Friday, May 19, 2017

ஞானக்கூத்தன் - காலத்தின் குரல்

(பதாகையில் இரு பகுதிகளாக ஞானகூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதை ஒட்டி எழுதிய கட்டுரை)
https://padhaakai.com/2014/12/14/gnanakoothan/
https://padhaakai.com/2014/12/21/gnanakoothan-voice-of-time-2/
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
– உபதேசம், ஞானக்கூத்தன்


ஞானக்கூத்தன் எனும் கவிஞர் எனக்கு பரிச்சயமானது என்னவோ அசோகமித்திரனின் ஒற்றன் நாவலின் வழியாகத்தான். எழுத்தாளர்கள் அவையில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை தியாகராஜன் மேடையில் வாசிப்பார். பின்னர் அங்கு விக்டோரியா இயக்கிய நாடகத்திலும் அந்தக் கவிதை உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் இடம்பெறும். அதில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவிடம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா?” எனக் கேட்பார்.
அவருடைய எனது பிள்ளைத்தமிழ் எனும் கட்டுரையில் இப்படி ஒரு வரி எழுதுகிறார்- “பௌராணிகச் சூழலில் வாழ்ந்ததால் நான் எதையும் நம்பினேன். தகுந்தவர் சொன்னால் போதும், நான் நம்புவேன். பகுத்தறியப்பட்டால் வீணாகிவிடும் அந்தக் கதைகள் ஏராளம்”. பொய்கள் வாழ்க்கையை எத்தனை எளிதாக்குகின்றன, அழகாக்குகின்றன. கொஞ்சம் இளைப்பாற அவகாசம் அளிக்கின்றன என எண்ணிக்கொண்டேன். அம்மாவின் பொய்கள் என்றென்றைக்கும் நம்மை பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.
காலச்சுவடு நேர்காணலில் “வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண்ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது?” என சொல்கிறார். இப்படியான ஒரு மனநிலையில்தான் அவருடைய அம்மாவின் பொய்கள் கவிதையை நெருக்கமாக புரிந்துகொள்ள முடியும். மீண்டும் மீண்டும் மனம் துழாவி அடுக்கும் நினைவுகளால் ஆனது கவிஞரின் அகம்.
அப்படி அவருடைய நினைவுக் களனைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஆகசிறந்த கட்டுரை என அவருடைய எனது பிள்ளைத்தமிழ்  கட்டுரையை சொல்வேன். ஒரு தேர்ந்த சிறுகதையின் நேர்த்தியுடன் பால்ய கால நினைவுகளை, கவிஞனாக உருமாற துவங்கிய சித்திரத்தை, அளிக்கிறது. காவேரிக்கரையில் உள்ள வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருஇந்தளூர் எனும் திருத்தலத்தின் சன்னதி தெருவில் தனது பால்யத்தை கழித்த அவர் மனதில் அங்கு கண்ட ஆலயம் சார்ந்த மனிதர்களும் நிகழ்வுகளும், அப்படியே பதிந்துவிட்டிருக்கின்றன.
நள்ளிரவுகளில் தவளைகள் கத்தும் ஒலியை அவர் தந்தையிடம், இது பூமி சுற்றும் ஒலிதானே, என்று வினவுகிறார். பின்னர், தவளைகள் என ஒரு நீள்கவிதையும் எழுதி இருக்கிறார். “ஒருதவளை பாடிற்று… ஒன்றென் தோளைத் தட்டிற்று… மற்றொன்று ஆடை நீக்கி..அதிசயமாய்த் தேடிற்று… கூச்சலிட்டேன்.. அம்மாவின் காதுகளில் விழவே இல்லை,” என இரவில் அரவம் கேட்ட இடத்தில் தவளையைக் கண்ட அனுபவத்தை கவிதையாக்கி இருக்கிறார். கோபுரத்திலிருந்து விழுந்த வீரன் சிலையை பாதுகாத்து பல ஆண்டுகள் வைத்திருந்துவிட்டு காவேரியில் அதை இழந்த கதையைச் சொல்கிறார். கம்ப ராமாயணம் பாடம் சொல்லிய பூஷணம் வரதராஜ ஐயங்கார் அவர் மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றி எழுதுகிறார். 15- 16 வயதே மதிக்கத்தக்க, நெஞ்சு வரை தொங்கும் தாடியுடைய வினோத சாமியார் ஒருவரின் அறிமுகம் வாய்க்கிறது. காளிதாசனைப் போல் தன் நாவிலும் அன்னை கீறுவாள் என நம்பியதாகச் சொல்கிறார். ஒருகால் தானறியாமலேயே அது நிகழ்ந்து விட்டதோ என ஐயம் கொள்கிறார். அதற்காக பல காளி கோவில்களை நாட துவங்குகிறார்.
அவருடைய வாழ்வில் நேர்ந்த அமானுஷ்யமான அனுபவத்தை பகர்கிறார். ஒரு சிற்றூரின் அக்ரஹாரத்தில் இரண்டு வாரங்கள் தங்கியபோது, “நாக்கு கீறப்பட்டு ரத்தம் கசிவது போன்று பிரமை. கண்ணாடியில் பார்த்துக்கொண்டால் ஒன்றும் இராது. தூக்கத்தில் நிறைய ராட்சதர்கள், அவர்களின் ஆண், பெண், குழந்தைகள் வந்து போவார்கள். 90 வயது மதிக்கத்தகுந்த ஒரு ராட்சதக் கிழவனை அருகில் பார்த்தது போல் இருந்தது. ஜாடி உயரமே உள்ள ராட்சதக் குழந்தைகள் ஓடவும் பறக்கவும் செய்தன. சர்க்கரை டப்பாவுக்குப் பின்னே ஒரு ராட்சதக் குழந்தை தவழ்ந்து கொண்டு கூச்சலிட்டது போல் தோன்றியது. ஒரு பெரிய ராட்சஸி தன் புட்டத்தை அலசும்போது குளத்துத் தண்ணீர் எழும்பித் தெருவில் வந்து என் கணுக்காலை நனைத்தது போல ஒரு பிராந்தி”. பின்னர் மனம் உருவாக்கிக் கொண்டிருந்த கவிதையை முடித்தவுடன் மனமயக்கம் முடிவுக்கு வந்ததாகவும், ஊர் திரும்பியபோது அழகாக இருப்பதாக ஊரார் சொன்னதாகவும் எழுதுகிறார்.
படைப்பு மனம் கொள்ளும் பாவனைகள்தான் எத்தனை விதமானவை! ஜெயமோகன் அவருடைய நீலம் உருவாகிய கதையில் இத்தகைய ஓர் அனுபவத்தை எழுதியிருக்கிறார். “என் பத்தாம் வயது முதல் 20ஆம் வயது முடிய நான் ஒரு மாய உலகில் இருந்திருக்கிறேன். அங்கே எல்லாம் நடந்தது. அதன் கவர்ச்சி சிறிதும் நீங்கிவிடவில்லை,” என அக்கட்டுரையை முடிக்கிறார்.
மாயமும், கனவும் கவிதையுடன் கைகோர்த்துக் கொள்பவை. கவிதையே ஒரு மாயம்தானோ எனவும்கூட சில நேரம் தோன்றுவதுண்டு. ஒரு கவிதை எப்படி உருவாகிறது? தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எத்தகைய சொற்களைத் தேர்வு செய்கிறது? எல்லாவற்றிலுமே ஒரு மாயத்தன்மை இருப்பதாக தோன்றுவதுண்டு. அவருடைய கனவு பல காட்டல் கட்டுரை தொகுப்பில் இப்படி எழுதுகிறார், “யதார்த்த உலகின் விதிகளைப் புறக்கணித்து யதார்த்த உலகின் பொருள்களைக் கொண்டே ஓர் உலகத்தை எழுப்புகிறது கனவு. கனவில் மனநிலை ஒரு திணையாகலாம். ஒரு பொருள் மற்றொரு பொருளாகலாம்”.
அவருடைய கவிதைகளிலும் இத்தகைய தன்மைகள் காணக் கிடைக்கின்றன. கனவு,கனவின் மனிதன் என்று கவிதைகளுக்கு பெயரிட்டிருக்கிறார். எரித்த காதல் கடிதங்களின் புகைச் சுருள்கள் அறைக்குள் நுழைய வாசலில் கதவருகே முண்டி போராடுகின்றன (போராட்டம்). ஞாதுரு எனும் கவிதையில் கவிஞன் வரைந்த ஓவியம் அவனிடம் பேச துவங்குகிறது. ’எல்லாம் முதலில் பாழாய் இருந்தது” கவிதையில் தெருக்கள் இடம் தேடி அலைகின்றன. மதிமை சாலா மருட்கை எனும் கட்டுரையில் “நவீன கவிதையில் ‘கனவு’ பல கவிஞர்களால் பேசப்பட்டு வருகிற விஷயமாக இருந்துவருகிறது. கண்கூடான உலகின் கெடுபிடிகளிலிருந்து விலகிச் செல்லவும் விலகி நிற்கவும் கனவு உதவுகிறது. கனவு ஒரு மொழியாக – நவிற்சி முறையாக உருவாகிறது. கனவைக் கனவென்று கவிதையில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம்கூட இல்லை” என எழுதுகிறார்.
ஞானக்கூத்தனின் கட்டுரைகளை வாசிக்கும்போது ஏற்படும் முதல் மனப்பதிவு என்பது, அவருக்கு மரபிலக்கியங்களில் இருக்கும் அபார மேதமை. ஆங்கில கவிதைகளிலும் அவருக்கு நல்ல வாசிப்பு இருக்கிறது. மனுஷ்யபுத்திரனின் பிரக்ஞை கவிதை குறித்து எழுதிய கட்டுரையில் ஞானக்கூத்தனின் வாசிப்பின் வீச்சு புலப்படுகிறது. குளிக்கும் பெண்ணை பார்த்தல் எனும் ஒற்றை விஷயத்தை பழைய புதுப்புனலாடல் பரிபாடலில் துவங்கி, ஆண்டாளின் கோபிகை குளியல் வழியாக நவீன காலகட்டத்திற்கு கொண்டு வருகிறார். மூடிய அறைக்குள் குளிக்கும் நவீன பெண்ணின் பாதுகாப்பின்மையை சென்ற காலங்களுடன் ஒப்பிட்டுச் சொல்கிறார். குளிக்கும் பெண்களை வெறித்து பார்ப்பவர்களை ‘ஓட்டை மனதினர்’ என பரிபாடல் குறிப்பதை அடிக்குறிப்பில் சொல்கிறார். வாயிரிசத்திற்கு எத்தனை அழகான தமிழ் சொல் என வியந்து கொண்டேன்.
அலைகள் இழுத்த பூமாலை எனும் கட்டுரையில் காரி கண்ணனார் துவங்கி கனிமொழி வரை ‘மீன்’ கவிதைகளில் எப்படியெல்லாம் உருமாறி வருகிறது எனும் சித்திரத்தை அளிக்கிறார். ஒருவகையில் நவீன கவிஞனும், அவன் என்னதான் மரபை மறுத்து முன்னகர்ந்தாலும், சென்ற யுகத்து பாணனின் நீட்சிதானோ என தோன்றுகிறது. ஐயப்ப மாதவனின் கவிதை தொகுப்பான நிசி அகவல்  பற்றிய கட்டுரையில் ‘ஒரு மகிமை’ எனும் கவிதையை முல்லைகலியில் உள்ள ஒரு பாடலுடன் ஒப்பிட்டு எழுதுகிறார்.
நவீன காலகட்டத்தில் நல்ல கவிதைகளை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய எழுதப்படுகின்றன, அவைகளை அடையாளம் கண்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு விமர்சகர்களுடையது என்கிறார் ஞானக்கூத்தன். புதுக்கவிதையின் பங்களிப்பு மற்றும் பரிணாமம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். சி.மணியை பற்றிய கட்டுரையில்,
“யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி”
என்று சி. மணியின் சொற்களை மேற்கோள் காட்டுகிறார். கல்கியில் வெளிவந்த அவருடைய ‘கனவு பல காட்டல்’ எனும் தொடர் கட்டுரை நவீன கவிதையின் நுழைவாயிலாக வாசகருக்கு உதவக்கூடும். கவிதையின் பேசுபொருட்கள், அதன் பரிணாமம், அது காட்டும் சித்திரங்கள் என பலவற்றையும் எளிமையாகச் சொல்லி செல்கிறார். கே.எஸ்.வெங்கட்ரமணி துவங்கி தாரா கணேசன், தேவேந்திர பூபதி, யுவன் சந்திரசேகர், தேவதச்சன், யவனிகா ஸ்ரீராம், கோகுலகண்ணன், ராதாகிருஷ்ணன், இரா.முருகன், சத்தியநாராயணா, காளிதாஸ், முனியப்பராஜ், ரா.ஸ்ரீனிவாசன், வத்சலா என பலருடைய கவிதைகளின் ஊடாக கவிதைகளின் இயல்பை பற்றிய சித்திரத்தை விரித்தெடுக்கிறார்.
நவீன இந்திய இலக்கியத்தின் கட்டமைப்பு மற்றும் பரிணாமம் மீது ஆங்கில இலக்கியம் வலுவான தாக்கத்தைச் செலுத்தியது என்பது நாமறிந்ததே. காசிப்ரசாத் கோஷ் 1830 ஆம் ஆண்டு, ஆங்கிலத்தில் கவிதை தொகுப்பு வெளியிட்ட முதல் இந்து என அடையாளப்படுத்தப்படுகிறார். தமிழ்நாட்டில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் என்ற மூன்று கவிஞர்களும் தமிழ்க் கவிதை உலகில் 1950 வரை மூன்று வகைக் கவிதைகளுக்கு ஆதர்சங்களாக இருந்தார்கள் என்றும் இவர்களில் கீட்ஸின் கவிதைகளை விரும்பியவர்கள் அதிகம் என்றும் சொல்கிறார். “தமிழின் நவீன கவிதைகூட முதலில் ஆங்கில மொழியில் உதயம் கொண்டதாகக் கூறலாம். அதுவும் ‘வசன கவிதை’. பாரதியாரின் கவிதைகளை வசன கவிதை என பிற்காலத்தில் அழைத்தார்கள். பாரதி அப்படி அழைக்கவில்லை. ஆனால் அக்காலகட்டத்தில் இது பிரபலமாக இருந்தது. வால்ட் விட்மன் பங்களிப்பு. கே.எஸ்.வெங்கட்ரமணி அப்படியான முயற்சியை ஆங்கிலத்தில் செய்திருக்கிறார். அதை வசன கவிதை என தெளிவாக கூறவும் செய்து இருக்கிறார்.”
“கவிதை எனும் செயல்திறனில் இருந்து அதன் உள்ளடக்கத்தை நோக்கி திருப்பியது புதுக்கவிதை. சீர், அசை, யாப்பு ஆகியவைகளை அறிந்திருந்தால் மரபு கவிதையை உருவாக்கிவிட முடியும்.” (கனவு பல காட்டல்). புதுக்கவிதை தமிழுக்கும் இலக்கியத்திற்கும் என்ன செய்திருக்கிறது எனும் கேள்விக்கு “புதுக்கவிதை சமகாலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு.”
மேலும் “புதிய புரட்சியை உண்டு பண்ணியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் உருவாகியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் புதிய பொருளைக் குறிக்கிறது. அந்தப் புதுப் பொருள் காலத்தின் அடையாளம். இப்போ குறுஞ்செய்தி கைபேசியெல்லாம் கவிதைல வருது. இது மரபுல சாத்தியமே இல்லை. புதுக்கவிதைல சந்தம் இல்லாததுனால எந்தச் சொல்லையும் நீங்க கவிதைக்குள்ள கையாள முடியும். சந்தம் இருந்தபோது சொற்களப் பயன்படுத்தறதுல நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுல இருந்து விடுபட்ட புதுக்கவிதை ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டு வந்திருக்குன்னும் சொல்லலாம். ஒரு பொது தளத்தில் சந்திக்க முடியணும். உங்க மத நம்பிக்கை வேறயா இருக்கலாம். அரசியல் ஈடுபாடு வேறயா இருக்கலாம். உங்க சினிமா வேறயா இருக்கலாம். ஆனா புதுக்கவிதைன்னு வரும்போது நாம சந்தித்துப் பேச முடியுது. நமக்கு ஒரு பொது வெளி கிடைக்குது”, என்கிறார். புதுக்கவிதை தமிழை உலகத்தரமாக ஆக்கியிருக்கிறது என்றும் சொல்கிறார். குறுகிய காலத்தில் மொழி தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ள நிச்சயம் நவீன கவிதை பெரும் பங்காற்றி இருக்கிறது. ஞானக்கூத்தன்கூட பீரோ, லாரி போன்ற சொற்களைக் கொண்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்.
கனவு பல காட்டல் கட்டுரை தொடரில் நவீன கவிதையில் எவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து எழுதுகிறார். வாழ்க்கையின் சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று க.நா.சு. முன்மொழிந்தார். கனவு, கால போதம், காட்சிப்படுத்துதல் என ஒவ்வொன்றையும் கவிதைகளைக் கொண்டு விளக்குகிறார். கவிதை சில சமயங்களிலாவது ஓவியப் பார்வை பெற வேண்டும் என சொல்கிறார்.
அவருடைய சில கவிதைகள் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கின்றன. ‘அன்று வேறு கிழமை’ கவிதையில் பாடைக்கடியில் நிழலுக்கு ஒதுங்கும் நாயைப் பற்றிய சித்திரம் வருகிறது. அது மாறி மாறி உதைபடுகிறது. பாடை நழுவி விழுகிறது. பின்னர் மீண்டும் அதன் நிழலில் வந்து நின்று கொள்கிறது. ஒரு நிகழ்வைக் காட்சிபடுத்துவதன் வழியாக அதை கவிதையாக்குகிறார். நாயும் பாடையும் உதைக்கும் கால்களும் படிமமாகின்றன. இருத்தலியல் சிக்கலை விளக்குவதாக கொள்ளலாம், பிரசுரிக்க மறுக்கும் பதிப்பகங்கள் – எழுத்தாளன் என்றும் சொல்லலாம், தேர்தல் அரசியலில் வாக்காளன்கூட தன்னை அந்த நாயின் இடத்தில் இருத்தி வைத்துக் கொள்ளலாம். ஒரு படிமத்தை நிறுவுவதன் வழியாக கவிதையை பலவாறாக உணர்ந்து கொள்வது சாத்தியமாகிறது.
நிலத்தை ஒரு பேருயிராக பார்க்கும் கண்கள் ஞானக்கூத்தனுக்கு உண்டு. கீழ்வெண்மணிகவிதையில்
“மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின”
என எழுதுகிறார். மற்றொரு கவிதையான கனவில் “மலைகள் எனும் குறும்பற்கள் முளைத்திராத பூதலத்தின் மீது” என்கிறார்.
“நவீன கவிதையில் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் ஓர் அன்னியத் தன்மையை அறிமுகப்படுத்துகின்றனர்.” என அதன் முக்கியமான இயல்பை சுட்டிக் காட்டுகிறார். அன்றாடத்தை ஒரு சின்ன விலகலுடன் நோக்கும் பார்வையும் அவருக்கு உண்டு. படைப்பூக்கமிக்க மனங்கள் குமாஸ்தா பணிகளை வெறுக்கின்றன. ஞானக்கூத்தன் சலிப்பூட்டும் அன்றாட வேலையை பற்றி கவிதை எழுதியிருக்கிறார்.
முகக்கண்கள் அழுதால் கண்ணீர்
விடுகிறான் என்னும் நீங்கள்
மயிர்க்கண்கள் அழுதால் மட்டும்
வியர்க்கிறான் என்று சொல்வீர்
வேலை செய் என்னும் உங்கள்
வார்த்தைகள் குசுப்போல் நாறக்
கழிவறை உலகம் செய்தீர்
குருடுகள் காலூனங்கள்
பித்துக்கள் பிறக்கும் போதே
வேலையைத் தவிர்க்கும் மார்க்கம்
தெரிந்ததால் பிழைத்துக் கொண்டார்
நானொரு குருடனாக
நானொரு முடவனாக
நானொரு பித்தனாகப்
பிறக்காமல் போய்விட்டேனே”
மற்றொரு கவிதையான ‘விடுமுறை தரும் பூதத்திலும் ஞாயிறு தோறும் தலைமறைவாகும்.. வேலை என்னும் ஒரு பூதம்.. திங்கள் விடிந்தால் காதைத் திருகி.. இழுத்துக் கொண்டு போகிறது… ஒருநாள் நீங்கள் போகலை என்றால்.. ஆளை அனுப்பிக் கொல்கிறது.. மறுநாள் போனால் தீக்கனலாகக்.. கண்ணை உருட்டிப் பார்க்கிறது.” என எழுதுகிறார்.
ஓவியர் ஆதிமூலம் பற்றிய கட்டுரையில் “ எவ்வளவோ சமூகக் கோபங்கள் அவருக்கு இருந்தாலும் – வெகு சிலவற்றைத் தவிர – அதிகமாக ஓவியங்களில் அந்தக் கோபத்தைக் காட்டவில்லை. அதெல்லாம் அவர் வெளிப்பபடுத்தியிருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும்,” என தனது எதிர்பார்ப்பை பதிவு செய்கிறார். ஒரு கலைஞனை பற்றிய அவரது எதிர்பார்ப்பு இதுதான் எனக் கொண்டால் அவர் தொடர்ந்து பொதுபுத்தியின் மீதான வருத்தங்களை, கவலைகளை, கோபங்களை தனது கவிதைகளில் வெளிப்படுத்திக் கொண்டுதானிருக்கிறார்.
யோசனைபரிசில் வாழ்க்கை, ஆவதும் என்னாலேகாலவழுவமைதி, மண்ணும் மந்திரியும் போன்ற கவிதைகள் நேரடியகாவே அரசியல் பேசுபவை. மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் போன்ற மேடைப் பேச்சை பகடி செய்யும் கவிதைகள் மீண்டும் மீண்டும் காணக்கிடைக்கின்றன. மற்ற கவிதைகளின் தென்படும் சுய எள்ளல், கீழ்வெண்மணி கவிதையில் உக்கிரமான சோகமும் தவிப்புமாக வெளிப்படுகிறது. குழந்தைகள், குருவிகள், பெண்கள், கவிதைகள் என எல்லாவற்றின் எஞ்சிய சாம்பலைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் எத்தனை குரூரமான காட்சி. கடைசி வரியில்
“இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க”
என முடிக்கிறார்.
ஞானக்கூத்தனின் மற்றொரு கவிதையான நாய் என்றோ நிகழ்ந்த இலக்கிய பூசலுக்காக எழுதப்பட்டதாக தோன்றியது, அது இன்றைய சமூக ஊடக சர்ச்சைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும் . ‘அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் என்னும் காரணத்தால்’ மோசிகீரனார் மீது கவிஞருக்கு ஒரு தனிப்பாசம் பிறக்கிறது.
அங்கதம் தெறிக்கும் கவிதைகள் என சிலவற்றை சொல்லலாம், விட்டுப்போன நரி எனும் கவிதையில் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ந்தபோது, அப்படி மாறாது விடுபட்டு எஞ்சிய நரியொன்று கீற்று நிலவு பொருந்திய ஈசனிடம் முறையிடுகிறது. ஈசன் ஓர் அரசு உயரதிகாரி போலும், குடிமைப் பொறுப்பு அதிகாரியாகதான் இருக்க வேண்டும்-
“நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்.
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா”
என சொல்லி திருப்பியனுப்பி வைக்கிறார்.
ஞானக்கூத்தன் சில தொன்மங்களைக் கவிதைகளின் வாயிலாக எழுதவும் முயன்றிருக்கிறார். மேற்சொன்ன திருவிளையாடல் கவிதையைப் போன்று, எதிரெதிர் உலகங்கள் எனும் கவிதையில் விஸ்வாமித்திரனின் திரிசங்கு சொர்க்கம் எனும் தொன்மத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் ஒப்பிடுகிறார். சினம் தணிந்த விஸ்வாமித்திரன் பிரம்மனிடம் தான் அக்கணத்தில் படைத்தவையும் நீடிக்க வேண்டும் என வரம் பெறுகிறார்.
அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர
மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து
வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு:
மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக்கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்”
மொழி வடிவங்களில் அவ்வப்போது சோதனைகளை முயன்றிருக்கிறார், காலவழுவமைதி, பிழை பேச்சு தமிழில் எழுதப்பட்ட ஒரு கவிதை, தணல் போன்ற கவிதைகளில் பிராமண வழக்கு என்று பலவும் எழுதியிருக்கிறார். தேரோட்டம் எனும் கவிதையை முழுக்க வட்டார வழக்கில் எழுதியிருக்கிறார்.
கொள்ளிடத்து முதலைகள்’ எனும் கவிதையில், மணற்பரப்பில், இரவுகளில் கூடும் முதலைகளின் கால்தடங்கள் நிறைவேற்றிய ரகசிய தீர்மானம் என்னவாக இருக்கும்?, என வினவுகிறார். ஜெயமோகனின் காடு நாவலில் கல்வெர்ட்டில் சிமிண்ட் காய்வதற்கு முன்னர் தன் பாதச்சுவடுகளை பதித்து செல்லும் மிளா, வண்ணதாசனின் புகழ்பெற்ற கவிதையில் சிறகை விட்டு செல்லும் பறவை என விலங்குகளின், பறவைகளின் உலகை மனிதன் வியக்கிறான். அவர்களுக்குள் என்ன பரிமாறிக் கொள்வார்கள்? எப்படி அது நிகழும்? கவி மனம் கற்பனையால் இட்டு நிரப்ப உகந்த இடம்தான்.
அவருடைய சில கவிதைகளில் ஒரு கதை சொல்லும் தொனி கைகூடிவிடுகிறது. காலிஒருவனின் வாழ்க்கையை சொல்கிறது. இரட்டை நிழல் எனும் கவிதையில் ஊழிக்குப் பின்னர் எழுந்து வரும் தொல்காப்பியர் வருகிறார். ‘அங்கம்மாளின் கவலை ஒரு பெட்டிக்கடை நிகழ்வை அப்படியே சொல்லி செல்கிறது. ஓட்டை ரூவா எனும் கவிதையில் கிழிந்த நோட்டைத் திருப்பி தருகிறார் நடத்துனர், அதை வைத்திருந்து பிரயோஜனமில்லை எனக் கருதி சாலையில் வீசி எறிகிறார். ஊரே அதை தேடி எடுக்க முனைகிறது. போலீசார் வந்து நோட்டை வீசி எறிந்தால் கம்பி எண்ண வேண்டும் என சொல்கிறார்கள். செய்வதறியாமல் “ஓட்டை விழுந்த ரூவாய்த் தாளது.. படிக்கப்படாத பக்கத்தில்.. ஒருவாறாக இருந்தது பொருந்தி,” என்று முடிக்கிறார். ஸ்ரீலஸ்ரீ எனும் கவிதையில், நீரில் நடக்கவும் தீ பட்டால் எரியாதிருக்கவும் வரம் பெற்ற முனிவனின் வரமே சாபமாகும் கதையைச் சொல்கிறார்.
தற்செயலாய் என் நிழலை” எனும் கவிதை எனக்கு ஜெயமோகனின் தம்பி சிறுகதையை நினைவுபடுத்தியது. “தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன்… அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன்” என கவிதை துவங்கும்போதே அதில் ஒரு அமானுஷ்யத்தன்மை குடிவந்து விடுகிறது.
யவனிகா ஸ்ரீராம் ஞானகூத்தனை பற்றிய அவரது கட்டுரையில், 80களிலும் 90களிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், அவற்றுக்கு கவிதைகள் வழியாக எதிர்வினையாற்றியவரும் ஞானக்கூத்தன்தான் என குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
“நான் காப்பியங்களில் நம்பிக்கை கொண்ட கவிஞன்” என வெளிப்படையாக அறிவித்துகொள்ளும் அவர் “கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது” எனவும், “அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது” எனவும் திராவிட இயக்கங்களை பற்றி தீவிரமாக விமர்சிக்கிறார் (காலச்சுவடு நேர்காணல்).
மற்றொரு கட்டுரையில், புதுமைபித்தன், பிச்சமூர்த்தி, க.நா.சு போன்ற முன்னோடிகளைத் தவிர்த்துவிட்டு புதிய தந்தை வடிவங்களை உருவாக்க இந்த இயக்கங்கள் முனைந்து கொண்டிருந்தன என்றும் சொல்கிறார். மேலும், கல்லூரி பல்கலைக்கழகங்கள் மீதான தீவிர விமர்சனங்களை வைத்தபடிதான் இருக்கிறார்- “தமிழ்த் துறையாளர்கள் பெரும்பான்மையானவர்கள் கலாசாரத்தைப் பாதிப்பில்லாம பாத்துக்கிடணும்னு நெனைக்கிறாங்க”. இதன் காரணமாகவே நவீன தமிழ் இலக்கியம் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறுவது சிக்கலாக இருக்கிறது என்றும் சொல்கிறார். சென்ற பகுதியில் சுட்டிகாட்டப்பட்ட எதிர்ரெதிர் உலகங்கள் கவிதை பண்டிதர்களைப் பகடி செய்கிறது.
வானம்பாடிகள் பற்றியும் அவருக்கு பெரிதாக மரியாதை ஒன்றும் இல்லை. “இப்படிப்பட்ட கவிதைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்குப் பிற வகையான கவிதைகளால் முடியாது என்பது போன்ற ஒரு கருத்து உருவாகத் தொடங்கியது. எதற்காகக் கவனம் ஈர்க்கப்படுகின்றது என்பதைவிடக் கவனத்தை ஈர்க்கும் முயற்சியே பாராட்டுக்குரியது என்ற எண்ணம் பரவலாகியது.” இதன் விளைவாக நவீன இலக்கிய உணர்வற்ற தமிழ் விரிவுரையாளர்கள், ஜனரஞ்சக இதழ்களில் எழுதுபவர்கள், மரபுக் கவிதை படைத்தவர்கள் என பலரும் தம்மை வானம்பாடிகள் எனச் சொல்லிக் கொண்டனர் என்கிறார். க.நா.சு அவர்களை முழுமையாக நிராகரித்ததையும் பதிவு செய்கிறார். தீவிர இலக்கியத்திற்கு எதிரான மனப்போக்கு சமூகத்தில் இயங்கிய காலகட்டத்தில் அவர் கறாரான, சமரசமற்ற இலக்கிய ஆளுமையாகத் திகழ்கிறார்.
.
“தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாகச் சிந்தித்து எழுதியது புதுக்கவிதைதான்,” என்கிறார் ஞானக்கூத்தன். புதுக்கவிதை புனைபவர்கள் மரபுக் கவிதை எழுதுபவர்களைக் குறித்த முக்கியமான விமர்சனம் அவை துதிப் பாடல்களாக மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்பதுதான். மரபுக் கவிஞர்கள் புதுக்கவிதை மீது வைத்த விமர்சனமும், ‘அது சோகத்தை போற்றுகிறது, அழுமுகமாக இருக்கிறது’ என்பதுதான். “இரண்டு நிலைகளும் உண்மை என்றே சொல்ல வேண்டும். சாவு பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்,” என்கிறார் ஞானக்கூத்தன். அவரும் அதற்கு விதிவிலக்கல்ல. நேரடியாக மரணத்தை பற்றியது அல்ல என்றாலும், பிரிவை பற்றி பேசும் சரிவு எனும் கவிதையில் “சூளைச் செங்கல் குவியலிலே..தனிக்கல் ஒன்று சரிகிறது” என எழுதுகிறார். அன்று வேறு கிழமை, காலி போன்ற கவிதைகளிலும் மரணம் பேசபடுகிறது.
ஆனால் மரணமும் சோகமும் மட்டுமல்ல, புதுக்கவிதையில் அங்கதமும் நகைச்சுவையும் பிரமாதமாக வெளிபட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. சமகாலத்தில் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘இசை’யின் கவிதைகள். ஞானக்கூத்தன் அவருடைய ஆனந்த கனவு பல காட்டல் எனும் கட்டுரையில் இப்படி பதிவு செய்கிறார் “கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால் 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது.” ஞானக்கூத்தனின் பல கவிதைகள் புன்முறுவல் சுமந்து வருகின்றன. இன்னும் சொல்வதானால், இன்றைய நவீன கவிதைகளின் அங்கத தொனி அவரிடமிருந்து வேர்கொண்டதாக தோன்றுகிறது. நவீன கவிதை இருண்மையை, இருத்தலியல் சிக்கலை மட்டும் பேசும் வடிவமாக இருந்த காலத்தில் இது ஒரு பெரும் பாய்ச்சல் என்றே தோன்றுகிறது. “நவீனமான ஒன்றை நவீனம், நவீனம் என்று பரபரப்பாகப் பேசாமல் இயல்பாக்கிக் கொண்டு இயல்பாகப் பேசுவது நவீன கவிதை இயலில் ஒரு கூறு,” என ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.
ஞானக்கூத்தன் தான் நெருங்கி அறிந்த ஆளுமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ம. நவீன் தனது கட்டுரையில் ஆத்மாநாமின் தோற்றம் குறித்து ஞானக்கூத்தனின் கட்டுரையின் வாயிலாக அறிந்துகொண்டதாக சொல்கிறார். நகுலன், க.நா.சு, ஓவியர் ஆதிமூலம் ஆகியவர்களைப் பற்றி அவர் எழுதிய நினைவோடைகள் முக்கியமானவை. கண்ணீரைக் கணக்கிட்டவர் எனும் கட்டுரை க.நா.சுவின் பங்களிப்பு குறித்து பேசும் மிக முக்கியமான கட்டுரை. தனிப்பட்ட நினைவுகள் என்றில்லாமல், அன்றைய இலக்கியச் சூழல், அதன் அரசியல் பிணக்குகள் என பலவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறது அக்கட்டுரை. மேலும் க.நா.சு எனும் கவிஞர்- விமர்சகரை மதிப்பிடவும் முயல்கிறது.
ஞானக்கூத்தன் மேற்கோள் காட்டிய க.நா.சுவின் கவிதை ஒன்று சட்டென புன்னகையை தருவித்தது.
பிடி சாம்பலில் ஈரம் தோன்றுவதைப் போல
நாவல்களிலும் கவிதை ஈரம் தோன்றி
கண்ணீர்த் துளியை வரவழைக்கும்
வித்தை அவளுக்கு கலபமாகக் கை
வந்து விட்டது. நூறு நாவல்களையும் அவன்
அழுது கொண்டேதான் எழுதினாள்.

அக்காலத்து பெண் வெகுஜன எழுத்தாளரை பகடி செய்கிறது.
இக்கட்டுரை பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவருடைய சமரசமற்ற தன்மைக்காக பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். எளிய அரசியல் காரணங்களுக்காக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிறார். பிச்சமூர்த்தியைக் காட்டிலும் நவீன கவிதையை அதிகமும் எழுதியவர் கநாசு என்கிறார். ஞானக்கூத்தன் மேற்கோள் காட்டும் கநாசுவின் கவிதைகள் மனதை அழுத்துகின்றன. அவருடைய முன்னோடித் தன்மையை நிலைநிறுத்துவதாக இருக்கின்றன.
“க.நா.சு.வின் கவிதை அவர் வாழ்ந்து வந்த காலத்தைப் பிரதிபலித்தது. தன் கவிதைகளில் எழுத்து வகை பற்றி எழுதினார். தன் நண்பர்களைப் பற்றி எழுதினார். இதில் அவர் சங்ககாலத்துக் கபிலரை நினைவூட்டினார். புதுமைப்பித்தனைப் பற்றி அவர் எழுதியுள்ள கவிதை எளிமையாகத் தொடங்கி, வளர்ந்து, வளர்ச்சி ததும்பி, சோகத்தில் முடிகிறது.” என்கிறார்.
நகுலனைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘தனிமையின் உபாக்கியானம்’ எனும் கட்டுரை நான் வாசித்தவரையில் அவரெழுதிய ஆக சிறந்த கட்டுரைகளில் ஒன்று, மனதிற்கு நெருக்கமானதும் கூட. நகுலனுடனான தனது அனுபவங்களை சொல்லிச் செல்கிறார். தான் அவதானித்த நுண்மையான ஆளுமை கூறுகளைப் பதிவு செய்கிறார். நகுலன் தன்னை failed artist என கருதிக் கொண்டார், அந்த பிம்பத்துடன் தன்னை பொருத்திக்கொள்ள முயன்றார் என்கிறார் ஞானக்கூத்தன். மாபெரும் படைப்பாளிகள் அப்படிப்பட்டவர்களாகவே இருக்க முடியும் என நம்பும் ஒரு சாரார் இருக்கத்தான் செய்கிறார்கள். “நகுலனுக்குக் கவலை இருந்தது. அந்தக் கவலை தமது படைப்புகள் காலத்தை வெல்லுமா என்பது பற்றி அல்ல. அவை வாசகன் மனதில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறியத்தான் அவர் விரும்பினார்,” என எழுதும்போது ஒரு படைப்பாளியின் நியாயமான எதிர்பார்ப்பு என்றைக்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது, அவன் கோருவது செல்வத்தையோ புகழையோ அல்ல, ஒரு அடிப்படை கவனிப்பை என்று தோன்றுகிறது. நகுலன் புத்தகங்கள் அன்று விற்கவில்லை. பதிப்பக அரசியல் காரணமாக எவரும் பதிப்பிக்கவும் முன்வரவில்லை என ஞானக்கூத்தன் எழுதுகிறார். நகுலன் புத்தக வெளியீட்டை சூதாட்டத்துடன் ஒப்பிடுவதை கவனிக்க வேண்டும் என்கிறார்.
ஞானக்கூத்தன் நகுலனின் வினோதமான நடத்தையை பதிவு செய்கிறார். நகுலன் தன் தோல்வி உணர்வுக்கு ஒருவகையில் தனது தனிமைதான் காரணம் என்று நம்பினார். அவரைச் சுற்றி ஒரு சிறு குழு உருவாகியிருந்தது. “தனக்குப் பிடித்த கவிஞர்களில், இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவார். தன் கவிதையின் செல்வாக்கு மற்றவர் கவிதையில் இருப்பதாகக் காணும் படைப்பாளியின் வழக்கத்துக்கு மாறாக மற்றவர் கவிதைகளின் சாயல் தனது கவிதையில் இருப்பதாகக் கூறிக்கொண்டார். இப்படிக் கூறியதால் சம்பந்தப்பட்ட கவிஞர்களை மகிழ்விக்க முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நகுலன் கவிதையில் யாருடைய சாயலும் கிடையாது என்பதுதான் உண்மை. நகுலன் அப்படிக் கூறியது தனக்கு நெருக்கமான வாசகர்களை உருவாக்கிக்கொள்ளத்தான். இதை நான் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. நகுலன் வாய் திறந்து சொல்லாததை உரத்துச் சொன்னவர்கள் உண்டு.”
ஆதிமூலம் பற்றி அவர் எழுதிய கட்டுரையும் முக்கியமானதே. அவருடைய ஓவியத் திறனை மெச்சும்போது, “அவர் ஓவியம் வரைந்திருக்கிற பக்கத்தில் கவிதைகளை வெளியிடுவது கஷ்டம். அவர் ஓவியத்தில் காட்டியிருக்கிற வெளிப்பாட்டிற்கு இணையான கவிதையாக அது இருக்க வேண்டும்,” என எழுதுகிறார். இறுதிக் காலங்களில், ‘உருவங்களிலிருந்து உருவமற்ற ஓவியங்களுக்கு ஆதிமூலம் பயணம் மேற்கொண்டார்’ என்கிறார் ஞானக்கூத்தன். இந்நிலையை முன்வைத்து கலையை பற்றி அவர் எழுப்பும் கேள்வி முக்கியமானது.
“என்னுடைய இலக்கியம் சர்வதேசத்தன்மை உடையதாக இருக்கலாம். ஒரு ஆசிரியன் என்கிற முறையில் என்னுடைய தேசத்தைப் பற்றித்தானே நான் எழுத முடியும். என்னுடைய நாடு அதில் தெரிய வேண்டும் இல்லையா? நாடு கடந்து போனால் வெறும் நீலமயமான ஆகாயமும் கடலும்தான். இயற்கைதான். அந்த விதமான இயற்கை எந்த அளவுக்கு நவீன ஓவியங்களில் பதிவாகியிருக்கிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு புறமிருந்தாலும் அந்தப் பாதையில் பயணம் போய் அதில் ஒருவிதமான வசீகரத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தார். நமக்கும் உருவமற்ற ஓவியங்களைப் பார்க்கிற அனுபவத்தை அவரால் கொடுக்க முடிந்தது. அது அவருக்குக் கிடைத்த வெற்றி.” என ஆதிமூலம் கட்டுரையை முடிக்கிறார்.
ந.பிச்சமூர்த்தி எழுத்து பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் சொல் ஓய்ந்து மவுனத்திற்கு போனாலும் கூட நான் மகிழ்வேன் என சொன்னது நினைவுக்கு வருகிறது.
தேன்மொழியின் திணை புனம் எனும் கட்டுரையில் சங்க இலக்கியத்தை பற்றி அவர் சொல்வது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. “சங்க இலக்கியம் தமிழர்கள் பெருமைப்படத் தகுந்த கவிதைக் களஞ்சியம் என்பதிலிருந்து அது நவீனக் கவிதைக்குப் பயன்படும் உருவகமாகவும் மாறிவிட்டிருக்கிறது..இதற்குச் சான்றாக அவருடைய பல கட்டுரைகளையே சொல்லலாம். மரபு நம் ஆழத்தில் பதிந்துள்ளது அது மீறப்படும் போதும் மாற்றபடும்போதும் இருதரப்பும் அதற்கு எதிராக கிளர்ந்தெழும். அது கவிதைகளில் வெளிப்படத்தான் செய்யும்,” என்கிறார் அவர்.
நேர்காணல் ஒன்றில், “பழமைய மறுதலிச்சு உருவாகறது தான் புதுக்கவிதையோட சித்தாந்தமே. பொலிடிக்கலா பார்த்தா அவைதீகம் அதாவது மரபை மீறுதல்தான் க.நா.சுக்குப் பிடிச்சது. நீங்க பழமைய மறுக்கறவரா மீறுகிறவரா இருக்கும்போதுதான் உங்க படைப்புச் செயல்பாட்டுல ஜீவன் இருக்கும்,” என்கிறார்.
ஒரு படிமம் சங்ககாலத்தில் இருந்து நவீன யுகம் வரை எப்படியெல்லாம் உருமாறி வருகிறது எனும் ஆராய்ச்சி அவருக்கு உவப்பானது. மற்றொரு கட்டுரையான ‘நடைவரை சென்ற நாடிய பாதங்களில்’ நகுலனின் ‘மூன்று’ எனும் கவிதையை பற்றி எழுதுகிறார். “நகுலனின் ‘மூன்று’ என்ற கவிதை ஜாடைமாடையாகக் கூறப்பட்ட சுய சரிதையோ? தொடர்ந்து சீதைக்காக நடக்கும் இராம இராவண யுத்தத்துடன் சுசீலாவுக்காக நாயகன் யாருடன் போராடினான்?” எனும் ஐயத்துடன் முடிகிறது. குக்கூ என்றது கோழி கட்டுரை களவியல், கற்பியல் குறித்து பேசுகிறது. ‘ஆனந்த கனவு பல காட்டல்’ எனும் கட்டுரை சி.சு.செல்லப்பாவிற்கும் க.நா.சு விற்கும் இடையில் புதுக்கவிதை குறித்து நிகழ்ந்த விவாதங்களை பேசுகிறது. உள்ளடக்க புதுமை என்று செல்லப்பா சொல்ல, உருவத்திலும் புதுமை எனும் கருத்தை க.நா.சு முன்வைத்தார். ஒரு கவிதை ஒருபோதும் முடிக்கப்படுவதில்லை’ என்று போல் வலேரி சொன்ன கருத்தையும் இங்கு குறிப்பிட வேணும், எனச் சொல்லி கவிதையின் அமைப்பை பற்றி, அதன் தன்மையை பற்றி விரிவாக பேசுகிறார் ஞானக்கூத்தன்.
கலை பற்றிய ஞானக்கூத்தனின் சொற்கள் ஆழமானவை. “கலை யதார்த்த – நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்,” என்று எழுதுகிறார் அவர்.
மற்றொரு தருணத்தில் “கலை என்றாலே ஒருவித அழைப்புதான். ஒருவர் பாடினால் தாங்கள் அழைக்கப்பட்டது போல மக்கள் கூடுகிறார்கள். கலை அழைத்தால் அங்கே மக்கள் கூட்டமாகப் போகிறார்கள். ஓவிய, நாடகக் கலைகளும் அப்படித்தான்,” என்கிறார் ஞானக்கூத்தன், அகவல் எனும் சொல்லை விளக்கும் பொருட்டு நிசி அகவல் கவிதை தொகுப்பில்.
இறுதியாக, ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவருக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தன. “தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை.”
‘அப்படி எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்…’ என சொல்ல துணிந்த, தன் காலத்தை பிரதிபலித்த, தன் காலத்திற்கு அப்பாலும் ஒலிக்கும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்காக வாழ்த்துக்கள்.

-நிறைவு-

No comments:

Post a Comment