Thursday, June 15, 2017

இராமன் எத்தனை இராமனடி - அ.கா.பெருமாள்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

நண்பர் போகன் தன்னுடைய தளத்தில் பகிர்ந்திருந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை வாசிக்க நேர்ந்தது. ராமனை எளிய மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாக அணுகி பணிந்து வணங்கி கொண்டாடுவதற்கும், ராமன் எந்த விழுமியத்தின் சாரமாக முன்னிறுத்தப்படுகிறாரோ அதை மண்ணில் போட்டு மிதித்து அந்தப் பெயரை அடையாள அரசியலின் பகடையாட்டத்தில் பயன்படுத்துவதற்குமுள்ள வேறுபாடு மிக அதிகம். ராமனும், கர்ணனும், பீஷ்மனும், யுதிஷ்டிரனும் காலம் காலமாக கொண்டாடப்படும் மகத்தான மானுட விழுமியங்களின் உயிர் வடிவங்கள் அல்லவா? காலந்தோறும் பிறழும் மானுட மனங்களை தியாகத்தாலும் அறத்தாலும் ஈகையாலும் கருணையாலும் நீதியாலும் நெறிபடுத்தும் மாபெரும் யுகபுருஷர்கள் அல்லவா? யுகபுருஷர்கள் என்றாலும் அழுக்கும் அழகும் இணைந்த நம்மைப்போன்ற மனிதர்கள்தானே அவர்களும்.  





மானுட மனம் இதிகாசம் எனும் தொடர்வண்டியில் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுபுது பெட்டிகளை இணைத்து அதை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. முனை புலப்படாத வேர் போல அவை நம் ஆழத்தில் வேர்விட்டு கிளைபிரிந்து அகன்று வளர்ந்துக்கொண்டே போகிறது. ராமனும் ராமனுடைய கதையும் மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்களின் நனவிலியில் எங்கோ ஒரு மூலையில், தூரத்து புகைமூட்டமாக, ஒரு நினைவெச்சமாக இருந்து கொண்டேதானிருக்கும்.

காலச்சுவடு வெளியிட்டுள்ள முனைவர் அ.கா பெருமாளின் 'இராமன் எத்தனை இராமனடி' எனும் இந்த நூல், உலகெங்கும் விரவிக் கிடக்கும் வெவ்வேறு ராம கதைகளையும் தொன்மங்களையும், நாட்டாரியல் கூறுகளையும் சுவாரசியமாக, எளிமையான நடையில், தகவல் செறிவுடனும் உரிய தரவுகளுடனும் அளிக்கும் அற்புதமான நூல். 

இரண்டு பகுதிகள் கொண்ட இந்த நூல், முதல் பகுதியில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் புழங்கும் ராமாயண வடிவங்களைப் பேசுகிறது. இரண்டாவது பகுதியில் செவ்வியல் ஆக்கங்களில் இல்லாத, வாய்மொழி மரபாக சொல்லப்பட்டு புழக்கத்தில் இருக்கும் வெவ்வேறு ராமாயண கதைகளைப் பேசுகிறது. புத்தகத்தில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் ராமாயண நிகழ்வுகளின் பண்டையகால ஓவிய மாதிரிகள் அந்த ஓவியம் குறிக்கும் நிகழ்வைப் பற்றிய அடிக்குறிப்புடன் இடம்பெற்றுள்ளது நூலிற்கு ஒரு செவ்வியல் தன்மையை அளிக்கிறது. பின்னிணைப்பாக, தமிழக கோவில்களில் உள்ள வெவ்வேறு ராமாயண சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் பட்டியலையும், ராமாயண கதை இடம்பெற்றுள்ள புராணங்களின் பட்டியலையும், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் உள்ள வெவ்வேறு ராமாயண நூல்களின் பட்டியலையும் அளித்துள்ளார் முனைவர் அ.கா.பெருமாள்.

சங்ககாலத்தில் இருந்தே ராமாயண கதையும் வால்மீகி எனும் பெயரும் தமிழில் வாய்மொழியாகப் புழங்கியதற்கு சிலச் சான்றுகளை அளிக்கிறார் பெருமாள். வடமொழியில், ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளில் தசரதன், ராமன், சீதை போன்றவற்றையொத்த பெயர்கள் காணக்கிடைக்கின்றன. நற்றிணை, மணிமேகலை, ஆழ்வார் பாடல்கள், நாயன்மார் பாடல்கள், பல்லவ சிற்பங்கள், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் என வெவ்வேறு காலகட்டங்களின் ஊடாக ராம வழிபாடு தமிழகத்தில் அடைந்த பரிணாமத்தை விளக்குகிறார். சிவன் கோவில்களில் ராமன் வணங்கப்பட்டதற்கான சான்றுகள் நாயன்மார்களின் பாடல்களிலும், சிவன் கோவில் சிற்பங்களிலும், கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கிறது என்பது சைவ வைணவ பாகுபாடுகளுக்கு அப்பால் ராமன் எவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதற்குச் சான்றாகும். அதைவிட மிக சுவராசியமானது, ஜைன ராமாயணம். அதில், ராவணன் அருகர்களை வணங்கும் சமணராகச் சித்தரிக்கப்படுகிறார். வாலி மிக உயர்ந்த ஜைன துறவியாகச் சித்தரிக்கப்படுகிறார். கைலாயத்தை ராவணன் தூக்கும் நிகழ்ச்சி இங்கும் சொல்லப்படுகிறது, ஆனால் அங்கு வசிப்பவர் ஈசன் அல்ல, வாலி. வாலி தன் பெருவிரலால் கைலாயத்தை அழுத்தி ராவணனின் அகந்தையைப் போக்குகிறார்.

வால்மீகி ராமாயணம் போன்ற செவ்வியல் ஆக்கங்கள் விட்டுச்செல்லும் பூடகமான இடைவெளியை, அல்லது தர்க்கத்துக்கு சிக்காத நிகழ்வுகளை இட்டு நிரப்பும் விதமாக, தர்க்கப்பூர்வ விளக்கம் அளிக்கும் வகையில் நாட்டார் கதைகள் சொல்லப்படுகின்றன என்ற எண்ணம் இந்த நூலை வாசிக்கையில் தோன்றுகிறது. உத்தர ராமாயணம், சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புதல், கூனியின் வஞ்சத்துக்கான காரணம், சூர்ப்பனகையின் வரலாறு, சீதையின் பிறப்பு ரகசியம், வாலிவதைக்கான காரணம்- போன்றவைகளை பற்றிய வெவ்வேறு கதைகள் காணக்கிடைப்பது இதனால்தானோ என்ற எண்ணம் வருகிறது. வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்குமே ஒரு மாற்று நிகழ்வு வெவ்வேறு ராமாயணங்களில் இருக்கக்கூடும் என்கிறார் பெருமாள். 

வெவ்வேறு வட்டாரங்களில் புழங்கும் மாற்று கதை வடிவங்கள் பிரத்யேகமாக அவ்வட்டாரத்திற்கு உரியதாக இருப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது அப்பகுதிவாழ் மனிதர்களின் வரலாறை அறிய ஒரு கருவியாகப் பயன்படும். சுழிந்தோடும் பெரு நதியிலிருந்து வயலுக்குள் வாய்க்கால் வழியாக உட்புகும் நநதிநீர் போல் ராமாயணம் எனும் ஒற்றைக் கதைப்பரப்பிலிருந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் புதிது புதிதாக கதைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு காப்பிய பாத்திரங்களும் வெவ்வேறு ராமாயணத்தில் கொள்ளும் வடிவங்களைக் கூர்ந்து அவதானிப்பது சுவாரசியமான அனுபவம். மலேசிய வாய்மொழி ராமாயணத்தில் ராமன் சாதாரண தலைவனாகவும், லட்சுமணன் பெரும் தியாகியாகவும் வீரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ராமனைக் காட்டிலும் பெரும் தியாகி உண்மையில் லட்சுமணன்தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு, ராமனுக்காவது உடன் மனைவி சீதா வந்தார். 

சிங்களர்களின் ராமாயணத்தில் விபீடணன் உத்பவ வர்ணா எனும் பெயரில் அவர்கள் வழிபடும் கடவுளாக வணங்கப்படுகிறார். பர்மிய ராமாயணத்தில் ராமன் ஒரு போதிசத்துவனாக அறியப்படுகிறான். திபெத்திய வாய்மொழி ராமாயணத்தில் தசரதனுக்கு ராமன் இலக்குவன் என இரண்டு பிள்ளைகள் மட்டுமே உண்டு. ராமன் தானாகவே ராஜ்ஜியத்தை இலக்குவனிடம் மனமுவந்து ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் செல்கிறான், அங்கு சீதையை சந்தித்து மணக்கிறான். பங்களாதேஷில் புழங்கும் வாய்மொழி மரபில், ராம-லக்ஷ்மணர்களின் மனைவியாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஜீன ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மகளையும் வேறு சில பெண்களையும் மணக்கிறான் அனுமன். நாரதரும், ராவணனும் பலி கொடுத்து வேள்வி வளர்க்கும் பிராமணர்களை ஜீன ராமாயணத்தில் எதிர்க்கிறார்கள். சமண ராமாயணத்தில் ராமனுக்கு எட்டாயிரம் மனைவிகள், இலக்குவனுக்கு பதினாறாயிரம் மனைவிகள். அதைவிட ராமன் மரித்துவிட்டான் எனும் பொய் செய்தியை கேட்டு இலக்குவன் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இராமாயணத்தை நிகழ்த்தி காட்டுவதற்கு என்றே உருவான கலை வடிவமாக தோல்பாவை கூத்து உருவானது. தோல்பாவை கூத்தை பற்றி மிக விரிவாகவே பதிவு செய்துள்ளார் பெருமாள். அது வால்மீகி மற்றும் கம்பனிடமிருந்து வேறுபடும் புள்ளிகளையும் அடையாளப்படுத்துகிறார். சிவனிடம் வரம் வாங்கி ராவணனை கோனார் வேடத்தில் வந்து கண்ணன் குழப்புகிறார் என்றொரு நிகழ்ச்சி இந்தக் கூத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் அகலிகையை அடைய கௌதமரும் இந்திரனும் ஆசைப்பட்டனர், தேவர்களின் முன்னிலையில் அவர்களுக்கிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. எவரொருவர் தண்ணீருக்குள் முழ்கி பதினான்கு வருடம் கழிக்கிறாரோ அவருக்கே அகலிகை என்று முடிவானது. இந்திரன் தாக்குபிடிக்க முடியாமல் பாதியில் வெளியேறிவிடுகிறான். சீதையும் ராமனும் சொக்கட்டான் விளையாடும்போது மாய மான் அவர்கள் பார்வையில் படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து தூக்கி எறிந்த சஞ்சீவி மலையின் ஒரு துண்டுதான் கன்னியாகுமரி அருகே இருக்கும் மருத்துவாழ் மலை என்று நம்பப்படுகிறது (இந்த மலைக்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன், வழுக்கு பாறைகள் உருண்டு திரண்ட மலை) இது போன்ற கூற்றுகள் கதைக்கு ஒரு நெருக்கத்தை கொடுப்பதாகவே இருக்கின்றன. 

இந்திய ஞான மரபு, காலத்தை ஒரு சக்கரமாக, சுழற்சியாக உருவகிக்கிறது. யுகம் யுகமாக நிகழ்ந்தவையே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன எனும் நம்பிக்கை ஆழமாக விதைக்கப்படுகிறது. ராமாயண நாட்டாரியல் கதைகளில் இந்த போக்கு சில கதைகளில் தென்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்ச பேரியக்கத்தின் அளவிலா பிரம்மாண்டத்தின் மீதான பெருவியப்பாக இக்கதைகளை நாம் உணர முடியும். விஸ்வாமித்திரன் தசரதனிடம் ராமனைத் தன்னுடன் அனுப்பச்சொல்லி கேட்கும்போது, தசரதன் தயங்குகிறான். விஸ்வாமித்திரன், "ராமன் ஜனிப்பான், அவன் தாடகையை அழிப்பான் என்று சிந்தாமணி பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால் அனுப்பு." என்கிறான். சீதையின் கணையாழியைக் கொண்டுவரும் அனுமன் ஒரு ரிஷியிடம் அதைத் தந்துவிட்டு இளைப்பாறுகிறான். ரிஷி அதை ஒரு கமண்டலத்தில் போடுகிறார். மீண்டும் புறப்பட யத்தனிக்கும் சமயத்தில் கமண்டலத்தைக் கவிழ்த்தால் அதில் ராமநாமம் எழுதப்பட்ட அனேக கணையாழிகள் கிடக்கின்றன. இதில் எது தன்னுடைய கணையாழி என்று குழம்புகிறான் அனுமன். அந்த முனியிடம் எது தன்னுடைய கணையாழி என்று வினவும்போது, “எத்தனையோ ராமன்களும், சீதைகளும் அனுமன்களும் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள், அதில் எந்த கணையாழி எந்த சீதையுடையது என்பதை யாரறிவர்” என்கிறார்.

பாதாள இலங்கையை ஆளும் ராவணனின் ஒன்றுவிட்ட தம்பியான மயில்ராவணனை அழித்து ராம லட்சுமணர்களை அனுமன் மீட்கும் கதை ஒரு அபாரமான ஃபேண்டஸி அனுபவம். அங்கு அனுமன் சந்திக்கும், அவனே அறியாத அவனுடைய மகன் மச்சவல்லபன், தந்தைக்கும் தலைவனுக்கும் இடையில் முடிவெடுக்கத் தயங்கும் மனப்போராட்டம் ஒரு அற்புதமான புனைவு தருணம். மாய எதார்த்தவாதம் போன்ற பின் நவீனத்துவ பட்டிகள் இந்திய செவ்வியல் ஆக்கங்களுடன் பொருத்திப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. இக்கதைகளை வாசிக்கும்போது இதில் நிறைந்து கிடக்கும் புனைவு தருணங்களும், மேலும் விரித்தெழுத உள்ள சாத்தியக்கூறுகளும் அபாரமானவை எனும் எண்ணம் தோன்றியது. எந்த ஒரு புனைவாசிரியனும் தவற விடக்கூடாத படைப்பாகவே இதை நான் பார்க்கிறேன். சூர்ப்பனகை தன் கணவனை அழித்த ராவணனையும் தன் மகன் செம்பகாசுரனைக் கொன்ற இலக்குவனையும் தன்னை புறக்கணித்த ராமனையும் ஒருசேர பழிவாங்கும் கதையே ராமாயணம் என்று முற்றிலும் வேறோர் புதிய கோணத்தில் இந்த ராமாயணத்தை அணுக முடியும்.

அற்புதமான இந்த நூலில் குறையென்று ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் - ‘கூறியது கூறல்’ போல் சில பகுதிகள் திரும்ப திரும்ப தென்படுவதுதான் அது. இதிலுள்ள தோல்பாவை கூத்து சார்ந்த பகுதி பெருமாள் அவர்கள் எழுதி இன்று மறுபதிப்பு காணாத வேறோர் நூலின் பகுதிகளை அப்படியே கையாண்டிருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.

இந்திய பெருநிலத்தின் வெவ்வேறு நிலபரப்பில் மக்கள் சொல்வதற்கு ஒரு ராமாயண கதை இருக்கிறது. இங்கு சீதை தங்கினார், இங்கு ஜடாயு வந்தார், இங்கு மான் வந்தது என்பது போன்று. கண்ணுக்குத் தெரியாத இந்த பண்பாட்டு நூல் இந்த நிலத்து மக்களை பின்னி பிணைக்கிறது என்று தோன்றுகிறது.  இந்த நூலை வாசித்து முடிக்கையில் ‘விஷ்ணுபுரத்தில்’ வரும் ஒருவரி நினைவில் உதித்தது “கதைகள்தான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் எத்தனை மகத்தானவை!”



-சுகி

இராமன் எத்தனை இராமனடி

பேராசிரியர்.அ.கா.பெருமாள்

தமிழ், நாட்டாரியல், அபுனைவு, வரலாறு,

காலச்சுவடு வெளியீடு

No comments:

Post a Comment