புத்தகங்கள்

Pages

Friday, December 14, 2018

வளரொளி - முன்னுரை

முகப்பு 
நண்பர் விஷால் ராஜாவை 2017 ஆம் ஆண்டு ஊட்டி  விஷ்ணுபுரம் முகாமில் முதன்முறையாக சந்தித்தேன். ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி அவருடைய சிறுகதை தொகுப்பு வெளியாகியிருந்தது. ஜெயமோகன் தளத்தில் வெளியான அவருடைய இரு கதைகளைத் தவிர பிறவற்றை வாசித்ததில்லை. அதேயாண்டு கடைசியில் ‘யாவரும்’ வெளியீடாக எனது முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கை’ வெளிவர இருந்தது. அக்கதைகள் சமகாலத்தில் எழுதப்படும் பிற கதைகளுடன் ஒப்பிடும்போது எத்தகையவை என்பது குறித்து எனக்கு பல்வேறு ஐயங்கள் இருந்தன. இதழ்களில் உதிரிகளாக சில கதைகளை வாசித்திருந்தாலும், சமகாலத்தில் புதிதாக எழுதும் எவருடைய தொகுப்பையும் முழுவதுமாவ வாசித்ததில்லை என்பது உறைத்தது. சென்ற ஆண்டு ஆறாம் மாதம் பதாகையில் விஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’ சிறுகதை தொகுப்பு குறித்தான விமர்சனம் மற்றும் அவருடைய நேர்காணல் வழியாக ஒரு துவக்கம் நிகழ்ந்தது. ஒருவகையில் படைப்பாளியாக என்னை மதிப்பிட்டுகொள்ளும் சுயநலமே இதன் துவக்கம். மற்றொரு எழுத்தாளனை மதிப்பிடுவது என்பதைக் காட்டிலும் சுய மதிப்பீடு மற்றும் கற்றுகொள்வதற்கான வாய்ப்பு எனும் நோக்கிலேயே ‘புதிய குரல்கள்’ பகுதியை ‘பதாகை’ இதழில் துவங்கினேன். இத்தொகுதியில் இடம்பெற்றிற்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இதுவே முதல் நேர்காணல் என்பது ஆச்சரியமாகவும் சற்றே வருத்தமாகவும் இருந்தது. முதல் தொகுப்பு வெளிக்கொண்டு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து, நல்ல கவனம் பெற்ற பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் மற்றும் கார்த்திகைப் பாண்டியனுக்கு கூட இதுவே முதல் நேர்காணல். 

விமர்சனம் யாருக்காக எழுதப்படுகிறது? நானறிந்தவரை பதிப்புக்கு முந்தைய நிலையில் கதைகளைப் பற்றி அனுக்கர்கள் அளிக்கும் வாசிப்பும் விமர்சனமும் சில நேரங்களில் எழுத்தாளன் தம்மை மேம்படுத்திக்கொள்ளவும், கதைகளை திருத்திக்கொள்ளவும் உதவும் என்பதற்கு அப்பால் விமர்சனங்கள் எழுத்தாளருக்கு எவ்வகையிலும் பெரிதாக உதவுவதில்லை. அவற்றை செவிக்கொண்டு, உளம் கொண்டு எழுதியவர் மிகச் சிலரே இருக்கக்கூடும். வேறொரு வகையில் அத்தனை உளபூர்வமாக எழுதத் துவங்கும்போது கலை காணாமல் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது. விமர்சனம் என்பது எழுத்தாளனை குப்புறச் சரித்து குடலை உருவ வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அடிப்படையிலேயே பிழையானது. விமர்சனம் வாசகனை இலக்காகக் கொண்டே எழுதப் படுகிறது. எழுத்தாளனையும், அவனுடைய படைப்பையும் தன் நோக்கில் அடையாளப்படுத்தி புரிதலை விரிவாக்கி காட்ட முயல்கிறது. எழுத்தாளனோ, விமர்சகனோ அவனுடைய முதன்மை தகுதி என்பது தேர்ந்த வாசகனாக இருப்பதே. ஒரு படைப்பை எந்த முன்முடிவும் இன்றி அணுகி தன்னை முழுமையாக ஒப்புவிக்கும்போது அதுவரை எவர் புலனுக்கும் அகப்படாதவை அவனை வந்தடையும். அப்படியான தருணங்கள் இத்தொகுப்பின் கட்டுரைகளில் உண்டு என்றே நம்புகிறேன். அவ்வகையில் இரண்டாம் மூன்றாம் ‘புதிய குரல்கள்’ பகுதியிலேயே தன்னலத்திற்கு அப்பால் இதற்கொரு முக்கியத்துவம் உள்ளதை உணர்ந்து கொண்டேன். தமிழின் மூத்த எழுத்தாளர்கள் பலரும் தங்கள் முன்னோடிகளைப் பற்றி தொடர்ந்து விமர்சன நோக்கில் எழுதி வருகிறார்கள். ஜெயமோகன் ‘இலக்கிய முன்னோடி வரிசை’ எழுதியதுடன் நில்லாமல் ‘புதிய காலம்’ என்றொரு தொகுப்பில் அவருடைய சமகால எழுத்தாளர்கள் குறித்தான விமர்சன கட்டுரைகளை எழுதி இருக்கிறார். ஒருவகையில் இத்தொகுப்பும் அவ்வகையிலான முயற்சியின் தொடர்ச்சியே. எனினும் நேர்காணல்கள் வழியாக விமர்சனத்தை எழுத்தாளரிடம் நேரடியாக கொண்டு சேர்த்து அவருடைய தரப்பையும் சேர்த்தே பேசுகிறது எனும் வகையில் தமிழுக்கு இது புதிய வடிவம் என்றே எண்ணுகிறேன். மேலும் இத்தொகுப்பின் முக்கியத்துவம் என்பது, இக்கட்டுரைகள் ‘புதிய காலம்’ போல் எழுத்தாளர்களின் மிகச் சிறந்த படைப்பை முன்வைத்து எழுதப்பட்டவை அல்ல. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதல் முயற்சி அல்லது முதல் சில முயற்சிகளில் ஒன்றைப் பற்றிய கட்டுரையின் வழியாக எழுத்தாளரின் தனித்தன்மையை, முக்கியத்துவத்தை அடையாளம் காண முற்படுகிறது. ‘கிராப்’ தாளில் உருக்கொள்ளவிருக்கும் ஒரு பரவளையத்தின் முதற்புள்ளியை காட்டும் முயற்சி. கட்டுரைகளின் ஊடாக என் வாசிப்பும் பார்வையும் கூட மாறி வந்திருப்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. பத்தாண்டுகளில் இவர்களுடைய களம் எப்படியாக விரிவடையும் என்றறிய ஆவல். தொடர்ந்து நன்றாக எழுதும் எழுத்தாளர்களாக அறியப்படுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகமாகும் உலக இலக்கிய கிளாசிக்குகள் அவசியம் வாசிக்க வேண்டும் என்பதும் எவ்வித குழப்பமும் இல்லை. அதேவேளையில் சமகாலத்து சக பயணிகள் என்ன எழுதுகிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியம். 

ஒரேயடியாக எந்த எழுத்தாளரையும், எந்த ஆக்கத்தையும் நிராகரிக்க முடியாது என்பதே என் புரிதல். ஒரு எழுத்தாளனின் பலம் என்ன, பலவீனம் என்ன, கரு பொருட்களில் அவனுடைய தேர்வு மற்றும் சாய்வு எத்தகையதாக இருக்கிறது, வாழ்வைப் பற்றிய மெய்யியல் நோக்கு அவனுடைய புனைவுகளில் எப்படி வெளிப்படுகிறது, தவறவிட்ட வாய்ப்புகள் எவை, பிற ஆக்கங்களோடு ஒப்பிடும்போது குறிப்பிட்ட ஆக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது- போன்ற கேள்விகளையே இத்தொகுப்பின் கட்டுரைகள் அணுகுகின்றன. விஷால் ராஜா, தூயன், அனோஜன், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், கார்த்திக் பாலசுப்பிரமணியன், அகர முதல்வன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகிய எழுவரின் சிறுகதை தொகுப்புக்களைப் பற்றியும், சரவனகார்த்திகேயன் மற்றும் சுரேஷ் பிரதீப் ஆகியோரின் நாவல்களை பற்றியும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உரையாடல்கள் பொதுவாக எழுத்தாளரை அறிமுகப் படுத்தும் நோக்கிலும், குறிப்பாக கட்டுரையில் பேசப்படும் ஆக்கத்தை முன்வைத்தும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு நேர்காணல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை, தனித்தன்மை கொண்டவை. பாலா மற்றும் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணலை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவை இணைய வழி நேர்காணல்கள் என்பதால் என் பங்களிப்பு என பெரிதாக ஏதுமில்லை. கேள்விகளை அனுப்புவதோடு சரி. அதுவும் பெரும்பாலான நேர்காணல்கள் ஒரேயமைப்பை கொண்டவை.   நேர்காணல்கள் வண்ணமயமாக ஒளிவிடுவதற்கு எழுத்தாளர்களின் ஈடுபாடும் துணிவுமே காரணம். அவ்வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. வெளிவந்த சமயங்களில் குறைந்தது நான்கைந்து நேர்கானல்களாவது இணைய வெளியில் கவனிக்கப்பட்டது. 

இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேர் என்பது தற்செயலாக அமைந்தது. நிறைய விடுபடல்கள் உண்டு. 2010 க்கு பிறகு முதல் புனைவு நூலை கொணர்ந்தவர்கள் என்பதே அளவுகோல். கே. ஜெ. அசோக்குமார், போகன், குணா கந்தசாமி, நரன், தமிழ்நதி, சாம்ராஜ், கிறிஸ்டோபர் அந்தோணி, சைலபதி, ரமேஷ் ரக்ஷன், லூசிபர் ஜெ வயலட், கலைச்செல்வி, சித்துராஜ் பொன்ராஜ், நவீன், மாதவன் ஸ்ரீரங்கம், மாதவன் இளங்கோ, அரவிந்த் கருணாகரன், கணேஷ் வெங்கட்ராம், யதார்த்தன், ஜீவ கரிகாலன், கார்த்திக் புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, கவிதைக்காரன் இளங்கோ, விஜய் மகேந்திரன், லைலா எக்ஸ், கறுத்தடையான், லக்ஷ்மி சிவகுமார், குமார நந்தன், கனவுப் பிரியன் என இன்னும் பலர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இது ஓர் உத்தேச பட்டியல் மட்டுமே, பலர் விடுபட்டிருக்கவும் கூடும். இத்தொகுதி ஒரு துவக்கம் மட்டுமே. வரும் காலங்களில் இது தொடரும் என்றே நம்புகிறேன். விமர்சகன் மேதையாக இருக்க வேண்டும், அவனுக்கு பிற கலைகளைப் பற்றிய ஞானம் வேண்டும் என விமர்சகனுக்கான இலக்கணத்தை நாஞ்சில் நாடன் நேர்பேச்சில் முன்வைத்தார். அவ்வகையில் நான் முழு விமர்சகன் அல்ல, இக்கட்டுரைகளும் கூட முழுமையான விமர்சன கட்டுரைகள் என அடையாளபடுத்திவிட முடியுமா எனத் தெரியவில்லை. 

இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் பேசுகின்றன. தூயன் பரந்துபட்ட களங்களின் ஊடாக நவீன காலத்தின் தன்னடையாள உருவாக்கத்தில் உள்ள சிக்கல்களைத்தான் பேசுகிறார். விஷால் ராஜாவும் கார்த்திக் பாலசுப்பிரமணியமும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் சுரண்டலை, இருப்பை, நியாயத்தை என பல்வேறு விஷயங்களை வேறு உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள். சரவனகார்த்திகேயன் வரலாற்று ஆளுமையின் புனிதத்தை விலக்கிவிட்டு என்னவாக பொருள் படுகிறார் என நோக்க முயல்கிறார். பாலா சமகால வாழ்வின் அபத்தங்களை விமர்சன நோக்கில் எதிர்கொள்கிறார். மனிதனை காட்டிலும் பிரம்மாண்டமானவை கடவுளாக இருந்த காலகட்டம் கடந்து அவ்விடத்தை அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. கடவுள் யுகத்து பொருளின்மை இப்போது இன்னும் பூதாகாரமாக வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. கடவுளை போல் அல்லாது இவ்வமைப்புகள் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து ஆளுமை செலுத்துவதை இக்கதைகள் பேசுகின்றன. மானுட உறவின் சிக்கல்கள் மற்றும் நம்பகமின்மை ஒரு பொது இழையாக ஊடுருவிச் செல்கின்றன. 

இந்நூல் பதாகை – யாவரும் கூட்டு வெளியீடாக வருகிறது. ‘பதாகை’ எப்போதும் மாறுபட்ட முயற்சிகளை அனுமதிக்கும் களமாகவே இருந்திருக்கிறது. தமிழ் இணைய இலக்கிய வரலாற்றில்  பதாகைக்கும் அதன் ஆசிரியர் பாஸ்கருக்கும் நிச்சயம் இடமுண்டு. பல எழுத்தாளர்களின் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளார். இந்நூலை ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சுரேஷ், அஜய், நம்பி, நடராஜன், அனுகிரகா மற்றும் பாஸ்கர் ஆகியோரை உள்ளடக்கிய பதாகை குழுவிற்கே சமர்ப்பணம் செய்கிறேன். இவர்களுடன் விவாதிப்பதன் வழி புதியவற்றை எப்போதும் கற்றுவருகிறேன்.  ‘புதிய குரல்கள் – தொகுதி -1’ நூலாக்கம் பெறுவதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏனெனில் இந்த தொகுதியில் பலர் விடுபட்டுள்ளனர். மேலும் பாலாவையும், கார்த்திகை பாண்டியனையும் புதிய குரல்கள் என அடையாளப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை. எனினும் நண்பர் ஜீவ கரிகாலன் இதை நூலாக்க வேண்டும் என கோரினார். அவருக்கும் யாவரும் நண்பர்களுக்கும் நன்றி.    

இந்நூல் சமகால இலக்கியத்தை நோக்குவதற்கான ஒரு கோணத்தையும், அதன் செல்திசை குறித்தான சில அவதானிப்புகளையும் அளிக்கவல்லவை என நம்புகிறேன். மேலும் இவர்கள் வருங்காலங்களில் தொடர்ந்து தீவிரத்துடன் எழுதுவார்கள் அவர்களுடனான பயணத்தில் நானும் உடனிருக்க விழைகிறேன். 

No comments:

Post a Comment