புத்தகங்கள்

Pages

Monday, August 13, 2018

வேதமும் ஆயுர்வேதமும்


(ஜூலை தமிழினி இதழில் வெளியான கட்டுரை)
1

முன்பொரு காலத்தில் அருந்தவம் புரிந்த துறவிகளை அவர்களுடைய இறுதி இலக்கான வீடுபேறை அடைய விடாமல் நோய்கள் சூழ்ந்து வாட்டின. செய்வதறியாது திகைத்த முனிவர்கள் ஆத்ரேயர் தலைமையில் இந்திரனிடம் தங்கள் குறையை முறையிட்டனர். உலக உயிர்கள் பிணியின்றி வாழ இந்திரன் அவர்களுக்கு ஆயுர்வேதத்தை பாடம் சொன்னான். இந்திரனுக்கு தக்கனும், தக்கனுக்கு அஸ்வினி குமாரர்களும், அஸ்வினி குமாரர்களுக்கு நான்முகனும் ஆயுர்வேதத்தை பாடம் சொன்னார்கள். பிரம்மன் ஆயுர்வேதத்தை படைக்கவில்லை எல்லையற்ற ஞானத் தொகையிலிருந்து நினைவு கூர்ந்தான் – ஆயுர்வேதம் மண்ணுக்கு வந்த கதை, சரக சம்ஹிதை

சரக சம்ஹிதையின் துவக்கத்திலேயே இக்கதை கூறப்படுகிறது. இந்திரனிடமிருந்து கற்ற ஆத்ரேயர் அக்னிவேஷர் உட்பட அவருடைய ஆறு சீடர்களுக்கு ஆயுர்வேதத்தை அளிக்கிறார். சரகர் அக்னிவேஷரின் சம்ஹிதையைத்தான் சீரமைத்து சரக சம்ஹிதையாக உருவாக்குகிறார். சுசுருத சம்ஹிதையில் இந்திரன் வரை இதே வரிசை தான், ஆனால் இந்திரனிடமிருந்து நேரடியாக தன்வந்தரி பாடம் கற்று சுசுருதர் உட்பட அவருடைய சீடர்களுக்கு அளிக்கிறார். காசியப சம்ஹிதையில் இந்திரனிடமிருந்து நேரடியாக பரத்வாஜர் கற்கிறார், பின்னர் காசியபருக்கு அளிக்கிறார். சரக சம்ஹிதை காய சிகிச்சை எனும் பொது மருத்துவ பிரிவுக்கும், சுசுருத சம்ஹிதை அறுவை மருத்துவத்திற்கும், காசியப சம்ஹிதை குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் மூன்று முக்கிய பிரிவுகளை இந்த சம்ஹிதைகள் விவாதிக்கின்றன. மீதி பிரிவுகளுக்கும் இத்தகைய மூல நூல்களும் குரு பரம்பரையும் இருந்திருக்கலாம். நிமி தோளுக்கு மேலுள்ள உறுப்புகளின் நோய்களை மற்றும் சிகிச்சைகளை பற்றி பேசும் ஷாலாக்கியம் எனும் பிரிவைப் பற்றி ‘நிமி தந்திரம்’ என்று ஒரு நூல் எழுதியதாக  நம்பப் படுகிறது. நிமியின் வழி வந்த விதேக தேசத்து ஜனகரும் முக்கியமான மருத்துவ நிபுணராக கருதப் படுகிறார். நிமியைப் பற்றிய சுவாரசியமான தொன்மம் ஒன்றுண்டு. நிமி வஷிஸ்டரால் சபிக்கப்பட்டு தனது உடலை இழக்கிறான். தேகமற்றவனின் அரசு என்பதாலே விதேகம் என்று அவனுடைய அரசு அழைக்கப்படுகிறது. விதேகத்தில் இருந்து வந்தவள் என்பதால் வைதேகி என்று சீதைக்கு பெயருண்டு. நிமி பின்னர் சாப மீட்சியாக மனிதர்களின் கண்ணிமைகளில் வாழ்கிறான். கண் மூடுவதை நிமிலனம் என்றும் திறப்பதை உன்மீலனும் என்றும் சமஸ்க்ருதத்தில் சொல்கிறார்கள். ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்தையே ’நிமேஷம்’ என்று அழைக்கிறோம். இதுவே காலப்போக்கில் மருவி நிமிடம் என்றானது. நிமி கண்ணுடன் தொடர்புபடுத்தப்படுகிறார், கண் உட்பட தோளுக்கு மேலுள்ள  உறுப்புகளின் மருத்துவ நிபுணராகவும் கருதப்படுகிறார்.        

ஆயுர்வேதத்திற்கும் வேதத்திற்குமான தொடர்பு எத்தகையது? எனும் கேள்வியை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். வேதத்திற்கும் ஆயுர்வேதத்திற்குமான உறவு என்ன? வேதத்திற்கு முற்காலத்தில் இருந்து வேதம் மற்றும் சம்ஹிதைகளின் காலத்திற்கான வளர்சிதை மாற்றம் யாவை? ஆயுர்வேத நூல்களில் உள்ள வேதத்தின் தாக்கம் கொண்ட பகுதிகள் எவை? வேதத்தில் உள்ள மருத்துவ தகவல்கள் எவை? ஆகிய நான்கு கேள்விகளை இந்த அத்தியாயத்தின் நான்கு பகுதிகளில் விவாதிக்க முயல்கிறது. இதற்கு இரண்டு முக்கியமான நூல்களின் துணையை தேர்ந்திருக்கிறேன். டாக்டர். விநாயக் வாமன் கரம்பெல்கர் எழுதிய ‘அதர்வ வேதமும் ஆயுர்வேதமும்’ (Vedas and Ayurveda, Chowkhamba Krishnadas Academy, Varanasi பதிப்பித்தது) 1961 ஆம் ஆண்டு பதிபிக்கப்பட்ட முக்கியமான நூல். மற்றொன்று பிரித்தானிய மருத்துவ வரலாற்று ஆய்வாளர் கென்னெத் ஜிஸ்க் எழுதிய ‘வேதத்தில் மருத்துவம்’ (Medicine in Vedas, Motilal Banarasidas publishers, 2009). இதன் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

கரம்பெல்கரின் நூல் இந்தியரால் எழுதப்பட்டது, இத்தகைய ஆய்வின் முதல் முயற்சி. அவ்வகையில் முக்கியமானதும் கூட. அதன் முன்னுரையில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த ஆர்.பி. நாயக் இந்நூலின் சில மிகைகளை சுட்டிக்காட்டுகிறார் “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட, நுண்ணோக்கியில் மட்டுமே புலப்படும் வெவ்வேறு பாக்டீரியாக்களை அதர்வ வேதத்தின் கிருமிகளுடன்  தொடர்புபடுத்துவது நெருடலை ஏற்படுத்துகிறது.” சிற்சில இடங்களில் இத்தகைய தாவல்களை காண முடிகிறது. கந்தர்வர்களை விஷ கொடுக்கு உள்ள  பூச்சிகள் என்றும் அப்சரஸ்களை விஷமற்ற நீர் வாழ் பூச்சிகள் என்றும் உய்த்துணர முடியும் என்று அவர் சொல்வதை உதாரணமாக்கலாம். கென்னெத் ஜிஸ்க் கரம்பெல்கர் மற்றும் அவருக்கு பின்பான காலகட்டத்தில் ஆய்வு செய்த பலருடைய ஆய்வு கட்டுரைகளை துணைக்கழைத்து காத்திரமாக தனது நோக்கை பதிவு செய்கிறார்.

கரம்பெல்கர் அவருடைய நூலின் முன்னுரையில் மருத்துவ வரலாறின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்கிறார். “மருத்துவ வரலாறு என்பது தொல்கால மனிதன் அவனுடைய சவாலான சூழலை எப்படி எதிர்கொண்டான், துயரத்திலிருந்து மீள என்ன செய்தான், அக்காலத்து மருத்துவர்கள் அவனை நாடிவருபவர்களை நோயிலிருந்து மீட்க என்ன செய்தார்கள் போன்ற கேள்விகளை எதிர்கொள்கிறது. மருத்துவ அடிப்படைகளின் பரிணாமத்தை கவனிக்கிறது.”

மேலும் ஆயுர்வேதத்தின் வரலாறு என்பது ஒட்டுமொத்த இந்தியவியலின் பின்புலத்திலேயே புரிந்துகொள்ள முடியும் என்கிறார். “முழுமையாக இந்திய மருத்துவ வரலாறை புரிந்துகொள்ள ஆயுர்வேத நூல்கள் மட்டும் உதவாது. ‘தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியறிவியல், மெய்யியல், தொன்மவியல், வேத அறிவு, புராணங்கள் மற்றும் தாந்த்ரீக அறிதல் என இந்தியவியலின் எல்லா கிளைகளையும் பயன்படுத்தியே மருத்துவ வரலாற்று புதிர்களை விடுவிக்க முடியும். இந்த வேத மந்திரங்கள், தாந்த்ரீக வழிபாடு சாஞ்சி தூணின் புடைப்பு சிற்பங்கள் , ஜாதக கதைகள், ஜைன மதநூல்கள் என எல்லாமும் ஒன்றையொன்று நிறைவு செய்கின்றன.”

ஆயுர்வேதம் மண்ணுக்கு வந்த கதை அதற்கொரு காலாதீத தன்மையை அளிக்கிறது. தொடக்கமும் ஒடுக்கமும் அற்ற பேரறிவு. வேதங்களுக்கு அளிக்கப்படும் அதே நிலை. ஆயுர்வேதம் என்றில்லை பொதுவாகவே சம்ஸ்க்ருத இலக்கியங்களில் காணக்கிடைக்கும் இந்த காலாதீத தன்மையைப் பற்றி ஷெல்டன் போலாக்கின் அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. “நம்ப முடியாத அளவுக்கு, சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியவர்களை பற்றி நாம் ஏதும் அறிவதில்லை, அல்லது புனைபெயர்களை மட்டுமே அறிகிறோம். எவ்வித நூலாக இருந்தாலும்  எழுதியவரின் ஆளுமையை மற்றும் அவருடைய காலகட்டத்தை அடையாளம் காணும் அம்சங்களை நூலிலிருந்து முழுவதுமாக வெளியேற்றி வரலாறற்ற தன்மையை அளிப்பதற்கு ஓர் உத்தியாக கையாள்கிறார்கள். உதாரணமாக அரசாளுமை பற்றிய நூல்கள் வரலாற்று பூர்வமாக திகழ்ந்த ஒரேயொரு அரசை கூட சூட்டாமல் அதன் குடிமகன்களைப் பற்றி விவரிக்கிறது…சுருக்கமாக நாம் வெவ்வேறு பேசுபொருளில் ஒரேயொரு வரலாற்று ஆளுமை, இடம், நிகழ்வை அல்லது வரலாற்று ரீதியாக பொருள் தரக்கூடிய ஒன்றை எதிர்கொள்ளாமலேயே சம்ஸ்க்ருதத்தில் ஆயிரகணக்கான பக்கங்கள் வாசிக்கலாம்.”

ஆய்வாளர் முளேன்பால்ட் ஆயுர்வேதத்தின் தெய்வீக தோற்றம் என்பது அதன் நிரந்தர இயல்புகளில் ஒன்றல்ல, மாறாக இடைகாலங்களில் வளர்ச்சியின் போக்கில்அடைந்ததாக இருக்கக் கூடும் என்கிறார். “ஆயுர்வேதத்தின் தெய்வீக துவக்கத்தை ஏற்றோம் எனில் அதை அறிவியலாக கருத முடியாது.  ஆயுர்வேதத்தின் புனித தன்மையின் காரணமாக அதன் அடிப்படை கோட்பாடுகளில் புதிய போக்குகள் ஏதும் பெரிதாக உருவாகவில்லை. ஆனால் எக்காலத்திலும் அது ஓர் மூடிய அறிவுத்துறையாக இருந்ததில்லை” என்கிறார் முளேன்பால்ட்

ஆயுர்வேதம் தன்னை ரிக் வேதத்துடனும் தொடர்புறுத்தி கொள்கிறது. சரகரும் சுசுருதரும் ஆயுர்வேதத்தை அதர்வ வேதத்தின் உபவேதமாக குறிப்பிடுகிறார்கள். அதர்வ வேதத்தில் தான் அதிகமும் தாவர பயன்பாடுகள் மற்றும் மாந்த்ரீக மருத்துவம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆகவே இயல்பாக ஆயுர்வேதத்தை அதர்வ வேதத்தின் உபவேதமாக கருத முடியும். காசியபர் ஆயுர்வேதத்தை ‘ஐந்தாம் வேதம்’ என பிரகடனப்படுத்துகிறார். 

ஆயுர்வேதத்திற்கும் வேதத்திற்குமான தொடர்பைப் பற்றி ஐந்துவிதமான கருத்துக்கள் நிலவுவதாக கரம்பெல்கர் தொகுத்து பட்டியலிடுகிறார்.

ஐந்தாம் வேதம்

வேதத்தைக் காட்டிலும் மேன்மையானது.

அதர்வ வேதத்தின் உபவேதம்.

அதர்வ வேதத்தின் உபாங்கம்

தனித்த வேதாங்கம்.

இத்தனை விதமான பார்வை பகுப்புகள் உண்டெனினும், அதர்வ வேதத்துடன் கொண்ட உறவின் பரிணாமம் என்றவகையில் ஆயுர்வேதத்தை காண்பதே உகந்தது என்கிறார் கரும்பெல்கர். அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாக மட்டும் (உபாங்கம்) இருந்தது, பின்னர் காலப்போக்கில்  மதிப்புக்குரிய வகையில் வளர்ந்து உபவேதமாக பரிணாமம் கொள்கிறது.  பின்னர் அதன் பயன்மதிப்பின் காரணமாக ஐந்தாம் வேதம் என்றும் வேதத்திற்கு மேலானது என்றும் புகழப்படும் நிலையை எட்டியிருக்க கூடும் என்கிறார்.   

கென்னெத் ஜிஸ்க் வேறு மாதிரியான பார்வையை முன்வைக்கிறார். வேதத்தில் ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் போதுமான அளவு உருவாகவில்லை. அதர்வ வேதத்தில் பிணி நீக்கும் துதிகள், மந்திரங்கள் காணக்கிடைக்கின்றன. மூலிகைகள், சில நோய்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது உண்மை தான். ஆயுர்வேதத்தின் அடிப்படைகளில் ஒன்றான வாத, பித்த, கபங்களை பற்றிய தெளிவான பகுப்புகள்  இடம்பெறவில்லை என்பதே நிதர்சனம். உடலியங்கியலில் வேதத்தின் சில சிந்தனை ஓட்டங்கள் பரிசீலிக்கபட்டாலும், இவை தவிர்த்து வேத காலத்து நோயியலுடன் ஆயுர்வேதத்திற்கு பெரிய தொடர்ச்சி என ஏதுமில்லை. 

ஆயுர்வேதம் தன்னை வேதத்தில் வேர்கொண்டதாக அறிவித்துக்கொள்ள வரலாற்று காரணிகளை காட்டிலும் சமூக காரணிகளே அதிகம் என்பது அவர்ருடைய தரப்பாக உள்ளது. முளேன்பால்ட்டும் இதையே வலியுறுத்துகிறார் “சம்ஹிதைகளில் முந்தைய காலங்களில் புழக்கத்தில் இருந்த முரண்பட்ட மருத்துவ போக்குகளை பற்றிய தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன. சில கோட்பாடுகள் செல்வாக்கடைந்து எக்காலத்திற்குமான உண்மையை இயம்புவதாக தன்னை முன்வைத்துக்கொண்டன. இத்தகைய மாற்றத்தின் காரணங்களை ஊகிக்கவே முடியும். இறுக்கமற்ற மத நம்பிக்கைகள் கொண்ட மருத்துவ கோட்பாட்டாளர்கள் மீது இறுக்கமான மத பிரதிநிதிகளின் அழுத்தம் அதிகரித்திருக்கலாம்” என்கிறார். கரம்பெல்கர் இந்த சமூக தேவையை வேறு சொற்களில் சொல்கிறார். தர்க்க அடிப்படையான மருத்துவ முறை முன்னரே உருவாகி பயனுள்ளதாக இருந்தும் கூட பரவலான மக்கள் நம்பிக்கையை பெறவில்லை. ஆகவே அதற்கு ஒரு மத தொடர்பும் புனித பிம்பமும் தேவையாய் இருந்து . அதர்வ வேதத்தின் மாத்ரீக மருத்துவமும் முழுமை அடையவில்லை என்பதால் இவை ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தம் உருவானது என கௌஷிக சூத்திரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்.

கௌசிக சூத்திரம் தான் அதர்வ வேதத்தின் மாந்த்ரீக மருத்துவத்திற்கும் மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவ முறைக்குமான பாலமாக இருந்திருக்க வேண்டும் என கரம்பெல்கர் அடையாளபடுத்துவது இந்திய மருத்துவ வரலாற்றில் அவருடைய முக்கியமான பங்களிப்பாகும். கௌசிக சூத்திரம் வேத காலத்தில் மாந்த்ரீகம் அல்லாத மருத்துவ தரப்பை சார்ந்தது என்று கரம்பெல்கர் வாதிடுகிறார்.

வேத சம்ஹிதைகளின் காலத்திற்கும் ஆயுர்வேத நூல்களுக்கும் இடையிலான காலகட்டம் முக்கியமான ஆய்வுகளை மாற்றங்களை முன்னெடுத்தது. சரக சம்ஹிதையில் வரும் யஜ்ஜஹபுருஷியம் அத்தியாயத்தில் நிகழும் கூடுகை, ருசியைப் பற்றிய கூடுகை, கர்ப்ப வளர்ச்சியைப் பற்றிய விவாதம் ஆகியவை உபநிடத காலத்து இடையறாத ஞான தேடலை, வினாக்களை நமக்கு நினைவுறுத்துகின்றன. கௌசிக சூத்திரமும் இந்த இடைவெளி காலகட்டத்தை சார்ந்ததே. வேதத்தின் அங்கீகாரத்தை மருத்துவருக்கு வழங்குவதன் வழியாக மருத்துவர்களின் மதிப்பை பொது வெளியில் கௌஷிக சூத்திரம் நிறுவ முயன்றது. மருந்துகளுடன், சில மாந்த்ரீக வேத சடங்குகளை சேர்த்து செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார். எனினும் கென்னெத் ஜிஸ்க் கௌஷிக சூத்திரத்தின் காலகட்டத்தை பொ.மு இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என வகுக்கிறார்.

  ஆயுர்வேத கோட்பாடுகள் வேத மருத்துவத்தின் அடிப்படைகளில் உருவானதல்ல. ஆனால் வேத உருவகங்களை, தொன்மங்களை பயன்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் வேர்கள் தேசாந்திரிகளாக திரிந்த துறவிகளை சார்ந்திருந்தது, குறிப்பாக பவுத்த துறவிகளை சார்ந்திருந்ததாக ஆய்வாளர் கென்னெத் ஜிஸ்க் குறிப்பிடுகிறார். ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை கட்டமைப்பதில் பவுத்தம் அளப்பறியா பங்காற்றி உள்ளது என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் முன்மொழியும் கருத்தாக இருக்கிறது. சம்ஹிதைகளில் நாம் முறையாக வரையறுக்கப்பட்ட ஆயுர்வேதத்தின் முதல் வடிவம் பவுத்த நூல்களிலேயே உள்ளன.

மருத்துவம் பண்டைய காலத்தில் மெச்சத்தக்க தொழிலாக இருந்ததில்லை. தைத்திரிய சம்ஹிதையில் அஸ்வினி குமாரர்கள் மனிதர்களோடு மருத்துவர்களாக புழங்குவதால் தூய்மையற்றவர்கள் எனும் கருத்து நிலவுகிறது (6.4.9 1-3). தேவ மருத்துவர்கள் என புகழப்படும் அஸ்வினி குமாரர்களுக்கு அவிசு அளிக்கும் வழக்கம் கூட நின்று போனது. மருத்துவர்கள் தூய்மையற்றவர்கள், ஆகவே யாகத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதால் பிராமணர்கள் மருத்துவம் புரிய கூடாது என்று அறிவுறுத்துகிறது. (6.4.9.2.2). சதபத பிராமனத்திலும் இதே போன்ற ஒரு சிந்தனையோட்டம் காணப்படுகிறது. (4.1.5.14). பிற்கால நீதிநெறி நூல்கள் பிராமண ஆண்கள் பிணத்தை அண்டக்கூடாது என வரையறுக்கிறது. மருத்துவர்களுக்கு யாகத்தில் அனுமதியில்லை, அவர்களின் உணவையும் மறுக்க வேண்டும் என்கிறது மனு சாத்திரம். (மனு 3:152; 2:212,220). பிராமணர்களின் தூய்மைவாத நோக்கின் காரணமாக மருத்துவம் பிராமணர் அல்லாதவர்களிடமிருந்தே வலுபெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்காக வெளிப்படுகிறது. சென்ற கட்டுரையில் இந்திய மருத்துவத்தின் வெவ்வேறு அடுக்குகள் பற்றிய சென்ற கட்டுரையில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளதால் அவை இங்கே மீண்டும் பதியவில்லை.

இந்திய வேதியல் மற்றும் ரசவாதம் குறித்து சிறப்பான ஆராய்ச்சிகளை நிகழ்த்திய பூர்ண சந்திர ரே இந்திய வரலாற்றில் வர்ண/சாதி அமைப்பு இறுகியதால் நேர்ந்த அறிவிழப்பை சுட்டிக்காட்டுகிறார். “இந்தியாவில் கைவினை கலைகளுக்கு அப்பால், நன்மை பயக்கும் அறிவியல் மற்றும் கலைத்துறைகள் உயர்குடிகளால் பேணப் பட்டன. சுக்ல யஜுர் வேதத்திலும் தைதிரிய பிராமணத்திலும், பல்வேறு தொழில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்கால சமூக சூழல் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கெடுவாய்ப்பாக இறுக்கமான சாதியமைப்பு காரணமாக இந்த அறிவு நம்மிடமிருந்து மறைந்துவிட்டது. வேத காலங்களில் ரிஷிகள் தங்களை ஒரு சாதியாக திரட்டிக்கொள்ளவில்லை, மாறாக அவர்களுடைய வசதிக்கும் இயல்புக்கும் ஏற்ப வெவ்வேறு தொழில்களை தேர்ந்தார்கள். ஆனால் பவுத்தத்தின் வீழ்ச்சி அல்லது வெளியேற்றத்தை ஒட்டி பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தை மீள்நிறுவியபோது இவையெல்லாம் மாறியது. சாதியமைப்பு எப்போதும் இல்லாத வகையில் வலுவாக காலூன்றியது. மனு மற்றும் பிற்கால புராணங்கள் பிராமணர்களை விதந்தோதும் வகையில் திசை மாறியது, ஏற்கமுடியாத, அடவாடியான உரிமைக்கோரலுக்கு காரணமாயின.  சுசுருதர் அறுவை சிகிச்சையின் மாணவனுக்கு சடலம் அறுத்தல் இன்றியமையாத பயிற்சியாக கருதினார். நேரடி அனுபவம் மற்றும் ஞானம் வழியாகவே அவன் நிபுணத்துவம் அடைவான் என்றார். ஆனால் மனுவுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மனுவை பொறுத்தவரை சடலத்தை தீண்டுவதே தூய்மையான பிராமணருக்கு இழுக்கு. வாக்பட்டரின் காலத்திற்கு பிறகு அறுவைகத்திகள் பயன்பாடு ஊக்கப்படுத்தப்படவில்லை. நாளடைவில் அறுவை சிகிச்சையும், உடற்கூரியலும் பயன்பாட்டிலிருந்து மறைந்தன. விளைவாக இந்துக்கள் ஒரு அறிவுத்துறையை இழந்தனர்.”

அறிவு தேடல், சமூக அழுத்தகங்கள், மத குறுக்கீடுகள், பண்பாட்டு தாக்கங்கள் என அனைத்தும் சேர்ந்தே ஆயுர்வேதத்திற்கு உருவமளிக்கிறது.

2

கென்னெத் ஜிஸ்க் அவருடைய ‘வேதங்களில் மருத்துவம்’ நூலில் சில காலக் கணக்குகளை அளிக்கிறார். 2700 பொ.மு – 1500 பொ.மு காலகட்டத்தை வேதத்திற்கு முற்காலம் என்கிறார், ஏறத்தாழ 2000 பொ.முவை வேத காலம் என்றும் வரையறை செய்கிறார்.  ஆயுர்வேதத்தின் தர்க்க சட்டகங்கள் வேதத்திலிருந்து கிளைத்ததில்லை என்றாலும் மருந்து பொருட்கள் வேதத்திலிருந்து வந்திருக்ககூடும், அல்லது வேதத்திற்கு முற்பட்ட மருத்துவ மரபிலிருந்து வந்திருக்க கூடும் என்கிறார்.

ஜாங்கிட எனும் மந்திரித்த தாயத்தின் மகிமையை பற்றி அதர்வ வேதத்தில் குறிப்பிடும் போது அதன் செயல்திறன் தொல்கால மற்றும் தற்கால மருந்துகளை காட்டிலும் அதிகமானது என்று குறிப்பிடப் படுகிறது. ஆக மாந்த்ரீக மருத்துவத்திற்கு முன்பிலிருந்தே மருந்துகள் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. அதாவது அதர்வ வேதத்தின் மாந்த்ரீக மருத்துவம் புழக்கத்திற்கு வரும் முன்னரே, வேத காலத்திற்கு முன்னரே மூலிகை மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவ முறை இருந்திருக்கிறது.

வேதத்திற்கு முற்காலத்தில் நமது மருத்துவ மரபு என்னவாக இருந்தது என்பதை குறித்து ஜிஸ்க் வைக்கும் பார்வைகள் சுவாரசியமானவை. மொகஞ்சதாரோவின் ‘பெரும் குளியல் குளம்’ கூடாக புரியக்கூடிய மருத்துவ சடங்கிற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். நீர் சிகிச்சை சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கியமான பங்காற்றி  இருக்கலாம். பிற்காலத்தில் நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாக புகழப் படுகிறது. மாதலி தனது தேரை விற்று கொணர்ந்த அமிர்தத்தை இந்திரன் நீரில் வீசினான். நதிகளே அதை திருப்பி கொடுத்தன என்பது வேதத்தில் நீரின் மகத்துவத்தை பறைசாற்றும் தொன்மக் கதை.  எட்டு பிரிவுகளில் ஒன்றான ரசாயனத்தின் உருவாக்கத்திற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ‘ஆபம் ரசஹா’ – நீரே ரசம் என்கிறது அதர்வ வேதம். உடலை வளமாக்கும் சாரமாக ரச தாதுவாக பிற்காலங்களில் பரிணாமம் கொள்கிறது. சோம ரசத்துடன் தொடர்புறுத்தப் படுகிறது. அன்றாட புத்துயிர்ப்பு மருந்தாக நீர் குறிப்பிடப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரீகத்து சுவடுகளில் அரச மரத்தை பெண் கடவுளாக உருவகித்து ஏழு பேர் வணங்கும் அச்சு கிடைத்திருக்கிறது. தலைகீழாக ஒரு பெண், (பூமி தாயாக இருக்கலாம்) ஒரு தாவரத்தை பிரசவிப்பதும், மறுபுறம் ஒரு மனிதன் கதிரருவாளுடன் நின்றிருப்பதும் ஒரு அச்சில் புலப்படுகிறது. இயற்கையை துதிக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றாக கொள்ளலாம். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை இவை கூறுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த தொன்மத்தின் நீட்சியை வராக, பலராம போன்ற அவதாரங்களில் கூட குறியீட்டு ரீதியாக நாம் கானலாம். வராக அவதாரம் நிலத்தை உழுவதை குறிக்கும், நிலத்தின் வளத்தை மேலே எழுப்பி கொணர்வதன் குறியீடு என்றொரு புரிதல் உண்டு. பலராமர் கலப்பையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

மண்டையோட்டில் துளை இடுதல் சிந்து சமவெளி நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. ஒரு குழந்தையின் மண்டையோட்டில் வெம்மையான இரும்பு கம்பியால் மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன என்று தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புண்ணும் ஆறி அதற்கு பின்னும் அவள் வாழ்ந்திருக்கிறாள். நீர் கோர்த்து மண்டை வீங்கியிருக்கலாம் (ஹைட்ரோசெபலஸ்). மூளையில் அழுத்தம் குறைவதற்கான வழியாக இம்முறை பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள். இந்திய மருத்துவ நூல்களில் இவ்வழக்கத்தைப்  பற்றிய குறிப்புகள் எங்குமே இல்லை, ஆனால் பொது யுகத்துக்கு முன், நாலாம் நூற்றாண்டை சேர்ந்த பாலி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவாக எனும் வினய பீடக நூலில் சீவகர் ராஜகிருஹத்தின் குடிமகன் ஒருவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து சிறிதும் பெரிதுமாக இரண்டு கிருமிகளை எடுத்ததாக ஒரு நிகழ்வு பதிவாகிறது. இத்தகைய அறுவை சிகிச்சையின் தொன்மையான முதல் பதிவு  இதுதான். மண்டையோட்டில் துளையிடும் வழக்கத்துடன் இதை தொடர்புறுத்த முடிகிறது. சிபி ஜாதக கதையில் சீவகரின் மருத்துவ அற்புதங்கள் குறித்து குறிப்பிடபட்டுள்ளன. சிபி மன்னனின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். வேத மருத்துவத்திற்கும் பவுத்த மருத்துவத்திற்குமான பாலமாக மருத்துவ துறவி சீவகரை கருதலாம் என்கிறார் கரம்பெல்கர்.

ஒட்டுமொத்தமாக, ஹரப்பன் காலத்தில் பொது சுகாதாரம் பற்றிய அக்கறைகள் இருந்ததும், தாவரங்கள் மருத்துவத்திற்கும் சடங்கிற்கும்  பயன்படுத்தியிருக்க கூடும் எனும் ஊகமும் நமக்கு கிடைக்கிறது.

வேதங்களில் மருத்துவம் சார்ந்த சில அவதானிப்புகளை கரம்பெல்கரும் கென்னெத் ஜிஸ்கும் முன்வைக்கிறார்கள். வேதங்களை பொறுத்தவரை அதர்வ வேதத்தில் ஒப்பீட்டளவில் மருத்துவ தகவல்கள் ரிக் வேதத்தை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. மேலும் ரிக் வேதம் ‘மருத்துவ அற்புதங்கள்’ சார்ந்த தொன்மங்களை அதிகம் முன்வைக்கிறது. அஸ்வினி குமாரர்கள் தேவ மருத்துவர்களாக கருதப்படுகின்றனர். சியவனர் மற்றும் வந்தனாவிற்கு ரசயானம் மூலம் உயிர் அளித்தனர். தீர்க்க தமசின் தலை துண்டிக்கபட்டபோதும் அவருடைய வாழ்வை நீட்டித்தனர். போட்டியில் காலிழந்த விஷ்பல எனும் பெண் குதிரைக்கு இரும்பு கால் பொருத்தினர், எதிரிகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிரவ்யாசவை உயிர்ப்பித்தனர். ததீசிக்கு குதிரையின் தலையை வைத்து பின்னர் அவருடைய தலையையே மாற்றினர். இப்படி மேலும் சில அற்புதங்கள் அவர்கள் நிகழ்த்தியதாக வேதங்கள் கூறுகின்றன. இவை அனைத்துமே நடைமுறையில் சாத்தியமற்றவை. பெரும் கற்பனையில் உதித்தவை.

பிராஜபதியும் மருத்துவம் அறிந்தவர் என்று அதர்வ வேதம் சொல்கிறது. குறிப்பாக குழந்தை பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தை உள்ளடக்கிய பால சிகிச்சை எனும் ஆயுர்வேத பிரிவின் தொன்ம துவக்கமாக கொள்ளலாம் என்கிறார். இந்திரன் அறுவை சிகிச்சையில் தேர்ந்தவன் என்றொரு குறிப்பு அதர்வ வேதத்தில் காணக்கிடைக்கிறது. 10.4.  14- 18 ல் இந்திரன் பாம்பு மற்றும் தேள்கடி வைத்தியத்தில் நிபுணனான இளம் மருத்துவராக தென்படுகிறார். மலைவாழ் வேடனின் மகள் மலை சூழ் சதுப்பு நிலத்தில் மூலிகையை தோண்டி கொண்டிருக்கிறாள். அவளை  இந்திரன் அணுகுவதாக சித்தரிக்கப்படுகிறான்.

உடல் பற்றிய அக்கறையை கவனபடுத்திய விதத்தில் அதர்வ வேதம் ஒரு துவக்க புள்ளியாக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தாந்த்ரீக மரபின் தாக்கத்தையும், துவக்கத்தையும், நீட்சியையும் அதர்வ வேதத்தில் காண முடிகிறது. தாந்த்ரீகம் உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மரபு. அதை பேணுவதன் வழியாகவும் பயிற்றுவிப்பதன் வழியாகவும் உடலின் நியதிகளை வளைக்க முடியும் என நம்புகிறது.

அண்டத்தில் என்பது வேதத்தின் ‘பலி’ சடங்கின் அடிப்படை குறியீட்டு கருதுகோளாக இருந்தது. அதையே ஆயுர்வேதம் வளர்த்தெடுத்தது என்கிறார் ஜிஸ்க். பலி சடங்குகள் வழியாகவே வேத காலத்தில் உடற்கூரியல் பற்றிய அறிதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் ஜிஸ்க். குறிப்பாக குதிரைகள் மற்றும் மனித உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் சடங்கின் ஒரு பகுதியாக உச்சரிக்கும் வழக்கம் இருந்தது.எனினும் உள்ளுறுப்புகள் சார்ந்த விவரணைகளில் தெளிவில்லை. மேற்கின் தாக்கத்தின் ஊடாக சம்ஹிதைகளின் காலகட்டத்தில் முறையாக உடலை அறுத்து நோக்கும் வழக்கம் வந்திருக்கலாம் என்கிறார். கிரேக்கத்தில் ஹெரோபிலஸ் காலத்தில் (பொ.மு நான்காம் நூற்றாண்டு) மனித சடலங்கள், குறிப்பாக தண்டிக்கப்பட்டவர்களின் சடலங்கள் கூரு போடும் முறை புழக்கத்தில் வந்தது. ஆனால் அங்கும் கூட கேலன் காலத்தில் மனித உடலை கூரு போடும் வழக்கம் நின்று போனது. பன்றிகளை அறுத்து நோக்கி மனித உடலுடன் ஒப்பிட்டே உடற்கூரு புரிந்துகொள்ளப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் தான் இவ்வழக்கம் மாறியது. அண்டத்தில் இருப்பது பிண்டத்தில். பிண்டத்திலிருப்பது

வேதகாலத்து இந்தியர்கள் நோயை தீய ஆற்றல்கள் பீடித்து கொள்வதால் நேர்வது என்றே நம்பினார்கள். இவை மனிதருக்குள் நுழைந்து அவர்களை நிலைகுலைய செய்கிறது. இத்தகைய ஆற்றல்கள் ஒவ்வொன்றையும் பெயரிட்டு அடையாளப்படுத்தி கடவுளாக்கினர். மீறலின் விளைவோ, அல்லது பாவங்களின் காரணமாகவோ அல்லது மாந்த்ரீக செய்வினையின் விளைவாகவோ நோய்கள் உருவாயின என்று நம்பினார்கள். எலும்பு முறிவு, காயங்கள் போன்றவை விபத்தில் நேர்பவை எனும் புரிதலும் நிலவியது.

நேர்நிலையில் நலமான மனிதன் குறித்த பார்வை வேதங்களில் வெகு அரிதாகவே வெளிப்படுகின்றன. இந்நோய்கள் பீடிக்கபடாத மனிதன் என்றே புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. தொல் பண்பாட்டு நம்பிக்கைகளின் படி நெடுநாள் வாழ்வது நலமாக வாழ்வதாக பொருள் கொள்ளப்பட்டது. பிறை காண்பது, சூரிய உதயத்தை காண்பது போன்றவை நீண்டாயுளுக்காண அளவுகோளாக திகழ்ந்தன. நூறு வேனிற்காலம் நீண்ட ஆயுளுடன் வாழ்க என்று வாழ்த்துவது வழக்கம். சரத் கால நிலவின் தெளிவும் வெண்மையும் பண்டைய சமஸ்க்ருத இலக்கியங்களில் புகழப் படுகிறது. காளிதாசர் கூட தயிர் சோற்றுக்கு உவமையாக்குகிறார். நிலவு சோமனை, உடலின் வளத்தை, ஞானத்தை என பலவற்றை அர்த்தப் படுத்துகிறது. முழுநிலவை, சூரிய உதயத்தை காண்பது புலனோர்மையுடன் இருப்பது என்பதையும் சுட்டுகிறது. நூறு சரத் காலம் வாழ், ஆயிரம் பிறைகளை காண் போன்ற வாழ்த்துக்கள் வெறுமே உயிருடன் இருப்பது குறித்தான வாழ்த்துக்கள் அல்ல. 

நறுமண தாவரங்களை எரித்து புகை மூட்டி தீய ஆற்றல்களை ஓட்டும் வழக்கம் இருந்தது. மேலும் சில சடங்குகள் நட்சத்திரங்களின் நிலையோடு தொடர்பு படுத்த பட்டுள்ளதால் சோதிட நம்பிக்கைகள் இருந்திருக்கலாம் என்கிறார் ஜிஸ்க். வேத காலத்து இந்திய மருத்துவ  மரபில் தாவரங்கள் போற்றப்பட்டன. பிற்கால மருத்துவ ஆக்கங்களில் வேத காலத்து மூலிகைகளின் தாக்கம் புலப்படுகிறது. வேதகாலத்து மருத்துவர்கள் பிசக் என அழைக்கப்படுபவர்கள், சன்னதம் அடைந்து நடனமிடுபவர்கள் என்றும் மந்திரங்களை உச்சரிப்பவர்கள் என்றும், எலும்பு முறிவையும் சரி செய்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலிகைகள் மந்திரித்து கட்டுவதற்கும், நறுமண மூலிகைகள் புகைபோட்டு தூய்மையாக்கவும் குணமாக்கவும் பயன்படுத்தப்பட்டன. நோய்களும் தீர்வுகளும் தொன்மங்களுடன் இணைந்தே வழங்கப்பட்டன. மூலிகைகள் கூட தனித்த ஆளுமைகளாக உருவகபடுத்தி, தெய்வங்களாக வணங்கப்பட்டன. வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள சோமம் எதுவென்று பல்வேறு யூகங்களும் ஆய்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. இன்றைய தேதியில் இமையமலையில் வளரும் Ephedra வகையாக இருக்ககூடும் என ஆய்வு தரவுகள் வலுவான வாதத்தை முன்வைக்கின்றன. முற்காலத்தில் பெரும் போதையளிக்க கூடிய மூலிகை கூட கால ஓட்டத்தில் நீர்த்து நாம் புழங்கும் சாமனிய தாவரங்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்றொரு பார்வையும் உண்டு.   

குஷ்டம் (கோட்டம் என நாம் இன்று பயன்படுத்தும் Sausurea lappa வாக இருக்கலாம் எனினும் உறுதியாக கூற முடியாது) சுரங்களை தீர்க்கும் வல்லமை கொண்ட ஆண் மூலிகை கடவுள் என சோமத்துக்கு நிகராக புகழப்படுகிறது. அதர்வ வேதத்தில் ‘அருந்ததி’ (சகதேவி, சிற்றாமுட்டி, குறுந்தோட்டியாக இருக்கலாம்) எலும்பு முறிவுக்கான பெண் மூலிகை கடவுள் என புகழப் படுகிறது. காய சிகிச்சையை முன்னெடுத்த ஆத்ரேய மரபு மற்றும் அறுவை சிகிச்சையை மையபடுத்திய தன்வந்தரி மரபு என இரு மரபுக்கான வேர்களை இம்மூலிகைகளுக்கு அளிக்கபப்டும் கடவுளின் இடத்தைக்கொண்டு புரிந்துகொள்ளலாம்.

பிராணிகளின் நடத்தை மற்றும் செயல்பாடுகள் பண்டைய மருத்துவ மரபிற்கு மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது என அதர்வ வேதம் அடையாளப் படுத்துகிறது. காட்டுப் பன்றி, கீரி, பாம்பு, கழுகு, பருந்து, பறவைகள், ஆடு, மாடு, எருது, செம்மறியாடு போன்ற பிராணிகள் மருந்துகளை அறிந்தவை என்கிறது. (AV 8.7-23-26). மற்றொரு தருணத்தில் முள்ளம் பன்றி மருத்துவ தாவரத்தை அடையாளம் காட்டியது என குறிப்பிடப் படுகிறது (AV 5.13.9).

ஆகவே மனிதன் பிராணிகளின் உள்ளுணர்வை நம்பினான், அவதானித்து தனக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கினான். சம்ஹிதைகளின் காலகட்டத்தில் ஆடு மாடு மேய்ப்பவர்களிடமிருந்தும் வனவாசிகளிடமிருந்தும் மூலிகைகளின் பயன்பாடை அறிந்துகொள்ளலாம் என்று சரகர் கூறுகிறார். தற்காலத்தில் காணிப் பழங்குடிகளின் ‘ஆரோக்கிய பச்சை’ வரை இந்த மரபு நீள்வதை உணர முடிகிறது.

வாத பித்த கபங்களுக்கான அடிப்படை வேதங்களில் உண்டா என ஆய்வாளர்கள் தேடி சலிக்கிறார்கள். ரிக் வேதத்தில் இந்திரன் அக்னி வருணன் நமது மூன்று தாதுக்களை காக்கட்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் முக்குற்றங்களை முத்தாதுக்கள் என குறிப்பிடும் வழக்கமும் உண்டு. எனினும் சாந்தோகிய உபநிடத்தில் அனல், அன்னம், நீர் ஆகிய மூன்றும் முத்தாதுக்கள் என வகுக்கப்படுகின்றன. பின்னர் இது ஐந்தாக பரிணமித்து ஐம்பெரும் பருக்களாக மாறியிருக்க கூடும்.

அதர்வ வேதத்தில் நோய் என்பது நீர் சுமக்கும் மேகங்கள், மின்னல் மற்றும் வாய்வினால் உருவாகிறது என்றொரு வரி வருகிறது. இது தான் பிற்காலத்தில் முக்குற்றமாக வளர்ந்திருக்க கூடுமா? புற வாயுவையும் உடலுக்குள் ஓடும் வாதத்தையும் இணைத்து சரகர் வாதத்தின் மகிமையை போற்றும் வாத கலாகலியம் எனும் அத்தியாயம் எழுதி இருக்கிறார். அதர்வ வேதத்தில் பிராண, உதான, சமான, வியான அபான எனும் ஐவகை வாயுக்களுக்கு மாற்றாக உதானனை விடுத்து நால்வகை வாயுக்கள் குறிப்பிடப்படுகின்றன. (a.v.10.2)

டேவிட் கோர்டன் வைட் வேத காலத்து யாகம், பலி அதன் நீட்சியாகவே வாத பித்த கபங்கள் உருவகப் படுத்தப்பட்டன என்றொரு வாதத்தை வைக்கிறார். அவிசு, யாகம், அக்னி எனும் மூன்றையும் கப, வாத பித்தமாக உருவகிக்கிறார். ஆனால் அவருடைய தரப்பிற்கு போதுமான வலுவில்லை. வாதம் கிரேக்க ஹுமர்களில் ஒப்பிடக்கூடிய ஒன்றல்ல. யின் – யாங் போல் இரு எதிரெதிர் இயல்புகளே இந்திய மருத்துவத்திலும் இருந்திருக்க வேண்டும் என்கிறார் டொமினிக் உஜாஸ்டிக். சுசுருத சம்ஹிதையிலும் கூட அக்னி- சோமா என வெம்மை – குளிர்ச்சிக்கு இடையிலான சமநிலையே உடல் நலத்தை நிர்ணயிக்கிறது என்றொரு பார்வையும் பதிவாகிறது. மருந்துகளின் செயல்திறனை (வீரியம்) கூட வெம்மை – குளிர்ச்சி என்றே வகுக்கிறார்கள். வெம்மை – குளிர்ச்சி எனும் இருமை இந்திய பண்பாட்டில் வெவ்வேறு தளங்களில் நீட்சியடைகிறது. அக்னி- சோமனாக, சூரிய – சந்திரனாக, பித்த – கபமாக, பாதரசம் – கந்தகமாக இந்த எதிரெதிர் துருவங்களை வகுத்துகொள்ள முடியும். அக்னி – சோமா இருமைக்கு அப்பால் வாதத்தை புதிதாக உருவகித்ததால் அதன் சார்பாக பல்வேறு தர்க்க விளக்கங்களை அளிக்க வேண்டி இருந்திருக்கலாம், இந்த அதீத முக்கியத்துவத்துக்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் எனும் வாதத்தை முன்வைக்கிறார். சில ஆரம்பகால பவுத்த நூல்களில் முக்குற்றங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வினைய பீடக நூல்களிலும், மகாபாரதத்திலும் கூட உள்ளன. டொமினிக் உஜாஸ்டிக் வாதத்தை வேதத்திற்கு பிந்தைய பண்பாடு ஆயுர்வேதத்திற்கு செய்த தனித்துவமான முக்கியமான பங்களிப்பு என்றே கருதுகிறார்.

ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் என்று கருதப்படும் முக்குற்றங்கள், அறுசுவைகள், ஐம்பெரும் பருக்கள், ஏழு தாதுக்கள், ஸ்ரோதஸ்கள் என இதுவுமே வேதங்களில் இருந்து ஆயுர்வேதத்தை அடைந்தற்கான சான்றுகள் இல்லை.

3

மருத்துவன் மாயாவியின் மந்திரவாதியின் நேரடி வாரிசு – டாக்டர். விண்டர்நிட்ஸ்.

வேதத்தின் மாந்த்ரீக மருத்துவம் செவ்வியல் ஆயுர்வேதத்தில் குறைந்தது ஐந்து பகுதிகளிலாவது தனது செல்வாக்கை தொடர்ந்தது என்கிறார் அரியான் ரோசு.

புண், கட்டி, வீக்கம் போன்றவைகளின் சிகிச்சை.
விட சிகிச்சை.
மன நோய்கள் – குறிப்பாக உன்மாதம் (மனப் பிறழ்வு) மற்றும் அபஸ்மாரம் (வெட்டு)
காய்ச்சல் சிகிச்சை
மூலிகைகளின் சேகரிப்பு மற்றும் மருந்து செய்முறை.
இவைத்தவிர குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவத்திலும், குழந்தைகளை பீடிக்கும் கிரக நோய்கள் மற்றும் புத்தாற்றல் பெருக்கும் சிகிச்சை முறைகள் சார்ந்த பகுதிகளில் அதர்வ வேத பாணியிலான மாந்த்ரீக சடங்குகள் சார்ந்த சிகிச்சை முறைகளின் தாக்கம் எஞ்சி இருக்கிறது. தாந்த்ரீக மரபில் காக்கும் கவச மந்திரங்கள், ரக்ஷைகள் போன்றவை புழக்கத்தில் இருந்தன.

மூவித துயரங்கள் ஆதி தைவிகம்- கர்மங்களின் விளைவு, ஆதி பவுதிகம் – உடல் சார்ந்தது, ஆதி ஆத்மிகம் – தன்னுணர்வு, ஆன்மீகம் சார்ந்தது எனும் வகைப்பாடு வேதத்தில் துவங்கி சரக சுசுருத சம்ஹிதைகளிலும் தொடர்ச்சியை காண முடிகிறது. சாந்தோகிய உபநிடத்தில் ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றான பூத வித்யா குறிப்பிடப்படுகிறது. இந்த எண் பிரிவுகள் பற்றிய நேரடி தகவல்கள் ஏதும் வேதத்தில் இல்லை என்றாலும் அவை வளர்ந்து வந்ததற்கான அடிப்படைகள் வேதத்தில் உள்ளன என்கிறார் கரம்பெல்கர்.

சரகரும், சுசுருதரும் அவர்கள் காலகட்டத்தின் உச்சபட்ச சாதனைகளாக நிற்பதற்கு அவை பல்வேறு போக்குகளை உள்ளடக்கிய தொகை நூல்கள் என்பதும் காரணம். சுசுருத சம்ஹிதை மற்றும் காசியப சம்ஹிதையில் உள்ள குறிப்புகள் ஆயுர்வேத தரவுகள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டு வேர் கொண்டவை அல்ல, தளையற்ற மிதக்கும் தன்மை கொண்ட மரபாக இருந்தது என காட்டுகின்றன.  அதர்வ வேதத்தின் ஒரு பிரிவின் பெயர் ‘சரண வைத்தியா’. அதாவது நாடோடி மருத்துவன். ஆனால் இப்பிரிவு இப்போது கிடைக்கவில்லை. ஆயுர்வேதத்தை பற்றிய தொல் குறிப்புகள் அதில் கிடைக்ககூடும். சரகர் எனும் பிற்கால பெயருடன் மிக நெருங்கிய தொடர்பை அளிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அதர்வ வேதத்தில் எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் பட்டியல் சரக சம்ஹிதையுடன் நெருக்கமாக இருக்கிறது.ஆனால் சுசுருத சம்ஹிதை வேறோர் எண்ணிக்கையை முன்வைக்கிறது. எலும்புகளை ஊன்றி ஆராய்ந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அதர்வ வேதத்தின் ஸ்திரீகர்மாணி மந்திரங்கள் கர்ப்பமடைவதை மற்றும் கர்ப்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றியது. ஆயுர்வேதம் இப்பகுதிகளை கையாள்கிறது.

குழந்தைகளை உண்ணும் கண்வர்களிடம் இருந்து காக்க வேண்டும் என ப்ருஷ்ணிபர்னி (சித்திர பர்னி) தாவரத்திடம் பிரார்த்தனை செய்யும் மந்திரம் அதர்வ வேதத்தில் காணக்கிடைக்கிறது. சுசுருத சம்ஹிதையில் இதே ப்ருஷ்ணிபர்னி பாலுடன் சேர்த்து கர்ப்ப கலைவிற்கு உரிய மருந்தாக அளிக்கப் படுகிறது.

ஆயுர்வேதம் மூவித சிகிச்சைகளைப் பற்றி சொல்கிறது. தைவ வியாபஷ்ரயம், யுக்தி வியாப்ஷ்ரயம், சத்வாவஜயம். யுக்தி வியாபஸ்ரையம் சிகிச்சை முறையில் தர்க்க ரீதியான சிகிச்சை முறைகளை மருந்துகளை பரிந்துரைக்கும். சத்வாவஜயம் என்பது மனதை வெல்லுதல், புலனடக்கம் என்றும் கூறலாம். தெய்வம்/ தைவம் என்பது சமஸ்க்ருதத்தில் கர்மவினையை சூட்டுவதற்கான சொல்லாகவும் இருக்கிறது. கர்ம வினையை ஆற்றுபடுத்த தைவ வியாபஷ்ரய சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.  மணி, மந்திர, ஹோமம், ஜபம், பிரார்த்தனை போன்றவை அதன் வழிமுறைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் இந்தப் பிரிவு அதர்வ வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

அதர்வ வேதத்தில் மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளே நோய் தீர்க்கப் பயன்பட்டிருக்கின்றன. ஒற்றை மூலிகைகளை சடங்குகளில் பயன்படுத்துவதும் வாடிக்கை தான். பின்னர் காலபோக்கில் மருந்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த இருமை பிற்கால ஆயுர்வேத ஆக்கங்களிலும் தொடர்ந்தது. மேலும், மாந்த்ரீக சிகிச்சை மருத்துவ சிகிச்சையை காட்டிலும் புனிதமானது எனும் போக்கு நிலவியதால் மருத்துவ சிகிச்சையை இரண்டாமிடத்தில் வைத்தே அதர்வ வேதம் நோக்கியது. ‘உணவு பிழைகளால் நேரும் நோயை ஆயுர்வேதத்தின் மருத்துவ முறை குணமாக்கும். பாவங்களாலும், மீறல்களாலும் நிகழும் நோய்களை அதர்வ வேதத்து மந்திரங்கள் குணமாக்கும். எனினும் ‘அதர்வன்’ உணவு வழி வரும் நோயிலிருந்தும் காக்கிறான்’ என்கிறது கௌஷிக சூத்திரம்.

அதர்வ வேதத்திலிருந்து ஆயுர்வேதத்திர்கான பரிணாமத்தை நாம் காண முடிகிறது. முழுக்க சடங்குகளும், மந்திரங்களும் கொண்ட அதர்வ வேதம், பின்னர் மருத்துவம் புகுத்தப்பட்ட சடங்குகள் உள்ள கௌசிக சூத்திரத்தின் காலம், பின்னர் மந்திரங்களும் சடங்குகளும் செல்வாக்கிழந்து மருத்துவம் மேலெழுந்த சம்ஹிதைகளின் காலகட்டம். செவ்வியல் ஆயுர்வேத மருத்துவத்தின் எழுச்சி வேத மருத்துவத்தின் மீது ஆதிக்கம் செய்து மந்திர பயன்பாடுகளை முற்றிலும் அழிக்கவில்லை என்றாலும் கீழிறக்கியது. மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையிலான உறவு எல்லா நாகரீகங்களிலும் உள்ளது தான். பிரார்த்தனை வழியாகவும் சடங்குகள் வழியாகவும் தெய்வ ஆற்றலின் துணையுடன் எல்லா நோயையும் குணப்படுத்திவிடலாம் எனும் நம்பிக்கை எல்லா பண்பாடுகளுக்கும் பொது. இன்றும் கூட உபவாச ஜெபங்கள், பிரார்த்தனைகள் நம்பிக்கை மருத்துவம் போல் செயலாற்றி நோயாளிகளை ஆற்றுபடுத்துகிறது. 

புறக் காரணங்களினால் வரும் வீக்கம், கட்டிகளுக்கு மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் 18 ஆம் அத்தியாயத்தில் கட்டுகள் மற்றும் மந்திரங்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறது. காயங்களை ஆற்றவும், வீக்கம் வடியவும் மந்திரங்கள் சம்ஹிதையில் உள்ளன. பாம்பு மாற்றம் இன்னபிற விஷ கடிகளுக்கு மந்திரங்களின் பயன்பாடு சரக மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் புழக்கத்தில் உள்ளன. சுசுருதர் ஒரு படி மேலே சென்று, மந்திரங்கள் பயனளிக்கவில்லை எனில் விட முறிவு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என நடைமுறை அறிவோடு கூறுகிறார். நாய் கடிக்கு சுசுருதர் மந்திரங்களை கூறுகிறார். மந்திரித்த நீரை நாற்சந்தியில் அல்லது நதிக்கரையில் தெளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கௌசிக சூத்திரத்தில் தீய சக்திகளை விரட்ட நாற்சந்தியில் புனித நீர் தெளிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தொடர்புறுத்தி கொள்ளலாம். 

ரிக் மற்றும் அதர்வ வேதங்களில் பிராணிகளின் விஷத்தன்மை மற்றும் அதை தீர்க்கும் முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. போவர் சுவடிக்கட்டில் பிக்குவை தீண்டிய கருநாக விடத்தை இறக்கும் புத்தர் கூறிய ஆறு மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சம்ஹிதைகளில் மந்திரங்கள் விஷமுறிவு மருந்து தயாரிப்பின் போதும் உச்சரிக்கப் பட்டுள்ளன. (ச.ச.சி. 23, 223). விஷம் பற்றிய போலியான பயத்தை நீக்க மந்திரித்த நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மகா கந்தி ஹஸ்தி எனும் விஷமுறிவு மருந்தை தயாரிக்கும் போது (ச.சி.23, 90-94) குறிப்பாக மருந்தை அரைக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. உரிய முறையில் மந்திரித்து செய்யப்பட்ட இம்மருந்தை அதர்வ வேதங்களின் தீய மந்திரங்கள் கூட அழிக்க இயலாது என்கிறார் சரகர். அரக்கிற்கு ஆற்றல் ஊட்ட (a.v.5.5. 1,8) குஷ்டம் எனும் மூலிகைக்கு  ஆற்றல் ஊட்ட (a.v.5.4.8, 19.39.3,)  என இதன் முன் தொடர்சிகளை வேதத்தில் காணலாம்.

ம்ருதசஞ்சீவன அகதம் (ச.சி.23- 59) தீவினை, செய்வினை, தீவினை  மந்திரங்களுக்கு எதிராக செயல்படும் என்று அதன் பயன்மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இன்றும் கூட கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கைவிஷ பரிஹாராதி குளிகை என்றொரு மருந்து செய்வினை அகற்றும் மருந்தாக தயாரிக்கப் படுகிறது.  பேள சம்ஹிதை சரக- சுசுருத சம்ஹிதைகளை காட்டிலும் தொன்மையாக இருக்கலாம். ஈசனின் கோபத்தினால் சுரம் உருவானது என்பதால் ஈசனை வணங்க வேண்டும்  என்று அறிவுறுத்துகிறது. ருத்திரனை வணங்கும் தூய்மையான, துறவி, கடமை தவறாத, மருத்துவனே சுர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமம் சுரத்தின் போது வாசிக்கலாம் என்று சரக சம்ஹிதையில் உள்ளது. இந்த்ராக்ஷி சிவகவசம் முதல் கந்தர் சஷ்டி கவசம் வரை பல்வேறு மந்திரங்கள் உடல் ஆரோக்கியத்தை கோரி பாராயணம் செய்யப்படுவது மரபாக உள்ளது.   

உன்மாதம் (மனப் பிறழ்வு) அபஸ்மாரம் (வலிப்பு) போன்ற நோய்களுக்கு மாந்த்ரீக சிகிச்சைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. அக்னி, அப்சரஸ்கள், பகன், இந்திரன் போன்றவர்களுக்கு ஆகுதி வழங்கவேண்டும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும், மந்திரித்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ரிக்வேதம் அதர்வ வேதங்களில் அபஸ்மாரம் எனும் சொல் பயன்பாட்டிலே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

அஷ்டாங்க சங்கிரகத்தில் வாக்பட்டர் இரண்டு மாந்த்ரீக மண்டல வரைபடங்களை அளிக்கிறார். அதன் பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் தோடரநாதர் ஆக்கத்தில் தான் வரைபடம் காணக் கிடைக்கிறது. ரசவாத நூலான ரசார்ணவத்திலிருந்து பெறப்பட்டதது. இதற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஹாரித சம்ஹிதையில் சுலபமான பிரசவத்திற்காக ஒரு யந்திரத்தின் வரைபடம் அளிக்கப்பட்டுள்ளது. பொ.பி 850 வாக்கில் அரேபிய மருத்துவத்தில் காணக்கிடைக்கும் சதுர மாந்த்ரீக யந்திரத்தை ஒத்த வடிவம் ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த  வ்ருந்த மாதவரின் நூலிலும் தென்படுகிறது என்கிறார் ரோசு.

சாரங்கதர பத்ததி எனும் நூலில் விருக்ஷ ஆயுர்வேதத்தின் பகுதியாக சில மந்திரங்களை பிரதியெடுத்து செடி மரங்களுக்கு கீழ் புதைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சுசுருத சம்ஹிதையில் தாவரங்களை வேரோடு பிடுங்கும் போது ஆற்றுபடுத்த கூறப்படும் மந்திரம் உள்ளது. வேருடன் தாவரங்களை பிடுங்கும் முறை அதர்வவேதத்தில் உள்ளது தான். அதற்காக மன்னிப்பு கோரி ஆற்றுப்படுத்தும் மந்திரம் ரிக் வேதத்தில்(10. 97.20) குறிப்பிடபட்டுள்ளது.

சுசுருத சம்ஹிதை உத்திர ஸ்தானத்தில் புராணங்கள் மற்றும் மகாபாரதத்திலிருந்து சகஜமாக தொன்மங்கள் கையாளப்படுகிறது. பிற்கால சேர்க்கைகளாக இருக்கக்கூடும். குழந்தைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மந்திரங்கள் அதர்வ வேதத்தில் வேர்கொண்டவை. குழந்தைகளை பீடிக்கும் கிரக நோய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பேர்கள் யாவுமே தொன்மத்துடன் தொடர்புடையவை. பூதனை என்றொரு நோய்க்கு பெயர். தாய்பால் வழி வருவது. நாமறிந்த தொன்மத்தில் பூதனை குழந்தை கண்ணனை கொல்வதற்கு நஞ்சு ஏறிய பால் ஊட்டுகிறாள். ரேவதி என்பது மற்றொரு நோய்க்கு பெயர். பலராமரின் மனைவி என்று நமக்கு இப்பெயர் நினைவில் இருக்கிறது. நைகமேஷம், ஸ்கந்தம் போன்றவைகள் எல்லாம் கிரகங்களின் பெயர்களாகவே வருகின்றன.

ஆயுர்வேதத்தில் வேதத்தின் தாக்கம் உள்ள பகுதிகள் எவை என்று பார்க்கும் போது,  தொல்கால மனிதர்கள் தங்கள் தர்க்கத்திற்கு அப்பால் உள்ள தளங்களை, மரண அச்சம் அதீதமாக உள்ள இடங்களில், முழுக்கவும் தற்செயல் சார்ந்திருக்க வேண்டிய தருணங்களில் மாந்த்ரீக மருத்துவத்தை அதிகமும் நாடி இருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அச்சம் நம்மை இயக்கம் போது நாம் தர்க்கத்தை காட்டிலும் இயல்பாக நம்பிக்கையில் தஞ்சமடைகிறோம்.

4

நோய் நீக்குபவன் மருத்துவன். நோயை எவையெல்லாம் நீக்குமா அவை மருந்தாகும் – சரகர்

அதர்வ வேதம் 9.6 பாடலில் மேம்போக்காக தலை, நெஞ்சு மற்றும் வயிறு, முதுகு மற்றும் ஆசன வாய், கால்கள், கரங்கள், உதிரம் மற்றும் பிற பகுதிகள் என நோய் பிரிவை அதன் இருப்பிடம் சார்ந்து வகுக்கிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ள நோய்களை உள் நோய்கள், புற நோய்கள் என பொதுவாக இரண்டாக வகுக்கலாம். உள் நோய்களை மேலும் மூன்றாக வகைப்படுத்தலாம் – யக்ஷ்மன் தொடர்புடைய நோய்கள், தாக்மன் தொடர்புடைய நோய்கள், இரண்டும் அற்ற வேறு நோய்கள். புற நோய்கள் பொதுவாக  காயம், தோல் நோய்கள் மற்றும் விடம் தொடர்பானவை.

யக்ஷ்மன் மனிதர்களையும் மிருகங்களையும் பீடிக்கும் அசுரன். ஒவ்வொரு பாகமாக பற்றுவான். கைகால்களை செயலிழக்கச் செய்வான், சுரம் தருவிப்பான், நெஞ்சு வலி அளிப்பான், உடல் வலி ஏற்படுத்துவான் என்கிறது அதர்வ வேதம். தேய்மான நோய்களுடன் தொடர்புடையவை என யக்ஷ்மனின் நோய் குறிகளை கூறலாம்.

பல்வேறு வகையான யக்ஷ்மன்கள் உள்ளன. குழந்தைகளையும் பெரியவர்களையும் அவை பீடிக்கும். வேறு வேறு நோய்களுடன் சேர்ந்து வரும் என்றும் சொல்கிறது. பெண்வழி உறவின் வழியே யக்ஷ்மன் வரலாம் என்றும் சோமத்தை சரியாக பக்குவப்படுத்தவில்லை என்றாலும் வரலாம். பாவத்துடன் இந்நோய் தொடர்புப் படுத்தப்படுகிறது. கையில் மூலிகையை வைத்துக்கொண்டு மந்திரங்களை உச்சரித்தால் யக்ஷ்மன் பறவைகளுடன் சேர்ந்து பறந்துவிடும் என்கிறது அதர்வ வேதம். அக்னி வாயு, சாவித்திரி, ஆதித்ய போன்றவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட யக்ஷ்மனை விரட்டுவார்கள் (2.33) என்றும் சொல்கிறது.

பிரஜாபதியின் 33 மகள்களை (பிற்கால தொன்மங்களில் இந்த எண்ணிக்கை 27 ஆக நட்சத்திரங்களின் எண்ணிக்கையுடன் இயைந்து வருகிறது) நிலவரசன் மணந்து கொள்கிறான், ஆனால் ரோஹினியின் மீது அதீத மையல் கொண்டிருந்தான். மீதி 32 பேரும் தந்தையிடம் திரும்புகிறார்கள். அனைவரையும் சமமாக நடத்துகிறேன் என உறுதியளிக்கிறான், ஆனால் உறுதியை மீறி மீண்டும் ரோகினியை தேர்கிறான். அப்போது அவனை யக்ஷ்மன் பீடித்தது. அரசனை பீடித்தது என்பதால் ராஜ யக்ஷ்மா என்றும், பாவத்தால் விளைந்தது என்பதால் பாவ யக்ஷ்மன் என்றும், மனைவியிடமிருந்து வந்தது என்பதால் ஜயேன்யா என்றும் வழங்கப்படுகிறது. ஆதித்தியனுக்கு அவிசளிக்க வேண்டும் என்பதே சிகிச்சை. ஜயேன்யா எனும் சொல் ஜனனத்துடன் தொடர்புடையது. பாலுறவு வழி பரவும் நோய் அல்லது பிறப்பிலிருந்து இருக்கும் நோயாக இருக்கலாம்.

அதர்வ வேதத்தில் நெஞ்சு வலியை பற்றி குறிப்பு கானக்கிடைக்கிறது. பலாசம் என்றொரு நோய், யக்ஷ்மனின் வகையாக, தாக்மனின் சகோதரனாக கூறப்படுகிறது. கைகால்களில் உள்ள மூட்டுகளை பலவீனப்படுத்தி இதயத்தை தாக்கும், அக்குளில் விரையளவுக்கு சிவந்த வீக்கம் தென்படும். அதர்வ வேதம் எல்லா நோய்களையும் எதிரிகளுக்கு ஏவிவிட முடியும் என்று நம்புகிறது.

க்ஷேத்ரிய எனும் சொல் விளைநிலத்தை குறிப்பதாக உள்ளது. பரம்பரை நோயாக இருக்கலாம் என்கிறார் ஜிஸ்க். ஒருவகையான யக்ஷ்மன். குழி விழுந்த கண்கள், வலிப்பு போன்றவை இருக்கும். மாந்த்ரீக விடமேரிய உணவை உட்கொள்வதால் நேர்வது என்று சொல்கிறது வேதம். களிமண், மான் கொம்பு போன்றவை நோயை விரட்ட பயன்படுத்தப்பட்டன. தொல்லியல் ஆய்வுகள் மான் கொம்பின் நெடுங்கால பயன்பாட்டிற்கு சான்றுரைக்கின்றன. நாயுருவியும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதர்வ வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள தாக்மன் நோய் ருத்திரனுடன் தொடர்புபடுத்தபடுகிறது. வருணனின் புதல்வன். கூர்மையான வலி ருத்திரனால் ஏற்படுகிறது. ருத்திரனின் பானங்கள் கட்டிகளை எழுப்புகிறது. தாக்மன் மற்றும் காசம் ருத்திரனின் படைக்கலம்.  ருத்திரனின் கோபத்தின் காரணமாகவே சுரம் உருவானது என்பது சரக சுசுருத சம்ஹிதையில் உள்ள நம்பிக்கை. ரிக் வேத கூற்றின் படி ருத்திரனே முதன்மை மருத்துவனும் கூட..

க்ரோமான் அவருடைய ஆய்வு கட்டுரையில் தாக்மனை மலேரியா காய்ச்சலுடன் ஒப்புமை செய்து நிறுவியிருக்கிறார். அதன் அறிகுறிகள் ஹிப்போகிரேட்ஸ் வகுத்த மலேரியா குறிகளுடன் மிக நெருக்கமாக ஒத்துள்ளன. மழை காலத்துடன் தாக்மன் தொடர்பு படுத்தப்படுகிறது. இடியும் மின்னலும் அதன் ஆயுதம் என்கிறது வேதம். இடி மனிதர்களில் அதையொத்த இருமலை ஏற்படுத்துகிறது. மின்னலின் மஞ்சள் ஒளி காமாலையை ஏற்படுத்துகிறது. அதன் தீவிரம் தலையில் பிளக்கும் வலியை ஏற்படுத்துகிறது. தாக்மன் நீரிலிருந்து பிறந்த நெருப்பு என்றும் சுட்டப்படுகிறது. அதே காலத்தில் தான் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். எனினும் அனைத்து அறிகுறிகளும் மலேரியாவை ஒட்டியதாகவும் இல்லை. குளிரும் சுரமும் மாற்றி மாற்றி வரும் வெவ்வேறு நோய்களுக்கும் இது பொருந்தக்கூடும். கரம்பெல்கர் டைபாய்ட், ஃப்ளு மற்றும் மலேரியா என மூன்று வெப்ப மண்டல நோய்களுடன் தொடர்பு படுத்துகிறார். எனினும் வரலாற்று ரீதியாக மலேரியாவின் முதல் ஆவணம் இதுவாகவே இருக்கும் என்கிறார் ஜிஸ்க்.

நோயுற்றவரின் உடலிலி இருந்து தாக்மனை மழைகாலத்தில் புழங்கும் தவளைகள் மீது ஏவிவிடுவது சிகிச்சை முறையாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குளிர்ந்த, ஈரமான தவளை கொதிக்கும் சுரத்தை தணிக்கும் என்றொரு நம்பிக்கை நிலவியது. க்ரோமன் ஐரோப்பாவில் இதே போன்று நிலவிய போகிமிய பழக்கத்தை சுட்டி காட்டுகிறார். புனித கிரேகர் நாளுக்கு முந்தைய பனிபடர்ந்த நாளில் பச்சை தவளை ஒன்றை பிடித்து ஒரு பையில் இட்டு தைத்து சுர நோயாளி கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். அந்த பையின் உள்ளே என்ன இருக்கிறது என்பது நோயாளிக்கு தெரியவேண்டியதில்லை. ஒன்பது நாட்கள் அப்படி இருந்தால் சுரம் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை நிலவியதை பதிவு செய்கிறார். குஷ்ட (கோஷ்டம் என்று அறியப்படும் அதே மூலிகையா என்பது தெளிவாகவில்லை) தாக்மனை விரட்டும் முக்கிய மூலிகையாக கூறப்பட்டுள்ளது. சோமனுக்கு சகோதரன் என புகழ்ந்து கடவுளின் நிலையில் போற்றப் படுகிறது. தாக்மன் (காய்ச்சல்) நோய்க்கு பழுக்க காய்ச்சிய கோடாரியை நீருக்குள் அமிழ்த்தி, அந்நீரை குடிக்க செய்வது ஒரு சிகிச்சையாக கூறப் பட்டுள்ளது. இன்று வரை குழந்தைகளுக்கு பயத்தால் வரும் சுரத்திற்கு குழுமோர் காய்ச்சி கொடுக்கும் வழக்கம் நம்முள் உள்ளது.

ரபஸ் என்றொரு நோய் க்ஷேத்ரிய மற்றும் தாக்மனுக்கு நெருக்கமான விவரணைகள கொண்டுள்ளது. மீறல்களால் நேர்கிறது, கால் வழியாக பரவும். அஜகவா எனும் கிருமி இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மலினப்பட்ட நீருடன் தொடர்புடையது. நீர் அல்லது நீர்மை கொண்ட மருந்து தீர்வுக்காக அளிக்கப்படுகிறது. தோலுக்கு அடியில் வளரும் புழு என்றும் கூறப்படுகிறது. வேதத்தில் கிருமி எனும் பயன்பாடு புழு எனும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடல் புழு, கொக்கி புழு போன்றவைக்கு நெருக்கமான விவரணைகளை கவனிக்க முடிகிறது.

கிருமி பற்றிய குறிப்பு ரிக் வேதத்திழ்க் இல்லை. அதர்வ வேதத்தில் ஊர்ந்து மனிதர்கள் அல்லது பிராணிகளின் உள்ளே புகும் புழுவாக கிருமி கூறப்பட்டுள்ளது. கிருமிகள் புலப்படுபவை, புலபடாதவை என இரண்டாக வகுக்கப் படுகிறது. கிருமிகளின் பாலினத்தை அடையாளம் கண்டார்கள். அவை சமூகமாக ஒரு தலைவர், பிரஜைகள் மற்றும் சார்ந்தவர்கள் என வாழ்வதாக புரிந்து கொள்கிறார்கள். மழைகாலத்தின் முற்பகுதியில் இக்கிருமிகள் பெருகும் என்றும் கூறுகிறது. சூரிய ஒலி புலப்படாத கிருமிகளை கூட கொல்லும் என்கிறது அதர்வ வேதம். ஜெர்மனியின் மரபு மருத்துவத்தில் கிருமிகள் பற்றியுள்ள புரிதல்கள் இந்திய வேத காலத்து புரிதல்களுடன் மிகவும் ஒத்து வருவதாக ஜிஸ்க் சொல்கிறார். கிருமி நோயாகவும், அதன் நிறம் மற்றும் வடிவங்கள் ஒத்ததாகவும், பல் பூச்சி பற்றிய புரிதலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்.

ரிக் வேதத்தில் அதற்கு முன் எங்குமே குறிப்பிடபடாத நோய் உருவாக்கும் ஆப்வ எனும் பெண் தீய ஆற்றலை பற்றிய சிறிய விவரணை வருகிறது. வயிற்றில் வசிக்கும் அவள் பீடிக்கபட்டவரின் மனதை குழப்புவாள், கை கால்களை இழுத்துப் பற்றுவாள், நெஞ்செரிச்சல் ஏற்படுத்துவாள், இருள் மூட செய்வாள். இந்த அறிகுறிகள் ‘அச்ச தாக்குதலின்’ (panic attack) விவரணைகளுடன் நெருக்கமாக இருப்பதை ஜெல்நேர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆமீவா என்று குறிப்பிடப்படும் பெண் தீய ஆற்றல் ஏழ்மையுடன் தொடர்புடைய ஊட்டக் குறைவாக இருக்கும் என்கிறார் ஜிஸ்க். மாட்டுப் பால், நெய் போன்றவை அதை விரட்டும் சடங்குகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆமீவா வயிற்றில் உள்ள குழந்தைகளின் மாமிசத்தை உண்ணும் என்றொரு குறிப்பும் காணக் கிடைக்கிறது. மகோதரம் வருணனால் உருவாகிறது. மகோதர நோய் வந்தவன் நீர் நிரம்பிய  தோல் பை போல இருப்பான். சுற்றியும் நீரிருந்தும் அருந்த முடியாதவன் என்று ரிக் வேதம் கூறுகிறது.

விஸ்கந்த – சம்ஸ்கந்த எனும் தீய ஆற்றல்களின் விவரணை டெட்டனசை ஒட்டியுள்ளது. விஸ்கந்தம் என்றால் தோள்களை கிழித்து அப்பால் எறிவது, சம்ஸ்கந்த என்றால் தோள்களை ஒன்றாக பிணைவது. டெட்டனஸ் நோயின் இழுக்கும் தளர்வாக்கும் தொடர் தன்மையை குறிக்கிறது. தாடை பூட்டு ஒரு அறிகுறியாக சொல்லப்பட்டுள்ளது. ஹிப்போகிரேட்ஸ் முதன் முறையாக டெட்டனசை விவரிக்கிறார்.  திறந்த புண்ணுடன் தொடர்புபடுத்துகிறார். கடுமையான பக்கவாட்டு வலி, நெஞ்செலும்பு வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன.

வாஜிகரணம் எனும் ஆண்மைபெருக்கி பிரிவுக்கு தொடர்புடைய பகுதிகளையும் அதர்வ வேதத்தில் காணமுடிகிறது. குதிரை (வாஜி), காளை, கழுதை, யானை, ஆடு போன்றவை ஆண்மையின் சின்னமாக வழங்கப்படுகிறது. விருஷ்யம் எனும் சொல் ரிஷபத்திலிருந்து உருவானது. அதாவது காளையை குறிக்கும். virility எனும் சொல்லுக்கு நெருக்கமாக திகழ்கிறது. உச்சுஷ்மா எனும் மூலிகையைப் பற்றிய குறிப்பு சுவாரசியமாக உள்ளது. ஆண்மையை பெருக்கும் என்று அதர்வ வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆண் குறியை வலுப்படுத்தி, இறுக்கி, தூண்டுதலின் போது ஆண் குறியிலிருந்து வெப்பம் உமிழ செய்யும் என்பதாலேயே உச்சுஷ்மா என்று பெயர்.  இந்த தாவரத்தை கந்தர்வர்கள் வருணனனுக்காக தோண்டி எடுத்தார்கள். இது இன்றுவரை ஆண்மை பெருக்கியாக பயன்படும் பூனைக்காலி தாவரமாக இருக்கலாம் என்றொரு ஊகம் உள்ளது.

அதிமானுட ஆற்றல்கள் மனிதர்களுக்கு நோயை உருவாக்குகின்றன என்பது பரவலான வேத காலத்து நம்பிக்கை. நான்கு முக்கிய வகையான தீய ஆற்றல்கள் நோய்களை உருவாக்குகின்றன. ராக்ஷசர்கள் – புலன்களை களவாடுபவர்கள், மூட்டுகளை பீடிப்பவர்கள், பைசாசம் – பீடித்தவர்களின் மாமிசத்தை உண்பவர்கள், அத்ரின்களும் அப்படியே, கண்வர்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை உண்பவர்கள். இவைத்தவிர்த்து கந்தர்வர்கள் நாயை போன்றவர்கள், அப்சரஸ்கள் சித்தப் பிரமை ஏற்படுத்தி மனப் பிறழ்வை ஏற்படுத்துபவர்கள். நோயை உருவாக்கும் தீய ஆற்றல்களை இருவகையில் எதிர் கொள்கிறது அதர்வ வேதம். பலி சடங்குகள் மூலம் வணங்கி, வேண்டியதை அளித்து விடைப்பெற செய்கிறது அல்லது அதை விரட்டும் எதிர் இயல்புகளை திணித்து வழிக்கு கொண்டு வர முயல்கிறது.

அதர்வ வேதத்தில் வெண் புள்ளி கிலாசம் மற்றும் பலித எனும் இரு பெயர்களில் வெவ்வேறு நோயாக குறிப்பிடப் படுகிறது. பலித பிற்காலத்தில் நரை முடிக்கு உரிய சொல்லாக ஆனது. pale எனும் ஆங்கில சொல்லுக்கு வெளிறல் என்று பொருள். அதனுடன் உள்ள ஒற்றுமை கவனிக்கத்தக்கது. கிலாசம் சாபத்தால் நேர்வதாக அதர்வ வேதம் சொல்கிறது. யானை முடி மற்றும் தந்தம் கொண்ட கை காப்பு நீண்ட ஆயுள் வழங்கும் எனும் நம்பிக்கை வேதத்திலேயே உள்ளது. மணத்தக்காளி முடி வளர்ச்சிக்கு உகந்ததாக துதிக்கப் படுகிறது. தலை வலிக்கு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நெய்,நல்லெண்ணெய்,அல்லது கொழுப்பை அருந்துவது ஒரு சிகிச்சை முறையாக கூறப்பட்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஒன்றான சிநேக பானத்திற்கு நெருக்கமானது.

அதர்வ வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாஷகம் ( mosquito எனும் சொல்லிற்கு உள்ள நெருக்கம் கவனிக்கத்தக்கது) கொசுவாக இருக்கக்கூடும். உபாஜிக எனும் ஒருவகையான எறும்பு (அல்லது கரையான்) உருவாக்கும் நீர் மருத்துவ பயன் கொண்டது என புகழப் படுகிறது. ஒத்த வடிவு/ பண்பு உடையவை அதே போன்ற உறுப்புகளுக்கு நன்மை அளிக்கும் எனும் நம்பிக்கை தொல்கால மருத்துவ முறைகளில் புழங்கியது. கொம்பரக்கு ரத்த விருத்திக்கு பயன்படும் என்று சொல்லப்பட்டது. பக்க வாதத்திற்கு நாயின் காலடி மண்ணை பாதித்த பகுதியில் தடவும் வழக்கம் உள்ளது.நாய் அசைந்து கொண்டே இருக்கும் என்பதால் அதன் இயல்பை ஊட்ட முயல்கிறார்கள்.

அஞ்சன எனும் தாவரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என அதர்வ வேதம் கூறுகிறது. ‘வெளி பூச்சாக, தாயத்தாக, குளிப்பதற்கு, குடிப்பதற்கு என நன்கு வகையில் பயன்படுத்த வேண்டும்”. சடங்குகளுடன் சேர்த்து மூலிகைகள் உட்பயன்பாட்டிலும் இருந்ததை கௌஷிக சூத்திரம் சுட்டிக்காட்டுகிறது. கௌசிக சூத்திரத்தின் பங்களிப்பே கூட இந்த உட்பயன்பாட்டை கொணர்ந்ததாக இருக்கலாம்.

ஆச்சரியமாக சில புற நோய்கள் வேதத்தில் தர்க்கபூர்வமாக அணுகப்பட்டுள்ளன. குருதி வழிவதை நிறுத்த மண்ணை தடவுதல், செடிகளின் நாளங்களை கொண்டு மூத்திர அடைப்பை நீக்குதல், சில கொப்பளங்களை கீறுதல் மற்றும் உப்பு பூசுதல், க்ஷார கர்மம், அக்னி கர்மம், புண்ணின் மீது மரப்பிசின் பூசுதல், தலைமுடி வளர்வதற்கான மூலிகை போன்றவைகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம். சிந்து சமவெளி நாகரீகத்தின் எச்சங்கள். கொம்பரக்கை பாலில் கொதிக்க வைத்து அடிபட்டவனுக்கு வழங்குவது, அட்டை விடுதல், கட்டிகளை உடைக்க உப்பு தடவுவது, கோமயத்தை கொண்டு திறந்த புண்களை கழுவுவது என பல வழக்கங்கள் கௌஷிக சூத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதர்வ வேதத்தை காட்டிலும் கௌஷிக சூத்திரத்தில் அதிக மருத்துவ குறிப்புகள் உள்ளன என்பதே நிதர்சனம்.

இரண்டு நூல்களும் மேலும் பல தரவுகளை சுவாரசியமாக அடுக்குகின்றன. இந்த நீள் கட்டுரையில்  முக்கியமான போக்குகள், வளர்சிதை மாற்றங்கள், சுவாரசியமான தொன்மங்கள் மற்றும் பண்பாட்டு தொடர்சிகளை ஓரளவு சுட்டிக் காட்டியிருக்கிறேன். வேதங்களையோ, ஆயுர்வேத மூல நூல்களையோ வருடக் கணக்கில் ஆய்வு செய்தால் ஒழிய இவ்விதமான புத்தகத்தை எழுத முடியாது. அதர்வ வேதம் அதிமானுட ஆற்றல்களை அதிகமும் நோய்க்கான காரணிகளாக அடையாளம் காண்கிறது. எனினும் சில தர்க்க தெறிப்புகள், பிற்கால வழக்கங்களின் முதல் புள்ளிகள் தென்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆயுர்வேதத்தில் பவுத்தத்தின் பங்களிப்பு மறுக்கமுடியாதது. வேதத்தின் தாக்கமும் பங்களிப்பும் கரம்பெல்கர் முன்வைக்கும் அளவுக்கு அதீதமாகவோ ஜிஸ்க் மறுதலிக்கும் அளவுக்கு அற்பமாகவோ இல்லை என்பதையே சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

உயிர்ப்பித்தலின் கலை – வரலாற்று புதினத்தின் சவால்கள்.

(காலச்சுவடு கட்டுரை)

காலப்போக்கில் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், சுவாரசியமான பொய்களை நெய்வதற்காக நீங்கள் நாவலாசிரியர் ஆக முடியாது, நீங்கள் உண்மை கூற வேண்டும் என்பதற்காகவே நாவலாசிரியராக இயலும். – ஹிலாரி மாண்டெல்

பிபிசி வானொலி ஏற்பாடு செய்யும் ரெய்த் உரைகள் முக்கியமான சிந்தனைப் போக்குகளை அறிமுகம் செய்பவை. 1948ஆம் அண்டு பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் துவக்கி வைத்த இந்த உரைகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விவாத கோணங்களை முன்வைப்பவை. இவ்வாண்டு எழுத்தாளர் ஹிலாரி மான்டெல் வரலாற்று நாவல்களின் சவால் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி ஐந்து தொடர் உரைகள் ஆற்றியுள்ளார் (http://www.bbc.co.uk/programmes/b08vkm52) .இக்கட்டுரை அவருடைய உரையின் பேசுபொருளை சுருக்கமாக அறிமுகப்படுத்தவும், விவாதங்களை எழுப்பவும் முயல்கிறது. 

ஹிலாரி மான்டெல் இருமுறை புக்கர் விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் எனும் பெருமைக்குரியவர். அவருடைய வரலாற்று புனைவுகள் மத்தியகால ஆங்கிலேய அரசை மையமாக கொண்டவை, குறிப்பாக ஆங்கிலேய அரசர் எட்டாம் ஹென்றி மற்றும்  டூடர் வம்சாவளியினரின் காலகட்டத்தை சித்தரிப்பவை. 

‘The Day is for living’( http://www.bbc.co.uk/programmes/b08tcbrp), ‘Iron maiden’ (http://www.bbc.co.uk/programmes/b08v08m5), ‘Silence grips the town’ (http://www.bbc.co.uk/programmes/b08vy0y6), ‘Can these bones live?’ (http://www.bbc.co.uk/programmes/b08wp3g3).  ‘Adaptation’  http://www.bbc.co.uk/programmes/b08x9947) ஆகிய ஐந்து தலைப்புகளில் உள்ள உரைகளில் இறுதி உரையான ‘adaptation’ நாவல்களை மேடை நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் உருவாக்குவதில் உள்ள சவால்களைப் பேசுகின்றன. அவ்வுரையை மட்டும் இக்கட்டுரையில் தவிர்த்திருக்கிறேன். 

ஹிலாரியின் தொடர் உரை இரண்டு தளங்களை தொட்டு செல்வதாக தொகுத்து கொள்ளலாம்.
1. வரலாறு, வரலாற்று புனைவு, வாழ்க்கைச் சரிதை- ஆகிய வடிவங்களின் தன்மை, தேவை, எல்லை மற்றும் அவற்றிடையே அமைந்த உறவு. 
2. வரலாற்று புனைவின் சவால்கள், வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள். 


முதல் உரையில் வரலாற்றின் நெகிழ்வுத்தன்மையை பற்றி விரிவாக தன் கருத்துகளை முன்வைக்கிறார். நமக்கு கிடைக்கும் வரலாற்று தரவுகள் காத்திரமானவை, ஆனால் வரலாற்றாசிரியன் அத்தரவுகளை வெறுமே அடுக்கியளிக்க இயலாது, வரலாற்றாசிரியன் முழுக்க தர்க்கத்தின் பாற்பட்டு செயலாற்றவும் முடியாது என்கிறார். அதே நேரம், வரலாற்றின் எல்லையையும் தெளிவாகவே சுட்டுகிறார். ‘சான்றுகள் முழுமையானவையல்ல. மெய்யின் பகுதிகள் என்றாலும், உண்மைகள் மெய்யாகாது, தகவல்கள் அறிவாகாது, வரலாறு என்பது கடந்தகாலம் அன்று, கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை தொகுக்கும் முறைமை என்றே வரலாற்றை கூறலாம். சான்றுகளின் ஆவணத்தொகை,’ என்கிறார். 

வரலாற்று ஆசிரியருக்கும் புனைவெழுத்தாளனுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி விவாதிக்கும் போது, “வரலாற்று ஆசிரியன் நடுநிலைக்காக போராடுகிறான், ஆனால் நாவலாசிரியருக்கு அது ஒரு சிக்கல் அல்ல. அவனுடைய பாத்திரங்களின் பின் ஒளிந்து கொள்ள முடியும்.” என்கிறார். வரலாற்று ஆசிரியன் நடுநிலையை விழைகிறான், அதை நெருங்குகிறான், ஆனால் முழுக்க நடுநிலை என்பது சாத்தியமா? வரலாற்று ஆசிரியன், அவனுக்கு கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியை கட்டமைக்கிறான், அதற்கொரு திசையை அளிக்கிறான், நிகழ்வுகளின் நோக்கங்களை ஊகிக்கிறான். மென்மையான அளவில் என்றாலும் இங்கு புனைவுத்தன்மை தென்படுகிறது. எனவே, புனைவு, சரிதை, வரலாறு மூன்றும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல எனும் பார்வையை முன்வைக்கிறார். “வரலாற்று ஆசிரியன், வாழ்க்கைச் சரிதை எழுத்தாளன், புனைவெழுத்தாளன் வெவ்வேறு நெருக்கடிகளுக்குள் இயங்குகிறார்கள், எனினும் அவை எதிரெதிரானவை அல்ல, ஒன்றையொன்று நிரப்புபவை.” தூய வரலாறு, தூய புனைவு என ஏதுமில்லை என்பதே அவருடைய வாதத்தின் மையமாக இருக்கிறது.

ஹிலாரி மரித்த மனிதன் குரலற்றுப் போகிறான் என்கிறார். அதன்பின் அவன் புனைவுக்குள் எழுகிறான். எனினும், தன் குரலாக அவன் ஒலிக்கப் போவதில்லை என்றானவுடன், அவனது பேச்சுக்கும் செயலுக்கும் நாம் நமது சாய்வுகளுக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்து பொருளேற்றுகிறோம் என்கிறார். இங்கு, ஒரே தரவுகளைக்கொண்டு ஒரே மனிதனை நாயகனாகவும் எதிர்நாயகனாகவும் கட்டமைக்க முடியும். 

தனி மனிதர்களாக நாம் வரலாற்றைத் துழாவி கொண்டிருக்கிறோம், நம் மூதாதையர்களின் விழிவழியே உலகை நோக்க முயல்கிறோம். ஹிலாரி ஒரு மேற்கோள் அளிக்கிறார் ‘பெயரற்றவர்களின் நீண்ட பாரம்பரியத்திலிருந்து நான் உதித்திருக்கிறேன்’. நம்மில் பெரும்பான்மையினருக்கு இது பொருந்தும். தனிப்பெரும் இருப்பற்ற மக்கள் பெருக்கின் வாரிசுகள் நாம். வரலாறுகளை அசைத்த முன்னோர்கள் அல்ல, வேடிக்கை பார்த்தவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தவர்களின் வாரிசுகள் நாம். வரலாறு நம்மைப் போன்றவர்களுக்கு அளிக்க மறுத்த இடத்தை வரலாற்றுப் புனைவுகள் எடுத்துக்கொண்டன. சாமானியர்களின் விழிவழியே நழுவிச்செல்லும் காலப்பெருக்கை நிலைநிறுத்த முயல்கின்றன. 

நடுகல் துவங்கி நம் பண்பாட்டில் நினைவுகூர்தல் முக்கிய பங்காற்றுகிறது. அடக்குமுறை அரசுகள் துரோகிகளுக்கு அளிக்கும் மிகக் கொடூரமான தண்டனை என்பது மரணம் அல்ல, வரலாற்று தடங்களை அழித்தல். மனிதன் வாழ்ந்து மறைந்த பின் விட்டுச்செல்வது வரலாற்றை மட்டுமே. அது எத்தனை எளிமையானதாகவும், சாதரணமாகவும் இருந்தாலும் கூட. அதையும் அவனிடமிருந்து பிடுங்குவது என்பது வாழ்வு நோக்கத்தை சிதைப்பது, வாழ்க்கையின் அர்த்தப்பாடை அழிப்பது. 

ஹிலாரி முன்னோர்களை நினைவுக்கூர்தல் எத்தனை முக்கியமானது என குறிப்பிடுகிறார். “மனிதனுக்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்கள் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்க முடியாத மாமிசப் பிண்டத் தொகையாக மாறுதல் அது.” கல்லறைகள் இறந்தவர்களின் நினைவுச்சின்னங்கள். ஏதோ ஒருவகையில் இறப்புக்கு பின் எஞ்சும் அடையாளங்களில் ஒன்று. 
.   
ஹிலாரி நினைவுக்கூர்தலின் அரசியலைப் பற்றி பேசுகிறார். அதிலுள்ள தேர்வுகள் அசலான உண்மை அறிதலை விழைவாகக் கொண்டவையா, எனும் கேள்வி முக்கியமானது. நினைவுகூர்தல் சில சமயங்களில் உண்மையை நாடுகிறது, சில சமயங்களில் நமக்கு வாகான மாயத்தோற்றத்தை தேடுகிறது என்கிறார். தனி மனிதர்களாக துயரத்தினாலோ அல்லது தேவையினாலோ நாம் கடந்தகால மனிதர்களை மீட்கிறோம். ஒரு சமூகமாக நம் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப ஒரு கடந்த காலத்தை நாடுகிறோம். இனக்குழுவாக, தேசமாக நாம் நம் கடந்தகால தொன்மங்களைத் தேடுகிறோம், கடந்தகால பெருமைகளையோ அல்லது துயரங்களையோ அதன் அடிநாதமாக மீட்க முயல்கிறோம், ஆனால் அரிதாகவே சமரசமற்ற உண்மையின் பாற்பட்டு கடந்த காலத்தை அணுகுகிறோம் என்கிறார். 

ஹிலாரி முந்தைய பகுதியில் வரலாறு நெகிழ்வுத்தன்மை கொண்டது எனச் சொல்வதும் சமரசமற்று உண்மையை தேடுவது என்பதும் முரணாக ஒலிக்கிறதோ என்றொரு ஐயம் எழுந்தது. ஆனால் அப்படியல்ல, வரலாற்றின் நெகிழ்வுத்தன்மையை புனைவின் சாதனமாக பயன்படுத்த இயலும் என்பதையே அவர் சொல்கிறார் என்பதை இந்த மொத்த உரைகளில் இருந்து புரிந்துகொள்ள இயலும். மற்றோர் தருணத்தில் “வரலாற்று புனைவின் மிகப்பெரிய பலம் என்பது பொதுவான ஆவணங்களில் இருந்து, பொதுவான கதைகளில் இருந்து கலையைத் தேர முடிவதே. வரலாற்றுக்கு நெருக்கமாகும் தோறும் கதை வலுவடைகிறது” என வரலாற்று புனைவுகள் வரலாற்று சான்றுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வாதிடுகிறார். 

வரலாற்று புனைவுகளில் உள்ள சவால்கள், வழிகாட்டுதல்கள் எச்சரிக்கையை கீழ் வரும் புள்ளிகளாக தொகுத்துகொள்ளலாம். 

1.பிரதிநிதித்துவ இலக்கியம் மேம்பட்ட இலக்கியமாக இருக்க வேண்டியதில்லை. 

ஹிலாரி மிக முக்கியமான ஒரு தற்காலப் போக்கை சுட்டிக்காட்டுகிறார், வரலாற்று கற்பனாவாதம் முன்பு பெரும் பிரபுகுல குடும்பங்களுடனான தொடர்பு, மேல்மட்ட மனிதர்களின் சமூக தொடர்பு பற்றி இருந்தன, தற்காலத்தில் அது அப்படியே திரும்பி இடப்பெயர்வு, மறுக்கப்படுதல் என்று மாறியுள்ளது என்கிறார். மற்றோர் தருணத்தில் இதே கருத்தை விமர்சனபூர்வமாக நீட்டித்து சொல்கிறார்- “பல ஆண்டுகளாகவே பெரும் கதையாடல்களில் இருந்து நாம் விலகி வந்து கொண்டிருக்கிறோம், வேரற்ற, குரலற்ற, உடைந்த மாந்தர்கள் மீது நமக்கோர் அதீத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஆகவே நாம் மகத்தான மனிதர்களை ஐயம் கொள்கிறோம், நாயகர்களை புறந்தள்ளுகிறோம். முதலில் கடவுள்கள் வெளியேறினார்கள், பிறகு நாயகர்கள், நமக்கு எஞ்சியிருப்பது அழுக்கேறிய, சமரசத்துக்குட்பட்ட நமது சுயங்கள் மட்டுமே.” 

இலக்கியம் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்றொரு நம்பிக்கை இங்குண்டு. உண்மையில் அத்தகைய நோக்கங்களை பறைசாற்றிக்கொண்டு இலக்கியம் பிழைக்க முடியுமா என்றொரு கேள்வியை ஹிலாரியின் கருத்து என்னுள் எழுப்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களை சந்தித்தபோது, இலங்கையின் முற்போக்கு அரசியலின் அழுத்தங்கள் காரணமாக சில ஆண்டுகள் எழுதாமல் இருந்ததைக் கூறினார். இன்னின்ன குரல்கள் இன்னின்ன தொனியில் ஒலிக்க வேண்டும் எனும் முன்முடிவுகளோடு இலக்கியம் அணுகப்பட முடியாது என்றே நம்புகிறேன். பிரதிநிதி அரசியலைப்பற்றி மற்றுமொரு தருணத்தில் தீர்க்கமாக விமரிசிக்கிறார்- “நாம் பிறருடைய குரலாக ஒலிக்க முயலும் போது கவனமாக இருக்க வேண்டும். நாம் காலனியவாதிகளா? ஒட்டுண்ணிகளா? வரலாற்றால் வஞ்சிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதும்போது அதை விலாவாரியாக எழுதி அவர்களுடைய நிலையை உறுதிப்படுத்துகிறோமோ? அல்லது பாதிக்கப்பட்டவர்களை வெற்றியாளர்களாக சித்தரித்து வரலாற்றை மாற்றி எழுதலாமா? கடந்த காலத்து பெண்களைப் பற்றி எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால் இது, அவர்களுக்கு இல்லாத அதிகாரத்தை அளிக்காமல் இருக்க முடிவதில்லை”. 

2.  வரலாறும் புனைவும் முயங்கும் புள்ளிகள் 

வரலாறும் புனைவும் கலக்கும் புள்ளிகள் அவருடைய உரையின் மிக முக்கியமான பகுதி. எந்தெந்த தளங்களில் புனைவு செயல்பட முடியும்? எந்த அளவுக்கு வரலாற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது போன்ற கேள்விகளை அவர் எதிர்கொள்கிறார். புற உலகை கச்சிதமாக கட்டமைப்பதற்கு வரலாற்று தகவல்கள் தனக்கு உதவுகின்றன என்கிறார். நிகழ்வுகள் திட்டவட்டமாக புலப்படுகின்றன, ஆனால் பாத்திரங்களின் உணர்வு மோதல்களை, நாடகீய தருணங்களை, அலைக்கழிப்பை, புனைவைக்கொண்டு நிரப்புகிறேன் என்கிறார். வரலாற்று சான்றுகளில் உள்ள இடைவெளிகள், மவுனங்கள் தன்னை நாவலாசிரியர் ஆக்கின என்கிறார். எனினும் ‘ எனது நிலையை கேள்விக்குட்படுத்தும் சூழலை நான் விரும்புவதில்லை என்பதால் நான் இட்டுக்கட்டுவதில்லை, ஒருவழியாக என்னை திருப்திப்படுத்தும் நடுவாந்திரமான பாதையை கண்டடைந்தேன். ஒரு மனிதனின் உளக் கொந்தளிப்பை நான் கற்பனை செய்துவிட முடியும், ஆனால் அவனுடைய வசிப்பறையின் சுவர்தாளின் நிறத்தை ஒருபோதும் இட்டுக்கட்ட மாட்டேன்.” 

ஒரு தேர்ந்த வரலாற்று புனைவு எழுத்தாளன் ‘நிகழ்வு கனவை சந்திக்கும் புள்ளியில், அரசியல் உளவியலையும், தனிப்பட்டவை பொதுவானவற்றை சந்திக்கும் புள்ளிகளிலும் இயங்குகிறான்.’ என்கிறார் மற்றோர் தருணத்தில் .  “வரலாற்று புனைவின் பணியென்பது காப்பகத்திலிருந்து கடந்தகாலத்தை மீட்டு அதை ஓர் உடலில் பொறுத்துவது தான்.” என்கிறார். 

 3.  வரலாற்று புனைவின் சவால்கள் 

 வரலாற்று ஆசிரியர்கள் சான்றுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் பயிற்சி உடையவர்கள், நாவலாசிரியர் இக்கலையை இனிதான் சரியாக கற்க வேண்டும் என்கிறார். ஒரு கேள்விக்கு – வரலாற்று தரவுகள் மற்றும் ஆவணங்களில் சில நேரங்களில் ஒரு எழுத்தாளராக நாம் தேடுவது கிட்டாமல் போகும், உள்ளே என்ன நிகழ்ந்தது? இந்த விளைவுக்கு காரணமான திருப்புமுனை என்னவாக இருக்கும்? வேறு என்ன சாத்தியங்கள் இருந்திருக்கக் கூடும்? என பல கேள்விகள் மனதை அரிக்கும். அதன் ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு காட்சியையும் கண்டடைய முற்பட்டு நாடகீய தருணங்களை அடைய நாடுவதே எழுத்து வாழ்வின் அற்புத கணங்கள் என்கிறார். வரலாற்று புனைவாசிரியனின் மிக முக்கியமான சவால் என்பது அவன் இன்றைய மொழியை, இன்றைய அறிதலை பழங்காலத்துக்கு கொண்டு செல்கிறான். அங்கு கதை மாந்தர்களுக்கு அவர்களுடைய வருங்காலத்தில் என்ன  நிகழும் என்பது தெரியாது, அவர்களுடைய மொழியை செவி கூர்ந்து கேட்கிறான், அதை சமகால மொழியில் திரும்பகூற முயல்கிறான். 

சாமானியர்களின் பார்வையில் வரலாற்று நிகழ்வுகளை புனைவாக்கும்போது சற்றே கூடுதல் சுதந்திரம் உண்டு. வரலாற்று நாயகர்களின் பார்வையில் புனைவை நகர்த்துவது சவாலானது. நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழாமல் கவனமாக கையாள வேண்டும்.

4.சுவாரசியமாக்குதல்

வரலாற்று புனைவு என்ன செய்யக்கூடும் என்பதை தெளிவாகவே முன்வைக்கிறார்.‘நேர்மையாக எழுதப்பட்ட வரலாற்று புனைவு தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது நம்மை அசவுகரியமான எல்லைகளுக்கு இட்டுச்செல்ல கூடும். ‘இதை நம்பு ‘ என கோராது, மாறாக ‘இதைப் பரிசீலித்து பார்’ என்று வரலாற்று ஆசிரியனுக்கு அருகமர்ந்து – மாற்று உண்மைகளை அல்ல, மேலதிக உண்மைகளைக் கூட அல்ல, புதிய திறப்புகளை அளிக்க முடியும்.’ என்கிறார். காந்தியின் காரியதரிசி கல்யாணத்தின் நினைவுகளைக்கொண்டு எழுதப்பட்ட குமரி எஸ்.நீலகண்டனின் நாவல் நினைவுக்கு வருகிறது. நேர்மையாக எழுதப்பட்டிருந்தது, சில முன்முடிவுகளை அசைத்தது, எனினும் சுவாரசியமாக இருந்ததா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். எனினும் இங்கு சுவாரசியம் என்பதை மட்டும் கணக்கில் கொள்ள கூடாது, அதீத சுவாரசியம் வரலாற்று கற்பனாவாத நாவல்களையே உற்பத்தி செய்யும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள் தமிழின் முதல் வரலாற்று நாவல்கள் என அடையாளபடுத்தபடுகின்றன. ஓரளவு தரவுகளையும் சுவாரசியத்தையும் சமன்படுத்த முயன்றிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ , பூமணியின் ‘ அஞ்ஞாடி’ ஆகிய நாவல்களையும் இவ்வரிசையில் வைக்கலாம். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘சிக்க வீர ராஜேந்திரன்’ இவ்வகையில் சமநிலையை எட்டிய மிகமுக்கியமான நாவல். ஜெயமோகனின் ‘வெள்ளையானையும்’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சி. “நாம் வாழாத வாழ்வுக்கான உளவியல் ஈடாக எல்லா நாவல்களையும் வரையறுக்கலாம். வரலாற்று நாவல்கள் அனுபவங்களின் மீதான பேராசையால் உருவாகின்றன.” என்கிறார்

  ” 
5.சில எச்சரிக்கைகள் 

வரலாற்று புனைவெழுத்தாளனுக்கு சில எச்சரிக்கைகளை அளிக்கிறார். “தொலைந்த உலகை கற்பனை செய்யும் போது நாம் நம் புலன்களை தயார்ப்படுத்த வேண்டும். இறுதி முடிவுக்கு வருவதற்கு முன் காணவும் கேட்கவும் வேண்டும். ஆனால் நாம் வேகமாக முடிவுக்கு வந்துவிடுவோம். கடந்த காலத்தைப்பற்றிய அச்சம் மற்றும் மனவிலக்கத்திற்கும் நினைவேக்கத்துக்குமாக நம் முடிவுகள் ஊசலாடும்.” “நாம் பிறருடைய குரலாக ஒலிக்க முயலும் போது கவனமாக இருக்க வேண்டும். கடந்தகாலத்தையும் ஒரு பண்டமாக்கி விற்கவே நாம் விழைகிறோம்” என்கிறார். “நாவலாசிரியர் ஆய்வு செய்வதாக ஒருபோதும் சொல்லிக்கொள்ளக் கூடாது, உண்மையில் ஏற்கனவே இருக்கும் தரவுகளில் இருந்து தேவையான உண்மைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறான். பயின்ற வரலாற்று ஆய்வாளானாக இல்லாத பட்சத்தில் நாவலாசிரியர்களுக்கு முதன்மை தரவுகளை ஆய்வு செய்யும் திறன்கள் கிடையாது” என ஆணித்தரமாக சொல்கிறார். .  

6.வரலாற்று புனைவு எழுத்தாளனின் பொறுப்பு 

வரலாற்று புனைவை வாசகர்களுக்கு முன் படைக்கும் போது நாவலாசிரியருக்கு சில கூடுதல் பொறுப்புக்கள் உள்ளன என்கிறார் ஹிலாரி.” கடந்தகால மக்களை தாழ்வானவர்களாக சித்தரிக்க கூடாது, நம்முடைய வேறு வடிவங்களாக ஆக்கி அவர்களை சிதைத்துவிட கூடாது. நமக்கு கிடைக்கும் சான்றுகளை ஐயத்துடனே அணுக வேண்டும். பிழையை தொடரக்கூடாது. நமது போதாமைகளையும் இடைவெளிகளையும் படைப்பூக்கத்துடன் பயன்படுத்த முடியுமா என்று நோக்க வேண்டும்”. 

7.வாசகர்களுக்கு சில சொற்கள் 

 வாசகர்கள் மீதான பொதுவான எதிர்பார்ப்புகளை சொல்கிறார் ஹிலாரி. வாசகர்கள் பொதுவாக தாங்கள் முதன்முதலாக அறிந்த வரலாற்று சித்திரங்கள் மீது மிகுந்த பிடிப்புடையவர்களாக திகழ்கிறார்கள். வரலாற்று புனைவெழுத்தாளர் தனக்கு கிடைத்த தரவுகளைக்கொண்டு வேறோர் சித்திரம் கட்டியெழுப்ப முற்படும் போது அதை அவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். அவர்களுடைய பாலியத்தை பறிப்பது போல் உணர்கிறார்கள். இரண்டு வெவ்வேறு தருணங்களில் ஹிலாரி வாசகர்களை சற்று கடுமையாக  அணுகுகிறார். ‘ பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் நாடுபவர்களுக்கு வரலாறு உரிய இடமல்ல, பொருட்படுத்தத்தக்க புனைவுகளைப்போல் பொருட்படுத்தத்தக்க வரலாறும் அயராத சுய பரிசீலனைகளால் ஆனதே’ என்கிறார். மற்றொரு தருணத்தில் ‘நீங்கள் கண்டடைந்த இல்லத்திற்குள் வாசகன் விருந்தினராக வரவேற்கப்பட வேண்டும், ஆனால் அவன் ஒருபோதும் காலைத்தூக்கி நாற்காலியின் மீது வைக்கக்கூடாது.’ என்கிறார்.  

. 8.தொன்மம் என்பது 

. “தொன்மம் என்பது பொய்யல்ல, குறியீட்டிலும், உருவகத்திலும் வடிக்கப்பட்டுள்ள உண்மை”  எனும் கருத்து வெண் முரசு போன்ற  இந்திய எழுத்தை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும்  மிக முக்கியமான கருவி. ஒப்பீட்டளவில் வரலாற்று ஆவணங்களை காட்டிலும் இந்திய துணை கண்டம் தொன்மங்களுக்கும் புராணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதை வரலாற்று ஆய்வாளார்கள் ஒரு மிக முக்கியமான குற்றசாட்டாக வைப்பதுண்டு.எனினும் தொன்மங்களோ, நாட்டார் கதைகளோ, புராணங்களோ நிகழ்வுகளின் ஆவணங்கள் அல்ல. மாறாக அன்றைய சமூகம் ஆறாம் என்றும் விழுமியம் என்றும் எதை வகுத்ததோ அதை காலாதீதமாக கொண்டு செல்ல முயன்றது. அதில் வெற்றியும் பெற்றது. கற்பு, வீரம், தியாகம், ஞானம் என சிலவற்றை தக்கவைத்துகொள்ளும் விழைவு.    

இவ்வெட்டு விதிகள் தவிர்த்து, மூன்றாவது உரையில் ஃபிரெஞ்சு புரட்சி பற்றி நாவலும் நாடகமும் எழுத தன்னை ஓர் அறையில் அடைத்துக்கொண்டு மாய்ந்த போலாந்து பெண் எழுத்தாளர் ஸ்டாசியாவின் கதையை முன்வைத்து விரிவாக பேசுகிறார். ஃபிரெஞ்சு புரட்சியில் ஒடுங்கிய ஒரு நாயகனை மையமாக கொண்டு வெறித்தனமாக எழுதுகிறார். உணவு உறக்கம் வெளியுலகம் என ஏதுமின்றி எழுதி தீர்ந்து நோய் முற்றி மறைகிறார். “எவரேனும் எழுத்து ஒரு மருந்து என சொல்லக்கூடும் என்றால், நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன், இவ்வாழ்வை நோக்க சொல்வேன்” என்கிறார் ஹிலாரி.

ஸ்டாசியா விஷயத்தில் என்ன தவறு நிகழ்ந்தது எனும் கேள்வியை எழுப்புகிறார். ‘ஸ்டாசியா மீண்டும் மீண்டும் உண்மையைக் கண்டடைய கடுமையாக உழைத்தார். ஆனால் அந்த உண்மையை உரிய கூறுமுறையில் பயன்படுத்தி வலுப்படுத்த அவரால் இயலவில்லை. முழுமை வேட்கை அவரை முடமாக்கியது. அவருடைய படைப்பை எடைபோடும் இடைவெளியை இழந்தார், சமரசம் என்பது அவமரியாதையல்ல எனும் நடைமுறை உண்மை அவருக்கு உரைக்கவில்லை. நுண்தகவல்கள் முக்கியம் தான் ஆனால் வேகம், பிடிமானம், வடிவம் என இன்னபிற விஷயங்களும் அதேயளவுக்கு முக்கியம்” என்கிறார்.  

“உண்மைக்கும் முழு உண்மைக்குமான வேறுபாட்டை ஸ்டாசியா உணரவில்லை. தகவலை விடுப்பது என்பது அவரை பொறுத்தவரை ஏமாற்றுவது. போலியாக எதையும் முன்வைத்துவிடக்கூடாது எனும் அதீத எச்சரிக்கை உணர்வு காரணமாக அவருடைய திசையையும் வழிமுறையையும் இறுக்கமாகப் பேணிக்கொண்டார். இப்புள்ளியில் அவருடைய கலை தோற்றுப்போனது.”

ஸ்டாசியாவின் கதை என்னை வெகுவாக பாதித்தது. கலைக்காக தன்னை அளித்தல் என்பது இருக்கட்டும், அப்படி தன்னை உருக்கி வடித்தது சரியாக உருக்கொள்ளவில்லை என்பதே மிகப்பெரிய சோகம். ஹிலாரி சில சமயங்களில் போதிய தகவல்கள் இல்லையென்றால் எவருக்காகவும் காத்திராமல் உள்ளுணர்வை நம்பி நம்பகத்தன்மையை கைகொள்ள அறிவுறுத்துகிறார். அவருடைய இக்கருத்து சார்ந்து சில விமர்சனங்கள் அவர் மீது வைக்கபடுவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக வரலாற்று புனைவின் வடிவம், நோக்கம், சவால் என பல தளங்களில் நம் சிந்தனைகளை தொகுத்துக்கொள்ள ஹிலாரியின் உரை உதவுகிறது.  
நரோபா 
. .