புத்தகங்கள்

Pages

Wednesday, December 26, 2018

”ரணங்களைப் பேசிடும் மருத்துவன்” சுனில் கிருஷ்ணனின் ”அம்புப் படுக்கை” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து அதீதன்


எழுத்தாளர் அதீதன் கார்கால 'கல்குதிரை' இதழில் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கட்டுரை. நன்றி.

--
  
கதைகள் என்பவை என்ன? ஏன் கதைகள் சொல்லப்படுவதும், எழுதப்படுவதுமான செயல்கள் காலாகாலத்திற்கும் தொய்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைக் கேட்பதும், படிப்பதுமான சமயங்களில் வாசகனாகப்பட்டவன் எதைக் கண்டடைகிறான்? இவை தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்விகள்தான் எனினும் கதைகளின் வழியேதான் பெரும்பாலான கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கதாசிரியன் தன் அகத்தின் உரையாடலைப் புறத்தின் சூழலோடு தனது மற்றமையிடம் முன்வைக்கிறான். அது வாசகனைப் போய்ச்சேரும்போது கதைசொல்லியின் மற்றமையானது வாசகனின் சுயமாக உருமாற்றம் கொள்கிறது. ஆக கதைசொல்லி வேறெங்கோ இருக்கும் தன் சுயத்திடம் பிரதியின் வழியே உரையாடும் நிகழ்வே கதைகளாக உருக்கொள்கின்றன.

   தற்போதைய சூழலில் நல்ல சிறுகதைத் தொகுப்புகளுக்கான தேவை எப்போதும் அவசியமாகவே இருக்கிறது. கதைகளின் பேசுபொருள், வடிவம், மொழி போன்றவற்றைப் பற்றிய அறிவு ஒரு தேர்ந்த வாசகனுக்கு எழுதுபவரைவிட அதிகமாகவே இருக்கும். வெறும்  எண்ணிக்கைக்காகவே தனியார் நிறுவனங்களில் விற்பனையாளருக்குத் தரப்படும் இலக்கைப்போல ஆண்டுக்கு இத்தனை புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்கிற இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு எழுதித்தள்ளுபவர்களும் அதிகம் இருக்கவே செய்கின்றனர். அதிலும் கவிதை, நாவல், கட்டுரை போன்றவற்றின் வடிவங்களோடு ஒப்பிடுகையில் ஒரு சிறுகதையைச் சிரமமின்றி எழுதிவிடலாம் என்கிற எண்ணமே. அதற்கான பிரயத்தனங்களை மட்டுப்படுத்திவிடுகிறது. அறிந்தவற்றையெல்லாம் கதையாக்குவது என்பதைக்காட்டிலும், அறிந்தவற்றுள் எதைக்கதையாக்குவது என்ற தெளிவே ஒரு சிறுகதையாசிரியனுக்கு அவசியமென்று கருதுகிறேன். இந்தத் தெளிவானது சிறுகதை என்கிற ஒற்றை வடிவத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்து என்கிற பொதுவடிவத்திற்குமே பொருந்துமென்பதே என் கருத்தும்கூட.

   இத்தகைய சூழலில் சமகாலத்திய சிறுகதை எழுத்தாளர்களில் நம்பிக்கைக்குரிய பலரும் தத்தமது பங்களிப்பைச் செய்துவருகின்றனர். குறிப்பாக அவர்கள் எடுத்துக்கொண்ட வடிவத்திற்கு நேர்மையாகவும், செறிவாகவும் தங்களின் படைப்புகளை முன்வைக்க அவர்கள் தவறுவதில்லை. குறைகளே இல்லாத படைப்பென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. நூறுசதவிகிதம் சரியான தொகுப்பென்று சொல்லும்படி ஏதேனும் ஒரு தொகுப்பு இருக்குமா என்பதும் சந்தேகமே. எனினும் ஒருபடைப்பானது போலித்தன்மைகள் இல்லாததாகவும், அலங்காரங்களால் மட்டுமே நிரப்பப்படாததாகவும், தகவல் களஞ்சியமாகவோ, கதைசொல்லியின் மேதமைத் தம்பட்டமாகவோ இல்லாமல். தன்னை அணுகும் வாசகனுக்கு உண்மையாக, துரோகமிழைக்காததாக, குறைந்தபட்சம் அவனை ஏமாற்றாத ஒன்றாக இருக்கவேண்டுமென்பதே வாசகனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் வந்த சில சிறுகதைத் தொகுப்புகள் அத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்வதற்கான முன்னெடுப்புகளையும், அவைகுறித்தான பிரக்ஞையுடனும் வெளிவந்துள்ளன. 

     ”யாவரும்” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. இதிலிடம்பெற்றுள்ள கதைகள் பல்வேறுகாலகட்டங்களில், பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை. அவற்றை ஒருவசதிக்காக முதலில் மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.. 1)சொல்லல் முறையிலும், வடிவத்திலும், சிறப்பாக வந்துள்ள கதைகள், 2) கருப்பொருள் சிறப்புற அமையப்பெற்றவை, 3)மேற்சொன்ன இரண்டும் ஓரளவே அமையப்பெற்றவை.

  1)சொல்லல் முறையிலும், வடிவத்திலும், சிறப்பாக வந்துள்ள கதைகள்:. 

    இக்கதைகள் அவை சொல்லப்பட்டிருக்கிற விதம், வடிவம், மற்றும் மொழி இவற்றின் அடைப்படையில் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக 2016 மற்றும் பேசும் பூனை ஆகிய இரண்டும் அதன் தனித்துவ வடிவத்திலும், ஆரோகணம் அதில் ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களைக் கையாள்கிறது என்றபோதும் வெளிப்படையாக ஒரு கதாபாத்திரத்தின் விவரிப்பாகவே நகரும் கதைக்குள் பெரும் கால இடைவெளிக்கு முந்தைய மற்றொரு கதாபாத்திரமும் ஒளிந்துகொண்டிருக்கிறது..

அ)2016:

   ஒரு கதையை / நாவலைப் படித்த வாசகன் அதனுடன் தன்னைப் பினைத்துப் பார்க்கிறான். கண்ணாடி உருளைக்குள் கப்பல் மிதந்துகொண்டிருக்கிறது.

   புகழ்பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் ஆர்வெல்லின் நாவலான ”1984”ல் வரும் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்திற்கும் கதைசொல்லியான நரோபாவிற்கும் இடையிலான பேட்டி வடிவில் அமைந்த உரையாடலாகக் கதை நகர்கிறது. நரோபா என்னும் பெயருடைய நிஜவுலக வாசி ஆர்வெல்லின் புனைவிற்குள் நுழைகிறான். அங்கு வின்ஸ்டன் ஸ்மித்தைச் சந்தித்துப் பேட்டிகாண்கிறான். அதுவும் அடுத்த காட்சியில் அவர் காவலர்களால் சுட்டுக்கொல்லப்படுவார் என்று அறிந்திருந்தும்கூடத் தான் அவரைப்பற்றி, அவரை வடிவமைத்திருந்தவிதம், கதையின் நிகழ்வுகள், பிறகதாபாத்திரங்கள் எனப்பல கேல்விகளைக் கேட்கிறான், அவரும் பதில் சொல்கிறார். ஆனால் இறுதியில் அவரைப் படைத்தவரின் ஆணைக்கிணங்க கொல்லப்படுகிறார். ஒன்றும் செய்ய முடியாத வாசகன் அங்கேயே உறைந்திருக்கிறான். எனினும் அவன் தன் அடுத்த தேடலை, வேறொரு கதாபாத்திரத்தில் கண்டு வெளியேறுகிறான். முன்சொன்னது போலவே வாசகனான நரோபா தன் சுயத்திடம் கேட்கும் கேள்விகளை வின்ஸ்டன் ஸ்மித் என்கிற மற்றமையின் வழியே கதாசிரியரான ஆர்வெல்லுக்குக் கடத்துகிறான்.

ஆ)பேசும் பூனை:

    இத்தொகுப்பிலுள்ள சிறந்த கதைகளுள் ஒன்றாக இக்கதையைக் கூறலாம். சமகாலத்தின் மிகமுக்கியப் பிரச்சனை ஒன்றைப்பற்றி பேசுகிறது என்றபோதிலும் அதன் சொல்லல் யுக்தியானது ஒரு புதிர்விளையட்டாய் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. “மாடர்ன் டைம்ஸ்” திரைப்படத்தில் சார்லி சாப்ளின் இயந்திரங்கள் மனிதர்களின் இடத்தை நிரப்பி அவர்களைப் பயனற்றவர்களாகக் கருதவைக்கும் அபாயத்தைப்பற்றிக் காட்டியிருப்பார். இன்றைய நவீன உலகிலோ இயந்திரங்கள், கேளிக்கை, தொலைதொடர்புச் சாதனங்கள் போன்றவை மனிதனின் புறக்காரணிகளை மட்டுமல்லாது அவர்களின் அகங்களுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. ஒருவர் தனதேயான எந்த இரகசியங்களையும் கொண்டிருக்க முடியாததான விநோத உலகமொன்றில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தினம்தினம் புதிதுபுதிதாய் மெருகேறும் சாதனங்கள் சாமானியனின் ஆசைகளயும், வியப்பையுமே மூலதனமாகக் கொண்டுள்ளன. ஒருவனின் ஆசைகளை தேவைகளாக உருமாற்றித் தனக்குக் கீழ்ப்படிய வைக்கும் கர்த்தாக்களால் நிறைந்தது இவற்றின் மாய உலகம். எதையும் நிர்ணயிப்பவனாக இல்லாது வெறும் கீழ்ப்படிபவனாக மட்டுமே சாமானியன் இருக்கவைக்கப்படுகிறான். மேலும் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாகவும், பெரியோரை கட்டுப்படுத்தும் எஜமானனாகவும் ஒரேசமயத்தில் இருக்கவைக்க முடிவதும் அந்த நிழல்மனிதர்களின் விந்தைகளில் ஒன்றுதான்.அது ஒரு “பேசும் பூனையாகவும்” இருக்கலாம். 

இ)ஆரோகணம்:

   எல்லோரும் மடிந்துவிட்டனர். இப்போது பனிசூழ்ந்த அந்த மலையில் யுதிஷ்டிரன் மட்டும் தனியே ஏறிக்கொண்டிருக்கிறான். அம்மா குந்தியும், தம்பிகள் நால்வரும், திரௌபதியும் அவனை விட்டுச்சென்றுவிட்டனர். எனினும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் தர்மனை இன்னும் பின்தொடர்ந்து வருகிறது ஒரு ஜீவன். அது ஒரு நாய். அதுதான் அவன் வாழ்நாள்தோறும் நம்பி கடைப்பிடித்து வந்த தர்மம். இறுதியில் சொர்க்கத்தின் வாயிலில் தர்மனும் அந்த நாயும் நிற்கின்றனர். உள்ளே ஒருவருக்குமட்டுமே இடம் என்று சொல்லப்படுகிறது. தர்மன் தான் நம்பிய அறத்திற்காகச் சொர்க்கத்தைத் துறக்கத் தயாராகிறான்.

   யுதிஷ்டிரனிடத்திலேயும், துரியோதனனிடத்திலும் கிருஷ்ணன் இவ்வாறு சொல்கிறான். ”நீங்கள் இருவம் சென்று இந்நகரம் முழுவதும் தேடுங்கள் தர்மரே! உங்களுக்கு யாரேனும் தீயவர் எனத் தெரிந்தால் அவரை இங்கே அழைத்து வாருங்கள், துரியோதணா நல்லவரைக் கண்டுபிடித்து அழைத்துவர வேண்டியது உன்பொறுப்பு”. இருவரும் செல்கின்றனர். நெடுநேரம் கழித்து வெறுங்கையுடனேயேத் திரும்பி வருகின்றனர் இருவரும். கண்ணன் ஏனென்று கேட்க துரியோதனனோ “எங்கு தேடியும் நல்லவர் என்று ஒருவரும் அகப்படவில்லை” என்கிறான். தர்மனோ “தீயவர் என்று ஒருவர் இந்நகரத்திலேயே இல்லைபோலும்” என்கிறான். மதுசூதனன் புன்னகைக்கிறான். ஒவ்வொருவரின் அகமே புறமாக, சுயமே மற்றமையாக வெளிப்படுகிறது காந்திக்கு நரகத்தில் தெரிந்ததைப் போலவே.

   கரம்சந்த் காந்தி மரணிக்கும் தருணத்தில் மனைவி கஸ்தூரிபாவுடன் போகத்தில் இருந்தார் மோகன்தாஸ். சற்றேறக்குறைய அதேபோன்றதொரு எண்ணம் தனது மரணப்படுக்கையிலும் வருகிறது அவருக்கு. தன்னைத்தானே கடிந்துகொள்கிறார். ஏனெனில் இப்போது அவர் வெறும் மோகன்தாஸ் இல்லை வயதும், அனுபவமும் அவரை பக்குவப்படுத்தியிருக்கிறது. அவர் இப்போது மகாத்மா. இப்புனைவில் யுதிஷ்டிரன், காந்தி என்கிற இரண்டு மகாத்மாக்கள் ஒருவருக்குள் ஒருவர் ஒளிந்துவிளையாடிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இயேசுவைக் கேள்விகேட்கும், பகடிசெய்யும் புனைவுகள் உலக இலக்கியத்தில் இருக்கவே செய்கின்றன...

2)கருப்பொருள் சிறப்புற அமையப்பெற்றவை,:

   கதைகள் காலாகாலத்திற்கும் அதன் உள்ளடக்கக் கருப்பொருள்களைப் பிரதானமாகக் கொண்டே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை தொன்றுதொட்டு நீதிக்கதைகளாகவும், தொன்மக் கதைகளாகவும், சமகால நிகழ்வுகளை, வாழ்வியலைப் பேசும் கதைகளாகவும் தனித்தனியே உருக்கொள்கின்றன. எனினும் ஒரு சமகாலத்திய கதைசொல்லியாகப்பட்டவன் தன் கதைகளுக்குள் எந்தவிதத்திலும் அதன் கருப்பொருளை நீதிபோதனையாகவோ, கற்பித்தல் தொனியிலோ உட்புகுத்தாமல் அதன் அரசியலையும், விவாதங்களையும் கதையின் போக்கிலேயே உட்புகுத்த வேண்டியது அவன்முன் வைக்கப்படும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது..

அ)அம்புப் படுக்கை:

   தொகுப்பின் தலைப்புக்கதை “:அம்புப் படுக்கை” . ஜப்பானியர்களின் குண்டுக்குத் தப்பி பர்மாவிலிருந்து தாயகத்திற்கு வரும் ஆனாரூனா செட்டியாருக்கு பிறரிடம் சொல்வதற்கு அனேகம் கதைகள் இருக்கின்றன. ஆனால் அவர் எதிர்பார்ப்பது ஒன்றேஒன்றை மட்டுமே. அதுவும் தான் மிகவும் நம்பும் ஒருவரிடமிருந்து. பலகாலங்களாக யாரின் வைத்தியத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தாரோ அவர் வாயால் அதைக்கேட்கக் காத்திருக்கிறார். இப்போது அவரில்லையென்றபோதும் அவர் வாரிசிடமிருந்தேனும் அதை எதிர்பார்க்கிறார். அவரது இறுதித்தருணத்தில் அவன் வருகிறான். அவனுக்குத் தெரிந்திருக்கிறது நாடிபிடித்துப் பார்ப்பதென்பது வெறும் கையைப்பிடித்துப் பார்ப்பது மட்டுமல்ல என்று அது தன்னை நம்பும் நோயாளியின் எண்ணத்தைப் புரிந்து அவனுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிப்பது. அவனது துயரங்களிலிருந்து அவனை விடுவிப்பது, விடுவித்தல் என்பது குணப்படுத்துதல் மட்டுமல்ல என்பதையும் அவன் அறிந்தேயிருந்தான்.

ஆ)பொன்முகத்தைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்: 

   இன்னும் பெருநகரங்களின் அடுக்கக வளாகத்து வீடுகளில் வசிக்கப் பழகாத தாத்தாக்களும், பாட்டிகளும் இருக்கவே செய்கின்றனர். நகர்ப்புற பிள்ளைகளுக்கோ அவர்களின் தேவை என்பது வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கும், குழந்தை வளர்ப்பிற்குமானதாகவே பெரும்பாலும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பேரன், பேத்திகளைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளுக்கோ அக்குழந்தைகளில் மீண்டும் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின்றனர். அவர்களின் குழந்தைப் பருவத்தில் தரத்தவறியவற்றைத் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு முழுவதுமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிகுகவனத்துடன் இருக்கின்றனர். ஒருவிதத்தில் அவர்களது வயதும், ஓய்வும் அதற்குத் துணையாகவே இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களின் இடங்களையும் தற்காலச் சாதனங்க்ள் அடைத்துவிடும்  பேரபாயத்தை  உணரும் தருணம் அவர்கள் என்னவாகின்றனர்?. அவற்றுள் ஒரு சாதனமாக மாற ஒருபோதும் அவர்கள் விரும்புவதில்லை.

இ) கூண்டு:

    ”உலகமே ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லோரும் நடிகர்கள்”. நாமறிந்த ஷேக்ஸ்பியரின் வரிகள்தான். எனில் பார்வையாளர் யார்? யாருக்காக அரங்கேற்றப்படுகின்றன இந்த நாடகங்கள்?. சற்றே இக்கேள்வியை மாற்றிக் கேட்டுப்பார்த்திருக்கிறார் ஆசிரியர். 

   நாம் பெருங்கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளாயின் இருப்பென்பதை அக்கூண்டாகக் கான்போமா அல்லது அதுனுள் இயங்கும் விதியாகக் கொள்வோமா?. கூண்டிற்குள் இருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் என்கிற பாகுபாட்டைக் கண்டடைவது எங்ஙணம்?. முதலில் சிறியதாக இருக்கும் கூண்டு பெரிதாகிப் பெரிதாகி இணைந்து மாபெரும் கூண்டாகும் பட்சத்தில் கூண்டை மறந்து அதனுள் இயங்கும் விதியையே இருப்பாகக் கொள்ளத்துவங்கிவிடுகிறோம். எனில் வெலியிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு அவை என்னவாகக் காட்சியளிக்கும். ஒருவேளை உள்ளேயிருப்பவர்கள் வெளியே தனித்துவிடப்பட்ட ஒருவனைக் கண்டு பரிதாபப்படக்கூடக் கூடும். கூண்டுகளின் புதிர்களை அதன் வடிவமைப்பளனின்றி வேறு யாராலும் விடுவிக்க முடிவதில்லை.

   மேற்சொன்ன மூன்று கதைகளிலும் சிறுநூலளவு தப்பியிருந்தாலும்கூட அவை நீதிபோதனைக் கதைகளாகவோ அல்லது கருத்து முன்வைப்புக் கதைகளாகவோ மாறியிருக்கக்கூடிய அபாயம் உண்டு. அதனை தன் நேர்த்தியான சொல்லல் முறையால் லாவகமான கதைப்பின்னலாகக் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது.
ஈ)குருதி சோறு:.

   இப்பகுதியில் மற்ற மூன்று கதைகளையும் சேர்த்துச் சொல்லிவிட்டு, இக்கதையை மட்டும் தனியே சொல்லுவதற்கான காரணம் இத்தொகுப்பிலுள்ள மிகச்சிறந்த இரண்டு கதைகளுள் (பேசும் பூனை, குருதி சோறு) இதுவும் ஒன்றென்பதால்தான். இரண்டுமே குறுநாவல் வடிவிலமைந்தவை. 

. நாட்டார்/குல தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் வைதீக மரபானது சுவீகரித்துத் தனதாக்கிக்கொண்ட தொன்மங்களுக்குள் புதைந்திருக்கும் சம்பவங்கள் மற்றும் அதன் கருத்தியல்கள் எவ்வாறு மாறுபடுகின்றன. எந்தப் புள்ளியில் ஒன்றுபடுகின்றன, எதன் நீட்சியாக எது நிற்கிறது போன்ற பலவற்றையும் தேடிச்செல்லும் ஒருவன் கண்டடைவதின் வழியே முன்சொன்ன வைதீக, நாட்ட்டார் தொல்கதைகளை அதன் நிகழ்வுகளின் ஒப்பீட்டில் பரிசீலிக்கும் அல்லது பகுத்துப்பார்க்கும் தன்மையில் நடுகற்களாய், பிடிமண்னாய், பீடங்களாய் நிலைத்துவிட்ட சிறுதெய்வங்களோடு, விக்கிரகங்களாய் மீளுருவாக்கம் பெற்ற வைதீக சுவீகார தெய்வங்களுக்குமான பூஜைமுறைகளில் சாமக்கொடை, பலி, குருதி சோறு இவற்றிலிருந்து மாறுபட்ட சாத்வீக சைவப் படையல்களும் சந்திக்கும்  புள்ளியானது வரலாற்றில் என்றோ நிகழ்ந்த ஒற்றை நிகழ்வின் வாய்மொழித் தொடர்ச்சியென வெவ்வேறு பரிணாமங்களில் கூறப்பட்டபோதும், அதன் சடங்குகள் வகுக்கப்பட்ட விதிகளுக்கேற்ப கடைப்பிடிக்கப்பட்டபோதும், இப்புனைவுகள் நதிகளாய்ப் பிரவாகமெடுத்து நம்பிக்கையெனும் தொன்மத்தின் சாகரத்தில் ஒன்றுகலக்கின்றன.

   சபரியோ, சுடலையோ இருவரும் தமக்குச் சொல்லப்பட்ட புனைவுகளின் வழியே கொள்ளும் நம்பிக்கையானது அன்னரக்ஷாம்பிகையாகவோ, அல்லது பாலாயியாகவோ எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். இவைகளின் மூலாதாரம் காட்டும் தரிசனமோ ’பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதலாகப்” புரிபடுகிறது. 

3) மேற்சொன்ன இரண்டும் ஓரளவே அமையப்பெற்றவை:

   இத்தொகுப்பின் மீதமுள்ள மூன்று கதைகள் வாசுதேவன், காளிங்க நர்த்தனம், திமிங்கிலம் ஆகியவைகள் நல்ல கதைகள்தான் என்றபோதிலும் ஏதோ ஒரு விடுபடலை, முழுமையற்றதன்மையை உணரமுடிகிறது. அவை எடுத்துக்கொண்ட உள்ளடக்கங்கள், சொல்லப்பட்ட விதம் போன்றவற்றில் ஒரு போதாமையைத் தருவதாகப்படுகிறது. குறிப்பாக “திமிங்கிலம்” கதையில் வரும் விவரிப்பானது எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கக்கூடிய நிகழ்வினைப் புனைவாக்கிய விதத்தில் அது ஏற்புடையதாய் இருந்தபோதும் அது சொல்லப்பட்ட விதமானது வாசகனுக்குள் ஒருவித பற்றாக்குறையை ஏற்படுத்திவிடுகிறது. “வாசுதேவன்” கதையைப் பொறுத்தவரை உடலில் எந்தச்செயல்பாடும் இல்லாமல் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒருவனது கடைசிக்காலங்களில் அவனை நண்பனாக ஏற்றுக்கொள்ளும் இரண்டு பயிற்சி மருத்துவர்களும் “அம்புப்படுக்கை:” சுதர்சனைப்போல் நுணுக்கம் பழகவில்லைபோலும் மருத்துவமும், மருந்துகளும் மட்டுமல்ல மருத்துவம் பார்ப்பவர்களின் நம்பிக்கையும் நோயாளிகளை இன்னும் கொஞ்சம் வாழவைக்கக்கூடும். இக்கதையினை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ”காளிங்க நர்த்தனம்” கதையில் முறுக்குசாமியோடு இருக்கும் மாணிக்கத்தைப் பிடித்திருக்கும் யட்சியைப் போலவே கதைக்குள்ளும் ஒரு யட்சி புகுந்துகொண்டு போக்குகாட்டுகிறாள். சொல்லல்முறை, உள்ளடக்கம், வடிவம் போன்றவற்றில் சற்றே தொய்வை உணரவைக்கிறது. 

   முன்சொன்னது போலவே இத்தொகுப்பின் ஆசிரியர் தன் சுயத்தை மற்றமைகளாக சிலகதைகளுக்குள் உலவவிட்டுள்ளார். அதனாலேயே நான்கு கதைகளில்  சித்தமருத்துவர்கள் வந்துசெல்கிறனர்.

   இத்தொகுப்பில் கதைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தைப்பற்றிக் கூறவேண்டுமெனில் சராசரியாக வந்திருக்கும் மூன்று கதைகளில் இரண்டினை முதலிரண்டு கதைகளாகவும்,, மற்றொன்றை கடைசிக்கதைக்கு முன்னதாக வைத்திருப்பது, தொய்வான கதைகளின் அதிருப்தியைப் போக்கி இடையில் வரும் சிறப்பான கதைகளினால் ஏற்படும் அனுபவங்களுடன், கடைசிக்கதையில் கிடைக்கும் திருப்தியை நிலைநிறுத்தியும் தொகுப்பின் மீதான நேர்மறை அபிமானத்தைக் கொடுக்கின்றன. இவை தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ அடுக்கப்பட்டிருக்கலாம். எப்படியாயினும் அது இத்தொகுப்பிற்கான பலமாகவே அமைந்துள்ளது.

   இது ”சுனில் கிருஷ்ணனின்” முதல் தொகுப்பு என்றபோதும். இதிலுள்ள கதைகளின் நேர்த்தியும், பெரும்பாலான கதைகளின் கச்சிதமும், சிலகதைகளில் தெளிவின்மை,, நிலம் சார்ந்த விவிவரணைகள் குறைவாக இருத்தல் போன்ற சிற்சில குறைகள் இருந்தபோதும் நவீனச் சிறுகதையின் பரிபூரண பரிமாணத்தை நோக்கிய பயணமாகவே இத்தொகுப்பில் உள்ள “பேசும் பூனை” மற்றும் “குருதிசோறு” போன்ற கதைகள் அமைந்துள்ளன. மற்ற கதைகள் பயணத்தின் போக்கில் இரட்டைத்தன்மையுடன் உரையாடி கருவிலேயே தங்கிவிட்டன.

Friday, December 14, 2018

வளரொளி - முன்னுரை

முகப்பு 
நண்பர் விஷால் ராஜாவை 2017 ஆம் ஆண்டு ஊட்டி  விஷ்ணுபுரம் முகாமில் முதன்முறையாக சந்தித்தேன். ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி அவருடைய சிறுகதை தொகுப்பு வெளியாகியிருந்தது. ஜெயமோகன் தளத்தில் வெளியான அவருடைய இரு கதைகளைத் தவிர பிறவற்றை வாசித்ததில்லை. அதேயாண்டு கடைசியில் ‘யாவரும்’ வெளியீடாக எனது முதல் சிறுகதை தொகுப்பான ‘அம்புப் படுக்கை’ வெளிவர இருந்தது. அக்கதைகள் சமகாலத்தில் எழுதப்படும் பிற கதைகளுடன் ஒப்பிடும்போது எத்தகையவை என்பது குறித்து எனக்கு பல்வேறு ஐயங்கள் இருந்தன. இதழ்களில் உதிரிகளாக சில கதைகளை வாசித்திருந்தாலும், சமகாலத்தில் புதிதாக எழுதும் எவருடைய தொகுப்பையும் முழுவதுமாவ வாசித்ததில்லை என்பது உறைத்தது. சென்ற ஆண்டு ஆறாம் மாதம் பதாகையில் விஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’ சிறுகதை தொகுப்பு குறித்தான விமர்சனம் மற்றும் அவருடைய நேர்காணல் வழியாக ஒரு துவக்கம் நிகழ்ந்தது. ஒருவகையில் படைப்பாளியாக என்னை மதிப்பிட்டுகொள்ளும் சுயநலமே இதன் துவக்கம். மற்றொரு எழுத்தாளனை மதிப்பிடுவது என்பதைக் காட்டிலும் சுய மதிப்பீடு மற்றும் கற்றுகொள்வதற்கான வாய்ப்பு எனும் நோக்கிலேயே ‘புதிய குரல்கள்’ பகுதியை ‘பதாகை’ இதழில் துவங்கினேன். இத்தொகுதியில் இடம்பெற்றிற்கும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இதுவே முதல் நேர்காணல் என்பது ஆச்சரியமாகவும் சற்றே வருத்தமாகவும் இருந்தது. முதல் தொகுப்பு வெளிக்கொண்டு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து, நல்ல கவனம் பெற்ற பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் மற்றும் கார்த்திகைப் பாண்டியனுக்கு கூட இதுவே முதல் நேர்காணல். 

விமர்சனம் யாருக்காக எழுதப்படுகிறது? நானறிந்தவரை பதிப்புக்கு முந்தைய நிலையில் கதைகளைப் பற்றி அனுக்கர்கள் அளிக்கும் வாசிப்பும் விமர்சனமும் சில நேரங்களில் எழுத்தாளன் தம்மை மேம்படுத்திக்கொள்ளவும், கதைகளை திருத்திக்கொள்ளவும் உதவும் என்பதற்கு அப்பால் விமர்சனங்கள் எழுத்தாளருக்கு எவ்வகையிலும் பெரிதாக உதவுவதில்லை. அவற்றை செவிக்கொண்டு, உளம் கொண்டு எழுதியவர் மிகச் சிலரே இருக்கக்கூடும். வேறொரு வகையில் அத்தனை உளபூர்வமாக எழுதத் துவங்கும்போது கலை காணாமல் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது. விமர்சனம் என்பது எழுத்தாளனை குப்புறச் சரித்து குடலை உருவ வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அடிப்படையிலேயே பிழையானது. விமர்சனம் வாசகனை இலக்காகக் கொண்டே எழுதப் படுகிறது. எழுத்தாளனையும், அவனுடைய படைப்பையும் தன் நோக்கில் அடையாளப்படுத்தி புரிதலை விரிவாக்கி காட்ட முயல்கிறது. எழுத்தாளனோ, விமர்சகனோ அவனுடைய முதன்மை தகுதி என்பது தேர்ந்த வாசகனாக இருப்பதே. ஒரு படைப்பை எந்த முன்முடிவும் இன்றி அணுகி தன்னை முழுமையாக ஒப்புவிக்கும்போது அதுவரை எவர் புலனுக்கும் அகப்படாதவை அவனை வந்தடையும். அப்படியான தருணங்கள் இத்தொகுப்பின் கட்டுரைகளில் உண்டு என்றே நம்புகிறேன். அவ்வகையில் இரண்டாம் மூன்றாம் ‘புதிய குரல்கள்’ பகுதியிலேயே தன்னலத்திற்கு அப்பால் இதற்கொரு முக்கியத்துவம் உள்ளதை உணர்ந்து கொண்டேன். தமிழின் மூத்த எழுத்தாளர்கள் பலரும் தங்கள் முன்னோடிகளைப் பற்றி தொடர்ந்து விமர்சன நோக்கில் எழுதி வருகிறார்கள். ஜெயமோகன் ‘இலக்கிய முன்னோடி வரிசை’ எழுதியதுடன் நில்லாமல் ‘புதிய காலம்’ என்றொரு தொகுப்பில் அவருடைய சமகால எழுத்தாளர்கள் குறித்தான விமர்சன கட்டுரைகளை எழுதி இருக்கிறார். ஒருவகையில் இத்தொகுப்பும் அவ்வகையிலான முயற்சியின் தொடர்ச்சியே. எனினும் நேர்காணல்கள் வழியாக விமர்சனத்தை எழுத்தாளரிடம் நேரடியாக கொண்டு சேர்த்து அவருடைய தரப்பையும் சேர்த்தே பேசுகிறது எனும் வகையில் தமிழுக்கு இது புதிய வடிவம் என்றே எண்ணுகிறேன். மேலும் இத்தொகுப்பின் முக்கியத்துவம் என்பது, இக்கட்டுரைகள் ‘புதிய காலம்’ போல் எழுத்தாளர்களின் மிகச் சிறந்த படைப்பை முன்வைத்து எழுதப்பட்டவை அல்ல. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதல் முயற்சி அல்லது முதல் சில முயற்சிகளில் ஒன்றைப் பற்றிய கட்டுரையின் வழியாக எழுத்தாளரின் தனித்தன்மையை, முக்கியத்துவத்தை அடையாளம் காண முற்படுகிறது. ‘கிராப்’ தாளில் உருக்கொள்ளவிருக்கும் ஒரு பரவளையத்தின் முதற்புள்ளியை காட்டும் முயற்சி. கட்டுரைகளின் ஊடாக என் வாசிப்பும் பார்வையும் கூட மாறி வந்திருப்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. பத்தாண்டுகளில் இவர்களுடைய களம் எப்படியாக விரிவடையும் என்றறிய ஆவல். தொடர்ந்து நன்றாக எழுதும் எழுத்தாளர்களாக அறியப்படுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகமாகும் உலக இலக்கிய கிளாசிக்குகள் அவசியம் வாசிக்க வேண்டும் என்பதும் எவ்வித குழப்பமும் இல்லை. அதேவேளையில் சமகாலத்து சக பயணிகள் என்ன எழுதுகிறார்கள் என்பதை அவதானிக்க வேண்டியது மிக முக்கியம். 

ஒரேயடியாக எந்த எழுத்தாளரையும், எந்த ஆக்கத்தையும் நிராகரிக்க முடியாது என்பதே என் புரிதல். ஒரு எழுத்தாளனின் பலம் என்ன, பலவீனம் என்ன, கரு பொருட்களில் அவனுடைய தேர்வு மற்றும் சாய்வு எத்தகையதாக இருக்கிறது, வாழ்வைப் பற்றிய மெய்யியல் நோக்கு அவனுடைய புனைவுகளில் எப்படி வெளிப்படுகிறது, தவறவிட்ட வாய்ப்புகள் எவை, பிற ஆக்கங்களோடு ஒப்பிடும்போது குறிப்பிட்ட ஆக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது- போன்ற கேள்விகளையே இத்தொகுப்பின் கட்டுரைகள் அணுகுகின்றன. விஷால் ராஜா, தூயன், அனோஜன், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், கார்த்திக் பாலசுப்பிரமணியன், அகர முதல்வன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகிய எழுவரின் சிறுகதை தொகுப்புக்களைப் பற்றியும், சரவனகார்த்திகேயன் மற்றும் சுரேஷ் பிரதீப் ஆகியோரின் நாவல்களை பற்றியும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உரையாடல்கள் பொதுவாக எழுத்தாளரை அறிமுகப் படுத்தும் நோக்கிலும், குறிப்பாக கட்டுரையில் பேசப்படும் ஆக்கத்தை முன்வைத்தும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு நேர்காணல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை, தனித்தன்மை கொண்டவை. பாலா மற்றும் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணலை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவை இணைய வழி நேர்காணல்கள் என்பதால் என் பங்களிப்பு என பெரிதாக ஏதுமில்லை. கேள்விகளை அனுப்புவதோடு சரி. அதுவும் பெரும்பாலான நேர்காணல்கள் ஒரேயமைப்பை கொண்டவை.   நேர்காணல்கள் வண்ணமயமாக ஒளிவிடுவதற்கு எழுத்தாளர்களின் ஈடுபாடும் துணிவுமே காரணம். அவ்வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. வெளிவந்த சமயங்களில் குறைந்தது நான்கைந்து நேர்கானல்களாவது இணைய வெளியில் கவனிக்கப்பட்டது. 

இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேர் என்பது தற்செயலாக அமைந்தது. நிறைய விடுபடல்கள் உண்டு. 2010 க்கு பிறகு முதல் புனைவு நூலை கொணர்ந்தவர்கள் என்பதே அளவுகோல். கே. ஜெ. அசோக்குமார், போகன், குணா கந்தசாமி, நரன், தமிழ்நதி, சாம்ராஜ், கிறிஸ்டோபர் அந்தோணி, சைலபதி, ரமேஷ் ரக்ஷன், லூசிபர் ஜெ வயலட், கலைச்செல்வி, சித்துராஜ் பொன்ராஜ், நவீன், மாதவன் ஸ்ரீரங்கம், மாதவன் இளங்கோ, அரவிந்த் கருணாகரன், கணேஷ் வெங்கட்ராம், யதார்த்தன், ஜீவ கரிகாலன், கார்த்திக் புகழேந்தி, கிருஷ்ணமூர்த்தி, கவிதைக்காரன் இளங்கோ, விஜய் மகேந்திரன், லைலா எக்ஸ், கறுத்தடையான், லக்ஷ்மி சிவகுமார், குமார நந்தன், கனவுப் பிரியன் என இன்னும் பலர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இது ஓர் உத்தேச பட்டியல் மட்டுமே, பலர் விடுபட்டிருக்கவும் கூடும். இத்தொகுதி ஒரு துவக்கம் மட்டுமே. வரும் காலங்களில் இது தொடரும் என்றே நம்புகிறேன். விமர்சகன் மேதையாக இருக்க வேண்டும், அவனுக்கு பிற கலைகளைப் பற்றிய ஞானம் வேண்டும் என விமர்சகனுக்கான இலக்கணத்தை நாஞ்சில் நாடன் நேர்பேச்சில் முன்வைத்தார். அவ்வகையில் நான் முழு விமர்சகன் அல்ல, இக்கட்டுரைகளும் கூட முழுமையான விமர்சன கட்டுரைகள் என அடையாளபடுத்திவிட முடியுமா எனத் தெரியவில்லை. 

இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் பேசுகின்றன. தூயன் பரந்துபட்ட களங்களின் ஊடாக நவீன காலத்தின் தன்னடையாள உருவாக்கத்தில் உள்ள சிக்கல்களைத்தான் பேசுகிறார். விஷால் ராஜாவும் கார்த்திக் பாலசுப்பிரமணியமும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் சுரண்டலை, இருப்பை, நியாயத்தை என பல்வேறு விஷயங்களை வேறு உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள். சரவனகார்த்திகேயன் வரலாற்று ஆளுமையின் புனிதத்தை விலக்கிவிட்டு என்னவாக பொருள் படுகிறார் என நோக்க முயல்கிறார். பாலா சமகால வாழ்வின் அபத்தங்களை விமர்சன நோக்கில் எதிர்கொள்கிறார். மனிதனை காட்டிலும் பிரம்மாண்டமானவை கடவுளாக இருந்த காலகட்டம் கடந்து அவ்விடத்தை அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. கடவுள் யுகத்து பொருளின்மை இப்போது இன்னும் பூதாகாரமாக வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. கடவுளை போல் அல்லாது இவ்வமைப்புகள் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து ஆளுமை செலுத்துவதை இக்கதைகள் பேசுகின்றன. மானுட உறவின் சிக்கல்கள் மற்றும் நம்பகமின்மை ஒரு பொது இழையாக ஊடுருவிச் செல்கின்றன. 

இந்நூல் பதாகை – யாவரும் கூட்டு வெளியீடாக வருகிறது. ‘பதாகை’ எப்போதும் மாறுபட்ட முயற்சிகளை அனுமதிக்கும் களமாகவே இருந்திருக்கிறது. தமிழ் இணைய இலக்கிய வரலாற்றில்  பதாகைக்கும் அதன் ஆசிரியர் பாஸ்கருக்கும் நிச்சயம் இடமுண்டு. பல எழுத்தாளர்களின் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளார். இந்நூலை ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன், சிவா கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சுரேஷ், அஜய், நம்பி, நடராஜன், அனுகிரகா மற்றும் பாஸ்கர் ஆகியோரை உள்ளடக்கிய பதாகை குழுவிற்கே சமர்ப்பணம் செய்கிறேன். இவர்களுடன் விவாதிப்பதன் வழி புதியவற்றை எப்போதும் கற்றுவருகிறேன்.  ‘புதிய குரல்கள் – தொகுதி -1’ நூலாக்கம் பெறுவதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஏனெனில் இந்த தொகுதியில் பலர் விடுபட்டுள்ளனர். மேலும் பாலாவையும், கார்த்திகை பாண்டியனையும் புதிய குரல்கள் என அடையாளப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை. எனினும் நண்பர் ஜீவ கரிகாலன் இதை நூலாக்க வேண்டும் என கோரினார். அவருக்கும் யாவரும் நண்பர்களுக்கும் நன்றி.    

இந்நூல் சமகால இலக்கியத்தை நோக்குவதற்கான ஒரு கோணத்தையும், அதன் செல்திசை குறித்தான சில அவதானிப்புகளையும் அளிக்கவல்லவை என நம்புகிறேன். மேலும் இவர்கள் வருங்காலங்களில் தொடர்ந்து தீவிரத்துடன் எழுதுவார்கள் அவர்களுடனான பயணத்தில் நானும் உடனிருக்க விழைகிறேன். 

Thursday, December 6, 2018

சுபிட்ச முருகன் வாசிப்பு

சரவண சந்திரனை நெடுநாட்களாக வாசிக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது ஆனால் அதற்கான தொடக்கம் நிகழவே இல்லை. ஒருபக்கம் அவர் வாழ்வனுபவங்கள் பெற்றவர் என்பதால் நூதன கதைசொல்லி என புகழப்படுகிறார். மறுபக்கம் அவருடைய நாவலைப் பற்றி சாபக்காடு தளத்தில் அக்குவேராக பிரித்து போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயமோகனின் முன்னுரை 'சுபிட்ச முருகனை' வாசிக்க ஒரு தூண்டுகோல். மேலும் நண்பர் ஜீவ கரிகாலன் உலகியல் வழியிலிருந்து ஆன்மீகத்தைத் தேடும் சரவண சந்திரன் வழியைப் பற்றி சொல்லியிருந்தார். இந்நாவலின் பெயரும், அதன் முகப்பு படமும் என்னை வசீகரித்தது. இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். 125 பக்க சிறிய நாவல் தான். இதுவே நான் வாசிக்கும் முதல் நாவலும் கூட. 

நாவலின் இரண்டாம் பாதியில் ஒருவித பித்துநிலை வெளிப்படுகிறது. உண்மையில் சில மிஸ்டிக் அனுபவங்களைப் பின்தொடர்ந்து எழுத முயன்றிருக்கிறார். வாசிக்கும்போது இது மெய்யான அனுபவங்கள் என்பதை உணர முடிகிறது. நாவலை வாசிக்கத் துவங்கிய வெகு சில பக்கங்களில் துவங்கிய நெய் இனிப்பின் வாசனையை நாவல் வாசித்து முடித்த பின்னரும் நாசியில் உணர்ந்தபடி இருந்தேன். உண்மையில் பெரும் தொந்தரவாக இருந்தது. அதேப்போல் கற்சிலையின் குங்குமப் பாதமும் ஒரு காட்சியாக் மனதை ஆக்கிரமித்து விட்டிருந்தது. மிஸ்டிக் அனுபவம் நோக்கி திறந்து வைக்கும் வாசகனுக்கு அதை இந்நாவல் அளிக்கின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தகைய மெய்நிகர் புலன் அனுபவங்களை கடத்தவது சாதாரண விஷயமல்ல. 

நிற்க 

இந்நாவலின் சிக்கல் என்பது, சரவண சந்திரனின் மொழி இத்தகைய அனுபவங்களை கடத்தும் அளவிற்கு போதிய வலுவில்லாமல் இருப்பதே. ஆகவே அவை ஆர்வமூட்டாமல் வெறுமே கடந்து செல்கிறது. மைய பாத்திரத்தின் வார்ப்பும் அதன் வளர்சிதை போக்கும் சரிவர கூடிவரவில்லை எனும் எண்ணமும் ஏற்பட்டது. மீட்பை பேச முயலும் நாவல் ஊழ் வழி தேர்வை அதன் வழியாக முன்வைப்பதால் மிகவும் பலவீனப்பட்டுவிடுகிறது. நாவலின் மையமான ஆண்மையிழப்பு, எது ஆண்மை? ஆண்மை மீட்சி? ஆகிய கேள்விகளை சு. வேணுகோபாலின் கூந்தப்பனை எழுப்பிய அளவிற்கு உக்கிரமாகவும் தீவிரமாகவும் வேறு படைப்புகள் எழுப்பவில்லை என்றே தோன்றுகிறது. கீர்த்தனாவுடனான கதைசொல்லியின் உறவு பகுதி நாவலின் மிக பலவீனமான பகுதியாக தோன்றியது.  

சரவணச்சந்திரனின் வேறு ஆக்கங்களை வாசித்து பார்க்க வேண்டும்.  இந்த நாவல் அளித்த மெய்நிகர் புலன் அனுபவங்கள் என்னை விட்டு அகலாது என்றே எண்ணுகிறேன். 


Sunday, December 2, 2018

யாவரும் நூல் வெளியீட்டு விழா - சிறப்புரை

(நேற்று 2/12/18 யாவரும் பதிப்பகம் வெளியிட்ட பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றுவதற்காக தயார் செய்த சிறப்புரை. சில புள்ளிகளை பேசும்போது தவறவிட்டேன்.)

https://www.youtube.com/watch?v=2mXntCtPjgw&t=768s

வணக்கம் 
நண்பர்களே,
ஒரு சக படைப்பாளியாக தமிழ் படைப்புலகில் தடம் பதிக்கும் எழுத்தாள நண்பர்களை ஆரத் தழுவி வரவேற்கிறேன். உங்கள் வருகை தமிழ் இலக்கிய சூழலில் மேலும் பல புதிய, பரந்த வாயில்களை திறந்து விடட்டும். சைலபதி, சிவக்குமார் முத்தையா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராம் முரளிக்கு இது முதல் நூல் அல்ல. ஜா. தீபா இலக்கிய சூழலில் நாம்  அறிந்த ஆளுமைதான். சித்ரன், சுரேஷ் மான்யா, மது ஸ்ரீதரன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோருக்கு நல்வரவு. தனிப்பட்ட முறையில் சித்ரனின் நூல் வெளிவருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் அவனை விநோத்தாக, சக மருத்துவ மாணவனாக, என் முதல் இலக்கிய நண்பனாக நான் அறிவேன். எனது நவீன இலக்கிய பரிச்சயம் அவன் வழியே நிகழ்ந்தது. வருடாவருடம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் யாவரும் பதிப்பகம், பல புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுக்கிறது. ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உட்பட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். புத்தகம் கைக்கு வராததால் விரிவாக ஒவ்வொரு தொகுப்பைக் குறித்தும் பேச இயலவில்லை, எனினும் வெளியிடப்படும் நூல்களின் முன்னுரைகளை வாசித்தேன். ராம் முரளி மொழியாக்கம் செய்த ஹோட்ரோவோஸ்கி நேர்காணல் சிறப்பாக இருந்தது. திரை, அளகபாரம், கல்நாகம், குறத்திகள் ஆடும் மூன்றாம் சாமம், கனாத்திறமுரைத்த கதைகள் ஆகிய கதைகளை வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவகை. தொன்மம், குடும்ப வாழ்வில் இடையீடு செய்யும் நவீன வாழ்வு, coming of age வகைக்கதை, கையறுநிலை, கற்பனையின் ஆற்றல் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. வெவ்வேறு பேசு பொருள் கொண்டவையும் கூட. சிறுகதைக்கான வடிவ நேர்த்தி கொண்டிருப்பவை. திரை ஒரு மகாபாரத தொன்மத்தை, காந்தாரியின் கதையை மீளுருவாக்கம் செய்கிறது. அதுவும் ஒரு பெண்ணிய கோணத்தில். அளகபாரம் நவீன காலத்தில் குழந்தை பேறு எத்தகைய சிக்கலாக மாறி வருகிறது, அதன் அழுத்தங்கள் என்னவாக இருக்கிறது என சொல்கிறது. கல்நாகம் காமம் சார்ந்த சாதாரண கதையாக நிறைவடையாமல் அதன் படிமச் செறிவு காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. கனாத்திறமுரைத்த கதைகள் வாசிப்பின்பம் மற்றும் கற்பனையின் காரணமாக தனித்து தெரிகிறது. குறத்திகள் ஆடும் மூன்றாம் சாமம், கீழத்தஞ்சை பகுதியில் நையாண்டி மேளம் வாசிப்போரின் வாழ்வைப் பேசுகிறது. வாழ்வு ஆவணமாக மட்டும் எஞ்சாமல் வாழ்வை கரிசனத்துடன் அணுகும் பெண்களைச் சித்தரிக்கிறது. மது ஸ்ரீதரனின் முதல் கட்டுரை வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நினைவுத் தொடர்பு ஒன்றை பின்னுகிறார்.  

சிறப்புரை எனச் சொல்லிக்கொண்டாலும், இந்த வாய்ப்பை ஒரு எழுத்தாளன் தன் சக பயணிகளுடன் நிகழ்த்தும் உரையாடல் எனும் கோணத்திலேயே நிகழ்த்த விரும்புகிறேன்.  

அண்மையில் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா மணிப்பூரின் இம்பாலில் நிகழ்ந்தது. நிகழ்விற்கு முதல்நாள், பஞ்சாபி எழுத்தாளர் குர்ப்ரீத் செத்ஜி ஒரு சிறிய கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நான் அவரிடம் உங்கள் கர்த்தார் சிங் துக்கலின் ‘பவுர்ணமி இரவு’ தமிழில் உள்ளது என்றேன். என் ஹிந்தி அறியாமையை மீறி அவருள் பொங்கிய பெருமிதத்தை உற்சாகத்தை உணர்ந்தேன். உருது எழுத்தாளரிடம் மண்டோவும் இஸ்மத் சுக்தாயும் தமிழில் கிடைக்கிறார்கள் எனச் சொன்னபோது அவர் விழியில் நிறைந்த மகிழ்ச்சியைக் கண்டேன். வங்காளி எழுத்தாளரிடம் தாகூர், சரத்சந்திரர், சத்யஜித் ரே, விபூதி பூஷன், தாரா சங்கர் பானர்ஜி, சுனில் கங்கோபாத்யாய ஆகியோரின் படைப்புகள் தமிழில் கிடைக்கின்றன என்றதும் அவர் ஆச்சரியமாக கேட்டுவிட்டு அவர்களைப் பற்றி பேசத் துவங்கினார். கன்னட எழுத்தாளரிடம் சிவராம் காரந்த், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், பைரப்பா, அனந்தமூர்த்தி, டி.ஆர்.நாகராஜ், விவேக் ஷான்பாக் என ஒரு பெரும் வரிசை தமிழில் வாசிக்கப்படுவதைச் சொன்னேன். அவர் ஜெயமோகனை ஒரு பெயராக அறிந்திருந்தார். மலையாள எழுத்தாளரிடம் தகழி, பஷீர், எம்.டி. வாசுதேவ நம்பூதிரி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஓ.வி விஜயன், கமலாதாஸ், என்.எஸ்.மாதவன், சக்காரியா, புனத்தில் இக்கா, கல்பற்றா நாராயணன், மனோஜ் குரூர், கே.ஆர் மீரா என பெரும் வரிசையைச் சொன்னேன். அவருக்கு சாருவையும் ஜெயமோகனையும் பாஷாபோஷிணி வழியாக நன்றாகவே தெரிந்திருக்கிறது. அசோகமித்திரனின் தண்ணீரை மொழியாக்கத்தில் வாசித்ததாக சொன்னார். என் மொழியின் மகத்தான படைப்பாளி ஒருவனை இதோ இவன் படித்திருக்கிறான் எனும் மகிழ்ச்சி அளவற்றது. பாலசுப்பிரமணியன் பொன்ராஜை விடுங்கள் நம் பாரதியும், பிச்சமூர்த்தியும், புதுமைபித்தனும், மவுனியும், திஜாவும், குபராவும், சுந்தர ராமசாமியும், கி.ராவும் இன்னும் எந்த மொழியிலும் சென்று சேரவில்லை எனும் நிலை பெரும் ஆற்றாமையை ஏற்படுத்தியது. நாம் அவர்களை கொண்டு சேர்ப்பது நம் கடமை அல்லவா? ஆனால் அதை எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை. அசோகமித்திரன் இருமொழி புலமை பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழ் அளவிற்கே நேரடியாக எழுதியவர். கன்னடம், வங்காளம் போன்ற மொழிகளில் இன்று இயங்குபவர்களும் இரு மொழி விற்பன்னர்கள் தான். ராஜஸ்தானி, பஞ்சாபி, சிந்தி போன்ற மொழிகளில் இயங்குபவர்களும் இருமொழிப் புலமை கொண்டவர்கள் தான். பெரும்பாலும் அவர்கள் ஹிந்தியிலும் நேரடியாக எழுதுகிறார்கள். இந்த போக்கை நாமும் கவனிக்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.   

யுவ புரஸ்கார் அனுபவம் வழி நானறிந்தது என்னவென்றால், தமிழ் இலக்கியம் நிச்சயம் பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும்போது மிக வளமாக இயங்கி வருகிறது. தமிழைத் தவிர்த்து மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளி மற்றும் உருது ஆகியவை மட்டுமே உயிர்ப்புடன் வாழும் மொழியாகத் திகழ்கிறது.  உலக இலக்கிய, பிற மொழி கிளாசிக்குகள் மொழியாக்கம் வழி நம்மை வந்தடைந்த வண்ணம் உள்ளன. யதார்த்தவாத, நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்து முறைகள் ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு தளங்களில் தாக்கம் செலுத்தி தமிழை வளப்படுத்துகிறது. ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை தம் களமாக கொண்ட தமிழ் புனைவுகள் வெளிவருகின்றன. மறுபக்கம் தமிழகத்து இனக்குழுக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறு புதினங்களாக வெளிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் தாக்கத்தை உள்வாங்கி நவீன வாழ்வை, அதன் உறவு சிக்கல்களைப் பேசும் கதைகள் எழுதப்படுகின்றன. ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ மொழியாக்கம் செய்யப்பட்டு சர்வதேச போட்டியில் வென்று அங்கீகாரம் பெற்றுள்ளது. பெருமாள் முருகனுக்கு சர்வதேச கவனம் கிடைத்திருக்கிறது. சாருவும் கூட ஆங்கில மொழியாக்கம் வழி பரவலாகி இருக்கிறார். இந்நிகழ்வுகள் வழி மேலும் பல தரமான தமிழ் எழுத்தாளர்களை உலக சமூகம் வருங்காலத்தில் கவனத்தில் கொள்ளும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.  

ஒரு எழுத்தாளனாக நம்முள் உள்ள மிக முக்கியமான கேள்விகள் என்பவை- நாம் எதற்காக எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? இக்கேள்விக்கான விடை என்பது அந்தரங்கமானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடையிருக்கலாம். கலை மக்களுக்காகவா? கலை கலைக்காகவா? எனும் நெடுங்கால விவாத மரபின் நீட்சி. திட்டவட்டமான இறுதி பதில்கள் என ஏதுமில்லை. அவரவர் தேடிக் கண்டடைவதே சரி. இன்று புத்தகம் வெளியிடும் சிவக்குமார் முத்தையா அவருடைய முன்னுரையில் ‘பிரசாரமும் கூட கலைத்தன்மை கொண்டதாக இருந்தால் மட்டுமே தாக்கம் செலுத்தும்’ எனும் கருத்து எனக்கும் ஏற்புடையதே. 

நவீன மொழியியல் ஆய்வாளர்கள் குழந்தைகளின் மொழிவழி தம்மை முதன்முதலாக வெளிப்படுத்த கதைகளையே தேர்கிறார்கள் என கூறுகிறார்கள். கதைகள் நம்மை எப்போதும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நம்மை பாதுகாக்கின்றன. அயோத்திதாச பண்டிதரை வாசிக்கும்போது கதை எப்படி அதிகார மாற்றத்தை நிகழ்த்துகிறது என்றுணர முடியும். இந்த புனைவு சூழ் உலகில் ஜீவித்திருக்க நமக்கு கதைகள் தேவையாய் உள்ளன. புடவி நெய்யும் கதையில் தற்செயலாக ஏதோ ஓரிடத்தில் அமைந்துவிடும் பாத்திரங்கள் தான் நாம். 

ஹெரால்ட் ப்ளூம் நல்ல இலக்கியம் அதிகபட்சம் என்ன செய்ய முடியும் எனும் கேள்விக்கு, சரியாக வாசித்து உள்வாங்கப்படும்போது நல்ல இலக்கியத்திற்கு உலகை சொஸ்தப்படுத்தும், ஆற்றுப்படுத்தும், குணப்படுத்தும் தன்மை இருக்கும். அதற்கப்பால் வேறு எதுவுமில்லை என்கிறார். மானுட கீழ்மையை, வன்முறையை, மனப் பிறழ்வுகளை, மன வக்கிரங்களை, வெறியாட்டை என அகத்தின் இருளை எழுதுவதும் கூட ஒருவகையான அறுவை சிகிச்சைப் போல், உள்ளிருப்பவற்றை வெளிக்கொணர்ந்து பரப்புவதே. அது வலி நிறைந்ததாக இருக்கலாம் ஆனால் அதுவும் உலகை ஆற்றுப்படுத்துவது தான். டால்ஸ்டாயின் வழியும் தாஸ்தாவெஸ்கியின் வழியும் வேறுதான் ஆனால் இருவருமே மகத்தான ஹீலர்கள். துரியனும் தர்மனும் சென்று சேர்வது ஓரிடத்திற்கே.  

சமகாலத்தை எழுதுவதா? அல்லது காலாதீத விழுமியங்களை எழுதுவதா? எது சிறந்தது என்பது மற்றுமொரு அலைக்கழிக்கும் கேள்வி. சமகாலத்தை எழுதுவதில் உள்ள சவால் என்பது அது செய்தியறிக்கை ஆகாமல் இருப்பதில் உள்ளது. அனைவரும் அறிந்த ஒன்றிற்கு அப்பாலுள்ளவற்றை அறிய முயல்வது. சமகாலம் எனும் தோணியில் பயணித்து அவனுடைய அகம் எனும் குடுவையில் காலாதீதம் எனும் நதியிலிருந்து அள்ளி வைக்கும்போதே கலை மேம்பட்டதாகிறது என்பது என் அவதானம். சமகாலமா காலாதீதமா எனும் பட்டிமன்ற பேச்சுக்கு எவ்வித பொருளுமில்லை. சமகால பொருத்தம்,பொருத்தமின்மை என்பதைத் தாண்டி ப்ளூம் ஒரு தேர்ந்த இலக்கியத்திற்கு மூன்று இயல்புகள் இருந்தால் போதும் என்கிறார் “ aesthetic splendour, cognitive power and wisdom”. (அழகியல் விகசிப்பு, அறிவுணர்வின் ஆற்றல் மற்றும் ஞானம் என புரிந்துகொள்ளலாம்).  எழுத்தாளன் கலையின் வழி  வாழ்வர்த்தம் சார்ந்து, அவனுடைய இருப்பு சார்ந்து மெய்யியல் கேள்விகளை சென்று முட்டிக் கொள்கிறான். அந்த சுவற்றின் மறுபுறம் செல்வதற்கான வழியை துழாவுகிறான். அங்கே என்ன உள்ளது என்பதை ஊகிக்க முயல்கிறான். எழுத்தாளன் மெய்யியலை முறையாக கற்றால் நல்லது, ஆனால் அப்படிக் கற்றாலும் இல்லையென்றாலும், அது அறிவியல் புனைவாக இருந்தாலும் கிராமத்தை களமாகக் கொண்ட யதார்த்த புனைவாக இருந்தாலும் அவன் சென்றடைவது இந்த மெய்யியல் தளத்தையே. குறிப்பாக நாவல் எனும் கலை வடிவம் மெய்யியல் விசாரங்களை விரித்தும் அணுகியும் நோக்கும் ஒரு கலை வடிவமாக இருக்கிறது. நாவல் எனும் வடிவம் ஒரு ஆலமரத்தைப் போன்றது. திட்டமற்ற வடிவில் விரவிப் பரவுவது எனினும் அதன் ஆழத்தில் உள்ள திட்டத்துடனான ஒர்மையுறவு கொண்டது. அந்த ஓர்மை உறவு சிதைக்கப்ப்படும்போது அதன் கலைத்தன்மை சரிகிறது. 

சிறுகதை எனும் வடிவம் நடாலிய ஹாதொர்ன், எட்கர் ஆலன் போ மற்றும் நிகோலாய் கோகோய் காலகட்டத்தில் வேர்கொண்ட வடிவம், அதாவது 1830-60. 1890 களில் தான் அவற்றை சிறுகதை என அடையாளப் படுத்தினார்கள். தொடக்கக் கால சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை வடிவத்தை யதார்த்தம் தவிர்த்த கதைகளுக்கான களமாகவே கண்டார்கள். தமிழின் முதல் சிறுகதை என பலராலும் அடையாளப்படுத்தப்படும் வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரத்தின்’ கதைசொல்லி ஒரு மரம். உலகெங்கிலும் நவீன சிறுகதையின் தோற்றம் என்பது அதன் முந்தைய வடிவான தேவதைக் கதைகள், தொன்மக் கதைகள் போன்ற மிகு புனைவுகளின் நீட்சியாகவே இருந்துள்ளன. ஆனால் மிக முக்கியமான வேற்றுமை என்பது அவை நாயகர்களின் கதைகளை அல்ல, பொதுவெளியில் ஒலிக்காத முகமற்றவர்களின், குரலற்றவர்களின் குரலாகவே ஒலித்தன. அரசமரம் ஒரு நாயகனை,அரசனைப் பற்றிய கதையைச் சொல்லவில்லை. தான் பார்த்து வளர்ந்து கண் முன் சமூக ஒடுக்குமுறையால் உயிர்விட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. நவீன இலக்கியம் காவியங்களில் இருந்து வேறுபடும் புள்ளி என்பது இதுவே. வரலாற்று நாயகர்களின் கதைகளையும் நாம் எழுதலாம், ஆனால் அதை வழமையான ஒற்றைக் கோணத்தில் இருந்து அணுகாமல் வெவ்வேறு கோணங்களில் எழுத முடிய வேண்டும். யதார்த்த கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையும் பேசின. சித்தரிப்புக்கள் கதையின் மையமாகின. எனினும் நுண்ணிய வாழ்க்கைச் சித்தரிப்புகள் கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருக்க வேண்டும். எத்தனை துல்லியமான, எத்தனை இன்பமயமான விவரணையாக இருந்தாலும் கூட கதையோட்டத்திற்கு பொருத்தமில்லை என்றால் அது துருத்தித் தெரியும். யதார்த்தவாத கதைகள் பெரும் சமூக வாழ்வினுள் இருக்கும் மனிதர்களை சித்தரித்தது. நவீனத்துவம் சமூகத்திலிருந்து துண்டாக்கிக்கொண்ட தனி மனிதனின் அகத் தத்தளிப்பை கலையாக்கியது. யதார்த்தவாத கதைகள் கால ஓட்டத்தை, அத்துடன் ஒழுகிச் செல்லும் வாழ்வுகளைச் சித்தரிப்பவை. நவீனத்துவம் கால ஓட்டத்தில் எதிர்நீச்சல் அடிப்பவர்களின் கதையைப் பேசுகிறது. பின் நவீனத்துவம் சிதறிய ஆடித் துண்டுகள் வழியாக நூறு நூறு சுக்குகளாக பிரிந்து கிடக்கும் சுயத்தின் விசாரணையாக பரிணாமம் கொள்கிறது. நிகழ்வுகளை தலைகீழாக்குகிறது. பொருள் பொருளின்மை எனும் இருமையை பகடியின் வழி கடந்து செல்ல முயல்கிறது. இன்று, இப்போது நாமொரு தொன்மக் கதையை மறு அக்கம் செய்தாலும் கூட மூலக் கதைக்கும் இன்றைய கதைக்கும் இடையில் நிகழ்ந்த வரலாற்று- சமூக மாற்றங்களின் இடையீட்டின் வழி மாறி வரும் விழுமியங்களுக்கு இடையிலான மோதலாகத்தான் இருக்க முடியும். 

நாம் என்ன மாதிரியான கதைகளை எழுத வேண்டும்? ஒரு எழுத்தாளன் யதார்த்தவாத அல்லது நவீனத்துவ அல்லது பின் நவீனத்துவ கதையை எழுதப் போகிறேன் எனும் முடிவுடன் எழுத அமரும்போதே அவன் கலையை விட்டு அகல்கிறான். ஏனெனில் எழுத்தாளன் கதையை எழுதுகிறான், அவன் அகம் சுமக்கும் கருப்பொருளுக்கு உரிய வெளிப்பாட்டு முறையை கதையே தேர்ந்தெடுக்கும். மேலும் இத்தகைய வகைப்பாடுகளை வாசகனும் விமர்சகனும் நிகழ்த்தி கொள்ளட்டும் எனும் தெளிவிருப்பதே நன்மை பயக்கும். இன்றைய எழுத்தாளனுக்கு மிக முக்கியமான தேவை என்பது கவனச் சிதைவை கடந்து தொடர்ந்து எழுதுவதற்கான பொறுமை. ஒரு கதை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஒரு கதை எழுதி முடித்த பின் அதிலிருந்து உணர்வு ரீதியாக விலகிய பின்னர் சில நாட்கள் கழித்து எவருடைய கதையையோ வாசிப்பது போல் வாசித்து பார்க்கும்போதும் அக்கதையில் வசீகரம் நீடிக்கிறதா என நோக்குவது கதையை பிரசுரிப்பதற்கு முன்பான முக்கியமான கட்டம். இணையமும் சமூக ஊடகமும் என் அனுபவத்தில்  என் கவனத்தை, தொடர் வாசிப்பை, சிந்தனைத் தொடர்ச்சியை அறுபடச் செய்கிறது. சமூக ஊடக பிம்ப பரிபாலனம் நம் நேரத்தை விழுங்கி விடுகிறது. ஆனால் அதைவிட்டு முற்றாக அகன்றுவிடவும் முடிவதில்லை.  வெகு சில ஆளுமைகளே சமூக ஊடக செயல்பாடுகள் வழியாக தங்கள் படைப்பூக்கத்தை தக்கவைத்து கொள்கிறார்கள். அதற்கான மனத் திண்மையும் மன அமைப்பும் இருந்தால் அத்தகைய வழியைத் தேர்வு செய்யலாம். இல்லையேல் புத்தரின் மத்திம மார்க்கத்தை தேர்ந்து கொள்வதே சிறந்தது. 

கதைக்கான அளவைகள் மாறி வருகின்றன. கதையின் வடிவமும் உட்பொருளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அவற்றின் ஓர்மை சிதறும்போது வடிவச் சோதனைகள் துருத்தித் தெரியும். இத்தகைய சூழலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி- இவ்வடிவம் இக்கதைக்கு மேலதிகமாக என்ன அளிக்கிறது? முதன்மையான வாசகனே தேர்ந்த எழுத்தாளன் ஆக முடியும். இக்கேள்வியை எழுத்தாளனுக்குள் இருக்கும் வாசகன் நேர்மையாக எழுப்பிக்கொண்டாலே போதும். 

எத்தகைய கதையை எழுத வேண்டும்? தற்காலத்தின் பொருத்தப்பாடுள்ள கதைகளை எழுத வேண்டும் எனச் சொல்வது எளிது. ஆனால் அத்தகைய எளிய சூத்திரங்கள் ஏதுமில்லை. சிலரின் அகம் இன்றிலிருந்து நேற்றை நோக்கியே திறந்திருக்கும். ‘நினைவேக்க’ கதைகள் என புறம்தள்ளிவிட முடியாது. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில் எளிய மனிதர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக கதைகளை எழுதுவேன் என்றார். ‘நினைவேக்க’ கதைகளின் சிக்கல் என்பது அதில் தனித்துவம் உள்ளதா? ஒருவகையில் இவ்வகைக் கதைகள் காலத்திற்கு எதிராக தன் நினைவுகளை நிறுத்தும் போராட்டம். மலேசிய இலக்கியம் வழியாகவே ‘நினைவேக்க’ கதைகள் குறித்த எனது பார்வை மாறியது. அழிந்து கொண்டிருக்கும், மாறிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்நிலையில் காலத்தை நிறுத்தி ஆவணப்படுத்த வேண்டியதது தேவையாகிறது. அண்மையில் வு மிங் யி எனும் தைவானிய எழுத்தாளரின் ‘stolen bicycle’ நாவலை வாசித்தேன். சைக்கிள் நம் வாழ்வில் புகுந்து ஒரு நூற்றாண்டுகாலம் இருக்கலாம். தைவானின் வெவேறு காலகட்டத்து சைக்கிள்களின் வரலாறின் வழி அத்தேசத்தின் வரலாறை, அவர்களின் குடும்ப வரலாறை காட்டிச் செல்லும் நாவல். சட்டென யோசித்தபோது தமிழ் மகனின் வெட்டு புலி நினைவுக்கு வந்தது. ஒரு தீப்பெட்டியின் அட்டைவழி தமிழக சமூக வரலாறை பேசிய நாவல். பொருளியல், சமூக தளங்களில் நேரும் மாற்றங்கள் நம் அகத்தை வடிவமைக்கின்றன. ஜார்ஜ் சாண்டர்சின் ‘persuasive nation’ நாம் எல்லாம் நுகர்ச்சிக்காக நிர்பந்தப்படுத்தப் படுகிறோம், பழக்கப் படுகிறோம் என்பதை புனைவாக்குகிறார். நாம் வாங்கிக் குவிக்கும், சேகரிக்கும் பொருட்கள் நம் வாழ்வை, நம் அகத்தை மாற்றியமைக்கின்றன. பருவ மாற்றம், சூழலியல் களம் சார்ந்து நாம் எழுதுவதற்கு மிகப்பெரிய களம் உள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி தனி மனித உறவுகளில் என்னவிதமான இடையீட்டை செய்துள்ளது? அதை சமன்செய்ய நாம் என்ன யுத்தியைக் கடைபிடிக்கிறோம்? ஒரு உதாரணத்தைச் சொல்லலாம், என்னுடன் யுவ புரஸ்கார் விருது பெற வந்திருந்த மலையாள எழுத்தாளர் அமல், நாவலுக்காக அவ்விருதைப் பெற்றார். அவருடைய நாவலின் கதையும் களமும் சுவாரசியமானது, அசல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அவருடைய சொந்த கிராமத்தில், சகோதரனின் நண்பன் ஒரு ஃபேக் ஐடி வழி தன்னை அப்போல்லோ மருத்துவமனை மருத்துவர் என்றும், தான் பிறந்து வளர்ந்த கேரள கிராமத்திற்கு மருத்துவமனை கட்டுவது தன் கனவு என்று வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் பேசி மிகப்பெரிய தொகையை சேகரித்துள்ளார். இவ்விவகாரம் வெளிப்பட்டு காவலர்கள் குறுக்கிடுகிறார்கள். எழுத்தாளரின் சகோதரனின் ஐபி முகவரி அதில் தொடர்பு பட்டிருந்ததால். மொத்த குடும்பமும் காவலர் அரணிற்குள் வர நேர்கிறது. ஒரு கிராம அளவில் அவர்கள் இந்த சிக்கலால் என்ன மாதிரியான இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதே நாவலின் கருப்பொருள். இந்தக் கதையின் வழி எனக்குள் பல கேள்விகள் எழும்பின. ஏன் நமக்கு ஃபேக் ஐடிக்கள் தேவையாய் இருக்கின்றன? பத்திருபது பதில்கள் சொல்ல முடியலாம். அவை நம் சிதறுண்ட சுயத்தின் சாயலைக் கொண்டவையா? விளையாட்டிற்காக ஒன்று, வீராவேசமாக பொங்குவதற்கு ஒன்று, காமம் சார்ந்த தேவைகளுக்கு ஒன்று, ரகசியமாக உளவு நோக்குவதற்கு ஒன்று..இப்படி. இவை நம் அசலான சுயத்துடன் மோதல் கொள்ளும்போது அது என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது? மூன்றாண்டுகளுக்கு முன் மரணித்த என் நண்பனின் ஃபேஸ்புக் கணக்கை அவனுடைய அக்கா நிர்வகிக்கிறார். அவ்வப்போது அவனுடைய சுவற்றில் நினைவுகளை பகிர்வார். அவனுடைய புகைப்படங்களை, அவனுடைய ஸ்டேடஸ்களை பகிர்வார். அவனுடைய நினைவுநாள் அன்று அவன் பக்கத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். அது மட்டுமில்லை என்றால் தொடர்பறுந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கும் நம் கணக்கற்ற நண்பர்களில் ஒருவன் என்றே நான் அவனை எண்ணியிருக்கக் கூடும். அவன் உண்மையில் மரித்துவிட்டானா என்றொரு துணுக்குறல் ஏற்பட்டது. யுவால் நோவா ஹராரி அவருடைய ‘சேப்பியன்ஸ்’ நூலில், நாம் வெட்கப்பட வேண்டியதில்லை நம் அறிவியலும் தொழில்நுட்பமும் மரணமின்மையை இலக்காகக் கொண்டவையே என்கிறார். philosopher s stone, ரசவாதம், அட்டாங்க யோகம் என மரணமின்மையின் பாதை வரலாறு முழுவதும் கடினமானதாகத்தான் இருந்திருக்கிறது. தஞ்சை கோவிலின் சிற்பியும், சித்தன்னவாசலின் ஓவியனும் மரணமின்மையை அடைந்தவந்தான் ஆனால் அவன் தன்னை முன்னிறுத்தவில்லை. தன்னை ஊடகமாக்கிக்கொண்டு அவன் வழியே வெளிப்பட்ட கலையை விட்டுச் சென்றான். மரணமின்மைக்கான மேம்பட்ட வழி கலைச் செயல்பாடாகவே இருந்திருக்கிறது. இன்றைய சமூக ஊடகம் மரணமின்மைக்கான சாத்தியத்தை வெகுஜனப் படுத்தியிருக்கிறது. மரணமின்மையின் ஒருதுளியை நாம் ருசித்துவிட்டோம். நம் மரணமின்மைக்கான வேட்கை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட ஒரு அணுவின் மரணமின்மைக்கான விழைவு புற்று நோயாக ஆகிறது. ஏதோ ஒருவகையில் இவையிரண்டும் ஒன்றின் இருவேறு வெளிப்பாடுகளாக ஆகின்றன. சத்தியம் வாய்மை என காலம்காலமாக புகழப்பட்ட விழுமியம் வர்ணமிழந்து வெளிறி கரைந்து புலன்வயப்படாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. இவை நம் நவீன வாழ்க்கையின் சிக்கல். இத்தகைய சிக்கல்களும் சவால்களும் இல்லை என்றால் நவீன வாழக்கை என்ற ஒன்று இல்லை. வாழ்க்கையின் பொருளின்மை நம்மை கனமாக அழுத்துவதற்கு மனிதகுலம் இடைவெளி அளிப்பதில்லை. நாய்வாலை நிமிர்த்தும் பூதமாக நாம் பொருளற்ற புதிய சிக்கல்களை ஒவ்வொரு கணமும் உற்பத்தி செய்கிறோம். ஒரு புதிர் விளையாட்டு போல் அதில் ஈடுபடுகிறோம். சலிக்கச் சலிக்க வேறொரு விளையாட்டை உருவாக்குகிறோம். இவ்விளையாடுகளின் ஊடாகவே நாம் பரிணாமம் கொள்கிறோம். நம் காலத்தின் மெய்யியல் என்ன? அதன் கேள்விகள் என்ன? இவற்றை புனைவுகளின் ஊடாக கண்டடையவேண்டியது முக்கியமாகிறது.

சிறுவர் மலரின் கடைசி பக்கத்தில் எக்ஸ் ரே கண்ணன் ரே வுடைய படக்கதை வரும். ஒருவகையில் இலக்கியவாதிகளாகிய நாம் எக்ஸ் ரே கண் கொண்டவர்கள் தான். எல்லாவற்றையும் ஊடுருவிக் காண முயல்கிறோம். ஒரு மருத்துவனாக தோல் போர்த்திய உடலின் அழகை விட்டுவிட்டு எப்போதும் உள்ளிருக்கும் எலும்புகளைப் பார்ப்பது எத்தனை கடினமானது என நான் அறிவேன். ஆனால் எங்கோ கண்டடைதலின் இன்பம் நம்மை இயக்குகிறது. அதுவே நம்மை எழுத்தாளராக ஆக்குகிறது. ஊனக் கண்ணையும் ஞானக் கண்ணையும் கொண்டு நோக்கும் வாய்ப்பு நமக்கிருக்கிறது. வேறு எவருக்கும் கேட்காத குரல்கள், வேறு யாரும் செவிமடுக்காத கதைகள் நமக்கு மட்டும் கேட்கின்றன. இது நமக்கான உள்ளார்ந்த அழைப்பும் கூட. கதைகளே எழுத்தாளனின் ஆன்மீக ஈடேற்றத்திற்கான சாதனம். எழுதுவோம். 
வாழ்த்துக்கள் நண்பர்களே.