கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்." – தேவதச்சன்{1}
சில ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரியத்துற்குரிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயமோகன். தமிழின் முக்கிய கவிஞர்களை ஒரு சேர சந்தித்தது அதுவே முதல்முறை. அந்த கூடுகைக்கு சுகுமாரன், கலாபிரியா, தேவதேவன் ஆகியவர்களுடன் தேவதச்சனும் வந்திருந்தார். நவீன கவிதையை தயங்கித் தயங்கி பரிச்சயம் செய்துகொண்ட காலகட்டமும் அதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து வைத்திருந்தேன். எவரிடமும் தனித்து பேசவும் கவிதை பற்றிய அபிப்ராயங்களை சொல்லவும் கூச்சம். எது கவிதை? அல்லது மடக்கி எழுதப்பட்ட வரிகள் எப்போது கவிதையாகிறது? குறிப்பிட்ட ஒரு கவிதையை ஏன் எல்லோரும் சிறந்த கவிதை என கொண்டாடுகிறார்கள்? அல்லது சிலவற்றை நிராகரிக்கிறார்கள்? என குழம்பி திரிந்த காலமது (இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. மோசமான கவிதைகளை இனங்காண முடியவில்லை என்றாலும், ஓரளவு நல்ல கவிதைகளை அடையாளம் காண முடிகிறது). அந்தக் கூடுகை கவிதை குறித்தான எனது புரிதல்களை விரிவாக்கியது. தேவதச்சன் தமிழின் முக்கியமான கவிஞர். கோவில்பட்டியில் இயங்கிய முக்கியமான இலக்கிய மையம் என்பதைத் தாண்டி அவருடைய கவிதைகளை ஒருசேர வாசித்தது விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது நிறைவான அனுபவத்தை அளித்தது.
தேவதச்சனின் கவிதைகள் அன்றாடத்திலிருந்து தன்னை வடித்து கொள்கின்றன. அவருக்கு கவிதை எழுதுவது கூட ‘ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போலிருக்கிறது’. சமையலறையில் பொங்கி வழியும் பால் கேலிப் புன்னகையுடன் ‘முன்னொரு காலத்தில்’ என கதைக்கத் துவங்குகிறது. ரேஷன் கடை வரிசையில் நிற்பது கூட அவருக்கு ஒரு யாத்திரை ஆகிறது. அசாதாரணமான சூழல்களை அவர் எதிர்கொள்வதில்லை. ஆனால் அன்றாடத்தில் ஒளிந்திருக்கும் வசீகரமான சிறு மர்மத்தை அவருடைய கவிதைகள் தொட்டெடுக்க முயல்கின்றன. மலைகளின் எதிரொலி (இரண்டாவது எதிரொலி) வீடு, ஆகியவைகள் உதாரணமாகக் கொள்ளலாம். ‘நீளம்’ கவிதையில் எப்போதும் இடம் மாறி இருக்கும் நகவெட்டியைக் கண்டடையும் அனுபவத்தை சொல்லி ‘ எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது/ என் கை எவ்வளவு நீளமென்று / என் கண்கள் ஒருபோதும் / அறிய முடியாத நீளம் என்று /.” என முடிக்கிறார். அடையாளம் எனும் கவிதையில் குழந்தைகள் வளர்வதை பற்றிய வியப்பைச் சொல்கிறார்.
ச. தமிழ்செல்வன் –எழுதிய கட்டுரையில் “அன்றாடப் புழக்கத்தில் உள்ள சொற்களே அவருடைய கைபட்டுக் கவித்துவ மெருகேறி மிளிர்வதை – அதன் சுழல் மொழி மழலையில்- நம்மால் சிலிர்ப்புடன் உள்வாங்க முடிகிறது..நாம் காணும் –நாம் வாழும்- இவ்வாழ்வின் சின்னஞ் சிறு தருணங்களே –அவற்றில் பொதிந்திருக்கும் வினோதங்களே தேவதச்சனின் கவிதைகளின் பாடுபொருளாகின்றன. பெரிதாக எதையும் சொல்ல வரவில்லை நான் என்கிற அடங்கிய தொனியே இவரது கவிதைகளின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.” என்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய கட்டுரையில் “தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன.”
மண்குதிரை காலச்சுவடில் ‘ஹேம்ஸ் எனும் காற்று’ தொகுப்பிற்கு எழுதிய மதிப்புரையில் “தேவதச்சனின் கவிதைகள் அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவர் ‘இமைகளின் மொழி’யிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). இந்த நெருக்கமான காட்சி இடுக்குகளின் வழியாக நமக்குப் புலப்படாத ஒரு கணத்தை எழுப்பிவிடுவார். இதன் மூலம் கவிதை ஒரு தனித்தன்மையைப் பெற்றுவிடுகிறது. இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது.”
எனினும் ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதை கவனிக்க வேண்டும். “தேவதச்சனின் உலகம் அன்றாட விஷயங்களால் ஆனது அல்ல. அன்றாட விஷயங்களில் அவர் தொடங்கினாலும் அவர் சென்றடைவது ஓரு நுண்ணிய உச்சநிலையை மட்டுமே....தேவதச்சன் சொல்லமுயல்வது ஓர் முழுமைத்தரிசனத்தை மட்டுமே. இவ்வுலகம் சிதறுண்ட காட்சிகளாலும் எண்ணங்களாலும் ஆனது. அவர் அவற்றைத் தொகுத்து ஒரு முழுமைத்தரிசனத்தை உருவாக்க முயல்கிறார்.”
மண்குதிரை வைக்கும் அவதானம் ஜெயமோகனின் கூற்றை எதிரொலிக்கிறது “திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கிளர்ச்சியும் வடிவ நேர்த்தியும் மட்டும் கொண்டவையல்ல தேவதச்சனின் கவிதைகள். அவை தம் எளிய மொழியால் பற்பல வாசல்களைத் திறந்து, சிலருக்கு நிகழ்வை, சிலருக்கு அந்நிகழ்வைத் துளைத்துச் செல்லும் பேரனுபவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.”
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ச.தமிழ்செல்வன், மண்குதிரை, ம.நவீன், ஜெ.செல்வராஜ், ஆகியவர்களின் கட்டுரைகளும் கவிதை வாசிப்புகளும் தேவதச்சனின் கவிதையுலகத்தை அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் துணை நின்றன. எனினும் கவிதை வாசிப்பு என்பது அந்தரங்கமானது. கவிதைகள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கணங்களில் வாசகனுக்கு தம்மைத் திறந்து காட்டுகின்றன.. தேவதச்சனின் கவிதைகள் கண்டடைதலின் பரபரப்பின்றி எதையோ ஒன்றைச் சுட்டிவிட்டு கைகட்டி அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிடுகின்றன. ஆனால் அவைகளை தவிர்த்து வேறு சில அக்கறைகளையும் கவலைகளையும் விமர்சனங்களையும்கூட அவருடைய கவிதைகள், ஓங்குதாங்காக இல்லை என்றாலும் தீர்க்கமாக பகிர்ந்து கொள்கின்றன.
தேவதச்சனின் கவிதைகளில் பல ஒரு காட்சியை அல்லது கதையை காட்டவோ சொல்லவோ முனைகின்றன. மூடி மூடித் திறக்கும் பின் கதவு கொண்ட அமரர் ஊர்தி, குண்டுப் பெண்ணின் ஷூ லேஸ், நீல நிற பலூன் என சில காட்சிகள் கவிதைகளைக் கடந்த பின்னரும் அகத்தை விட்டு நீங்க மறுக்கின்றன. அவருடைய ‘பார்க்கும் போதெல்லாம்’ கவிதை காட்சிசார் நினைவுத்தொடர்களை அடுக்கி ஒரு முழுவட்டத்தை அடைகிறது. புனைவுகளைப் போல் கவிதை மாந்தர்களுக்கு குணாதிசயங்களை அளிக்கிறார் “யாரைப் பார்த்தாலும் பேசுவாள் ஒருத்தி. எப்போதும் / விபரீதச் செய்திகளையே கொண்டு வருவாள் இன்னொருத்தி.”(மீன்). கைகலப்பில் ரத்தம் ஒழுக தோள் சாய்ந்து ரயிலில் பயணிக்கும் ஒருவனைப் பற்றி சொல்லிவிட்டு ‘என் அறை’ கவிதையில் “ தொலைவில் என் அறை தூங்கிக் கொண்டிருக்கிறது/ அங்கு/ மூடிய கதவு வழியே விழுந்துவிட்ட/ ரத்தத்தை துடைத்த தாள்/ தூங்கவும் இல்லை/ தூங்காமலும் இல்லை” என முடிக்கும் போது ஏறத்தாழ ஒரு சிறுகதையாக ஆகிவிடுகிறது. .
.
தேவதச்சன் கவிதைகளில் மற்றுமொரு பொதுக்கூறு ‘நீர்மை’ (fluidity) ’. மாறிக்கொண்டே இருக்கும் அடையாளங்களைக் கொண்டு திடமான ஒன்றை அடையாளப்படுத்த முற்படும்போது அதில் ஒருவித வசீகரத்தன்மை எழுகிறது. திடமான ஒன்றை நீர்மையாக மாற்றிக் காட்டுவது தேவதச்சனின் கவிதைகளின் தனி இயல்பு. தன்னிச்சையாக அவை வெளிப்படுகின்றன. அவரவர் கைமணல் தொகுப்பிற்கு யுவன் சந்திரசேகர் எழுதிய முன்னுரையில் “அவர் முன்னிறுத்தும் உலகம் கண்ணுக்குத் தெரியாத துருத்தி போல சுருங்கிச் சுருங்கி விரிகிறது. கால அனுபவம் நிலையாக இருப்பதில்லை- அண்மையும் சேய்மையும் மாறிமாறித் தென்படுவதில் வாசக மனம் சுலபமாக இடமாற்றம் கொள்ள நேர்கிறது.”
.
புது இடம்
தொலைபேசியில் சொன்னான்
ரயில்வே நிலையத்திற்கு
முன் இருப்பேன் என்று
கறுப்புநிற நாயின் அருகில்
நிற்பேன் என்று
வேகமாய்ப் பயணித்து
ரயில்வே நிலையத்தை அடைந்தேன்
நல்லவேளை, தொலைவிலிருந்து பார்க்கையிலேயே
தெரிந்துவிட்டான். கூட்டமான கூட்டம்.
கறுப்புநிற நாய் எங்கே?
நாய் இல்லாத இப்புது இடத்திற்கு
எப்போது வந்தான் அவன்.
இப்புதிய இடத்திற்கு வந்ததை
சொல்லவே இல்லையே அவன்- என்
இனிய சோம்பேறி நண்பன்.
மற்றொரு கவிதையான லோயா தீவில், லோயா தீவின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டும்போது “பற்கள் நகங்கள் தவிர மற்ற/ எல்லா இடங்களிலும்/ மிருதுவாக இருக்கும்/ தெருநாயிடமிருந்து தென்கிழக்காகவும்,/ சாலையில்/ வீரிட்டு அலறியபடி செல்லும் / ஆம்புலன்சின் / நிழலுக்கு மேற்காகவும் / வெவ்வேறு காலை நேரங்களில் / வெவ்வேறு ஊர்களில் / பறந்து கொண்டிருக்கும் / காகங்களுக்கு நடுவிலும்,/ சரியாக வாரப்படாத தலையோடு / பூக்கடை வாசலில் நிற்கும் / பெண்ணிடமிருந்து / கூப்பிடு தொலைவிலும் / இருப்பதாகக் கூறுகிறார்கள்.” என எழுதுகிறார்.
பலூனை சில கவிதைகளில் படிமமாக பயன்படுத்தும்போது இந்த பின்புலத்தில் அதை விளக்கிக் கொள்ளலாம். பலூன் விரியும் தன்மை கொண்ட திடப்பொருள், ஆனால் உள்ளே காற்றைச் சேமித்து வைத்திருக்கிறது. ‘ரகசிய கல்’ கவிதையில் “எப்போவாவது/ காற்றில்/ லேசாகவும் ஜாலியாகவும்/ ஆடத் தொடங்கிவிடுகிறது அது/ ஒரு சின்னப் பலூனைப் போல/ பெருங்காற்றை ரகஸ்யமாய் வைத்திருக்கும்/ சின்னஞ்சிறு பலூனைப் போல” என்று எழுதுகிறார். மற்றொரு கவிதையான நீல நிற பலூனில் “இந்த நீலநிற பலூன் மலரினும்/ மெலிதாக இருக்கிறது, எனினும்/ யாராவது பூமியை விட கனமானது/ எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்” என்கிறார். ஒரேவேளை எடையற்றதாகவும் திடமாகவும் இருக்கும் பலூன் தன்னுள் ஒரு மாயத்தை ஒளித்து தான் வைத்திருக்கிறது.
இந்த ‘இடமாற்றத்தை’ வெவ்வேறு வகையில் செய்து பார்க்கிறார். மனிதர்கள் இயல்புகளை அணிந்து கொள்பவர்கள் என்பது பொது சிந்தனை. ஆனால் மாறாக தேவதச்சனின் கவிதையில் இயல்புகள் மனிதனை அணிந்து கொள்கின்றன. அரூப இயல்புகள் எங்கும் சாசுவதமாக வசிக்கின்றன. அவை அணிந்து கொள்ளும் சட்டைகள் தான் மனிதர்கள். சட்டைகள் மாறிக்கொண்டு தானிருக்கின்றன இயல்புகள் அங்கேயே அப்படியே வசிக்கின்றன.
வீடு
தெருவில்
பழைய ஆட்கள் எல்லாம் வீடுகளைக்
காலி செய்துவிட்டுப் போகிறார்கள்
தொலைவு முகங்களும்
வினோத ஆடை நிறங்களுமாக
குடிவருகிரார்கள்
பரிச்சயம்ற்றவர்கள்
எனினும்
கொல்லையில் துளசிச் செயடியிடம் பேசுபவர்களும்
கண்ணாடித் தனிமையில் முணுமுணுப்பவர்களும்
சமையலறைப் பாத்திரங்களிடம் கொபிப்பவர்களும்
அடையாள அட்டையை ஒப்பிப்பவர்களும், எங்கோ
பிழிந்து கொண்ட சாவிகளை சவால் விடுபவர்களும்
மற்றும்
திறக்க வராத சைக்கிள் பூட்டைத் திட்டுபவர்கள்
வீடுகளைக் காலிசெய்து விட்டுப் போவதில்லை
அங்கங்கு அவர்கள் விட்டுச் சென்ற
சுவடுகளையும்
வடிவ போதத்தை கேள்விக்குள்ளாக்குதல் எனும் இயல்பு தேவதச்சனின் ‘சட்டை’ கவிதையில் மிகச் சிறப்பாக வெளிபட்டிருக்கிறது என எண்ணுகிறேன் ‘தொலைக்காட்சி அறிவுஜீவிகளை ‘ நினைவுறுத்தும் அரசியல் பகடி கவிதையாக வாசிக்க ஒரு சாத்தியம் இருந்தாலும், அதனுடைய மிகு கற்பனைகளின் கலவையால் இந்த கவிதை வசீகரிக்கிறது. கவிதையை காட்சிப்படுத்திக்கொள்வதிலும் அனுபவமாக்கிக் கொள்வதிலும் பெரும் சவாலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வரிகளை மனம் கற்பனையில் பொருள் விரித்துக் காண முயன்றுகொண்டே இருக்கிறது.
சட்டை
ஒரு சட்டையை சமையல் செய்வது எப்படி?
அதற்குக் கைகள் தரவேண்டும் முக்கியமாக
தலை நிற்பதற்கு ஒரு வெட்டவெளி வேண்டும்.
முதலில் மேஜையைப் பொடிபொடியாக நறுக்கி
பிறகு மெல்ல குவியும் சாலைக்குப்பைகள் மேல்
கொஞ்சம் செய்தித்தாளைக் கிழித்துப்போடு
ஒரு சினிமாவுக்குச் சென்றுவா
அடித்துக் கொண்டிருக்கும் தொலைபேசியை எடுக்காதே
அதில் கொஞ்சம் எழுத்து ஊற்று
சில முகமூடிகளைக் கொஞ்சநேரம் ஊறவை
தொலைகாட்சியில் கேட்கும் அரசியல் வசனங்களை
லேசாக வதக்கி வைத்துக்கொள்
1947 ம் வருடத்தையோ, அது
கிடைக்கவில்லை என்றால், சற்று முன்பின் வருடங்கலையோ
தண்ணீர்விட்டு, இறுக்கமாய் உருண்டைபோடு
அதில் கைகள் இருந்த இடத்தில்
தலையை வை
தலை இருந்த இடத்தில் கைகளை மாற்றி அடுக்கு
ஒரு பென்சிலைக் கொதிக்க வைத்து
தொலைபேசி ஒலிகள் மேல் தூவு
பிறகு, வாசலுக்குச் சென்று
யாரிடம் எல்லாச் சாவிகளும் இருக்கின்றன
என்று கத்து
வீட்டுக்குள் நுழைந்து
நீ சமையல் செய்த
சட்டையை குளிர்சாதனப்
பெட்டியில் வை
உன் கடிகாரத்தைப் பார்த்தபடி
பட்டினி கிட
முதல் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பில் “வெளியே காட்டிக்கொள்ளாத மெல்லிய சோகச் சிரிப்பொன்று இவர் கவிதைகளில் அங்கங்கே காணப்படுகிறது.” என்றொரு வரி இருக்கிறது. குளியலறை தனிமையை பற்றிய அவருடைய ‘பாலபாடம்’ கவிதை எனக்கு இந்த உணர்வை ஏற்படுத்தியது. இந்த நீர்த்துளிக்குள் தன்னை சிறைப்படுத்திகொள்ளும் உணர்வு. குளியலறையும்கூட சற்றே பெரிய நீர்த்துளி. விநோதமாக அடைபட்டு கிடப்பதுகூட விடுதலையுணர்வை அளிக்கிறது.
பாலபாடம்
இன்னுமா குளிக்கிறாய் என்று
கத்துகிறாய்
குளியலறைக் கண்ணீர்கள் \
குளியலறைப் பாடல்கள்
குளியலறை முணுமுணுப்புகள்
குளியலறைக் காமங்கள்
வனப்பூச்சிகள் போல் என்னைச் சூழப் பறக்கின்றன.
ஒருதுளி தண்ணீர். ஒரு
சின்னஞ்சிறு அறையாகிறது
குளியலறையில் குப்புறக்கிடக்கும்
கண்ணாடிபோல சதா
தெரிந்து கொண்டிருக்கிறேன் நான்
என் கோபங்களை நீரின் ஓசையில் ஒளித்து வைக்கிறேப்
என் பாடல்களை நீருக்கு ஓசையாக்குகிறேன்
நீரோசைகளைக் கேட்டபடி, நீ
வெளியே காத்திருக்கிறாய்
உன்னைப் பார்த்து முறுவலிக்கிறேன்,
என் இடத்திற்கு நீயும்
உன் இடத்திற்கு நானும்
மாறுகிறோம்
ஒரு இடத்தை, இன்னொரு இடத்திற்கு
எடுத்துச் செல்லும் பாலபாடத்தை
தண்ணீர் எனக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக
கற்றுத் தந்து
விட்டது
தேவதச்சன் தன் கவிதைகளில் தொன்மங்களையும் கையாள்கிறார். ஜன்னலெங்கே கவிதை சிபியின் சாளரத்தைத் தேடும் புறாவின் பதைப்பைச் சொல்கிறது. ‘கண்ணகி’ கவிதையில் அரவமின்றி சிலையை அகற்றிய பின்னர் “கேட்க துவங்கியது/ சிலம்பின் சத்தம்”.
.
தேவதச்சன் கவிதைகள் சமூக விமர்சனங்களை தொட்டுக் கொள்கிறது. ‘இன்றுவரை’. பொதுவாகவே கவிஞன் நிதான விரும்பி, அவன் ஒவ்வொன்றையும் நுணுகியும் விலகியும் நோக்குபவன். வேகம் அவனை திகைக்கச் செய்கிறது. குறிப்பாக சிறுநகரவாசியாக எப்போதும் பெருநகரங்களின் வேகம் நிலையிழக்க செய்யும். ‘என் நூற்றாண்டு’ கவிதையில் எவருக்கும் எதற்கும் நேரமில்லை, நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் எவர் மீதும் புகாராக இல்லை, தன் மீதான விமர்சனமாக “எவ்வளவு நேரம் தான் நான் இல்லாமல் இருப்பது/ எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”. ‘அமரர் ஊர்தி’ கவிதையில் சைரன் ஒலியுடன் கடந்து செல்லும் சரியாக மூடப்படாத பின்கதவு கொண்ட அமரர் ஊர்தி கடந்து செல்வதை மெதுவாக தேநீர் அருந்தியபடி பார்த்து கொண்டிருக்கிறான். மற்றொரு கவிதையில் ‘பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தப்பியோடும் ஆற்றை’ எழுதுகிறார். படுகையில் அமைதியாய் காத்திருக்ககிறது முதிர்ந்த மஞ்சள் நிற வண்ணத்துபூச்சி
மிக எளிய கவிதையாகத் தோன்றும் கவிதைக்கு ‘நம் கதை’ என்று தலைப்பிடிருக்கிறார் தேவதச்சன்.
நம் கதை
“முட்டையிலிருந்து வெளிவருவது யாராம்
எப்போதுமே
முட்டையிட்டவர்
முட்டையிடுவது யாராம்
எப்போதுமே
முட்டையிலிருந்தவர்
முட்டையை பிளப்பது யாராம்
எப்போதுமே
முட்டையிலிருப்பவர்
உன்னை
முட்டையில் திணிப்பது யாராம்
எப்போதுமே
முட்டையைத் தின்று செழித்தவர்
இந்தக் கவிதை ஆன்மீக கவிதையின் சாயலை கொண்டிருந்தாலும். அதன் இறுதி வரிகளில் கோபம் தொனிக்கிறது. காலங்காலமாக முட்டையை தின்று செழிப்பவர்களுக்காக முட்டைகள் உருவாகின்றன. உங்கள் முட்டைகளை நீங்கள் தேர்வு செய்வதில்லை. சமூகமாகவும், விழுமியங்களாகவும், அடையாளங்களாகவும், நீதி நெறிகளாகவும், நுகர்வுச் சங்கிலியாகவும் இன்னும் பல முட்டைகள் உள்ளே திணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே
என் கண்களை நழுவ விடுகிறேன்
என் காதுகளை உதிர்க்கிறேன்
மறையச் செய்கிறேன் என் நாசியை
இப்போது
மிஞ்சி நிற்கிறேன்
வாயும் வயிறுமாய்
மெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்
கரையோரம் வந்து
காத்துக் கிடக்கிறேன்
மாலைச்சிறுவர்கள் வருவார்கள் என
என்னை உள்ளங்கையில் ஏந்தி
ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என
அப்போது அவர்களிடமிருந்து
விரல்களைப் பரிசுபெறுவேன்
கண்களை வாங்கிக் கொள்வேன்
நாசியைப் பெற்றுக் கொள்வேன்.
கூடவே கூடவே
நானும்
விளையாடத் தொடங்குவேன்:
ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று
இந்தக் கவிதையின் குரூரம் நிலைகுலையச் செய்தது. நான் வாசித்தவரையில் தேவதச்சனின் எழுத்தில் வெளிப்பட்ட வன்மையான கவிதை என்று இதையே சொல்வேன். எல்லாவற்றையும் இழந்து காத்திருந்து தன்னை மீட்டுக்கொள்ள பசித்திருக்கும் மீன். குறிப்பாக கவிதையின் இறுதி வரிகள் குரூரத்தின் உச்சம்.
தேவதச்சனின் சில கவிதைகளில் விலகல் மனப்பான்மை மறைந்து ஆழமான தவிப்பும், பதைப்பும் வெளிப்படுகின்றன. ‘குருட்டு ஈ’, ‘ஜன்னலெங்கே’, ‘இந்த இரவு’ ஆகிய கவிதைகளை கூறலாம்.
விதையாய்த் தொடர
வேறு வழியுண்டோ
மரமாய்ப் பெறுகி பழமாய்க் கனியாமல்
ஏனோ இந்த வரிகள் என்னைக் குடைந்து கொண்டே இருக்கின்றன. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட எனது பள்ளி நண்பனின் முகம் நினைவில் துலங்கியது. ஒருவேளை கனியும் நிர்பந்தம் இன்றி விதையாகவே தொடர்ந்திருந்தால் அவன் மரணித்திருக்க மாட்டான். மரமாக பெருகுவதோடு நில்லாமல் கனியவும் வேண்டியதாய் இருக்கிறது. ஏறத்தாழ இதே போன்றதொரு ‘திரும்ப முடியாமையின் ஏக்கத்தை’ அவருடைய ‘அன்பின் பதட்டம்’ கவிதையும் பகிர்ந்துகொள்கிறது.
ஆனந்துடன் சேர்ந்து வெளியிட்ட அவரவர் கைமணல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘அடுத்த கட்டத்தில்’ எனும் முதல் கவிதையில் “எல்லாம் கண்டதால் அமைதியும், எதுவும்/ காணாததால் முயற்சியும் கொண்டு இங்கொரு மனம்/ தேடியபடி இருக்கிறது இயல்வதை” என்று எழுதுகிறார். ஒருவகையில் தேவதச்சனின் கவிதைகள் மானுட யத்தனங்கள் நிகழ்த்தும் சலசலப்பிற்கும் அமைதிக்கும் இடையிலான ஊடாட்டமாகவே இருக்கிறது.
யுவன் அவருடைய (மற்றும் ஆனந்துடைய) ஆன்மீக நோக்கை பற்றி எழுதும்போது “இவர்களின் கவிதைகளில் ஜென் மனோநிலையும் அதன் அழகியல் பின்புலமும் நிலவுகின்றன. நடைமுறை வாழ்வை மறுக்காமலே அதன் சாராம்சம் குறித்த விசாரணை ஈரம் ததும்ப நிகழ்கிறது.” என்கிறார்.
தேவதச்சனின் கவிதைகளில் ஆன்mமீகம் தத்துவ விசாரணையாகச் செல்லாமல் இருத்தலின் கனத்திலிருந்து தன்னை வடித்து கொள்கிறது. மிக முக்கியமாக வாழ்வின் மர்மங்கள் பற்றிய வியத்தல் அவருடைய கவிதைகளில் அரிதாகவே புலப்படுகின்றன. மிக யதார்த்தமாக பதறாமல் வெறும் அவதானமாக எதையோ சுட்டிவிட்டு அவருடைய கவிதைகள் பணிவாக ஒதுங்கி கொள்கின்றன. ‘அவரவர் கைமணல்’ ஒரு நல்ல உதாரணம்.
அவரவர் கைமணலைத் துழாவிக்/ கொண்டிருந்தோம்/ எவரெவர் கைமணலோ இவை என்றேன்/ ஆம் எவரெவர் கைமணலோ இவை என்றான்/ பிறகு/ மணலறக் கைகழுவிவிட்டு/ எங்கோ சென்றோம். இந்த கவிதை மிகச்சாதாரணமாக பதட்டமின்றி அலங்காரமின்றி வாழ்வின் பிரம்மாண்டத்தை நம்முள் கடத்திவிடுகிறது.
அவரவருக்கு அவரவர் உலகம் உண்டு. அந்த உலகம் அவரையே மையம் கொண்டு சுழல்கிறது. யாவற்றுக்கும் பொருள் துலங்குகிறது. ‘இணை புடவி’ மிகு புனைவு சாத்தியம் என்றில்லை. இங்கே நமக்கே நமக்கான பிரபஞ்சங்கள் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தனது லௌகீக கவலைகளைச் சுமந்து செல்லும் பள்ளிப் பெண் பேருந்தில் பயணிக்கும் குண்டுப் பெண்ணின் ஷூ லேஸ் அவிழ்ந்ததைப் பார்க்கிறாள். இந்தக் கவிதைக்கு அவரிட்ட தலைப்பு ‘இன்னொரு பக்கம்’ எதன் இன்னொரு பக்கம்? ‘இன்னொரு பகலில் ‘ எனும் சொல்
காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது
தேவதச்சனின் இந்த வரிகள் எல்லா வகையிலும் அவருடைய கவிதையுலகின் மிகச் சிறந்தவற்றைப் பிரதிநிதிப்படுத்துகிறது.. புலப்படும், வசப்படா வாழ்வின் வினோத நடனத்தைக் \கைக்கொள்ளவே கவிஞன் காலந்தோறும் மீண்டும் மீண்டும் முயல்கிறான். ஒருவேளை வசப்பட்டால் அவன் சொல் அவிந்து மீண்டும் மவுனத்திற்குத் திரும்பக கூடும்.
விஷ்ணுபுர இலக்கிய வட்ட விருது பெற்ற கவிஞர் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்.
1- அந்திமழை கட்டுரையில் ஜெ.செல்வராஜ் தேவதச்சன் வரியாக குறிப்பிடுவது.
இதில் மேற்கோள் காட்டப்படும் பெரும்பாலான கவிதைகள் உயிர்மை வெளியிட்ட ‘ஹேம்ஸ் எனும் காற்று’ தொகுப்பிலிருந்தும் காலச்சுவடு வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’ தொகுப்பிலிருந்தும் கையாளபட்டிருக்கிறது.
-நரோபா
http://www.sramakrishnan.com/?p=366
http://mankuthiray.blogspot.in/2015/04/blog-post_16.html
http://satamilselvan.blogspot.in/2011/05/7.html
http://andhimazhai.com/news/view/selvaraj-jegadesan-5.html
http://jselvaraj.blogspot.in/2012/06/blog-post.html
http://www.kalachuvadu.com/issue-137/page67.asp
http://vallinam.com.my/navin/?p=2123
http://www.jeyamohan.in/78155#.Vk7ge9IrLIV
http://www.jeyamohan.in/78185#.Vk7ghdIrLIV
http://www.jeyamohan.in/78296#.Vk7gitIrLIV
No comments:
Post a Comment