புத்தகங்கள்

Pages

Thursday, April 4, 2019

2016- சிறுகதை


ஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

வின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு

ஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியப்படுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்கக்கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்).

பின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தைக் குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதிச் செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஓ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஒரு நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிற்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதறச் சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்- ஆசிரியர் குழு.
வின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலகச் சூழலில் நமக்கு அவர் அறிமுகப்படுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரைத் துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்து கொண்டோம். அவருக்கு ஒரு சின்னக் குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தைச் சந்திக்க விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம், அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.

கோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்குக் கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தன. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகிக் கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் “இருக்காது... எதுவும் நடக்காது... அஞ்ச வேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.

வெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர்தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கியபோது அவருக்கு எதிரிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து  என்னைப் பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான். அவனைக் காட்டி “திபெத்தியன்” என்றார்.  அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்கப் பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவிக் கிடந்தன. சற்று கிழடு தட்டிப் போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறிக் கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்ற காலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.

வி – புதிய செயற்கைப் பல் வரிசை பொருத்தப்பட்டிருக்கிறது. நினைவிருக்கும் என எண்ணுகிறேன்...

ந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது...

ஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.

வி- முதலாளிகளின் தொப்பி...

என்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .

வி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே ?

ந- இல்லை தான்... ஆனால் ஏனோ உங்களைச் சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் எனத் தோன்றியது.
ஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.
இரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்குப் பிறகு,

ந- சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன். உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது. நீங்கள் சுடப்படும்போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
என்றேன் தயங்கியபடி

வி- நன்றி. மெல்லிய துணியால் ஆன தொப்பி... குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது (சிறிய புன்னகை முகத்தில் விரிந்தது). எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும்போது பிடுங்கி வீசி எறிய மாட்டேன். அவ்வளவுதான்.

அலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.

வி- விக்டரி ஜின்?

ந- நன்றி. வேண்டியதில்லை.

பரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்தபின் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.

வி- நாம் இப்போது பேசலாம்.

எனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்கக் கூடும்.

வி- அஞ்ச வேண்டியதில்லை. என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை. அவர்கள் கனிவுடன் என்னை சகித்துக் கொள்வார்கள். பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால்கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல.

நானும் புன்னகைத்தேன்.

ந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்ததுண்டா?

வி- நான் ஓ பிரையனை அறிவேன். கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரைக் கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன். நான் பார்க்க வேண்டும் என்பதில்லை. அவர் இருக்கிறார். எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது.

ந- அப்படியானால் கோல்ட்பெர்க்?

வி- அவரும்தான் இருக்கிறார். பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார். கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும்? வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே. பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை.

ந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்.
வி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன். வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே.

ந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன். கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்.

வி- நான் கலகக்காரன் இல்லை தோழர். ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும்கூட நம்ப வேண்டியதில்லை. நான் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன். அது நன்மையா தீமையா என்றுகூட  பகுத்தறிய முடியாத மிகச் சாதாரண சுயநலமி நான்.

ந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம்கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவிகூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள். முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஓருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையைச் சிந்தையில் சுமந்தாலும்கூட அவர்கள் கலககாரர்கள் தான்.

வி- சிந்தையில் வாய்மையைச் சுமப்பது- ஆஹ்... இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள். (லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தைக் காவலர்கள், பாவம் பார்சன்ஸ்... அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திக் கொண்டுள்ளார். ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்.

ந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம். அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை. உங்களைப்போல்தான்  இருப்பேன் என நினைக்கிறேன். அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளக் கதைகளைதான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால்தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.

ஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டைக் கால்களை நோக்கிக் கொண்டிருந்தார்.

எனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்மித். 

வி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம். என்னே ஒரு கற்பனை வறட்சி...

ந- இல்லை... இதில் ஒரு வசீகரம் உண்டு. உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன். தேடிச் சென்று வாங்கினேன். எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும். நானும் கூட எண்ணுவதுண்டு... இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்... நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க.

வி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை... அது வெறும் கற்பனை… கற்பனை மட்டுமே..

என்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.
இல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது.

ந- இல்லை ஸ்மித்... நிச்சயம்
மீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..

வி- இல்லை நண்பரே. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை. உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்பப் போவதில்லை.

என்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசிக் கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேசத் துவங்கினேன்..

ந- ஒருநிமிடம்... திருவாளர். ஸ்மித்... ஆர்வெல் உங்களைப் படைத்த சூழலைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது. அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை. முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டன. பொருளாதாரமும் மனித வளமும்தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது. நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித். உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை. பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீணச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித். உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
மூச்சு வாங்கியது.

மெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிக்கொண்டிருந்தார்.

வி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை. எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே. நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை. எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் ஒன்றுண்டு... போர்கள் அருகி இருக்கலாம், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன?

என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமாக அமர்ந்திருந்தேன்.

வி- நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் நண்பரே. எவரும் தப்ப முடியாது. நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்குத் தெரியும். அவ்வளவு ஏன்? உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம்கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம். உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்கப்படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம். அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்கப்படுவீர்கள்.

சன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது.

என்னுடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.

வெளியே இருள் கவியத் துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கிக் கொண்டிருந்தது.

ந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்.
மாறா மெல்லியப் புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.

வி- இந்த நாகரீகமற்ற செயலுக்கு மன்னிக்கவும். இந்த வெரிகோஸ் புண்..
என்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்துக் கொண்டார்.

ந- பரவாயில்லை. நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் எனப் புரிந்து கொள்கிறேன். அப்படி இருக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்.

ஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி இசைத்துக் கொண்டிருந்தாள். அந்த பாடல் மிக சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

சட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி

வி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
கணநேர யோசனைக்குப் பின்னர்

ந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறச்சிக்கல் இருந்திருக்காது. நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள். அவரைப் பொறுத்தவரை விதிமுறை என்றால் அதை மீற வேண்டும். அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும். அவ்வளவுதான்.

வி- இல்லை... நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல. நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களைத் தேடி அலைந்தேன். அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை. இயல்பிலேயே அறிந்திருந்தாள். கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிக்கொண்டாள். ஆனால் அவள் அதை எதிர்பார்த்திருப்பாள். அதிலும் தனது மீறலை வெளிப்படுத்த முயன்றிருப்பாள்.

வாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மௌனித்தது.
வி- உங்களுக்கு அதிக நேரமில்லை... அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்.

ந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன். உங்கள் அன்னையைப் பற்றி, தங்கையைப் பற்றி, முதல் மனைவியைப் பற்றி, பிறகு காதலைப் பற்றி, முழுமையடையாத அந்தப் பாடலை பற்றி… ஆனால் இப்போது முடியுமா எனத் தெரியவில்லை.

வி- ஏன்?

ந- தெரியவில்லை. உங்களுக்கு ஓ பிரையன் மீதிருந்த விளக்கிக் கொள்ள முடியாத பிரேமையைப் போல் ஏதோ ஒன்று... உங்களிடம் என்னால் பேச முடியும். ஏதோ ஒரு வகையில் எனக்கு அணுக்கமானவர் என தோன்றியது. நீங்கள் எனக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாகத் தோன்றுகிறது.

சீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.

வி- உங்களைச்’ சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக.
என போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னை நோக்கித் தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.

கருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மைத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர். வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழு மனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.

எங்கள் மேஜையைத் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந்த ஜின் புட்டியையும் எடுத்துச் சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கனக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்கப் பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். ஆப்ரிக்க- அமெரிக்கன். தலையில் கருப்புத் துணியை புது மாதிரியாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கிப் புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரக்கூடும்.

No comments:

Post a Comment