Monday, June 5, 2017

கிழவனும் கடலும் - ஹெமிங்வே

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’
- எர்னெஸ்ட் ஹெமிங்வே (கிழவனும் கடலும்)


ஆம்னிபஸ் நண்பர்களுக்குள் அவ்வப்போது முளைக்கும் சில விவாதங்கள் சுவாரசியமானவை. ஒரு நண்பர் வுட்ஹவுஸ் சந்தித்த அவருடைய ஆதர்ச எழுத்தாளர்களை பற்றி கேட்டுக்கொண்டிருந்த போது ஹெமிங்வே பற்றிய பேச்சு வந்தது. “தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை இருக்காது என்பதுதான் இவரிடம் விசேஷம். பெரும்பாலும் மாறி மாறி பேசிக்கொள்வதுதான் கதை. ஆனால், வர்ணனைகள் இருக்கும் இடங்கள் பிரமாதமா இருக்கும். அழகா எழுதத் தெரியாதவரல்ல. நீட்டி முழக்கி கதை சொல்வதைப் பெண்மைன்னு நினைச்சார். எல்லாத்திலும் ஆண்மைதான் வேண்டும் - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்றது ஆண்மை. Macho  என்பதை வழிபட்டவர்.  எழுத்துன்னா வீர்யமா இருக்கணும்.” என்று ஹெமிங்வேயின் எழுது முறை பற்றி மற்றொரு நண்பர் விவரித்தார். ஹெமிங்வேயை வாசிக்க கிழவனும் கடலும் மிகசரியான தொடக்கம் என்றார்..



   


நான் ஹெமிங்வேயை வாசித்ததில்லை. ஆனால் நண்பர்களின் இந்த குறிப்புகள் கொஞ்சம் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தின. காலச்சுவடு உலக இலக்கிய கிளாசிக்குகளை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் எம்.எஸ். அவர்களின் மொழிபெயர்ப்பில், யுவன் சந்திரசேகரின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. 

யுவன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரை தன்னளவில் தனித்துவத்துடன் மிளிர்கிறது. மொழியாக்கத்தின் வகைமாதிரிகளை, முக்கியத்துவத்தை, அதிலுள்ள சிக்கல்களை ஆழமாக அலசும் கட்டுரையது. வார்த்தைக்கு வார்த்தை அப்பட்டமாக  மொழியாக்கம் செய்யப்படுவது அபுனைவுகளுக்கு பொருத்தமானதாக இருக்கும், புனைவுகளுக்கு அல்ல என்கிறார். ‘தொலைக்காட்சிப் பெட்டியின் உள்ளிருக்கும் மின்னணுத் தகட்டை வானொலிப் பெட்டிக்கு பொருத்துவது மாதிரியான விஷயம் தான் இது. ஒலித்தொடர்பு ஒருவேளை நிறுவப்பட்டுவிடலாம். காட்சிக்கு எங்கே போவது?’ என்று கேட்கிறார். 'கிழவனும் கடலும்' நாவலுக்குரிய அமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதால் நாவலாக ஏற்பது கடினம், மிக நீளமாக எழுதப்பட்ட சிறுகதை என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார் யுவன். ஆனால் அது படைப்பின் முக்கியத்துவத்தை எவ்வகையிலும் குறைத்துவிடுவதில்லை என்பதையும் சொல்கிறார்.        

மீன் ஏதும் கிடைக்காமல் எண்பத்தி நான்கு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் சான்டியாகோ எனும் கிழவன், அவன் மீது பரிவு கொண்டு அவனை கவனிக்கும் மனோலின் எனும் சிறுவன், தன்னந்தனியாக கடலுக்கு செல்லும் கிழவனின் தூண்டிலில் மாட்டும் பிரம்மாண்டமான மார்லின் வகை மீன் – ஆகிய மூன்று பாத்திரங்களின் வழியாக இந்த புனைவை நகர்த்துகிறார் ஹெமிங்வே. நம்பிக்கையுடன் கடலுக்கு செல்லும் கிழவன் தூண்டிலில் சிக்கிய மீனின் இழுப்பிற்கு ஈடுகொடுத்து இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் பயணிக்கிறான். முடிவில் அதை கொன்று படகுடன் சேர்த்துக் கட்டி களிப்புடன் திரும்பும்போது சுறாக்களால் குதறி எடுக்கப்பட்டுகிறது அவனுடைய மீன். தொடர்ந்து சுறாக்களுடன் போராடுகிறான். வெறும் எலும்புக்கூடுடன் இறுதியில் சோர்ந்து கரையொதுங்குகிறான். 

மற்றொரு ஆம்னி நண்பர் லைஃப் ஆஃப் பை நாவல் குறித்தான விவாதத்தின் போது – “கிழவனும் கடலும் - நாவல் மீனைப் பிடிப்பது பற்றின்னு எழுதுவது போல இது தப்பானது. கிழவனும் கடலும் நாவலில் - மீன் பிடிக்க முடியாமல் திணறும் கிழவனுக்கும் கடலின் லீலைக்கும் நடக்கும் போராட்டம் தான் கான்ஃப்லிக்ட்” என்று எழுதினார். 

இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம் அவ்வளவு தான். அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம்/சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்து கிழிக்கும் கோரை பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினை காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவை பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்ட துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம் (ஹெமிங்வேயின் முந்தைய படைப்பு விமர்சகர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டு, கிழவனும் கடலும் வழியாகவே அமெரிக்க எழுத்துலகில் தன்னை மீண்டும் நிறுவினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). விவிலிய படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாக பயன்படுத்தியிருக்கிறார், விவிலிய தளத்திலும் ஒரு வாசிப்பு சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் – எனும் கீதையின் சாரத்தை சொல்லும் கதையாக கூட இதை வாசிக்க முடியும்.  

சான்டியாகோ அதிர்ஷ்டமற்றவன் என்று மனோலினின் பெற்றோர்கள் கருதியதால் அவனை வேறு படகிற்கு அனுப்பிவிடுகிறார்கள். கிழவருக்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் அற்புதமானவை. யுவனின் முன்னுரையில் ‘நேரடியான வார்த்தைகளில் பதிவு பெறாத மௌன இடைவெளிகளும், ரகசியங்களும் நிரம்பியது’ என்றொரு வாக்கியம் வருகிறது. உரையாடல்களை நுணுக்கமாக கவனிப்பதன் வழியாக வாசகன் புலப்பாடாத இருள் பிலங்களுக்குள் ஒளி பாய்ச்ச முடியும். சிறுவனின் முதல் மீன்பிடி பயணத்தின் போது அவன் உயிரை காத்த கிழவனின் நினைவுகள், சிறுவன் கிழவன் மீது கொண்டுள்ள கனிவு, அந்த கனிவு கிழவனிடத்தில் ஏற்படுத்தும் தாழ்வுணர்ச்சி, அதை வென்றாக வேண்டும் எனும் கிழவனின் திட்பம், பெற்ற மகனாக இல்லையே என மருகும் கிழவின் உணர்வு என பலவற்றை இவ்வுரையாடல்களின் இடுக்குகளின் வழியாக நாம் கண்டுக்கொள்ள முடியும். கடல் பயணத்தின் ஒவ்வொரு சிடுக்கிலும் அவனுக்கு சிறுவனின் நினைவு மீண்டு எழுகிறது. அவன் உடன் இருந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்று உருகுகிறான்.  

“நான் ஒரு விசித்திரமான கிழவன்” என்று சிறுவன் மனோலினிடம் கூறுகிறான். கிழவனுக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது, சிறுவனின் நம்பிக்கையை அவன் காத்தாக வேண்டும், அவனை எள்ளி நகையாடுபவர்களிடத்தில் தலை நிமிர்ந்தாக வேண்டும். ‘அவன் நீலநிறக் கண்களில் மட்டும் மகிழ்ச்சியும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத திண்மையும் இருந்தன’. உண்மையில் அவன் அனுபவித்த வலிகளையும் உபாதைகளையும் கடந்து அவன் மனம் அவற்றை ஏற்காமால் ‘ஒன்றுமில்லை’ என புறக்கணிக்கிறது.  

ஹெமிங்வே இக்கதையில் தொடர்ந்து ‘முன்னறிவித்தல்’ என்பதை ஒரு யுத்தியாக பயன்படுத்துகிறார். முன்பொரு முறை எண்பத்தி ஏழாவது நாள் கிழவனுக்கு மீன் கிடைத்திருக்கிறது, அதிருஷ்டம் இருமுறை வராது, ஆகவே இம்முறை எண்பத்தி ஐந்தாவது நாள் தான் அவனுக்கு அதிருஷ்டம் என்கிறான் கிழவன். அவன் அந்த பிரம்மாண்ட மீனின் வெற்று எலும்புக்கூட்டை மட்டும் சுமந்துக்கொண்டு கரையை அடையும்போது எண்பத்தி ஏழாவது நாள். ‘ஒரு பிரம்மாண்டமான ஆயிரம் பவுண்டு மீனை பிடித்து வந்தால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று சிறுவனிடம் கேட்கிறான். சிறுவன் அவனை பெரும் மீனவனாக புகழும் போது, “ரொம்ப நன்றி, சந்தோஷமாய் இருக்கிறது. ஆனால் ஏதாவது ஒரு பெரிய மீன் வந்து நீ சொல்வதைப் பொய் என்று ஆகிவிடக்கூடாது.” என்கிறான் கிழவன். கதை முழுக்கவே அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை கோடிட்டு காட்டிக்கொண்டே செல்கிறார்.      

கிழவன் யாரையெல்லாம் தன்னுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறான் என்பதை கவனிக்க வேண்டும். நட்சத்திரங்களை, சூரியனை, சந்திரனை- தன் சகோதரர்கள் என்கிறான். தன்னிரு கரங்களும் கூட அவனுக்கு சகோதரர்கள் தான். தான் தேடி செல்லும் அந்த பிரம்மாண்ட மீனும் கூட அவனுக்கு சகோதரன் தான். கடலில் இரை தேடி திரியும் ஒற்றை கரிய பறவை, செதில் விரித்து கடல் நீரில் பறக்கும் மீன்கள், அந்த பறக்கும் மீன்களை நீரில் கவ்விப் பிடிக்கும் ஓங்கில்கள், குமிழ் மீன்களை (jelly fish) விழுங்கும் பெருந்தலை ஆமைகள், இவையாவும் அவனுடைய நண்பர்கள். தூண்டிலில் சிக்கிய பெண் ஈட்டி மீனை தேடி துள்ளி குதிக்கும் ஆண் ஈட்டி மீன் அவனுக்கு நினைவுக்கு வருகிறது. சிறுவனும் அவனும் மன்னிப்பு கோரிக்கொண்டே அதை கொல்கிறார்கள். பாவ – புண்ணிய விசாரணை பிறக்கிறது. அதை தாண்டி அவன் கடமையை தான் அவன் செய்கிறான் எனும் நிறைவை அவன் கொள்கிறான். 

மார்லின் மீனின் பிரம்மாண்டத்தையும், கம்பீரத்தையும், கண்ணியத்தையும் எண்ணி வியக்கிறான். அதை முழுவதுமாக நேசிக்கிறான். அத்தகைய மீனிடம் தோற்று மரிக்கக் கூடாது என்று போரிடுகிறான். இறுதியில் அது இவனை கொன்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வருகிறான். வேறு வழியில்லை உன்னை கொன்றுதான் ஆக வேண்டும் சகோதரனே என்று தேற்றிக் கொள்கிறான். அதை உண்ணும் தகுதி கூட எந்த மனிதருக்கும் இல்லை என்று எண்ணுகிறான். ஆம் அதனால் தானோ என்னவோ அது சுறாக்களுக்கு இரையாகிறது. ‘இதையும் தின்னுங்கள் சுறாக்களே’ என்று அவைகளை நோக்கி எச்சில் உமிழ்கிறான். இவையெல்லாம் வெறும் கனவாக இருக்கக்கூடாதா என்று அரற்றுகிறான்.     

மனிதன் மரணமடைந்து விடக்கூடும் ஆனால் அவன் அதனால் தோல்வி அடைந்தவனில்லை என்று நம்புகிறான் கிழவன். இறுதியில் சிறுவனுடன் அவன் மீண்டும் விடாமுயற்சியுடன் கடலுக்கு செல்ல திட்டமிடுகிறான். இந்த பாத்திரத்தை உருவாக்கிய ஹெமிங்வே தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார் என்பதை வாசிக்கும் போது மனம் கனக்கிறது. கியுபன் கடற்கரையில் தான் கேட்டறிந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த நாவலை ஹெமிங்வே எழுதியிருக்கிறார் என்று அறிகிறேன். 
 இளமையில் ஆப்பிரிக்க கடற்கரையில் தான் கண்ட சிங்கங்கள் அவன் கனவில் தினமும் வந்து போகின்றன. கால் ஆணியில் அவதிப்படும் டிமாகியோவும் பேஸ்பால் நினைவுகளும் கடல் பயணத்தின் ஊடாக நினைவில் எழுகின்றன. மனதுக்குள் ஓசையின்றி ஒலிக்கும் சொற்கள் எல்லாம் கடலின் தனிமையில் உரக்க வெளிவருகின்றன. இன்னமும் கூட இக்கதையில் பல உள் மடிப்புகளை விரித்து எடுக்க முடியும். ஹெமிங்வேயின் மொழி நடையும் அவர் பயன்படுத்தும் படிமங்களும், அவற்றுள் உள்ள அறுபடாத தொடர்புகளும் மேலும் விவாதிக்கப்பட வேண்டும். ஹெமிங்வேயின் மொழி அமைப்பு நமக்கு மேற்கோள்களை வாரி வழங்கக் கூடியது. காட்டுவாத்துக்கள் போல் சிதறும் மேகக்கூட்டம், மஞ்சள் போர்வைக்குள் காதல் செய்யும் கடல் என பல அபாரமான சித்திரங்களை அவருடைய மொழியால் கட்டமைக்கிறார்.  

இந்நூலை பொருத்தவரை இரண்டு முக்கியமான விஷயங்களை கவனப்படுத்த வேண்டும். ஒன்று திரு.எம்.எஸ் அவர்களின் மொழியாக்கம்- மிக கச்சிதமான மொழியாக்கம், நேரடியான தமிழ் சூழலில் பொருத்தி வாசிக்கும் அளவுக்கு சரளமாக எழுதப்பட்டுள்ளது. ஹெமிங்வே போலவே சொற்சிக்கனம் கொண்ட மொழி பிரயோகம். இரண்டாவதாக- இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ரேமண்ட் ஷேபர்ட் மற்றும் சி.எஃப். டுனிகிளிஃப் ஆகிய இரு ஓவியர்களின் ஓவியங்கள். நாற்காலியில் அமர்ந்த வாக்கில் நாளிதழ் வாசித்துக்கொண்டே உறங்கும் அந்த கிழவரின் முகமும் அதை நோக்கும் அந்த சிறுவனின் பிம்பத்தையும் அத்தனை எளிதில் அழிக்க முடியாது.  

“பறவைகளை – குறிப்பாக சிறிய கரிய பறவைகளை – பார்த்து அவன் இரக்கப்படுவான். எப்போதும் சுற்றிச் சுற்றி பறந்தாலும் அவற்றுக்கு உணவு எதுவும் கிடைப்பதில்லை. நம்மைவிட அவற்றின் வாழ்க்கை சிரமமானது என்று நினைத்தான் அவன்.  திருட்டு பறவைகளும் வலுத்த பறவைகளும் எப்படியோ பிழைத்துக் கொள்ளும். கடல் இவ்வளவு கொடூரமாக இருக்கும்போது இந்தக் குருவிகளை மட்டும் ஏன் இவ்வளவு வலுவற்றவையாக படைத்திருக்கிறான்? கடல் இரக்கம் உள்ளவள் தான், அழகானவள் தான், ஆனால் அவள் சீற்றம் கொள்ளும்போது, நீரில் மூழ்கி இரைதேடும் இந்தச் சிறிய பறவைகள், அவற்றின் சோகம் நிறைந்த மெல்லிய குரலைப் போலவே கடலுக்குப் பொருத்தமற்ற மென்மை கொண்டிருக்கின்றன.”


கடலும் குருவியும் மட்டுமல்ல வாழ்க்கையும், ஏன் நாமும் கூட இப்படித்தான். வேறென்ன சொல்ல?

-சுகி

No comments:

Post a Comment