சரவண சந்திரனை நெடுநாட்களாக வாசிக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது ஆனால் அதற்கான தொடக்கம் நிகழவே இல்லை. ஒருபக்கம் அவர் வாழ்வனுபவங்கள் பெற்றவர் என்பதால் நூதன கதைசொல்லி என புகழப்படுகிறார். மறுபக்கம் அவருடைய நாவலைப் பற்றி சாபக்காடு தளத்தில் அக்குவேராக பிரித்து போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயமோகனின் முன்னுரை 'சுபிட்ச முருகனை' வாசிக்க ஒரு தூண்டுகோல். மேலும் நண்பர் ஜீவ கரிகாலன் உலகியல் வழியிலிருந்து ஆன்மீகத்தைத் தேடும் சரவண சந்திரன் வழியைப் பற்றி சொல்லியிருந்தார். இந்நாவலின் பெயரும், அதன் முகப்பு படமும் என்னை வசீகரித்தது. இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். 125 பக்க சிறிய நாவல் தான். இதுவே நான் வாசிக்கும் முதல் நாவலும் கூட.
நாவலின் இரண்டாம் பாதியில் ஒருவித பித்துநிலை வெளிப்படுகிறது. உண்மையில் சில மிஸ்டிக் அனுபவங்களைப் பின்தொடர்ந்து எழுத முயன்றிருக்கிறார். வாசிக்கும்போது இது மெய்யான அனுபவங்கள் என்பதை உணர முடிகிறது. நாவலை வாசிக்கத் துவங்கிய வெகு சில பக்கங்களில் துவங்கிய நெய் இனிப்பின் வாசனையை நாவல் வாசித்து முடித்த பின்னரும் நாசியில் உணர்ந்தபடி இருந்தேன். உண்மையில் பெரும் தொந்தரவாக இருந்தது. அதேப்போல் கற்சிலையின் குங்குமப் பாதமும் ஒரு காட்சியாக் மனதை ஆக்கிரமித்து விட்டிருந்தது. மிஸ்டிக் அனுபவம் நோக்கி திறந்து வைக்கும் வாசகனுக்கு அதை இந்நாவல் அளிக்கின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தகைய மெய்நிகர் புலன் அனுபவங்களை கடத்தவது சாதாரண விஷயமல்ல.
நிற்க
இந்நாவலின் சிக்கல் என்பது, சரவண சந்திரனின் மொழி இத்தகைய அனுபவங்களை கடத்தும் அளவிற்கு போதிய வலுவில்லாமல் இருப்பதே. ஆகவே அவை ஆர்வமூட்டாமல் வெறுமே கடந்து செல்கிறது. மைய பாத்திரத்தின் வார்ப்பும் அதன் வளர்சிதை போக்கும் சரிவர கூடிவரவில்லை எனும் எண்ணமும் ஏற்பட்டது. மீட்பை பேச முயலும் நாவல் ஊழ் வழி தேர்வை அதன் வழியாக முன்வைப்பதால் மிகவும் பலவீனப்பட்டுவிடுகிறது. நாவலின் மையமான ஆண்மையிழப்பு, எது ஆண்மை? ஆண்மை மீட்சி? ஆகிய கேள்விகளை சு. வேணுகோபாலின் கூந்தப்பனை எழுப்பிய அளவிற்கு உக்கிரமாகவும் தீவிரமாகவும் வேறு படைப்புகள் எழுப்பவில்லை என்றே தோன்றுகிறது. கீர்த்தனாவுடனான கதைசொல்லியின் உறவு பகுதி நாவலின் மிக பலவீனமான பகுதியாக தோன்றியது.
சரவணச்சந்திரனின் வேறு ஆக்கங்களை வாசித்து பார்க்க வேண்டும். இந்த நாவல் அளித்த மெய்நிகர் புலன் அனுபவங்கள் என்னை விட்டு அகலாது என்றே எண்ணுகிறேன்.
நானும் இப்பொழுது தான் வாசித்தேன் அந்த அளவு என்னை வசீகரிக்கவில்லை "ரோலக்ஸ் வாட்ச்"பரவாயில்லை.
ReplyDeleteங
ReplyDelete