புத்தகங்கள்

Pages

Thursday, June 1, 2017

இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள் - தரம்பால்

(ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரை)

காந்தியரும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால் சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.  பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முன்பான இந்தியாவின் நில மேலாண்மை, நீர் மேலாண்மை, கல்வி முறை, பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும் என பல்வகைப்பட்ட ஆய்வுகளைத் தீர்க்கமாக மேற்கொண்டு, வெவ்வேறு நூல்களாகத் தன் ஆய்வு முடிவுகளை வெளிக்கொணர்ந்தார். அவ்வரிசையில் Civil Disobedience in Indian Tradition (இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள்) எனும் நூல் மிக முக்கியமான ஆய்வு நூல்.






ஜெயப்ரகாஷ் நாராயண் எழுதியிருக்கும் முன்னுரை முக்கியமானது. பொருளியல் ரீதியாகவும், அறிவார்த்தமாகவும், தார்மீகமாவும் ஐரோப்பியர்களைக் காட்டிலும் மிகக் கீழனாவர்கள் நாம் என்பதே நமக்கு ஆங்கிலேய ஆட்சியின்போது மீண்டும் மீண்டும் உணர்த்தப்பட்டது. காலப்போக்கில், இந்திய மனம் மெய்ம்மைக்கு தொடர்பில்லாத இந்த தெளிவற்ற உருவத்தைத் தனது அசல் உருவமாக கேள்வியின்றி நம்பி ஏற்றுக் கொண்டது.  மாற்று கலாசாரம் குறித்த புரிதலின்மையும்கூட இந்நிலைக்குக் காரணம் என்று கொள்ளலாம். வெவ்வேறு வகையில் இக்கருத்தியல் புகுத்தப் பெற்று நிலைநிறுத்தப்பட்டது. இதுவே ஆங்கிலேயர்களின் மிக முக்கியமான வெற்றி. தன்னம்பிக்கையற்ற சமூகத்தை முட்டாள் மந்தைகளாகக் கருதி, அவர்களை வழிநடத்த வந்த மேய்ப்பர்கள் ஆயினர் ஆங்கிலேயர்கள். தம் மீட்சியை நோக்கிச் செல்வதாய் நம்பிய ஜீவன்களுக்கு தாங்கள் கசாப்புக் கடைக்கு அழைத்துச் செல்லப்படுவது புரியவே இல்லை. தன் அழிவையும் சுரண்டலையும் உணர்ந்தாலும்கூட அந்நிலை கடந்த காலத்திய தவறினாலும்,அறிவின்மை எனும் கீழ்மையினாலும் ஏற்பட்ட நிர்கதி என்றே கருதியது இந்திய மனம்.  கீழ்ப்படியாமை அல்ல, கேள்வியின்றி கீழ்படிதலே நம் தலையாய பிரச்சனை.

முன்னோர்களுக்கு வரலாற்று பிரக்ஞை இல்லாததே இச்சிக்கல்களுக்கு மூல காரணம் என்று கூறும் ஜெ.பி, நம் முன்னோர்கள் வரலாற்றை எளிதில் புராணமயமாக்கி விடுகிறார்கள் என்கிறார். வாய்வழி வரலாற்றைப் பேணும் வழிமுறையில் இத்தகைய கூறுகள் தவிர்க்க முடியாதவை. எழுத்தில் வரலாற்றை பதிவு செய்யும் பழக்கம் நமக்கு குறைவு என்பதே இதன் காரணம். எழுத்தாளர் ஜெயமோகனின் அண்மைய திருப்பூர் உரையில் இத்தகைய ஒரு வாதத்தையே அவரும் முன்வைக்கிறார். நாம் வரலாரற்றவர்கள் அல்ல,வரலாறை மறந்தவர்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி வேர்விடத் துவங்கியபோது இந்தியாவை ஆண்ட மன்னர்களின் நடத்தைகளை மட்டும் கணக்கில் கொண்டால், வழிவழியாக அவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வருபவர்களாகவும் மக்கள் அவர்களுக்கு அஞ்சி அப்படியே தங்களை ஒப்புக் கொடுத்தவர்களாகவும் தென்படக்கூடும். ஆனால் உண்மையில், தங்களுக்கு விருப்பமில்லாத மன்னர்களை அகற்றும் அதிகாரம் மக்களுக்கு இருந்தது. ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையில் ஒருவித தொடர் உரையாடலாக எழுதப்படாத விதிகள் சில இயங்குகின்றன. அறமின்மையின் எல்லையை ஆள்பவர்கள் தொடும்போது மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை அமைதியாகப் பதிவு செய்கின்றனர், மன்னர்கள் தர்மத்திற்கு கட்டுண்டவர்கள் என்று நம்பியதால். இத்தகைய மக்கள் எதிர்ப்பை சட்டத்திற்கு புறம்பானதாக எண்ணி அடக்குமுறையைக் கொண்டு எதிர்கொள்வதற்கு மாறாக பேச்சுவார்த்தைக்கு தங்கள் கதவுகளை திறந்து வைத்தார்கள் .

பாட்னா, பனாரஸ், சருன், பௌல்பூர், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் 1800-களின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கங்களை விவரிக்கிறார் தரம்பால். ஆங்கிலேயர்கள் சேகரித்த ஆவண தொகுப்புகளிலிருந்து தனக்குத் தேவையான தகவல்களை திரட்டிப் பெற்று இந்நூலை உருவாகியிருக்கிறார். ஒரு நூறு வருடங்களுக்கு பின்னர் காந்தியின் தலைமையில் நடைபெற்ற ஒத்துழையாமை போராட்டங்களின் விவரணைகளை ஒத்ததாகவே அக்கால நிகழ்வுகளும் இருக்கின்றன என்கிறார் தரம்பால். காந்திய காலகட்டத்துக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஒத்துழையாமை போராட்டங்களில் துல்லியமாக ஆவணப்படுத்தப் பட்டுள்ள போராட்டம் இது மட்டுமே என்பதால் இவை கூடுதல் கவனம் கோருகின்றன.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைகூட இத்தகைய தொடர் ஊடாட்டங்கள் வழியாக மக்கள் விரோத அரசை எதிர்க்கும் ஒரு வழிமுறை இங்கு இருந்திருக்க வேண்டும். அதுவே காந்தியின் காலத்தில் அறப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டும். மன்னர் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த போது அவர்களின் அறமின்மையையும் மக்கள் இதே வழிமுறையைக் கொண்டு அமைதியாக எதிர்த்தனர். ஆனால் இந்த மரபை ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதன் காரனமகாவே அக்காலத்தில் இவ்வகையிலான அனைத்து போராட்டங்களுமே தோல்வியில்தான் முடிந்தன என்கிறார் தரம்பால்.  சின்னச் சின்ன எதிர்ப்புகள்கூட அவர்களை அமைதியிழக்கச் செய்திருக்க வேண்டும், பாதுகாப்பின்மையை உணர்த்தியிருக்க வேண்டும் என்கிறார் தரம்பால். ஆகவே கடுமையான அடக்குமுறையைக் கொண்டே அவர்கள் இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள் என்பது புலனாகிறது. கேள்விகளற்று கீழ்படிதல் எனும் நிலையை அடையும்வரை ஆங்கிலேயரின் வன்முறை நிற்கவில்லை. இதுவே பல காலமாக உயிர்த்திருந்த ஆன்மீக அரசியல் மரபை முடிவுக்கு கொண்டு வந்தது.

தரம்பால் 1965 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆவணங்களை ஆய்வு செய்துகொண்டிருந்த பொழுதில் 1874 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ‘தக்கான கலகம்’ குறித்தான பதிவுகளை வாசிக்கிறார். கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு கந்து வட்டிக்காரர்களை அகிம்சை வழியில் எதிர்கொள்ளும் நிகழ்வை அது விவரிக்கிறது. மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பல புதிய தகவல்களைப் பெறுகிறார். தன்னுடைய வியப்பைப் பதிவு செய்யும் தரம்பால், அதுவரை பிறரைப்போல் தானும் காந்தியின் வழிமுறைகள் தால்ஸ்தாய், தொரோ, ரஸ்கினின் எழுத்துகளால் உந்தப்பட்டு காந்தி புதிதாக உருவாக்கிக் கொண்டவை என்றே கருதியதாகச் சொல்கிறார்.

அதன் பின்னரே காந்தி இவை குறித்து எழுதியவற்றை தேடி வாசிக்க தொடங்கினார். ‘இந்தியா ஒரு தேசமாக பெரும்பாலான தருணங்களில் அகிம்சை வழியிலான ஒத்துழையாமையை அனைத்து தளங்களிலும்  பயன்படுத்தியிருக்கிறது’ எனும் காந்தியின் மேற்கோளை யாரும் அத்தனை அக்கறையுடன் அணுகவில்லை. இந்தியாவின் கடந்த காலத்தை விதந்தோதும் ஒரு வரியாக பெரும்பாலான ஆய்வாளர்கள் எண்ணினர்.
.
இந்திய மரபில் நெடுங்காலமாகவே தர்ணா, ஹர்த்தால், நாடு துறத்தல் போன்றவை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் அவை பெரும்பாலும் தனிமனிதரின் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்யவே பயன்பட்டன. ஒரு சமூக தளத்தில், ஒரு அநீதியை அனைவரும் இணைந்து எதிர்க்கும் தன்மை இவைகளில் காணப்படவில்லை. தனிமனித அளவில் செல்லுபடியான அறப் போராட்ட வழிமுறைகளை சமூக தளத்தில் புகுத்தி, அதன் உச்சகட்ட சாத்தியங்களை நோக்கி இட்டுசென்றது காந்தியின் தனித்துவமான பங்களிப்பு என்று ஆய்வாளார் ஆர்.ஆர். திவாகர் முன்வைக்கிறார்.

'‘சரியோ தவறோ, நாம் சட்டத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கருத்து மட்டுமே. கடந்த காலங்களில் அப்படி எதுவும் இருந்தது கிடையாது. தங்களுக்கு ஏற்புடையதல்ல எனக் கருதிய சட்டங்களை மக்கள் புறக்கணித்தனர்.’ என்று எழுதுகிறார் காந்தி. இந்தியாவில் அகிம்சை ரீதியிலான எதிர்ப்பு முறை அனைத்து தளங்களிலும் செல்லுபடியானது எனக் கூறும் காந்தி, அதற்கு அவரறிந்த உதாரணத்தை விளக்குகிறார். ஒரு சிற்றரசர் விதித்த கடுமையான சட்டங்களுக்கு எதிராக மக்கள்'தேச தியாகத்தில்' ஈடுபட்டனர். தேச தியாகம் என்பது வசிப்பிடத்தை அப்படியே விட்டுவிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வேறோர் தேசத்திற்கு செல்வது.

காந்தி முழுமையாக நம் மரபிலிருந்தே இவ்வழிமுறைகளைக் கடன்பெற்று கையாண்டார் என்பதும் இதன் பொருளல்ல. வேறு வகையில் சொல்வதானால், அவர் வழியே இப்போராட்ட முறைகள் புதிய உருவத்தில் வெளிப்பட்டன என்பதே உண்மை. ஐரோப்பிய, அமெரிக்க உதாரணங்கள் அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டுமானால் உதவியிருக்கக்கூடும். அகிம்சைப் போராட்டங்கள் இந்திய மண்ணில் பிரம்மாண்டமாக உருபெற்று வெற்றி பெற இப்போராட்டங்களின் மரபுப் பின்புலம் மிக முக்கிய காரணி.


பிரித்தானிய அரசின் வழிகாட்டுதலின் படி வங்காள ராஜதானியில் புதிய வரிகள் விதிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டன. வங்காளம், பனாரஸ், ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு இவ்வரிகள் பொருந்தும்.   அப்படி விதிக்கப்பட்ட வரிகளில் ஒன்று தான் வீட்டு வரி மற்றும் கடைகள் மீதான வரி. வசூலிக்கப்படும் வரியில் கலெக்டருக்கு ஐந்து சதவிதம் கமிஷன் வேறு உண்டு. தரம்பாலின் இந்தக் கூற்றை வாசித்தவுடன் இந்திய அரசாங்க நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊற்றுக்கண் எங்குள்ளது என்பது ஓரளவிற்கு பிடிபடுகிறது. வசூலிக்கப்படும் வரியில் கமிஷன் என்பது ஒரு அராஜகமான நடைமுறையாக, ஊழலை அரசே ஊக்குவிக்கும் முயற்சியாக எனக்கு படுகிறது. இந்த நிர்வாக அமைப்பினில் ஊழலுக்கான இடைவெளி வேண்டுமென்றே விடப்பட்டுள்ளதாகவே எண்ணுகிறேன்.

இந்தவரி சொற்ப நிதியை தான் சேர்க்கும், ஆனால் சிக்கல் அதுவல்ல,  வேறு எத்தனையோ வரிகளால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த வரி விதிப்பு மேலும் சுமையை அதிகரித்திருக்க வேண்டும். அதுவே அவர்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய காரணமாயிருக்க வேண்டும் என்கிறார் தரம்பால். மேலும் வீட்டு வரியை காட்டிலும் அதிக தொகை உள்ள வரிகளை அவர்கள் செலுத்தி வந்தது அன்றைய நிதர்சனம். ஆனால் கொள்கை ரீதியாக இந்த வரி அநீதியானது என்பதாலே அவர்கள் எதிர்த்தார்கள். ஆகவே இந்த எதிர்ப்பை அத்தனை எளிதில் சமாதானப் படுத்திவிட முடியாது என்று எழுதுகிறார் வாரனாசி மேஜிஸ்ட்ரேட்.

தரம்பால் ஆங்கிலேயர்களின் ஆதாரபூர்வ ஆவணங்களைக் கொண்டு நிகழ்வுகளை மீள் கட்டமைப்பு செய்கிறார். ஓரளவிற்கு துல்லியமாக நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருந்தாலும், பொதுமக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தவிர்த்து, மக்களின் தரப்பை பேசும் வேறு எந்த ஆவணங்களும் கிடைக்கப்பெறவில்லை. காந்திய காலத்து ஒத்துழையாமை போராட்டங்களைப் பற்றிய ஆங்கிலேய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஒரு தரப்பு எனில், இந்திய நாளேடுகள் மக்களின் தரப்பை பதிவு செய்தன. இவ்விரண்டு தரப்புகளின் இணைப்புள்ளியில் வாசிக்கப்படும் வரலாறே ஒட்டுமொத்த சித்திரத்தை நமக்கு அளிக்கவல்லது. 

வாரனாசி மக்களின் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட மனுவின் பகுதிகளை வாசிக்கும்போது அவர்களுடைய கோரிக்கை என்னவாக இருந்தது என்பது தெளிவாக புரிகிறது. அந்த மனுவில் மக்களின் தரப்பு வாதமாகச் சொல்லப்பட்ட சில கருத்துக்களின் தர்க்கமும் நியாயமும் தெளிவும்  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

முந்தைய ஆட்சியர்கள் சொத்து விற்பனைக்கு வரி வசூலித்தனரே அன்றி எவரும் வசிப்பிடத்திற்காக வரி வசூல் செய்ததில்லை, எனவே இது அநீதியானது. காவல் துறையின் நிர்வாக செலவுக்கே இவ்வரி வசூலிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது, ஆனால் நிலவரி உட்பட வேறு பல வரிகளின் வழியாக ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு அவர்களின் நிர்வாக செலவுகளை மேலாண்மை செய்து வரும்போது, புதிய வரிக்கான அவசியம்தான் என்ன? மேலும் மத முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு தலங்களுக்கு இவ்வரி பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரனாசி தொன்றுதொட்டு ஒரு ஆன்மீக மையமாகத் திகழ்ந்து வருவதைக் கணக்கில் கொண்டு இவ்வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். சிதிலமடைத்த தங்கள் இல்லங்களைக்கூட சீரமைக்க முடியாமல் தடுமாறி வரும் மக்களே இங்கு அதிகம் எனும்போது, அவர்களால் வரி எப்படி வழங்க இயலும்? புதிய புதிய வரிகள் விதிக்கபட்டதாலும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரிகள் அதிகப்படுத்தப்பட்டதாலும் கடந்த பத்தாண்டுகளில் அரிசி உட்பட தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை பதினாறு மடங்கு உயர்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், வருமானப் பெருக்கத்திற்கு வழியில்லாத சூழலில் இத்தகைய வரிவிதிப்புகள் நியாயமன்று.   

‘நாங்கள் வேறு யாரிடம் சென்று முறையிட முடியும்? இவ்வரிகளை விதித்த உங்களையன்றி நாங்கள் யாரை அணுகிட முடியும்’ என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நம் மரபில் உதித்த முறை. மன்னன் தம் நாட்டு மக்களுக்கு தந்தையைப் போல் இருக்கவேண்டும் என்பதே நம் நெடுங்கால வழக்கம். ஆனால் இந்தக் குரல் அவர்களுக்கு பிடிபடவில்லை. நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்கச் சொன்ன காரணம் மிக வேடிக்கையானது. இம்மனுவில் உள்ள விஷயங்களும் அதன் தோனியும் அவமரியாதை செய்வதாக இருக்கிறது எனக் காரணம் காட்டி தள்ளுபடி செய்தது. 

 மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடையடைப்பு நடத்தினர். அனைத்து செயல்பாடுகளும் முடங்கின. எந்த அளவிற்கு என்றால் “ வாரணாசியில் மரணமடைந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்குகூட ஆளின்றி, பிணங்கள் கங்கையில் கவனிப்பாரின்றி மிதந்து செல்கின்றன.” (மேஜிஸ்ட்ரேட் எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்பு). கங்கை நதியில் இக்கரைக்கும் மறுகரைக்கும் படகோட்டி பிழைப்பு நடத்திய முல்லாக்கள்கூட முழுமையாக தங்கள் தொழிலை நிறுத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தனர்.

ஒரு கணக்கெடுப்பின்படி 200,000த்திற்கும் அதிகமான மக்கள் ஒரேயிடத்தில் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை பெருகியப் படியே இருந்தது. வரி விதிப்பை அரசு திரும்பப் பெறும்வரை அங்கிருந்து கலைவதில்லை என அவர்கள் உறுதிப் பூண்டிருந்தனர்.  

போராட்டத்தில் பங்குகொண்ட மக்கள் தொழில் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் ஒருங்கிணைந்தனர். உதாரணமாக லோகர் ( இரும்பு ஆசாரி) மக்கள் அன்று வலிமை பொருந்தியவர்களாக திகழ்ந்தனர். வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த லோகர்களை போராட்டத்திற்காக ஒன்றிணைக்க அவர்களால் முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் பெரும் தலைவலியாக இருந்தார்கள்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரதிநிதிகளை அனுப்ப போராட்டக் குழு முடிவு செய்தது. அவர்கள் போராட்டத்தின் செய்தியை கொண்டு சேர்த்து போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க முயன்றனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவரேனும் வாரணாசிக்கு வந்து போராட்டத்தில் பங்குபெறவேண்டும் எனக் கோரினர்.

பரவலாக சமூகத்தின் அனைத்து அடுக்குகளில் இருந்தும் போராட்டத்தில் பங்குகொண்டனர். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப நிதியளித்து போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். தினக் கூலியை நம்பி குடும்பம் நடத்துபவர்களின் குடும்ப செலவுகளைகூட அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

ஆயுதம் அற்ற போராட்ட முறையை அவர்கள் தேர்வு செய்ததைப் பற்றி கலெக்டர் எழுதும் குறிப்பு முக்கியமானது. ‘நேரடி வன்முறை அவர்களுடைய குறிக்கோளாக இல்லை. ஆயுதமற்று போராடுவதே தங்களுக்கு பாதுகாப்பானது என்று அவர்கள் கருதினார்கள், ஏனெனில் நிராயுதபாணிகள் மீது ராணுவம் கொடிய ஆயுதங்களைக் கொண்டு நிச்சயம் தாக்குதல் நடத்தாது. இந்த நம்பிக்கையில் அவர்கள் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றனர். சிவில் நிர்வாக அமைப்பினால் அவர்களை அப்புறப்படுத்தும் அளவுக்கு திராணி இல்லை என்பதினாலும், ராணுவம் நிச்சயம் பயன்படுத்தப்பட மாட்டாது எனும் நம்பிக்கையினாலும் அவர்கள் கூடுகின்றனர்’.

மரபாக மக்கள் ஆளும் தரப்பிற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறை வேறு. அறச்சார்புகள் கொண்ட ஆங்கிலேயர்களிடம் செல்லுபடியாகவில்லை என்பதை மக்கள் மெல்ல உணரத்தொடங்கினர் என்கிறார் தரம்பால். இவ்வுணர்வு இரு விளைவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒன்று மரபான வழிமுறையில் நம்பிக்கை இழந்ததால் அதிக வன்முறை வெளிப்பட்டிருக்க வேண்டும். மற்றொன்று எதிர்ப்புணர்வு மெல்ல மங்கி, அனைத்து அநீதிகளுக்கும் கீழ்படிந்து செல்லும் போக்கு வலுபெற்றிருக்க வேண்டும். அதிகமும் இரண்டாவது விளைவே நேர்ந்தது.

வாரணாசியில் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது. மக்களின் ஒற்றுமை போராட்டத்தை வங்காள ராஜதானியின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்றது. பாட்னாவிலும், சருனிலும், முர்ஷிதாபாதிலும், பாகல்பூரிலும் போராட்டம் பரவியது. போராட்டம் எந்த அளவிற்கு உக்கிரமாக இருந்தது என்றால் போராட்டத்தில் பங்குபெறாதவர்களுக்கு மக்கள் கூட்டமைப்பு அபாரதம் விதித்தது. ஆதரவு அளிக்காதவர்களை சாதியிலிருந்து தள்ளிவைப்பது கூட நிகழ்ந்ததாக வாரனாசி மேஜிஸ்ட்ரேட் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் பதிவு செய்கிறார்.

இந்த சூழலில், ஆங்கிலேய அரசு இந்தப் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தது? முதல் கட்டமாக ஆங்கிலேய அரசாங்கம் வாரனாசியின் மன்னருக்கும், ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கும் ஊர் திரும்பி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. அவர்கள் மூலம் மக்களை சமாதனம் அடைய செய்வதே அவர்களுடைய திட்டமாக இருந்தது. அடுத்ததாக போராட்டத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்து தீவிர தண்டனை வழங்கினர். அடுத்ததாக படகுகளை விட்டுவிட்டு போராட்டத்தில் பங்குகொண்ட முல்லாக்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேஜிஸ்ட்ரேட் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். படகுத்துறையில் காலியாக கிடக்கும் படகுகளை அரசு  பறிமுதல் செய்யும் என்றவுடன் மெதுவாக அவர்கள் பணிக்கு வேறுவழியின்றி திரும்பினர். மேலும் மக்கள் நாளடைவில் சோர்வடைந்தனர். தாங்கள் கலைந்து சென்று வீடு திரும்பினால் அன்றி அரசு இவ்விகாரத்தில் தலையிடாது என்பதை மெல்ல உணர்ந்தனர்.

சட்டவிரோத கூடுகைகள் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிர்பந்தம் மூலம் பணிய வைக்க முடியும் எனும் உணர்வை மக்களுக்கு  ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் ஆங்கிலேய அரசு மிக கவனமாக இருந்தது. மக்கள் பூரணமாக தங்கள் தவறை உணர்ந்து போராட்டத்தை முற்றிலுமாக கைவிட்டு பரிபூரணமாக சரணாகதி அடையும் வரை அவர்களுக்கு எவ்வித ‘கரிசனமும்’ காட்டக் கூடாது. அரசின் மேன்மையான இந்த அறிவிப்புக்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளும் சக்தி அவர்களுக்கு கிடையாது என்று கருதினர்.

முர்ஷிதாபாதிலும் பாகல்பூரிலும் நிலைமை உச்சத்தை எட்டியது. பெருவனிகர்களும் சாமானியர்களும் கைகோர்த்து போராட்டக் களத்தில் குதித்தனர்.  அவர்கள் வரிவிதிப்பை திரும்பப் பெறவில்லை என்றால் அந்த பிரதேசத்தை விட்டே காலி செய்துக்கொண்டு வேறு எங்கோ இடம்பெயர்ந்து சென்றுவிடுவதாக அறைக்கூவல் விடுத்தனர். சொத்துவரி அன்று சொத்தின் விலையை காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருந்தது என்பதை முர்ஷிதாபாத் மக்களின் மனு பதிவு செய்கிறது.

நிகழ்வுகள் நடந்த தேதியை ஒரு 100- 110 ஆண்டுகள் தள்ளிப் போட்டால், போராட்டத்திற்கான காரணியை கொஞ்சம் மாற்றினால், இந்நிகழ்வுகள் காந்தியின் தலைமையின்கீழ் நடந்த ஒத்துழையாமை போராட்டங்களின் ஒரு பகுதி என்றே கருதப்பட்டிருக்கும். ஏறத்தாழ இதே செயல்திட்டம்தான் அன்றும் செல்லுபடியானது என்று கவனப்படுத்துகிறார் தரம்பால்.

எனினும் காந்திய சத்தியாகிரகத்திற்கும் இப்போராட்டங்களுக்கும் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. சத்தியாகிரகம் ஒரு வாழ்க்கை முறையாக தன்னை விரித்துக் கொள்கிறது. அதைப் பேணும் சத்தியாகிரகி இவ்வாழ்க்கை முறைக்கு பயிற்றுவிக்கப்படுகிறான், அவன் ஒரு சாதகன். எனினும் சாமானிய தளத்தில் சத்தியாகிரகம் ஒத்துழையாமையிலிருந்து பெரிதும் வேறுபட்டது அல்ல. காந்தி ஹிட்லரின் ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்தும் செக் குடியரசும் சத்தியாகிரகத்தில் ஈடுபடவேண்டும் என்று சொன்னதை நாம் இந்த வகையான போராட்ட முறையாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.             

ஒரு முக்கியமான வேற்றுமை இப்போராடங்களுக்கு இடையில் உண்டு. இவ்விரு போராட்டங்களுக்கிடையில் உள்ள அந்த நூற்றாண்டில் மிக முக்கியமான மாற்றம் நடந்தேறிவிட்டது. வாரனாசி போராட்டத்தின்போது மக்கள் துணிவுடன் முன் நின்றனர். ஆனால் இடைப்பட்ட அந்த நூறாண்டுகளுக்குள் மக்களுடைய நம்பிக்கையும் துணிவும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலேயர்களால் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. கோழைகளும் அவநம்பிக்கைவாதிகளும் நிறைந்த இந்தியாவை காந்தி சுதந்திரத்தின் பாதையில் அழைத்து சென்றார். அவர்களுக்கு அபார நம்பிக்கையும் துணிவும் ஊட்டினார்.

அதற்கு முன்பு வரை தோல்வியடைந்த வழிமுறைகள் ஏன் காந்திய காலத்தில் இப்போராட்டம் வெற்றிபெற்றது எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதற்கு தரம்பால் சில காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்.

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முந்தைய பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல் இந்தியர்களுக்கு தாங்கள் இழைத்த அநீதியைப் பற்றிய ஒரு பிரக்ஞையும் , குற்ற உணர்வும் இருந்தது என்பது காந்திய போராட்டம் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் தரம்பால். காந்தியின் ஆளுமை மற்றுமொரு காரணம் என்கிறார் அவர். ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒருவித மென்மை கூடி இருந்தது என்றும் கருதுகிறார் தரம்பால்.

இது எவ்வளவு தூரம் சரியானது என்பதில் எனக்கு சில ஐயங்கள் உண்டு. ஜாலியன் வாலா பாக் படுகொலை புரிந்த ஜெனெரல் டயர் ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் உலகெங்கிலும் அகிம்சைப் போராட்டம் கடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராக வெற்றிபெறுவதை பார்க்கும்போது தரம்பாலின் இந்தக் கூற்று எத்தனை பலவீனமானது எனும் எண்ணம் மேலிடுகிறது. எனினும் வேறு பல காரணிகளில் இதையும் ஒன்றாக ஏற்றுகொள்வதில் தவறேதும் இல்லை.

ஒத்துழையாமையும் கீழ்படியாமையும் நம் மரபில் ஊறிய வழிமுறைகள் எனும் அறிதலின் இன்றைய நடைமுறை முக்கியத்துவம் என்ன எனும் கேள்வியை எழுப்பும் தரம்பால்,அதற்கான விடையையும் அளிக்கிறார். இன்றைய நமது அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள அது உதவும். அரசு – மக்கள் உறவு சீராக இருக்க இந்த அறிவு பயன்படும் என்கிறார்.

இந்தியாவை முழுமையாக ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த  பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்திய மக்கள் வளர்த்துக்கொண்ட ஒருவித விட்டேந்தியான அமைதி பாவத்தைப் பற்றி இரு விஷயங்களை முன்வைக்கிறார் தரம்பால். அக்காலகட்டத்து ஆங்கிலேய அரசு நிர்வாகத்தில் மக்களின் இடம் குறித்து கொண்டிருந்த அதே மனப்பிம்பத்தை இன்றைய ஆட்சியாளர்களும் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆட்சியாளர்களை எக்காரணம் கொண்டும் எதிர்க்கக் கூடாது. சட்டத்திற்கு புறம்பான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யக்கூடாது. மக்களின் எதிர்பார்ப்புக்கு இடம்கொடுத்து அரசு தான் கொண்ட கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது. அப்படி ஒருகால் அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக இருந்தால், அதுகூட தன்னுடைய அதிகாரப் பிடியை விட்டுக்கொடுப்பதாக இருக்கக் கூடாது.     

இரண்டாவதாக, மகாத்மா காந்தியின் போராட்டம் தந்த எழுச்சிக்கு பின்னரும்கூட பெரும்பாலான மக்கள் துணிவின்றியே வாழ்ந்தனர். காந்தியின் கடும் முயற்சிகூட அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதே நிதர்சனம். வாரணாசி மக்களைப் போல் நம்பிக்கையுடன் களமிறங்கி ஒரு சிறு பின்னடைவைக் கண்டவுடன் மீண்டும் கூட்டுக்குள் ஒடுங்கிகொள்ளும் இயல்பு வலுத்தது. அநீதிக்கும் அறமின்மைக்கும் எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய திராணியற்றவர்கள் என நம்பத் துவங்கினர்.

ஆங்கிலேயர்கள் வெல்ல முடியாதவர்கள் எனும் உணர்வே உண்மையில் இந்தியாவை ஆட்சி செய்கிறது எனும் புரிதல் அவர்களுக்கு இருந்தது.    ஆகவே மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பது என்பது அவர்களின் அதிகாரத்தை இழப்பது என கருதினர். அதை ஒரு தோல்வியாக, பின்வாங்கலாக எண்ணினர். மக்களின் போராட்டம் என்பது தங்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றே அவர்கள் புரிந்துகொண்டனர். அரசு எந்நிலையிலும் எதிர்க்கப்படகூடாது, அரசே இறுதியில் அனைத்திலும் வெற்றிபெற்றாக வேண்டும் போன்ற கருத்துக்களை ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுகொடுத்து சென்றிருக்கிறார்கள் போலும்.

நவீன ஜனநாயக தேசத்திலும் ஒத்துழையாமை போராட்டங்களை சரியான ஜனநாயக  காரணங்களுக்காக உரியமுறையில் பயன்படுத்த முடியும் என்கிறார் தரம்பால். ஆளும் தரப்பும் ஆளப்படும் தரப்பும் ஒரே அலைவரிசையில் இருக்கும்வரை இப்போராட்டங்களுக்கான தேவை இருக்காது என்கிறார். அதே சமயம் அனைத்து விதமான சூழலிலும் அகிம்சை போராட்டங்கள் வெற்றி பெறுமா என்பதும் கேள்விக்குரியது. ஒரே விதமான அற நம்பிக்கைகள் இருந்தால் ஒழிய பெரிய அளவில் இவை எடுபடாது (தைமூரின் இந்திய விஜயம், ஹிட்லரின் யூத அழிப்பு, பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கிலேய அதிகாரிகள்- போன்றவர்கள் இதற்கு உதாரணம்). இந்தியாவில் காந்தியின் மகத்தான திட்டமிடல் காரணமாக படிப்படியாக ஆங்கிலேயர்களின் அராஜகம் அவர்களுக்கே உணர்த்தப்பட்டது. எளிய போராட்ட முறைகளில் தொடங்கி இறுதியில் ‘வெள்ளையனே வெளியேறு’ என அறைகூவும் அளவுக்கு போராட்டம் வளர்ந்தது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்க பயன்பட்ட வழிமுறைகளை வெற்றிகரமாக அன்னிய சக்திக்கு எதிராக அவரால் தகுந்த மாற்றங்களுடன் செயல்படவைக்க முடிந்தது என்பதே காந்தியின் மிகப்பெரிய வெற்றி என்கிறார் தரம்பால்.

இறுதியாக அகிம்சை போராட்டங்களின் சமூக பங்களிப்பைப் பற்றி தரம்பால் எழுதும் கருத்துக்கள் முக்கியமானவை.

‘சுதந்திர ஜனநாயக சமூகம் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க ஒத்துழையாமையும், கீழ்படியாமையும் இன்றியமையாத அம்சங்களாகும்....அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஒத்துழைக்காமல், கீழ்ப்படியாமல் போராடுபவர்கள்தான் தேசத்தையும் சமூகத்தையும் காப்பவர்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால், இந்த சமூகம் இயந்திரத்தனமான சடங்குகளால் மட்டும் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும், அல்லது கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், அரசற்ற சூழல் வரும், ஆயுதப் போராட்டம் வெடிக்கும்."

-சுகி 

No comments:

Post a Comment