இன்றைய தமிழ் தி இந்துவில் (15/4/2018) எழுத்தாளர் பூமணியின் 'கொம்மை' நாவலைப் பற்றி எழுதியிருக்கும் சிறிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. சற்றே சுருக்கப்பட்டு வெளியாகி இருக்கும் கட்டுரையின் விரிந்த வடிவம் இது.
--
வில்லி பாரதம் துவங்கி பாரதியின் பாஞ்சாலி சபதம், எம்.வி. வெங்கட்ராமின் நித்திய கன்னி, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’, ஜெயமோகனின் ‘வெண் முரசு’ நாவல் வரிசை என தமிழகத்தில் மகாபாரதம் படைப்பாளிகளை எக்காலத்திலும் வசீகரித்தபடியே தான் உள்ளது. இந்திய அளவிலும் எம்.டி வாசுதேவ நாயர், பைரப்பா, காண்டேகர் என பல எழுத்தாளர்களும் பாரதத்தின் கதைகளை எடுத்தாண்டுள்ளார்கள். பாரதத்தை மீளுருவாக்கம் செய்யும் மரபு என்பது மாகவி காளிதாசனில் இருந்தே துவங்குகிறது. சாகுந்தலம் அத்தகைய முயற்சியே. அ.கா பெருமாள் ‘அர்ஜுனனின் தமிழ் காதலிகள்’ என்றொரு தமிழக நாட்டரியல் பாரத கதைகளின் தொகுப்பையும் கொண்டு வந்துள்ளார். பிராந்திய நாட்டாரியல் தொன்மங்கள் வியாச பாரத கதையுடன் இணைந்து ஒரு கதை பெருவெளியை உருவாக்குகிறது. யட்ச கானம், தெரு கூத்து, நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், உபன்யாசங்கள், திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்களில் மகாபாரதம் இந்திய மக்களின் வாழ்வுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இவ்வரிசையில் எழுத்தாளர் பூமணியின் கொம்மையும் இணைந்து கொள்கிறது.
மகாபாரதம் ஏன் மீள மீள எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது என்பதற்கு ஒற்றைப்படையான பதில் ஏதும் இல்லை. ஆன்மீக நூலாக, கதை மாந்தர்களும் அவர்களின் அகங்காரங்களும் மோதி சிதறும் பெரும் மானுட நாடகமாக, மாயாஜால குழந்தை கதையாக, வெவ்வேறு மெய்யியல் மரபுகள் பொருதும் களமாக, அரசியல் பிரதியாக, பெண்ணிய பிரதியாக என பலவாறாக பல நோக்கங்களுக்காக வாசிக்கப் படுகிறது. ஒவ்வொரு வாசிப்பிற்கும் அதற்குரிய தனிச்சையான வசீகரம் உண்டு. மறுகுரலில் மகாபாரதம் எனும் அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள ‘கொம்மை’ பெண்களின் துயர நாடகத்தை மையப் படுத்தும் பிரதியாக மக்கள் மொழியில் தனித்தன்மையுடன் உருவாகியுள்ளது.
நாவலை ‘ஆதிக்கத்தால் அலைக்கழியும் அபலைகளுக்கு’ தான் அர்ப்பணித்துள்ளார் பூமணி. சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, இடும்பி, உத்தரை என விழைவுகளின், விதியின் விசையில் துன்புறும் பெண்களின் கதைகளை கரிசனத்துடன் அணுகி இருக்கிறார் பூமணி. காந்தாரி போருக்கு முன் தான் கண்ணை கட்டி திரட்டிய தவ ஆற்றலை மகனுக்கு செலுத்துவதற்காக கட்டை அவிழ்த்து துரியனை காண்பது தான் நாமறிந்த பாரத கதை ஆனால் ‘கொம்மையில்’ குருக்ஷேத்திரத்தில் கவுரவர்கள் மாண்டுபோன பின்னர் அப்போதவாது அவர்களின் முகத்தை இறுதியாக காண வேண்டும் என்பதற்காக கண் கட்டை அவிழ்க்கும் போது அந்த துயரத்தின் வீச்சு முந்தைய வடிவத்தை காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக நம்மை சூழ்கிறது.
நாமறிந்த பாரத கதையிலிருந்து விலகி சில புதிய கதைகளை பூமணி சொல்கிறார். தெரு கூத்து, நாட்டாரியல் தளங்களில் இருந்து எடுத்தாண்டிருக்கலாம் அல்லது அவரே உருவாக்கியும் இருக்கலாம். அதற்கான சுதந்திரத்தை பாரதம் எப்போதும் படைப்பாளிகளுக்கு அளித்தே உள்ளது. அதன் காரணமாகவே இந்திய துணைகண்டம் முழுவதும் விரவி பரவ அதனால் இயன்றது. பீஷ்மனை வதைக்க புறப்படும் அம்பையின் தவத்திற்கு முருகன் இறங்கி வருகிறான். அவனொரு மாலையை அளிக்கிறான். அதை அணிபவன் பீஷ்மனை வீழ்த்த முடியும் என ஆசிர்வதிக்கிறான். விதுரனின் தாய் சிவை ஒரு சூதர்குல சேடி என்பதற்கு அப்பால் நாம் ஏதும் அறிவதில்லை. ஜெயமோகனின் வெண் முரசிலும் சிவை ஒரு பாத்திரமாக விரிவாக வருகிறார். ‘கொம்மையில்’ சிவைக்கு கடம்பன் என்றொரு கணவன் இருந்ததாகவும், அந்தப்புரத்து காவலுக்கு அவன் மாற்றப்பட்டதால் காயடிக்கப்பட்டு குழந்தை இன்றி இருந்ததாக பூமணி எழுதுகிறார். அதேப்போல் கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொல்வான் என்பதாக இல்லாமல் ஐந்து குழந்தைகள் தப்பித்து பிழைத்திருந்ததாக சொல்கிறார். கிருஷ்ணனின் துனைவிகளில் ஒருவரான நக்னஜித்தி தான் நப்பின்னை என்பதும் புதிய கோணம் தான். அரவானின் மரணத்திற்கு பின் அவளுடைய தாய் உலூபி அர்ஜுனனின் மற்றொரு மனைவியான சித்திராங்கதையுடன் சேர்ந்து வாழ்கிறாள். பீமனை நெறித்து கொல்ல திருதாஷ்டிரன் முயலும் போது பீமன் அவன் காதில் முணுமுணுத்து மிரட்டுகிறான். அதன் பின்னே அவனுடைய பிடி நெகிழ்கிறது. இது போன்ற தருணங்கள் பூமணியின் கற்பனைக்கு சான்று. ஏகலைவன் குரு காணிக்கையாக கட்டைவிரலை அளித்தபின்னர் வாய்பூட்டு போடபட்டிருந்த பசித்த வேட்டை நாய் வாய் கட்டு அவிழ்ந்தவுடன் அந்த கட்டை விரலை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உணர்சிகரமான இடங்களில் பூமணி முழுமையாக வெளிப்படுகிறார்..
உரையாடல்கள் வட்டார வழக்கில் மிளிர்கின்றன. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமமான உரையாடல்கள் இரண்டு அணுக்க நண்பர்கள் பேசிகொள்வதாக இருப்பது அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. அர்ஜுனன் கிருஷ்ணனை கறுத்த மச்சான் என்றே அழைக்கிறான். கர்ணனின் மனைவி பொன்னுருவி பற்றிய கதை நாட்டார் மரபில் உள்ளது. கண் தெரியாத ராதை புளிய மரத்தை ‘ஒங்கிட்ட காய்க்கிற பழம் அதிகமா வாடாமலும் முழுக்கப் பழுக்காமலும் ஆகட்டும்’ என்று சபிப்பதும் கூட நாட்டார் தன்மை கொண்ட கதை தான். யதார்த்த கதையாக சுருக்கிவிடாமல் பாரதத்தின் மாயத்தன்மையையும் தக்கவைத்தபடி இரண்டிற்கும் இடையில் சமநிலை பேண முயன்றுள்ளார். அவ்வப்போது நாவலில் சில பஎளிய பாடல்கள் வருகின்றன, அவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில துருத்தலாகவும் தென்பட்டன. சாமானிய மனிதர்களின் கதை எனும் தளத்தில் பயனிப்பதாலேயே, பூமணி ஏற்றுக்கொண்ட பேசு பொருளுக்கு இணங்க, கீதை உபதேசம், பீஷ்மரின் அம்புப் படுக்கை உபதேசம் போன்ற தத்துவ பகுதிகள் எதிர்கொள்ளப்படாமல் கடக்கப் படுகிறது.
ஒட்டுமொத்தமாக 600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சி பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் பூமணி.
கொம்மை
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு