புத்தகங்கள்

Pages

Thursday, April 4, 2019

அம்புப் படுக்கை - சிறுகதை

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் ஒத்துழைக்க மறுத்து முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே உணர்ந்துகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் ஓசை. 

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி, “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”  என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கி பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளை மட்டும் ஒளியேற்றியது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க... சொல்லிருங்க” என்றான்.

“அப்பச்சி ஒன்னையத்தான் பாக்கணுமாம்”
அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.
“நாச்சி இருக்கானா?’
“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”
“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் வீட்டுக்குள் நிறுத்தினான்.

ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையவை. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்துக் கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்... மெதுவான்னாலும் வலுவா இருக்கு... பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு... ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்... ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுக் கொண்டிருப்பார். கிண்டல் செய்வதுகூட பிடிபடாத அளவுக்கு ஆனாரூனா ஒரு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல… எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன்... என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டாய்ங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுத்தார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு. மொத்தமும் காலி. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்… போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம். சோத்துக்கு வழியில்ல... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்... அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும்  கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும். அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட ரங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான். ஒரு யுத்த தர்மம் வேணாம்? தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன், தெகச்சு நின்னுட்டேன்... டமார்ன்னு பெருஞ்சத்தம்... அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்... கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான். நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்தப் பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல. பெரிய ஆறு... முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி. சுதாரிக்க முடியல... அடிச்சுக் கொண்டே போயிடுச்சு... கண்ணு முன்னாடி பாத்தேன்... இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்... ரெண்டு நிமிஷம்தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங் கடுக்கனை கொடுத்து தப்பியதைச் சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக... நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு எப்போதும் மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம். தப்பித்ததில் பெருமிதம் வேறு உண்டு. 

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒரு நாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு... எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்… நாம என்ன ராவணனா கம்சனா... அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்... குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்... அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம்... நீர் சொல்லிட்டீர்... ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம். ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக... மீனாச்சி ராச்சியம்தான்” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது அவனுக்கு என்ன புரிந்திருக்கக்கூடும்? வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்... நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டுச் சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்துக் கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம்... சீ ச்சீ... போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்... போதும் கண்ணா” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக் கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ... கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ...” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.
“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா... தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு... ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். தெத்துப்பல்லும், பென்சில் மீசையுமாக இருந்தார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா... நல்லா இருக்கீகளா... நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு... தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்கக் கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் மூச்சிரைக்க லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது. 

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலைக் கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டுச் சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல. நாடி எல்லாம் நல்லா இருக்கு. பழைய மாதிரி ஆயிடலாம். கவலப்படாதீங்க. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.
“அவசியம் இருக்காது“ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் ஓலம் கேட்டது. நிற்க விடாமல் சைக்கிள் அவனை உந்திக் கொண்டு போனது.

No comments:

Post a Comment