முன்னரே இக்கதையை வாசித்திருந்தாலும், இன்றைய மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகைக்கு இக்கதையை பேசுவதாக தீர்மானம் செய்துகொண்டதால் மீண்டும் இக்கதையை வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அடையாளபடுத்தபடும் கதைகளிலொன்று. எனது வாசிப்பையும், கூடுகையில் நிகழ்ந்த வாசிப்பையும் தொகுத்து விளக்கிகொள்ளும் முயற்சி இக்கட்டுரை.
கதை குடகை களமாக கொண்டது. குடகின் கூர்கி மக்களின் வாழ்வை சொல்வது. இந்து இஸ்லாமிய மதங்கள் இருந்தாலும் கூர்கிகளாக, அண்ணன் தங்கையாக உறவுள்ளவர்களாக உள்ளார்கள். கூர்கி சமூகம் ஏறத்தாழ பழங்குடி சமூகம்போல தொன்மையான வழமைகளை கொண்டது. உஸ்மானி, பொனச்சா, பினு, ராசய்யா, ஷகீலா என கலவையான அடையாளங்களை சுட்டும் பெயர்கள். மத அடையாளம் பின்னுக்கு தள்ளப்பட்டு பிராந்திய இனக்குழு அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம். இனக்குழு சார்ந்த பெருமிதமும் வெளிப்படுகிறது. தன் மகனை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் கூட மற்றொரு கூர்கியை தான் தங்கை மகள் தேர்கிறாள் என்று உஸ்மானி ஆசுவாசம் கொள்கிறார்.
நிகழ்கால திருமண நிகழ்வும், அதற்கு முன்பான மகனுடனான உரையாடலும் ஊடுபாவாக பின்னிசெல்கிறது. துவக்கத்திலேயே குடகின் பெருமைகளை யாரும் பேணுவதில்லை எனும் வருத்தம் உஸ்மானிக்கு வருகிறது. அப்பர் கொடவா பிரிட்ஜ் எழுத்துக்கள் அழிந்து போயிருக்கிறது. "கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொல்லும்ம்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்கியா பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது" என்று அங்கலாய்க்கிறார். பண்பாட்டு கலப்பு குறித்து கவலை கொள்கிறார். இந்த வரிகளில் உஸ்மானியின் பாத்திரம் துலக்கம் அடைந்து விடுகிறது.மேலும் கதைக்கான முக்கிய முடிச்சும் புலப்பட்டு விடுகிறது. தான் விரும்பிய பெண் கிடைக்காத விரக்தியில் மகன் உடைந்து போயிருக்கிறான். இதற்கெல்லாம் உடைந்து விடலாமா? இத்தனை பலவீனமாக வளர்த்து விட்டேனா? "நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்..." என்று ஆறுதல் சொல்கிறார். அவனுடைய உற்சாகம் வற்றி, அவள் நன்றாகவே இருக்கட்டும், நாம் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு குடி பெயரலாம் என்கிறான். தந்தையை திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறான். மீறி சென்றால் தான அங்கு இருக்க மாட்டேன் என்கிறான். தந்தை அவனை தேற்றுகிறார்.
திருமண விழா விரிவாக சித்தரிக்கப்படுகிறது. கூர்க் திருமண வழக்கங்கள், அதன் கொண்டாட்டங்கள்,மது விருந்து என பண்பாட்டு சித்தரிப்பு வலுவாக உள்ளது. உஸ்மானி முழு மனதோடு கொண்டாட்டங்களில் உற்சாகமாக பங்கு கொள்கிறார். கொண்டாட்டத்திற்கு ஏதுவாக மூத்திர பையையும் தூக்கிக்கொண்டு வருகிறார். தந்தை மன்னிக்கும் பரந்த மனமுடையவர்,மகன் குறுகிய மனமுடைய இறுக்கமானவன் எனும் சித்திரமே கதையின் இறுதி முடிச்சு வரை தென்படுகிறது. இறுதி நிகழ்வின் வழியாக இந்த சமன்பாடு அப்படியே தலைகீழாகிறது. ஒரு அதிர்ச்சிகரமான திருப்பத்துடன் கதை முடிகிறது.
விமலாதித்த மாமல்லன் இக்கதை குறித்து எழுதியுள்ள சிறு விமர்சன குறிப்பை வாசித்தேன். அதில் இந்த இறுதி திருப்பத்தை சுட்டிக்காட்டி ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். இறுதி திருப்பத்திற்கான குறிப்புகள் கதையில் இல்லாததால் இது மேலான கதையாக இல்லை என்று வரையறை செய்திருந்தார். இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. இப்போது எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி உஸ்மானி கொலைக்கான திட்டமிடலுடன் தான் வீட்டிலிருந்தே கிளம்பினாரா? அல்லது கணப்பொழுதில் நிகழ்ந்ததா? முந்தையதாக இருந்தால் மாமல்லனின் விமர்சனம் ஏற்புடையதே. ஆனால் 'சண்டை சச்சரவுகளின் பொது விழிப்பு கொள்ளும் மூதாதையின் வேட்டை புத்தி' சட்டென எதிர்பாராமல் அவரையும் மீறி வெளிப்பட்ட தருணமாக இறுதி நிகழ்வை கொண்டோம் என்றால் மாமல்லனின் விமர்சனத்தை ஏற்க வேண்டியதில்லை. இரண்டாவது வாசிப்பிற்கான குறிப்புகளே கதையில் உள்ளது என்று எண்ணுகிறேன்.
மேலும் உஸ்மானி யாரை கொல்கிறார் எனும் தேர்வில் இக்கதையின் தலைப்பும் முடிச்சும் உள்ளது என்றே எண்ணுகிறேன். மலைவாழ் வேட்டை சமூகம், இன உணர்வும் மேட்டிமையும் உண்டு. அன்னியரை எதிரியாக காண்கிறது. ஆகவே மகனை கைவிட்ட தன் உறவினரான தங்கை மகளை விட்டுவிட்டு அவள் தேர்ந்தெடுத்த கணவனை கொல்கிறார். இதுவே வேளாண் சமூகமாக இருந்தால் சாதி ஆணவ படுகொலையே நிகழ அதிக வாய்ப்பு. பழைய கூர்கிக்கும் நவீன கூர்கிக்கும் இடையிலான மோதல்.அல்லது நவீனத்திற்கு எதிரான பழமைவாதத்தின் பிடிவாதம் என்று வெவ்வேறு கோணங்களில் இக்கதையை அணுக முடியும்.
"விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது." எனும் வரிக்கு அடுத்த் வரியாக "பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன." என்று வருகிறது. இவ்வரிகள் இக்கதையை கவிஞனின் கதையாக்குகிறது. ஒருவகையில் இக்கதையை இவ்விரு உருவகங்களின் முரணாக காணமுடியும் என்றே எண்ணுகிறேன். யூமாவின் படைப்புலகே கூட மென்மைக்கும் குரூரதிற்குமான முரணில் உருவாகுபவை என்று தோன்றுகிறது. கவித்துவமான விவரணைகளும் உக்கிரமான உணர்வுகளும் சங்கமிக்கும் நல்ல கதைகளிலொன்று.
x
No comments:
Post a Comment