புத்தகங்கள்

Pages

Tuesday, May 29, 2018

சிறுகதை குறிப்பு - 4- சிறுமி கொண்டு வந்த மலர்

மே மாத மரப்பாச்சி கூட்டத்திற்கு விவாதிக்க இக்கதையை தேர்வு செய்திருந்தோம். ஊட்டி காவிய முகாமில் விஷால் ராஜாவின் 'முடிவின்மையில் நிகழ்பவை' சிறுகதையைப் பற்றிய விவாதத்தின் போது தேவதை கதை அமைப்பைப் பற்றியும் பேசினோம். அப்போது இக்கதையை இவ்வடிவின் சிறந்த உதாரணமாக சொன்னார் ஜெயமோகன்.

இக்கதைக்கு டாக்டர். ரவிச்சந்திரன் சிறப்பான வாசிப்பை அளித்தார். கூடுகையின் நோக்கம் இத்தகைய பல வாசிப்புகளை புனைவுகளின் மீது நிகழ்த்தி நம் புரிதலை விசாலப்படுத்துவதே. இந்த குறிப்பு கதை விவாதத்திற்கு பிறகு அதன் சாரத்தை ஒட்டி எழுதப்படுகிறது.

நகரத்து நெரிசலான தெருவில் உள்ள அடகுக்கடை தான் கதைக்களம். சமணரான சுகன்சந்த் ஜெய்ன் குழப்பமான மனநிலையில் முந்தைய நாள் நிகழ்வை அசைபோடுகிறார். முந்தைய நாள் பாவாடை சட்டை அணிந்த ரெட்டை ஜடை போட்ட களையான முகம் கொண்ட சிறுமி அவர் கடைக்கு வருகிறாள். கிராம 180 ரூபாய் விற்கும் காலத்தில் ஏழெட்டு பவுன் இருக்கக்கூடிய ஒரு தங்க ரோஜாப்பூ அவளிடம் இருக்கிறது. அதை உரசிப்பார்த்து அவள் கேட்கும் ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார். ஆனால் இளைப்பாறிவிட்டு வரும்போது அது சாதாரண ரோஜாவாக மாறிவிடுகிறது. இறுதியில் அதை தூக்கி சாக்கடைக்கு அருகே வீசிவிடுகிறார். 

எளிய கதையாக தென்படும் இக்கதையில் பல அடுக்குகளையும் நுட்பங்களையும் மாமல்லன் சாதித்திருக்கிறார். கோடரி எடுத்து கொடுக்கும் தேவதை கதை நம் நினைவில் இருக்கலாம். ஒரு அற்புதம் நிகழ்கிறது, மனிதனின் நேர்மை சோதிக்கப்படுகிறது, சோதனையை தாங்குபவன் ஆசிர்வதிக்கப்படுகிறான். பேராசையால் ஏய்ப்பவன் வீழ்கிறான். சிறுமி மலர் அளித்து பணம் பெற்று சென்ற பின்னர் அவளுடைய முகவரியைக் கூட வாங்கவில்லை என்று உரைக்கிறது. அதன் பின் அதுவும் வசதிதான் என எண்ணுகிறார். தானாக யாரையும் ஏமாற்றவில்லை. வாழ்க்கையே வாய்ப்பளிக்கும்போது தான் ஏன் மறுக்க வேண்டும் என தனக்குத்தானே நியாயம் சொல்லிக் கொள்கிறார். 

அதன் பின்னர் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு நகை அடகு வைக்க வருகிறது ஒரு குடும்பம். அவர்களிடம் சுகன்சந்த் கறாராக நடந்துகொள்கிறார். அவர்கள் கேட்கும் தொகையில் இருந்து குறைத்து ஏமாற்றுகிறார். இதுதான் அவர் நேர்மைக்கான சோதனை. இதன் பிறகு தன் தங்க ரோஜா சாமானிய ரோஜாவாக ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ அந்த சிறுமி வயதிருக்கும் போதிலிருந்தே இந்த தொழில் அவர் இருப்பதாக நினைவுகூர்கிறார். மீண்டும் அந்த பரிசுத்த நிலைக்கு மீள்வதற்கான ஒரு வாசல் அவருக்கு திறந்தது. கதை இறுதியில் அந்த ரோஜாவை ஏறத்தாழ அதே வயதில் இருக்கும் பேரன் எடுக்க வரும்போது அவனை தடுக்கிறார். சிறுமியை தேடி தெருத்தெருவாக அலையும் அவர் கோவிலுக்கு அருகே சென்றவர் கருவறைக்குள் செல்லவில்லை. அழுக்கும் கசண்டும் நிறைந்த நகரத்து தெருவில் அவரை நோக்கி ஒரு தெய்வம் இறங்கி வந்தது. மீட்பிற்கு ஒரு வாய்ப்பளித்தது. மறுநாள் காலையிலும் மலர் வாடவில்லை என்றபோதாவது உணர்ந்திருக்கலாம் இந்த அற்புதத்தின் நோக்கத்தை. ஆனால் சுயநலமும் பேராசையும் மறைத்துவிட்டது. 

மரபில் பொன் வைக்கும் இடத்தில் பூவை வைக்கலாம் என்பார்கள். பொன் அழிவற்றது, தேய்மானம் அற்றது, பூ அழிந்து போவது. இவை இரண்டும் ஏன் இணை வைக்கப்படுகின்றன? அழிவற்றதும் அழகியதும் ஒன்று சேரும் இடம் எது? மீட்புக்கான கதவுகள் நம் பிரக்ஞையில் நிலைப்பதே இல்லை.  இந்த கதையில் சிறுமி கொண்டு வரும் மலர் ஒரு உருவகமாக மனதில் விரிந்துகொண்டே இருக்கிறது. வாடாத அம்மலர் தூயது, இணையில்லாதது. கதை மாய யதார்த்த மிகு புனைவாக இல்லாமல் ஆன்மீக தளத்திலும் விரிகிறது. அதுவே இக்கதையை தமிழின் மிக முக்கியமான கதையாக ஆக்குகிறது. 

2 comments:

  1. இது ஒரு காப்பியடிச்சான் கதை. மூலம்: செல்மா லாகெர்லவ்.

    ReplyDelete
  2. மிக அருமை நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete