முன்னரே எஸ்ராவை விஷ்ணுபுர விழாவில் சந்தித்து பேசியிருக்கிறேன். காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றிலும் அவருடன் பங்கு கொண்டிருக்கிறேன். சில முறை அவருக்கு மின் அஞ்சல் எழுதியதும் உண்டு. கடந்த ஞாயிறன்று அவர் குடும்பத்துடன் காரைக்குடி வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் அவருடன் தனித்து உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டிற்கு வந்தார். சுதீர் அவருடன் எளிதில் அன்டிக்கொண்டான். அவனுடன் சமமாக விளையாடினார். சுதீருக்கு மற்றொரு பெயர் ராமகிருஷ்ணன் தான். அவனும் ஒரு எஸ்.ராமகிருஷ்ணன் தான் என அறிமுகம் செய்தேன்.
எஸ்.ராவின் உப பாண்டவம் மற்றும் துயில் ஆகிய இரு நாவல்களையும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அவர் எழுதிகொண்டிருக்கும் புதிய நாவலின் களத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சுவாரசியமான கதையாக உருவாகும் என தோன்றியது. சொந்த பதிப்பக முயற்சியைப் பற்றியும் கொஞ்சம் பேசினோம்.
மேற்கத்திய ஓவியங்களை அறிமுகம் செய்துகொள்ள என்ன புத்தகம் வாசிக்கலாம் என வினவியதற்கு சில புத்தகங்களை பரிந்துரைத்தார். அதைவிட அவ்வோவியங்களை நேரில் காண்பதே பெரும் அனுபவமாக இருக்கும் என்றார். மருத்துவத்தைப் பற்றி உரையாடினோம். எஸ்ராவின் சகோதரர் டாக்டர்.வெங்கடாசலம் எனக்கு நன்கு பரிச்சயமானவர். அவருடைய ஹோமியோபதி மருத்துவத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. வானதி - வல்லபி முகாம்களில் கண்கூடாக சில குழந்தைகளுக்கு அவருடைய மருந்துகள் உதவியுள்ளதை நான் கண்டிருக்கிறேன். எஸ்ராவிற்கும் ஹோமியோபதி பற்றிய ஆழ்ந்த அறிதல் உண்டு என அறிந்துகொண்டேன். முதலுதவி மருந்தை அளித்து ரயிலில் படுக்கை விழுந்து தலையில் அடிபட்டு மயங்கியவரை எழுப்பிய நிகழ்வை சொன்னார். ஐரோப்பாவில் குளிர்காலத்தில் ஐந்து அடுக்கு ஆடைகளை போட்டுக்கொண்டு தெருவில் உலவியபோது 'அகோனிடம்' எனும் ஹோமியோ மருந்தை உட்கொண்டு உடல் வெப்பம் இயல்படைந்த அனுபவத்தை கூறினார்.
இமாலய பயணத்தின் போது சந்தித்த திபெத்திய பவுத்த துறவி/மருத்துவரைப் பற்றிய அனுபவம் ஒரு சுவாரசியமான சிறுகதைக்கு உரியது. தோலின் மாறுபாடுகளை கொண்டு அத்துறவி எத்தனை நாட்களாக பயணம்? எப்போது உறங்கவில்லை? எப்போது உண்ணவில்லை? என சகலத்தையும் கணித்து, இப்படியே போனால் அதிகபட்சம் மூன்று நாட்களில் உன் பயணம் முடிந்துவிடும் என எச்சரிக்கிறார். அவருடைய மடாலாயத்தில் இரவு தங்கி வெவ்வேறு கலங்களில் உள்ள நீரையே மருந்தாக உட்கொண்டு புத்துணர்வு அடைந்ததாக கூறினார். ஒரு ஊரில் கோவில் அல்லது வழிபாட்டு தலம் புகழ் வாய்ந்ததாக இருந்தால் அவ்வூரில் மருத்துவமனைகள் எடுபடாது என்றொரு முக்கியமான அவதானிப்பை வைத்தார். வழிபாட்டு தலங்கள் ஏற்கனவே நம்பிக்கை அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது. ஆகவே எளிதில் நோயிலிருந்து மீள உதவுகிறது. நோய் மீட்சியை அளிப்பதற்கு சில நிபந்தனைகளை, சடங்குகளை வைப்பதே வழிபாட்டு தலங்கள் அளிக்கும் சிக்கல் என்றார். சூரிய வழிபாட்டு தலங்களில் தொழ நோயாளிகள் குழுமுவதற்கு முக்கிய காரணம் எருக்கம் பால். எருக்கிற்கு சூரியனின் பெயர்களே மாற்று பெயர்களாக உள்ளன. அதற்கு தோல் நோய்களை கட்டுபடுத்தும் தன்மையிருக்க கூடும் என்றார். சிவன் கோவில் வில்வம், பெருமாள் கோவில் துளசி என ஆரோக்கியத்தை பேணுவதற்கு வழிபாட்டு தலங்கள் ஏதோ ஒரு திட்டம் வைத்திருந்தன என்பது அவருடைய அவதானிப்பாக இருந்தது. செயின்ட் லூக் (லூகா) மருத்துவத்தை கிறித்தவத்துடன் இணைத்த முன்னோடிகளில் ஒருவர் என்றார். நாட்டு புற மருத்துவத்தின் மீது உயர் வகுப்பினருக்கு ஒருவித ஒவ்வாமை இருந்தது. குப்பைகளில் வளரும் செடிகள் தூய்மையற்றவை எனும் பார்வை கொண்டிருந்ததால் அவர்கள் தொழிற்சாலை உருவாக்கும் தூய வேதியல் மருந்துகளுக்கு எளிதில் மாறினார்கள்.
எஸ்ராவுடனான எனது உரையாடலில் என்னை பெரிதும் பொறாமை பட செய்தது அவருடைய குன்றாத செயலூக்கமும், தொலைநோக்கு திட்டமிடலும் தான். எழுத்துக்கென்று ஒரு அலுவலகம், எழுதுவதற்கென்று மேஜை, முதுகு வலிக்காமல் இருக்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நாற்காலி என்று தங்குதடையின்றி இயங்குகிறார். எந்த சமூக ஊடகத்திலும் அவர் இல்லை. ஆகவே கவனம் சிதறுவதில்லை. அவசியமென்றால், மகன்கள், மனைவி பார்த்து சொல்வார்கள் என்றார். எந்த தொந்திரவும் இல்லாமல் காலை 9,9.30 துவங்கி மதியம் 1.30 வரை தொடர்ந்து அலுவலக வேலை போல் எழுத அவரால் முடிகிறது. ஒவ்வொருநாளும் இரவு குடும்பத்துடன் அமர்ந்து ஒரு திரைப்படமாவது பார்த்துவிட்டு உறங்குவது தான் வழக்கம் என்றார். எழுதுவதற்கு இடையே பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து தண்ணீர் அருந்திவிட்டு வருவது தனது வழக்கம் என்றார்.
ஒரு வருடத்திற்கான திட்டத்தை தான் துவக்கத்திலேயே வரையறுத்து அதையொட்டியே எல்லாவற்றையும் அமைத்து கொள்வதாக சொன்னார். முடிந்தவரை திட்டமிட்டபடி செயலாற்றுவதாகவும், தவறிவிட்டால் கூட இழுத்து பிடித்து முடித்து விடுவதும் தனது வாடிக்கை என்றார். நாவலுக்கு நிறைய எழுதி பின்னர் தேவையற்ற பகுதிகளை நீக்கி சீர் செய்வதே தனது பாணி என்றார். ஏறத்தாழ ஆறேழு மாதங்கள் நாவலை தொகுக்க எடுத்துகொள்கிறார். தினமும் காலை முக்கால் மணிநேரம் நடை பயிற்சி, மாலையில் ஷட்டில் அல்லது நீச்சல் என உடல் மீதும் கவனம் செலுத்துகிறார்.
வருடத்திற்கு பதினைந்து முதல் இருபது கூட்டங்கள் வரை மட்டுமே பங்கேற்கிறார். அதுவும் அக்டோபர் துவங்கி ஃபிப்ரவரி வரையிலான காலகட்டங்களில் தான் பெரும்பாலான கூட்டங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு வருடமும் இரு வெளிநாட்டு பயணங்கள், இரு உள்நாட்டு பயணங்கள் செல்வது தனது வழக்கம் என்றார். தனது எழுத்து அறை, எழுத்து மேஜை அன்றி வேறங்கும் ஒரு சொல் கூட எழுத இயல்வதில்லை என்றார். பல ஆண்டுகளாக பருவங்களுக்கு ஏற்ப அவருடைய எழுத்து நேரம் இருந்ததை பற்றி அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. ஏப்ரல், மே, ஜூன்,ஜூலை மாதங்களில் பெரிதாக எதுவும் எழுதுவதில்லை. ஆகஸ்டு, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இரவுகளில் விழித்திருந்து எழுதியதாக கூறினார். டிசம்பர் ஜனவரி, பிப்ரவரியில் அதிகாலையிலும், அதன் பின்பான காலத்தில் மாலையிலும் நன்றாக எழுதவரும் என்றார். ஒவ்வொரு வருடமும் குறைந்தது மூன்று சிறுவர் நூல்களாவது எழுதுவது தனது கடமை என்றார்.
காந்தி திரைப்பட விழா ஒன்றை நடத்த வேண்டும் எனும் அவருடைய திட்டத்தைப் பற்றி விளக்கினார். மிகமுக்கியமான நிகழ்வாக அது இருக்க கூடும். திரைப்படங்களில் பணியாற்றுவது தொடர்பாகவும் கொஞ்சம் பேசினார். ஜோர்பா மொழியாக்கம் தொடர்பாக விசாரித்தார். மீண்டும் மீண்டும் கட்டுகோப்பான வாழ்க்கை தொடர்ந்து தீவிரமாக எழுதுவதற்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தினார் எஸ்ரா. அவருடைய மனைவி அவருடன் இருந்து அனைத்தையும் கவனித்து நிர்வகித்து சுமை ஏற்றாமல் பார்த்துகொள்வது மிக முக்கியமான விஷயம். மூத்த மகன் ஹரியும் படைப்பு திறன் கொண்டவராகவே இருக்கிறார். விடைபெற்று செல்லும் போது அவரிடம் சொன்னேன் "உங்கள நினைச்சா பொறாமையா இருக்கு சார்..முழு நேர எழுத்து ஒரு கனவு வாழ்க்கை.."
"நா எப்பவோ முடிவு பண்ணேன். இப்புடி தான் வாழணும்னு. ஆனா இதுக்குரிய விலை என்னவோ அத கொடுத்துட்டு தான் இருக்கேன்" என்றார்.
பிரியத்துற்குரிய எஸ்ராவுடன் கழித்த இந்த மாலை பொழுது என்றென்றும் நினைவில் எஞ்சியிருக்கும்.
அருமை சுனில். எஸ்ரா அவர்களுக்கு வணக்கங்கள்
ReplyDeleteஅன்பிற்கினிய திரு சுனீல் அவர்களுக்கு .
ReplyDeleteவணக்கம் , ஜெ தளத்தின் மூலமாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருந்தீர்கள் . அதன் வழியாகவே நான் காந்தி டுடே தளத்திற்கு சிலசமயம் மேய்வதற்கு வந்திருக்கிறேன் . ஜெ யின் “இன்றைய காந்தி” கொடுத்த அளப்பறிய புரிதல்களின் உந்துதலால் முழு மனதுடன் படிக்க வேண்டுமென நான் புக்மார்க் வைத்திருக்கும் தளத்தினுள் அதுவும் ஒன்று . உங்களை புதுவை கூடுகையில் நேரில் சந்தித்தது ஒரு இனிய நினைவாக இருந்து கொண்டிருக்கிறது .
தங்களின் சமீபத்திய பதிவு திரு எஸ்ரா பற்றியது . செறிவான பதிவாக மருத்துவம்சார்ந்து இருந்தாலும் அது அவரின் ஆளுமையை பற்றி சொல்வாதாகவும் அவர் மீது உங்களின் மதிப்பு முழுமையாக வெளிப்பட்டிருந்தது .நானும் அவரை புதுவையில் ஒரு கூடுகையின்போது பார்த்தேன் . அவரது ஆக்கங்கள் ஏதும் வாசித்திருக்கவில்லை எனவே அறிமுகம் செய்து கொள்ளவில்லை . எஸ்ரா எனக்கு அறிமுகமானது ஒத்திசைவு தளத்தில்தான் . உங்களைபோன்றே ஜெ வும் எஸ்ரா பற்றி அதே அபிப்ராயம் கொண்டிருக்கிறார் .அவரை மட்டுமல்லாது ஒத்திசைவை பற்றியும் உயர்ந்த எண்ணமே எனக்கு காணக்கிடைக்கிறது . இலக்கிய உலகிற்கு தற்செயலாகதான் ஜெ தளம் மூலமாக உள்நுழைந்தேன் .
பொதுவாகவே எல்லோரையும் கழுவேற்றுபவர் ஒத்திசைவு . விதி விலக்கு ஜெ . நான் எனது எழுத்து மொழியை கூர்கொள்ள சில தளத்திற்கு செல்வது வழமை ( சமீபமாக ஒத்திசைவு தளம் செல்வதை நிறுத்திக்கொண்டேன். ஏதோ ஜாஸ்தியானதாக உணர்வு ) ஒத்திசைவு பற்றி ஜெ வைத்திருக்கும் எண்ணமே அவரை பார்க்கவைத்தது . ஆனால் எஸ்ராவை ஏன் இப்படி கழுவுகிறார்.
புரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் . சமயம் கிடைக்கும்போது விளக்கினால் நன்று.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
27 செப்டம்பர் 2017
Cell : 9843010306
எஸ்.ராவுக்கும், பிரபஞ்ச எழுத்தாளர் "காளி" க்கும் என் வணக்கங்கள்
ReplyDelete