புத்தகங்கள்

Pages

Friday, November 23, 2018

இம்பால் குறிப்புகள்

ஹோட்டல் கிளாசிக் கிராண்ட். அறை எண் 2005 ற்கு நாங்கள் சென்று சேர்ந்த அன்றே மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இங்கே யார் நம்மை அழைக்கப்போகிறார்கள் என்று எடுத்தபோது. கீழே வரவேற்பில் இருந்து 'என்னுடன் அங்கு வந்திருக்கும் விருந்தினர் ஒருவர் பேச விரும்புவதாக' சொன்னார். அப்போது நிற்காத ரயில்நிலையத்தை கடக்கும் வேகத்துடன் ஹிந்தியில் ஒருவர் பேசினார். பெசியவரையில் புரிந்தது ஒன்றேயொன்றுதான் லாபிக்கு வருகிறீர்களா, கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம். 
உருது எழுத்தாளர், கபிமோ, குர்மீத், நான்,  அமல், தீபா நசீர். ஷானாஸ்  ரெஹ்மான்
--
அக்டோபர் 26 மாலை விருது விழா இம்பால் 'பழங்குடி ஆய்வு மையத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 மாலையே நாங்கள் வந்து சேர்ந்துவிட்டதால் காலை எங்கவாது சுற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஜெயமோகன் பிரம்மாண்ட சிவனும் சிவ கணங்களும் இருக்கும் உணகொட்டி எனும் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அவசியம் சென்று வாருங்கள் பார்க்க வேண்டிய இடம் என்றார். பிறகுதான் அது திரிபுராவில், இம்பாலில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது தெரிந்தது. 
--
இம்பாலுக்கு செல்வதற்கு முன் நாங்கள் ஒருநாள் கொல்கத்தாவில் இருந்தோம். அங்கே அரிமளத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் வசிக்கிறது. பெரியப்பாவிற்கு நெருக்கமானவர்கள். ஒரு வண்டியில் எங்களை மொத்த கொல்கத்தாவையும் அழைத்து சென்று ஒருநாளில் காண்பித்தார் ஜெயந்தி. பிரமாதமான வீட்டுச் சாப்பாடு அங்கிருந்த மூன்று வேளையும். கொல்கத்தாவின் ஆகச்சிறந்த அனுபவம் என்பது வியேன் என்றொரு கடையில் சுடச்சுட ரசகுல்லா, சந்தேஷ், சம்சம் உண்டதுதான். இவை எல்லாவற்றையும் விட 'மிஷ்டி தோய்' என்றொரு இனிப்பு உண்டு. வாழ்நாள் அனுபவம். லசி என்பது தயிரான பின் இனிப்பு சேர்ப்பது. மிஷ்டி தோய் திரட்டுப்பால் போல வெல்லமிட்டு காய்ச்சி அதை உறைக்கு ஊற்றி தயிராக்குதல். எங்களுக்கு கொடுத்துவிட்ட ஒரு பானை மிஷ்டி தோயை விமானத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று செக்யுரிட்டியில் தடுத்ததால் விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தோம்.
--
அக்டோபர் 27 யுவ புரஸ்கார் விருதாளர்கள் ஏற்புரை நிகழ்ச்சி சிறிய அரங்கில் நிகழ்ந்தது. ஏற்கனவே அனுப்பி, சரிபார்க்கப்பட்ட உரையை வாசிக்க வேண்டும். அவ்வுரைகள் அங்கே அமர்ந்த அனைவருக்கும் நகலெடுத்து அளிக்கப்பட்டன. சரிபாதி உரைகள் ஆங்கிலத்திலும் மீதி உரைகள் ஹிந்தியிலும் இருந்தன. என்னருகே அமர்ந்திருந்த கன்னட எழுத்தாளர்களிடம் திரண்ட கருத்தை கேட்டுத் தெரிந்துகொண்டேன். சிலர் எழுதி வைத்த உரையை மாற்றியபோது முடிந்த வரை எழுதியதையே வாசியுங்கள் என அறிவுறுத்தப்பட்டார்கள். இது ஒருவகையான சென்சார்ஷிப் என்றே பட்டது.  
--
முதல்நாள் தொலைபேசியில் என்னை அழைத்தவர் குர்மீத் எனும் பஞ்சாபி எழுத்தாளர். இதுவரை ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். திரைத்துறையிலும் பணியாற்றுகிறார். எப்படியோ பேசிக்கொண்டோம். பிறகு அவர் நேபாளி, உருது, காஷ்மீரி மொழிகளில் விருது பெற்றவர்களையும் அழைத்திருந்தார். குர்மீத் உங்கள் சிறந்த கதைகளை கூறுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரும் உணர்ச்சிபூர்வமாக தத்தமது கதைகளை ஹிந்தியில் சொல்லத் துவங்கினார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்கள் கதைகளை என் விழி நோக்கி சொல்லத் துவங்கினார்கள். மொழி புரியாதபோதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன்னிப்பாக கவனிப்பதாக பாவனை செய்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அந்தக் கதையில் நுட்பங்களை சுட்டிக்காட்டி அவர்களை மேலும் குஷிபடுத்த முயன்றிருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். ஒருவகையில் அவ்வை ஷண்முகி டெல்லி கணேஷ் போல் அவர்கள் என்னை பார்த்திருப்பார்கள்.
--
அமல் நானும், கே.எல். தேசிய பூங்காவில்
லோக்டக் மிதக்கும் ஏரிகளை காணச் செல்லும் வழியில் கேபுள் லாம்ஜா தேசிய பூங்காவிற்கு (Keibul Lamajao National park) இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் தேசிய பூங்கா. இங்கு சங்காய் எனும் அரிய மானினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீட்டு பாதுகாக்கப் படுகிறது. நாற்பது சதுர கிமி பரப்பளவு கொண்டது. ஒரு சிறிய குன்றின் மீதேறி சென்றால், அங்கு அமைக்கப்பட்ட பார்வை மேடையில் நின்று மான்களை நோக்கலாம். கீழே சிறிய படகும் உண்டு. அதில் கொஞ்சம் தொலைவு சென்றுவரலாம். நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது காலை பத்துமணி இருக்கலாம். அப்போது எங்கள் கண் முன் பரந்த புல்வெளி விரிந்திருந்தது. அங்கிருந்த வழிகாட்டி இளைஞர் தொலைநோக்கி வழி பார்க்கச் சொன்னார். அப்போது புல் மறைப்பிற்கு அப்பால் ஒரேயொரு காதை மட்டும் காண முடிந்தது. அது எல்லா மான்களின், நாய்களின், கன்றுகளின் காதுகளைப் போன்றே இருந்தது. 
--
இலங்கை பயணத்தின்போது அற்புதமான ஒளியமைப்பில், அழகுணர்வுடன் அலங்கரிக்கப்பட்ட உணவகங்களில் சாப்பிடக் கிடைத்தது என்னவோ கட்டை கட்டையான பரோட்டாவும் கெட்டித்தயிரும் தான். நல்லவேளையாக இம்பாலில் அப்படியொன்றும் நிகழவில்லை. தாவ்ரத்தின்னிகளின் பாடு கொஞ்சம் கடினம்தான். எனினும் நாம் இங்கு நன்கு பழகிய வட இந்திய உணவுகளை அங்கும் பரிமாறினார்கள். ஒருநாள் மதியம் மட்டும் விழா அரங்கிலேயே மணிப்பூரி மதிய உணவு பரிமாறினார்கள். அங்கும் கூட செட்டிநாட்டில் செய்யப்படும் கவுணி அரிசி போன்ற ஒன்றை சிறிய பேப்பர் கோப்பைகளில் வைத்தார்கள். ரசவடை போன்ற ஒன்றும் மிகச் சுவையாக இருந்தது. குலாப் ஜாமூன் ஊடுருவல் வரவேற்கத்தக்கது என்றாலும் தடுத்து நிறுத்தவே முடியாது போலும். 
--
சாலைகளில் சர்வ சாதாரணமாக துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் நடமாடினார்கள். அவர்களை இயல்பாக கடந்து செல்வதற்கு மக்கள் முயன்றபடி இருக்கிறார்கள். நண்பர் கார்த்திக் புகழேந்தியின் உறவினர் இம்பாலில் ராணுவத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் அங்குதான் தங்கினார்கள். விமானநிலையத்தில் இருந்தே துப்பாக்கி சூழ தான் வலம்வந்ததாக சொன்னார். இம்பாலை விட்டு சற்று வெளியே வந்தால் கூட அதன் சாலைகள் தரம் மிக மோசமாக இருக்கின்றன. இப்போது விரிவாக்கம் செய்கிறார்கள். லோக்டக் செல்லும்வழி இருபுறமும் தகர குடிசைகள் அவர்களின் ஏழ்மையின் அடையாளமாக காண முடிந்தது. 
--
ஏற்புரையில் இந்தி மொழிக்கு விருது பெற்றவரின் உரை துணிச்சலாக இருந்தது என பலரும் அபிப்பிராயப்பட்டனர். இந்தி மொழிக்கு விருது பெற்ற ஆஸ்திக் வாஜ்பெயியுடைய தந்தை உத்யயன் வாஜ்பேயியும் ஒரு கவிஞர். மத்திய பிரதேசத்தில், போபாலில் வங்கிப் பணியில் உள்ளார் ஆஸ்திக். சாகித்திய அகாதமியின் பாரபட்சம் மற்றும் அரசியல்தான் அவருடைய ஏற்புரையின் பேசுபொருள். அவருடைய உரைக்கு மட்டும் சாகித்திய அகாதமியின் துணைத் தலைவர் மாதவ் பதினைந்து நிமிடம் விளக்கம் அளித்தார். வேறென்ன, சம்பிரதாயமாக, ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொன்னார்.
துணைத்தலைவர் மாதவ் 
--
குர்மீத் மற்றும் குழாமுடன் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மலையாள குரல் அருகில் கேட்டது. உண்மையில் அந்த நொடி நானடைந்த ஆசுவாசமும் மகிழ்ச்சியும் அளப்பறியாதது. மலையாளத்தில் நாவல் பிரிவில் விருது பெற்றவர் பெயர் அமல். சமூக யதார்த்தவாத கதைகளை எழுதுவதாக அவருடைய ஏற்புரையில் சொன்னார். மறுநாள் நாங்கள் லோக்டக் செல்லும்போது வண்டியில் ஒரு இடம் இருந்ததால் அவரையும் ஏற்றிக்கொண்டோம். சுதீர் அமலுடன் ஒட்டிக்கொண்டான். இப்போதும் அமல் கூறியது போலவே அவ்வப்போது 'ஆண ஆண' எனக் கூறுவான். அமல் சுவாரசியமான மனிதர். அவருடைய எளிமையையும் தயக்கத்தையும் கண்டு பலரும் 'இவன் எழுதி இருப்பான்?' என அவநம்பிக்கையுடன் பார்த்திருக்கக்  கூடும். ஆனால் என் கணிப்பு வேராக இருந்தது. இங்கே வந்திருப்பதிலேயே காத்திரமாக வாசித்திருக்கக் கூடியவர், எழுதியிருக்கக் கூடியவர் அமலாகத்தான் இருக்கும். கேரள எல்லையில் உள்ள தமிழக ஊர் ஒன்றில் தான் பொறியியல் படித்தார். பின்னர் சாந்தி நிகேதனில் கலை வரலாறு கற்று. அங்கே பரிச்சயமான ஜப்பானிய பெண்ணை காதலித்து சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது டோக்கியோவில் வசிக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கிராபிக் நாவல்கள் வெளிவந்துள்ளன. விருது கிடைத்த நாவலின் கதைச் சுருக்கம் சுவாரசியமானது. சமூக ஊடகம் கிராம அளவில் செலுத்தும் தாக்கம் தான் அதன் மையம். அவர் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதி இருக்கிறார். 
--
குர்மீத், துஷ்யந்த், ராணி முர்மு, பூஜா, நான், பாலசுதாகர் 
இரவு பத்து மணிக்கு உறங்கிக் கொண்டிருக்கும்போது அறையின் அழைப்புமணி ஒலித்தது. பாலசுதாகர் மவுலி, தெலுங்கு மொழிக்காக விருது பெற்றவர் அவருடைய தம்பியுடன் வந்து நின்றார். மவுலி உயிரியல் ஆசிரியர். கவிதைகள் எழுதுகிறார். சிறுகதைகளும் உண்டு. குடும்பத்துடன் இரவுணவு அருந்தும்போது தெலுங்கு போன்ற ஒன்றை நாங்கள் பேசுவதை கேட்டு ஆர்வமாகி என்னுடன் பேசுவதற்காக வந்தார். 'அவன் காட்டை வென்றான்' தமிழில் உள்ளது என்றேன். அவருக்கு ஜெயகாந்தனை தெரிந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் நிகழும் கவிதை கூடுகைகளுக்கு சென்று வந்திருக்கிறார். சிற்பி, சேரன் ஆகியோரை அறிந்துள்ளார். கிளம்பும்போது அவருடைய இரு கவிதை நூல்களை அளித்தார். தெலுங்கு பேசத் தெரிந்தும் படிக்கதெரியாத பாவியாகிய நான் அதை என் மாமியாருக்கு அளித்துவிட்டேன். அவருக்கு தெலுகு வாசிக்கவும் எழுதவும் தெரியும்.    
--
யுவ புரஸ்கார் ஏற்புரை நிகழ்வின்போது சமரக்னி பானர்ஜி (அல்லது பந்த்யோபாத்ய) ஒரு விஷயத்தை சொன்னார். சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளருக்கான பயணப் படியை பெற்றிருக்கிறேன் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி அப்படியொரு நிதியை அளிக்கிறது என்பதே தெரிய வந்தது. இப்போதும் அதை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று தெரியவில்லை. 
--
இந்த பயணத்தின் மிகச் சிறந்த அனுபவம் என்பது லோக்டக் பயணம் தான். இருபுறமும் சமவெளியில் கதிர்கள், அப்பால் மலைத் தொடர்கள். சென்றா எனும் சிறு தீவிற்கு சென்றோம். அங்கிருந்து மிகப்பெரிய நீர்நிலையான லோக்டக்கின் விரிவை காண முடிந்தது. துல்லிய நீலத்தில் வானும் அதை பிரதிபலிக்கும் நீரும், தூரத்து மலைகளும் ஒரு ஓவியத்திற்குள் இருப்பதான பிரமிப்பை அளித்தது. ஒரு படகு பயணம் சென்று மிதக்கும் தீவு ஒன்றில் இறங்கினோம். நிலம் நழுவுவதை ஒரு உவமையாக வாசித்திருக்கிறேன் அன்றுதான் அதை உணர முடிந்தது. நீர் மேல் மிதக்கும் தெர்மோகோல் மீது கால் வைப்பது போன்ற உணர்வு. நீர் தாவரங்களின் அடர்ந்த வேர் பரப்புகளால் பின்னப்பட்ட தரை. அதன் மீது சிறிய குடில் அமைத்து வாழ்கிறார்கள். எங்களுக்கு சுடச்சுட எலுமிச்சை தேநீர் கொடுத்தார்கள். நீரை கிழித்துக்கொண்டு படகு திரும்பியபோது பின்னால் எழுந்த நீர் கோடுகள் ஒரு மாபெரும் யானையின் மத்தகத்தை ஒத்திருந்தது. மொத்த ஏரியையும் உடலாக சூடிய நீலயானை, அதன் மத்தகத்தில் வெள்ளியலை பட்டை.
லோக்டக் - சென்றா தீவிலிருந்து 
--
பஞ்சாபி குர்மீத்திடம் கர்த்தார் சிங் துக்கலைப் பற்றி சொன்னேன்.அ வருடைய பவுர்ணமி இரவுகள் தமிழில் கிடைக்கிறது என்றேன். மனிதர் உற்சாகமானார். பெங்காலி சமரக்னியிடம் தாகூரைத் தவிர்த்து, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, தாரா சங்கர் பானர்ஜி, சுனில் கங்கோபாத்யாய ஆகியோர் எழுத்துக்கள் தமிழில் கிடைக்கிறது என்றேன். வியப்படைந்தார். கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் மற்றும் விக்கிரம ஹத்வாராவிடம் சிவராம் காரந்த், பைரப்பா, அனந்தமூர்த்தி, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவனூரு மகாதேவா, விவேக் ஷான்பாக் என பலரும் தமிழுக்கு அறிமுகம் என்றேன். அதுவும் விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் இங்கு நன்கு கவனிக்கப்படுகிறது என்றேன். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. சென்ற ஆண்டு எச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களை சந்தித்தையும் சொல்லிக்கொண்டிருந்தேன். மலையாள எழுத்தாளர் அமலிடம் தகழி, எம்.டிவி, சக்காரியா, பஷீர் எனத் துவங்கி கே.ஆர்.மீரா வரை தமிழுக்கு வந்ததை சொன்னேன். அவர் அசோகமித்திரனின் தண்ணீரை வாசித்திருக்கிறார். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவற்றை வாசித்திருக்கிறார். சாருவை அறிந்துள்ளார். நம் புதுமைபித்தன் கூட வேறு மாநிலங்களுக்கு சென்ற சேரவில்லை எனும் நிதர்சனம் என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது.

--
பஞ்சாபி குர்மீத் பார்ப்பதற்கு மிகுந்த வயதானவராக தோற்றமளித்தார். ஆனால் ஒல்லியான நெடிய உருவம்.கசன்சாகிசின் ஜோர்பாவிற்கு பொருத்தம். என் பிறந்த வருடத்தை கேட்டார். 1986 என்றேன். தான் 1989 என்று சொன்னார். நீங்கள் எல்லாம் என்னைவிட வயதில் மூத்தவர் ஆசியளியுங்கள் என கிண்டல் செய்தார். ஆனால் விருதாளர்கள் பற்றிய சிறிய தகவல் குறிப்பு உள்ள புத்தகம் எல்லோருக்கும் அளிக்கப்பட்டது. அதில் விருதாளர் பற்றிய தகவல், புத்தகத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் தொடர்பு தகவல்கள் உள்ளன. அதில் குர்மீத் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றிருந்தது.
--
புதுவை வெண் முரசு கூடுகைக்கு சென்றபோது நண்பர்கள் வைத்துக்கொடுத்த ராம்ராஜ் வேட்டி சட்டையை போடுவதென்று தீர்மானித்திருந்தேன். வேட்டியை கட்டும்போதுதான் தெரிந்தது அது நான்கு முழம் என்று.
-


லோக்டக் ஏரியின் மத்தியில் குடும்பத்துடன். 



யுவ புரஸ்கார் விருதையொட்டி இளம் எழுத்தாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது. அதற்காக கொங்கனி எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார். கர்நாடகாவில் கொங்கனி கன்னட எழுத்துருவில் புழங்குகிறது, கோவாவில் ஆங்கில எழுத்துரு பயன்பாடும் உண்டு, மகாராஷ்டிரத்தில் தேவநாகரி எழுத்துருவில் கொங்கனி புழங்குகிறது என்றார். உங்கள் ஊர் இலக்கியம் வளமாக உள்ளது. நாங்கள் இறந்து கொண்டிருக்கும் மொழியை இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறோம் என்றார். ஒரேயொரு கொங்கனி நாளிதழ் மட்டுமே உண்டு. சில வாராந்திரிகள், இலக்கிய சஞ்சிகைகள் உண்டு என்றார்.
--
நாங்கள் காங்க்லா கோட்டைக்கு சென்றபோது எங்களுடன் கார்த்திக் புகழேந்தியும் அவருடைய மனைவி சுபாவும் இணைந்து கொண்டார்கள். காங்க்லா கோட்டையில் நம் கேரள படகைப்போன்று நீளமான படகு மூன்று  சங்காய் மான் தலை போன்ற முகப்புடன் இருந்தன. பெரும் பச்சை புல்வெளி. மெல்லிய தூறலுடன் சற்று தொலைவு நடந்துவிட்டு திரும்பினோம்.
--
குஜராத்தி மொழிக்கு ஈஷா என்றொரு கவிஞருக்கு கிடைத்தது. அவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடக நடிகையும் கூட. குஜராத்தை சேர்ந்த பூஜா என்பவருக்கு நாடகத்திற்காக சிந்தி மொழிக்கான யுவ புரஸ்கார் கிடைத்தது. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளர், மேடை நாடக நடிகர். அனால் இருவருக்கும் மற்றொருவரை தெரிந்திருக்கவில்லை. கொங்கனிக்கு விருது பெற்ற வில்மா மங்களூரில் இருக்கிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
--
காஷ்மீரி எழுத்தாளர் தீபா நசீருடைய கணவர் கடைசி நேரத்தில் வரவில்லை. அவருடைய மகனுக்கு ஏறத்தாழ சுதீர் வயதிருக்கும். ஒற்றையாளாக சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். சுதீருக்கும் அவனுக்கும் வேறு அவ்வப்போது தள்ளுமுள்ளு. விருது நிகழ்வு முடிந்தவுடன் வாயிலில் யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருந்த பதாகையில் இருந்து அவருடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை பிய்த்து கொண்டிருந்தார். அப்போது நான் மட்டுமே கீழே இருந்தேன். என்னிடம் 'நீங்களும் உங்களுடையதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். 'நன்றி.பிறகு' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
--
உருது எழுத்தாளர் அலிகார் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்திய உருது இலக்கியத்தைக் காட்டிலும் பாகிஸ்தானிய உருது இலக்கியம் அபார வளர்ச்சி அடைந்து வருவதாக சொன்னார். சிறுகதைகளுக்காக விருது கிடைத்தபோதும் அவர் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவருடைய பெயரைக் கொண்டு ஷானாஸ் ரெஹ்மான் ஆண் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயத்ரத் ஷுணா, அமல், நான் 
--
விழா அரங்கில் சாகித்திய அகாதமி புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. எண்ணியது போலவே பிறருக்கு சுட்டிக்காட்டும் படியான தமிழ் மொழியாக்கங்கள் ஏதுமில்லை. சுனில் கங்கோபாத்யாய அவர்களின் பெரு நாவல் ஒன்று இரு பாகங்களில் மலிவான விலையில் ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. அதைத் தவிர இராமாயண, மகாபாரத மருவுகள் பற்றிய தொகுப்புக்கள் வாங்கிக்கொண்டேன்.
--
லோக்டக் செல்லும் வழியில் ஜப்பான் போர் நினைவகம் ஒன்றுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்ற போர் முனைகளில் ஒன்று. ஜப்பான் அரசு கட்டிக் கொடுத்தது. மூன்று பெரும் செந்நிற பாறைகளை வைத்திருக்கிறார்கள். ஜப்பான், இந்தியா மற்றும் பிரித்தானியாவை குறிப்பவை என ஓட்டுனர் சொன்னார். நினைவுநாளில் அந்த அந்த குடும்பத்தினர் அந்த தேசத்திருகுரிய கல்லில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள் என்றார்.
--
நேபாளி எழுத்தாளர் சுடேன் கபிமோ அவர் மொழிக்கான சாகித்திய அகாதமி பொறுப்பாளர் அவரை அழைத்து விருது பற்றி சொல்லவில்லை என வருந்தினார். அப்போது காஷ்மீரி எழுத்தாளரும் சேர்ந்து வருந்தினார். காரணம் காஷ்மீரி பொறுப்பாளருக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்காமல் தனக்கு கிடைத்ததினால் வருத்தம் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி தமிழக பொறுப்பாளர் நம்மையும் அழைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் விளங்கவில்லை.
--
எல்லா எழுத்தாளர்களும் ஹோட்டலில் சந்தித்து பேசலாம் என முடிவு செய்தோம். இரண்டு நாளும் அது சாத்தியமாகவில்லை. எப்படியோ அதற்குள் ஒரு சிறிய குழுக்கள் உண்டாகிவிட்டதை உணர முடிந்தது. இப்போது வாட்சப் குழு ஒன்று உள்ளது. அதிலும் பெரும்பாலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மொழி, பிராந்தியம், சாதி என நுட்பமான ஏதோ ஒன்று மனிதர்களை பிணைக்கவும் பிரிக்கவும் செய்கிறது.
--
இந்தி எழுத்தாளர் ஆஸ்திக் என் ஏற்புரை நன்று எனச் சொல்லி ஏதேனும் படைப்புகளை அனுப்ப முடியுமா எங்களுக்கு ஒரு இந்தி இதழ் உள்ளது அதில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம் என்றார். ஆஸ்திக் மற்றும் கன்னட எழுத்தாளருடன் ஆங்கிலத்தில் பேச முடிந்தது. மலையாளி மற்றும் தெலுங்கு எழுத்தாளர்களுடன் சரளமாக அவர்களுடைய மொழியிலேயே பேச முடிந்தது.
விக்கிரம ஹத்வாரா, நான், பத்மநாப பட் 
--
அமல் ஒரு ரஜினி ரசிகர். காலாவை ரஜினி ரசிகர்கள் சூழ ஜப்பானில் பார்த்ததாக சொன்னார். கன்னட எழுத்தாளர் விக்ரம் தமிழ் திரைப்படங்களை நேரடியாக பார்ப்பதாக சொன்னார். தமிழ் வெகுமக்கள் திரைப்படங்களின் வீச்சு நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. தென்னிந்தியா மொழிகளில் அதன் வீச்சு தெரிந்ததே. ஆனால் நேபாளி எழுத்தாளரும், ஹிந்தி எழுத்தாளரும் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதாக சொல்வது எனக்கே வியப்பாக இருந்தது.
--
ஏற்புரை நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து சாகித்திய அகாதமி செயலர் சீனிவாச ராவ் பேசும்போது தமிழில் இருந்து வந்த ஏற்புரை சர்ச்சைக்குரியதாக உள்ளது என அலுவலகத்தில் ஒரு சிறிய பரபரப்பு ஏற்பட்டதாக சொன்னார். காரணம் ஏற்புரையின் முதல் சில வரிகள். மொத்தமாக படிக்கும்போது உரையும் பொருளும் தளமும் மேலானதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
--
இளம் எழுத்தாளர் சந்திப்பிற்கு வந்திருந்த காஷ்மீரி கவி நல்ல உயரம் சிவப்பு. கார்த்திக் புகழேந்தி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்  ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாக சொன்னார்.
--
மலையாள மொழியிலிருந்து சிறுகதை வாசிக்க வந்திருந்த ஷிகாப் தீவிர கிரிக்கெட் வெறியர். இந்தியா மேற்கிந்திய தீவுகள் போட்டியை பார்த்துக்கொண்டு 96 உலககோப்பை நினைவுகளை பேசிக்கொண்டிருந்தோம். அரைநாள் பேசிவிட்டு ஒரு ஸ்லாம் புக்கை நீட்டி என்னைப்பற்றி எதாவது எழுதி கையெழுத்து இட்டு கொடு என்றார். வாழ்க வளமுடன்.
விக்கிரம ஹத்வாராவுடன் 
--
கன்னட எழுத்தாளர் விக்கிரம ஹத்வாராவுடன் உரையாடிய நேரம் முக்கியமானது என எண்ணுகிறேன். நம் நற்றிணையில் வந்திருந்த அவருடைய காரணம் கதை எனக்கு பிடித்திருந்தது. அதைப் பற்றியும் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் பேசினோம். ஏறத்தாழ எங்கள் பார்வைகள் ஒரேமாதிரி இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
--
பத்மநாப பட் கன்னட பிரஜாவாணி இதழின் சினிமா பக்கத்திற்கு பொறுப்பாக உள்ளார். சுருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது மீ டூ குற்றசாட்டு சூட்டி பரப்பரப்பானது. அதை வெளிகொணர்ந்த நிருபர் அவரே. ஏறத்தாழ சின்மயி வைரமுத்து விவகாரத்தில் சின்மயி எப்படியெல்லாம் பழிக்கப்பட்டாரோ அதுவே சுருதிக்கும் நிகழ்ந்ததாக சொல்லிக்கொண்டிருந்தார்.
--
சமஸ்க்ருதத்தில் யுவ புரஸ்கார் பெற்ற முனி ராஜ சுந்தர் விஜய்க்கு என் வயதுதான். அவர் விழாவிற்கு வரவில்லை. விசாரித்தபோதுதான் அவர் சமணத் துறவி என்பதை தெரிந்துகொண்டேன்.
--
மாமியார், அம்மா, மனைவி,சுதீர்- காங்க்லா கோட்டை ரோஸ் கார்டனில்- p.c karthik pugazhendhi
மணிப்பூரில் வைணவம் அதிகம் பின்பற்றப்படுவதாக சொன்னார்கள். அங்கே கோவிந்தாஜி கோவிலுக்கு சென்றோம். சரியாக நாங்கள் சென்ற நேரத்திற்கு அங்கு ஆரத்தி நிகழ்ந்தது. மூன்று சந்நிதிகள். ராதே கிருஷ்ணா, பூரி ஜகந்நாதர் மற்றும் கிருஷ்ணர் என அடுத்தடுத்து இருந்தன. அந்த கோவில் பூசகர்கள் தீவிர ஆசாரவாதிகள். அது ஏதோ ஒரு ஒவ்வாமையை அளித்தது. பிரசாதமாக ஒரு மலரை ஒரு பெண்ணிற்கு கொடுக்க அவளருகே வீசிவிட்டு சென்றார் பூசகர்.
--
யுவ புரஸ்காரர்களில் அநியாயத்திற்கு யுவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த ராஜஸ்தானி எழுத்தாளர் துஷ்யந்த் ஜோஷி. அவருடைய தந்தை முன்னரே சாகித்திய அகாதமி வாங்கியவராம். தனுஷ் பட பணக்கார அமுல்பேபி வில்லன்களில் ஒருவரைப் போல் தோற்றமளித்தார்.
--
காலை ஐந்து மணிக்கு எல்லாம் புலர்ந்து, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விடுகிறது. இரவுகளில் நல்ல குளிர். பகல்களில் வெப்பம் அதிகமில்லை. ஒருவித ஐரோப்பிய பருவநிலை எனச் சொல்லலாம்.
--
கிளம்புவதற்கு முன் கார்த்திக் புகழேந்தி உரையை கேட்டுவிட்டுத்தான் சென்றேன். மராத்தி, வங்காளி மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் ஏன் எழுதுகிறோம் என்பதைக் குறித்து பேசினார்கள். மூன்றுமே வெவ்வேறு வகையானவை. மராத்தி மொழியை சார்ந்தவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. கார்த்திக் புகழேந்தி உக்கிரமான உணர்வுகளை கடத்துவதாக இருந்தது.
--
விழா மேடை அழகாக இருந்தது. ஆனால் விழா அரங்கு படுமோசம். பழைய திரையரங்க நாற்காலிகள் போல் ஓட்டை உடைசல் நாற்காலிகள். வாசகசாலை அரங்குகள் இதைவிட நன்றாக இருக்கும் என கார்த்திக் சொன்னார்.
--
எஸ்தர் டேவிட் 
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எஸ்தர் டேவிட் எனும் பெண் எழுத்தாளர் நங்கள் பயணித்த விமானத்தில்தான் இம்பால் வந்தார். அவரைக் கண்டதுமே மானசாவிடாம் இவர் நிச்சயம் எங்கள் கோஷ்டியாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறினேன். என் ஐயம் உறுதியானது. எழுத்தாளர்கள் எப்படியோ சக எழுத்தாளர்களை மோப்பம் பிடித்துவிடுவார்கள். இந்திய யூத பின்புலம் கொண்ட எழுத்தாளர் என கூகிள் சொல்கிறது. வாசித்து பார்க்க வேண்டும்.
--
சாகித்திய அகாதமி தலைவர் வராததால் துணைத்தலைவர் நிகழ்வை முன்னின்று நடத்தினார். ஏற்புரை நிகழ்வின்போது அவராற்றிய உரை மிக முக்கியமானது என விக்கிரம ஹத்வாரா விளக்கினார். நாற்பதுகளில் எழுத்து நம்மை விட்டு அகலும் அபாயம் உண்டு. அந்த பருவத்தில் கலையை இறுகப் பற்றிக்கொண்டு கடந்துவிடுங்கள் என ஆலோசனை சொன்னார். உலகியல் வாழ்வு சுழற்றி வீசும் பருவம் அதுவே.
--
தங்கியிருந்த ஹோட்டலில் பப்பே உண்டு. தயிர் வடை போன்று ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் அதன் மீது இனிப்பு ஊற்றியிருன்தனர். இப்போது இதை எழுதும்போது கூட அதன் வாடை குமட்டுகிறது. டோஸ்டரில் ப்ரெட் டோஸ்ட் செய்து நிறைய வெண்ணைத் தடவி சமாளித்தோம். இந்தப் பயணத்தின் மாபெரும் வெற்றி என்பது ஊருக்கு சென்ற அறுவரில் எவருக்கும் ஒருநாள் கூட எந்த உடலுபாதையும் வரவில்லை என்பதே.
--
ஒட்டுமொத்தமாக இலக்கியம் உயிர்ப்புடன் திகழும் மொழிகள் என தென்னிந்திய நான்கு மொழிகள், வங்காளி மற்றும் ஹிந்தியைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. பிற மொழிகளில் எழுதும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள்.
--
தேர்ந்த எழுத்துக்காரராக மட்டுமில்லாமல் இருமொழி புலமை மேலதிகமாக தேவைப்படுகிறது. இனி வரும் காலம் அப்படிப்பட்டதுதான் என்றொரு எண்ணம் கன்னட, வங்காள எழுத்தாளர்களை காணும்போது தோன்றியது. ஆனால் இதெல்லாம் யார் பொறுப்பு? எப்படி தமிழில் நிகழ்வதை பிறருக்கு கொண்டு சேர்க்கப் போகிறோம்? தெரியவில்லை. பேசியவரை பிற மொழிகளில் யதார்த்தவாதமே பெரும் போக்காக திகழ்கிறது. இந்திய மொழிகளில் தமிழின் இடம் நிச்சயம் நல்ல நிலையில் உள்ளதாக தோன்றியது.
--
புத்தக விற்பனைப் பற்றி பேச்சு வந்தது. நேபாளி எழுத்தாளர் கபிமோ அவருடைய நூல் நேபாளில் பத்தாயிரம் பிரதிகள் விற்றதாக சொன்னார். பஞ்சாபியும் ஏழாயிரம் பிரதிகள் விற்றுள்ளன என்றார். நான் வாயை மூடிக்கொண்டு இருந்தேன். இங்கே முதன்மை எழுத்தாளருக்கே ஆயிரம் பிரதிகள் விற்க மூன்று ஆண்டுகள் ஆகும் எனும் பரிதாப நிலையை எப்படிச் சொல்வது.
--
இம்பாலில் அதே நாட்களில் நரம்பியல் மாநாடும் நிகழ்ந்தது. அதற்கு வந்தவர்களும் எங்கள் ஹோட்டலில் தான் தங்கியிருந்தார்கள். கோவை கே.ஜி மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் இருவர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். தமிழ் பேச்சைக் கேட்டதும் போய் பேசினோம்.
--
இம்பாலில் இருந்து கொல்கத்தாவந்து அங்கிருந்து உடனடியாக சென்னைக்கு விமானம் பிடிக்க வேண்டும். பரபரப்புடன் வந்தோம். இறுதி நேரத்தில் வண்டி ஏறினோம். எப்போதும் விமானத்தில் தூங்கிவிடும் சுதீர் அன்று நசநசத்துக்கொண்டே இருந்தான். எங்கள் இருக்கைக்கு பின்னிருக்கையில் இருக்கும் பெண் பயணி விமான பணிப்பெண்ணிடம் புகார் சொன்னார். நாங்களும் அமைதியாக்க முயற்சித்தோம் ஆனால் படுதோல்வி. பின்னர் அவரே ஒருகட்டத்தில் கோபமாக சுதீரைப் பார்த்து கத்தினார். நல்ல பயணம் இப்படியான கசப்புடன் முடிவுற்றது.
--
மணிப்பூரி உள்ளூர் தொலைகாட்சியில் அவர்கள் ஊரின் ஆல்பம் இசை கேட்டேன். பெரும்பாலான பாடல்கள் பிரமாதமான மெலடிக்கள்.
--
ஒட்டுமொத்தமாக இந்த பயணம், பயணக் காட்சிகள் என்றென்றைக்கும் நினைவிலிருக்கும். சிலர் நீண்டகால நண்பர்களாக தொடரவும் வாய்ப்புண்டு.
--
இன்று, ஏறத்தாழ ஒருமாதத்திற்கு பின் திடிரென்று நினைவுகளை எழுதக் காரணம் கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் அனுப்பிய புகைப்படங்கள். இந்த நினைவுக் குறிப்புகள் என்றேனும் அசோகமித்திரனின் ஒற்றனைப் போல் ஒரு நாவலாக விரியவும் வாய்ப்புண்டு.














No comments:

Post a Comment