புத்தகங்கள்

Pages

Monday, June 26, 2017

உருமாற்றம்

(ஆம்னிபஸ் பதிவு)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் ஆசிரியர் ஒருவருடன் சென்னை புறநகரில் உள்ள அந்தத் துயரரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த மத்திய வர்க்க வாடகை வீட்டில்,  ஒய்வு பெற்ற  அவனது தந்தையும், தாயும், பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த ஒரு  தம்பியும் வசித்து வந்தனர். வாசுதேவன் பொறியியல் படித்து நல்ல பணியில் இருந்த பொறுப்பான இளைஞர். எந்த தீய சகவாசங்களும், கெட்ட பழக்கங்களும் அவருக்குக் கிடையாது. 

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பணி முடித்து வீடு திரும்பிய ஓரிரவில் கொடுமையான விபத்தில் தலையில் பலத்த காயம்பட்டு, சுய நினைவை இழந்திருந்தார். மண்டையோட்டின் ஒரு பகுதியைப் பெயர்த்து எடுத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். கண்கள் அவ்வப்போது தன்னிச்சையாக திறந்து மூடும், கைகால்களும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும். சளியடைத்த மாரை ஒரு சக்ஷன் இயந்திரம் சுத்திகரித்துக் கொண்டிருந்தது.  உணவு நேராகக் குடலுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வெளிறிய , அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன. 

அவன் இன்னும் மரணிக்கவில்லை. என்றேனும் பழையபடி கண்விழிக்கக்கூடும் என்று அந்த குடும்பம் நம்பிக்கொண்டிருந்தது. அத்தனை வைத்தியமும் பொய்த்த நிலையில் ஆயுர்வேதம் நோக்கி வந்திருந்தார்கள். தினமும் காலை நானும் என் நண்பனும் அங்கு செல்வோம். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது. பதினைந்து நாள் சிகிச்சை கழிந்த பின்னர்,  போதுமென்று நிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பின் பதினைந்து நாட்களில், வாசுதேவன் மரணமடைந்துவிட்டார் எனும் செய்தி கிடைத்தது.  உணர்வற்ற வெறும் ஓலம் மட்டுமே அவ்வப்போது வெளிவரும் வாசுதேவன் மெல்ல மானுட அடையாளங்களை இழந்திருந்தான்.  அவன்தான் நான் கண்ட கிரேகர் சம்சா.





அன்று விழித்தெழும்வரை கிரேகர் சம்சா தன் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தப் போராடும் ஒரு சாமானிய விற்பனை பிரதிநிதி, விசுவாசமான  ஊழியன், கடமை தவறாத மகன், நேசமுள்ள அண்ணன் என தான் பொறுப்பேற்ற பாத்திரங்களைக் கச்சிதமாக நிர்வகித்து வந்தவன். 

கனவுகள் குறுக்கிட்ட தூக்கமற்ற முந்தைய இரவிலிருந்து விழித்தெழுகிறான் சம்சா. தாழிட்ட தன்னறைக்குள் தான் பல குச்சிக் கால்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான புழுவாக மாறியிருப்பதை உணர்கிறான். நேற்றிரவு கண்ட கொடுங்கனவுகளின் நீட்சி என்று நம்புகிறான், மீண்டும் சற்று கண்ணயர்ந்து விழித்தெழுந்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என எண்ணுகிறான். தாயும், தங்கையும், தந்தையும் நிறுவன மேலாளரும் கதவருகே இவனைக் காணக் காத்திருக்கிறார்கள். 

பிரம்மாண்டமான புழுவாக  இவன் உருமாற்றம் அடைந்ததைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள், அருவெறுப்புடன் அங்கிருந்து நகர்கிறார்கள். தங்கை கிரீட் மட்டுமே அவனிடம் பரிவு கொள்கிறாள், உணவு பரிமாருகிறாள், அது அவளுடைய தனிப்பட்ட உரிமை என நிலைநாட்டிக் கொள்கிறாள். 

சம்சாவின் துணையின்றி வாழ வேண்டிய நிலை, குடும்பத்தினர் அனைவரும் கடுமையாக உழைக்கத் தொடங்குகிரார்கள். மெல்ல சம்சா தேவையற்ற ஒரு சுமையாகிறான், பரிவு கொண்ட தங்கையும் அவனை வெறுக்கத் தொடங்குகிறாள். தந்தை அவனைத் தொடக்கம் முதலே ஒரு விசித்திர உயிரினமாக மட்டுமே பார்த்தவர். தாய் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர்தான் அவன் அறைக்கே வந்தாள். வேலைக்காரி மட்டுமே அவனை  கொஞ்சமேனும் பொருட்படுத்துகிறாள். அசைவின்றி சிக்குண்ட அவன் மெல்ல உணவைத் தவிர்க்கத் துவங்குகிறான், நோய்வாய்ப்பட்டு, அமைதியாகிக் கிடக்கிறான். அப்படியொருவன் தங்கள் குடும்பத்தில் இருந்தான் எனும் நினைவையே நீக்கி நிம்மதி பெருமூச்சுடன் வெளிக்கிளம்புகிறார்கள் குடும்பத்தினர். காலம் மறக்கப்பட்ட நினைவுகளைத் திருடித் தின்னும் பசிகொண்ட பூனை.   

இந்த சிறிய கதை எழுதப்பட்ட இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு செவ்வியல் படைப்பு எனக் கொண்டாடப் படுகிறது. இந்தக்கதையில் உள்ள படிமத்தை நாம் நம் மன விரிவுக்கு ஏற்ப விரித்தெடுத்துக் கொள்ள முடியும். மனிதன் தன்னையே அருவெறுக்கதத்தக்க புழுவாக உணர முடியும், செயலின்மையில் சிக்கி, பயனற்ற வீண் சுமை என வெறுக்கப்படும் அற்பப் புழு. நோய்மையுடன் இந்தக்கதையை தொடர்புபடுத்தி வாசித்தால் வேறொரு தளம் திறந்துகொள்ள கூடும். அர்த்தமற்ற அன்றாட லௌகிக சுழலிலிருந்து மேலான ஆன்மீக தளத்தை நோக்கிய பயணம் என்றும் இதை வாசிக்க முடியும்.  

மனிதன் தனக்குக் கற்பிதமான இலக்குகளை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டே இருக்கிறான். அலுப்புடன் சலித்துத் திரும்பினால், அத்தனையும் வியர்த்தம். சம்சா தவிக்கிறான், தன் குடும்பக் கடமைகளை தான் ஈடேற்ற போட்ட திட்டங்களை எண்ணி பதறுகிறான். வயோதிக தந்தையின் கடன்களை தீர்த்து, பதின்ம வயது தங்கையின் வயலின் கனவுகளை நிறைவேற்றிய பின்னர் தன் வாழ்வைப் பற்றிய கனவுகளை நோக்கிப் பயணப்பட வேண்டும் என எண்ணியிருந்தான் சம்சா. அக்குடும்பத்தின் வாழ்வில் அவனுடைய இன்றியமையாத, மிக முக்கியமான இடத்தைப் பற்றிய பதைபதைப்பு அவனுக்கு இருக்கிறது. தன் பங்களிப்பின்றி அந்த குடும்பம் தத்தளிக்கும் என்பதை உணர்ந்திருந்தான். 

பாலைவன மணலின் கால்சுவடுகள் மெல்லக் காற்றில் கரைவதுபோல் எப்பேர்பட்ட வெற்றிடத்தையும் காலம் நிரப்பி சமன்படுத்திவிடுகிறது. சம்சா உயிருடன் இருக்கும்போதே அவனில்லாமல் வாழப் பழகுகிறார்கள்.  மகன், அண்ணன் போன்ற பந்தங்கள் மறைந்து அவன் உயிருடன் இருக்கும்போதே,  பிறர் கண்ணில் படாமல் பாதுகாக்கப்பட வேண்டிய  பொதியாகிறான். மரணத்தைக் காட்டிலும் வலிமிகுந்தது புறக்கணிப்பு. அவர்களின் அன்பிற்காகவும், புரிதலுக்காகவும் ஏங்கும் அவன் மானுட அடையாளங்கள் இழந்த வெறும் புழுவென வெறுக்கப்படுகிறான்.   

ஆரம்பத்தில் கட்டிலில்  உருண்டு புரளவே சிரமப்படுகிறான் சம்சா. அவனது கால்களை எப்படி பயன்படுத்துவது என்பதுகூட அவனுக்குத் தெரிவதில்லை. யாரையும் அவன் அச்சுறுத்த விரும்பவில்லை, உணவு கொண்டு வரும் தன் தங்கை மற்றும் அறைக்குள் எப்போதாவது வரும் தாய் என எவர் கண்ணிலும் படாமல் வாழப் பழகுகிறான் சம்சா. மெல்ல ஊர்ந்து நடக்கிறான், அறையின் சுவர்களில் ஊர்கிறான், சாளர விளிம்பின் வழியாக வெளியுலகத்தை வேடிக்கை பார்க்கிறான். அறையின் மேற்கூரைக்கு  ஊர்கிறான் , அங்கிருந்து பொத்தென்று விழும் புதிய விளையாட்டைக் கண்டுகொள்கிறான், தன் இருண்ட அறையின் கதவிடுக்கின் வழியாக உணவரையில் தன் குடும்பம் பேசிக்கொள்வதை கவனிக்கிறான். இப்படி புதிதாய் பழகிய நேர்கோட்டு வாழ்க்கையில் அவன் தன் மானுட நினைவுகளை இழக்கத் தொடங்குகிறான்.  அவனறையில் உள்ள மேசைகளும், நாற்காலிகளும், சுவற்றில் உள்ள படமும் மட்டுமே அவனது முற்கால நினைவுகளின் சாட்சிகளாக நிற்கின்றன. அவன் நடமாட ஏதுவாக அவனறையில் இருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்ட காலம் சென்று, ஓட்டை உடைசல்கள் நிரம்பி வழியும் அறையானது.

ஒரு நாள், உள்வாடகைக்கு இருக்கும் மூவரை மகிழ்விக்க தங்கை கிரீட் நீண்டநாட்களுக்குப் பிறகு வயலின் வாசிக்கிறாள். அதைக் கேட்க பேரார்வத்துடன் வெளியே வரும் சம்சாவினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ‘உண்மையில் அது என் அண்ணனில்லை, அது ஒரு ஜந்து, என் அண்ணனாக இருந்தால் நமக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்துக்கொண்டு இங்கு இருக்க மாட்டான், இதை அழித்தாக வேண்டும்’ என்று அழுது அரற்றுகிறாள் கிரீட்.  சம்சா உயிர்வாழ எஞ்சியிருந்த இறுதி காரணமும் போயிற்று. அதுவே அவனது இறுதி இரவாகிறது.     

இந்த கதையை கிரேகரின் விழிவழியாக காண்பதற்கு பதிலாக, கிரீட்டின் வழியாக கண்டால் நாவல் மேலும் பிரம்மாண்டமாக உருகொள்கிறது. அண்ணன் மீதான பரிவு எப்படி இறுதியில் வெறுப்பாக மாறுகிறது எனும் கேள்வி முக்கியமானதாக படுகிறது. அந்த உள மாற்றம் நாவலில் மெலிதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்த கதையை மையமாகக் கொண்டு மேடை நாடகங்கள் உருவாகியுள்ளன, திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஒபேரா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன, இதன் தொடர்ச்சியாகவும், இதற்கு முந்தைய பகுதியாகவும் நாவல்களும் கதைகளும் எழுதப்பட்டுள்ளன. விமர்சனங்களும், ஆய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. இந்த கதையின் பூடகத் தன்மையின் காரணமாக பல தளத்தில் விவாதங்களை கோரும் செவ்வியல் படைப்பாக இது கருதப்படுகிறது. கிரேகர் சம்சா என்னவாக மாற்றமடைந்தான், அது எப்படிப்பட்ட உயிரினம் என்பதில் இன்றுவரை விவாதம் நீடிக்கிறது.   

இது கனவுதான் எனும் பிரக்ஞையுடன் நாம் காணும் கனவுகள் சில உண்டு. கனவினுள் நுட்பமாக மனம் கனவின் நெடியை முகர்ந்தப்படி கவனத்துடன் அதன் தடத்தில் பின்தொடரும். இந்தக் கனவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விழித்தெழ முடியும் என்று அது நம்பும். ஒருவேளை அப்படி இல்லாமலானால்? நாம் வாழும் இந்த வாழ்க்கை உண்மையில் ஒரு மீட்பற்ற பெருங்கனவாகிப் போனால்? வாசல்களற்ற ஓர் குழிந்த அறைக்குள் மனம் கற்பனைப் பித்தேறித் தன்  சுவற்றில் தீட்டிக் கொள்ளும் மாய ஓவியமாக நம் வாழ்க்கையும் இருந்தால்? காப்ஃகாவின் உருமாற்றம் (the metamorphosis) நெடுங்கனவாக, தொடர்காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், ஒருவேளை நான் காஃப்காவை சந்திக்க நேரிட்டால் அவரிடம் கேட்க எனக்கொரு கேள்வியுண்டு, அது அபத்தமாகவும், கிறுக்குத்தனமாகவும் தென்படலாம்- இந்தக் கேள்வி என்னைக் குடைந்துக் கொண்டே இருக்கிறது- ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?


The Metamorphosis
Franz kafka
ஆங்கிலம், நாவல்,

No comments:

Post a Comment