ப்பால் சாப்பிட்டுவிட்டு கலைந்தோம்.
நவீன் என்னையும் சரணையும் வண்டியில் கே.எல்.சிசி அழைத்து சென்றார். விளக்கொளியில் மின்னியது. வர்ண ஜாலத்தில் நடனமிடும் நீர் கோடுகளின் அருகே திட்டில் அமர்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். மலேசிய இலக்கிய சூழல், சிக்கல்கள் என பலவற்றையும் பேசினோம். தமிழ் இலக்கியத்தின் கடைசி ஆங்கறி யங் மேன் நவீனாகத்தான் இருக்கமுடியும். பலருடன் பூசலும் சண்டையும் நிகழ்ந்தாலும் அவர்கள்மீது இப்போதும் மதிப்புடன் இருக்கிறார். அவர்கள் விலகிச் செல்வதற்கு உரிய நியாயங்கள் இருக்கக்கூடும் என புரிந்து கொள்கிறார். அங்கிருந்து சீனா டவுனுக்கு சென்றோம். அனைத்து பொருட்களின் நகல்களும் மிக மலிவு விலையில் கிடைக்கும். நவீன் பேரம் பேசி முப்பது வெள்ளிக்கு எனக்கும் சரணுக்கும் ஒரு கைக்கடிக்காரம் வாங்கிக் கொடுத்தார். சுதீருக்கு ஒரு நீர்க்குமிழி துப்பாக்கி பதினைந்து வெள்ளிக்கு வாங்கிக்கொண்டேன். பேசிக்கொண்டே இருந்தவர் தெருவின் முடிவுக்கு சென்றார். “சரண் இனிமே இது உங்க இடம்” என்றார். மலேசியாவின் சிவப்பு விளக்கு பகுதிக்கு சு. வேணுகோபாலையும் அழைத்து வந்திருக்கிறார். “எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை” என்று சொன்னாலும் விடாமல் வேடிக்கை பார்க்க கூட்டி வந்தார். இப்போது எங்களை அழைத்து வந்திருக்கிறார். ஆள் நடமாட்டமில்லாத ஒரு மடி வீட்டிற்குள் சட்டென நுழைந்து படி ஏறி சென்றார். உண்மையில் சிவப்பு விளக்கு பகுதியில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இடுங்கலான கார்ட்போர்ட் அறைகள். அதன் வாசலில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். கண்டவுடன் தமிழ் என கண்டுபிடித்து கொண்டார்கள். “நல்லா கம்பனி குடுக்கிறேன் சார்” என ஒரு பெண் கொஞ்சி கேட்டாள். மறு பக்கம் இன்னொரு தமிழ் பெண் “மாமா” என்று அழைத்தாள். நாற்பது வெள்ளிக்கு வருவதாக சொன்னார்கள். கைக்கடிக்காரம் வாங்கியதை விட பத்து வெள்ளி கூடுதல். சதுர வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்து வெளியேறினோம். நாங்கள் வெளியேறும்போது அங்கே சிரிப்பொலிகள் கேட்டன. காலையில் ஆற்றிய உரையில் பாலியல் தொழிலாளிகளுக்கு நம் கதைகளில் இருந்து விடிவு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். இப்போது நானும் வாழ்வின் இருண்ட பக்கங்களை கண்டதாக சொல்லலாம். “உங்களையும் எழுத வெச்சுடுவோம்” என்றார் நவீன். “ஒரு காந்தியவாதிக்கு இந்த அனுபவமெல்லாம் தாங்காது நவீன்” என்றேன். புக்கிட் பித்தாங் எனும் மலேசிய தூங்கா நகரத்திற்கு சென்றோம். பெரும் கட்டிடங்கள். ஒரு சாலை முழுக்க உணவகங்கள். நவீனும் சரணும் உண்டார்கள். தெரு பாடகர்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தார்கள். ஒரு கித்தாரையும் டிரம்சையும் மைக்கில் இணைத்தபடி ஆங்காங்கு நின்று பாடினார்கள். பெரும்பாலும் நல்ல இசை. மெக் டொனால்ட்ஸ், ஸ்டார் பக்ஸ் வாசல்களில் இன்னும் சற்றே பெரிய குழுவாக பாப் இசைத்தார்கள். மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். எங்கள் ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு மிக அருகே திருநங்கை குடியிருப்பு இருப்பதாக நவீன் கூறினார். அங்கே இருந்த ஆஷா எனும் திருநங்கை தலைவியை வல்லினம் இதழுக்காக நேர்காணல் செய்துள்ளார். அவர்களின் வாழ்வு, சிக்கல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அப்பகுதியை வண்டியில் இருமுறை சுற்றிக் காண்பித்தார். ஒருவழியாக அறைக்கு திரும்பினோம். அறைக்குள் வைபை எடுக்காததால் லாபிக்கு வந்து தான் போன் பயன்படுத்த முடியும். சிங்கப்பூரின் ஒழுங்கு நேர்த்தி எல்லாம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தினாலும் மலேசியாவின் ஒழுங்கின்மை மற்றும் ஏறத்தாழ கேரளாவைப் போலிருக்கும் நிலபரப்பு மற்றும் மனிதர்கள், கூட்டம்,குப்பை எல்லாம், மனிதர்கள் என எல்லாம் சேர்ந்து இது நம்ம ஊர் எனும் நினைப்பை ஏற்படுத்தியது.
சரண் நான் நவீன் கோலாலம்பூரில் |

காலை நவீன் பத்துமலைக்கு அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமான முருகன் பொன்னிறத்தில் கொலாலம்ப்பூரை நோக்கிக் கொண்டிருந்தார். திரிபங்க நிலை இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றார். மலை பார்க்க சிறியதாக இருப்பதால் ஏறுவோம் என சொல்லி ஏறத் துவங்கினோம்.ஆனால் செங்குத்தான ஏற்றம். படிகள் உயரமானவை. குன்றக்குடியை விட இரு மடங்கு இருக்கலாம். முழுக்கை சட்டை போட்டு மலை ஏறியபின் வியர்வை வட்டங்கள் சட்டையில் படர்ந்திருந்தன. சிறிய முருகன் கோவில். வள்ளுவர்கள் தான் பூசகர்கள் என நவீன் கூறினார். பிள்ளையார்பட்டி குருகுலத்தை சேர்ந்தவர்கள் பலரும் சிங்கப்பூர் மலேசிய கோவில்களில் பூசகர்களாக உள்ளார்கள் என அறிவேன். குகை உண்மையில் ஒரு எரிமலை வாய் போல் இருந்தது. எல்லாமும் உருகி உறைந்தது போல் இருந்தது. மாலைகளில் வவ்வால் கூட்டம் வரும் என்றார். வௌவால் நெடியை உணர முடிந்தது. எங்கிருந்தோ நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. மலேசியா இஸ்லாமிய நாடு என்றாலும் இத்தனை உயரமான முருகன் சிலையை அனுமதித்திருக்கிறது. அதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் இன்று அது எல்லோரும் வந்து செல்லும் சுற்றுலா மையமாக இருக்கிறது. கீழே இருந்த கோவில்களுக்கு செல்லவில்லை.
குகை உள்ளே |
அங்கிருந்து ஓராங் அஸ்லி எனும் மலேசிய பூர்வகுடிகளுக்கு நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகம் சென்றோம். உலகெங்கும் பழங்குடி சமூகத்திற்குள் நிறைய ஒற்றுமை உள்ளதாக அவர்களுடைய சடங்குகள், பயன்படுத்தும் பொருட்கள், மூலிகைகளை பார்க்கும்போது தோன்றியது. உதாரணமாக அவர்களும் இஞ்சியை வயிற்று உபாதைகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரிய தகவல் தொடர்பு சாத்தியம் இல்லைதான். ஆனால் பொதுத்தன்மை உள்ளது. கூட்டு நனவிலி வழியாக ஒரு கண்டடைதல் மானுட இனம் முழுவதற்கும் பரவி இருக்குமா?
ஸ்ரீதர் எங்களுடன் இணைந்து கொண்டார். மதியம் சரவணபவனில் உண்டோம். லிட்டில் இந்தியா முழுக்க ஆங்காங்கு சிறு தோரண வாயில்கள் கட்டி இருந்தார்கள். முரகாமியின் கினோ, கசார்களின் அகராதி, ஆர்டிமிசியா க்ரூஸின் மரணம், சாமர் யாஸ்பெக்கின் பயணம் போன்ற நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். வல்லினத்தில் மலேசிய சிறுகதைகள் குறித்து கூர்மையான விமர்சனங்கள் சிலவற்றை எழுதி வாசித்ததாக நினைவு. ஒரு பயணத்தின் இலக்கு எந்த அளவிற்கு முக்கியமோ பாதையும் அதேயளவு முக்கியம். ஸ்ரீதர், நவீன், சரண் என மூவரும் சுவாரசியமான பயணத் தோழர்கள். வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தோம். உரையாடல்களை இங்கே எழுத முடியாது. ஆனால் இப்பயணத்தின் செறிவான பகுதி என நவீன் மற்றும் ஸ்ரீதருடன் பேசிக்கொண்டு வந்ததையே சொல்வேன். நகரின் மறு எல்லையில் இருக்கும் செம்பனை தோட்டத்திற்கு நவீன் எங்களை அழைத்து சென்றார்.
தீ நிற தென்னை குருத்துக்கள் போல் இருந்தன செம்பனை காய்கள். வெறுமே கையால் அழுத்தினால் கூட எண்ணெய் வந்தது. தொட்ட புறங்களில் மூன்று தமிழ் கோவில்களையாவது கடந்து வந்தோம். அங்கே பிரபலமான அங்காளம்மனை கண்டோம். லிங்க வடிவிலான மண் உருவம். வெள்ளி கண்கள் பதிக்கப்பட்டிருந்தன. எதிரே மாசாணி அம்மன் போன்று சுதையால் ஆன கர்பிணி தெய்வம் பிரம்மாண்டமாக படுத்துக் கிடந்தாள். அதன் முகம் தமிழக கோவில் போல திருத்தம் கொண்டதில்லை. ஒருவித பழங்குடித்தன்மை கொண்டது என சொல்லலாம். மழை காலத்தில் நனையாமல் இருக்க ஒரு நகரும் தகரக்கூரை இருந்தது. பெரிய பண்ணையில் ஆட்கள் மிகக் குறைவாக தென்பட்டார்கள். செம்பனை பழங்களை பொறுக்க ஜெ.சஈ பி போன்ற ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசியர்கள் தான் பெரும்பங்கு பணி செய்கிறார்கள் என்றார் நவீன். ரப்பர் தோட்டங்கள் அழிந்ததும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களே வேறுவழியின்றி குற்ற செயல்களுக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இன்றும் பெரும்பாலான உள்ளூர் குற்ற முகவர்கள் தமிழர்கள் தான். அவர்கள் சீனர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். சீனர்களின் செல்வாக்கு அளப்பறியாதது என நவீன் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஸ்ரீதர் ரங்கராஜ், சரணுடன் செம்பனை பழத்தை ஆராய்ந்த போது |

கோலா செலான்கூரில் ஏறிவிளையாடும் மந்திகள் |
அங்கிருந்து கோலா செலாங்கூர் எனும் சிறிய குன்றுக்கு சென்றோம். மனிதர்களுடன் நெருங்கி விளையாடும் கருங்குரங்குகள் நிறைந்த குன்று. அதற்கு தின்பண்டங்களை வாங்கிக்கொடுத்தால் நம் மீது ஏறி விளையாடி உண்ணும். சரண் மீது நாலைந்து குரங்குகள் பாய்ந்து ஏறின. என் கையில் இருந்த ஒரு சீப்பு வாழைப்பழத்தை மொத்தமாக ஒரு குரங்கு பறித்துக்கொண்டு ஓடியது. பிற குரங்குகளிடமிருந்து அதை பாதுகாப்பதே அதன் எஞ்சிய நேரத்து வேலையாக இருந்தது. உள்ளே ஒரு அரச பரம்பரைக்கான அருங்காட்சியகம் இருந்தது. விஷ கிணறு பற்றிய ஒரு குறிப்பு அங்கு கவனத்தை கவர்ந்தது. துரோகிகளை கழுத்துவரை அக்கிணற்றில் இறக்கி விடுவார்களாம். விஷ மூலிகைகள் மற்றும் மூங்கிலின் பகுதிகளை அந்த கிணறில் நிரப்பி துன்புறுத்தி கொல்வார்கள் என்றது அக்குறிப்பு. மனிதனின் உச்சபட்ச கற்பனைகள் கொலையிலும் காமத்திலும் தான் இதுவரை வெளிப்பட்டிருக்கிறது எனத் தோன்றியது. கலைஞன் வன்முறை மற்றும் காமத்தில் ஏன் தத்தளிக்கிறான் என்பதை ஒருமாதிரி புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அறத்தைப் பற்றிக்கொள்ளவில்லை என்றால் பாதாளத்தில் வீழ்ந்து விடுவான். நாவலைப் பற்றி சொல்லும்போது ஹிலாரி மாண்டெல் மனிதர்களின் அனுபவங்களின் மீதான பேராசையின் காரணமாக எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது என்கிறார். அனுபவங்களின் பேராசை மனிதனை எந்த எல்லை வரை கொண்டு நிறுத்தும் என்பதற்கு பதில் இல்லை. நவீன் ஊட்டி முகாம் அனுபவங்களையும் ஜெயமோகன் சொன்ன புலி ஜோக்கையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதை ஜெ எப்படி சொல்லியிருப்பார், அவரிடம் கமல் அதை எப்படி சொல்லியிருப்பார் என கற்பனையில் விரித்து பார்த்து சிரித்துகொண்டிருந்தோம். ஸ்ரீதரை இறக்கிவிட்டுவிட்டு சரணின் கோரிக்கையின் பேரில் நவீன் எங்களை போயாக் கறி கிடைக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். திங்கக்கிழமை விடுமுறை என்பதால் ஒரு முதலையின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது. மலாய் மொழி ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துகிறது. ஆங்கில உச்சரிப்பிற்கு ஏற்ப எழுத்துக்களை பயன்படுத்துகிறது. கடை போன்ற சொற்கள் தமிழில் இருந்து மலாய்க்கு சென்றிருக்க வேண்டும். நவீன் இலக்கிய செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தையோ வேறு புரவலர்களையோ அமைப்புகளையோ நம்பியிருக்கவில்லை. குழந்தைகளுக்காக யாழ் பதிப்பகம் நடத்துகிறார். பாடத்திட்டத்தை மாறுபட்ட முறையில் இப்பதிப்பக புத்தகங்கள் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே எல்லாவற்றையும் நடத்த முடிகிறது. வல்லினம் பதிப்பிக்கும் நூல்களுக்கு அச்சானவுடன் இருபது சதம் ராயல்டியை முன்கூட்டியே வழங்குகிறார். நாவல் பட்டறை நடத்தி பின் நாவல் போட்டி நடத்துவது, சிறுகதை பட்டறை நடத்தி பின் போட்டி நடத்துவது என முனைப்புடன் செயல்படுகிறார். எம்மைப்போன்ற எழுத்தாளர்களுக்கு இருக்கும் விலகல் பாவம் நவீனுக்கு கிடையாது. ஒருவித சாகசத்தன்மை உடையவர் என சொல்லலாம். மலேசிய இலக்கியத்திற்கு நிச்சயம் அவருடைய பங்களிப்பு நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் அறிவுப்பசி கொண்டவர்கள் மேலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருக்க முடியும். படைப்பூக்கம் கொண்டவர்கள் அதனினும் சிறிய வட்டம். இத்தகைய தேசங்களில் படைப்பூக்கம் கொண்டவர்கள் எளிதில் அங்கீகரிக்கப்பட்டுவிட முடியும். சில நேரங்களில் அந்த அங்கீகாரமே அவர்களின் படைப்பூக்கத்திற்கு எதிரானதாக ஆகிவிடவும் கூடும். அங்கீகாரம் எளிதில் கிடைக்கும்போது போலிகள் உருவாகும் சூழலும் ஏற்படக்கூடும். மொத்த தமிழ் இலக்கிய பரப்புடன், உலக இலக்கிய பரப்புடன் மோதி நிலைகொள்வது வரை ஓயாமால் இருக்க வேண்டும். நவீன் மலேசியாவில் அத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.
வல்லினம் குழு |
அறையில் இறக்கிவிட்டு விடைப்பெற்று சென்றார். இந்தைறு நாட்களில் இருநூறு கிலோமீட்டராவது அவருடன் வண்டியில் சுற்றி இருப்போம். களைப்பு மேலோங்க மலேசிய பஸ் நிலையத்திற்கு சென்றோம். கிட்டத்தட்ட அது ஒரு விமான நிலையம். எங்கள் பேருந்து நள்ளிரவு ஒன்றரை மணிக்கு வந்தது. மலேசிய எல்லையை கடக்கும்போது காலை ஆறு மணி. சிங்கப்பூர் எல்லையில் பெரும் கூட்டம். சரண் சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பதால் வேறு பாதையில் சென்றுவிட்டார். வரிசை நகர்ந்து நெருங்கியதும் ஒரு படிவம் நிரப்ப வேண்டும் என திருப்பி அனுப்பப்பட்டேன். நிரப்பி கடந்து வெளியே வருவதற்குள் எங்கள் பேருந்து சென்றுவிட்டிருந்தது. அங்கிருந்து ரயில் பேருந்து என மாறி மாறி சரண் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். சரணின் மனைவி ரத்தியும் நல்ல வாசகர். விஷ்ணுபுரம் வட்டத்து பிரதிநிதியாக என்னிடம் பலகேள்விகளை எழுப்பினார். நானும் இயன்றவரை பதில் சொன்னேன். சுடச்சுட இட்லியும், தோசையும் கேசரியும் சாப்பிட்டு லிட்டில் இந்தியா கிளம்பினோம். சிங்கப்பூருக்கு சென்று திரும்பும்போது வாங்கி வரவேண்டிய பொருட்கள் என நமக்கு ஒரு மரபிருக்கிறது. மூன்று மணிநேரம் முஸ்தபாவில் சுற்றி வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு செட்டிநாடு கறி பேலஸில் உண்டு கணேஷின் இல்லத்திற்கு சென்றோம். அங்கே விட்டு வந்திருந்த பெட்டியில் சாமான்களை அடுக்கி அவரிடம் விடைப்பெற்று ரயிலில் விமான நிலையம் கிளம்பினோம். சரண் விமான நிலையத்தில் என்னை விட்டுவிட்டு சென்றார். உண்மையில் எனக்கு இப்போது நண்பர்கள் என சில பள்ளி நண்பர்களையும் இலக்கியம் வழி அடைந்த நண்பர்களையும் மட்டுமே சொல்லமுடியும். விஷ்ணுபுரம் வட்டம் ஒரு குடும்பம் என்பது கிளிஷேவாக இருக்கலாம் ஆனால் அது உண்மை. எங்களுள் கடும் முரண்பாடுகள், சண்டைகள் வந்தாலும் கூட இந்த நண்பர்களிடம் எப்போதும் அணுக்கத்தை உணர்கிறேன்.
இந்த ஆறு நாட்கள் எனக்கு பல அனுபவங்களை அளித்தது. புதியவற்றை கற்றேன். நண்பர்களை கண்டுகொண்டேன். என்னை எந்த நம்பிக்கையின் பேரில் அழைத்தார்களோ அதற்கு உண்மையாக இருந்தேன் எனும் நிறைவுடன் ஊர் திரும்பினேன். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும். வாசிக்கவும் எழுதவும் எத்தனையோ இருக்கின்றன.