எழுத்தாளர் அதீதன் கார்கால 'கல்குதிரை' இதழில் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கட்டுரை. நன்றி.
--
கதைகள் என்பவை என்ன? ஏன் கதைகள் சொல்லப்படுவதும், எழுதப்படுவதுமான செயல்கள் காலாகாலத்திற்கும் தொய்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைக் கேட்பதும், படிப்பதுமான சமயங்களில் வாசகனாகப்பட்டவன் எதைக் கண்டடைகிறான்? இவை தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்விகள்தான் எனினும் கதைகளின் வழியேதான் பெரும்பாலான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கதாசிரியன் தன் அகத்தின் உரையாடலைப் புறத்தின் சூழலோடு தனது மற்றமையிடம் முன்வைக்கிறான். அது வாசகனைப் போய்ச்சேரும்போது கதைசொல்லியின் மற்றமையானது வாசகனின் சுயமாக உருமாற்றம் கொள்கிறது. ஆக கதைசொல்லி வேறெங்கோ இருக்கும் தன் சுயத்திடம் பிரதியின் வழியே உரையாடும் நிகழ்வே கதைகளாக உருக்கொள்கின்றன.
தற்போதைய சூழலில் நல்ல சிறுகதைத் தொகுப்புகளுக்கான தேவை எப்போதும் அவசியமாகவே இருக்கிறது. கதைகளின் பேசுபொருள், வடிவம், மொழி போன்றவற்றைப் பற்றிய அறிவு ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுதுபவரைவிட அதிகமாகவே இருக்கும். வெறும் எண்ணிக்கைக்காகவே தனியார் நிறுவனங்களில் விற்பனையாளருக்குத் தரப்படும் இலக்கைப்போல ஆண்டுக்கு இத்தனை புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்கிற இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு எழுதித்தள்ளுபவர்களும் அதிகம் இருக்கவே செய்கின்றனர். அதிலும் கவிதை, நாவல், கட்டுரை போன்றவற்றின் வடிவங்களோடு ஒப்பிடுகையில் ஒரு சிறுகதையைச் சிரமமின்றி எழுதிவிடலாம் என்கிற எண்ணமே. அதற்கான பிரயத்தனங்களை மட்டுப்படுத்திவிடுகிறது. அறிந்தவற்றையெல்லாம் கதையாக்குவது என்பதைக்காட்டிலும், அறிந்தவற்றுள் எதைக்கதையாக்குவது என்ற தெளிவே ஒரு சிறுகதையாசிரியனுக்கு அவசியமென்று கருதுகிறேன். இந்தத் தெளிவானது சிறுகதை என்கிற ஒற்றை வடிவத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்து என்கிற பொதுவடிவத்திற்குமே பொருந்துமென்பதே என் கருத்தும்கூட.
இத்தகைய சூழலில் சமகாலத்திய சிறுகதை எழுத்தாளர்களில் நம்பிக்கைக்குரிய பலரும் தத்தமது பங்களிப்பைச் செய்துவருகின்றனர். குறிப்பாக அவர்கள் எடுத்துக்கொண்ட வடிவத்திற்கு நேர்மையாகவும், செறிவாகவும் தங்களின் படைப்புகளை முன்வைக்க அவர்கள் தவறுவதில்லை. குறைகளே இல்லாத படைப்பென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. நூறுசதவிகிதம் சரியான தொகுப்பென்று சொல்லும்படி ஏதேனும் ஒரு தொகுப்பு இருக்குமா என்பதும் சந்தேகமே. எனினும் ஒருபடைப்பானது போலித்தன்மைகள் இல்லாததாகவும், அலங்காரங்களால் மட்டுமே நிரப்பப்படாததாகவும், தகவல் களஞ்சியமாகவோ, கதைசொல்லியின் மேதமைத் தம்பட்டமாகவோ இல்லாமல். தன்னை அணுகும் வாசகனுக்கு உண்மையாக, துரோகமிழைக்காததாக, குறைந்தபட்சம் அவனை ஏமாற்றாத ஒன்றாக இருக்கவேண்டுமென்பதே வாசகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் வந்த சில சிறுகதைத் தொகுப்புகள் அத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்வதற்கான முன்னெடுப்புகளையும், அவைகுறித்தான பிரக்ஞையுடனும் வெளிவந்துள்ளன.
”யாவரும்” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. இதிலிடம்பெற்றுள்ள கதைகள் பல்வேறுகாலகட்டங்களில், பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை. அவற்றை ஒருவசதிக்காக முதலில் மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.. 1)சொல்லல் முறையிலும், வடிவத்திலும், சிறப்பாக வந்துள்ள கதைகள், 2) கருப்பொருள் சிறப்புற அமையப்பெற்றவை, 3)மேற்சொன்ன இரண்டும் ஓரளவே அமையப்பெற்றவை.
1)சொல்லல் முறையிலும், வடிவத்திலும், சிறப்பாக வந்துள்ள கதைகள்:.
இக்கதைகள் அவை சொல்லப்பட்டிருக்கிற விதம், வடிவம், மற்றும் மொழி இவற்றின் அடைப்படையில் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக 2016 மற்றும் பேசும் பூனை ஆகிய இரண்டும் அதன் தனித்துவ வடிவத்திலும், ஆரோகணம் அதில் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களைக் கையாள்கிறது என்றபோதும் வெளிப்படையாக ஒரு கதாபாத்திரத்தின் விவரிப்பாகவே நகரும் கதைக்குள் பெரும் கால இடைவெளிக்கு முந்தைய மற்றொரு கதாபாத்திரமும் ஒளிந்துகொண்டிருக்கிறது..
அ)2016:
ஒரு கதையை / நாவலைப் படித்த வாசகன் அதனுடன் தன்னைப் பினைத்துப் பார்க்கிறான். கண்ணாடி உருளைக்குள் கப்பல் மிதந்துகொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்வெல்லின் நாவலான ”1984”ல் வரும் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்திற்கும் கதைசொல்லியான நரோபாவிற்கும் இடையிலான பேட்டி வடிவில் அமைந்த உரையாடலாகக் கதை நகர்கிறது. நரோபா என்னும் பெயருடைய நிஜவுலக வாசி ஆர்வெல்லின் புனைவிற்குள் நுழைகிறான். அங்கு வின்ஸ்டன் ஸ்மித்தைச் சந்தித்துப் பேட்டிகாண்கிறான். அதுவும் அடுத்த காட்சியில் அவர் காவலர்களால் சுட்டுக்கொல்லப்படுவார் என்று அறிந்திருந்தும்கூடத் தான் அவரைப்பற்றி, அவரை வடிவமைத்திருந்தவிதம், கதையின் நிகழ்வுகள், பிறகதாபாத்திரங்கள் எனப்பல கேல்விகளைக் கேட்கிறான், அவரும் பதில் சொல்கிறார். ஆனால் இறுதியில் அவரைப் படைத்தவரின் ஆணைக்கிணங்க கொல்லப்படுகிறார். ஒன்றும் செய்ய முடியாத வாசகன் அங்கேயே உறைந்திருக்கிறான். எனினும் அவன் தன் அடுத்த தேடலை, வேறொரு கதாபாத்திரத்தில் கண்டு வெளியேறுகிறான். முன்சொன்னது போலவே வாசகனான நரோபா தன் சுயத்திடம் கேட்கும் கேள்விகளை வின்ஸ்டன் ஸ்மித் என்கிற மற்றமையின் வழியே கதாசிரியரான ஆர்வெல்லுக்குக் கடத்துகிறான்.
ஆ)பேசும் பூனை:
இத்தொகுப்பிலுள்ள சிறந்த கதைகளுள் ஒன்றாக இக்கதையைக் கூறலாம். சமகாலத்தின் மிகமுக்கியப் பிரச்சனை ஒன்றைப்பற்றி பேசுகிறது என்றபோதிலும் அதன் சொல்லல் யுக்தியானது ஒரு புதிர்விளையட்டாய் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. “மாடர்ன் டைம்ஸ்” திரைப்படத்தில் சார்லி சாப்ளின் இயந்திரங்கள் மனிதர்களின் இடத்தை நிரப்பி அவர்களைப் பயனற்றவர்களாகக் கருதவைக்கும் அபாயத்தைப்பற்றிக் காட்டியிருப்பார். இன்றைய நவீன உலகிலோ இயந்திரங்கள், கேளிக்கை, தொலைதொடர்புச் சாதனங்கள் போன்றவை மனிதனின் புறக்காரணிகளை மட்டுமல்லாது அவர்களின் அகங்களுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. ஒருவர் தனதேயான எந்த இரகசியங்களையும் கொண்டிருக்க முடியாததான விநோத உலகமொன்றில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தினம்தினம் புதிதுபுதிதாய் மெருகேறும் சாதனங்கள் சாமானியனின் ஆசைகளயும், வியப்பையுமே மூலதனமாகக் கொண்டுள்ளன. ஒருவனின் ஆசைகளை தேவைகளாக உருமாற்றித் தனக்குக் கீழ்ப்படிய வைக்கும் கர்த்தாக்களால் நிறைந்தது இவற்றின் மாய உலகம். எதையும் நிர்ணயிப்பவனாக இல்லாது வெறும் கீழ்ப்படிபவனாக மட்டுமே சாமானியன் இருக்கவைக்கப்படுகிறான். மேலும் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாகவும், பெரியோரை கட்டுப்படுத்தும் எஜமானனாகவும் ஒரேசமயத்தில் இருக்கவைக்க முடிவதும் அந்த நிழல்மனிதர்களின் விந்தைகளில் ஒன்றுதான்.அது ஒரு “பேசும் பூனையாகவும்” இருக்கலாம்.
இ)ஆரோகணம்:
எல்லோரும் மடிந்துவிட்டனர். இப்போது பனிசூழ்ந்த அந்த மலையில் யுதிஷ்டிரன் மட்டும் தனியே ஏறிக்கொண்டிருக்கிறான். அம்மா குந்தியும், தம்பிகள் நால்வரும், திரௌபதியும் அவனை விட்டுச்சென்றுவிட்டனர். எனினும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் தர்மனை இன்னும் பின்தொடர்ந்து வருகிறது ஒரு ஜீவன். அது ஒரு நாய். அதுதான் அவன் வாழ்நாள்தோறும் நம்பி கடைப்பிடித்து வந்த தர்மம். இறுதியில் சொர்க்கத்தின் வாயிலில் தர்மனும் அந்த நாயும் நிற்கின்றனர். உள்ளே ஒருவருக்குமட்டுமே இடம் என்று சொல்லப்படுகிறது. தர்மன் தான் நம்பிய அறத்திற்காகச் சொர்க்கத்தைத் துறக்கத் தயாராகிறான்.
யுதிஷ்டிரனிடத்திலேயும், துரியோதனனிடத்திலும் கிருஷ்ணன் இவ்வாறு சொல்கிறான். ”நீங்கள் இருவம் சென்று இந்நகரம் முழுவதும் தேடுங்கள் தர்மரே! உங்களுக்கு யாரேனும் தீயவர் எனத் தெரிந்தால் அவரை இங்கே அழைத்து வாருங்கள், துரியோதணா நல்லவரைக் கண்டுபிடித்து அழைத்துவர வேண்டியது உன்பொறுப்பு”. இருவரும் செல்கின்றனர். நெடுநேரம் கழித்து வெறுங்கையுடனேயேத் திரும்பி வருகின்றனர் இருவரும். கண்ணன் ஏனென்று கேட்க துரியோதனனோ “எங்கு தேடியும் நல்லவர் என்று ஒருவரும் அகப்படவில்லை” என்கிறான். தர்மனோ “தீயவர் என்று ஒருவர் இந்நகரத்திலேயே இல்லைபோலும்” என்கிறான். மதுசூதனன் புன்னகைக்கிறான். ஒவ்வொருவரின் அகமே புறமாக, சுயமே மற்றமையாக வெளிப்படுகிறது காந்திக்கு நரகத்தில் தெரிந்ததைப் போலவே.
கரம்சந்த் காந்தி மரணிக்கும் தருணத்தில் மனைவி கஸ்தூரிபாவுடன் போகத்தில் இருந்தார் மோகன்தாஸ். சற்றேறக்குறைய அதேபோன்றதொரு எண்ணம் தனது மரணப்படுக்கையிலும் வருகிறது அவருக்கு. தன்னைத்தானே கடிந்துகொள்கிறார். ஏனெனில் இப்போது அவர் வெறும் மோகன்தாஸ் இல்லை வயதும், அனுபவமும் அவரை பக்குவப்படுத்தியிருக்கிறது. அவர் இப்போது மகாத்மா. இப்புனைவில் யுதிஷ்டிரன், காந்தி என்கிற இரண்டு மகாத்மாக்கள் ஒருவருக்குள் ஒருவர் ஒளிந்துவிளையாடிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இயேசுவைக் கேள்விகேட்கும், பகடிசெய்யும் புனைவுகள் உலக இலக்கியத்தில் இருக்கவே செய்கின்றன...
2)கருப்பொருள் சிறப்புற அமையப்பெற்றவை,:
கதைகள் காலாகாலத்திற்கும் அதன் உள்ளடக்கக் கருப்பொருள்களைப் பிரதானமாகக் கொண்டே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை தொன்றுதொட்டு நீதிக்கதைகளாகவும், தொன்மக் கதைகளாகவும், சமகால நிகழ்வுகளை, வாழ்வியலைப் பேசும் கதைகளாகவும் தனித்தனியே உருக்கொள்கின்றன. எனினும் ஒரு சமகாலத்திய கதைசொல்லியாகப்பட்டவன் தன் கதைகளுக்குள் எந்தவிதத்திலும் அதன் கருப்பொருளை நீதிபோதனையாகவோ, கற்பித்தல் தொனியிலோ உட்புகுத்தாமல் அதன் அரசியலையும், விவாதங்களையும் கதையின் போக்கிலேயே உட்புகுத்த வேண்டியது அவன்முன் வைக்கப்படும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது..
அ)அம்புப் படுக்கை:
தொகுப்பின் தலைப்புக்கதை “:அம்புப் படுக்கை” . ஜப்பானியர்களின் குண்டுக்குத் தப்பி பர்மாவிலிருந்து தாயகத்திற்கு வரும் ஆனாரூனா செட்டியாருக்கு பிறரிடம் சொல்வதற்கு அனேகம் கதைகள் இருக்கின்றன. ஆனால் அவர் எதிர்பார்ப்பது ஒன்றேஒன்றை மட்டுமே. அதுவும் தான் மிகவும் நம்பும் ஒருவரிடமிருந்து. பலகாலங்களாக யாரின் வைத்தியத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தாரோ அவர் வாயால் அதைக்கேட்கக் காத்திருக்கிறார். இப்போது அவரில்லையென்றபோதும் அவர் வாரிசிடமிருந்தேனும் அதை எதிர்பார்க்கிறார். அவரது இறுதித்தருணத்தில் அவன் வருகிறான். அவனுக்குத் தெரிந்திருக்கிறது நாடிபிடித்துப் பார்ப்பதென்பது வெறும் கையைப்பிடித்துப் பார்ப்பது மட்டுமல்ல என்று அது தன்னை நம்பும் நோயாளியின் எண்ணத்தைப் புரிந்து அவனுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிப்பது. அவனது துயரங்களிலிருந்து அவனை விடுவிப்பது, விடுவித்தல் என்பது குணப்படுத்துதல் மட்டுமல்ல என்பதையும் அவன் அறிந்தேயிருந்தான்.
ஆ)பொன்முகத்தைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்:
இன்னும் பெருநகரங்களின் அடுக்கக வளாகத்து வீடுகளில் வசிக்கப் பழகாத தாத்தாக்களும், பாட்டிகளும் இருக்கவே செய்கின்றனர். நகர்ப்புற பிள்ளைகளுக்கோ அவர்களின் தேவை என்பது வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கும், குழந்தை வளர்ப்பிற்குமானதாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பேரன், பேத்திகளைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளுக்கோ அக்குழந்தைகளில் மீண்டும் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின்றனர். அவர்களின் குழந்தைப் பருவத்தில் தரத்தவறியவற்றைத் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு முழுவதுமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிகுகவனத்துடன் இருக்கின்றனர். ஒருவிதத்தில் அவர்களது வயதும், ஓய்வும் அதற்குத் துணையாகவே இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களின் இடங்களையும் தற்காலச் சாதனங்க்ள் அடைத்துவிடும் பேரபாயத்தை உணரும் தருணம் அவர்கள் என்னவாகின்றனர்?. அவற்றுள் ஒரு சாதனமாக மாற ஒருபோதும் அவர்கள் விரும்புவதில்லை.
இ) கூண்டு:
”உலகமே ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லோரும் நடிகர்கள்”. நாமறிந்த ஷேக்ஸ்பியரின் வரிகள்தான். எனில் பார்வையாளர் யார்? யாருக்காக அரங்கேற்றப்படுகின்றன இந்த நாடகங்கள்?. சற்றே இக்கேள்வியை மாற்றிக் கேட்டுப்பார்த்திருக்கிறார் ஆசிரியர்.
நாம் பெருங்கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளாயின் இருப்பென்பதை அக்கூண்டாகக் கான்போமா அல்லது அதுனுள் இயங்கும் விதியாகக் கொள்வோமா?. கூண்டிற்குள் இருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் என்கிற பாகுபாட்டைக் கண்டடைவது எங்ஙணம்?. முதலில் சிறியதாக இருக்கும் கூண்டு பெரிதாகிப் பெரிதாகி இணைந்து மாபெரும் கூண்டாகும் பட்சத்தில் கூண்டை மறந்து அதனுள் இயங்கும் விதியையே இருப்பாகக் கொள்ளத்துவங்கிவிடுகிறோம். எனில் வெலியிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு அவை என்னவாகக் காட்சியளிக்கும். ஒருவேளை உள்ளேயிருப்பவர்கள் வெளியே தனித்துவிடப்பட்ட ஒருவனைக் கண்டு பரிதாபப்படக்கூடக் கூடும். கூண்டுகளின் புதிர்களை அதன் வடிவமைப்பளனின்றி வேறு யாராலும் விடுவிக்க முடிவதில்லை.
மேற்சொன்ன மூன்று கதைகளிலும் சிறுநூலளவு தப்பியிருந்தாலும்கூட அவை நீதிபோதனைக் கதைகளாகவோ அல்லது கருத்து முன்வைப்புக் கதைகளாகவோ மாறியிருக்கக்கூடிய அபாயம் உண்டு. அதனை தன் நேர்த்தியான சொல்லல் முறையால் லாவகமான கதைப்பின்னலாகக் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது.
ஈ)குருதி சோறு:.
இப்பகுதியில் மற்ற மூன்று கதைகளையும் சேர்த்துச் சொல்லிவிட்டு, இக்கதையை மட்டும் தனியே சொல்லுவதற்கான காரணம் இத்தொகுப்பிலுள்ள மிகச்சிறந்த இரண்டு கதைகளுள் (பேசும் பூனை, குருதி சோறு) இதுவும் ஒன்றென்பதால்தான். இரண்டுமே குறுநாவல் வடிவிலமைந்தவை.
. நாட்டார்/குல தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் வைதீக மரபானது சுவீகரித்துத் தனதாக்கிக்கொண்ட தொன்மங்களுக்குள் புதைந்திருக்கும் சம்பவங்கள் மற்றும் அதன் கருத்தியல்கள் எவ்வாறு மாறுபடுகின்றன. எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகின்றன, எதன் நீட்சியாக எது நிற்கிறது போன்ற பலவற்றையும் தேடிச்செல்லும் ஒருவன் கண்டடைவதின் வழியே முன்சொன்ன வைதீக, நாட்ட்டார் தொல்கதைகளை அதன் நிகழ்வுகளின் ஒப்பீட்டில் பரிசீலிக்கும் அல்லது பகுத்துப்பார்க்கும் தன்மையில் நடுகற்களாய், பிடிமண்னாய், பீடங்களாய் நிலைத்துவிட்ட சிறுதெய்வங்களோடு, விக்கிரகங்களாய் மீளுருவாக்கம் பெற்ற வைதீக சுவீகார தெய்வங்களுக்குமான பூஜைமுறைகளில் சாமக்கொடை, பலி, குருதி சோறு இவற்றிலிருந்து மாறுபட்ட சாத்வீக சைவப் படையல்களும் சந்திக்கும் புள்ளியானது வரலாற்றில் என்றோ நிகழ்ந்த ஒற்றை நிகழ்வின் வாய்மொழித் தொடர்ச்சியென வெவ்வேறு பரிணாமங்களில் கூறப்பட்டபோதும், அதன் சடங்குகள் வகுக்கப்பட்ட விதிகளுக்கேற்ப கடைப்பிடிக்கப்பட்டபோதும், இப்புனைவுகள் நதிகளாய்ப் பிரவாகமெடுத்து நம்பிக்கையெனும் தொன்மத்தின் சாகரத்தில் ஒன்றுகலக்கின்றன.
சபரியோ, சுடலையோ இருவரும் தமக்குச் சொல்லப்பட்ட புனைவுகளின் வழியே கொள்ளும் நம்பிக்கையானது அன்னரக்ஷாம்பிகையாகவோ, அல்லது பாலாயியாகவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். இவைகளின் மூலாதாரம் காட்டும் தரிசனமோ ’பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதலாகப்” புரிபடுகிறது.
3) மேற்சொன்ன இரண்டும் ஓரளவே அமையப்பெற்றவை:
இத்தொகுப்பின் மீதமுள்ள மூன்று கதைகள் வாசுதேவன், காளிங்க நர்த்தனம், திமிங்கிலம் ஆகியவைகள் நல்ல கதைகள்தான் என்றபோதிலும் ஏதோ ஒரு விடுபடலை, முழுமையற்றதன்மையை உணரமுடிகிறது. அவை எடுத்துக்கொண்ட உள்ளடக்கங்கள், சொல்லப்பட்ட விதம் போன்றவற்றில் ஒரு போதாமையைத் தருவதாகப்படுகிறது. குறிப்பாக “திமிங்கிலம்” கதையில் வரும் விவரிப்பானது எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கக்கூடிய நிகழ்வினைப் புனைவாக்கிய விதத்தில் அது ஏற்புடையதாய் இருந்தபோதும் அது சொல்லப்பட்ட விதமானது வாசகனுக்குள் ஒருவித பற்றாக்குறையை ஏற்படுத்திவிடுகிறது. “வாசுதேவன்” கதையைப் பொறுத்தவரை உடலில் எந்தச்செயல்பாடும் இல்லாமல் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒருவனது கடைசிக்காலங்களில் அவனை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் இரண்டு பயிற்சி மருத்துவர்களும் “அம்புப்படுக்கை:” சுதர்சனைப்போல் நுணுக்கம் பழகவில்லைபோலும் மருத்துவமும், மருந்துகளும் மட்டுமல்ல மருத்துவம் பார்ப்பவர்களின் நம்பிக்கையும் நோயாளிகளை இன்னும் கொஞ்சம் வாழவைக்கக்கூடும். இக்கதையினை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ”காளிங்க நர்த்தனம்” கதையில் முறுக்குசாமியோடு இருக்கும் மாணிக்கத்தைப் பிடித்திருக்கும் யட்சியைப் போலவே கதைக்குள்ளும் ஒரு யட்சி புகுந்துகொண்டு போக்குகாட்டுகிறாள். சொல்லல்முறை, உள்ளடக்கம், வடிவம் போன்றவற்றில் சற்றே தொய்வை உணரவைக்கிறது.
முன்சொன்னது போலவே இத்தொகுப்பின் ஆசிரியர் தன் சுயத்தை மற்றமைகளாக சிலகதைகளுக்குள் உலவவிட்டுள்ளார். அதனாலேயே நான்கு கதைகளில் சித்தமருத்துவர்கள் வந்துசெல்கிறனர்.
இத்தொகுப்பில் கதைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப்பற்றிக் கூறவேண்டுமெனில் சராசரியாக வந்திருக்கும் மூன்று கதைகளில் இரண்டினை முதலிரண்டு கதைகளாகவும்,, மற்றொன்றை கடைசிக்கதைக்கு முன்னதாக வைத்திருப்பது, தொய்வான கதைகளின் அதிருப்தியைப் போக்கி இடையில் வரும் சிறப்பான கதைகளினால் ஏற்படும் அனுபவங்களுடன், கடைசிக்கதையில் கிடைக்கும் திருப்தியை நிலைநிறுத்தியும் தொகுப்பின் மீதான நேர்மறை அபிமானத்தைக் கொடுக்கின்றன. இவை தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ அடுக்கப்பட்டிருக்கலாம். எப்படியாயினும் அது இத்தொகுப்பிற்கான பலமாகவே அமைந்துள்ளது.
இது ”சுனில் கிருஷ்ணனின்” முதல் தொகுப்பு என்றபோதும். இதிலுள்ள கதைகளின் நேர்த்தியும், பெரும்பாலான கதைகளின் கச்சிதமும், சிலகதைகளில் தெளிவின்மை,, நிலம் சார்ந்த விவிவரணைகள் குறைவாக இருத்தல் போன்ற சிற்சில குறைகள் இருந்தபோதும் நவீனச் சிறுகதையின் பரிபூரண பரிமாணத்தை நோக்கிய பயணமாகவே இத்தொகுப்பில் உள்ள “பேசும் பூனை” மற்றும் “குருதிசோறு” போன்ற கதைகள் அமைந்துள்ளன. மற்ற கதைகள் பயணத்தின் போக்கில் இரட்டைத்தன்மையுடன் உரையாடி கருவிலேயே தங்கிவிட்டன.
No comments:
Post a Comment