(காலச்சுவடு கட்டுரை)
காலப்போக்கில் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், சுவாரசியமான பொய்களை நெய்வதற்காக நீங்கள் நாவலாசிரியர் ஆக முடியாது, நீங்கள் உண்மை கூற வேண்டும் என்பதற்காகவே நாவலாசிரியராக இயலும். – ஹிலாரி மாண்டெல்
பிபிசி வானொலி ஏற்பாடு செய்யும் ரெய்த் உரைகள் முக்கியமான சிந்தனைப் போக்குகளை அறிமுகம் செய்பவை. 1948ஆம் அண்டு பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் துவக்கி வைத்த இந்த உரைகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விவாத கோணங்களை முன்வைப்பவை. இவ்வாண்டு எழுத்தாளர் ஹிலாரி மான்டெல் வரலாற்று நாவல்களின் சவால் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி ஐந்து தொடர் உரைகள் ஆற்றியுள்ளார் (http://www.bbc.co.uk/programmes/b08vkm52) .இக்கட்டுரை அவருடைய உரையின் பேசுபொருளை சுருக்கமாக அறிமுகப்படுத்தவும், விவாதங்களை எழுப்பவும் முயல்கிறது.
ஹிலாரி மான்டெல் இருமுறை புக்கர் விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் எனும் பெருமைக்குரியவர். அவருடைய வரலாற்று புனைவுகள் மத்தியகால ஆங்கிலேய அரசை மையமாக கொண்டவை, குறிப்பாக ஆங்கிலேய அரசர் எட்டாம் ஹென்றி மற்றும் டூடர் வம்சாவளியினரின் காலகட்டத்தை சித்தரிப்பவை.
‘The Day is for living’( http://www.bbc.co.uk/programmes/b08tcbrp), ‘Iron maiden’ (http://www.bbc.co.uk/programmes/b08v08m5), ‘Silence grips the town’ (http://www.bbc.co.uk/programmes/b08vy0y6), ‘Can these bones live?’ (http://www.bbc.co.uk/programmes/b08wp3g3). ‘Adaptation’ http://www.bbc.co.uk/programmes/b08x9947) ஆகிய ஐந்து தலைப்புகளில் உள்ள உரைகளில் இறுதி உரையான ‘adaptation’ நாவல்களை மேடை நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் உருவாக்குவதில் உள்ள சவால்களைப் பேசுகின்றன. அவ்வுரையை மட்டும் இக்கட்டுரையில் தவிர்த்திருக்கிறேன்.
ஹிலாரியின் தொடர் உரை இரண்டு தளங்களை தொட்டு செல்வதாக தொகுத்து கொள்ளலாம்.
1. வரலாறு, வரலாற்று புனைவு, வாழ்க்கைச் சரிதை- ஆகிய வடிவங்களின் தன்மை, தேவை, எல்லை மற்றும் அவற்றிடையே அமைந்த உறவு.
2. வரலாற்று புனைவின் சவால்கள், வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள்.
முதல் உரையில் வரலாற்றின் நெகிழ்வுத்தன்மையை பற்றி விரிவாக தன் கருத்துகளை முன்வைக்கிறார். நமக்கு கிடைக்கும் வரலாற்று தரவுகள் காத்திரமானவை, ஆனால் வரலாற்றாசிரியன் அத்தரவுகளை வெறுமே அடுக்கியளிக்க இயலாது, வரலாற்றாசிரியன் முழுக்க தர்க்கத்தின் பாற்பட்டு செயலாற்றவும் முடியாது என்கிறார். அதே நேரம், வரலாற்றின் எல்லையையும் தெளிவாகவே சுட்டுகிறார். ‘சான்றுகள் முழுமையானவையல்ல. மெய்யின் பகுதிகள் என்றாலும், உண்மைகள் மெய்யாகாது, தகவல்கள் அறிவாகாது, வரலாறு என்பது கடந்தகாலம் அன்று, கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை தொகுக்கும் முறைமை என்றே வரலாற்றை கூறலாம். சான்றுகளின் ஆவணத்தொகை,’ என்கிறார்.
வரலாற்று ஆசிரியருக்கும் புனைவெழுத்தாளனுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி விவாதிக்கும் போது, “வரலாற்று ஆசிரியன் நடுநிலைக்காக போராடுகிறான், ஆனால் நாவலாசிரியருக்கு அது ஒரு சிக்கல் அல்ல. அவனுடைய பாத்திரங்களின் பின் ஒளிந்து கொள்ள முடியும்.” என்கிறார். வரலாற்று ஆசிரியன் நடுநிலையை விழைகிறான், அதை நெருங்குகிறான், ஆனால் முழுக்க நடுநிலை என்பது சாத்தியமா? வரலாற்று ஆசிரியன், அவனுக்கு கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியை கட்டமைக்கிறான், அதற்கொரு திசையை அளிக்கிறான், நிகழ்வுகளின் நோக்கங்களை ஊகிக்கிறான். மென்மையான அளவில் என்றாலும் இங்கு புனைவுத்தன்மை தென்படுகிறது. எனவே, புனைவு, சரிதை, வரலாறு மூன்றும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல எனும் பார்வையை முன்வைக்கிறார். “வரலாற்று ஆசிரியன், வாழ்க்கைச் சரிதை எழுத்தாளன், புனைவெழுத்தாளன் வெவ்வேறு நெருக்கடிகளுக்குள் இயங்குகிறார்கள், எனினும் அவை எதிரெதிரானவை அல்ல, ஒன்றையொன்று நிரப்புபவை.” தூய வரலாறு, தூய புனைவு என ஏதுமில்லை என்பதே அவருடைய வாதத்தின் மையமாக இருக்கிறது.
ஹிலாரி மரித்த மனிதன் குரலற்றுப் போகிறான் என்கிறார். அதன்பின் அவன் புனைவுக்குள் எழுகிறான். எனினும், தன் குரலாக அவன் ஒலிக்கப் போவதில்லை என்றானவுடன், அவனது பேச்சுக்கும் செயலுக்கும் நாம் நமது சாய்வுகளுக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்து பொருளேற்றுகிறோம் என்கிறார். இங்கு, ஒரே தரவுகளைக்கொண்டு ஒரே மனிதனை நாயகனாகவும் எதிர்நாயகனாகவும் கட்டமைக்க முடியும்.
தனி மனிதர்களாக நாம் வரலாற்றைத் துழாவி கொண்டிருக்கிறோம், நம் மூதாதையர்களின் விழிவழியே உலகை நோக்க முயல்கிறோம். ஹிலாரி ஒரு மேற்கோள் அளிக்கிறார் ‘பெயரற்றவர்களின் நீண்ட பாரம்பரியத்திலிருந்து நான் உதித்திருக்கிறேன்’. நம்மில் பெரும்பான்மையினருக்கு இது பொருந்தும். தனிப்பெரும் இருப்பற்ற மக்கள் பெருக்கின் வாரிசுகள் நாம். வரலாறுகளை அசைத்த முன்னோர்கள் அல்ல, வேடிக்கை பார்த்தவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்களின் வாரிசுகள் நாம். வரலாறு நம்மைப் போன்றவர்களுக்கு அளிக்க மறுத்த இடத்தை வரலாற்றுப் புனைவுகள் எடுத்துக்கொண்டன. சாமானியர்களின் விழிவழியே நழுவிச்செல்லும் காலப்பெருக்கை நிலைநிறுத்த முயல்கின்றன.
நடுகல் துவங்கி நம் பண்பாட்டில் நினைவுகூர்தல் முக்கிய பங்காற்றுகிறது. அடக்குமுறை அரசுகள் துரோகிகளுக்கு அளிக்கும் மிகக் கொடூரமான தண்டனை என்பது மரணம் அல்ல, வரலாற்று தடங்களை அழித்தல். மனிதன் வாழ்ந்து மறைந்த பின் விட்டுச்செல்வது வரலாற்றை மட்டுமே. அது எத்தனை எளிமையானதாகவும், சாதரணமாகவும் இருந்தாலும் கூட. அதையும் அவனிடமிருந்து பிடுங்குவது என்பது வாழ்வு நோக்கத்தை சிதைப்பது, வாழ்க்கையின் அர்த்தப்பாடை அழிப்பது.
ஹிலாரி முன்னோர்களை நினைவுக்கூர்தல் எத்தனை முக்கியமானது என குறிப்பிடுகிறார். “மனிதனுக்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்கள் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்க முடியாத மாமிசப் பிண்டத் தொகையாக மாறுதல் அது.” கல்லறைகள் இறந்தவர்களின் நினைவுச்சின்னங்கள். ஏதோ ஒருவகையில் இறப்புக்கு பின் எஞ்சும் அடையாளங்களில் ஒன்று.
.
ஹிலாரி நினைவுக்கூர்தலின் அரசியலைப் பற்றி பேசுகிறார். அதிலுள்ள தேர்வுகள் அசலான உண்மை அறிதலை விழைவாகக் கொண்டவையா, எனும் கேள்வி முக்கியமானது. நினைவுகூர்தல் சில சமயங்களில் உண்மையை நாடுகிறது, சில சமயங்களில் நமக்கு வாகான மாயத்தோற்றத்தை தேடுகிறது என்கிறார். தனி மனிதர்களாக துயரத்தினாலோ அல்லது தேவையினாலோ நாம் கடந்தகால மனிதர்களை மீட்கிறோம். ஒரு சமூகமாக நம் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப ஒரு கடந்த காலத்தை நாடுகிறோம். இனக்குழுவாக, தேசமாக நாம் நம் கடந்தகால தொன்மங்களைத் தேடுகிறோம், கடந்தகால பெருமைகளையோ அல்லது துயரங்களையோ அதன் அடிநாதமாக மீட்க முயல்கிறோம், ஆனால் அரிதாகவே சமரசமற்ற உண்மையின் பாற்பட்டு கடந்த காலத்தை அணுகுகிறோம் என்கிறார்.
ஹிலாரி முந்தைய பகுதியில் வரலாறு நெகிழ்வுத்தன்மை கொண்டது எனச் சொல்வதும் சமரசமற்று உண்மையை தேடுவது என்பதும் முரணாக ஒலிக்கிறதோ என்றொரு ஐயம் எழுந்தது. ஆனால் அப்படியல்ல, வரலாற்றின் நெகிழ்வுத்தன்மையை புனைவின் சாதனமாக பயன்படுத்த இயலும் என்பதையே அவர் சொல்கிறார் என்பதை இந்த மொத்த உரைகளில் இருந்து புரிந்துகொள்ள இயலும். மற்றோர் தருணத்தில் “வரலாற்று புனைவின் மிகப்பெரிய பலம் என்பது பொதுவான ஆவணங்களில் இருந்து, பொதுவான கதைகளில் இருந்து கலையைத் தேர முடிவதே. வரலாற்றுக்கு நெருக்கமாகும் தோறும் கதை வலுவடைகிறது” என வரலாற்று புனைவுகள் வரலாற்று சான்றுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வாதிடுகிறார்.
வரலாற்று புனைவுகளில் உள்ள சவால்கள், வழிகாட்டுதல்கள் எச்சரிக்கையை கீழ் வரும் புள்ளிகளாக தொகுத்துகொள்ளலாம்.
1.பிரதிநிதித்துவ இலக்கியம் மேம்பட்ட இலக்கியமாக இருக்க வேண்டியதில்லை.
ஹிலாரி மிக முக்கியமான ஒரு தற்காலப் போக்கை சுட்டிக்காட்டுகிறார், வரலாற்று கற்பனாவாதம் முன்பு பெரும் பிரபுகுல குடும்பங்களுடனான தொடர்பு, மேல்மட்ட மனிதர்களின் சமூக தொடர்பு பற்றி இருந்தன, தற்காலத்தில் அது அப்படியே திரும்பி இடப்பெயர்வு, மறுக்கப்படுதல் என்று மாறியுள்ளது என்கிறார். மற்றோர் தருணத்தில் இதே கருத்தை விமர்சனபூர்வமாக நீட்டித்து சொல்கிறார்- “பல ஆண்டுகளாகவே பெரும் கதையாடல்களில் இருந்து நாம் விலகி வந்து கொண்டிருக்கிறோம், வேரற்ற, குரலற்ற, உடைந்த மாந்தர்கள் மீது நமக்கோர் அதீத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஆகவே நாம் மகத்தான மனிதர்களை ஐயம் கொள்கிறோம், நாயகர்களை புறந்தள்ளுகிறோம். முதலில் கடவுள்கள் வெளியேறினார்கள், பிறகு நாயகர்கள், நமக்கு எஞ்சியிருப்பது அழுக்கேறிய, சமரசத்துக்குட்பட்ட நமது சுயங்கள் மட்டுமே.”
இலக்கியம் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்றொரு நம்பிக்கை இங்குண்டு. உண்மையில் அத்தகைய நோக்கங்களை பறைசாற்றிக்கொண்டு இலக்கியம் பிழைக்க முடியுமா என்றொரு கேள்வியை ஹிலாரியின் கருத்து என்னுள் எழுப்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களை சந்தித்தபோது, இலங்கையின் முற்போக்கு அரசியலின் அழுத்தங்கள் காரணமாக சில ஆண்டுகள் எழுதாமல் இருந்ததைக் கூறினார். இன்னின்ன குரல்கள் இன்னின்ன தொனியில் ஒலிக்க வேண்டும் எனும் முன்முடிவுகளோடு இலக்கியம் அணுகப்பட முடியாது என்றே நம்புகிறேன். பிரதிநிதி அரசியலைப்பற்றி மற்றுமொரு தருணத்தில் தீர்க்கமாக விமரிசிக்கிறார்- “நாம் பிறருடைய குரலாக ஒலிக்க முயலும் போது கவனமாக இருக்க வேண்டும். நாம் காலனியவாதிகளா? ஒட்டுண்ணிகளா? வரலாற்றால் வஞ்சிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதும்போது அதை விலாவாரியாக எழுதி அவர்களுடைய நிலையை உறுதிப்படுத்துகிறோமோ? அல்லது பாதிக்கப்பட்டவர்களை வெற்றியாளர்களாக சித்தரித்து வரலாற்றை மாற்றி எழுதலாமா? கடந்த காலத்து பெண்களைப் பற்றி எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால் இது, அவர்களுக்கு இல்லாத அதிகாரத்தை அளிக்காமல் இருக்க முடிவதில்லை”.
2. வரலாறும் புனைவும் முயங்கும் புள்ளிகள்
வரலாறும் புனைவும் கலக்கும் புள்ளிகள் அவருடைய உரையின் மிக முக்கியமான பகுதி. எந்தெந்த தளங்களில் புனைவு செயல்பட முடியும்? எந்த அளவுக்கு வரலாற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது போன்ற கேள்விகளை அவர் எதிர்கொள்கிறார். புற உலகை கச்சிதமாக கட்டமைப்பதற்கு வரலாற்று தகவல்கள் தனக்கு உதவுகின்றன என்கிறார். நிகழ்வுகள் திட்டவட்டமாக புலப்படுகின்றன, ஆனால் பாத்திரங்களின் உணர்வு மோதல்களை, நாடகீய தருணங்களை, அலைக்கழிப்பை, புனைவைக்கொண்டு நிரப்புகிறேன் என்கிறார். வரலாற்று சான்றுகளில் உள்ள இடைவெளிகள், மவுனங்கள் தன்னை நாவலாசிரியர் ஆக்கின என்கிறார். எனினும் ‘ எனது நிலையை கேள்விக்குட்படுத்தும் சூழலை நான் விரும்புவதில்லை என்பதால் நான் இட்டுக்கட்டுவதில்லை, ஒருவழியாக என்னை திருப்திப்படுத்தும் நடுவாந்திரமான பாதையை கண்டடைந்தேன். ஒரு மனிதனின் உளக் கொந்தளிப்பை நான் கற்பனை செய்துவிட முடியும், ஆனால் அவனுடைய வசிப்பறையின் சுவர்தாளின் நிறத்தை ஒருபோதும் இட்டுக்கட்ட மாட்டேன்.”
ஒரு தேர்ந்த வரலாற்று புனைவு எழுத்தாளன் ‘நிகழ்வு கனவை சந்திக்கும் புள்ளியில், அரசியல் உளவியலையும், தனிப்பட்டவை பொதுவானவற்றை சந்திக்கும் புள்ளிகளிலும் இயங்குகிறான்.’ என்கிறார் மற்றோர் தருணத்தில் . “வரலாற்று புனைவின் பணியென்பது காப்பகத்திலிருந்து கடந்தகாலத்தை மீட்டு அதை ஓர் உடலில் பொறுத்துவது தான்.” என்கிறார்.
.
3. வரலாற்று புனைவின் சவால்கள்
வரலாற்று ஆசிரியர்கள் சான்றுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் பயிற்சி உடையவர்கள், நாவலாசிரியர் இக்கலையை இனிதான் சரியாக கற்க வேண்டும் என்கிறார். ஒரு கேள்விக்கு – வரலாற்று தரவுகள் மற்றும் ஆவணங்களில் சில நேரங்களில் ஒரு எழுத்தாளராக நாம் தேடுவது கிட்டாமல் போகும், உள்ளே என்ன நிகழ்ந்தது? இந்த விளைவுக்கு காரணமான திருப்புமுனை என்னவாக இருக்கும்? வேறு என்ன சாத்தியங்கள் இருந்திருக்கக் கூடும்? என பல கேள்விகள் மனதை அரிக்கும். அதன் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு காட்சியையும் கண்டடைய முற்பட்டு நாடகீய தருணங்களை அடைய நாடுவதே எழுத்து வாழ்வின் அற்புத கணங்கள் என்கிறார். வரலாற்று புனைவாசிரியனின் மிக முக்கியமான சவால் என்பது அவன் இன்றைய மொழியை, இன்றைய அறிதலை பழங்காலத்துக்கு கொண்டு செல்கிறான். அங்கு கதை மாந்தர்களுக்கு அவர்களுடைய வருங்காலத்தில் என்ன நிகழும் என்பது தெரியாது, அவர்களுடைய மொழியை செவி கூர்ந்து கேட்கிறான், அதை சமகால மொழியில் திரும்பகூற முயல்கிறான்.
சாமானியர்களின் பார்வையில் வரலாற்று நிகழ்வுகளை புனைவாக்கும்போது சற்றே கூடுதல் சுதந்திரம் உண்டு. வரலாற்று நாயகர்களின் பார்வையில் புனைவை நகர்த்துவது சவாலானது. நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழாமல் கவனமாக கையாள வேண்டும்.
4.சுவாரசியமாக்குதல்
வரலாற்று புனைவு என்ன செய்யக்கூடும் என்பதை தெளிவாகவே முன்வைக்கிறார்.‘நேர்மையாக எழுதப்பட்ட வரலாற்று புனைவு தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது நம்மை அசவுகரியமான எல்லைகளுக்கு இட்டுச்செல்ல கூடும். ‘இதை நம்பு ‘ என கோராது, மாறாக ‘இதைப் பரிசீலித்து பார்’ என்று வரலாற்று ஆசிரியனுக்கு அருகமர்ந்து – மாற்று உண்மைகளை அல்ல, மேலதிக உண்மைகளைக் கூட அல்ல, புதிய திறப்புகளை அளிக்க முடியும்.’ என்கிறார். காந்தியின் காரியதரிசி கல்யாணத்தின் நினைவுகளைக்கொண்டு எழுதப்பட்ட குமரி எஸ்.நீலகண்டனின் நாவல் நினைவுக்கு வருகிறது. நேர்மையாக எழுதப்பட்டிருந்தது, சில முன்முடிவுகளை அசைத்தது, எனினும் சுவாரசியமாக இருந்ததா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். எனினும் இங்கு சுவாரசியம் என்பதை மட்டும் கணக்கில் கொள்ள கூடாது, அதீத சுவாரசியம் வரலாற்று கற்பனாவாத நாவல்களையே உற்பத்தி செய்யும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள் தமிழின் முதல் வரலாற்று நாவல்கள் என அடையாளபடுத்தபடுகின்றன. ஓரளவு தரவுகளையும் சுவாரசியத்தையும் சமன்படுத்த முயன்றிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ , பூமணியின் ‘ அஞ்ஞாடி’ ஆகிய நாவல்களையும் இவ்வரிசையில் வைக்கலாம். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘சிக்க வீர ராஜேந்திரன்’ இவ்வகையில் சமநிலையை எட்டிய மிகமுக்கியமான நாவல். ஜெயமோகனின் ‘வெள்ளையானையும்’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சி. “நாம் வாழாத வாழ்வுக்கான உளவியல் ஈடாக எல்லா நாவல்களையும் வரையறுக்கலாம். வரலாற்று நாவல்கள் அனுபவங்களின் மீதான பேராசையால் உருவாகின்றன.” என்கிறார்
”
5.சில எச்சரிக்கைகள்
வரலாற்று புனைவெழுத்தாளனுக்கு சில எச்சரிக்கைகளை அளிக்கிறார். “தொலைந்த உலகை கற்பனை செய்யும் போது நாம் நம் புலன்களை தயார்ப்படுத்த வேண்டும். இறுதி முடிவுக்கு வருவதற்கு முன் காணவும் கேட்கவும் வேண்டும். ஆனால் நாம் வேகமாக முடிவுக்கு வந்துவிடுவோம். கடந்த காலத்தைப்பற்றிய அச்சம் மற்றும் மனவிலக்கத்திற்கும் நினைவேக்கத்துக்குமாக நம் முடிவுகள் ஊசலாடும்.” “நாம் பிறருடைய குரலாக ஒலிக்க முயலும் போது கவனமாக இருக்க வேண்டும். கடந்தகாலத்தையும் ஒரு பண்டமாக்கி விற்கவே நாம் விழைகிறோம்” என்கிறார். “நாவலாசிரியர் ஆய்வு செய்வதாக ஒருபோதும் சொல்லிக்கொள்ளக் கூடாது, உண்மையில் ஏற்கனவே இருக்கும் தரவுகளில் இருந்து தேவையான உண்மைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறான். பயின்ற வரலாற்று ஆய்வாளானாக இல்லாத பட்சத்தில் நாவலாசிரியர்களுக்கு முதன்மை தரவுகளை ஆய்வு செய்யும் திறன்கள் கிடையாது” என ஆணித்தரமாக சொல்கிறார். .
6.வரலாற்று புனைவு எழுத்தாளனின் பொறுப்பு
வரலாற்று புனைவை வாசகர்களுக்கு முன் படைக்கும் போது நாவலாசிரியருக்கு சில கூடுதல் பொறுப்புக்கள் உள்ளன என்கிறார் ஹிலாரி.” கடந்தகால மக்களை தாழ்வானவர்களாக சித்தரிக்க கூடாது, நம்முடைய வேறு வடிவங்களாக ஆக்கி அவர்களை சிதைத்துவிட கூடாது. நமக்கு கிடைக்கும் சான்றுகளை ஐயத்துடனே அணுக வேண்டும். பிழையை தொடரக்கூடாது. நமது போதாமைகளையும் இடைவெளிகளையும் படைப்பூக்கத்துடன் பயன்படுத்த முடியுமா என்று நோக்க வேண்டும்”.
7.வாசகர்களுக்கு சில சொற்கள்
வாசகர்கள் மீதான பொதுவான எதிர்பார்ப்புகளை சொல்கிறார் ஹிலாரி. வாசகர்கள் பொதுவாக தாங்கள் முதன்முதலாக அறிந்த வரலாற்று சித்திரங்கள் மீது மிகுந்த பிடிப்புடையவர்களாக திகழ்கிறார்கள். வரலாற்று புனைவெழுத்தாளர் தனக்கு கிடைத்த தரவுகளைக்கொண்டு வேறோர் சித்திரம் கட்டியெழுப்ப முற்படும் போது அதை அவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். அவர்களுடைய பாலியத்தை பறிப்பது போல் உணர்கிறார்கள். இரண்டு வெவ்வேறு தருணங்களில் ஹிலாரி வாசகர்களை சற்று கடுமையாக அணுகுகிறார். ‘ பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் நாடுபவர்களுக்கு வரலாறு உரிய இடமல்ல, பொருட்படுத்தத்தக்க புனைவுகளைப்போல் பொருட்படுத்தத்தக்க வரலாறும் அயராத சுய பரிசீலனைகளால் ஆனதே’ என்கிறார். மற்றொரு தருணத்தில் ‘நீங்கள் கண்டடைந்த இல்லத்திற்குள் வாசகன் விருந்தினராக வரவேற்கப்பட வேண்டும், ஆனால் அவன் ஒருபோதும் காலைத்தூக்கி நாற்காலியின் மீது வைக்கக்கூடாது.’ என்கிறார்.
. 8.தொன்மம் என்பது
. “தொன்மம் என்பது பொய்யல்ல, குறியீட்டிலும், உருவகத்திலும் வடிக்கப்பட்டுள்ள உண்மை” எனும் கருத்து வெண் முரசு போன்ற இந்திய எழுத்தை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் மிக முக்கியமான கருவி. ஒப்பீட்டளவில் வரலாற்று ஆவணங்களை காட்டிலும் இந்திய துணை கண்டம் தொன்மங்களுக்கும் புராணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதை வரலாற்று ஆய்வாளார்கள் ஒரு மிக முக்கியமான குற்றசாட்டாக வைப்பதுண்டு.எனினும் தொன்மங்களோ, நாட்டார் கதைகளோ, புராணங்களோ நிகழ்வுகளின் ஆவணங்கள் அல்ல. மாறாக அன்றைய சமூகம் ஆறாம் என்றும் விழுமியம் என்றும் எதை வகுத்ததோ அதை காலாதீதமாக கொண்டு செல்ல முயன்றது. அதில் வெற்றியும் பெற்றது. கற்பு, வீரம், தியாகம், ஞானம் என சிலவற்றை தக்கவைத்துகொள்ளும் விழைவு.
இவ்வெட்டு விதிகள் தவிர்த்து, மூன்றாவது உரையில் ஃபிரெஞ்சு புரட்சி பற்றி நாவலும் நாடகமும் எழுத தன்னை ஓர் அறையில் அடைத்துக்கொண்டு மாய்ந்த போலாந்து பெண் எழுத்தாளர் ஸ்டாசியாவின் கதையை முன்வைத்து விரிவாக பேசுகிறார். ஃபிரெஞ்சு புரட்சியில் ஒடுங்கிய ஒரு நாயகனை மையமாக கொண்டு வெறித்தனமாக எழுதுகிறார். உணவு உறக்கம் வெளியுலகம் என ஏதுமின்றி எழுதி தீர்ந்து நோய் முற்றி மறைகிறார். “எவரேனும் எழுத்து ஒரு மருந்து என சொல்லக்கூடும் என்றால், நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன், இவ்வாழ்வை நோக்க சொல்வேன்” என்கிறார் ஹிலாரி.
ஸ்டாசியா விஷயத்தில் என்ன தவறு நிகழ்ந்தது எனும் கேள்வியை எழுப்புகிறார். ‘ஸ்டாசியா மீண்டும் மீண்டும் உண்மையைக் கண்டடைய கடுமையாக உழைத்தார். ஆனால் அந்த உண்மையை உரிய கூறுமுறையில் பயன்படுத்தி வலுப்படுத்த அவரால் இயலவில்லை. முழுமை வேட்கை அவரை முடமாக்கியது. அவருடைய படைப்பை எடைபோடும் இடைவெளியை இழந்தார், சமரசம் என்பது அவமரியாதையல்ல எனும் நடைமுறை உண்மை அவருக்கு உரைக்கவில்லை. நுண்தகவல்கள் முக்கியம் தான் ஆனால் வேகம், பிடிமானம், வடிவம் என இன்னபிற விஷயங்களும் அதேயளவுக்கு முக்கியம்” என்கிறார்.
“உண்மைக்கும் முழு உண்மைக்குமான வேறுபாட்டை ஸ்டாசியா உணரவில்லை. தகவலை விடுப்பது என்பது அவரை பொறுத்தவரை ஏமாற்றுவது. போலியாக எதையும் முன்வைத்துவிடக்கூடாது எனும் அதீத எச்சரிக்கை உணர்வு காரணமாக அவருடைய திசையையும் வழிமுறையையும் இறுக்கமாகப் பேணிக்கொண்டார். இப்புள்ளியில் அவருடைய கலை தோற்றுப்போனது.”
ஸ்டாசியாவின் கதை என்னை வெகுவாக பாதித்தது. கலைக்காக தன்னை அளித்தல் என்பது இருக்கட்டும், அப்படி தன்னை உருக்கி வடித்தது சரியாக உருக்கொள்ளவில்லை என்பதே மிகப்பெரிய சோகம். ஹிலாரி சில சமயங்களில் போதிய தகவல்கள் இல்லையென்றால் எவருக்காகவும் காத்திராமல் உள்ளுணர்வை நம்பி நம்பகத்தன்மையை கைகொள்ள அறிவுறுத்துகிறார். அவருடைய இக்கருத்து சார்ந்து சில விமர்சனங்கள் அவர் மீது வைக்கபடுவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக வரலாற்று புனைவின் வடிவம், நோக்கம், சவால் என பல தளங்களில் நம் சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள ஹிலாரியின் உரை உதவுகிறது.
நரோபா
. .
No comments:
Post a Comment