நேற்று (28/1/18) மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகசாலை சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் முதல் அமர்வில் எழுத்தாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் சேந்து பங்கு கொண்டேன். எழுத்தாளர்/ நண்பர் ஜீவ கரிகாலன் அமர்வை ஒருங்கிணைத்தார். இது ஓர் திடீர் ஏற்பாடு. தற்செயலாக சென்னையில் இருந்ததால் பங்குகொள்ள முடிந்தது. ஒரு ஞாயிறு பின்மதியத்தில் 30 க்கு மேற்பட்டோர் அவ்வளவாக அறியப்படாத எழுத்தாளர்களின் அமர்விற்கு வந்திருந்தார்கள். வாசகசாலை சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. மென்மேலும் தொடர வேண்டும். கார்த்திகேயன் வெங்கட்ராமன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.
குறுகிய காலம் என்பதால் என்ன பேசுவது என்பது பற்றி பெரிய திட்டமிடல் ஏதும் இல்லை. சிறுகதை எழுத்தாளனாக இது எனக்கு முதல் மேடையும் கூட (புத்தக வெளியீட்டின் போது பேசியதை தவிர்த்தால்). அகர முதல்வன், வாசு முருகவேல், கார்த்திக் புகழேந்தி, சீராளன் ஜெயந்தன், கவிதைக்காரன் இளங்கோ, ரமேஷ் ரக்ஷன் போன்ற சக எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள்.
முதலில் கிருஷ்ணமூர்த்தி பேசினார். தனது படைப்புலகில் குடும்பம் பேசு பொருளாக உள்ளது. அதன் சிக்கல்களை பற்றி தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணுவதாக கூறினார். நல்ல கதையை எழுதும் பயணத்தில் தான் என்றும் இருப்பதாக சொன்னார். ஜீவ கரிகாலன் தற்கால சூழலில் குடும்பம் என்பது பின்னுக்கு சென்று தனி மனிதனை முன்னிறுத்தும் எழுத்து போக்கு மலர்வது முக்கியமானது என்று தனது வாதத்தை முன்வைத்தார். மேலும் பாலசுப்பிரமணியம் பொன்ராஜின் 'உடைந்து போன பூர்ஷ்வா கனவு' பற்றிய விவாதமும் வந்தது. அதுவே நவீன குடும்பத்தின் சிக்கலை பிரகடனம் செய்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டோம். கார்த்திக் பாலசுப்பிரமணியம் 'குடும்ப அமைப்பின்' வீழ்ச்சியின் வேகம் தன்னை அச்சுறுத்துவதாக கூறினார். வேறெப்போதையும் காட்டிலும் இப்போது குடும்பத்தின் சிக்கல்களை எழுதுவது அவசியம் என்றார்.
என் பங்கிற்கு இரண்டு கருத்துக்களை வைத்தேன். யுவால் நோவா ஹராரி குடும்பத்தின் இடத்தை இன்று அரசு எடுத்துகொள்வதாக சொல்கிறார். தனி மனிதவாதம் என்பது சுதந்திரத்திற்கான விழைவு என்பது எப்படி உண்மையோ அதேயளவு சந்தை பொருளாதாரத்திற்கான நுகர்வோரை உருவாக்குகிறது என்பதும் உண்மையே. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலையின் போது தனித்து வாழ்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து குடும்பமாக வாழ துவங்கியதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சென்ற ஆண்டு வாசித்திருந்தேன். லாசரா சொல்வது போல் ஒரு கூண்டுக்குள் இருக்கும் இரு புலிகள் போல ஒருவரை ஒருவர் பிராண்டும் வண்ணம் குடும்ப அமைப்பு மாறி இருக்கிறது. இதன் புதிய ஊடாட்டங்கள் எழுதப்பட வேண்டியதே என்றேன்.
ஜீவ கரிகாலன் பின்னர் என்னை அறிமுகம் செய்து பேச அழைத்தார். அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லி தான்.வாசுதேவன் என் கனவுகளை ஆக்கிரமித்ததும், அவனை எழுதி விடுவித்து என்னை எழுத்தாளன் ஆக்கிக்கொண்டதையும், காப்காவின் கிரேகர் சம்சாவுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பையும் கூறினேன். எனக்கான கேள்விகளாக விடுதலை மற்றும் சுதந்திரம் உள்ளது. முன்னரே வெளியீட்டு விழாவின் போது இதை பேசிவிட்டதால் அதிகம் சொல்லவில்லை. வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிக்கும் தோறும் என் மொழியும் வெளிப்பாடும் மாறி வருகிறது. அ.முத்துலிங்கம் தொடர்ச்சியாக வாசித்ததும் 'பொன் முகத்தை ..; கதை எழுதினேன். யுவன் சந்திரசேகரின் தாக்கத்தில் 'குருதி சோறு' வந்தது. முறையாக பள்ளியில் தமிழ் கற்றவனில்லை என்பதால் தமிழ் மரபிலக்கிய பயறிசி எனக்கில்லை. அசை, சீர் பிரித்து வாசிக்க முடியாது என்பது எனது குறைபாடுகளில் ஒன்று என்று கூறினேன்.
ஃபிரெடெரிக் எனும் நண்பர் 'சமகாலம்' என்பதற்கான வரையறை என்ன என்று ஒரு வினா எழுப்பினார். சமகாலம் என சொல்லிக்கொண்டாலும் எனது கதைகள் 90, 2000 காலகட்டங்களை சார்ந்ததே அதிகமும் என்றேன். ஜீவ கரிகாலன் இதற்கு மிக நல்ல விளக்கத்தை கூறினார். பருவ சூழல் மாற்றம், நீராதார சிக்கல், போர், பொருளாதார கொந்தளிப்பு, நுகர்வு, அடையாள சிக்கல்கள் என உலகை பாதிக்கும் விஷயங்கள் பற்றி எழுதுவதே சமகாலம் என தனது வரையறை சொன்னார். எழுத்தில் சமூக / அரசியல் பிரக்ஞை வெளிப்படுவதைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. ஜீவ கரிகாலன் ஆதவன் தீட்சண்யா போன்றோர் தாங்கள் சார்ந்த அரசியலுக்கு தகுந்து எழுதுபவர்கள். அதுவல்ல அரசியல் பிரக்ஞை சார்ந்த எழுத்து என்றார். எழுத்தாளன், தான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புகொள்ளாவிட்டாலும் தன்னளவில் ஒரு ரிபல் தான் என்றேன். அவன் சமூகத்தை குத்தும் முள்ளாக எப்போதும் இருப்பான். ஹாரி பாட்டரை அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரதியாக வாசிக்க முடியும், ஆலீஸின் அற்புத விளக்கம் டெம்ப்லர் குறியீடுகள் நிறைந்த அரசியல் பிரதி என டான் பிரவுன் அதற்கொரு வாசிப்பை அளிக்கிறார். எழுத்தாளன் எப்படி தன்னை மூடிக் கொண்டாலும் அரசியல் ஏதோ ஒருவகையில் உள்ளே வந்தே தீரும். சிக்கல் தனக்கு உகந்த அரசியலை ஒரு பிரதி முன்வைக்கிறது என்பதற்காக அது நல்ல பிரதி என அடையாளப்படுத்தப் பட கூடாது. நாம் நம்பாத, நாம் விரும்பாத அரசியலையும் அது உட்பொருளாக கொள்ளக்கூடும். அது தன்னளவில் உண்மையாக வெளிபட்டிருக்கிறதா என்பதே கேள்வி. தாமிரபரணியில் மறுகரை கூடங்குளம் எழுந்து கொண்டிருக்கும் போது கூட இங்கே எழுத்தாளர்கள் வேறோர் தாமிரபரணியை எழுதி கொண்டிருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் அன்றைய சூழலில் எழுந்ததைப் பற்றி பேச்சு வந்தது. எழுத்தாளர்களுக்கான அகத்தூண்டுதல் வெவ்வேறானது. சிலர் சமூக பிரக்ஞையுடன் எழுத வரக்கூடும், சிலர் அப்படி இல்லாமல் இருக்கவும் கூடும், அதை மட்டும் வைத்து எழுத்தாளர்களை மதிப்பிட முடியாது. அசோகமித்திரன் தான் சந்தித்த எளிய மனிதர்களுக்கான 'டிரிபியுடாக' கதைகளை எழுதுகிறேன் என நேர்காணலில் சொல்கிறார். எழுத்து ஒரு விளையாட்டாக, தனக்கென நோக்கம் என ஏதுமில்லாத லீலையாகவும் வெளிப்பட முடியும் என்றேன். வாசகர்கள் நிராகரிக்கவும் விவாதிக்கவும் இடமுண்டு என்பது வேறு விஷயம். அசோகமித்திரன் எழுதிய காலங்களில் இருந்த அரசியல் கொதிநிலை சூழல் வேறு, அண்மைய காலங்களில் தமிழ் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலுக்கான புனைவுகள் இனி தான் உருவாகும். ஈழ பின்புலத்தில் இதை பொருத்தி பார்க்கலாம் (இலங்கை என்று சொன்னபோது அகர முதலவன் ஈழம் என திருத்தினார்). ஹெமிங்க்வே போரை ஆராதித்தவர். போர் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி என்று நம்பினார். கிளர்ச்சியான காலகட்டங்களை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது ( ஊடகங்கள் சிலவற்றை மிகையாக்குகிறது). நல்ல படைப்புகள் இனி எழ கூடும் என்றேன்.
உலகமயமாக்கல் நம் தனி அடையாளங்களை அழித்து நுகர்வோன் எனும் ஒற்றை பெரும் அடையாளத்திற்குள் கொண்டு வரும் என நம்பினார்கள். உலகம் ஒரு கிராமம் ஆதல் எனும் உருவகம் அவ்வகையில் முக்கியமானது. அத்திசையில் தான் சென்றோம், ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாளங்களை உருக்குவதை காட்டிலும் கெட்டித்து இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 2010 அரேபிய வசந்தம் துவங்கி இந்த மாற்றத்தை உணர முடிகிறது. இப்போது சமகாலத்தில் இதோ ஒரு முக்கியமான சவால். வலது சாரியின் அரசியல் எழுச்சியை இந்த பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் மீண்டும் தங்கள் அடையாளங்களை இறுக பற்றிக்கொன்டு உள்ளார்கள் என்றேன். ஜீவ கரிகலான் எப்போதும் நிகழும் விவாதமான கலை மக்களுக்கானதா? கலைக்கானதா? எனும் கேள்வியை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 8 ஆக உருவகித்தது சுவாரசியம்.
அடுத்து கார்த்திக் பாலசுப்பிரமணியம் பேசினார். அடிப்படையில் மனிதர்களின் மீதான கரிசனம், மற்றும் நிகழ்வுகளின் மீதான மாற்று சாத்தியத்தின் மீதான கற்பனை தன்னை எழுத தூண்டுவதாக சொன்னார். எப்போதும் நிறைவின்மையை பணியிடம் சார்ந்து உணர்வதால் எழுத முயல்கிறேன் என்றார். ஃபிரெடெரிக் 'ஏன் பறவையை போல் நம்மால் நம் வேலையை சுமையற்று செய்ய முடிவதில்லை? நிறைவின்மையை நம்மால் ஏன் மாற்ற முடியவில்லை என கேட்டார். இந்த நிறைவின்மையை உணர்வதாலேயே தான் எழுத்தாளனாக ஆகிறேன் என்றார் கார்த்திக். எனது தரப்பாக, ஃபிரெடெரிக் சூட்டும் நிலை ஒரு ஜென் நிலை, அது எல்லோருக்கும் வாய்க்க பெறுவதில்லை என்றேன். படைப்பு தன்னிச்சையாக மலரும், நிறைவின்மையில் இருந்தும் மலரும். ஆன்மீக வாதியும் எழுத்தாளனும் நிறைவின்மையை இடு பொருளாக கொண்டு தான் செயல்படுகிறார்கள். ஆனால் தேடலும் வெளிப்பாடும் வேறு வேறாக இருக்கிறது என்றேன்.
ஃபிரெடெரிக் 'ஏன் நீங்கள் உலகமயமாக்கல், பொருளாதாரம் சார்ந்தே எல்லாவற்றையும் நோக்குகிறீர்கள் என கேட்டார், அதற்கும் தனி மனிதனுக்கும் என்ன சம்பந்தம் என்றார். இந்த கேள்வி உண்மையிலேயே திடுக்கிட செய்தது (கொஞ்சம் உடல்மொழியில் மிகையாக வெளிப்படவும் செய்தது). பிறகு அவருக்கு நீண்ட விளக்கத்தை அளித்தேன். உலகமயமாக்கல் சுரண்டலுக்காக உருவானது, அதன் நோக்கமே அது தானா என்றால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் விளைவுகளில் இதுவுமொன்று. ஆகவே அது குறித்து கவனம் தேவை என்பதே எனது வாதம்.
தற்கால எழுத்தாளர்களுக்கு கற்பனை வறட்சி உள்ளதே சிக்கல் என ஒரு நண்பர் கூறினார். கற்பனை வறட்சி என்பதை காட்டிலும் கற்பனையை தக்க வைத்து கொள்வது தான் சிக்கல். கற்பனை தொடர்ச்சி. இந்த சவாலை நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றேன். சமூக பிரக்ஞையுடன் கதைகள் எதனால் எழுதப்படுவதில்லை என்றொரு கேள்வியும் எழுந்தது. இம்முறை புத்தக கண்காட்சியில் அதிகமும் 'பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்' போன்ற அரசியல் நூல்களே அதிகம் விற்றன. புனைவு சமகால அரசியல் கொதிநிலையை தவிர்க்க துவங்கினால், வாசகன் 'உன்னை ஏன் வாசிக்க வேண்டும்?' என்று கேட்டப்படி நகர்ந்து விடுவான் என்றார் ஜீவ கரிகாலன்.
அமர்வு நிறைவுக்கு வந்தது. என்னளவில் என்னை தொகுத்து கொள்ள நல்ல வாய்ப்பு. இங்கே எழுதி இருக்கும் அளவிற்கு தெளிவாக பேசினேனா என்பது தெரியவில்லை. (வழக்கம் போல், சுற்றி கொஞ்சம் இழுத்து பேசியிருக்க கூடும்) இப்போது யோசிக்கையில், எழுத்தாளன் காலாதீதத்தை நாடுபவனாகவே இருக்கிறான் என தோன்றுகிறது (குறைந்தது எனது நாட்டம் அதுவே). அவன் விழைவது அழிவற்ற மறுமையை. ஆனால் அவன் அந்த மறுமையை சமகாலம் எனும் நிலத்திலிருந்து எவ்விக்குதித்தே அடையமுடியும்.
இரவு 7.15 ரயில் இருந்ததால் அடுத்த அமர்வில் பங்கு பெறாமல் கிளம்பிவந்தேன். வாய்ப்பு அமைத்து அளித்த வாசகசாலை மற்றும் யாவரும் நண்பர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment