புத்தகங்கள்

Pages

Sunday, February 18, 2018

காரைக்குடி புத்தக கண்காட்சி 2018 அனுபவங்கள்


ஃ பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கிய காரைக்குடி புத்தக கண்காட்சி 18 ஆம் தேதி வரை காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறுநகரமான காரைக்குடியில் தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக பெரும் சவால்களை கடந்து உயிர்ப்புடன்  நடைபெறுகிறது. முதல் மூன்று ஆண்டுகள் மத்தியல் மின் வேதியல் ஆய்வு மையம் புத்தக கண்காட்சியை ஒருங்கிணைத்தது. அப்போது பெரும் வரவேற்பு கிடைத்தது. பல எழுத்தாளர்களை அழைத்து வந்தார்கள். பின்னர் அவர்கள் விலகிக் கொண்டதும் வாசிப்பின் மீது ஆர்வமுள்ள தன்னார்வ குழு புத்தக கண்காட்சியை ஒருங்கிணைக்க தொடங்கியது. பிற மாவட்டங்களைப் போல் மாவட்ட ஆட்சியர் ஆர்வமுடன் முன்னெடுப்பதில்லை. ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், பாரதி கிருஷ்ணகுமார் என பல எழுத்தாளர்கள் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளார்கள். தமிழ்த்தாய் கோவில் வளாகத்திலேயே புத்தக கண்காட்சி நிகழ்வது பெரும் அறிவு தொடர்ச்சியை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிறைவு விழாவின் போது மாநில அளவில் சாதனை படைத்த காரைக்குடி மாணவர்களை மேடையில் மரியாதை செய்கிறார்கள். இந்த அண்டு பத்து அரசு பள்ளிகளுக்கு மொத்தம் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை நூலகங்களுக்காக வழங்கினார்கள். ஆனால் இந்த புத்தகங்களை உள்ளிருக்கும் அரங்குகளில் இருந்து வாங்குவதே முறை. ஆனால் புரவலர்கள் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என ஒதுங்கிவிட்டனர். கௌரா ஏஜென்சீஸ் 50 சதவித தள்ளுபடியில் விற்றுக் கொண்டிருந்த புத்தகங்கள் எல்லோருடைய தேர்வாகவும் ஆயின. கல்லூரி நூலகத்திற்காக வாங்குபவர்களும் மொத்தமாக அங்கு வாங்கி சென்றனர்.சில லட்சங்களுக்கு புத்தகம் விற்பனை ஆனதாக பேச்சு. ஆக புத்தக விற்பனை என்பது அல்ல சிக்கல். என்ன விதமான புத்தகங்கள் என்பதே.

காரைக்குடியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் டாக்டர். அய்க்கண் இன்று வரை முனைப்புடன் கண்காட்சியை ஒருங்கிணைத்து வருகிறார். ஐம்பது புத்தக அரங்குகள் உள்ள கண்காட்சியில் பெரும்பாலான அரங்குகள் வாடிக்கையாக வரும் பதிப்பகங்களே எடுத்துக் கொள்கின்றன. இம்முறை சுமார் 30 விற்பனை நிலையங்கள் பங்கு கொண்டன. தொடர்ந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் பதிப்பகத்தாருக்கு வசிப்பிடம் இலவசமாக வி.கே. என் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது என்பதே. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை செட்டிநாட்டை கழித்து விட்டு எழுதிவிட முடியாது. முக்கியமான பதிப்பாளர்கள் காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான். சா. கணேசன் துவங்கிய காரைக்குடி கம்பன் கழகம் மரபிலக்கியத்தை இன்று வரை உயிர்ப்பித்து பெரும் தொண்டாற்றி வருகிறது. கந்த ஷஷ்டி விழா, ராமாயண சொற்பொழிவு, திருக்குறள் விழா, சிலம்பு விழா என கொண்டாட்டங்கள் வருடம் முழுக்க நீளும். இன்றும் திருமணம் மற்றும் பிற குடும்ப விழாக்களில் புத்தகங்களை அச்சடித்து பரிசாக வழங்கும் வழக்கம் நீடிக்கிறது. ரோஜா முத்தையா புத்தக சேகரிப்பைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. மரபிலக்கியத்தில் வலுவான தடம் பதித்த காரைக்குடி நவீன தமிழ் இலக்கியத்தில் சன்னமாகவே தடம் பதித்துள்ளது. ப. சிங்காரம் ஓரளவு இப்பகுதியின் வாழ்வியலை  அந்நிய நிலத்தின் பின்புலத்தில் பதிவு செய்திருக்கிறார்.முத்து மீனாள், ரமா இன்ப சுப்பிரமணியன், ஆறாவயல் பெரியய்யா, ஆறுமுக தமிழன், தேனம்மை லக்ஷ்மணன் போன்றோர் கவனிக்கத்தக்க எழுத்தாளுமைகள் என நினைவில் எழுகிறார்கள்.

என்.பி.டி, என்.சி.பி எச், சாகித்திய அகாதமி, கிழக்கு, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் எப்போதும் அரங்குகள் அமைப்பார்கள். முக்கியமான புதிய மற்றும் பழைய ஆங்கில நூல்களை விற்பனை செய்யும் புக் வேர்ல்ட் வருவார்கள். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, சந்தியா போன்ற நவீன இலக்கியத்தின் முக்கிய பதிப்பகங்கள் துவக்க காலங்களில் வந்தாலும் போதிய லாபம் இல்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக வருவதில்லை. இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக நவீன இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘மரப்பாச்சி’ எனும் பேரில் ஓர் அரங்கை நடத்தி வருகிறோம். தமிழினி, வம்சி, எதிர், சர்வோதயா, யாவரும், இந்து, மணல்வீடு, தேசாந்திரி பதிப்பக வெளியீடுகளை விற்பனைக்கு வைத்தோம்.

சிறுநகரங்களில் தன்னார்வமாக ஏற்பாடு செய்யப்படும் புத்தக கண்காட்சி சந்திக்கும் சவால்கள் காரைக்குடிக்கும் பொருந்தும். புரவலர்கள் அளிக்கும் நிதியுதவியால் தான் இவ்விழா தொடர்ந்து நிகழ்கிறது. வார இறுதி நாட்களில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் விற்பனை வார நாட்களில் மிகவும் மந்தமாகத்தான் இருக்கும். பள்ளி வளாகம் என்பதால்  வார நாட்களில் அரங்குகளுக்குள் மாலையில் தான் அனுமதி. மாணவர்களின் கலை நிகழ்சிகள் மாணவர்களையும், காண வருபவர்களையும் கண்காட்சிக்குள் அழைத்து வரும் எனும் நம்பிக்கை பொய்த்து போகிறது. கலை நிகழ்வுகளை காண வருபவர்கள் உள்ளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் நிதானமாக அரங்குகளுக்குள் சுற்றிப்பார்த்து  புத்தகங்களை வாங்குவதில்லை. தொடர் விளம்பரங்களும் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் தேவையாய் உள்ளன. சமூக ஊடகங்களிலும் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு இருப்பு வேண்டியதாய் உள்ளது. இன்றைய இணைய யுகத்தில் நமக்கு தேவையான புத்தகங்களை தருவிப்பது மிகவும் எளிது. எந்த புத்தகங்கள் தேவை? எவை தரமானவை என்றறிவதே சவால். இச்சூழலில் புத்தக கண்காட்சி புத்தக விற்பனைக்கான ஏற்பாடு என்பதிலிருந்து பண்பாட்டு செயல்பாடாக பரிணாமிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. சென்னை புத்தக கண்காட்சி தமிழக அளவில் பண்பாட்டு விழாவாக, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை ஒவ்வொருநாளும் ஒருங்கிணைக்க வேண்டும். அதுவே நாளடைவில் தரமான வாசக பரப்பை ஏற்படுத்தும்.

அண்மைய காலங்களில் வாசிப்பு ஆர்வம் பெருகுவதை கண்கூடாக உணர முடிகிறது. ஆனால் இந்த ஆர்வம் புத்தகங்களை நுகர் பொருளாக அணுகி வாங்குவதுடன் வடிந்து விடுகிறதோ எனும் ஐயம் ஏற்படுகிறது. உள்ளூர் அளவில் நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டும் வாசக அமைப்புகள் உருவாகி வலுப்பெற வேண்டும். புதிய ஊர்களில் முதல் ஓரிரு ஆண்டுகள் ஆர்வத்துடன் மக்கள் பங்கு கொள்ளும் புத்தக கண்காட்சிகள் காலபோக்கில் வெளிறிவிடுகின்றன. ஆர்வமுள்ள மூத்தோருக்கு பின் மெல்ல சிறு நகரங்களில் புத்தக கண்காட்சி நிகழாமல் ஆவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். புத்தக வணிகம் என்பதை தாண்டி அறிவு திருவிழாவாக புத்தக கண்காட்சி மாற வேண்டியதே இன்றைய காலத்தின் கட்டாயம்.  

சிறிய தட்டியில் காரைக்குடி நவீன இலக்கிய வாசகர வட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என எழுதி வைத்திருந்தோம். சுமார் 30 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்பது நிறைவளிக்கும் செய்தி. மாதமொரு முறை கூடுகைகளை ஒருங்கிணைக்கலாம் என யோசனை. இந்த புத்தக கண்காட்சியில் கவிஞர் விஷ்ணு குமார், ராமச்சந்திரன் மற்றும் குயலவனை சந்தித்து உரையாடியது நிறைவான தருணங்களாக அமைந்தன. முதல் முறை சந்தித்தாலும் வெகு இயல்பாக உரையாட முடிந்தது. சென்னை போன்ற நகரங்களில் இயல்பாக இப்படி உரையாட பல வாய்ப்புகள் உள்ளன. உள்ளூரில் ஒத்த ரசனையும் தேடலும் உள்ள நண்பர்களை கண்டுபிடிப்பது குதிரை கொம்பு. தம்பி விஷ்ணு தான் எழுதப்போகும் நாவலைப் பற்றி சொன்னார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குயலவன் அளவுக்கோ விஷ்ணு அளவுக்கோ அவர்களுடைய வயதில் நவீன இலக்கிய வாசிப்பு எனக்கு இருந்தது இல்லை. விட்டதைப் பிடிக்க இரு மடங்கு வேகமாக ஓட வேண்டும்.

நரகத்தில் ஒரு பருவகாலம், நீரோட்டம் பார்ப்பது எப்படி, திராவிடம் மார்க்சியம்,தமிழ் தேசியம் – ராஜேந்திர சோழன் எழுதியது ஆகிய நூல்களை முழுக்க வாசித்தேன். அமரந்தா மொழியாக்கம் செய்த கூகி வாங் தியோவின் சிலுவையில் தொங்கும் சாத்தான், ஸ்ரீதர் ரங்கராஜ் மொழியாக்கம் செய்த சாமர் யாஸ்பெக்கின் பயணம்  மற்றும் கினோ, கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் விஜய பத்மா மொழியாக்கம் செய்த இஸ்மத் சுக்தாய் கதைகள் ஆகிய நூல்களை கொஞ்சம் வாசித்தேன். பாமாவின் கருக்கு, தேவி பிரசாத் சட்டோபத்யாயவின் இந்திய நாத்திகம், அவன் காட்டை வென்றான் ஆகியவற்றை பிற அரங்குகளில் இருந்து வாங்கினேன். ஜஸ்டின் கார்டனர் (சோபியின் உலகம் எழுதியவர்) எழுதிய இரு நூல்கள், மற்றும் இந்திய தத்துவம் பற்றிய அறிமுக நூல் ஆகியவை புக் வேர்ல்டில் கிடைத்தன. ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் விலையை பார்த்து பயந்து அங்கேயே  வைத்துவிட்டேன்.

லாப நட்ட கணக்குகளைப் பற்றி பேசினால் விரக்தி தான் எஞ்சும். நண்பர்கள் ஆளுக்கு ஆயிரமாக இந்த கண்காட்சியை நடத்த மூன்றாண்டுகளாக பிரதிபலன் இன்றி உதவி வருகிறார்கள். பங்குதாரர்கள் போல் செயலாற்றி வருகிறார்கள். அதவாது எனது நட்டத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை எழுதுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும் சில வெளியூர்/ வெளிநாட்டு  நண்பர்கள் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருந்தும் கூட என்னிடமிருந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் 'மரப்பாச்சி' செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கிடைத்த விழுப்புண் இன்னும் நினைவில் உள்ளதால் இந்த ஆண்டு அரங்கை பதிவு செய்யும் எண்ணமே எனக்கில்லை. ஆனால் நிர்வாகிகளே அழைத்த போது மீண்டும் சபலம் ஏற்பட்டு ஒப்புக்கொண்டேன். முக்கியமாக மானசாவும் அம்மாவும் முகம் சுளிக்காமல் இவற்றை அனுமதிப்பதும் ஆதரவளிப்பதும் பெரிய விஷயம். அடுத்த ஆண்டு பற்றி இப்போது எந்த யோசனையும் இல்லை. மாதமொரு நாள் மரப்பாச்சி இலக்கிய கூடுகையை நடத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பார்ப்போம்.    



1 comment:

  1. எதிர்பார்த்ததுதான் சுனீல் மனம் தளரவேண்டாம் என்னையும் உங்கள் வாசகர் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete