நேற்றும் நாளையும் இல்லை, இன்று, இப்போது மட்டுமே உண்டென வாழ்வதற்கு உயர்
விழிப்பு நிலை வேண்டியதாய் இருக்கும். அத்தகைய பெருநிலை வாய்க்கும் வரை நேற்றின்
நினைவுகள் நாளையை பற்றிய கனவுகளை எழுப்பி இன்றை தின்று கொண்டுதான் இருக்கும்.
நழுவிக்கொண்டிருக்கும் இன்று நேற்றின் சேகரத்தில் சேர்ந்துக்கொண்டே இருக்கிறது.
ஊக்கத்திற்கும் பாடத்திற்கும் அந்த சேகரத்தையே நாம் நம்பியிருக்க வேண்டியதாய்
இருக்கிறது. அப்படியாக இந்த 2017 ஆம் ஆண்டில் நினைவில் சுவைக்க, ஊக்கப்படுத்திகொள்ள,நெறிபடுத்திகொள்ள
வாய்ப்புக்கள் அமைந்தன.
நண்பர்கள் எப்போதும் உடனிருக்கிறார்கள். வெங்கியும், கோவிந்தனும், தீபக்கும்
வெளிநாடுகளில் இருந்து திரும்பி கொஞ்ச காலம் இங்கே இருந்த போது சேர்ந்து சுற்றியது
நிறைவளித்தது. கோவிந்தனுக்கு திருமணம் முடிந்தது. கொண்டாட்டமாக இரண்டு நாட்களும் நாங்கள்
அங்கிருந்தோம். பெரும் விழா என்பது சுதீருக்கு ஆயுஷ் ஹோமம் செய்து காது குத்தியது.
நான் தலை எடுத்து, நானே நடத்தும் முதல் விழா. ஆரவாரமாக நண்பர்கள், உறவினர்கள் சூழ
முடிந்தது. தங்கை ராகவிக்கு இவ்வாண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. மற்றுமொரு
கொண்டாட்டம். குடும்பகூடுகை. மாமனாரின் அறுபதாம் திருமணம் பாண்டிச்சேரியில்
இவ்வாண்டு நல்லபடியாக நிகழ்ந்தது. கடும் மழையின் ஊடாக. அரிமளத்தில் தாத்தாவின்
நூற்றாண்டு விழாவை கொண்டாடியது பெரும் நிறைவை அளித்தது. சித்த மருத்துவர் திரு
நாராயணன் அவர்களை கவுரவித்தோம். நாஞ்சில் முன்னிலை வகித்து நடத்தி கொடுத்தார்.
நண்பர்கள் திருவும், விக்ரமும் வந்திருந்தார்கள். முழு விழாவையும் தொகுத்து
வழங்கினேன். புதிய அனுபவமாக இருந்தது.
புல்லட்டில் தஞ்சை வரை சென்று புதியவர்கள் சந்திப்பில் இருந்த ஜெயமோகனை
ஒருநாள் சந்தித்து வந்தேன். வரும் போது துணைக்கு சீனுவையும் கூட்டி வந்தேன். ஊட்டி
கூட்டத்திற்கு சென்று வந்தேன். பின்னர் விஷ்ணுபுர விழாவிற்கும் சென்று வந்தேன். கொஞ்சம்
கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் அண்மையில் இருந்து விலகி வருகிறேன் என்பதை உணர
முடிகிறது. எல்லாம் நன்மைக்கே. இலக்கிய உலகில் சில புதிய நண்பர்கள்
கிடைத்துள்ளார்கள். கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் பேசும் பூனைக்கு
பரிசு கிடைத்தது. யாவரும் வெளியீடாக சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’
அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே கவனம் பெற்றிருக்கிறது. உண்மையில் இதெல்லாம் பதட்டத்தையே
அளிக்கிறது. இந்த மனநிலையிலிருந்து வெளியேறி அடுத்த வேலையை பார்க்க கிளம்ப
வேண்டும்.
சென்னை ஞாயிறு கிளினிக் முயற்சியை கைவிட்டேன். விடாப்பிடியாக தொங்குவது சரி
வராது என்று உணர்ந்து கொண்டேன். புதுகோட்டையில் புதிய கிளினிக் துவங்கி
இருக்கிறேன். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் மாலைகளில் அங்கு சென்று கொண்டிருக்கிறேன்.
வாசிக்க கூடுதல் நேரம் கிடைக்கிறது. தொழில் சற்று மந்தமாகத்தான் போய்கொண்டு இருக்கிறது.
புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். இந்த தேக்க நிலையை உடைத்தாக வேண்டும். வரும்
ஆண்டு இதை கவனிக்க வேண்டும். இப்போது மாலைகளில் மானசா காரைக்குடி கிளினிக்கை
கவனித்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சுதீர் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறான். அறையை விட்டு வரும்போது
எல்லாவற்றிற்கும் பை சொல்கிறான். அன்று காற்றுக்கு பை சொன்ன போது மகிழ்ச்சியாக
இருந்தது. சிவராஜ் அனுப்பிய தும்பி புத்தகங்களை வைத்துக்கொண்டு அவனுக்கு கதைகளை
சொல்லி காண்பிக்கிறேன். தினமும் காலை எழுப்பி குளிப்பிப்பதும், இரவு உறங்க செய்வதும்
எனது முறை. விளையாட்டுக்களும் பிடிவாதங்களும் சேர்ந்தே வளர்கின்றன. அவனை
கவனிக்கும் இடைவெளிகளில், நெருக்கடிகளில் தான் இவ்வாண்டு நான் நிறைய வாசித்தேன்,
சொல்லிகொள்ளும் அளவுக்கு எழுதினேன். மானசாவும் மார்கழி திருப்பாவை படங்கள்
வரைந்தாள். அவனுக்கு பயந்து ஷோ கேசில் கொலு வைத்தோம். இசை மீது தணியாத ஆர்வம்
கொண்டிருக்கிறான். நாதஸ்வரம் தவில் என்றால் அங்கேயே சென்று அமர்ந்து கொள்கிறான்.
நிறைவின்மை கலையை பிறப்பிக்கும் என்று சொல்வார்கள், நிறைவும் கூட கலையை
உருவாக்கும். அவனுடைய வருகையும் இருப்பும் வாழ்வை மாற்றியதை உணர்கிறேன். இவ்வருட
மத்தியில் மனப் பதட்டங்கள் கூடின. அவன் வளர்ச்சி மகிழ்ச்சியை அளித்தது ஆனால் அதை
முழுமையாக காண நான் இருக்க வேண்டும். என் தந்தையைப் போல் நானும் நட்டாற்றில்
மறைந்துவிட கூடாது. இப்பதட்டத்திற்கு எந்த காரணங்களும் இல்லை ஆனால் இவை எப்படியோ
தொற்றி படர்ந்தன. சௌந்தர் குருஜி சொல்லிக்கொடுத்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தையும்
யோக நித்திரையும் பற்றிக்கொண்டு எப்படியோ கடந்து வந்தேன். குறிப்பாக கார் ஓட்டும்
போது panic attack அளவுக்கு இது வளர்ந்து விட்டது. முகம் மரத்து போகும். கைகால்
சில்லிடும். எதையாவது தின்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும். அம்மா இதைகண்டு
கொண்டு ஒருநாள் ‘உனக்கும் ஒன்னும் ஆகாது’ என்றாள். அந்த ஒற்றை சொல்லையும்
பிடித்துக்கொண்டு வெளியேறி வந்துவிட்டேன்.சென்ற ஆண்டு நவம்பரில் 92 கிலோ
எடையிலிருந்து படிப்படியாக குறைத்து 75 கிலோவிற்கு வந்தேன். இந்த எடையிழப்பிற்கு
நான் செய்த எளிய உணவு மாற்றங்கள் தான் காரணம். பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது.
எனினும் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இந்த எடையிழப்பை நோய்மையுடன்
தொடர்புப்படுத்தி துக்கம் விசாரிக்கும் போது நமக்கே பதட்டமாகிறது. பரிசோதித்த
வரையில் எந்த பிரச்சனையும் இல்லை நண்பர்களே. நம்புங்கள். தினமும் காலையில்
தொடர்ந்து ஷட்டில் ஆடி வருகிறேன். எட்டு மணிக்கு சென்று கொண்டிருந்தது இப்போது ஆறு
மணிக்கு. ஆகவே 5.30 க்கு எல்லாம் எழுந்து விடுகிறேன்.
இந்த ஆண்டு பயணங்கள் என எங்கும் பெரிதாக செல்லவில்லை. சுதீர் தயாராக வேண்டும்.
பிறகு தான் போக வேண்டும். சில பல முறை கோவைக்கும் சென்னைக்கும் சென்று வந்தேன்.
கோவையில் நண்பன் நாகராஜன் அழைப்பின் பேரில் நேரு பல்கலைகழகத்தில் மனமும்
ஆயுர்வேதமும் என்றொரு உரை ஆற்றி வந்தேன். திருப்பூரில் விஜயதசமி எழுத்தறிவித்தல்
விழாவில் பங்கு கொண்டது நிறைவான அனுபவம். சாருவை அன்று தான் முதன் முறையாக் சந்தித்து
பேசினேன். எஸ்.ரா இங்கு வந்திருந்த போது இல்லத்திற்கு வந்திருந்தார். நிறைவாக
சில மணி நேரங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் நண்பர் ரா.கிரிதரனை சந்தித்தேன்.இருவருமாக் சென்று வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்து அவருடைய நாவல் பிரதியை அளித்துவிட்டு வந்தோம். கிரியின் நாவல் மிக முக்கயமான நாவலாக பேசப்படும் எனும் நம்பிக்கை எனக்குண்டு. மானசாவின் பாட்டி பாண்டிச்சேரியில்
இறந்து போனார். அதற்கு சென்று வந்தேன். அத்தை பெங்களூரில் இறந்து போனார், அதற்கொரு பயணம். வானதியின் மரணம் இவ்வாண்டின்
துவக்கத்தில் நிகழ்ந்தது. உலுக்கியது. அவ்வப்போது வானதியை எண்ணிக்கொள்வேன். அவள்
மரணித்த் பின் சேலம் சென்று வந்தேன். சில நேரங்களில் நாங்கள் எல்லாம் போலி
நம்பிக்கைகளை ஊட்டி அவளை உசுப்பேற்றி, தூக்க முடியாத பாரத்தை கிடத்தி
கொன்றுவிட்டோம் எனும் குற்ற உணர்வு மேலிடுகிறது. மறுத்து சொல்வதும் நட்பு தானே.
வாழ்வை பிழையாக மதிப்பிட்டு விட்டேன். யாரிடம் மன்னிப்பு கோருவது இப்போது?
இந்த ஆண்டு நிறைய வாசித்தேன்,தமிழிலும் ஆங்கிலத்திலும். 2666, lolita, sea
horses, charles yu எழுதிய how to survive in a science fictional world?, master
and margarita, chasing the monsoon, போன்ற நூல்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.
தமிழில் வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். அப்பால் ஒரு நிலம், இருமுனை,
எனும் போது நன்றி உனக்கு, கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என பலவற்றை வாசித்தேன்.
காலச்சுவடில் ஹிலாரி மாண்டெல் கட்டுரை, தமிழ் தி இந்துவில் காந்தி அப்பையா கறித்த
கட்டுரை, குமரப்பா குறித்து காண்டீபம்
சிறப்பிதழில் ஒரு கட்டுரை, பதாகைக்காக சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை
எடுத்த நேர்காணல், அவருடைய மொத்த தொகுப்பை வாசித்தது என ஓரளவு முனைப்பாக இயங்கி
இருக்கிறேன். புதிய குரல்கள் மூன்று பகுதிகள் மற்றும் நேர்காணல்கள் கவனம் பெற்றன.
சீ முத்துசாமியின் மண் புழுக்கள் நாவல் குறித்து எழுதிய கட்டுரை அவரை பற்றி
தொகுக்கப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது. ஜானிஸ் பரியாதின் 19/87 எனும் கதையை
மொழியாக்கம் செய்தேன். இந்த ஆண்டு புனை கதைகளில் சில மாற்றங்களை உணர முடிகிறது. ‘சிதல்’
என்றொரு கதை எழுதி காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். முக்கியமான கதையாக
இருக்கும். குறுங்கதைகளை எழுதினேன். பழுவேட்டையர் எனும் பாத்திரம் இலக்கிய பகடிகளை
செய்கிறது. போகிற வரை போகட்டும். ஆயுர்வேத நூலுக்கான பணி கொஞ்சம் முனைப்புடன்
செய்தேன். இந்த வருடம் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இழுத்து
விட்டது.முதல் கட்டுரை இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் பரவலான எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.முதல் வேலையாக இந்த புத்தக வேலையை முடித்து விட்டு தான்
அடுத்து என்று உறுதி கொண்டுள்ளேன். காந்தி 150 க்காக homage to mahathma எனும்
வானொலி உரை தொகையை மொழியாக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன்.
நாளை இரவு சிறுகதை
வெளியீட்டிற்கு செல்ல வேண்டும்.ஏற்புரையை தயார் சேது கொண்டிருக்கிறேன். புத்தாண்டு
பாண்டிச்சேரியில் விடிய இருக்கிறது. மற்றுமொரு ஆண்டு நமக்காக
காத்திருக்கிறது. திட்டங்கள் என ஏதுமில்லை. ஆயுர்வேத நூலை முடிக்க வேண்டும், பயணங்கள் செல்ல வேண்டும், தடைபட்டு இருக்கும் நீலகண்டம் நாவலை தூசி தட்டி மீண்டும் எழுதி முடிக்க வேண்டும். தொழில் வளர வேண்டும். ஆகட்டும் பார்ப்போம்.
பயணிப்போம் நண்பர்களே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.