புத்தகங்கள்

Pages

Monday, September 17, 2018

சிதல்

சிதல் 











(ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளிவந்த இடைவெளி இதழில் வெளியான சிறுகதை. நன்றி இடைவெளி ஆசிரியர் குழு)

1
செம்மண் படிந்து பழுப்பேறிய வாயில் சுவரின் விலா எலும்புகள் என செங்கல் பூச்சு ஆங்காங்கு தென்பட்டது. கருத்து துருவேறி இருக்கும் தாமரைக்கதவு வெள்ளி நிறத்தில் இருந்ததாக ஞாபகம், கருப்பு என்றால் கருப்பும் அடர் அரக்கும் சேர்ந்த அப்பத்தாவின் புகையிலைக் கறை படிந்த பற்களின் கருகருப்பு. வாயில் வளைவில் ஆங்கிலத்தில் புடைத்திருந்த கே எல் எஸ்சில், எல்லின் கீழ்க்கோடு சிதைந்து ஐ போல இருந்தது. சிரித்துக் கொண்டான். வளைவின் இரு பக்கமும் வரவேற்கக் குந்தியமர்ந்திருக்கும் சிங்கங்களின் வளைந்த வாலுக்கு பதிலாக ஒரேயொரு கம்பி நீட்டியிருந்தது. வலப்பக்க சிங்கத்தின் ‘மொகரையை’ வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிப் பெயர்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது அதன் முன்னங்காலும் உதிர்ந்திருந்தது. தன்னிச்சையாக அவன் விழிகள் கிணற்றடியில் நிலைபெற்றன. பவளமல்லி இருந்த இடத்தை நோக்கினான். தந்தரையாக சிமிண்டு பூசப்பட்டிருந்தது. 

“அக்கா..” என்று அழைத்தான். குரல் அவன் எதிர்நோக்கிய விசையை அடையாமல் கம்மியது. தொலைகாட்சியில் யாரோ ஒரு பெண்  ஆவேசமாக அழுது கொண்டிருந்தது கேட்டது. மீண்டும் குரலைச் செருமிக்கொண்டு சற்றே உரக்க “அக்கா” என்றான். அதிகாரமாக ஒலித்த அத்தொனி அவனுக்கு பிடிக்கவில்லை. விரித்த தலைமுடியுடன் ஊதா பூ போட்ட நைட்டி அணிந்த ஒடிசலான பெண் வாயில் சீப்பை கவ்விக்கொண்டு அரக்கப்பரக்க வந்தாள். 
“மீனா அக்கா இருக்காங்களா?”

வாயிலிருந்த சீப்பை எடுக்காமலே, உள்பக்கமாக கதவை பின்னியிருந்த வளைக் கம்பியை இழுத்து தாமரைக் கதவை திறந்தாள். கையிலிருந்த இழு பெட்டியையும் முதுகில் சுமந்த பயணப் பொதியையும் பார்த்தவுடன் அவளுக்கு யாரென்று தெரிந்திருக்க வேண்டும். அவள் உள்ளே சென்றதும் மீனா அக்கா வந்தாள். 

“வாய்யா தம்பு... கார்த்தியா, அண்ணனுக்கு சேரு கொண்டாடி... எம்மவதான், தெரியலையா...” என்றாள்.

“இருக்கட்டும்க்கா... நல்லா இருக்கிங்களா?” என்று பெரிய திண்ணையில் ஏறியமர்ந்தான். கை வைத்த இடத்தில் தூசி மறைந்து துலக்கம் அடைந்தது. செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. அவனை விட எப்படியும் பத்து வயது மூத்தவள். கூடமாட ஒத்தாசையாக இருப்பாள். அய்யா இறந்தபிறகு அவள்தான் சமையல். செந்தியின் அப்பனும் ஆத்தாளும் அவனுக்கு நான்கு வயதிருக்கும்போதே காப்பி எஸ்டேட் அருகே  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தபின் செந்தியை கவனிக்கும் பொறுப்பு  அதிகமும் அவளே ஏற்றுக் கொண்டாள். பதின்மம் என வகுக்கும் முன்னரே துவங்கிய கனவுகளை அதிகமும் ஆரம்ப நாட்களில் நிறைத்தவள் அவள்தான். என்னவென்று விளங்குவதற்கே அவனுக்கு சில வருடங்களானது. அதற்குள் அவளுக்கு பத்து பவுன் போட்டு பழனிக்கு அப்பத்தாதான் திருமணம் செய்து முகப்பில் குடி வைத்தாள். பழனி அரண்மனையில் எடுபிடியாக இருந்தான்.  வாடகை ஒன்றும் தர வேண்டாம். வீட்டைப் பார்த்து கொள்ளுங்கள். மாதமொரு முறை கூட்டி மொழுக வேண்டும் என அப்பத்தா இருந்த காலத்திலேயே  முடிவாகி இருந்தது. 

“பழனி ஐத்தான் சமாசாரம் கேள்வி பட்டேன்... தைரியமா இருங்கக்கா”

கண்ணிலிருந்து நீர்த்தாரை கன்னத்தை பகுத்து இறங்கியது. திண்ணையில் பதிந்திருந்த கருப்பு வெள்ளை முக்கோண ஆத்தங்குடி கற்களை வெறுமே வெறித்துக் கொண்டிருந்தான். உத்திரத்தைத் தாங்கும் வழவழப்பான தூண்கள் திண்ணையிலிருந்து முளைத்தன. அவனுடைய நினைவில் அவை கொண்டிருந்த பிரம்மாண்டம் நேரில் இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. உள்ளே சென்று பெரிய இரும்புச் சாவியையும் கொத்துச் சாவியையும் எடுத்து வந்தாள். கார்த்திகா பச்சைநிறக் குடத்தை தூக்கிக் கொண்டு பதுங்கு குழி போல் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி காணாமலானாள். 

செந்தி கனத்த இரும்புச் சாவியை பூட்டுத் துளையில் விட்டு இரண்டு முறை திருகினான். அப்போதுதான் நிலைக்கதவின் மேலிருந்த சரசுவதியின் கையிலிருந்த வீணை சிதைந்திருந்ததை கவனித்தான். 

2

ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் துவங்கியது. வெளிர் நீல வானத்தில் ஒரு துளி கருமை சேர்ந்து கலக்கியது போல் சாம்பல் கொண்டது வானம். காற்றின் வெம்மையும் வறட்சியும் ஏதோ ஒரு நொடியில் மாறி இப்போது குளிர்ந்து கனத்தது. மூங்கில் கழிகளால் ஆன சாரத்தில் ஏறி சாத்தையா சுதைச் சிற்பங்களுக்கு வர்ணம் அடித்து கொண்டிருந்தான். சரசுவதியின் கையிலிருக்கும் வீணைக்கு அரக்குடன் கொஞ்சம் வெள்ளை வர்ணத்தைக் கலந்து காய்ந்த மரப்பட்டையின் உட்புற நிறத்தை உருவாக்கிப் பூசினான். புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த குழாயில், “ஈசுவரியே மகமாயி மாரியம்மா...” என ஈசுவரி உச்சக் குரலில் பாடிக் கொண்டிருந்தார். நிழலில் பரவியிருந்த மணலில் துண்டை விரித்து ஒருக்களித்து படுத்துக்கொண்டு கோபுர வேலையை பார்த்து கொண்டிருந்தான் பாண்டி. அடிமரத்தையொட்டி வளர்ந்திருந்த பிரம்மாண்டமான புற்றுக்கு   அருகே கறுப்பு எறும்புகள் ஊறிக் கொண்டிருந்தன. 

அத்தனை நாள் ஒரேயொரு திட்டில் இருந்த பீடமும் அருகில் நடப்பட்டிருந்த சூலமும்தான் காளியாத்தாவாக இருந்தது. சூலத்தின் நுனியில் குத்தியிருக்கும் எலுமிச்சை மண்ணிறத்தில் வதங்கிச் சுருங்கி மாதக்கணக்காக கிடக்கும். சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம். பீடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் சிவப்பு ரவிக்கைத் துணி காற்றில் உளையாமல் இருக்க எடைக்கு கல் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். வானே கூரையாக ஆத்தா வெயிலிலும் மழையிலும் எப்போதைக்குமாக நின்றிருந்தாள். 

பாண்டி முணுமுணுத்தான், “ஒனக்கு வந்த வாழ்வப் பாரேன்... கட்டடம், மதிலு, கோவுரம்... நல்லாயிரு ஆத்தா” என்று கேலியாகச் சிரித்தான். இரண்டடிக்கு ஒரு சிறிய அம்மன் சிலையொன்று பீடத்திற்குப் பின் நிறுவப்பட்டிருந்தது. அடுத்த வாரத்தில் அதற்கு வெள்ளிக் கவசம் வரும் என்று ஸ்தபதி கூறிவிட்டு சென்றிருந்தார். “திருழா சமயத்துலதான் சனம் வரும்... பொங்கல வைக்கும்... கோழியறுத்து, கிடாவெட்டிட்டு போய்கிட்டே இருக்கும். இப்ப என்னடான்னா ஒனக்கு ஆறுகால யாகசால பூச... பிள்ளையார்பட்டி ஐயருங்க வாராகளாம்... கும்பத்துக்கு தண்ணி விடுறாங்களாம்,” என்று அந்தரத்தில் பேசிக்கொண்டிருந்தான். 

இடிச்சத்தம் கேட்டது. சாத்தையா மளமளவென இறங்கி வந்தான். “சத்த நேரம் மழ வரலைனா போதும்... காஞ்சுரும்... மீத வேலைய நாளைக்கு முடிச்சிரலாம்” என்று கிளம்பினான். பாண்டி துண்டை உதறிவிட்டு மரத்தடியில் சிமிண்டு மூட்டை அடுக்கப் போட்டிருந்த கொட்டகைக்குள் சென்றான். கோவில் வேலை ஆரம்பித்ததில் இருந்து அவன் அங்குதான் உறக்கம். சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை நேராக்கிவிட்டு தலைக்கு துண்டை வைத்துக்கொண்டு படுத்தான்.  கும்பாபிஷேகம் முடிந்த கையோடு திருவிழாவும் வருகிறது. இம்முறை ஆட்டம், சினிமா என எல்லாமும் உண்டு. “எல்லாத்துக்கும் ஒரு  காலநேரம் வரும் போல... சாமிக்கும்தான்... எட்டாம் நாள் மண்டகப்படிகாரவுக என்ன ஆனாங்கன்னே தெரியல... இம்புட்டு வருஷமா புத்து மண்ணுல அவிசெகம் பண்ணிக்கிட்டு கிடந்தோம்... இப்ப என்னடான்னா அம்பேரிக்காவுலேந்து பணம் வருது... அவுகதான்னு சொல்றாக” என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். 

பாண்டிக்கு ஆற்றாமை பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தான். பரம்பரையாக கோவில் பூசை பார்த்து வந்தாலும் அவனுக்கு என்றிருந்த நிலத்தையும் கோவில் நிலத்தையும் அவன்தான் கவனித்தான். செல்வியை மணமுடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் புழு பூச்சி ஏதும் உண்டாகவில்லை. நான்கு ஆண்டுகளாக வெள்ளாமை இல்லை. கம்மாய்கள் எல்லாம் வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தன. ஊரில் யாருமே விதைக்கவில்லை. தண்ணிக்குடத்தை தூக்கிக் கொண்டு பஞ்சாயத்து குழாயடிக்கு சென்று வந்தார்கள். இப்போது மூன்று மாதமாக தேவகோட்டைக்கும் காரைக்குடிக்கும் கட்டட வேலைக்கு நாள் கூலி நானூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என போய்க் கொண்டிருந்தான். பத்து நாள் சென்றால்கூட போதும், அந்த மாசத்தை ஓட்டிவிடலாம். ஆனால் அதற்கும் இருநூறு ரூபாய்க்கு வேலை பார்க்க வடக்கிலிருந்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மீது ஆத்திரமாக வந்தது. பிறகு இருநூறுக்கே வழியில்லாமல் வருகிறார்களே என பரிவு கொண்டான். செல்வியும் மண்ணு வார அவ்வப்போது செல்வாள். நாலு சட்டி மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டு கொண்டு போன கட்டுச் சோற்றை தின்றுவிட்டு செட்டாக கிளம்பிவிடுவார்கள்.

 இரண்டு மாதங்களுக்கு முன் கோவில் திருவிழா நடத்த கூட்டம் கூட்டி கணக்கு போட்டபோது. காசு கொடுக்க யாருமே முன்வரவில்லை. கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது ஒருபுறம், கொடுக்க மனமில்லை. “இங்கே சோத்துக்கே வழியில்ல..” என்று கரித்துக் கொட்டினார்கள். கடைசியில் மண்டகப்படிகாரர்கள் மட்டும் ஆளுக்கு ஆயிரம் தருவதாக முடிவானது. சக்கர சோறு, சுண்டல் எல்லாம் போட வேண்டியதில்லை. வெறும் தேங்காய் பழம் வைத்து கும்பிட்டால் போதும் என்றார்கள். 

பாண்டி மனம் நொந்திருந்தான். ஒரு நாளைக்காவது நல்ல பிரசாதம் போட வேண்டும். காசைப் புரட்டிவிடலாம் என திட்டவட்டமாக இருந்தான். இப்போது நிலைமை தலைகீழானது. சாரத்தின் மீது தார்பாலினை போட வேண்டும், மழை உறுதியாக வரும் போலிருக்கிறது. எழுந்து வெளியே வந்தான்.  

பளீர் என ஒரு வெளிச்சம், பின் பேரிரைச்ச்சல். உடல் அதிர்ந்து சில அடி தூரம் அப்பால் கிடந்தான். என்னவென்று சுதாரித்துக் கொள்வதற்கு முன் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. புளிய மரம் பொசுங்கிச் சாய்ந்திருந்தது.  

3
சமையற்கட்டு உத்திரத்திலிருந்து ஒரு கட்டை அரித்து விழுந்தது. கொலுப் பொம்மைகள் இருக்கும் மர பீரோவின் காலை அரித்தது. மேலேறும் முன் அப்பத்தா கவனித்து மண்ணெண்ணெய் ஊற்றினாள். “ராவோடா ராவா நம்மளையும் அரிச்சுப்புடும் போலிருக்கே” என்று அலுத்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் கரையானைக் கண்டுபிடித்தார்கள். அப்பத்தாவின் சீலை, அம்மாவின் கல்யாண சீதனமாக வந்த பாய், ஐயாவின் புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகள் உடைய புகைக்கும் பைப், அய்யா சேர்த்து வைத்த சித்த மருத்துவச் சுவடிகள், பழைய பதிப்பில் வெளிவந்த அரபளீசுவர சதகம் என சகட்டுமேனிக்கு அரித்துத் தீர்த்தது. ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்று எங்கிருந்து கரையான் புறப்படும் எனும் பய பீதியுடனே விடியும். பள்ளிக்குச் செல்வதற்கு முன் சுற்றிச் சுற்றி பார்த்துவிட்டுதான் செல்வான். மாலை வீடு வந்தவுடன் செந்திக்கு சாமான்களை திரும்ப அடுக்கி முடிப்பதற்கே எட்டு மணியாகிவிடும். அப்பத்தா ஆயாசமடைந்து நொந்து போவாள். மண்ணெண்ணெய் கலந்த நீரில் வாசல் தெளித்தார்கள். தூரிகையால் சுவற்றை ஒட்டி மண்ணெண்ணெய்யில் முக்கித் தீட்டினான். எலி விளக்குத் திரியை இழுத்து போட்டால்கூட வீடே பற்றிக்கொண்டு எரிந்து சாம்பலாகியிருக்கும்.  பர்மா தேக்குகளும் பிர்மிங்காம் இரும்பும் உருகி உருவழிந்துவிடும். நீரை அஞ்சிய இம்மக்கள் நெருப்பை அஞ்சவில்லை போலும். மரத்தை இழைத்து மாளிகை எழுப்பியிருக்க மாட்டார்கள். கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.

 மண்ணெண்ணெய் காய்ந்து மூன்று நாட்களில் கரையான் மீண்டும் பெருகி வந்தது. மண்ணுக்குள்ளிருந்து ஒரு முடிவற்ற ராணுவம் எழுந்து வருகிறது. அவனுடைய கனவுகளில் கரையான்கள் வரத்துவங்கின. சுவடிகளில் ஊரும் கரையான்கள் பூதக்கண்ணாடியை சுமந்துக்கொண்டு எழுத்துக்களில் ஊர்ந்தன. என்றோ எப்போதோ தொலைத்த எழுத்துக்களை தேடித் தேடி உண்டன. அல்லது ஒவ்வொரு கரையானும் ஒரு வாக்கியத்தை நிரப்புவதற்கு உரிய சொற்களை தேடித்தேடி உண்கின்றன.  தங்க சரிகை பின்னிய சிவப்பு பட்டு புடவையை அணிந்துகொண்டு ஆடிக்கு முன் நின்றது ஓர் ஆளுயர கரையான். நாணத்துடன் முந்தியை வாயில் செருகி மெல்ல மொத்த சேலையையும் விழுங்கியது. ஒரு குண்டு புத்தகத்தின் நடுபக்கத்தில் இரண்டு தாள்களிலும் கவச உடையணிந்த கரையான்கள் ஒன்றையொன்று மூர்க்கமாக தாக்க துவங்கின. இதன் தாளை அது திண்பதும். அதன் தாளை இது தின்பதுமாக மாற்றி மாற்றி ஆக்கிரமித்தன. அவை அவனுடன் பேச துவங்கின. அவனறிந்த மனிதர்களின் உருவை ஏற்றன. எப்போதும் அவனுடலில் அவை ஊறிக்கொண்டிருந்தன.. செவிவழியாக, மூக்கு வழியாக அவன் மூளைக்குள் நுழைந்தன. இரவுகளில் பற்களை நறநறவென கடித்தான், உரக்க பிதற்றினான்.  

முகப்பில்  இருக்கும் பவளமல்லி வேரில் கரையான் ஏறியது. அம்மா ஆசையாக வைத்தச் செடி என்பாள் அப்பத்தா. சின்னஞ்சிறிய அழகிய பூ. வெள்ளை இதழ்களும் சிவந்த அடித்தண்டும். காலையில் எழுந்து போனிமையாக பொறுக்கி எடுத்து நீரில் போட்டு வைத்து ஒவ்வொன்றாக நூலில் தொடுப்பாள். அத்தனை அழகு. ஒவ்வொருநாளும் பூக்கள் குறைந்தன. இலைகள் காய்ந்தன. வாடிய இலைகள் கிளையிலிருந்து உதிரக்கூட தெம்பில்லாமல் ஒட்டிக் கிடந்தன. வேப்பெண்ணெய்க் கசடை வேரில் ஊற்றினான். கொஞ்சம் எடுத்து பட்டையிலும் தடவினான். மறுநாள் மீண்டும் இலைகள் துளிர்த்தன. நம்பிக்கையடைந்தான். மீண்டும் கசடை தெளித்தான். மூன்றாம் நாள் கரையான் மறுபக்கம் பட்டையில் ஏறியது. இந்தமுறை இன்னும்  உக்கிரமாக. நடுத்தண்டு வரை. அவனுக்கு பித்தேறியது. இம்முறை வேரில் மண்ணெண்ணெய் ஊற்றினான். பட்டைகளில் தடவினான். காலை மேலும் இலைகள் பட்டுப் போயின. எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும். செய்வதறியாது தவித்தான். ஒரேநாளில் கரையான் பச்சைத்தண்டை சுள்ளியாக்கியது. ஒரேயொரு கிளை மட்டும் காயாதிருந்தது. அதை மட்டும் வெட்டி வைத்துக்கொண்டு பொறுக்க முடியாமல் மரத்தை வேரோடு ஆட்டினான். ஒரே உலுக்கில் சாய்ந்தது. அடி வேரில் கரையான்கள் வெள்ளை மூக்குடன் அலமளந்து கொண்டிருந்தன. ஆத்திரம் தீர மண்ணெண்ணெய் ஊற்றி அங்கேயே கொளுத்தினான். மூன்றிரவு அவன் உறங்கவில்லை.    

புதுகோட்டையிலிருந்து கரையான் மருந்தடிப்பவர்கள் வந்தார்கள். ஓரடிக்கு ஓரடி துளையிட்டு மருந்தை செலுத்தினார்கள். ஒரு வாரத்திற்கு எந்த தொந்திரவும் இல்லை. நிம்மதியாக இருந்தது. கரப்பான்கள் ஆங்காங்கு செத்து மிதந்தன. பத்து நாளில் செத்து விழுந்த பல்லிகளை எறும்பு மொய்த்து சாமியறையில் துர்நாற்றம் வீசியது. பின்கட்டில், முற்றத்தில், மாடியில், என பல்லிகள் செத்து விழுந்தன. அங்கணத்தில் ஒரு எலி அசைவற்று வாய் பிளந்து கிடந்தது. பின்கட்டு சாக்கடையில் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மறுநாள் மரப்படிக்கு கீழ் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மீனா வளர்த்த சாம்பல் நிறத்து பூனை செத்து விரைத்திருந்தது. “பூச்சியண்டாத எடத்துல மனுஷன் வாழக்கூடாது ராசா” என அப்பத்தா புலம்பத் துவங்கினாள். காற்றிலும் சுவரிலும் நஞ்சு சூழ்ந்தது. 

அந்தவருடம் மழையின்றி கிணற்றில் நீர்வற்றியது. அறுபதடிக்கு கிணற்றுக்குள் இறங்கிய ஆழ்துளைகிணறு கூட தூர்த்துவிட்டது. கிணற்றுக்குள் இறங்கிச் சென்று தூரெடுக்க பழனி இருவரை கொத்தமங்கலத்திலிருந்து அழைத்து வந்திருந்தான். மூச்சு முட்டி சடலமாக மேலே வந்தான் அதிலொருவன். 

பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை முடியும்வரை சின்னையா சேனா சூனா வீட்டிற்கு மாறினார்கள். அப்பத்தா சாகும்வரை அங்குதான் இருந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது சாகக் கிடந்து இழுத்து கொண்டிருந்த அப்பத்தாவை அங்கே கொண்டு போய் ஓரிரவு வைத்திருந்தார்கள். அதன் பின்னர்தான் மூச்சடங்கியது. அப்பா, அம்மா, அய்யா, கடைசியாக அப்பத்தா எனச் சில வருடங்களுக்குள் தொடர்ந்து கேதங்கள். எஞ்சியது அவன்  மட்டுமே. அய்யாவின் அப்பா பர்மாவிலும் சிங்கப்பூரிலும் சென்று சேர்த்து கட்டிய வீடு. 

இரவும், மழையும் வெயிலும் சகஜமாக வந்துபோகும் வீடு. பால்யத்தின் ஏக்கங்களையும் நினைவுகளையும் தேக்கி வைத்திருக்கும் வீடு. மனிதர்களை விழுங்கிய புதைகுழியாகி கிடந்தது. 

அப்பத்தாவின் காரியம் முடிந்தவுடன் இரண்டு பைகளில் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பெரிய வீட்டை நினைவில் சுமந்தபடி இனி ஒருபோதும் திரும்புவதில்லை எனும் உறுதியுடன் அங்கிருந்து வெளியேறினான். 


4

உடல் மெலிந்து கோடுகளாக துருத்தி நின்றதாலோ என்னவோ மாட்டின் தலை மட்டும் பெரிதாக இருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் மாட்டை ஓட்டிக்கொண்டு போய் புளியமரத்தடியில் அவர்கள் நின்றனர். நாலைந்து பிள்ளைகள் செம்மண் பொட்டலில் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். சிறிய மேடையின் மீதிருந்த பீடத்தின் மீது நேற்றைய மாலை காய்ந்து கிடந்தது. இரண்டு புதிய எலுமிச்சைகள் சூலத்தில் செருகியிருந்தன. கரி படிந்த மூன்று செம்பறான் கல் கொண்ட அடுப்பு அருகே சாம்பல் படிந்து உச்சி வெயிலில் உறங்கியது. அம்பலம் மாட்டை புளியமரத்தில் கட்டினார். மூன்று பிள்ளைகளும் அவருடைய மனைவியும் மூட்டை முடிச்சுகளை இறக்கி வைத்துவிட்டு நிழலில் அமர்ந்தார்கள். சோலச்சி கைவைத்த இடத்திற்கு கீழே கரையான் ஊறிக் கொண்டிருந்தது. முட்டியில் முகம் புதைத்து அமர்ந்தார். 

பூசாரி பாண்டி அள்ளி முடிந்த நீண்ட வெண்குழலுடன் குளத்திற்கு சென்று நடுவிலிருக்கும் கிணற்றில் வாளியை விட்டு வெண்கலப் பானையில் நீர் மொண்டு வந்தார். “என்னண்ணே  இம்புட்டு நேரம் காக்க வெச்சுடீக... இனி அடுப்ப மூட்டி சக்கர சாதம் போட்டு... ரவைக்கிதான் முடியும்” என்று அலுத்துக் கொண்டார். சொக்கையா அம்பலம் மவுனமாக நின்றிருந்தார். கண்கள் குருதி வரியோடிச் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. 

இரண்டு வருடங்களுக்கு முன் சொக்கையாவின் மகளை இருமதியில் கட்டிக் கொடுத்தார். அதற்காக காவன்னா லேனாவிடம் கொஞ்சம் ரொக்கம் வட்டிக்கு வாங்கியிருந்தார். வெள்ளாமை முடிந்தவுடன் திருப்புகிறேன் என வாக்களித்தார். வானம் பொய்த்தது. வெள்ளாமையும் நட்டம். அடுத்த போகம் விதைக்கவே இல்லை. இந்த ஆண்டு குடிக்கவே தண்ணியில்லை. காவன்னா லேனா ஆள் மீது ஆள் அனுப்பினார். கையிலிருந்த ரொக்கம் எல்லாம் கொடுத்து, நகையெல்லாம் விற்றும்கூட அசலை நெருங்க முடியவில்லை. அவரைப் பார்த்து கொஞ்சம் அவகாசம் கேட்டு வரச்  சென்றார். 

“வாங்க அம்பலத்தாரே. இப்புடி உக்காருங்க” என்று அழைத்து உட்கார சொன்னார். கனத்த உடலில் மகர கண்டியும் தங்கப்பூண் போட்ட ருத்திராட்சமும் அணிந்து அவர் குலுங்கிச் சிரிப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். எப்படியும் சுளுவில் முடிந்து விடும் என சொக்கையா நம்பினார். எத்தனையோ வருட பழக்கம் அவர்களுடையது. வரக்காப்பி கொண்டு வரச் சொன்னார். போட் மெயிலில் கொழும்புக்கு சென்று வந்த கதையைக் கூறினார். சிநேகமாகச் சிரித்து பழங்கதைகள் பேசினார்.  அவர்கள் இருவரும், ஊரார் பலரும் புழங்கிய ரங்கம்மாவை பற்றி பேச்சு வந்தது. சிங்கப்பூர் லேவாதேவி கடையை கவனிக்க மகன் சென்றிருக்கிறான் என்பதால் இனி இங்குதான் இருக்கப் போவதாக சொன்னார். சொக்கையா தருணம் பார்த்து தனது பேச்சை எடுக்க முயலும்போதெல்லாம், “அது கெடக்கட்டும்” என பேச்சை மாற்றி வேறேதோ விஷயங்களுக்குப் போய் விடுவார். சரி இன்று சரிப்படாது என புரிந்துகொண்டு சொக்கையா கிளம்ப யத்தனித்தபோது. “அட உக்காருங்க போவலாம்... என்ன அவசரம்” எனச் சொல்லி அவருடன் சுடுசோறு சாப்பிட அமர்த்தினார். வெயில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரம் வந்தது. 

காவன்னா லேனாவின் ஆளோடு சோலச்சி அரக்கப் பரக்க ஓடி வந்தாள். சொக்கையாவைக் கண்டதும் கதறி அழுதாள். அங்கேயும் இங்கேயுமாக ஒரு தொகையை பிரட்டி சேலையில் முடிந்ததை காவன்னா லேனாவின் முன் கொட்டினாள். பொறுமையாக எண்ணிப் பார்த்துவிட்டு “வட்டிக்கே காணாது” என்று வாங்க மறுத்து விட்டார். சொக்கையா நிலைமையை புரிந்து கொண்டார். நிலத்தை எழுதிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதன் பேரில் வீட்டுக்கு வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். “சாவகாசமாக வாரும். எனக்கும் பொழுது போகணுமே” என்றார். 

சொக்கையாவிற்கு அவமானம் தாங்கவில்லை. ஊருக்குள் பேச்சாவதற்கு முன் எங்காவது கிளம்பிவிட வேண்டும் என அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சுகளை கட்டினார்.  

அன்று எட்டாம் நாள் திருவிழா அவருடைய மண்டகப்படி. எப்போதும் அமர்க்களப்படும். இந்த வருடம் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. குறைந்தது இரண்டு படி சக்கரை சோறும் ஒரு படி சுண்டலும் போட்டுவிடலாம், எதாவது ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என பூசாரியிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாகும் என அவர் எண்ணவில்லை. 

நேற்று இரவு இருமதியிலிருந்து தகவல் வந்தது. கழிசலில் பெண் இறந்துவிட்டாள் என்று. கால் தளர அப்படியே சிலைந்து அமர்ந்தார். பூசாரியிடம் தளர்ந்த குரலில் மகள் இறந்ததை சொல்லிக்கொண்டிருந்த போது, சோலச்சி அமர்ந்திருந்த இடத்திலிருந்து கரையான் நெளிந்து கொண்டிருந்த கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு விடுவிடுவென பீடத்தை நோக்கி சென்றாள். கூந்தலை அவிழ்த்தாள். கண்கள் செம்மண் குட்டையைப்போல் கலங்கியிருந்தன. பீடத்தின் முன் மண்டியிட்டு கையை பக்கவாட்டில் விரித்தாள். 

“நீயெல்லாம் ஒரு ஆத்தாவா... தூ... இப்புடி எங்கள அழிச்சிப் போட்டியே... ஒனக்கெல்லாம் பூச ஒரு கேடா... ” என கையிலிருந்த மண்ணை பீடத்தின் மீது இறைத்துத் தூற்றிவிட்டு விடுவிடுவென அங்கிருந்து சென்றாள்.  

5

ஒவ்வொரு  அறையைத் திறக்கும்போதும் அவன் கைகால்கள் அசைவற்று குளிர்ந்தன. உச்சியிலிருந்து வியர்வை வழிந்தது. “இங்குதான்.. இங்குதான்” எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் எல்லா அறைகளும் துப்புரவாக இருந்தன. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவுமே இல்லை. ஜே.சி எனும் ஜெயச்சந்திரனுக்கு பிடித்துப் போனது. அறைகளில் வெளிச்சம் மட்டும் குறைவு எனினும் பார்த்துக் கொள்ளலாம் என்றான். அங்கு வந்த அன்றே “இப்பலாம் கரையான் வர்ரதில்லையா அக்கா?” எனக் கேட்டான். “என்ன மாய மந்திரமோ... நீ போனப்புறம் நாங்க ஒருநா  கூட கரையானப் பாத்ததில்ல தம்பி” என்றாள். 

கனடாவிற்கு நிரந்தரமாகப் பெயர்வதற்கு முன் வீட்டிற்கு ஏதேனும் ஒரு வழி செய்துவிட வேண்டும் என விரும்பினான். அதற்காகத்தான் செந்தியின் அலுவலக சகா பிஜு அவனுடைய நண்பன் ஜெயச்சந்திரனை கொச்சியிலிருந்து அழைத்து வந்திருந்தான். ஜெயச்சந்திரனுக்கு அலப்பெயிலும் வயநாட்டிலும் சொகுசு விடுதிகள் உண்டு. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மூன்று நான்கு சொகுசு விடுதிகள் ஓரளவு நன்றாக ஓடுவதால் இவ்வீட்டையும் அப்படி ஆக்க முடியுமா என நோக்கினான். மற்ற விடுதிகள் குத்தகைக்கோ வாடகைக்கோதான் விட்டிருந்தார்கள். பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு யாரும் தயாரில்லை. ஜெயச்சந்திரன் மட்டுமே வாங்குவதற்கு முன் வந்தான். “இவுட ரிசெப்ஷன்... கெஸ்ட் வெயிட்டிங் ஹால்... அவுட ஒரேயொரு எல் ஈ டி “ என்று வரைபடம் போட்டுக்கொண்டிருந்தான். அவ்வப்போது வழுக்கைத் தலையை நீவிக் கொண்டான். மீனா சமைத்துக் கொடுத்த செட்டிநாடு சிக்கன் அவனுக்கு பிடித்துப் போனது. விரும்பினால் அவர்கள் இங்கேயே தங்கி விருந்தினருக்கு செட்டிநாட்டு உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம் என்றான். செந்திக்கு நிம்மதியாக இருந்தது. அக்காவை எப்படி வெளியே போகச் சொல்வது எனக் குழம்பிக் கொண்டிருந்தான். திருமயத்தில் பாட்டில் கம்பெனிக்கு அவ்வப்போது வேலைக்குப் போவதாக சொன்னாள். இங்கு நிச்சயம் நல்ல சம்பளம் தருவார்கள். வெளிநாட்டுக்காரர்கள் விரும்பி கொடுக்கும் டிப்ஸ் வகையறாவில் அவள் பங்கிற்கு கவுரவமான தொகை கிடைக்கும். 
பிஜு காதருகே கிசுகிசுத்தான், “எல்லாமே ஓகே ப்ரோ... சொட்டை இஸ் ஹேப்பி... டாக்குமெண்ட்ட மட்டும் கொடுத்தா வக்கீல் கிட்ட பேசிட்டு அடுத்த விஷயத்துக்குப் போலாம்னு சொல்றான்”.

பத்திரம் சின்ன ஐயா வீட்டில் இருந்ததாக நினைவு. அவர்கள் யாரும் இப்போது இங்கு இல்லை. மதுரையில் அவர்களைப் போய் பார்த்து வரலாம் என்றால் திருமணச் சங்கதிகளை பேச ஆரம்பித்துவிடுவார். அமெரிக்காவில் இருக்கும் அவர்களின் பேரன் வீரப்பனிடம் பேசிப் பார்க்கலாம் என அழைத்திருந்தான். வீட்டில் பேசி பத்திரம் அவர்கள் வீட்டிலேயே வெள்ளிச் சாமான் அறையில் இருப்பதாக சொன்னான். சாளரமற்ற இறுக்கமான அறை. பாதுகாப்புப் பெட்டகம் போல் முக்கியமான பொருட்கள் எல்லாம் அங்குதான் வைப்பார்கள். கனமான சுவர். வந்ததிலிருந்து அந்த ஒரு அறை அவன் நினைவில் எழவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த அறையின் சாவி மட்டும் சற்றே வேறு மாதிரி இருக்கும். கொத்துச் சாவிகளில் அது இல்லை. மீனாவுக்கும் தெரியவில்லை. சின்ன அய்யாவுக்கும் நினைவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினான். எங்குமே கிடைக்கவில்லை. ஜே.சி ஆசுவாசப்படுத்தினான். பதட்டப்பட வேண்டாம் என்றான். கொஞ்சம் நிதானமாக பார்க்கலாம் என்றான். ஆனால் அதற்குரிய அவகாசம் அவனுக்கு இல்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க இயலவில்லை. ஓய்ந்து குழம்பியமர்ந்தான். பெரிய கல்லைக் கொண்டு ஓங்கி அடித்துப் பார்த்தான். ஒன்றுமே ஆகவில்லை. பூட்டுக்காரனை வரச்சொன்னான். நீண்ட நாட்களாக திறக்காததால் உள்ளே எல்லாம் பிணைந்து கிடக்கிறது. இந்த சாவி – பூட்டு அமைப்பை உடைப்பதும் கடினம் என்றான். 

செந்தி ஒரு இடம் விடாமல் தேடி ஓய்ந்தான். அறுவை இயந்திரத்தைத் தருவித்து பிளந்து விடலாம் என முடிவுக்கு வந்தான். அக்கதவில் அழகிய லக்ஷ்மி செதுக்கப்பட்டிருந்தாள். ஜே.சி பொறுமை காக்கச் சொன்னான். இதன் கலை மதிப்பு உனக்குத் தெரியாது. நாம் இதற்கு எந்த சேதமும் விளைவிக்கக் கூடாது. அவசரப்பட வேண்டாம். ஏதாவது வழியிருக்கும் என்றான். 

ஏதோ நினைவு வந்தவனாக பரபரத்தான். வளவு சுவற்றில் மாட்டியிருக்கும் படங்கள் சட்டத்திலிருந்து நீண்டிருக்கும். அதன் பின்புறங்களில் தேடினான். சட்டையணியாத பருத்த உடலுடன் திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் புகைப்படத்திற்கு பின் அந்த சாவி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு ஓடினான். அறையைத் திறக்க முயன்றான். சாவி திரும்பவில்லை. இறுகியிருந்தது. ஜே.சி, பிஜூ, மீனா, கார்த்திகா என அனைவரும் அவன் ஓடுவதைக் கண்டு பின்தொடர்ந்தார்கள். குந்தியமர்ந்து சாவித்துளையை நோக்கினான். தூர்த்திருந்தது. கார்த்திகா விளக்கமாற்று ஈர்குச்சியை எடுத்து வந்து கொடுத்தாள். காத்திரமாக இருக்கும் அதன் பின்புறத்தை துளையில் விட்டுக் குத்தினான். ஈர்க்குச்சி மேல் ஏறி ஒரு வெள்ளை மூக்கு கரையான் ஊர்ந்து வெளியே வந்தது. விளக்கைப் போடச் சொன்னான். கணநேரம் பொன்னிறத்தில் மின்னி அணைந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் அறையை நிரப்பிய பிரம்மாண்டமான புற்று சாவித்துளையில் தென்பட்டு மறைந்தது. 

  


No comments:

Post a Comment