(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)
பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப் போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.
பஷீரின் பால்ய கால சகி பெண்ணின் தோழமையுடன் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவள். காலத்தால் கரைந்த அந்த சகியின் நினைவுகளை சுமந்து கொண்டு அவளுடைய சாயலையும் நிழலையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம்.. நிறைவடையாத காதல் ஒரு மகத்தான காவியம் அல்லவா? கூடலும், ஊடலும், காதலும் , பிரிவும், எழுதித் தீராத மானுட பெருங்கதை அல்லவா?
காய்த்து தொங்கும் மாங்கனிகளை பறிக்க முடியாமல் தவிக்கும் சுகறாவிற்கு அதுவரை அவளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மஜீத் உதவ முன்வரும்போது அவர்களுடைய நட்பு தொடங்குகிறது. சுகறாவின் கூரிய நக பிராண்டல்கள் தரும் அவமானத்தையும் வலியையும் தாண்டி வரத் துடித்துக்கொண்டிருக்கிறான் மஜீத். அவனுடைய ஒட்டு வீடோ, வாப்பாவின் மர வியாபாரமோ கூட சுகறாவிற்கு ஒரு பொருட்டல்ல. முசுருகளை பொருட்படுத்தாது மாமரத்தில் ஏறும் மஜீத்தின் திறமைதான் அவளை வியப்பில் ஆழ்த்துகிறது.
வானளாவிய மாளிகைகளைக் கட்டி எழுப்பும் சுல்தான் மஜீத்தின் ராஜகுமாரி சுகறாதான். ராஜகுமாரி பிராண்டக்கூடாது அல்லவா? கடிக்கவும் கூடாதே! சுகறாவின் வலிமையான ஆயுதங்களிலிருந்து மஜீத் இதைச் சொல்லித்தான் தப்புகிறான். ஒன்னும் ஒன்னும் எவ்வளவு என்று மஜீதின் ஆசிரியர் அவனிடம் கேட்கும்போது மஜீத் அதற்கு சொல்லும் பதிலே அவனது அடையாளமாக மாறிவிடுகிறது- ‘கொஞ்சம் பெரிய ஒன்னு’. ராஜகுமாரியும் கொஞ்சம் பெரிய ஒன்னும் காதல் வயப்படுகிறார்கள். பெண்ணை அடக்க முனையும் ஆணின் அகங்காரமும் அவனை ஆட்கொல்லும் பெண்ணின் திண்மையும், அவளை வெல்ல பச்சாதாபத்தைக் கையிலெடுக்கும் ஆண் எனத் தொடரும் இந்த விளையாட்டு குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கி விடுகிறது என்பதை வெகு நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பஷீர்.
கணக்கு வராத மஜீத் சுகறாவின் புண்ணியத்தில் பரிட்சையில் தேறி பட்டணத்திற்கு படிக்கப் போகிறான். படிக்க வசதியில்லாத சுகறா இலக்கின்றி மஜீத் வீடே கதி என இருக்கிறாள். வாப்பாவோடு மனஸ்தாபம் கொண்டு மஜீத் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தேசாந்திரியாக எங்கும் சுற்றித் திரிகிறான். அவனுக்கு பொருளீட்டுவதில் பெரிய ஆர்வம் இல்லை. எங்கும் ஆண் பெண் என மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்கிறான். பல ஆண்டுகளுக்கு பின்னர் சுகறாவின் நினைவுகளை சுமந்துகொண்டு வெறும் கையோடு ஊருக்கு வருகிறான். வாப்பாவின் தொழில் பொய்த்து , உடல் சுகமின்றி , குடும்பம் நொடிந்திருக்கிறது.
தங்கைகள் திருமணத்திற்கு காத்திருகின்றனர். சுகறா திருமணம் முடித்திருக்கிறாள். பிழைக்க வழியில்லாத ஊரில் உள்ள அனைவரையும் கரையேற்றவேண்டி வெளியூருக்கு வேலை தேடிப் புறப்படுகிறான் மஜீத். கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட சுகறா மஜீதைக் காண வருகிறாள். அவனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். மீண்டும் பூந்தோட்டத்தை நிர்மாணிக்கிறாள். கடுமையாக உழைத்து குடும்பத்தைக் கரையேற்றிவிட்ட பின்னர், சுகறாவைத் தான் மணந்துகொள்ள வேண்டும் என்று கனவு காண்கிறான் மஜீத். அந்தக் கனவே அவனை இயக்கும் விசையாகிறது.
ஒரு சைக்கிள் விபத்தில் சுகறா முத்தமிட்டு புண் ஆற்றிய தன் வலது காலின் பாதியை இழக்கிறான் அவன். செல்வந்தர்களிடம் உதவியை நாடுகிறான். எச்சில் பாத்திரம் கழுவி காலம் தள்ளுகிறான். அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருந்த மஜீத்திற்கு ஒரு நாள் உம்மாவின் அந்தக் கடிதம் பெரும் அதிர்ச்சியாய் வருகிறது சுகறா மரித்துவிட்டாள். அவள் தன் உடல்நலமின்மையை மஜீத்திடம் மறைத்து வைத்திருந்திருக்கிறாள்.
எல்லாமே அல்லாஹுவின் நாட்டம்.
மஜீது ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான்.
அனைத்துமே நிசப்தமாகிவிட்டதுபோல்.
பிரபஞ்சம் சூனியம்.
இல்லை...பிரபஞ்சத்திற்கு எதுவுமாகிவிடவில்லை. நகரம் இரைகிறது. சூரியன் பிரகாசிக்கிறது. காற்று வீசுகிறது.உள்ளுக்குள்ளிருந்து ரோமக்கால்கள் வழியாக மேலெழுந்த குளிர்ந்த ஆவியில் மஜீத் நனைந்துபோயிருப்பது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே ஆதரவற்றுப் போய்விட்டன. வாழ்க்கை அர்த்தமிழந்துப் போய்விட்டதா? கருணைமயமான பிரபஞ்சங்களை சிருஷ்டித்த இறைவா!
மஜீது பிழைப்பைத் தேடிச் செல்லும் முன்னர் சுகறா அவனிடம் ஏதோ ஒன்றை சொல்ல முயன்றிருக்கிறாள், மரிக்கும் முன் மஜீது வந்துவிட்டானா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் அன்பதை அறியும் மஜீத் சுகறாவின் சொல்லப்படாத வார்த்தைகளை எண்ணி ஏங்கித் தவிக்கிறான். சொற்களின் வசப்படாத உணர்வுகள் பனிக்கத்தியாக நம் நெஞ்சங்களில் பாய்கிறது.
பஷீரின் மொழியும் கதையாடலும் வெகு எளிமையானவை. இதில் அப்படி என்ன விசேஷம்? ஏன் மலையாள இலக்கிய உலகத்தில் தலை சிறந்த எழுத்தாளுமையாக பஷீர் புகழப் படுகிறார்? என்ற கேள்விகளை எழுப்பி நம்மை ஏமாற்றும் அளவிற்கு எளிமையானது அவரது நடை. அந்த எளிமையே அதன் அழகு , அதன் கம்பீரம். காதல் கதை என்பதைக் கடந்து கேரளத்து இஸ்லாமிய வாழ்க்கையையும் அதன்மீது அவருக்கிருக்கும் சிறுசிறு விமரிசனங்களையும் சேர்த்தே எழுதுகிறார் பஷீர்.
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து எழுதப்படும் புனைவு பகுதிகள் பெரும்பாலும் பெரியவர்களின் மொழியையும் காட்சியையுமே பயன்படுத்தும். அவை அதிகபிரசங்கித்தனமாகத் தென்படும் அபாயம் எப்போதுமே உண்டு. ஆனால் பஷீரின் உலகம் குழந்தையால் வரையப்பட்ட அழகான உலகம். அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பால்யத்தின் நுட்பமான நெடிகளையும், ஒலிகளையும், முகங்களையும் கண்டுணர முடியும்.
பால்ய கால சகியை வாசிக்கையில் நுள்ளலும், பிராண்டல்களும், வெகுளித்தனமும், கற்பனைக் கனவுகளும், வெள்ளந்தி மனமும் நிறைந்த நம் பால்ய நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன. எண்பது பக்கங்களில் ஒரு வாழ்க்கையை நம் முன் முழுமையாகச் சித்தரித்து காட்டுகிறார் பஷீர். தமிழில் மொழிபெயர்த்திருக்கும் குளச்சல். எம்.யூசுப் மிக இயல்பாகவும் சிறப்பாகவும் தன் பணியை செய்துள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். தவறவிடக்கூடாத மகத்தான இலக்கிய ஆக்கம் இது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
மஜீது எண்ணுவது போல்..
'இல்லை..வாழ வேண்டும்..வாழ்க்கை! கடினமும் கூர்மையும் கொண்ட வேதனைதான். இருந்தாலும் வாழ வேண்டும்'.
பால்யகால சகி
வைக்கம் முகம்மது பஷீர்
மலையாளம்- தமிழ் மொழியாக்கம்
காலச்சுவடு வெளியீடு
No comments:
Post a Comment