சாளரம்
நரோபா விஷ்ணுபுரத்தில் வரும் பவுத்த துறவி. மொழியாக்கப் பணியின் பொருளின்மை
அவனை அமைதியிழக்க செய்கின்றது. காலத்தை விஞ்சி நிற்கும் பயண நூலை தனக்கென
உருவாக்குகிறான். ஒருவகையில் சுனில் கிருஷ்ணனின் சலிப்பான அன்றாடத்தை நுட்பமாக
நோக்கி அதை இடம் மாற்றி அடுக்கி, சுழற்றி, வேறொன்றாக
ஆக்கி வித்தைக் காட்டுவதற்காக உருவானவன் இந்த நரோபா. அவனுக்குத் துயரங்களின்
மீதும், தோல்விகளின் மீதும் மாளா ஈர்ப்பும் காதலும் உண்டு.
கனவுகளையும், கற்பனைகளையும்
நிகழ்வுகளுடனும் நினைவுகளுடனும் கலந்து கட்டி தனக்கென உலகுகளை உருவாக்கி தன்னைப்
புதைத்து கொள்கிறான்.
இக்கதைகள் 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. தொகுப்புக்காக சில
கதைகள் சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட அளவுக்கே தொகுப்புக்கு
வெளியேவும் கதைகள் உள்ளன. அவை மோசமானவை என்பதால் அல்ல, இத்தொகுப்பின் பொதுவான உணர்வு ஓட்டத்திலிருந்து விலகி
நிற்பவை என்பதால் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. இக்கதைகளைக் கால வரிசையின்படியும்
தொகுக்கவில்லை. கதையின் பேசுபொருள் சார்ந்து விளக்கமுடியாத காரணிகள் இக்கதையின்
வரிசையைத் தீர்மானித்தன. ஒருவகையான அகப் பயணத்தின் சான்று எனக் கொள்ளலாம்.
பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக இருவருக்கு, ஜெயமோகனுக்கும் நட்பாசுக்கும். என்னை எழுத்தாளராக நான்
அடையாளம் கண்டுகொண்டது இவர்களின் வழியேதான். இலக்கிய செயல்பாட்டின் மீது
பெருமதிப்பும், குன்றா
செயலூக்கமும் அவர்களிடமிருந்தே எப்போதும் பெற்று வருகிறேன். முதல் சிறுகதை
தொகுப்பைத் தந்தைக்கு நிகரான ஜெயமோகனுக்கும் வழிகாட்டியாகத் திகழும் நட்பாசுக்கும்
சமர்ப்பிப்பதே முறையாகும்.
முதல் தொகுப்பு கொண்டு வர யாரிடமும் கேட்க கூடாது என்றிருந்தேன். தயக்கமும்
கூச்சமும்தான் காரணம். நம்மை வாசித்து எவரேனும் இக்கதைகள் தொகுப்பாக்க தகுதியானவை
எனக்கருதி அழைப்பர் எனக் காத்திருந்தேன். ஆனால் எதுவும் நிகழவில்லை என்பது என்
எழுத்தின் மீது எனக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. அச்சமயத்தில்தான் நண்பர் ‘யாவரும்’ ஜீவ கரிகாலன் சில கதைகளை வாசித்து தொடர்பு கொண்டார். புதிய எழுத்தாளர்களுக்கு
தமிழ்ச் சூழலில் போதிய கவனமும் விமரிசனமும் கிடைப்பது அரிது எனும் சூழலில், பெரிய விற்பனைச் சாத்தியங்கள் ஏதுமில்லை எனும்போது கூட, ‘யாவரும்’ தொடர்ந்து பல புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது.
விமரிசனக் கூட்டங்களை ஒருங்கமைத்து கவனத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர வேண்டும்.
ஜீவ கரிகாலன் மற்றும் ‘யாவரும்’ நண்பர்களுக்கு
எனது நன்றிகள். கதைகளுக்கு தனது கோட்டோவியங்களை அளித்த கவிஞர்/ ஓவியர் ரமேஷ்
சுப்பிரமணித்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இக்கதைகளை வெளியிட்ட பதாகை, சொல்வனம், கபாடபுரம் மற்றும் jeyamohan.in ஆகிய இணைய தளங்களுக்கு நன்றிகள். கதைகளுக்கு
விமரிசனங்களையும் வாசிப்பையும் எப்போதும் அளித்து வரும் முன்னாள்/ இந்நாள்
விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களையும், பதாகை மற்றும் ஆம்னிபஸ் நண்பர்களையும் ஆரத்தழுவிக் கொள்கிறேன். என்னையும் ஒரு
ஆளாக்கிய அம்மாவிற்கு வணக்கங்கள், படைப்பூக்கத்தை அணையாமல் பார்த்துக் கொள்ளும் இல்லாள் மானசாவிற்கு நெஞ்சம்
நிறைந்த அன்பு, பிஞ்சுப்
பாதங்களால் நெஞ்சை நொறுக்கி என்னை மீள வார்க்கும் சுதீர் குட்டிக்கு முத்தங்கள்.
அம்புப் படுக்கை என இத்தொகுதிக்குப் பெயரிடவும் தெளிவான காரணங்கள் ஏதுமில்லை.
எனது ‘அம்புப் படுக்கை’ கதையுள் பீஷ்மர் ஒரு பாத்திரம் அல்ல. எனினும் இக்கதை அவரை நினைவூட்டக்கூடும். பீஷ்மர்
காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக்
கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று
இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும்
வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக
நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை
வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத்
தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.
வாழ்வில் திளைத்து எழுந்து உதறிச் செல்வது ஒருவகை, கரையோரம் விலகி சாட்சியாக நோக்கிக் கடப்பது ஒருவகை.
இரண்டையும் விழைந்து, இரண்டையும் துறந்து வாழும் சிற்றுயிர்களால் வேறென்ன இயலும், எழுதிக் கடப்போம் இவ்வாழ்வை.
சுனில் கிருஷ்ணன்
7-10-2017
காரைக்குடி
No comments:
Post a Comment