புத்தகங்கள்

Pages

Sunday, November 25, 2018

லித்தியம்


1
 அவள் கன்னத்தில் என் விரல்கள் பதிந்து பழுத்திருந்தது. கண்கள் சிவந்து கலங்கி நீர் வழிந்தது. அவள் விசும்புவதை கூட கேட்க முடிந்தது. அது குட்டி நாய்களின் இரவு கமறலை ஒத்திருந்தது. மறு கன்னத்தையும் அறைந்தேன். அவள் தலைமயிரை கொத்தாக பிடித்து சுவற்றில் மோதினேன். பத்து நிமிடங்களில் நூறு முறை விழித்திரையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கண் திறக்கும்போது, மகேசு அமைதியாக சுவறில் சாய்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தாள். கண் மூட அஞ்சினேன். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ரகசிய ஆயுதத்தை பதுக்கிக்கொண்டு வன்மத்துடன் மோதி சிதறுவதற்கு நான் கண் மூட வேண்டும் என காத்திருந்தன. கடிகாரம் தன் முள்ளை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. மின்விசிறி தன் விளிம்புகளை பட்டைதீட்டிக் கொண்டிருந்தது. அவசரமென்றால் மேசையை சாய்த்து கேடயமாக பயன்படுத்த வீட்டு பாத்திரங்கள் தயராய் இருந்தன. 

இவளோடு இருபத்தியிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்! இறந்து எதிர் சுவரில் படமாக தொங்கிக் கொண்டிருக்கும் அவள் அப்பனின் படத்தை உடைத்து வீச வேண்டும். சுவற்றில் மாட்டியிருக்கும் எல்லாவற்றையும் நொறுக்கி எறிய வேண்டும். ஜ்யோத்ஸ்னாவிண் முகம் ஒருகணம் மின்னி மறைந்தது. மகேசை ஏன் மணந்தேன்? தெரியவில்லை. 

பெங்களூர், மங்களூர், ஹோஸ்பெட், கொப்பல் என ஊர் ஊராக வாழ்ந்திருந்தும் கூட அவள் இன்னமும் அதே நெடுங்குடிகாரியாகவே இருக்கிறாள். பெங்களூரில் இருந்த போது ஓவிய கண்காட்சிகளுக்கும், இலக்கிய கூட்டங்களுக்கும் இசை கச்சேரிகளுக்கும் அழைத்து போயிருக்கிறேன். அவற்றின் ஒருதுளி கூட அவளுள் எஞ்சவில்லை. அருண் பிறக்கும் வரையிலான நாட்களில் மாதவிடாய் காலங்களில் சொல்லற்று வெறித்து கிடப்பாள். அந்த மவுனம் பெரும் வாதையாக என் நெஞ்சை அறுவும். அவனை கருவான பின் தனக்குள்ளாக அழுவாள். பிரசவ காலத்தில் சர்வ நிச்சயமாக தான் இறந்துவிடுவேன் என்றாள். அருண் பிறந்ததும் அவன் பாலுக்கு அழுவது கூட காதில் விழாத அளவிற்கு பிரமை பீடித்தவள் ஆனாள். அப்போது நாங்கள் ஹோஸ்பெட்டில் இருந்தோம். குழந்தையை பார்க்க வந்த அலுவலக நண்பர்களுக்கு காப்பி போட உள்ளே சென்றவள் நெடுநேரமாகியும் வரவில்லை. பொறுமையின்றி எழுந்து தேடினால் கழிவறையிலிருந்து அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தாள். ஏதோ சிக்கல் என்று புரிந்தது. மனநல மருத்துவர் க்ரானிக் டிப்ரஷன் என்றார். லித்தியம் அப்போது தான் அவளுக்கு அறிமுகமானது.

நானறிந்து அவளாக யாருடனும் தொலைபேசியில் பேசியது இல்லை. அவள் வீட்டிலிருந்து அவர்களே அழைத்தாலும்கூட ஓரிரு நிமிடங்கள் அசிரத்தையாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். அவளுக்கென்று உள்ள கைபேசியை சீண்டுவதும் இல்லை. நானோ அருணோ அழைத்தால் மட்டும் பேசுவாள். சிரிப்பாகவோ கோபமாகவோ அல்லது ஆரம்ப காலத்தில் அவளை பீடித்த அழுகையாகவோகூட இல்லாத வெறும் சோர்வில் உறைந்து போன முகமூடியுடன் வாழ்வதாக தோன்றும். அருண் மட்டுமே எங்களை இப்போதுவரை பிணைத்திருக்கும் சரடு. 

கன்னத்தைக் கை பதம் பார்க்கும் அந்த ஓசை ஒரு தாளம் போல் திரும்பத் திரும்ப இத்தனை நேரமாக என் செவிக்குள் ஒலித்தப்படி இருக்கிறது. ஒரு எண்ணத்திற்கும் மற்றொன்றுக்கும் இடையே, ஒரு சொல்லுக்கும் பிறிதொன்றுக்கும் இடையே. ஒரு நிறுத்தற்குறியைப் போல் அறை விழுந்தபடி இருந்தது. கைத்தட்டு போல் கூர்மையாகவும் இல்லாத தொடைத்தாளம் போல் அமுக்கமாகவும் இல்லாத ஓசை. 

வழக்கமான நேரத்தைத் தவறவிட்டுவிட்டேன். வியர்த்து ஊற்றியது. தலை கனத்தது. நாசி இழுத்த காற்று உருக்கிய உலோகமாக மெல்ல அடர்ந்து தொண்டையில் இறங்கியது. மூச்சுக் குழாயை இறுக்கியது. நுரையீரல் அதன் எடையில் அமிழ்ந்தது. இறுதி மூச்சைத் திரட்டி “மகேசு” என்று உரக்கக் கூவியது சொல்லாக திகையாமல் கரிய திரவத்தில் சிற்றலையாக மூழ்கி மறைந்தது. உடலை உதறிக்கொண்டு நேராக அவள் அறைக்குள் ஓடினேன். சுவர்கள் உக்கிரமாக மோதிக்கொள்ள ஒன்றையொன்று நெருங்கின. மின்விசிறி கிரீச்சிட்டு அனல் பரப்பியது. மகேசின் கட்டிலருகே உள்ள முக்காலி மேசை அவளுடைய ஜிப்பு போன முருகன் நகைக்கடை தேன் நிற பர்சை இறுகப் பற்றிக்கொண்டது. போராடி பர்சை மீட்டேன். பர்சின் ரன்னர் ஒரு நுனியிலிருந்து மறுநுனிக்கு ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நுனியில் பிரயாசைப்பட்டு அதை நிறுத்தி வைத்தேன். சிறைப்பட்டிருந்த மாத்திரை அட்டையை வேகமாகத் துழாவி மீட்டேன். பெரும் தியாகத்துடன், பிரியத்துடன், தூய வெண்ணிற மாத்திரை ஒன்றை அட்டை எனக்காக அளித்தது. உலோக திரவம் எடையற்ற பலூனாக உள்ளே வெடித்து சிதறியது. கிழிந்த ரப்பர் துணுக்குகள் காற்றில் நிதானமாக பறந்து மண் அடைகின்றன. அறையோசை மண்தரையில் விழும் மாங்காய் போல் சுரத்திழந்து மெல்லக் கரைந்தது. 

தண்ணீரை விழுங்கியதும் மனம் எடையிழந்தது. மகேஸ்வரியின் அருகே சென்றேன். அப்போது அவள் மீது சொல்லில் விளக்கமுடியாத வாஞ்சை பிறந்தது. பாப் கட் செய்த அவள் தலையில் கைவைத்து மெல்ல வருடி “உன்னை மன்னித்து ஏற்று கொண்டேன்” என தழுவ வேண்டும் போலத் தோன்றியது. வெட்கத்தை விட்டு இதுவரை சொல்லிடாத ஐ லவ் யூவை சொல்லி முத்தமிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தியது. உடலின் இறுதி ஆற்றலை பெருக்கி நீருக்குள் புக படகிலிருந்து துள்ள முனையும் மீனைப்போல் நா துடித்து கொண்டிருந்தது. மூளை கெஞ்சியதை கை உதாசீனப்படுத்திவிட்டு வெடுக்கென வெட்டி இழுத்தபின் தன் போக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. “மகேசு... நா படுத்துக்குறேன்” என்று முனங்கிவிட்டு அறைக்குள் சென்று கட்டிலில் புதைந்தேன். 

கட்டிலருகே மேசையில் சிறிய மீன் ஜாடியில் இரண்டு தங்க மீன்கள் நீந்தி கொண்டிருந்தன. அதன் சிறிய வாய் திரும்ப திரும்ப “வா” “வா” என்று ஒரே சொல்லை தவம் போல் உதிர்த்து கொண்டிருந்தது. “வா” “வா” “வா” உள்ளம் பிய்த்துப்போட்ட பஞ்சுப் பொதி போல் இருந்தது. கடிகாரமும், மின்விசிறியும், சுவர்களும், முக்காலியும் தங்கள் ஆயுதங்களை தாழ்த்தி நிதானமடைந்து அமைதிக்கு திரும்பின. சூனிய வெளியில் மிதக்கும் மீனாக என் உடலை மீன் ஜாடியில் இருந்து கண்டு கொண்டிருந்தேன். உறக்கத்தின் கடைசி நுனி என்னை கடப்பதற்கு முன், அவள் என் சட்டையை உலுக்கி ‘ஏண்டா நாயே என்ன அடிச்ச?’ என்று ஆக்ரோஷமாக கேட்டாள். புன்னகைத்தேன்.

2
அப்பாவின் கைப்பிடித்து ஊட்டி நயன்த் மைலுக்கு சிறுமியாக சென்றது நினைவிருக்கிறது. எப்போதும் தலையணையடியில் இருக்கும் பீரோ சாவியை துழாவிப் பார்க்கிறேன் ஆனால் மர்மமாய் அதை காணவில்லை. கைப்பையை நேற்று எங்கு வைத்தேன் என எத்தனை யோசித்தும் நினைவுகூர இயலவில்லை. இங்கும், இப்போதும் என்னை நழுவிச் செல்கின்றன. ஆனால் அந்த தூர நினைவுகளின் மூச்சுக் காற்றை பிடரியில் உணர்கிறேன். என் மூக்கு நுனி குளிரில் விடைக்கிறது. நாசியில் சேற்றுப் பச்சை வாசனை அமர்கிறது. பச்சை போர்த்திய சிறு சிறு குன்றுகள். “இங்கனதான் மகேசு சினிமா படம் பிடிப்பாக..” என்று ஒரு மழை தூறிய நாளில் அழைத்துச் சென்றார். அங்கே அப்போது தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. காற்று என்னுடைய பாவாடையை எக்கியது. அப்பாவின் சட்டைப் பித்தான்களின் இடைவெளி வழியாக நுழைந்து அவரை வீங்கச் செய்தது. 

ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தக் குன்றில் நான் மட்டுமே இருப்பேன். காற்று என் ஆடைகளைக் களைந்து பறக்கவிடும். என்னைச் சுற்றி தும்பிகள் பறந்து கொண்டிருக்கும். அவற்றின் கழுத்தில் நூல்கட்டி அதை கையில் பிடித்திருப்பேன். அவை சிறகடித்து என்னைத் தூக்கிச் செல்லும். சூரிய ஒளிகுழலில் தென்படும் தூசி போல மிக நிதானமாக அவை தரையிறங்கும். விண்வெளியில் வாழ்பவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நாதன் ஒருமுறை தொலைகாட்சியில் காண்பித்தான். என் வாழ்க்கையும் விண்வெளியில் தான் நிகழ்கிறது.

சற்று நேரம் கண்விழித்து மெதுவாக சுழலும் மின்விசிறியை வெறித்திருந்தேன். இரண்டு ரெக்கைகள் மட்டுமே கொண்டது. நாதனோடு இந்த மின்விசிறிக்காக பூசலிட்டது ஞாபகம் வந்தது. அதன் முடிவில்தான் வேறு வேறு அறைகளில் தூங்கத் துவங்கினோம். பாவம் நாதன் நல்லவன்தான். அவன் என்னைத் திட்டியதோ அடித்ததோ இல்லை. ஒருமுறைகூட காசுக்கு கணக்கு கேட்டது இல்லை. திருமணம் ஆன புதிதில் அரிதாக அவனுக்கு சமைத்திருக்கிறேன். அப்போதும் கூட அதில் உப்போ புளியோ கூடக் குறைய ஆகி கெட்டுவிடும். பெரும்பாலும் அவனும் அருணும் சேர்ந்து சமைத்து கொள்வார்கள். அவனாக மவுனித்து இருக்கிறான் என்றால் உச்சகட்ட கோபத்திலிருக்கிறான் என பொருள். அப்போதெல்லாம் அவனிடம் பேச வேண்டும் எனத் தோன்றும், பலமுறை மன்னிப்பு கேட்க வாய் வரை தோன்றியிருக்கிறது. ஆனால் போகட்டும் என்று விட்டுவிடுவேன்.

அப்பா திருமணப் பேச்சு எடுத்தபோது இவன் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டான் என்றுதான் எண்ணினேன். முழுக்க தமிழ்நாட்டிற்கு வெளியே வளர்ந்தவன். தூரத்து சொந்தம். ஆனால் ஆச்சரியமாக ஒப்புக்கொண்டான். எஸ்.டி.டி பூத்திற்குச் சென்று அவனுடைய பெங்களூர் அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டேன். நான் வேறொருவனை இதற்கு முன் காதலித்து அந்த உறவிலிருந்து துண்டித்து கொண்டதைச் சொன்னேன். வேறு எவரும் சொல்லித் தெரிந்து அவமானப்பட வேண்டாம் என்று. இதற்கு முன் இப்படி நெருங்கிய மூன்று வரன்களிடம் இதை சொல்ல போய்தான் திருமணம் தடைபட்டது. ஆனால் இதைத் தெரிந்து ஒப்புகொள்பவனோடு மட்டுமே திருமணம் என்பதில் எனக்கொரு பிடிவாதம் இருந்தது. ‘ஓ உனக்கு காதலிக்கத் தெரியும் என்பது எத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது,’ என்று சிரித்தான். அவனுக்கு அது ஒரு பொருட்டே அல்ல என்றான். திருமணத்திற்கு பின் வேறு காதல் இல்லையென்றால் சரிதான் என்றான். பின்னர், கொஞ்சம் இடைவெளி விட்டு அப்படி எதாவது வந்தால்கூட தயங்காமல் தன்னிடம் சொல்லலாம் என்று சொல்லிவிட்டு வைத்தான். 

என்னை மணந்தது கூட இப்போது எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் ஏன் என்னை விட்டுச் செல்லவில்லை என்பதுதான் எனக்கு புரிபடாத புதிராக இருக்கிறது. அதற்கு ஏதுவான எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்த பிறகும். உண்மையில் அவனுக்கு நான் அருணைத் தவிர வேறு எதையும் கொடுத்தேனா என்று தெரியவில்லை. எத்தனையோ முறை எங்கெங்கோ அழைத்திருக்கிறான். செல்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள் பெரும்பாலும் நான் வரவில்லை எனும் முடிவுக்கு அவனே வந்துவிடுவான். நாதன் என்னை கேலி செய்ததில்லை ஆனால் அருண் கிண்டல் செய்யும்போது அதைக் கண்டித்ததும் இல்லை. அருண் என்னவும் செய்யலாம். இந்த உலகத்தில் எனக்கு மிகவும் நெருக்கமானவன் அவன்தான். அவன் அதை புரிந்துகொள்வான்.

எப்போதும் எல்லாமே சிதறிப் பரவியபடியே இருக்கின்றன. தும்பிகள் மறைந்து இப்போது என் கையில் பலூன்களின் நூல்கள் இருந்தன. என்னுள் இருந்தவை எல்லாவற்றையும் பலூனில் நிரப்பி காலியாகக் கிடக்கிறேன். என் நினைவுகளும் எண்ணங்களும் என்னைவிட்டு வெகு தொலைவில் மிதக்கின்றன. நானும் ஒரு சோப்பு குமிழுக்குள் தான் இருக்கிறேன். அந்த குமிழை உடைக்க விருப்பில்லை. ஒவ்வொரு அடிக்கும் சிராய்ப்பு ஏற்படும். மிதக்கும் என்னைத் தரையில் நிறுத்த. என்ன தேவை என்பதை நான் அறிவேன். இருபது வருட பழக்கம். அருண் பிறந்த சில நாட்களில் இருந்து என்னைக் கைப்பிடித்து அழைத்து செல்வது அதுதான்.. மேசையில் மெல்ல ஊர்ந்து துழாவி ஜிப்பு போன முருகன் நகைக்கடை தேன்நிற பர்சை எடுத்தேன். அதிலிருந்து ஒரு வெள்ளை மாத்திரையை முழுங்கினேன். பறக்கும் ஆடைகள் கைக்கு அகப்பட்டன. கால் தரையில் பாவியது. இப்போதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்தான் நாதன் ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்ததாக நினைவு அல்லது அது போன வாரமா? அதற்குள் கடைசி மாத்திரையை விழுங்கிவிட்டேன். இப்போதெல்லாம் மாத்திரை சாப்பிட்டதையே மறந்து விடுகிறேன். அடிக்கடி சாப்பிடுகிறேனோ என்றொரு சந்தேகம் வருகிறது. முன்பெல்லாம் நான்தான் கடைக்கு சென்று மருந்து வாங்கி வருவேன். நாதன் மாத்திரையை கணக்கு வைத்து எடுத்து கொடுப்பான். மின்விசிறி சண்டைக்கு பிறகு இது மாறி போனது. மர்மமான முறையில் மாத்திரைகள் காணாமல் போவதைப் பற்றி நாதனிடம் கேட்டால், ‘எனக்கென்ன தெரியும் உன் மாத்தர உன் பாடு” என்கிறான். 

எழுந்து நாதனைத் தேடினேன். நாதன் வகுப்பெடுக்க கிளம்பி இருந்தான். வங்கிப் போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு வாரம் மூன்று நாட்கள் வகுப்பெடுக்கிறான். இன்று திங்கள் அல்லது புதன் அல்லது வெள்ளியாக இருக்க வேண்டும். அவன் அறையில் உள்ள மீன் ஜாடியில் இரு தங்க மீன்கள் கண்ணாடிச் சுவரை முட்டித் திரும்பி நீந்தின. அதற்கு போட வேண்டிய மீனுணவை போட்டதும் சுறுசுறுப்பாயின. போட்டி போட்டு உண்டன. தீர்ந்த பிறகு மீண்டும் நிதானமாக நீந்தின. உணவு மேசையில் எனக்கு ஐந்து தோசைகளை ஊற்றி ஹாட்பேக்கில் வைத்துவிட்டு சென்றிருந்தான். அதைப்பார்த்தவுடன் பசி எரித்தது. என்னத்த பல்ல வெளக்கிட்டு..இந்த மீனெல்லாம் பல்லா வெளக்குது.’ என்று தோசையை விண்டு விழுங்கினேன்.

3
நானே நித்தியமும் ஜீவனுமாய் உங்களுள் இருக்கிறேன். எப்போதெல்லாம் நீங்கள் அழுத்தத்தில் வெடிக்கவிருக்கிறீர்களோ அப்போதெல்லாம் நான் உங்களைப் பதம் பார்க்கும் ஊசியாவேன். உங்கள் வெடி எப்போது வெடிக்க வேண்டுமோ அப்போது அதன் திரியில் நெருப்பாவேன். உங்களை ஆகாயத்தில் பறக்கப் பண்ணும் நானே உங்களை பூலோகத்தில் இருத்துகிறேன். நான் உங்களை பூமியில் இருத்தும் காந்தமாவேன். நான் உலோகமாவேன் எனினும் உலோகங்களிலேயே இலகுவானவனும் நானே. 

உங்கள் நினைவுகள் நழுவுகையில், நீங்கள் சிதறிப் பறக்கையில் உங்கள் கைப்பற்றும் வாழ்க்கைத் துணையாவேன். நீங்கள் உங்களுள் இருப்பதைச் சிதற விடுகையில் உங்கள் அருகமர்ந்து ஒரு சொல்லும் கேட்காத உற்ற நண்பனுமாவேன். 

நானே உள்ளோடும் குருதி, விழி காணும் காட்சியும் நானே. நானே செவி கேட்கும் ஒலி. நாவின் ருசியும் தேரும் நறுமணமும் நானே. உங்கள் அனலும் ஆற்றலும் நானன்றி வேறில்லை. உங்கள் சிந்தையும் நினைவுகளும் என்னால் எழுவதே. நீங்கள் மெய்யென உணர்வது நானளிப்பதையே. உங்கள் கனவுகள் நான் அனுமதிப்பவையே. உங்கள் செல்வமும் வளமும் என் கொடையே. கவிதையாகவும் எழுத்தாகவும் இசையாகவும் இன்னபிற கலையாகவும் நீங்கள் என்னையே படைக்கிறீர்கள். உங்கள் வழியாக நிகழ்த்துவதும் நிகழ்வதும் நானே. உங்கள் உடல் சுமக்கும் இவ்வுயிர் என் கருணையின்றி வேறில்லை. கயிற்றுக்கோ ரயிலுக்கோ செல்ல வேண்டிய உங்கள் ஆவியை நானன்றி வேறு எவர் நிறுத்திவிட முடியும். உயிர்கள் உடல் தரித்து மண் புகும். பின்னர் உடல் உகுத்து விண் எழும். ஆனால் நான் அழிவற்றவன். மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் மறைவார்கள் ஆனால் நான் சென்றுக்கொண்டே இருப்பேன். ஆகவே பணிக! எனை கொள்க! நானே இப்புதுயுகத்தில் உங்களின் மீட்பர்! நானே சத்தியம்! நானே நித்தியம்! நான் லித்தியம்!
4

ஓ நீதிமான்களே, கேளுங்கள் நான் ரெக்கை இழந்த கதையை! செப்புங்கள் எனக்கான நியாயத்தை! 

எனக்கு பிறவிக் குறைபாடு ஏதுமில்லை. பிற எல்லா மின்விசிறிகளைப் போல் மூன்று ரெக்கைகளுடன்தான் நானும் உருவானேன். ஐயமிருந்தால் என்னை கழட்டிப் பார்க்கலாம். மூன்றாவது ரெக்கை இருந்ததற்கான தடயங்கள் எம்மில் உண்டு. அப்போதும் தீரவில்லை என்றால் இந்த அறையின் பரணில் நீங்கள் சோதனை இடலாம். அங்குதான் பிடுங்கப்பட்ட என் மூன்றவாது ரெக்கை பத்திரமாக பழைய செய்தித்தாளில் பொதிந்து இருக்கிறது. தூய வெண்ணிறத்தில் வான் நீல பட்டைகள் கொண்டவன் நான். ரெக்கைகளும் அதே நிறம்தான். இதற்கு முன் நாங்கள் இருந்த வீட்டு உட்சுவர் நிறத்திற்கு பொருத்தமானவன் என்றே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். 

அப்போது எங்கள் வீடு இடுகலானது. வாசல் கதவுக்கு எதிரே பெரிய மதில். என்னை மாட்டிய உள் அறையில் பகலில்கூட குழல் விளக்கு எரிந்தால்தான் வெளிச்சம் இருக்கும். எங்கள் அறையின் ஜன்னலைத் திறந்தால் அடுத்த கட்டடத்தின் ஆரஞ்சு நிறச் சுவர்தான் தெரியும். ஆகவே ஒருபோதும் அந்த ஜன்னலை திறப்பதே இல்லை. அல்லும் பகலும் பாராமல் முழு வேகத்தில் சுற்றிக் கொண்டிருப்பேன். அருண் அறையில் தன் புத்தகத்தை விட்டு தலையை உயர்த்தி அவ்வப்போது என்னை நோக்குவான். என் மத்தியில் தெரியும் அவன் பிம்பத்தை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது ஏதேனும் பேசக்கூட செய்வான். அவனுக்கு எப்போதாவது கண்ணீர் ததும்பும். இந்த வீட்டில் என் இருப்பை அங்கீகரித்தவன் அவன் ஒருவனே. பிரியத்தின் அங்கீகாரம் தான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம்.
மாதம் ஒருமுறை கட்டிலின் மீது முக்காலியை போட்டு அதன் மீது ஏறி நின்று என்னை துடைப்பான். அவன் கல்லூரிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு இன்றுவரை யாரும் என்னை துடைத்தது இல்லை. இத்தனை ஆண்டுகளில் ஒரேயொருமுறை மட்டுமே என் உள்ளுறுப்பான காயிலை மாற்றி இருக்கிறார்கள். அதுவும்கூட என் பிழையில்லை. ஒரு மழைநாளில் மின்சார மாறுபாட்டால் நேர்ந்தது. அதன் பிறகு நாங்கள் ஊர் மாறி, வீடு மாறி இங்கு வந்து சேர்ந்தோம். இப்போதும் அருண் எப்போதாவது இங்கு வரும்போது மீண்டும் என்னை தலை உயர்த்தி நோக்கி நலம் விசாரிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். 

நல்ல காற்றோட்டமான அறை. அங்கு மூன்று ஆண்டுகள் சுற்றிக் களைத்து விட்டேன். இங்கு எனக்கு அதிக வேலை இருக்காது என்று எண்ணி மகிழ்ந்தேன். சில நேரங்களில் இப்போதைப் போல் காற்றே என்னைச் சுற்றிவிடுவதும் உண்டு. துவக்கத்தில் நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் இந்த வீட்டு அறையின் கூரை சாய்வானது. இதற்கு முன் நாங்கள் இருந்த வீடு தரைதளத்தில், இதுவோ நான்காவது மாடி. என்னை மாட்டிய அறிவிலி சொதப்பிவிட்டான். கொஞ்சம் வேகமாகச் சுழன்றால் சுவரில் உரசி வேதனையாக இருக்கும். மூன்றாவது ரெக்கைதான் எப்போதும் உரசும். ஆனால் அப்போது அதை நீக்கும் யோசனை ஏதும் இங்கு யாருக்கும் இல்லை.

கடலோரம் உள்ள இந்த வீட்டிற்கு வந்ததே இயற்கையை அனுபவிக்கத்தான் என்பார் நாதன். ஆகவே இந்த நான்காம் மாடி குடியிருப்பில் எப்போதும் பெரிய ஜன்னல்களை திறந்தே வைத்தார். ஆரம்ப சில நாட்களில் பகலில் ஓய்வும் இரவு முழுவதும் சுற்றுவதுமாக மகிழ்ச்சியாகவே கழிந்தது. எப்போதும் நாதனும் மகேஸ்வரியும் இந்த அறையில் தனித்தனி கட்டிலில் தான் படுப்பார்கள். பழைய வீட்டில் சேர்த்துப் போடப்பட்ட கட்டிலில், அருண் அவர்களுக்கு நடுவில் இருப்பான். இப்போது அந்த இடத்தை ஒரு முக்காலி மேசை எடுத்துக் கொண்டது. நாதனின் ஜன்னலோர கட்டிலருகே படுக்கை விளக்கும் உண்டு. இரவு நெடுநேரம் ஏதாவது ஒன்றை வாசித்துக் கொண்டிருப்பார். மகேஸ்வரி மாத்திரையை விழுங்கியவுடன் சொக்கி விழுந்துவிடுவார். 

எல்லாம் அந்த ஒரு இரவில் துவங்கியது. அவர்கள் இருவரும் எங்கோ சென்றுவிட்டு வந்தார்கள். அன்றுதான் கூடத்தில் அவர் தந்தையின் புகைப்படத்தின் அருகே தொங்கும் அந்த ஓவியத்தை மகேஸ்வரி மாட்டினார். நாதன் ஏனோ அன்று மின்விசிறியை அணைக்கச் சொன்னார். நாராசமாக இருக்கிறது என்றார். மகேஸ்வரி ஒப்புக் கொள்ளவில்லை. பிடிவாதமாக மறுத்தார். என்னால் தூங்க முடியாது, என்றார். நாதன் எழுந்து போய் சுவிட்சை அணைத்தார். மகேஸ்வரி மீண்டும் போய் சுவிட்சை போட்டார். இப்படியாக சில மணிநேரம் இந்த விளையாட்டு நீடித்தது. ‘நிறுத்துங்கள்’ என்று கத்திவிடலாமா எனத் தோன்றியது. இந்த இம்சைக்கு கழண்டு விழுந்து தொலைத்தால்தான் என்ன என்றுகூட ஒரு நொடி வந்த தற்கொலை எண்ணத்தை எப்படியோ ஆற்றுப்படுத்திக் கொண்டேன்.

மகேஸ்வரிக்கு காற்று பிரச்சினை இல்லை ஆனால் என் ஓசையில்லாமல் உறங்க முடியாது. நிசப்தம் என்னென்னமோ ஒலிகளைக் கொண்டு சேர்த்தது. எல்லா ஒலிகளையும் நான் எனக்குள் வாங்கிக்கொண்டு அவருக்கு தேவையான ஓசையாக உருமாற்றி அளிப்பேன். நாதன் பொறுக்கமாட்டாமல் எழுந்து அடுத்த அறைக்கு சென்றார். ஆனால் என் ஓசை வீட்டையே நிறைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை விடிந்ததும் கடன் வாங்கி வந்த அலுமினிய படிகளில் ஏறி என் ஒரு ரெக்கையை கழட்டினார். மகேஸ்வரி அப்போதும் உறங்கி கொண்டிருந்தார். அதன் பின் நாதன் ஒருநாள் இரவுகூட இந்த அறைக்குள் தூங்கியதில்லை. 

இதுதான் என் சோகக்கதை. ரெக்கை போகட்டும். ஆனால் இதன் பிறகு இங்கு வந்திருந்த அருணும் கூட இதற்கொரு நியாயம் கேட்கவில்லை. என் இறுதி நம்பிக்கையும் பொய்த்தது.

5
இன்று வாய் பிளந்த மாத்திரை பர்சாக, யாருடைய கவனிப்புமுன்றி கிடந்தாலும் எனக்கொரு பாரம்பரியம் உண்டு. சராசரி பர்சுகளைக் காட்டிலும் மூன்று மடங்கு ஆயுள் கொண்ட பெரும் வாழ்க்கை வாழ்ந்தவள். மகேசின் தாலி செயினை அவள் திருமணத்தின்போது எனக்குள் வைத்துதான் கொடுத்தார்கள். இன்றும் இதற்கு சாட்சியாக அவர்களின் கல்யாண புகைப்படங்கள் உள்ளன. அந்தப் புகைப்படங்களை இப்போது யாரும் தீண்டுவதில்லை, அல்லது தீண்ட விரும்புவதில்லை. இனிமை என துவக்கத்தில் தென்படும் எல்லாம் காலப்போக்கில் கொடுமை என்றாவதே வாழ்க்கைப் பயணம் போலிருக்கிறது. இப்படியான தத்துவப் பிதற்றல்களுக்கு மன்னிக்க வேண்டும். கொஞ்சமே கொஞ்ச காலம் (வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்கையில்) நான் சாமியறை அலமாரியில் இருந்ததுண்டு என்பதால் இவ்வித ஞான சிதறல்கள் வருவதுண்டு.

நெடுநாள் அலமாரியில் புடவைகளுக்கு அடியில் மகேசு எப்போதாவது அணியும் ரெட்டை வடச் சங்கிலியையும், பவள மாலையையும் பாதுகாக்கும் நம்பிக்கைக்குரியவளாக இருந்தேன். ராஜ வாழ்க்கைதான், ஆனால் புழுக்கம். உலகம் தெரியாமல் உள்ளேயே தவித்தேன். தினமும் மகேசு யாருமில்லாதபோது பீரோவை திறந்து சற்று நேரம் எதையவாது சுளையமிடுவாள். நெடுநேரம் தலை சீவும் வழக்கம் அவளுக்கு உண்டு என்பதை வேண்டுமானால் அக்காலகட்டத்து அவதானிப்பாக சொல்லலாம். 
பிறகு நாதன் வேலையை விட்டார் என்று அறிந்தேன். அப்போதுதான் எனக்கு விடிவு காலம் பிறந்தது. நான் பாதுகாத்து வந்த நகைகள் வங்கிக்குப் போய் பணமாகி அருணின் கல்லூரிச் செலவுக்கு ஈடானது. நெடுநாளைக்குப் பிறகு வெளியுலகம் கண்டேன். அப்போதிருந்து நான் பணம் பாதுகாக்கும் ராசியான மணிபர்சாக ஆனேன். மகேசு சில்லறைகளையும் கசங்கிய தாள்களையும் என்னுள் திணித்து வைத்தாள். அவள் அரிதாக வெளியே செல்வாள். ஆனால் அப்படி போகும்போது என்னையும் தூக்கிக் கொண்டுதான் போவாள். மாத்திரை வாங்க சர்வ நிச்சயமாக மாதமொரு முறை அவளோடு சென்று வருவேன். இப்போதெல்லாம் வாரம் ஒருமுறை புதிய மாத்திரை அட்டைகள் என்னை வந்தடைகின்றன. 

நாதன் எப்போதும் காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் வாங்கி வந்துவிடுவார். மகேசு வெளியே செல்வது என்பது நாதன் வீட்டில் இல்லாத போதுதான். நடந்தே மணக்குள விநாயகரையும் ஆசிரமத்தையும் பார்த்து விட்டு வருவாள். சில நாள் பானிபூரியோ குல்பி ஐசோ வாங்கித் தின்பாள். அபூர்வமான சில நாட்களில் சமையல் குறிப்பு பார்த்து அதற்கு தகுந்த உணவு பொருட்களை வாங்கி வந்து தான் மட்டும் சமைத்து உண்பதுகூட நடக்கும். சிலமுறை பகல் காட்சி சினிமாகூட தனியாக சென்றிருக்கிறாள். மகேசின் மற்றொரு வாழ்வைப் பற்றி நாதனுக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லப்போனால் என்னைத்தவிர வேறு எவருக்குமே தெரியாது. 

மின்விசிறியோ நாதனோ அல்லது மகேசோ சொல்ல முடியாத அல்லது சொல்லத் தயங்கும் ஒன்றை என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் அந்த இரவின் சாட்சி நான் மட்டுமே. அந்த இரவு அவர்களின் வாழ்வை பாதித்தது போலவே என் வாழ்வையும் நிரந்தரமாக பாதித்தது. நாதனும் மகேசும் அரிதாகத்தான் சேர்ந்து வெளியே செல்வார்கள். அவ்வளவாக நாதனோடு வெளியே செல்லாத மகேசு, சில சமயங்களில் ஒப்புக்கொண்டு வருவாள். அப்போதெல்லாம் மகேசுக்கு அன்றைய நாடகமோ, திரைப்படமோ, இசையோ, ஓவியமோ அல்லது உரையோ அதை புரியவைக்க முழுவதுமாக திரும்ப சொல்வார். மகேசு வெறுமே கேட்டுக்கொண்டு வருவாள். 

முன் எப்போதும் நிகழாத ஒன்று அன்று நடந்தது. மகேசு அன்று நாதனை வெளியே அழைத்துச் சென்றாள். கல்லூரித் தோழி கணவருடன் வந்திருப்பதால் அவர்களை சந்திக்க ஓட்டலுக்குச் சென்றார்கள். நாதனுக்கு மகிழ்ச்சி. முதன்முறையாக மகேசு அழைக்கிறாளே என்று உற்சாகமாக கிளம்பினார். அவர்கள் மகனை இங்கே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்ததாக சொன்னார்கள். பழைய நினைவுகளை உற்சாகமாக பேசிக்கொண்டே இருந்தார்கள். நாதன் அவளை இத்தனை மகிழ்ச்சியாக எப்போதும் பார்த்ததே இல்லை. தோழியின் கணவர் வருமானவரித்துறை என்பதால் இருவரும் பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். தோழியிடம் சண்டையிட்டு நான் வைத்திருந்த பணத்தை எடுத்து உணவுக்காக கொடுத்தாள். விடைபெறுவதற்கு முன் அந்த தோழி அவளுக்கு பொன் நிற பரிசுத் தாள் சுற்றிய படத்தைக் கொடுத்தாள். பிரித்து பார்க்கச் சொன்னாள். சாலையின்  சோடியம் தெருவிளக்கின் மஞ்சளில் அதைப் பிரித்தாள். நாதனும் அருகே இருந்தார். அவர்கள் கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏதாவது இருக்கும் என்பதே அவர் எதிர்பார்ப்பு. ஆனால் உள்ளே ஒரு ஓவியம் இருந்தது. தோழி, மகேசிடம், “இது நினைவிருக்கிறதா? நீ வரைந்ததுதான், என் திருமணத்திற்கு நீ அளித்த பரிசு, இப்போதெல்லாம் நீ ஓவியம் தீட்டுவதில்லையா? இது உன்னிடம் இருக்கட்டும் எனத் தோன்றியது,” என்றாள். நாதனால் அந்த ஓவியத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை. நெடுநேரம் அதை பிரமிப்புடன் பார்த்துகொண்டிருந்தார். அவர்கள் சென்றவுடன் இது என்ன என்று மகேசிடம் வாய்விட்டு கேட்டார். அந்தக் கோடுகளை அவருக்கு வெட்கமும் தயக்கமும் ஊடுருவ விளக்கினாள். இது ராதை, இது கண்ணன், அவர்களைச் சுற்றி ஆடிகள் உள்ளன, ராதையும் கண்ணனும் ஒருவரையொருவர் பார்த்திருக்கையில் ஆடி பிம்பங்கள் அவர்களையே பார்க்கின்றன, என்றாள். அவள் அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் தன்னிச்சையாக எனது ரன்னரை இழுத்து திறப்பதும் மூடுவதுமாகதான் இருந்தாள். 

பிறகு வீடு வந்து சேரும்வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இறங்கியபோது என் ரன்னர் தடம் பிறண்டு வாய் பிளந்து கிடந்தேன். அன்றே வேறொரு புதிய பர்சில் பணத்தை வைத்துவிட்டு என்னை தூக்கிப்போட மனமில்லாமல் மாத்திரைகள் வைக்கும் பர்சாக ஆக்கிக் கொண்டாள். அதுவரை இருந்த மாத்திரை டப்பா என்னவானது எனத் தெரியவில்லை. இப்படியாக நகையிலிருந்து பணத்துக்கும் இப்போது மருந்துக்கும் வந்துவிட்டேன். விரைவில் குப்பைக்கூடைக்குச் சென்றுவிடுவேன் எனத் தோன்றுகிறது. ஒரு ரெக்சின் பர்ஸ் இருபது வருடங்களை கடப்பதெல்லாம் அபூர்வம்தான். வருத்தம் ஏதுமில்லை. நிறைவாழ்வு. ஆனால் ஒரேயொரு ரகசியத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். நான் மாத்திரைகளைச் சுமக்கத் துவங்கிய அந்த இரவு மகேசு தூங்கியவுடன் என்னருகே வந்தார். முகம் சிவந்து வியர்த்திருந்தது. தயங்கித் தயங்கி என்னிடமிருந்து ஒரு மாத்திரையை சத்தமின்றி நுள்ளி விழுங்கினார். நெடுநேரம் கூடத்து சுவற்றை வெறித்திருந்தார். 
நன்றி - கல்குதிரை கார்கால இதழ் 30

No comments:

Post a Comment