புத்தகங்கள்

Pages

Thursday, June 28, 2018

விகடன் தொலைபேசி நேர்காணல் - ஒரு விளக்கம்


ஆனந்த விகடனில் தொலைபேசி நேர்காணல் செய்தார்கள். அதில் சில கருத்துக்கள் பிழையாக பொருள்படக் கூடும் என்பதால் இந்த விளக்கம்.

'தொப்பி திலகம்' - தொட்டி திலகம் என்று வந்திருக்கிறது.

என் கதையில் novelty இல்லை என்று ஒரு விமர்சனம் வைத்தார்கள் என குறிப்பிட்டிருந்தேன் - ஆனால் அது புனைவுத்தன்மை குறைவு என்பதாக வந்துள்ளது.

உடைப்பு எடுத்ததுபோல் இப்போது புதிய எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுத வந்திருக்கிறார்கள் என்று சொன்னவரை சரி. ஆனால் தேக்க நிலை என்பது என் சொல் அல்ல. நவீன இலக்கிய தேக்கம் அடையாமல் இயல்பாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.


Tuesday, June 19, 2018

குக்கூ சிறுகதை முகாம்

யாவரும் பதிப்பக நண்பர் ஜீவ கரிகாலன் வெகு நாட்களாய் சொல்லிவரும் திட்டம். ஆனால் அது இறுதியான தேதியில் குடும்ப விழாவிற்காக பாண்டிச்சேரி செல்வதாக இருந்தேன். ஒருநாள் மட்டுமாவது பங்கெடுக்க வேண்டும் என அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்துகொண்டேன். அகரமுதல்வனின் 'பான் கீ மூனின் ருவாண்டா' பற்றி கட்டுரை வாசிப்பதாக முடிவானது. மொத்தம் ஒன்பது தொகுப்புக்களைப் பற்றி ஒன்பது எழுத்தாளர்கள் கட்டுரை வாசிப்பதாக இருந்தது. 

வெள்ளி இரவு காரைக்குடியில் புறப்பட்டபோது புதுகோட்டையில் தூயன் இணைந்து கொண்டார். விவாதிக்க எடுத்துக்கொண்ட கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்தோம். திருச்சியில் எங்களுடன் ஸ்டாலின் சரவணனும் புலியூர் முருகேசனும் சேர்ந்து கொண்டார்கள். பேசியபடி விடிகாலை திருவண்ணாமலை சென்று சேர்ந்தோம். உறங்குவதற்கு வாகாக இருக்கை இல்லாததால் சரியான உறக்கம் இல்லை. திருவண்ணாமலையில் சென்னையிலிருந்து ஜீவ கரிகாலன், கார்த்திக் பாலசுப்பிரமணியன், கார்த்திக் புகழேந்தி மற்றும் பிகு ஆகியோர் ஒழுகும் பேருந்தில் நின்றவண்ணம் வந்தார்கள். ஏறத்தாழ ஒரே சமயத்தில் திருவண்ணாமலையை இரு கோஷ்டிகளும் வந்து அடைந்தோம். 

அங்கிருந்து ஒருமணிநேர பேருந்து பயணத்தில் சிங்காரபேட்டைக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில், ஜவ்வாது மலைத்தொடர் அடிவாரத்தில் உள்ளது குக்கூ காட்டுப்பள்ளி. குக்கூ சிவராஜ் நெடுநாள் நண்பர் ஆனால் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. காந்தி - இன்று மீது மிகுந்த மரியாதை உடையவர். எனக்கும் அவர் பணிமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. குமரப்பா, நம்மாழ்வார் என சில நல்ல பிரசுரங்களை அவருடைய இயல்வாகை பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. 'தும்பி' அட்டகாசமான சிறுவர் இதழ். அதன் வண்ண ஓவியங்கள் அத்தனை அற்புதமாக இருக்கும். சிறுகதை அமர்வில் பங்கேற்க வேண்டும் எனும் விழைவு அளவிற்கே சிவராஜை காண வேண்டும் என்றும் விரும்பினேன். 

புலியூர் முருகேசன் அவர்களின் மீசையும், தோரணையும் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என எவரையும் நம்பவைத்துவிடும். அப்படி நம்பியவர்களைப் பற்றிய கதைகளை சிரிக்க சிரிக்க சொல்லிக்கொண்டிருந்தார்கள் ஸ்டாலினும் புலியூர் முருகேசனும். அந்த பகுதி தமிழக நக்சல் பகுதிகளில் ஒன்று. அப்பு - பாலன், அராஜக வட்டி என்று அங்கிருக்கும் டீ கடையில் (மிகப் பிரமாதமான டீ) நின்றபடி பேசிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து குக்கூ பள்ளிக்கு செல்ல ஒரு டாட்டா ஏஸ் வண்டியை வாடகைக்கு பிடித்தார் ஜீவா. அனைவரும் நின்றபடி  மலை சூழ்ந்த மண்பாதையில் பயணிக்க துவங்கியதுமே முந்தைய இரவின் அலுப்பு காணாமல் ஆனது. 

குக்கூ கட்டிடம் எளிய வாழ்விடம். கரியடுப்பு பயன்படுத்துகிறார்கள். நல்ல நூலகம் உள்ளது. கூடுகைக்கு சூரிய வெளிச்சம் உள்ளேவரும் வகையில் வடிமவைக்கப்பட்ட சிறிய வட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. நர்சரி உள்ளது. சிறிய வெள்ளை பூனைக்குட்டி காலை பிராண்டி விளையாடிக் கொண்டிருந்தது. சிவராஜுடன் சுமார் ஒருமணிநேரம் காந்திய புத்தகங்கள் மற்றும் காந்தி 150 க்கான செயல்திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இதயபூர்வமாக வயிற்றை பிடித்து சிரித்து கண்ணீர் மல்கும் அரியவகை சிரிப்பு அவருடையது. அந்த உற்சாக நம்மையும் தொற்றிகொள்ளும். குறைந்தது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது காந்தி இன்றில் பதிவுகள் இடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். 

எழுத்தாளர் ஜீ. முருகன் அவர்களை சந்திப்பதும் இதுவே முதல் முறை. மிக சுவாரசியமான உரையாடல்காரர். ஏழு வருட இடைவெளிக்கு பிறகு தான் கதையெழுத வந்ததை அவர் சொன்னதை கேட்டபோது மனம் கனத்தது. எழுத்தாளன் எழுத முடியாமல் போவதன் அவலம், அதை உடைத்து தன்னை மீட்டுகொள்ளும் ஆற்றல் என ஊக்கமூட்டும் பேச்சு. நரம்பு சிக்கலை மீறி எழுதுவதன் சவாலைப் பற்றி சொன்னார். தனது உள தேவைகளுக்கு மருந்தாகவும் எழுத்து இருக்கிறது என்றார். காப்காவும், மவுனியும் தனக்கு பிடித்த எழுத்தாளர்கள் என்று பகிர்ந்துகொண்டார். இந்த முழுநாளுமே அவருடைய பங்களிப்பினால் விவாதங்கள் செறிவாகின. விவாதம் நீண்டுக்கொண்டே போனபோது எல்லாம் அதை சரியான புள்ளியில் முடித்து வைத்தார். 

கவிதைக்காரன் இளங்கோ, அகரமுதல்வன், ரமேஷ் ரக்ஷன், திரு வெங்கட், பரிமளாதேவி, கனகராஜ், நாகபிரகாஷ், நவீன் என பலரும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும். காலைச் சிற்றுண்டு கிச்சடியை உண்டு முடித்து விவாத அரங்கை துவங்கினோம். சிவராஜ் சிறிய உரை வழி குக்கூவின் பயணம் மற்றும் இலட்சியத்தைப் பற்றி சொன்னார். பின்னர் அனைவரும் சுய அறிமுகம் செய்துகொண்டோம். ஜி. முருகனின் அறிமுக உரைக்கு பின் முதல் அரங்காக நான் அகரமுதல்வனின் பான் கீ மூனின் ருவாண்டா குறித்து பேசினேன். 

                         

அவருடைய கதைகளை வாசித்து இந்த கட்டுரையை எழுதியதும் கொஞ்சம் மனச்சலனம் அடைந்தது. ஏனெனில் நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதிகமும் எதிர்மறை விமர்சனங்கள் கொண்ட கட்டுரை இதுவே, விமர்சகன் எழுத்தாளனை அடித்து காலி செய்பவன் அல்ல. அவன் ஒரு சக படைப்பாளி போல எழுத்தாளன் தவறிய இடங்களை சுட்டிக் காட்டி, அவனுடைய உச்சங்களை தொட்டுக் காட்டுபவன் என்பதே என் விமர்சன நம்பிக்கை. மீண்டும் ஒருமுறை கதைகளை வாசித்து எதையாவது தவற விடுகிறேனா என்று பார்த்தேன். கட்டுரையை கடைசி வரை சீரமைத்துக்கொண்டே இருந்தேன். காரம் கூடிய கட்டுரையை முகத்திற்கு நேராக வாசிப்பதில் சங்கடம் இருந்தது. ஆனால் இத்தகைய விமர்சனங்கள் நேருக்கு நேராக வாசிக்கப்ப்படும்போதே வன்மம் இன்றி,  அதன் உள்நோக்கம் புலப்பட்டு நேர்மறையாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை இவ்வரங்கு எனக்கு உணர்த்தியது.  அகரமுதல்வன் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டார். என் விமர்சனங்களை ஏற்கும் புள்ளிகளையும் நிராகரிக்கும் புள்ளிகளையும் கூறினார். பதிலுக்கு நான் சில விளக்கங்கள் கொடுத்தேன். ஏறத்தாழ ஒன்றரைமணிநேரம் விவாதம் தனிப்பட்ட தாக்குதலோ கசப்போ இன்றி நீண்டது. தூயன், புலியூர் முருகேசன், ஸ்டாலின் என பலரும் விவாதத்தை செறிவாக்கினார்கள். ஒருகட்டத்திற்கு மேல் எங்கள் இருவரின் புனைவைப் பற்றிய புரிதலும் நேரெதிர் என்றதை உணர்ந்து கொண்டதும் விவாதத்தை முடித்துக்கொண்டு அடுத்தடுத்த கதைகளுக்கு சென்றோம். இந்த விமர்சன கட்டுரை அடுத்த பதாகை இதழில் இடம்பெறும். அத்தோடு சேர்ந்து அகரமுதல்வன் தன் தரப்பை வைக்கும் பேட்டியும் போடலாம் என்றொரு யோசனை. 

சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை தொகுப்பு குறித்து ஜீவ கரிகாலன் விமர்சன கட்டுரையை வாசித்தார். பெண்கள் பற்றிய பார்வை மற்றும் சில இடங்களில் தென்படும் வன்மம், ஜெயமோகனின் தாக்கம் என சிலவற்றை சுட்டிக்காட்டினார். கூர்மையான மொழியும் கூர்மதியும் கொண்ட எழுத்தாளராக சுரேஷ் பிரதீப் உள்ளார் என்றார் ஜீவா. கடைசி நேரத்தில் அவர் வரவில்லை ஆகவே சுரேஷ் பிரதீப் கலைசெல்வியின் சிறுகதை குறித்து எழுதிய கட்டுரையை பிகு வாசித்தார். நண்பர் பரிதி வந்திருந்தார். கோணங்கியின் உறவினர் பாரதிராஜா குடும்பத்துடன் வந்திருந்தார். நவீனின் புதிய சிறுகதை தொகுப்பான போயக் குறித்து கார்த்திக் பாலசுப்பிரமணியன் கட்டுரை வாசித்தார். மசாஜ் கதை தொகுப்பின் மிக பலவீனமான கதை என்றும்.அதே கதையின் மேம்பட்ட வடிவமான யாக்கை குறித்தும் பேசினோம். கார்த்திக் பாலசுப்பிரமணியன் 'ஜமால்' கதையே இத்தொகுதியின் சிறந்த கதை என குறிப்பிட்டார். ஸ்டாலின் சரவணன் புலியூர் முருகேசன் குறித்து வாசித்த கட்டுரை இந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்பேன். கொந்தளிப்புமற்றும் எல்லாவற்றையும் அரசியலாக பார்ப்பது அவருடைய இயல்பு என சுட்டிக்காட்டினார். போர்கேசின் பாதிப்பு உள்ள எழுத்தாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் புலியூரிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் தொடர் கனவுகளால் அலைகழிவதாகவும் அதையே தன் படைப்பூக்கமாக கொள்வதாகவும் கூறினார்.  


புலியூர் முருகேசனை எனக்கு நேரில் அதற்கு முன் பரிச்சயம் இல்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் அவர் எழுதுவதை எல்லாம் வைத்து ஒருவிதமான எதிர்மறை மனபிம்பம் எனக்குள் இருந்தது. ஜெயமோகன் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டவர். ஜெயமோகனுக்கு நன்றி சொல்வதையோ, சமர்பிப்பதையோ கூட விமர்சிப்பவர். ஜெயமோகன் பள்ளியை சேர்ந்தவனாக இவையெல்லாம் எனக்கு மெல்லிய பதட்டத்தை அளித்தது. எனினும் இவை எனக்கு புதிய அனுபவமாகவும் இருந்தது. உரையாடலின் போது "அவருக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட தகறாரா..அவர் வேற சாமிய கும்பிடுறார், நான் வேற சாமிய கும்பிடுறேன்..சமகாலத்த எழுத வேண்டாம்னு சொல்றதுதான் பிரச்சனை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடக்கவே இல்லைன்னு அரசு ஆவணங்கள் மறைத்திருக்கிறது. நூறு வருஷத்தில் அதற்கொரு ஆவணம் கூட இல்லாம போகலாம். எழுத்தாளனுக்கு தான் அதை பதிவு செய்யும் கடமை இருக்கிறது" என்றார். இந்த முகாமில் அவர் பற்றிய என் மதிப்பீடு முற்றிலுமாக மாறியது. எழுத்தால் அவருக்கு நேர்ந்த துன்பமும், அலைக்கழிப்பும், கொந்தளிப்பும் மனம் பதற செய்தது. உள்நாட்டிலேயே அகதியாக வாழ்வதாக உணர்வது எத்தனைப்பெரிய அவலம். அவருடைய நீர் கடிதம் கதையைப் பற்றி தூயன் சொல்லிக்கொண்டிருந்தார். தொடர்பில் இல்லாத இரு நண்பர்கள் காவேரியிலும் பவானியிலும் நீரில் எழுதி கொள்கிறார்கள் என்பதான கதை. இந்தக் கதையை ஸ்டாலின் தன் கட்டுரையில் நிர்பந்தத்தால் தஞ்சையில் வசிக்கும் புலியூர் தன் ஊருடன் தொடர்புகொள்வதாக அவருடைய ஒட்டுமொத்த கதையுலகின் மீதான படிமமாக மாற்றியது சிறப்பு. அரங்கில் அனல்பறக்க விவாதித்தாலும், வெளியே இயல்பான வாஞ்சையுள்ள மனிதராக தென்பட்டார். 

                                    
  
ரமேஷ் ரக்ஷன் நரனின் 'கேசம்' சிறுகதை தொகுப்பு குறித்து வாசித்த கட்டுரை பெரும் விவாதத்தை  எழுப்பியது. தகவல் பிழைகள் அழகியல் சிக்கல் என எவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கக் வேண்டும் என இறுதி முடிவு எட்டப்படாமல் விவாதம் முற்று பெற்றது. மதிய உணவின் போது வ, மணிகண்டன் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். கோசும் வெள்ளக்கொண்டைகடலை போட்ட கறியும், சாம்பாரும், ரசமும் சாப்பிட்டோம். குக்கூ வளாகத்திற்குள் அலைபேசி தொடர்பு கிடைக்கவே இல்லை என்பது ஒருவகையில் ஆசுவாசம். விற்பனைக்கு கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். உணவு இடைவேளையின் போது ரமேஷ் ரக்ஷனோடு உரையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு பொதுவாக காமம் சார்ந்த படைப்புகளில் எழுதுவதற்கு புதிதாக ஏதுமில்லை என்றொரு எண்ணம் உண்டு. வெவ்வேறு விமர்சன கட்டுரைகளில் இதை பதிவும் செய்திருக்கிறேன். ரமேஷ் தன் கதையுலகம் பற்றியும், அதில் தன் பயணம் பற்றியும் விரிவாக பேசினார். காமத்தை பல கோணங்களில் இருந்து நுட்பமாக எழுதி பார்க்கிறார். ஏறத்தாழ கிளர்ச்சியை வெளியேற்றி காமத்தை எழுதும் முயற்சி. அவருடைய பெர்ப்யூம் தொகுப்பை வாசித்து பார்க்க வேண்டும். 

மதிய உணவிற்கு பின் அமர்வு மீண்டும் துவங்கியது. லைலா எக்ஸ் எழுதிய 'பிரதியின் நிர்வாணம்' குறித்து தூயன் கட்டுரை வாசித்தார். பெண் அகத்தை பெண்களைக் காட்டிலும் ஆண்களே அணுக்கமாக எழுதுகிறார்களோ என்றொரு விவாதத்தை வைத்தார். அதற்கான மறுப்பு பங்குபெற வந்திருந்த பெண் ஒருவரிடமிருந்தே வந்தது. மேலும் எழுத வரும் பெண்கள் பழகி வரும் மொழியும் ஆண்கள் புழங்கியதுதான் என்பதால் இந்த ஒற்றுமை இருக்கலாம் என்றொரு பார்வையை ஜி. முருகன் வைத்தார். கவிதைக்காரன் இளங்கோ ரமேஷ் ரக்ஷனின் 'பெர்ப்யூம்' குறித்து கட்டுரை வாசித்தார். கட்டுரையில் விமர்சன அம்சமே இல்லை என ஒரு நண்பரால் சுட்டிக்காட்டப்பட்டபோது தன் கருத்துக்களை இளங்கோ கூறினார். விவாதிக்கப்பட்ட 'சதுரங்கம்' கதையில் 'விந்து தானம்' பற்றி புலியூர் முருகேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு ரமேஷ் விளக்கமளித்தார். மாலை ஆறு மணிக்கு ஆட்டோ வரச்சொல்லி இருந்தோம். ஆகவே இறுதி கட்டுரையான புலியூர் முருகேசன் கார்த்திக் புகழேந்தியின் ஆரஞ்சு மிட்டாய் குறித்து வாசித்ததை சரிவர கவனிக்கவில்லை. குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்று அவசரம் அவசரமாக நான், தூயன், அகரமுதல்வன் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆட்டோவில் கிளம்பினோம். நெருக்கியடித்து சிங்காரபேட்டையில் பேருந்தில் ஏறி பாதிதூரம் நின்றுக்கொண்டே திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம். அதுவரை இல்லாத சோர்வு பேருந்து ஏறியதும் அப்பிக்கொண்டது. ஒன்பது அமர்வுகளும் இடைவிடாது நிகழ்ந்த விவாதங்களும் நல்ல அனுபவமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் கற்றலின் எல்லையை விரித்துகொள்ளவும், புதிய ஆளுமைகளை சந்திக்கவும், எனது வசதி பிரதேசத்திலிருந்து வெளியேறி எல்லாவற்றையும் பரிசீலிக்கவும் நல்வாய்ப்பாக இருந்தது. விவாதிக்கப்பட்ட ஒன்பது கதை தொகுப்புக்களின் ஆசிரியர்களும் பங்கு பெற்றிருந்தால் மேலும் செறிவாக இருந்திருக்கும். அவர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும். வன்மம் அற்ற விமர்சனம் என்பது அரிதாக கிடைப்பது. 






இரண்டாம நாள் நிகழ்வில் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கலந்துகொண்ட அரங்கை தவறவிட்டேன் என்பதே ஒரே வருத்தம். நிகழ்வை ஏற்பாடு செய்த ஜீவகரிகாலன் மற்றும் முன்னின்று நடத்திய ஜீ.முருகனுக்கும் அற்புதமான அனுபவத்தை அளித்த குக்கூ சிவராஜ் உட்பட நண்பர்களுக்கும் நன்றிகள். 

(புகைப்படங்கள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்)