Friday, June 9, 2017

சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சியை நோக்கி...- ஜீன் ஷார்ப்


(ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரை)

சீனத்து கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை “குரங்கு தலைவன்” என்று மக்கள் அழைத்தனர். பழக்கப்பட்ட குரங்கு கூட்டம் ஒன்று அவனுடைய கட்டுப்பாட்டில் இயங்கியது. குரங்குகள் தினமும் அணிவகுத்துக் காட்டுக்குச் செல்லும். அங்கு கிடைக்கும் பழங்களில் பத்து சதவிகித பழங்களை ஒவ்வொரு குரங்கும் தன் தலைவனுக்கு அளிக்கும். ஒரு நாள் அந்த குழுவில் இருந்த இளைய குரங்கொன்று கேள்வி எழுப்பியது “ நாம் ஏன் அவனுக்குப் பங்களிக்க வேண்டும்? நாமே உண்ணக்கூடாதா? நாம் ஏன் அவனுக்குக் கட்டுப்பட வேண்டும்?” சடாரென்று அனைத்து குரங்குகளும் விழிப்படைந்தன. அன்றிரவே கொட்டடியை நாசப்படுத்தி தப்பிச் சென்று தங்களுக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டன. அரசியல் அதிகார சமன்பாடுகளை விளக்கும் ஜீன் ஷார்ப்புக்குப் பிடித்த சீன நாட்டுப்புற கதை இது.




ஜீன் ஷார்ப் அமெரிக்காவில் வாழும் மிக முக்கியமான சமூக ஆய்வாளர். உலகளாவிய மக்கள் போராட்டங்களை பற்றி பல தளங்களில் ஆய்வு செய்து வருபவர். இத்துறையில் ஒரு முன்னோடி என கொண்டாடப்படுபவர். காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் குறித்து ஷார்ப் எழுதிய கட்டுரையே நான் முதன்முதலாக வாசித்த அவருடைய எழுத்து என சொல்லலாம். காந்தியை அவர் “வன்முறையற்ற போர்” யுத்திகளை அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க முயன்ற முன்னோடி ஆளுமை என கருதுகிறார். 

'சர்வாதிகாரத்தில் இருந்து மக்களாட்சியை நோக்கி' – எனும் இந்த சிறிய புத்தகம் (இதை புத்தகம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை, சற்றே பெரிய துண்டு பிரசுரம் என்றுகூட சொல்லலாம்) உலகெங்கிலும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அண்மைய காலத்து அரேபிய கிளர்ச்சிகளிலும் அதற்கு முன்னர் நடந்த வேறு பல போராட்டங்களிலும் இந்த நூல் வலுவான தாக்கம் செலுத்தியதாக அறிகிறோம். மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டு அழியக்கூடாது எனும் எண்ணத்தின் காரணமாகவே இது குறித்து பல ஆண்டுகளாக சிந்தித்து எழுதிவருவதாக ஷார்ப் தெரிவிக்கிறார். 

ஒடுக்குமுறைகளில் இருந்தும் சுரண்டல்களில் இருந்தும் மக்களை மீட்பதைத் தம் நோக்கங்களாகச் சொல்லிக் கொள்ளும் சர்வாதிகார அமைப்புகளும் அதிகாரத்தை அடையும்போது அதையே நிகழ்த்துகின்றன எனும்போது விடுதலை இயக்கங்கள் தனிமனித சுதந்திரத்தைப் பெற்றுத் தர முடியுமா என்ற கேள்வியின் தீவிரம் நம்மை அச்சுறுத்துகிறது. இந்த அச்சத்துக்கு இந்நூல் ஒரு தீர்வை முன்வைக்கிறது.  ஷார்ப் சுட்டும் புள்ளி விவரங்கள் நமது வழமையான நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கக்கூடும் - அண்மைய ஆண்டுகளில் உலகெங்கும் அகிம்சை போராட்டங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகின்றன என்கிறார் இவர். சமீபத்தில் சொல்வனம் இதழில் நரோபா எழுதிய அகிம்சையின் வெற்றி எனும் கட்டுரை சுட்டும் எரிக்கா செனோவேத் எழுதிய புத்தகம் ஏறத்தாழ ஷார்ப்பின் பார்வைகளை வலுவாக்கும் ஆய்வு ஆதாரங்களை அளிப்பதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. 

தனது நாற்பதாண்டு கால அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூல் என்பதால் இதை முழு கவனத்துடன் வாசிக்க வேண்டும் எனக் கோருகிறார் ஷார்ப்.

.

முற்றதிகார அரசை எப்படி எதிர்ப்பது? முதலில், ஏன் எதிர்க்க வேண்டும்? அரசதிகாரம் எதைச் சார்ந்து நிற்கிறது? - இது போன்ற மிக முக்கியமான கேள்விகளுடன் தொடங்குகிறார் ஷார்ப். ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியையும் ஒரு எச்சரிக்கையுடன்தான் முடிக்கிறார் இவர் - சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். ஒரே இரவில் அத்தனையையும் சாதித்துவிட முடியாது. ஆனால் முற்றிலும் நம்பிக்கை இழக்க தேவையில்லை. 

ஷார்ப் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஒவ்வொரு முறைமையையும் பரிசீலிக்கிறார். ராணுவ சதி மூலம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும்போது ஒரு சர்வாதிகாரி மறைந்து மற்றொருவர் அந்த இடத்தை அடைவதே வரலாறு. மிக உயர்ந்த நோக்கத்துடனும் தீரத்துடனும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்தான் எனினும் வன்முறை விடுதலை பெற்றுத் தருவதில்லை என்கிறார் ஷார்ப். ஆயுதமேந்திய போராட்டம் ஆளும் தரப்பிற்கு எல்லையற்ற வன்முறையைப் பிரயோகிப்பதற்குத் தேவையான தார்மீக உரிமையை அளித்துவிடுகிறது என்கிறார் அவர். பெரும்பாலும் இத்தகைய ஆயுதமேந்திய போராட்டங்கள் முன்னைக் காட்டிலும் அதிக சேதாரத்தை விளைவிக்கின்றன என்று தன் பார்வையை ஆதாரங்களுடன் இந்நூலில் முன்வைக்கிறார். 

முற்றதிகார அரசின் முழு பலம் அதன் ராணுவமும் ஆயுதங்களும்தான், வன்முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்தரப்பின் பலவீனத்துடன் மோதாமல் பலத்துடன்தான் மோதுகிறோம். கொரில்லா முறை போர்கள் மூலம் அரசை மாற்றுவது சுலபமல்ல, அப்படியே அது நிகழ்ந்தாலும் முந்தைய ஆட்சியைக் காட்டிலும் அதிக அடக்குமுறையையே புதிய ஆட்சியாளர்கள் கையாள்வார்கள் என்கிறார் அவர். ஷார்ப் இதற்குச் சுட்டும் காரணம் முக்கியமானது. 

சர்வாதிகார அரசுகள் அரசு சார்பில்லாத எந்த அமைப்புகளையும், அவை மத அமைப்புகளாக இருந்தாலும் சரி, எளிய சமூக சேவை அமைப்புகளாக இருந்தாலும் சரி, அவைகளை வளர விடுவதில்லை. மனிதர்கள் தனித்து விடப்படுகின்றனர். அநீதிகளுக்கு எதிராக மெல்லிய முனகல்கூட எழுப்ப முடியாத அளவிற்கு பலவீனர்களாகி விடுகின்றனர். நெருங்கிய உறவினர்களுடன், நண்பர்களுடன்கூட தங்கள் விடுதலை வேட்கையை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.  

ஆனால், மக்களாட்சியை நோக்கிய பயணத்திற்கும் மக்களாட்சி நீடிப்பதற்கும் அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சி இன்றியமையாதது. அதிகாரத்தைக் கைப்பற்ற முற்படும் கொரில்லா அமைப்புகள் மைய அதிகாரத்தைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளுக்கு எதிரானவைதான். அதிகார குவிப்பு கொண்ட மைய ராணுவ அரசையே தீவிரவாத அமைப்புகளால் அளிக்க முடியும். அரசு அதிகாரத்துக்கு வெளியே, மக்கள் குழுக்களாக திரளும் அமைப்புகள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி நபர்களைக் காட்டிலும் குழு அடையாளத்தின் வழியாக மக்கள் ஒன்று திரண்டு ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்.

பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கைகளின் பங்களிப்புகளை பற்றி ஷார்ப் கூறும் கருத்துக்கள் நம் கவனத்திற்கு உரியவை. கொள்கை அளவில் அடிப்படை முரண்பாடுகள் இல்லாதபோது சமரச பேச்சுவார்த்தைகள் உதவக்கூடும். சில சலுகைகளை கேட்டுப் பெறவும் உரிமைகளை நிலைநாட்டவும் உதவலாம். மனித உரிமை, சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகள் நம் முன் நிற்கும்போது பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்கிறார் ஷார்ப். தம் தரப்பின் ஆதரவைப் பெருக்கி அதிகார குவிப்பைத் தகர்த்து அரசை தம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைப்பதே சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார் அவர். 

விரும்பினால் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நிலையில் ஒரு சர்வாதிகார அரசு தன் எதிர் தரப்பை சரணடையச் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதை சந்தேகத்துடன்தான் அணுக வேண்டும். அதில் ஏதோ ஆபத்து பொதிந்திருக்கிறது. ஒரு சர்வாதிகாரியின் மொழியில் அமைதி என்பது – ஒன்று சிறைசாலையின் அமைதி அல்லது கல்லறையின் அமைதியாகவே இருக்க முடியும் என்கிறார் ஷார்ப். சர்வாதிகாரிகள் நடத்தும் தேர்தல்கள் தங்கள் வெற்றியை தவிர பிறவற்றை அங்கீகரிப்பதில்லை.

சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பி எப்போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்கிறார் அவர். அப்படி ஒரு அன்னிய தேசம் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வந்தால் அதை ஐயத்துடன் அணுக வேண்டும். உள்ளிருந்து வலுவான எதிர்ப்பு அலைகள் எழாதபோது வெறும் சர்வதேச குறுக்கீடுகள் எதையும் சாதித்திட முடியாது. உள்ளிருந்து எழும் போராட்டங்களுக்கு பக்கபலமாக வேண்டுமானால் அவர்கள் இருக்கக்கூடும்.  

மிக முக்கியமாக, அகிம்சை போராட்டங்கள் வெகு காலம் நீடிப்பவை எனும் நம்பிக்கையை உடைக்கிறது இந்த நூல். ஆனால் உரிய சூழல் உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். உண்மையான போராட்டகாலம் என்பது மிக குறுகிய காலமாக இருக்கக்கூடும். ஒடுக்கப்படும் தரப்பை குழுவாக திரட்டும் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கையூட்ட வேண்டும். இத்தகைய முன் கட்ட நடவடிக்கைகளுக்குதான் நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஒரு அரசாங்கம் எந்தெந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது? இந்த கேள்விக்கு விடையாக ஷார்ப் ஆறு ஆற்றல் ஊற்றுகளைச் சுட்டிக் காட்டுகிறார். அவைகளை சார்ந்துதான் எந்த ஒரு அரசாங்கமும் இயங்க முடியும். அவைகளை மெல்ல அழிப்பதன் மூலமே அரசை வீழ்த்த முடியும். 

ஒரு அரசின் தார்மீக இருப்பை பற்றிய கேள்வியை முதலில் எழுப்பியாக வேண்டும். அரசுக்கு அடிபணிவது நம் கடமை எனும் மனப்போக்கில் இருந்து விடுபட்டு, அரசின் தகுதியை, நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அரசு வெகுவாக சார்ந்திருப்பது மக்களின் இந்த நம்பிக்கையில்தான். அரசுடன் ஒத்துப்போகும் குழுக்கள், தனி மனிதர்கள் - இவற்றின் எண்ணிக்கையே அரசின் பலத்தை தீர்மானிக்கிறது. 

அடுத்ததாக அரசாங்கத்தின் பின்புலமாக இயங்கும் அறிவு சமூகம் மற்றும் அரசாங்கத்தில் பங்கு பெற்றிருப்பவர்கள், இவர்களுடைய  ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியமானவை. அவர்களே சர்வாதிகாரியின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளிப்பவர்கள். 

அடுத்ததாக கொள்கை ரீதியிலான, உளவியல் ரீதியிலான தவிர்க்க முடியாத காரணங்கள் மக்களை ஆட்சியாளர்களின் சொல்லுக்கு கீழ்படிய செய்கிறது.  தேசத்தின் இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் மீது ஆட்சியாளருக்கு இருக்கும் அதிகாரமும், அரசாங்கத்தை எதிர்த்தால் அது அளிக்கக்கூடிய தண்டனைகள் பற்றிய அச்சமுமே அரசாங்கங்களின் அதிகாரம் செல்லுபடியாவதற்கான முக்கிய காரணிகள். 

எப்பேர்பட்ட சர்வாதிகார அரசாங்கமாக இருந்தாலும் பலவீனங்கள் இல்லாமல் இருக்காது என்கிறார் ஷார்ப். அகிலசின் குதிகாலைப்போல். குறிபார்த்து, உரிய நேரம் பார்த்து வீழ்த்த முடியும் என்பதே ஷார்ப் தரும் நம்பிக்கை. பலவீனங்கள் என சிலவற்றை பட்டியலிடவும் தவறவில்லை.  
.

ஒரு வலுவான அரசியல் எதிர்ப்பு இயக்கம் என்பது – சர்வாதிகாரியின் முடிவுகளுக்கும் வழிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இருக்கும். அவைகளை நிராகரிக்கும். அரசு அவர்களை எதிர்கொள்ளத் திணறும். இதனால் சர்வாதிகார அரசின் பலம் மெல்லக் குன்றும். சமூகத்தின் அனைத்து அடுக்குகளில் உள்ளவர்களின் பங்களிப்புகளையும் கோரும் அரசியல் அமைப்புகள் அதிகாரத்தை பரவலாக்கும். பரந்து விரிந்த அமைப்பாக இருக்கும் அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி தன்னை குவித்துக்கொள்ளும் மாண்புடையதாக இருக்கும் எந்த ஒரு எதிர்ப்பு இயக்கமும் சர்வாதிகாரிகளைக் குழப்பும். 

அரசாங்கம் நிலையான ஆட்சியைக் கொடுக்க மக்களின் ஆதரவு வேண்டும். சில அமைப்புகளின், தனிமனிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அகிம்சை வழியிலான போராட்டம் மூலம் இதை தடுக்க முடிந்தால் ‘அரசியல் அதிகார பட்டினியால்” அரசாங்கம் நாளடைவில் உதிர்ந்து விடும்.

இருநூறு வகையான அகிம்சை போராட்டங்கள் சாத்தியம் என்கிறார் ஷார்ப். அவைகளை மூன்றாக வகுக்கிகிறார் - எதிர்ப்பு, ஒத்துழையாமை, அகிம்சை ரீதியிலான குறுக்கீடுகள். இவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் மற்றும் பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன.

அகிம்சை போராட்டங்களுக்கு ரகசியத்தன்மை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே எவ்வித மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நேரடியாக ஒருங்கிணைந்து செயல்படுவதே உத்தமம். மேலும் பூடகத்தன்மை பெருந்திரள் மக்கள் பங்களிப்பாற்றுவதைத் தடுப்பதாக அமையும். அதேபோல் போராட்டத்தின் இறுதி இலக்கை எட்டும் வரை அபாரமான கட்டுப்பாட்டுடன் இருந்தாக வேண்டும். எந்த தூண்டுதலுக்கும் செவி சாய்க்காமல் இறுதிவரை அகிம்சையை பின்பற்றினால்- போராட்டத்தின் தார்மீக ஆதரவு கூடும்.

அகிம்சை போராட்டங்கள் சில வழிமுறைகளில் செயல்படுகிறது என்கிறார் ஷார்ப். அரிதிலும் அரிதாக எதிர் தரப்பு இவர்களின் நியாயங்களைப் புரிந்துக்கொண்டு இவர்கள் பக்கத்திற்கு மாறி வருதலும் உண்டு. அடிப்படை முரண்பாடுகள் ஏதுமற்ற நிலையில், இரு தரப்புகளும் குறிப்பிட்ட ஒரு சிக்கலில் பொதுவான உடன்பாட்டிற்கு வரலாம். 

அரசின் தார்மீக ஆதரவைச் சிதைத்து அதன் மூலம் அரசை வலுவிழக்க செய்வது அடுத்தக்கட்ட வழிமுறை. இதன் உச்சநிலையில் அரசு முற்றிலும் செயலிழந்து, பூரணமாக ஆதரவை இழந்து விடும்.   மேலும் அகிம்சை போராட்டங்கள் அதிகாரத்தை பரவலாக்க உதவும். மீண்டும் சர்வாதிகாரம் முளைக்க விடாமல் தடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அனுபவமும் தன்னம்பிக்கையும் வாய்த்திருக்கும் என்கிறார் ஷார்ப்.

பெரும்பாலான மக்கள் போராட்டங்கள் எவ்வித திட்டமிடலும் இன்றி திடிரென்று தோன்றியவைதான். ஆனால் அதன் காரணமாகவே அவை ஒடுக்கப்படும் அபாயமும் அதிகம் என்கிறார் ஷார்ப். சர்வாதிகாரத்தை எதிர்ப்பது மட்டும் முக்கியமல்ல. பிற அம்சங்களை கணக்கில் கொள்ளவில்லை என்றால் மற்றொரு சர்வாதிகாரி அதிகாரத்தை கைப்பற்றவே அத்தகைய போராட்டங்கள் வழிவகுக்கும். துல்லியமான திட்டமிடல் மூலம் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கி நகர வேண்டும் என்கிறார் ஷார்ப். உரிய திட்டமிடலும் தலைமையும் இல்லாததே பல போராட்டங்கள் தோல்வியைத் தழுவ காரணமாகிறது.

திட்டமிடலின் பல்வேறு படிநிலைகளை விரிவாக விளக்குகிறார் அவர் - ஒட்டுமொத்த போராட்டத்திற்கும் ஒரு வடிவம் அளிக்க வேண்டும். பின்னர் சிறிய சிறிய தொடர் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும். முக்கிய இலக்கிலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும். கொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது உத்தம குணம்தான், ஆனால் அது விடுதலையை அடைய உதவாது என்கிறார். காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப திட்டங்களை மறுவரையறை செய்வது முக்கியம்.

ஒரு மூர்க்கமான சர்வாதிகாரிக்கு எதிராக மக்களை பொது இடத்தில் திரட்டி போராடச் செய்வது ஆபத்தை விளைவிக்கலாம் (திபெத் படுகொலை, ஜாலியன்வாலா பாக் – உதாரணங்களை நினைவில் கொள்ளவும்). எனவே சிறிய அளவிலான, ஆபத்தில்லாத எளிய போராட்ட வழிமுறைகளையே துவக்கத்தில் கையாள வேண்டும் (கருப்பு பதாகை அணிவது, பணி நிறுத்தம் போன்றவை). அதுவே இப்போராட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.   

காவல் துறை, உளவு துறை, அதைவிட முக்கியமாக ராணுவம் போன்ற அமைப்புகளின் பரிபூரண விசுவாசத்தை நம்பியே ஒரு சர்வாதிகாரியால் இயங்க முடியும். அவ்வமைப்புகளில் மெல்ல அவநம்பிக்கையையும் அற குழப்பத்தையும் ஏற்படுத்த முயல்வது மிக முக்கியமான கட்டம். 

ஒட்டுமொத்தமாக இரண்டு பகுதிகளாக இந்த நூலை புரிந்து கொள்ளலாம். முதல் பகுதியில் வன்முறை போராட்டத்தின் பாதகங்களை அலசுகிறார், இரண்டாம் பகுதி அகிம்சை போராட்டத்தின் சாதக பாதகங்களையும் வெவ்வேறு வழிமுறைகளையும் அலசுகிறது. 

ஷார்ப் காந்தியின் மீது பெருமதிப்பு கொண்டவர், ஆனால் அவரை காந்தியர் என்று வரையறுக்க முடியாது. தான் அகிம்சையை முன்னெடுக்க அதன் ஆன்மீக அம்சம் காரணமல்ல என்பதை தெளிவாக்கி விடுகிறார், போராட்டக் களங்களில் வன்முறையைக் காட்டிலும் அகிம்சையே மேலான உத்தி என்ற நடைமுறை உண்மை மட்டுமே அவருடைய அகிம்சை சார்புக்குக் காரணமாக இருக்கிறது. இது அத்தனை சரியான அணுகுமுறையாக எனக்கு படவில்லை.

அண்மையில் நான் பத்திரிக்கைகளில் கண்ட புகைப்படம் என்னை வெகுவாக அமைதியிழக்கச் செய்தது. எங்கெல்லாம் தவறு நேர்ந்தது என பட்டியலிட்டு அந்த ரணங்களை கிளறிவிட விரும்பவில்லை. இந்த நூலை வாசிக்கும்போது காந்தியும் இலங்கையின் சகோதர சகோதரிகளின் கணக்கற்ற புகைப்பட பிம்பங்களும் மாறி மாறி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தன. சர்வாதிகாரி பற்றி ஷார்ப் சொல்லும் வரையறைகள் வரிக்குவரி அண்டைய தேசத்து அரசுக்குப்  பொருந்துவதாக எனக்குத் தோன்றியது. 

இனியும் அங்கு சுதந்திர போராட்டம் சாத்தியம் என்றால் அது இத்திசையில்தான் செல்ல முடியும். அதுவே அத்தனை உயிர் துறப்புகளுக்கும் அர்த்தம் கொடுக்கும். எதிர் தரப்பின் சாமானிய மக்களை இத்துயரங்கள் சென்றடைய வேண்டும். தாம் தவறிழைக்கிறோம் என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இனம், மொழி போன்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு சக மனிதனை வதைக்கும் அரசுக்கு நாம் நம் மௌனத்தால் ஆதரவளிக்கிறோம், அதன் மூலம் அந்த பாவத்தில் நாமும் பங்குவகிக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்தே துவங்க வேண்டும். நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

No comments:

Post a Comment