Sunday, September 9, 2018

கனவுகள் என்னை இயக்குகின்றன


விகடன் தடம் இதழில் 'அடுத்து என்ன' என்றொரு பகுதிக்காக எழுதிய கட்டுரை இந்த மாத இதழில் (செப்டம்பர்) வெளிவந்துள்ளது. வழக்கம் போல் கட்டுரை அரைநாளில் எழுதி முடித்துவிட்டேன். புகைப்படம் சரியில்லை என்பதால் விகடன் புகைப்பட நிபுணர் சாய் தர்மராஜ் நகராட்சி பூங்காவிற்கு ஆளரவமற்ற காலைப்பொழுதில் அழைத்துச்சென்று விதவிதமாக படமெடுத்தார். அதே காலையில் ஒரு திருமண தம்பதியினரின் புகைப்பட வைபவமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒற்றை ஆளாக வந்து நின்றிருக்கும் என்னைப் பார்க்க அவர்களுக்கு விநோதமாக இருந்திருக்கலாம். எனக்கே பெரும் வேடிக்கையாக இருந்தது. எங்கே ஏதோ ஒரு புள்ளியில் என்னையும் மீறி முஷ்டி மடக்கி வீர வசனம் பேசிவிடுவேனோ என்று அஞ்சினேன். வெய்யில், தமிழ்செல்வன் மற்றும் சாய் தரம்ராஜ் ஆகியோருக்கு நன்றி. ஒரு முழு பக்கத்திற்கு புகைப்படம் அதுவும் ஒளிவட்டத்துடன் வந்துள்ளது. 
https://www.vikatan.com/thadam/2018-sep-01/column/143814-dreams-drives-me-sunil-krishnan.html
புகைப்படம்- நட்ன்ரி விகடன்- சாய் தர்மராஜ் 


---

கனவுகளில் என்ன கஞ்சத்தனம்? ஆகவே அடுத்து என்ன என்றொரு கேள்விக்கு ஒரேயொரு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் என்னவெல்லாம் இந்த ஆண்டிலும் வரும் ஆண்டிலும் நிகழ்த்த விழைகிறேன் என்பதை பகிர்ந்துகொள்வது மேல். ஒருவகையில் பொதுவெளியில் பதிவாகும் சொல் ஒரு எச்சரிக்கை மணியைப் போல், ரப்பர் காலணியில் புதைந்த முள்ளைப் போல் எப்போதும் பிரக்ஞையை தீண்டியபடியே இருக்கும். ஆக்க சக்தியாக என்னை அது எழுத வைக்கலாம் அல்லது ஊக்கத்தை உரித்து வாட்டவும் செய்யலாம். 

சிறுகதை தொகுதிக்கு முன்பே நாவலாசிரியனாகத்தான் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். நான்கைந்து சிறுகதைகள் எழுதி முடித்த சூழலிலேயே ஒரு நாவலைத் துவங்கினேன். நாவலின் மையக் கேள்வி என்னை பற்றி ஏறிக்கொண்டவுடன், அதன் முதல் வரியை எழுதும் முன் நாவலின் தலைப்பு துலங்கிவிட்டது. ‘நீலகண்டம்’. ஒரு மந்திரச்சொல் போல் எனை ஆக்கிரமித்தது. விழுங்கவும் முடியாத, உமிழவும் முடியாத ஆலகாலத்தை கழுத்தில் என்றென்றைக்குமாக நிறுத்தப் போராடும் நீலகண்டர்கள். விடம் உண்ட கண்டர்கள் என்பதைக் காட்டிலும் விடம் சுரக்கும் கண்டர்கள். 

நாவல் நினைவிலும் கனவிலும் பெருகி சட்டென நூறு பக்கங்கள் வரை வளர்ந்தது. நவீன வாழ்வில் பிள்ளைப்பேறு சார்ந்த வினாக்களை அலசும் களம். ஒரு குடும்பத்தை அலகாகக் கொண்டு, அதிலும் ஆட்டிச நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தையை மையமாகக் கொண்டு விரியும் நாவல். ஆட்டிச குழந்தை அச்சுவின் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் நாவல் சுருள் அவிழ்கிறது. ஒரு கட்டத்தில் கர்ப்பம் கலையும் பகுதியை எப்படியோ சென்று சேர்ந்தது. அப்போது என் மனைவியின் கர்ப்பமும் உறுதியாகியிருந்தது. நாவலின் சிசு அழிவும் நிகழுலகின் தந்தைமைக்கான ஆவலும் சமரிடத் துவங்கின. கனவும் நிகழ்வும் ஒன்றையொன்று குழப்பி நிரப்பின. அலைக்கழிப்புகளின் ஊடாக கழிந்த இரவுகளில் இருந்து தப்பிக்க நாவலை நிறுத்துவதைத் தவிர வேறுவழி புலப்படவில்லை. இப்போது மகனுக்கு இரண்டரை வயது ஆகிவிட்டது. அந்நாவலை மீண்டும் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். ‘டெம்பிள் கிராண்டின்’ ‘நவோகி ஹிகஷிடா’ துவங்கி பாலபாரதியின் ‘துலக்கம்’ வரை தொடர்ந்து வாசித்திருந்த காலகட்டம் ஒன்றுண்டு. அவை எனக்கு புதிய உலகை காட்டின. எல்லாவற்றையும் அளக்க நமக்கோர் அளவையுண்டு. ஒருபோதும் அதை நாம் கீழே வைப்பதில்லை. அன்பையும், வாழ்வையும், உறவையும் கூட பயன்மதிப்பைக் கொண்டுதான் அளக்க வேண்டியதாய் இருக்கிறது. இந்த அபத்தத்திலிருந்து வேர்பிடித்து எழுகிறது நாவல். வேறு வடிவில், வேறு மொழியில் இந்நாவலை அடுத்த ஆண்டிற்குள் எழுதி முடிக்க தேவையான மனத் திண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். 

துறை சார்ந்து ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது என் நெடுங்கால கனவு. ஒரு ஆயுர்வேத மருத்துவராக சுய உதவி மருத்துவம் அல்லது மருத்துவப் பயன்பாட்டு குறிப்புகள் எழுதுவது சுலபம். ஆனால் அது என் நோக்கமில்லை. அத்தகைய நூல்கள் சந்தையில் ஏராளமாக புழங்குகின்றன. அடிப்படைகளைப் பற்றி எழுதலாம் என்றால் தெள்ளிய மொழியில் எனது ஆசிரியர்களில் ஒருவரான தெரிசனம்கோப்பு டாக்டர். மகாதேவன் அத்தகைய பல நூல்களை எழுதிவிட்டார். ஏழெட்டு அத்தியாயங்களாக மனதில் உருக்கொண்டிருக்கும் இந்நூல் இந்திய மருத்துவத்தின் வேறு பரிணாமங்களைப் பற்றி பேசுவதாக இருக்கும். வரலாற்று ரீதியாக அது எத்தகைய மாற்றங்களை உள்வாங்கி செழித்தது? அதன் வெவ்வேறு மரபுகள் எவை? நவீன காலகட்டத்தில் அதன் சவால்கள் எத்தகையவை? காலனீய காலத்தில் அதில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? இப்படியான கேள்விகளை இந்நூல் எதிர்கொள்ள வேண்டும். இந்நூலுக்கான ஆரம்பகட்ட தரவு சேகரிப்பு முடிந்துவிட்டது. ‘இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்’ ‘வேதமும் ஆயுர்வேதமும்’ ஆகிய இரண்டு அத்தியாயங்களை நிறைவு செய்துவிட்டேன். இந்த வகையான நூல் எழுதுவதில் உள்ள ஆகப்பெரிய சவால் யாதெனில், முடிவற்று தரவுகளை சேகரித்து வாசித்துக்கொண்டே இருக்கும்போது ஏதோ ஒரு புள்ளியில் போதும் என்று நிறுத்தி புத்தகத்தை எழுதத் துவங்க வேண்டும். அந்தப் புள்ளி நழுவிச் செல்லும்போது இருள் சூழ்ந்து விடுகிறது. பொது வாசகர், இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி பரிச்சயம் உடையவர்கள் என இரு தரப்புமே வாசிக்கும் வண்ணம் இந்நூல் உருப்பெற வேண்டும் என உழைக்கிறேன். அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்குள் இந்நூல் முழுவதும் தயாராகிவிடும் என்றே நம்புகிறேன். 

‘காந்தி- இன்று’ தளத்தில் பல மொழியாக்கங்கள் செய்த அனுபவம் உண்டு. ஆனால் அபுனைவுகள் மொழியாக்கம் செய்வதில் முன்பிருந்த ஆர்வம் இப்போது வற்றிவிட்டது. இந்திய பதிப்பகப் பிரிவிற்காக காந்தியின் மரணத்தையொட்டி வானொலியில் பதிவான அஞ்சலி குறிப்புகளை தமிழாக்கம் செய்துள்ளேன். சுவாரசியமான நூல். விரைவில் வெளியாகும். அபுனைவு நூல் மொழியாக்கம் செய்ய தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், இத்தனை மெனக்கெடலுக்கான பயன்மதிப்பு உள்ளதா எனும் கேள்வியே. இந்த தொய்வு புனைவுகளை மொழியாக்கம் செய்யும்போது நேர்வதில்லை. மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பாரியட்டின் ‘19/87’ என்று ஒரு சிறுகதையை வரவிருக்கும் அவருடைய தமிழ் தொகுதிக்காக மொழியாக்கம் செய்தேன். ‘கல்குதிரை’ இதழுக்கு அமெரிக்க எழுத்தாளர் டான் டெலிலோவின் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யும்போது என் மொழிநடையே அதன் தாக்கத்தில் குழைவதை உணர்ந்தேன். தமிழுக்கு வரவேண்டிய எழுத்தாளர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளார்கள். அப்படி எனக்கு இருவரை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நெடுநாள் கனவு. கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசன்ஜாகிஸ் மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக் (‘டாக்டர். ஷிவாகோ’). இருவரையும் வாசிக்கச் சொல்லி தூண்டியது ஜெயமோகன். கசன்ஜாகிசின் ‘ஜோர்பா எனும் கிரேக்கனை’ சில ஆண்டுகளுக்கு முன் இரு அத்தியாயங்கள் மட்டும் ‘பதாகை’க்காக மொழியாக்கம் செய்தேன். இப்போது மீண்டும் மொழியாக்கம் செய்யத் துவங்கி இருக்கிறேன். ஜோர்பா ஒருவகையில் என் லட்சிய பிம்பம், யாராக இருக்க விழைகிறேனோ அதுதான் அவன். நாவலில் கதைசொல்லி ஜோர்பாவாக ஏங்குவதைப் போல் நானும் ஏங்குகிறேன். நேற்றும் நாளையும் அற்ற இன்றும் இப்போதும் மட்டுமே உள்ள முழு மனிதன். கசன்ஜாகிசின் மொழி கவித்துவமானது. கிரேக்க தொன்மங்களை கையாள்வது. இருபத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலின் ஆறு அத்தியாயங்களை மொழியாக்கம் செய்து முடித்திருக்கிறேன். இம்மொழியாக்கத்தை நிறைவுசெய்வது முதன்மை கனவுகளில் ஒன்று. 

இவை தவிர பிரியத்திற்குரிய எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுதி என் தேர்வு மற்றும் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது. தமிழ் சிறுகதை உலகில் தனித்துவமான கூறுமுறையும் பேசுபொருளும் கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித். நமக்குப் பிடித்த ஒரு முன்னோடி எழுத்தாளர் அளித்தவையின் பொருட்டு வாசகனாக நாம் செலுத்தும் எளிய நன்றியே இத்தொகைநூல். ஓரிருமாதங்களில் புத்தகம் வெளிவரும். ‘புதிய குரல்கள்’ என்றொரு பகுதியில் அண்மைய ஆண்டுகளில் அறிமுகம் ஆன எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனத்துடன் அவர்களுடனான நேர்காணலும் செய்து வருகிறேன். இதுவரை ஏழு எழுத்தாளர்கள் ‘புதிய குரல்கள்’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்கள். பலருக்கு இதுவே முதல் நேர்காணல். இன்னும் குறைந்தது இப்படி பத்து எழுத்தாளர்களைப் பற்றியாவது எழுத வேண்டும். சமகால எழுத்தாளர்களை வாசித்து அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான பணி. 

தற்போது பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் பேசுபொருளில் அறுநூறு பக்க தொகை நூலை உருவாக்க முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறேன். இந்நூல் அடுத்த ஆண்டு வெளியாகும். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்படும். பாரதி துவங்கி பூ.கொ சரவணன் வரை பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், ஆளுமைகள் தமிழில் காந்தியைக் குறித்து எழுதியவற்றின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிப்பதே இந்நூலின் நோக்கம். நாவல் பகுதிகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் என பல்வேறு வடிவங்களைக் கொண்ட தொகுப்பு. இதன் பொருட்டு நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறுகிய காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டிய பணி என்பதால் முழு நேரத்தையும் அதற்கே செலவிடுகிறேன். காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதும் எனக்கு உற்சாகமளிக்கும் அனுபவம்தான். தமிழ் நனவிலியில் காந்தி எப்படியெல்லாம் பதிந்திருக்கிறார் என்பதை அறிய சுவாரசியமாக இருக்கிறது. 

இவை தவிர்த்து எப்போதும்போல் சிறுகதைகளும், குறுங்கதைகளும் எழுத வேண்டும்.  சு. வேணுகோபால் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித்திற்கு கொணர்ந்ததுபோல் நீண்ட நேர்காணலும், கட்டுரைகளும் கொண்ட எழுத்தாளர் சிறப்பிதழை எழுத்தாளர்கள் தேவிபாரதி, எம். கோபாலகிருஷ்ணன், இரா. முருகன் ஆகியோருக்கு கொண்டு வரவேண்டும் என்பதும் ஒரு கனவு.  இங்கே பட்டியலிடப்பட்ட எல்லாவற்றையும் அடுத்த வருடத்திற்குள் நிகழ்த்தி முடிப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கனவு என்னை இயக்குகிறது. சிலவற்றைக் கைவிட்டு புதிய கனவுகளை கைகொள்ளலாம். ஏனெனில், வாசிக்கவும், எழுதவும், கனவு காணவும் எல்லையில்லை. 

  சுனில் கிருஷ்ணன் 

No comments:

Post a Comment