புத்தகங்கள்

Pages

Friday, January 19, 2018

புத்தக கண்காட்சி அனுபவங்கள் - 2018

இப்போது கிண்டில் வந்துவிட்டது, காமன்ஃபோல்க்ஸ், புதினம், nhm, மகிழ், டிஸ்கவரி என இணையம் வழியாக அவசியமான புத்தகங்களை தருவிக்கும் வசதியும் வந்துவிட்டது, இத்தனை தொலைவிலிருந்து புத்தக கண்காட்சிக்கு ஏன் செல்ல வேண்டும் எனும் கேள்வி எஞ்சி இருக்கிறது. காரைக்குடியில் வேறு வருடா வருடம் கண்காட்சி நிகழ்கிறது, நானே கூட இரண்டு வருடமாக ஒரு ஸ்டால் எடுத்து நடத்துகிறேன். (இந்த வருடம் வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் பழக்க தோஷம் கை நடுங்கிவிட்டது. இந்த வருடமும் உண்டு) அப்படி   நடத்திய வகையில், அதன் முக்கியமான லாபம் என்பது எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொள்வது தான். இப்படி வெறித்தனமாக சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் சரி பாதி வாசித்திருப்பேனா என தெரியவில்லை. கிண்டில் வந்ததில் இருந்து முக்கியமான ஆங்கில திருட்டு புத்தகங்களை தரவிறக்கி அதை தான் அதிகமும் வாசித்து கொண்டிருக்கிறேன். 

புத்தக கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு, அறிவு விடாய் கொண்டவர்களும் கனவுலகை கட்டி எழுப்புபவர்களும் அதிகமும் சங்கமிக்கும் வெளி ஹாரி பாட்டர் வரிசையில் குவிடிச் உலக கோப்பைக்கு உலகெங்கும் உள்ள விசார்ட்கள் கூடுவது போன்றது. புத்தகங்களை வாங்குவதற்கு என்பதை காட்டிலும் அந்த பண்பாட்டு அனுபவத்தில் நாமும் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்பதே நோக்கம். 

எப்போது செல்வது என்பதில் பல குழப்பங்கள், கடைசியில் தத்கல்லில் புக் செய்து கொண்டு 18 ஆம் தேதி பல்லவனில் புறப்பட்டேன். தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜாவை கிண்டிலில் வாசித்து முடித்தேன். முனைவர் சரவணன் எழுதிய சங்கக் காலம் பற்றிய புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். பெரிய கண்ணாடி சாளரத்தில் தெரிந்த நிலவெளியை பார்த்து, கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் விழித்து என தாம்பரம் வந்து இறங்கினேன். அங்கு நண்பர் சிவமணியன் காத்திருந்தார். சிவமணியன் மதுரைக்காரர் சென்னையில் பணி, பள்ளிக்கரணையில் வீடு. அவருடைய மகன் ரிஷி சுதீர் பிறந்த அதே மகா சிவராத்திரியின் கடைசி சாமத்தில் பிறந்தவன். மார்ச், 8, 2016. சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அண்ணா நகர் சரவணபவனுக்கு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் சிவமணியன் எனக்கு குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னிந்திய கோபுர கலை எனும் அற்புதமான நூலை பரிசளித்தார். 

அண்ணா நகரில் நண்பர் நம்பியுடன் மதிய உணவு உண்டோம். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் நம்பிக்கு சொந்த தாய் மாமா. அவருடைய அக்கிரகாரத்தில் பெரியாருக்கு முன்னுரை எழுதியவர். நம்பி பதாகை மற்றும் சொல்வனத்தில் நெடுங்காலமாக எழுதி வருபவர். அபார வாசிப்புடையவர். அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இணைய வழி தொடர்பு உண்டே அன்றி நேரில் சந்தித்ததில்லை. பார்ப்பதற்கு வாரணம் ஆயிரம் படத்து தந்தை சூரியா மாறி இருப்பார் என பாஸ்கர் அடையாளம் சொல்லி அனுப்பினார். அப்படித்தான் இருந்தார். நம்பி அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள், இலக்கிய நூல்கள் பற்றி அனேக குறிப்புகள் எழுதி இருக்கிறார். முக்கியமான மொழியாக்கங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் செய்து வருகிறார். அவருடைய கட்டுரைகள் தொகுப்பாக வேண்டும். அவர் வழியே எனக்கு பல முக்கிய ஆங்கில எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சி. மணி மற்றும் ந. ஜெயபாஸ்கரன் ஆகிய இருவரையும் பற்றி பேசி கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற்று புத்தக கண்காட்சிக்கு மூன்றரை மணிக்கு நுழைந்தோம். சிவா தன் போக்கில் சில புத்தகங்களை வாங்க பிரிந்து சென்றார். 

நேராக யாவரும் அரங்கில் 176 ல் சென்றேன். ரமேஷ் ரக்ஷன் இருந்தார். கொஞ்சம் பேசிவிட்டு சுற்ற கிளம்பினேன். தமிழினி அண்ணாச்சி கொங்கு தேர் வாழ்க்கைக்காக சில கவிதை மேற்கோள்களை பத்து பக்கத்திற்கு அனுப்பி இருந்தார். அவை பற்றி எனது அபிப்பிராயத்தை கேட்டார். கவிதையில் இருந்து உருவப்பட்டது என்பதால், பல வரிகள் எனக்கு ஏன் கவிதையாகிறது என குழப்பமாக இருந்தது என்று சொன்னேன். கோகுல் பிரசாத்தும் இணைந்து கொண்டார். பிறகு க்ரியா சென்று அங்கு ந. முத்துசாமி சிறுகதைகள் மற்றும் நண்பர் ஆசை மொழியாக்கம் செய்த 'அமைதி என்பது நாமே' நூலும் வாங்கிக்கொண்டேன். இமயத்தின் நூல்களை வாங்க வேண்டும் என தோன்றியது. விலை காரணமாக தயங்கி, கடைசியில் திரும்ப வாங்கி கொள்ளலாம் என நகர்ந்தேன். விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாற்பது ரூபாய்க்கு கிடைத்தது. முன்னமே சம்பத்தின் இரு தொகுதிகளை அங்கு வாங்கி இருக்கிறேன். 

அப்படியே சுற்றி வந்தேன். காலச்சுவடு அரங்கில் கண்ணன் அமர்ந்திருந்தார். நெடு நாளாக வாங்க எண்ணியிருந்த கசாக்கின் இதிகாசமும், திருடன் மணியம்பிள்ளையும் வாங்கினேன். கவனத்தை ஈர்த்த வேறு பல புத்தகங்களில் இருந்து ஆயாசத்துடன் மனதை திருப்பி கொண்டேன். சந்தியா நடராசன் அவர்களை சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். பாரதி ஆய்விற்கு காரைக்குடியில் சில உதவிகளை கோரி இருந்தார். நானும் மறந்துவிட்டேன். இயல்வாகை மற்றும் தும்பியின் ஸ்டால்கள் அழகாக இருந்தன. அழகேஸ்வரி மற்றும் அருண்குமாரை அங்கு முதன்முறையாக சந்தித்தேன். ஞானபானு பதிப்பகத்தில் ஞாநி ஒரு படமாக வருவோர் போவரை நோக்கிக் கொண்டிருந்தார். தேசாந்திரியில் எஸ்ராவை காண முடியவில்லை. மூத்த மகன் ஹரியை பார்த்து பேசிவிட்டு வந்தேன். கிழக்கில் ஹரனையும் பத்ரியையும் காண முடியவில்லை. காலம் செல்வம் சிறில் அலெக்சுடன் வந்திருந்தார், சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டேன். நீல  கண்ட பறவையை தேடி, சிற்பமும் தொன்மமும், வனவாசி நூல்களை வாங்கினேன். சா. கந்தசாமி சாகித்திய அகாடெமி அரங்கில் புத்தகங்களை தேடி கொண்டிருந்தார். 

ஒரு சுற்று முடிவதற்குள் களைப்பு அப்பிக்கொண்டது. யாவரும் அரங்கில் யமுனை செல்வன் மற்றும் மதியை சந்தித்தேன். நண்பர்கள் சவுந்தர், காளி, ஜாஜா, சிறில், ரவி, வள்ளியப்பன், ஓவியர் சண்முகவேல், நரேந்திர குமார் ஆகியோரை சந்தித்தேன். அரங்கில் உள்ள ஸ்டாலில் அத்தோ, மொமொஸ் எல்லாம் சாப்பிட்டு பார்த்தோம். லக்ஷ்மி சரவண குமார், விஜய் மகேந்திரன், அகர முதல்வன், கார்த்திக் புகழேந்தி, வாசு முருகவேள், சாம் நாதன், ஜீவ கரிகாலன், புதினம் கதிரேசன் மற்றும் கண்ணதாசனோடு பொதுவாக பேசி கொண்டிருந்தேன். லக்ஷ்மி தேவேந்திர பூபதியை அறிமுகம் செய்தான். அவரிடம் தொலை பேசியில் பேசி இருக்கிறேன். அப்போது தான் நேரில் சந்தித்தேன். ஜீவ கரிகாலனோடு வேறு சில திட்டங்கள் பற்றி பேசி கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர். பல கனவுகளையும் திட்டங்களையும் சுமந்து கொண்டிருக்கிறார். யாவரும் குறிபிடத்தக்க பதிப்பகமாக வளரும் என நம்புகிறேன். காந்தி - இன்றில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கொண்டு வரலாம் என்ற யோசனை இறுதியானது. ஒன்பது மணிக்கு விசில் ஊதி துரத்தி விடும் வரை உள்ளே இருந்துவிட்டு கிளம்பினேன். கடுமையான முதுகு வலி, இப்போதும் விடவில்லை. உடல் சோர்வு. நினைத்த அளவுக்கு புத்தகங்களை வாங்க இயலவில்லை. காரைக்குடியில் பார்த்து கொள்ளலாம்.  பேருந்தை பிடித்து திருவண்ணாமலைக்கு சென்று சேர இரவு (அல்லது காலை) மூன்று மணியானது. மற்றுமொரு நிறைவான நாள். 



No comments:

Post a Comment