எழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை. ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். மிகக் குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே இல்லை.
காசி முன்னரே வாசித்திருந்தாலும், இப்போது மீண்டும் வாசிக்கும் போது வழமையான சிறுகதை இலக்கணத்திற்குள் அடங்கக் கூடிய கதை இது இல்லை என்று தோன்றியது. கதைசொல்லி காசியின் நினைவுகளை மீட்டுகிறான். அதிலும் கூட ஒரு தேர்வு இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சியான இளமை கால நினைவுகளை காட்டிலும் காசி அலைவுற்று அல்லல்படும் நினைவுகளே அதிகம். ஏறத்தாழ காசியின் முழு வாழ்க்கையும் கதை சொல்லியின் நினைவுகளின் ஊடாக சொல்லப்படுகிறது. ஒருவகையான 'சுய சரிதை' கதை சொல்லல், மையம் என ஏதுமின்றி நினைவு பெருக்கிலிருந்து கையளவு அள்ளி வைக்கிறது.
காசி அவனுடைய அத்தனை அலைகழிப்புடனும் மறக்க முடியாத கதை மாந்தராக நின்று விடுகிறான். ஒரு எரி நட்சத்திரம் போல் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய கொந்தளிப்பிற்கு நேர்மாறாக கதை சொல்லி குணா குளிர்ந்து கிடக்கிறான். காசியே "நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண் கடவுள். என்னால் ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்கு". இந்த எரிந்து அணையும் ஆண் எதிர் குளிர்ந்து அணைக்கும் பெண் எனும் இருமை கதையை பிணைக்கிறது. காசியின் கைலி அவிழ்ந்து குணாவின் முன் போதையில் நிர்வாணமாக கிடக்கும் தருணமும் கதையில் உண்டு.
காசியின் தத்தளிப்புகளுக்கு என்ன தான் காரணம்? ஒருவேளை அந்த சாமியார் சொல்வது போல் செக்ஸ் தானா? அப்படியாக குறுக்கிவிட முடியாது. இருத்தலியல் சிக்கலின் வெளிப்பாடு, ஆன்மீக தத்தளிப்பு என வேறு தளங்களில் பொருள் கொள்ள முடியும். குறிப்பாக எழுபது எண்பதுகளின் வேலையின்மையை சமூக பின்புலமாக காணும் போது இந்த சித்திரம் பொருந்தும். ஆனால் காசியின் முக்கிய சிக்கல் என்பது அவன் கலவி என்பதோ காமம் என்பதோ அல்ல. அவனொரு hyper masculine ஆளுமையாக புலப்படுகிறான். அவனை ஆற்றுபடுத்தும், நிறைவு செய்யும் பெண்தன்மை கொண்ட பெண்ணை அவன் அடையவில்லை என்பதே என எனக்கு தோன்றியது. அவனுடைய ஆன்மீக தத்தளிப்பு, மனப் பிறழ்வு வேடங்கள் எல்லாம் இதன் மேல் நிகழும் பாவனையோ எனும் ஐயம் கதையில் எழுகிறது. ஒருவித யின் - யாங் சமன்பாடு நோக்கி தான் நாம் அனைவரும் முயன்று கொண்டிருக்கிறோம். காசிக்கும் - அவனது தந்தைக்குமான உறவு, காசிக்கும் இலக்கிய பரிச்சயம் கொண்ட மற்றுமொரு நண்பனுக்குமான உறவு, காசிக்கும் மணமுறிவு ஏற்பட்ட பெண்ணுக்குமான உறவு என பல்வேறு உறவு சிக்கல்களை கதை சொல்லிச் செல்கிறது.
ஜெயமோகனின் அம்மையப்பம் கதையின் ஆசாரி நினைவுக்கு வந்தார். அவரால் ஏணியை ஒழுங்காக கூட்ட முடியாது ஆனால் அபாரமாக புடைப்பு சிலை செய்துவிட்டு செல்வார். கலை மனம் கொள்ளும் அமைதியின்மையை தத்தளிப்பை சொன்ன வகையில் காசி மிக முக்கியமான கதையாக தன்னை நிலை நிறுத்தி கொள்கிறது.
No comments:
Post a Comment