புத்தகங்கள்

Pages

Tuesday, April 9, 2019

பெத்தம்மா

ஞாயிற்றுக் கிழமை குடும்ப நிகழ்விற்காக பாண்டிச்சேரி சென்றிருந்தேன். எங்கள் வீட்டில் எங்களோடு ஏறத்தாழ 20 வருடங்களாக வசித்து வந்த பெரியம்மா காலை 11.15 க்கு மண் நீங்கினார் என அழைத்து சொன்னார்கள். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவரை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து விடுவித்து வீட்டிற்கு அழைத்து வந்தோம். ஏறத்தாழ பெரும்பாலான சோதனைகள் இயல்பான நிலையை சூட்டின. மருத்துவரும் ஆபத்து ஏதுமில்லை என்றே சொல்லியனுப்பினார். முந்தைய சில முறைகள் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டவர்.

பத்மா பெத்தம்மா என்று தான் அவரை அழைப்பேன். எனக்கு மட்டுமல்ல என் நண்பர்கள் அனைவருக்கும் அவர் பெத்தம்மா தான். அம்மாவின் உடன் பிறந்த அக்கா. அவருக்கு பிள்ளைகள் கிடையாது. நாத்தனாரின் மகளை அவர் எடுத்து வளர்த்தார். நாத்தனாரின் பிள்ளைகள் பலருக்கு திருமணம் செய்து வைத்தார். பள்ளி கால கோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு செல்வேன். அப்பா வழி பெரியப்பா வீடும் பெத்தம்மா வீடும் மாம்பலம் ரயில் நிலையத்தின் இருபுறமும் இருந்தன. அதிகமும் அப்பாவழி பெரியப்பா வீட்டில் இருக்கவே விரும்புவேன். காரணம் அண்ணனும் அக்காவும் அங்கு இருந்தார்கள். ஆனால் சென்னையை சுற்றிப் பார்த்தது பெத்தம்மாவுடன் தான்.

 பெத்தம்மா திருமணம் செய்துகொண்டு போன வீடு பட்டுகோட்டையில் வளமான குடும்பங்களில் ஒன்று. ஆனால் காலப்போக்கில் மெல்ல நொடிந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு தொண்ணூறுகளின் மத்தியில் சென்னைக்கு இடம் பெயர்ந்தார்கள். பெரியப்பா டாக்டர் ரங்கபாஷ்யம் ஆஸ்பத்திரி மருந்துகடையில் வேலை செய்தார். தினமும் சைக்கிளில் சென்று வருவார். மாம்பலம் ஒண்டு குடித்தனகளில் ஒன்று தான் அவர்களின் வீடு. வீட்டு பின்னால் இருக்கும் அடிப் பம்பில் நீர் இறைத்து இறைத்து கரங்கள் இரண்டு மட்டும் கரனைகரனையாக திரண்டிருக்கும். அதை எப்போதும் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். நாரதகான சபை, கிருஷ்ணகான சபை போன்றவற்றில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்து செல்வார். தவறாமல் மெரீனா சென்று வருவோம். சிறிய சைக்கிள் வாடகை எடுத்து மாம்பலம் வீதிகளில் ஒட்டியிருக்கிறேன். அவருடைய வருமானத்திற்கு மீறிய செலவை ஏற்படுத்தியிருக்கிறேன். மூன்று வருடங்கள் அவரோடு சபரிமலை சென்று வந்திருக்கிறேன். 

பெத்தம்மா மரபான நம்பிக்கைகள் கொண்டவர். பொதுவாக அத்தகையவர்களை நாம் பழமைவாதிகள், பிற்போக்கானவர்கள் என முத்திரை குத்திவிடுவோம். இப்போது யோசிக்கையில் அவருடன் கடுமையாக முரண்பட்ட, சண்டையிட்ட தருணங்கள் அத்தகையவை. ஆனால் மரபான மனம் கொண்டு அவர் வேறு பலர் தாண்ட தயங்கிய எல்லைகளை கடந்திருக்கிறார். எங்கள் வீட்டு காதல் கலப்பு திருமணங்களில் முதல் ஆளாக நின்று பேசி முடித்திருக்கிறார். எல்லோரையும் ஏற்கும், அரவணைக்கும் கனிவை அடைந்தார். பலரும் தங்கள் அந்தரங்க துயரங்களை அவரிடம் இறக்கி வைத்திருக்கிறார்கள். இறுதிவரை அவர்களின் ரகசியங்களை காப்பாற்றி ஆறுதல் அளிப்பவராகவே இருந்திருக்கிறார். இப்படி அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் அடைந்த நட்புகள் ஏராளம். பட்டுகோட்டை, சென்னை என அவர் நீங்கி வந்த ஊர்களில் இருந்தெல்லாம் அவரிடம் அரைநாள் பேசுவதற்காக வந்து செல்வார்கள். என் திருமணத்தை எப்படிச் செய்ய வேண்டும் என வழிமுறைகளைப் பற்றிய அவருடைய விரிவான குறிப்புகள் பின்னர் பலருக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கிறது. நாடகங்கள் திரைப்படங்கள் எதையும் அவர் விரும்பி பார்த்ததில்லை. சமையல் அறையில் சமைக்கும்போது தினமும் பாடிக்கொண்டே சமைப்பார். பெரும்பாலும் நாம சங்கீர்த்தன பஜனைகள், பழைய தமிழ் திரைப்பட பாடல்கள். 'நீல வண்ண கண்ணா வாடா' அவர் பாடி கேட்கும்போது எனக்கு கண்கள் எத்தனையோ முறை கலங்கியுள்ளது. காரைக்குடியில் நிகழும் ராதா கல்யாண சீதா கல்யாண நிகழ்வுகளில் தவறாமல் பங்குபெறுவார். ஜெயகிருஷ்ண தீக்ஷிதரின், ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பாடல்களின் மீது மிகுந்த ஈடுபாடு. எனக்கு அவர் வழியே அபங்குகளின் மீது நாட்டம் ஏற்பட்டது. ஏறத்தாழ 65 வயதிற்கு பின் அஷ்டபதி பாடல்களை முறையாக பயின்றார். 'கோபிகா பஜனை மண்டலி' என்று அவர்களுடைய குழுவிற்கு அவரே பெயர் சூட்டினார். பாட்டிகள் பஜனை மண்டலி என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும் என கிண்டல் செய்வேன். ஒருவகையில் பார்த்தால் தன்னை பக்தி பாவத்தில் கரைத்துகொள்ளவே முயன்றார். காரைக்குடி முழுக்க நடந்தே செல்வார். வண்டியில் ஏறி அமர்வதற்கு பயம். அதீத எச்சரிக்கை குணம் உண்டு அதன் காரணமாகவே ஏமாந்த நிகழ்வுகளும் பல. தேங்காய் அரைத்த பிட்ல, வெங்காய சாம்பார், மைசூர் ரசம் மிகப் பிரமாதமாக இருக்கும். உடல் நலிவடையும் வரை அவரே சமையல். இறுதி காலங்களில் கூட பெரியப்பாவிற்கு மட்டுமாவது ஏதாவது செய்து போடுவார். அவரிடம் சில விந்தையான வழக்கங்கள் உண்டு. வாரமலர் புதிர்களை முழுவதுமாக போட்டு முடிப்பார். மங்கையர் மலர், வாரமலர், என எல்லாவற்றிலும் உள்ள புகைப்படங்களுக்கு சிறு பிள்ளை போல் கண்ணாடி, தாடி, மீசை வரைந்து நாமம் அல்லது பட்டை போடுவார். பெரியம்மா அந்த இதழை படித்திருக்கிறார் என்பதற்கு அது ஒரு அடையாளம். 

அவருடைய ஆச்சாரங்கள் என்னை எப்போதும் சீண்டியிருக்கின்றன. எனது அரைவேக்காட்டுத்தனத்திற்கு இன்று நாணவும் செய்கிறேன். அவருடைய நம்பிக்கைகளை முடிந்த வரை மோதி உடைக்கப் பார்த்திருக்கிறேன். சில நொடிகளில் அத்தகைய உரையாடல்கள் அவருடைய கண்ணீருடன் முடிவுக்கு வரும். மனம் விட்டு அழவெல்லாம் மாட்டார்.லேசாக கண்ணீர் விடுவார். என்னிடம் இரண்டு மூன்று முறை மறுபிறப்பு, மரணத்திற்கு பின்பான வாழ்க்கை பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அவருக்கு எந்த நம்பிக்கையையும் நான் அளித்ததில்லை. அவை வெறும் நம்பிக்கை என கடுமையாக வாதிட்டிருக்கிறேன். அவருடைய முதன்மை கவலைகளில் ஒன்று பெரியப்பாவை அனுப்பிவிட்டு தான் போக வேண்டும். தானில்லாமல் அவரால் வாழ முடியாது என்பதே. இப்போதுவரை சிகரெட் பிடிக்கும் அவர் தான் முதலில் போவார் என்றே எல்லோரும் கணித்திருந்தோம். பழைய காலத்து மனிதர். அனுசரித்து போக மாட்டார். தட்டில் சாப்பாடு வந்தாக வேண்டும். பெத்தம்மா நடை தளர்ந்த காலத்திலும் கொண்டு போய் வைத்து பரிமாறுவார். எனக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும். நீங்கள் தான் அவரை கெடுத்து வைத்தீர்கள் என திட்டினால்,'என்னால் முடிகிறது செய்கிறேன்' என்பார். இரண்டு வருடங்களுக்கு முன் அவர்களுடைய ஐம்பதாவது திருமணநாள் கொண்டாடினார்கள். அப்போது தான் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டது. இரண்டு வருடங்களாக வாரம் இரண்டு நாட்கள் டயாலிசிஸ் செய்து வருகிறார். குடல் வால் வெடித்து நோய் தொற்று பரவியது. அப்போதும் மீண்டார். இந்த பத்து நாட்களில் அவருக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. மெல்ல இயக்கம் குறையத் துவங்கியது. முகம் அமைதி அடைந்தது. பெரும் நேரம் உறக்கத்திலேயே கழித்தார்.போதத்துடன் இருந்த நாட்களில் எனது புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை நீட்டி, இதில் என்ன இருக்கிறதென்று படித்து சொல்ல வேண்டும் என்றார். அவர் காட்டிய புத்தகம் "Life after death- Neville Randall'. செகண்ட் ஹான்ட் புத்தக கடையில் வாங்கியது. நான் வாசித்திருக்கவில்லை. அவசியம் சொல்கிறேன் என்றேன். அரைமயக்கத்தில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது அவருடைய மரணத் தருவாய் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். அவருக்காக அப்போது நான் செய்ய முடிந்தது இது மட்டுமே. இந்த புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். ஆவி தொடர்பாளர் வழியாக ஆவிகள் பேசியதன் குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு 70 களில் வெளியான புத்தகம். ஒரு மாதிரி கிறிஸ்தவ மறுமையை சொல்வது. நல்ல கட்டுக்கதை என எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர் கட்டிலருகே அமர்ந்து  நீங்கள் வாசிக்கச்சொன்ன நூலை வாசித்தேன். அதில் மறுமை உண்டு என சொல்லியிருக்கிறார்கள். அங்கே துன்பமும் துயரமும் இல்லாத ஆனந்தம் நிறைந்த உலகு நமக்காக காத்திருக்கிறது என்பதை ஆதரங்களோடு எழுதி உள்ளார்கள். அஞ்ச வேண்டாம் என்றேன். பாண்டிச்சேரி சென்று வருகிறேன் என சொன்னபோது ம் என்றொரு பதில் மட்டும் வந்தது.

 அவருடைய மரணச் செய்தி கேட்டவுடன் எனக்குள்  பிரார்த்தனையாக எழுந்த சொற்கள் என்பது 'என் தன்முனைப்பின் காரணமாக அறிந்தோ அறியாமலோ உங்களை காயப்படுத்தி இருக்கிறேன். அதற்காக என்னை முழுமையாக மன்னியுங்கள்.' பாண்டிச்சேரியில் இருந்து வீடு வந்து சேரும்வரை மனதுள் இதையே சொல்லிக்கொண்டிருந்தேன். 



எங்கள் வீட்டிற்கு அவர்கள் வந்தபோது அவர்கள் சைதாப்பேட்டையில் சுயமாக துவங்கிய மருந்து கடை நட்டமடைந்திருந்தது. தாத்தாவிற்கு உடல் தளர்ந்திருந்தது. இந்த வீட்டில் என் அப்பா துவங்கி, இரண்டு பாட்டிகள், தாத்தா, இப்போது பெரியம்மா என நான் எங்கள் வீட்டில் காணும் ஐந்தாவது மரணம். ஒருவகையில் என் வாழ்க்கை கேள்விகளை நான் இம்மரணங்களில் இருந்தே பெறுகிறேன். என்னை உருவாக்கியதில் இவர்கள் அனைவரின் பங்கும், என் அம்மாவின் பங்கும் உண்டு. என் வாழ்வு அவர்கள் அளித்த கொடை. எத்தனையோ சமரசங்களின் ஊடாக, அவமானங்களின் ஊடாகத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். வாழ்வை ஒரு வலியாக, பெரும் சுரண்டலாக உணர்ந்து நம்பிக்கையிழந்து நிற்கும் தருணங்கள் உண்டு. ஆனால் அதை கடந்து வர எவருடைய ஆசியோ, பரிவோ, கனிவோ தான் உதவியிருக்கிறது. எங்கிருந்தோ நீளும் மீட்பரின் கரம் என இவர்களைப் பற்றி எண்ணி கொள்வேன். அவர்களே இப்போது வரை இறுகப் பற்றியிருக்கிறார்கள். சில நேரங்களில் இவர்களின் அன்பிற்கு நான் தகுதியுடையவனா எனும் ஐயம் எனக்குண்டு. பெத்தம்மா உட்பட எங்கள் வீட்டில் வாழ்ந்து உயிர்விட்டவர்களை எண்ணும் போது என் வாழ்விற்காக அவர்கள் தங்கள் தன்னலத்தையும், தன்முனைப்பையும் அன்பின் பொருட்டு  தாண்டிய தருணங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். நவீன வாழ்வின் அன்றாடத்தில் அவை அசாத்தியமான துணிவினால் அல்லது அசட்டுத்தனத்தால் மட்டுமே சாத்தியமாகும். தியாகங்களின் ஊடாக திளைத்தது என் வாழ்க்கை. அவர்களுக்கு திருப்பியளிக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் அவர்கள் எனக்களித்ததை எனது முழுதுள்ளத்தால் பன்மடங்கு பெருக்கி எல்லோருக்கும் அளிப்பதன் வழியாக அவர்களை நிறைவுறச் செய்யும் வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும்.

பெத்தம்மா நிறைவுறுக..
உங்களுக்காக உங்களுக்கு பிடித்த உடையாளூர் கல்யானராம பாகவதரின் வனமாலி வாசுதேவா 

https://www.youtube.com/watch?v=-PocXk1-U_I  

4 comments:

  1. நீங்கா நினைவலைகளை விட்டுச் சென்று விட்டார்.
    ஆத்மார்த்தமான பத்மா பெரியம்மா.
    சிரத்தாஞ்சலிகள

    ReplyDelete
  2. You expressed your feelings in your writing is marvelous. When I read this my eyes are filled with tears. Say my thanks to God. Whom gives a nice person as Alludu to our family. You always get their (peddammas) blessings and wishes.

    ReplyDelete
  3. அமைதியில் நிறைக..

    ReplyDelete
  4. பெத்தம்மா , நம் எல்லார் வீட்டிலும், முகம் தெரியாத ஒருவராக, இருந்துகொண்டு தான், உள்ளனர். பல இடங்களில் , என்னைப் பொருத்திப் பார்த்து , நீர் மல்க, மேற்கொண்டு வாசிக்க முடியாமல், தொண்டையை அடைக்க, ஒருவாறு , வாசித்து முடித்தேன். மெல்லுணர்வு, கொள்ளாத மனிதர்க்கு , இவ்வனுபவங்கள் , கிடைக்காது எனவும், ஓர், எழுத்தாளர் நண்பரின், வரிகள், குறுக்கே ஓடுவதை , உணர்ந்தேன். நன்றி.

    ReplyDelete