புத்தகங்கள்

Pages

Saturday, September 8, 2018

சுயத்தின் வெளுக்கும் சாயங்கள் – ஜேவியர் செர்கொசின் ‘தி இம்போஸடரை’ முன்வைத்து

(செப்டம்பர் மாத கணையாழி இதழில் வெளியான கட்டுரை)

“உண்மை கொல்லும், புனைவு காக்கும்”- ஜேவியர் செர்காஸ்


சென்ற கட்டுரையைப் போலவே இந்த கட்டுரையும் இவ்வாண்டு புக்கர் பரிசின் நீள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு நாவலைப் பற்றியது. இந்த மாத கட்டுரைக்கு யாரை வாசிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது ஜேவியர் செர்காசின் மேற்கோள் ஒன்றை வாசித்தேன். “நினைவுகளால் நிறைவுறும் ஒரு யுகத்தில், நினைவுகள் வரலாறின் இடத்தை அடையும் ஆபத்து உள்ளது. ..நினைவும் வரலாறும் சார்புத்தன்மை உடையவை. நினைவுக்கு வரலாறு பொருள் அளிக்கிறது, நினைவு வரலாறின் ஒரு கருவி, இடுபொருள், அதன் ஒரு பகுதி, ஆனால் நினைவு வரலாறல்ல.” இந்த மேற்கோள் வழியாகவே செர்காஸ் எனும் எழுத்தாளனை கண்டுகொண்டேன். 


1962 ஆம் ஆண்டு பிறந்த ஜேவியர் செர்காஸ் ஒரு ஸ்பானிய எழுத்தாளர். ‘Soldiers of Salamis’, ‘The Anatomy of a moment,’ ஆகிய நாவல்கள் அவருடைய படைப்புகளில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அண்மைய கால ஸ்பானிய வரலாறு அவருடைய கதைகளின் களமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஸ்பானிய நாவல் “The Impostor” கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள நாவலை இரண்டு நாட்களில் பெரும் பரவசத்தோடு வாசித்து முடித்தேன். “The Impostor” நம் காலத்தின் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. உண்மைக்கும் பொய்க்கும், வரலாற்றுக்கும் நினைவுகளுக்கும் இடையிலான உறவுகளை பரிசீலிக்கிறது. உண்மையை எதிர்கொள்ள முடியாமல் நாம் தனி மனிதர்களாக, ஒரு சமூகமாக கடந்தகாலத்தை எதிர்கொள்ள புனைந்துகொள்ளும் பாவனைகளை கேள்விக்குட்படுத்துகிறது.

நாவல் என்ரிக் மார்க்கோ எனும் விந்தையான உண்மை மனிதரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரம். மார்க்கோ உள்நாட்டு போரில் ரிபப்ளிக் தரப்பில் சேர்ந்து போரிட்டவர், சர்வாதிகாரி ஃபிராங்கோவின் ஒடுக்குமுறை அரசின் காலத்தில் நாடு கடத்தப்பட்டு ஹிட்லரின் நாஜி சிறைக்கும், வதை முகாமிற்கும் சென்று மீண்டவர். அரசின்மைவாதிகளின் கூட்டமைப்பில் சேர்ந்து சர்வாதிகார அரசை தொடர்ந்து எதிர்த்தவர். ஃபிரான்கோவின் வீழ்ச்சிக்குப் பின் ஸ்பெயினின் தொன்மையான பெரும் தொழிற்சங்கத்தின் தலைவராகிறார். பின்னர் பெற்றோர்- ஆசிரியர் அமைப்பின் துணைத்தலைவர் ஆகிறார். அதன் பின்னர் நாஜி வதைமுகாமிற்குச் சென்றவர்களின் சங்கத்தின் உறுப்பினராகி அதன் தலைவராகவும் ஆகிறார். புகழின் உச்சகட்டத்தில், நீதிக்காக ஓயாமல் போராடுபவராக, ஒரு வாழும் தேசியச் சின்னமாக ஆகிறார். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, அவர்கள் வாழ்வில் தாக்கம் செலுத்துபவராக ஆகிறார். வீரம் செறிந்த உணர்ச்சிபூர்வமான சம்பவங்களால் நிறைந்தது அவர் வாழ்க்கை. வற்றாத ஆற்றலுடன் செயலாற்றுபவர். அபார பேச்சுத்திறன் வாய்ந்தவரும்கூட. ஸ்பெயினின் கேடலோனியா அரசு அவருக்கு குடிமகனுக்கு உரிய உச்சபட்ச விருதை அளித்து கவுரவிக்கிறது. ஸ்பானிய நாடாளுமன்றத்தில் வதைமுகாம் பற்றி அவர் ஆற்றிய உரையை கேட்டு பலரும் கண்ணீர் சிந்தினார்கள். 2005 ஆம் ஆண்டில் மார்க்கொவிற்கு 85 வயதானபோது பிரதமர் கலந்துகொள்ளவிருந்த நாஜி வதைமுகாம் நினைவுக் கூட்டத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது ஸ்பானிய வரலாற்று ஆய்வாளர் ஒருவர் மார்க்கோ வதைமுகாமில் அடைபடவே இல்லை என ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.  பெரும் கொந்தளிப்புகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டு. ஒரே நாளில் தேசிய நினைவுச் சின்னத்திலிருந்து தேசிய அவமானச் சின்னமாக ஆகிறார்.
ஜேவியர் செர்காஸ் 
செர்காஸ் மிகுந்த தயக்கத்துடன்தான் மார்க்கோவைப் பற்றிய நாவலை எழுதுகிறார். ஏனெனில் ஒரு பொய்யரை, அதீத தன்முனைப்பு கொண்டவரைப் பற்றி நேர்மறை எதிர்மறை என எப்படி எழுதினாலும் அவரை அங்கீகரிப்பதாகவே இருக்கும். செர்காஸ் மார்க்கோவைப் பற்றி குறிப்பிடும்போது அவருடைய நோய்க்கு “மீடியோபதி” (mediopathy) என்று பெயரிடுகிறார். செர்காசின் நண்பர்கள் இத்தகைய அகம்பாவிக்கு சிறந்த தண்டனை என்பது எவ்விதத்திலும் அவருக்கு கவனம் அளிக்காமல் இருப்பதே என அறிவுறுத்துகிறார்கள். உண்மையை, நம்பகத்தன்மையை கேலிக்குரியதாக ஆக்கியவருக்கு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ எவ்வித கவனமும் அளிக்கக்கூடாது. அவருடைய பொய்கள் வழியாக உண்மையான போராளிகளை அவமானப்படுத்திவிட்டார் என்றொரு கோபம் செர்காசுக்குள் உழன்றது. செர்காஸ் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறார். அதற்கான நியாயங்களை அடுக்குகிறார். ஆனால் ப்ரைமா லெவியின் மேற்கோள் ஒன்று அவரைக் குழப்புகிறது- “ஒருகால் என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள இயலாது, அல்லது புரிந்துகொள்ள முயலக் கூடாது. ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதேகூட கிட்டத்தட்ட நியாயப்படுத்துவதற்கான முயற்சி.” மேலும் வயோதிகரின் வாழ்வில் நுழைந்து அவருடைய அமைதியை குலைப்பது நியாயமா?

 ட்ரூமன் கேப்புடோவின் நாவலை ஒரு உதாரணமாகச் சொல்கிறார். அவருடைய ஒரு நாவல் இரு இளம் கொலையாளிகளை பாத்திரங்களாக கொண்டது. அவர்களுடன் நட்புடன் பழகி அந்த நாவலை எழுதுகிறார். அவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் இறுதியாக ட்ரூமேனைத்தான் சந்திக்கிறார்கள் எனும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவராகிறார். அவருடைய மிகச் சிறந்த நாவல் என கொண்டாடப்படும் அந்த நாவலுக்குப் பின் குடியிலும் கேளிக்கையிலும் தன்னை ஆழ்த்திக்கொண்டு மீள முடியாத அற வீழ்ச்சியில் சிக்கிச் சிதைந்தார். நானும் அதைத்தான் நிகழ்த்த விரும்புகிறேனா எனும் கேள்வி அவரை வாட்டுகிறது. புண்ணைக் கிளறுவது போல் அவருடைய கதையில் ஒட்டுமொத்த தேசமும் மோசமாக வெளிப்பட போகிறது என்பதால் இதைச் செய்துதான் ஆக வேண்டுமா என்று ஒரு தயக்கமும் இருக்கிறது. 

இந்த நாவலை அவர் எழுத மிக முக்கியமான காரணம் என்பது ஏதோ ஒரு புள்ளியில் தானும் மார்க்கோவைப் போன்ற ஒரு போலி எனும் ஐயம் எழுவதே என்கிறார். முழுப் பொய்யரைப் பற்றி எப்படி புனைவெழுத முடியும்? புனைவுகளில் எழுத்தாளன் பொய்யைக் கையாண்டாலும் ஒரு உண்மையைச் சொல்வதற்காகவே அதைச் செய்கிறான். புனைவு வழியாக எழுத்தாளனும் தன்முனைப்பைத்தானே வெளிப்படுத்துகிறான் என்றொரு வினாவை எழுப்பிக் கொள்கிறார். சமூகத்தால் அனுமதிக்கப்பட்ட நார்சிசிசம்தான் இலக்கியம் என்றொரு இடத்தைச் சென்றடைகிறார்.  முழுப் பொய்யரைப் பற்றி எப்படி ஒரு புனைவை எழுத முடியும் என்பதொரு சவால். உண்மையை மட்டுமே எழுத முடியும் என்பதால் புனைவற்ற நாவலை எழுத முயல்கிறார் செர்காஸ்.
என்ரிக் மார்கோ 
செர்காஸ் மார்க்கோவைச் சந்திக்கிறார். அவரைப் பற்றிய நாவலை அவருடைய ஒத்துழைப்புடன் எழுதுகிறார். வரலாற்று ஆய்வாளர் மார்க்கோ வதை முகாமில் இல்லை என்பதை மட்டுமே கண்டறிந்தவர். செர்காஸ் வெங்காயத் தோலுரிப்பதைப் போல் (நாவலின் முதல் பகுதியின் பெயரும் அதுதான்) மார்க்கோவின் அடுக்கடுக்கான பொய்களைத் தோலுரிக்கிறார். அவர் ஜெர்மனிக்கு வேலைதேடி தன்னார்வலராகச் சென்றவர் என்பது வெளியாகிறது. ஃபிராங்கோ அரசுக்கு எதிராக சிறு முனகல் கூட வெளிப்படுத்தாமல் முழுவதுமாக ஏற்றவர். சிறு சிறு திருட்டுக் குற்றங்களுக்காக சிறை சென்றவர். இரு மனைவிகள் உடையவர் என்று அறியப்பட்டவர், உண்மையில் மூன்று மனைவிகள் உடையவர் என்பது தெரிய வருகிறது, அவருடைய முதல் மனைவியை, குழந்தைகளை, கைவிட்டவர் என்ற ரகசியத்தை கண்டறிகிறார். அரசின்மைவாதியோ, போராளியோ, தொழிற்சங்கவாதியோ அல்ல. வெறும் சந்தர்ப்பவாதி என்பதை நிறுவுகிறார். அடுக்கடுக்கான தரவுகளை மார்க்கோவிடம் சேர்த்து உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கிறார். 

மார்க்கோ தான் அத்தனை ஆண்டுகளாக கட்டி எழுப்பிய ஆளுமை கண் முன் சரிவதை கண்டு திகைக்கிறார். வேறு எவராக இருந்தாலும் மனம் சிதைந்திருக்கும், தற்கொலையை தேர்வு செய்திருப்பார்கள். ஆனால் மார்க்கோ விட்டுக்கொடுக்கவில்லை. தனது பொய்களால் என்ன தீங்கு விழைந்தது என்றொரு கேள்வியை விடாப்பிடியாக கேட்கிறார். நான் தொழிற்சங்கத்தில், பெற்றோர் – ஆசிரியர் அமைப்பில், வதைமுகாம் அமைப்பில் என எங்கு சென்றாலும் அவ்வமைப்பின் உயர்ச்சிக்காக பாடுபட்டேன், இல்லையென்று சொல்ல முடியுமா, என்கிறார். நான் பொய்யுரைக்கவில்லை. உண்மையை சற்று திருகினேன், அதுவும் எதற்காக, நன்மையின் பொருட்டு, என்பதே அவர் வாதம். 

ஸ்பெயினில் 2000 ஆம் ஆண்டையொட்டி வரலாற்றை திரும்பிப் பார்க்கும் பேரலை ஒன்று எழுந்தது. சுமார் பதினான்காயிரம் ஸ்பானியர்கள் நாஜி வதை முகாமில் இருந்திருக்கிறார்கள். அவர்களை ஸ்பானிய அரசு கண்டுகொண்டதே இல்லை. மார்க்கோ தனது அபார பேச்சாற்றலால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முன் ஸ்பெயினின் மறக்கப்பட்ட வரலாற்றை கொண்டு சேர்த்தார். 1936 துவங்கிய உள்நாட்டுப் போரில் கணக்கற்றவர்கள் இறந்தார்கள். ஃபிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியிலும் எத்தனையோ பேர் இறந்தார்கள். ஸ்பெயின் தன் வரலாற்றை திரும்பி நோக்காமல் சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கான நீதியை அளிக்கக் கோரும் குரலாக மார்க்கோ ஒலித்தார். ஒவ்வொரு பொய்யாக மார்க்கோவை தோலுரிக்கும்போது ஒரு தருணத்தில் “இதையாவது எனக்கு நீங்கள் விட்டுவைக்கக் கூடாதா?” என்று கேட்பது பதைப்பை உருவாக்குகிறது.

மார்க்கோ தன்னை ஸ்பெயினின் அடையாளம் என்கிறார். எல்லா நியாயமான போராட்டங்களிலும், நீதியின் தரப்பில் நின்று போராடியவன், என்றே தன்னை முன்வைக்கிறார். செர்காஸ், ஆம், ஸ்பெயினின் பிரதிநிதி, என்று ஒப்புக்கொண்டு, ஆனால் மார்க்கோ முன்வைப்பதைப் போல் அவர் விதிவிலக்கல்ல, எப்போதும் எல்லாவற்றுக்கும் “மறுப்பு” சொல்லிவந்த கலகக்குரல் இல்லை, எல்லாவற்றையும், அவமானங்களையும், காயங்களையும், அதிகாரத்தையும் மவுனமாக “ஆம்” என்று ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையின் பிரதிநிதி, எனச் சுட்டுகிறார். ஜெர்மனிக்கு பிழைக்க செல்லும்போது அது வெல்லும் தரப்பு என எத்தனையோ இளைஞர்கள் சென்றதுப் போல அவரும் செல்கிறார். ஃபிரான்கோவின் சர்வாதிகாரத்தை மவுனமாக ஏற்று தன் வாழ்க்கையை வளப்படுத்தும் வாய்ப்புகளை தேடிய பெரும்பான்மை ஸ்பானியர்களைப் போல் அவரும் மெக்கானிக்காக காலம் கழிக்கிறார். சர்வாதிகாரம் முடிவுக்கு வரப்போகிறது என்பதை உணர்ந்துகொண்ட ஸ்பானியர்கள் தங்கள் வெட்கக்கேடான கடந்த காலத்தை மாற்றி வளமான எதிர்காலத்தை உருவாக்க முனைந்ததைப் போல் அவரும் முனைந்தார். ஆனால் அதில் மிகத் தேர்ந்தவராக தன்னைப் புனைந்துகொண்டார். அங்கிருந்து ஏதோ ஒருவகையில் நாம் அனைவருமே போலிகள்தானே? நம் வரலாறுகளை புனைபவர்கள்தானே? மார்க்கோவை மட்டும் கூண்டில் ஏற்றி அநாகரீகமாக நடத்த முடியுமா, என்றொரு கேள்வியை எழுப்புகிறார். மார்க்கோ செர்காசை நேர்காணல் செய்யும் நாவலின் புனைவுப் பகுதி அபாரமானது. மொத்த நாவலையும் கவிழ்த்தி வாசகரையும் சுயபரிசோதனை செய்யத் தூண்டுவது. அத்தனை நேரம் கூண்டிலிருந்த மார்க்கோ செர்காசை கூண்டில் ஏற்றுகிறார்.  

மரியோ வர்கோஸ் லோசா எழுதிய கட்டுரையில் மார்கோவின் மேதைமையைப் போற்றி அவரைப் புனைவுகள் எழுத அழைத்திருப்பார். செர்காஸ் செர்வாண்டீசின் ‘டான் குய்க்சோட்டுடன்’ தான் மார்க்கோவை ஒப்பிடுகிறார். மார்க்கோ நாவல் எழுதாத ஒரு நாவல் ஆசிரியர் அல்லது நாவல் எழுதுவது அவருக்குப் போதாமல் தன் வாழ்வையே நாவலாக மாற்றி, நாவலுக்குள் வாழ முனைந்தவர் என்கிறார். நாவலாசிரியனுக்கு பொய் சொல்லும் உரிமை இருக்கிறது. ஆனால் சாமானியனுக்கு இல்லை. செர்காஸ் துவக்கத்திலேயே மார்க்கோவிடம் கூறிவிடுகிறார், தான் இந்த புத்தகத்தை மார்க்கோவை மீட்பதற்காக எழுதப் போவதில்லை, ஆகவே அத்தகைய எதிர்பார்ப்புகள் வேண்டியதில்லை, என்கிறார். மார்க்கோ, என்னை யாரும் மீட்க வேண்டியதில்லை, என் தரப்பை கேளுங்கள் போதும், என்று சொல்கிறார். 

நாவலின் இறுதிப் பகுதிகளில் மார்க்கோவின் முகமுடியை முற்றிலுமாக நீக்கியாகி விட்டது எனும் புள்ளியை அடையும்போது அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்படுவதாக செர்காஸ் நம்புகிறார். டான் குய்க்சோட் மீண்டும் அலோன்சோவாக மாறி தன் உண்மையை ஒப்புக்கொண்டு நிம்மதியாக மரணிப்பதைப் போல் தன் நூலும் மார்க்கோ புனைந்துகொண்ட குய்க்சோட்டை வீழ்த்தி அசல் ஆளுமையைச் உணர செய்யும் என நம்புகிறார். செர்காஸ் மார்க்கோவைப் பற்றி எழுதுகிறாரா அல்லது மார்க்கோ செர்காஸ் வழியாக தன்னை வெளிப்படுத்துகிறாரா என்பது பூடகமாக வாசகரின் விவாதத்திற்கே விடப்படுகிறது. மார்க்கோவைப் பற்றிய இறுதி மதிப்பீடு பிரமிப்பாகவும், வெறுப்பாகவும் அல்லது பரிதாபமாகவும் இருக்கலாம். அதையும் வாசகனின் அகச் சான்றுக்கே விட்டுவிடுகிறார்.

செர்காசின் இந்த நாவல் வாசகனாக, படைப்பாளியாக, மனிதனாக நம் ஒவ்வொருவரிடமும் நம்மைத் துன்புறுத்தும் அறக் கேள்விகளை எழுப்புகிறது. நமது தன்முனைப்பை, நமது போலி சுயங்களை, ஆளுமைப் பிளவுகளை சுயபரிசீலனை செய்துகொள்ள நம்மை அழுத்துகிறது.

No comments:

Post a Comment