Sunday, April 30, 2017

தாத்தா - சில நினைவுகள்

(எனது தாத்தா அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியரின் நூற்றாண்டை முன்னிட்டு தொகுக்கப்படும் நூலுக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரை)

இப்போது கண்ணை மூடிக்கொண்டு தாத்தாவை நினைத்தால் என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது?

 சற்றே கூனிய மேல் முதுகும், சிவப்பு தோலில் படிந்த தேன் புள்ளிகளும், பளிங்கு நீல விழிகளும் தான் மனதை நிறைக்கின்றன. பின்னங்கழுத்துக்கு கீழே தோல் தடித்த அரக்கு நிற அடையை அவ்வப்போது சொறிந்துகொள்வார். கை எட்டாத போது சீப்பால் நாங்கள் யாராவது சொறிந்து விட்டதும் கூட உண்டு. சட்டையணியாத வெற்றுடலுடன் திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார். நாங்கள் யாராவது ஊரிலிருந்து வந்தால் தெலுங்கில் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர் பாட்டுக்கும் வைத்தியத்தை தொடர்வார். அவரிடம் இரண்டே இரண்டு சட்டைகள் தான் இருந்ததாக நினைவு. வான் நீல நிற ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை ஒன்று, சந்தன நிறத்தில் மற்றொன்று. மூன்றோ, நான்கோ தங்க நிற பித்தான்கள் இருக்கும். வெளியூர்களுக்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே அதை அணிவார். சிறிய எவர்சில்வர் செவ்வக பெட்டி ஒன்று அவரிடம் இருக்கும். அதில் மூக்குபொடியை போட்டு வைத்திருப்பார். அதன் துளைக்கும் நெடியை நாசி நுனி நன்றாக நினைவில் வைத்திருக்கிறது, பொடி உறிஞ்சிய பிறகு வீடதிற எழும் தொடர் தும்மல் ஒலிகளையும் கேட்க முடியும். முற்றத்தின் அலுமினிய கம்பிகளில் தொங்கும் பொடி கறை படிந்த வெள்ளை கைக்குட்டைகளையும், கெளபீனங்களையும், அழுக்கேறிய குத்தால சிவப்பு துண்டையும் நினைவில் கொள்கிறேன். ஒரு பெரிய அலுமினிய பெட்டி ஒன்றிருக்கும். அந்த காலத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வார்களே அந்த மாதிரி. வெளியே வைத்தியத்துக்கு செல்லும்போது அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தான் போவார். மனமார சிரிக்கும் ஒலி, கீழே அமர்ந்து கல்வத்தில் அரைக்கும் போது எழும்’ டணங்’. கூடத்தில் சாய்வு நாற்காலியில் வாய் பிளந்து உறங்கும் போது அடித்தொண்டையிலிருந்து எழும் குறட்டை என அவருக்கே உரித்த ஒலிகளை செவி மீட்டு எடுக்கின்றன.



விசேஷ நாட்களில் அரிமள வீட்டின் கூடத்தில் ஆண்கள் உறங்குவோம். முற்றத்தில் கட்டியிருக்கும் படுதாக்கள் காற்றிலாடும். பின்கட்டில் இருக்கும் கழிவறைக்கு செல்ல எதுவாக மூலையில் சன்னமாக ஒரு பச்சைநிற அரிக்கேன் விளக்கு ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கும். தாத்தாவுடைய அப்பாவின் படத்திற்கு முன் தீகங்கு போல் ஒளி நடனமிடும் இரவு விளக்கின் வெளிச்சத்தில், இரண்டு தலைகாணி வைத்து வாய் பிளந்து உறங்கும் தாத்தாவிடமிருந்து எழும் குறட்டை ஒலி என்னை நள்ளிரவுகளில் எழுப்பிவிடும். அரிக்கேன் விளக்கின் நிழல்களும், ஆடும் படுதாவும் எனக்கு அமானுஷ்ய அனுபவங்களை அளித்திருக்கின்றன. அப்பாவின் மரணத்திற்கு பின் ஒரு துளி கண்ணீர் விடாமல் உறைந்து நின்றிருந்தது ஒரு காட்சியாக எனக்குள் எங்கோ நிலைத்திருக்கிறது. என்னிடமிருந்து தர்ப்பையை வாங்கி அவர் அப்பாவிற்கு காரியம் செய்ததும் கூட. அவர் மடியில் அமர்ந்து “குப்பச்சி கூத்ரு..வெங்கச்சி ராஸ்கல்” என அவர் சொன்னதை திருப்பி சொல்லும்போது அவர் உரக்க சிரித்ததை மனம் சேமித்து வைத்திருக்கிறது. கேபிள் தொலைக்காட்சி வந்த புதிதில் என்னிடம் ‘இவதான் குப்புவா (குஷ்புவா)?’ என குறும்பாக கேட்பார். தொலைகாட்சியில் வரும் பாடல்களை பார்க்கும் போது “ஏமி முத்துகொல்லு காவல்சிந்தி ? (என்ன முத்த கொஞ்சல் வேண்டிகிடக்கு) என செல்லமாக சலித்து கொண்டு தொலைகாட்சியை நின்றுகொண்டே பார்ப்பார். தாத்தாவை குரலாக, அசைவுகளாக, காட்சிகளாக, வாசனைகளாக, தொடுகைகளாக நினைவு கூற முடிகிறது. இந்த விவரணைகளுக்கு பொருளேதும் உள்ளதா என நானறியேன். ஆனால் இவையெல்லாம் இத்தனை வருடங்களுக்கு பின் ஏன் என்னுள் எஞ்சியிருக்கின்றன? தெரியவில்லை.

‘குருதி சோறு’ ‘அம்புப் படுக்கை’ என எனது இரு கதைகளில் தாத்தாவின் நீர்த்த சித்திரங்கள் வெளிபட்டிருக்கிறது என தோன்றியது. ஆனால்; புனைவுகளின் பொன் விதியை மனதில் கொண்டால், என் தாத்தாவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. தாத்தாவின் சில கூறுகளைக்கொண்டு நானே சமைத்தது. என்னை சித்த மருத்துவராக ஆக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் திண்ணையில் சட்டையின்றி கிழடு கட்டைகளை பார்க்கும் நாட்டு வைத்தியனாக வாழ்ந்திட எனக்கு இம்மியளவும் விருப்பமில்லை. தாத்தா நாடி பார்ப்பதில் விற்பன்னர் என அறியப்பட்டவர். மரண குறிகளை கணிப்பதிலும் நல்ல தேர்ச்சியுண்டு. பள்ளி பருவங்களில் நான் வெகு அருகில் நின்று கவனித்திருக்கிறேன். மருந்து இருந்தும் கூட, சில நேரங்களில் மருந்தை அளிக்காமல் மூன்று நான்கு நாட்களுக்கு பின் வர சொல்வார். அப்படி அவர் சொல்லும்போது எனக்கு ஆத்திரமாக வரும். இப்படி அலைய விடலாமா? என கேட்க வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் எல்லோரிடமும் அப்படி செய்ததுமில்லை. இன்று அது எனக்கு உறைக்கிறது. ஒரு எல்லையில்  ‘இந்திய மருத்துவம்’ அல்லது மருத்துவமே கூட நோயாளிகளின் பூரண நம்பிக்கையை கோருகிறது. அவரை புரிந்து கொள்கிறேன், சில சித்தர் பாடல்களை சொல்லி விளக்கம் சொல்வார். நான் பொருட்படுத்தி கேட்டு கொண்டதில்லை. நான் நவீன மருத்துவம் பயின்று, நவீன அறுவை சிகிச்சை நிபுணராக ஆக வேண்டும் எனும் லட்சியம் கொண்டிருந்தேன். நாடியின் நுட்பங்களை சொல்வார் எனக்கு அவை விளங்கியதில்லை. பத்து மாத்திரைகளும், பேதி மாத்திரைகளும் உருட்டியிருக்கிறேன். நவீன மருத்துவராக முயன்ற எனது கனவு மதிப்பெண்கள் போதாமையால் தகர்ந்தது. ஆயுர்வேத மருத்துவம் பயில சென்ற என்னை காண அவரில்லை. இப்போது அவரிடம் கேட்கவும் பெறவும் எத்தனையோ விஷயங்கள் உண்டு. . 

காரைக்குடி வரும்போது கட்டிலில் சாய்ந்துகொண்டு கர்நாடக சங்கீதத்தை ;ஷார்ப்’ டேப்ரெகார்டரில் கண்மூடி, தலையாட்டி கேட்டு கொண்டிருப்பார். கடைசி காலங்களில் அவருடன் யாராவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என விழைந்தார். நான் பனிரெண்டாவது படிக்கும் போது, அறைக்குள் அழைப்பார். ‘சீ சீ..ஒகே ஆராட்டியங்க உந்தி’ (என்னமோ படுத்துகிறது) ..நீ இங்கேயே இரு..பக்கத்துல யாராவது இருந்தா பயமில்லாம இருக்கு..’ என்பார். நானும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பேன். ஏற்கனவே ஒரு அட்டாக் வந்திருந்தது. மார்வலிக்கு ‘ஐசொட்ரில்’ மாத்திரைகளை நாக்கடியில் சுவைத்து கொண்டிருந்தார்  ஒரு மாபெரும் வைத்தியன் தன் மரணம் எனும் நிதர்சனத்தை பழக்கிகொள்ள முயன்றதை இன்று எண்ணுகையில் ஒருவித கலக்கம் ஏற்படுகிறது.

ஒரு மருத்துவராக அவரை மதிப்பிடுவது முக்கியம் என்று கருதுகிறேன். பத்து பதினோரு வயதில் சந்தர்ப்ப வசத்தால் சாகக் கிடக்கும் மூதாட்டியை முதன் முறையாக காண செல்கிறார். தொடர் வயிற்று போக்கால் துவண்டு கிடக்கிறார் அந்த மூதாட்டி நாடி பிடித்து பார்த்துவிட்டு ஏதோ ஒரு பத்தியத்தை சொல்லிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால் தான் தவறான பத்தியத்தை சொல்லிவிட்டோமோ எனும் குழப்பம். இரவெல்லாம் ஒவ்வொரு சிறு அசைவுக்கும், ஓசைக்கும் விதிர்ந்து அமர்ந்தபடி காத்திருந்தார். தெருவில் எவரேனும் வேகுவேகுவென நடந்தாலே அது அந்த மூதாட்டியின் மரணத்தின் பொருட்டு தந்தையிடம் சண்டையிட என்று அஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. காலையில் ஒரேயொருவர் மட்டும் வருகிறார். “பரவாயில்லையே உங்கள் மகன் நல்ல சமர்த்தன்..பாட்டி பிழைத்து கொண்டாள்” என சொல்லிவிட்டு செல்கிறார். இந்த கைராசி என்பது என்ன என்பதை வகுத்துகொள்வதில் எனக்கு இப்போதும் சிக்கலுண்டு. ஜீன் லாங்க்போர்ட் கூற்றுப்படி பண்பாட்டுக்கு குணபடுத்தும் தன்மை உண்டு என்கிறார். அதாவது நோயாளி எங்கோ இந்த மருத்துவன் தம்மை குனபடுத்துவான் என நம்ப துவங்குகிறான். குணமாதல் அந்தப் புள்ளியில் இருந்தே துவங்குகிறது. மருத்துவன் நோயாளியின் நம்பிக்கையைப் பெற பல்வேறு வழிவகைகள் உண்டு. நவீன மருத்துவரும் சரி நாட்டு வைத்தியரும் சரி சில குறியீடுகள் வழியாக நோயாளிகளின் நம்பிக்கையுடன் உரையாடுகிறார்கள். அவருடைய காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான வைத்தியர்களுக்கு இருந்தது போல் ‘மரபு மருத்துவம்’ சார்ந்து போலி பெருமிதமோ மேட்டிமையோ இருந்ததில்லை  என்பதை நினைவு கூர்கிறேன். நவீன அறிவியலை, மருத்துவத்தை பழித்து நானறிந்து அவர் பேசியதில்லை. இதய நோய்க்கு நவீன மருத்துவரை அணுகுவதில் அவருக்கு எவ்வித தயக்கமும் இல்லை. மருந்தை உட்கொள்ள மாட்டார் என்பது வேறு விஷயம். விழுங்குவது போல் பாவனை செய்து சில நேரங்களில் தூக்கி வீசிவிடுவார். கீழே கிடக்கும் மாத்திரைகளை நானே பொறுக்கி எடுத்திருக்கிறேன். பாட்டிக்கு புற்று நோய் வந்த போதும் அடையாறு மையத்துக்கு தான் அழைத்து சென்றார். மேலும் அவர் தலைமுறையில் ஊருக்கு (குடும்பத்துக்கு ஒன்று என கூட கூறலாம்) ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார்கள். நவீன மருத்துவம் மெல்ல அவர்களின் இடத்தை எடுத்துகொண்டது. பெரும்பான்மையானவர்கள் அடுத்த தலைமுறையினரை வேறு வாழ்க்கை தளங்களுக்கு கொண்டு சென்று விட்டனர். இதில் பிழைக்க வழியில்லை எனும் முடிவுக்கு பலரும் வந்திருந்தனர். ஆனால் தாத்தா அப்பாவை சித்த மருத்துவம் படிக்க பாளையம்கோட்டை அனுப்பியது எனக்கு இன்றும் ஆச்சரியமாகவே இருக்கிறது (ஒருவேளை அது என் அப்பாவின் பிடிவாதமாகவும் இருக்கலாம்). ஒரு மருத்துவனாக தனது மருத்துவ முறையின் மீதும் தன் மீதும் எந்த மிகை மதிப்பீடுகளையும் அவர் அனுமதிக்கவில்லை.

அவரிடம் அபாரமான தொழில் நேர்த்தி உண்டு. மருந்துகளை தானே இடித்து, மேற்பார்வையிட்டு செய்வார். நோயாளிகளை காத்திருக்க விடமாட்டார். அதிகாலையிலேயே எழுந்து நோயாளிகளை பார்க்க செல்வார். மதிய வேளைகளில் தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரும் வந்தால் கூட சலித்துகொள்ளாமல் போய் பார்ப்பார். எங்களுக்குத்தான் எழுப்ப மனம் வராது. மருத்துவர்களின் வாழ்வின் மிகப்பெரிய வரம் தாம் விரும்பும் வரை மருத்துவராக இருக்கலாம் என்பதே. வாழைக்காய்களையும், வெள்ளரி பிஞ்சுகளையும், நிலக் கடலைகளையும், முருங்கைகளையும்  வாஞ்சையுடன் நோயிலிருந்து விடுபட்டவர்கள் அவருக்கு அளிப்பதை பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக இன்று எனக்கு அப்படியொரு நிகழ்வு ஏற்படும் போது எனக்கு அவை அளிக்கும் நிறைவும் பெருமையும் அளப்பறியாதது. நிலப் பிரபுத்துவ காலத்திலிருந்து வெளியேறி நான் முதலாளித்துவ காலங்களில் வாழ்கிறேன். இங்கே எனது யுகத்தில் மருத்துவர் – நோயாளி உறவு என்பதன் சமன்பாடு புதிய எல்லைகளை அடைந்து இருக்கிறது. இன்று நோயாளியை அவசியத்திற்கு மேல் அறிய வேண்டியதில்லை, ஒருவகையில் அத்தகைய அறிதலே ஒரு மீறல் தான். நான் நோயாளியை அறிவதில்லை அவன் நோயை மட்டுமே அறிகிறேன். ஆனால் அரிதாக அப்படியான ஒரு பிணைப்பு நேரும் போது மனம் அதை மகிழ்வுடன் ஏற்கிறது. தாத்தா அவ்வகையில் பலருடைய வாழ்வுடன் பினைந்திருந்தார் என்று எண்ணும்போது பொறாமையாக கூட இருக்கிறது. 

நான் தந்தையை கண்டு வளர்ந்தவனில்லை, அந்த இடத்தை அம்மாவழி தாத்தாவும் அப்பாவழி தாத்தாவும் தான் நிறைத்தார்கள் அதிகமும் அவர்களுடனேயே செலவழித்து இருக்கிறேன். தந்தை ஒரு சாகசக்காரர், தாத்தா ஒரு நடைமுறைவாதி. நான் அதிகமும் நடைமுறைவாதியாக, சாகசங்களில் இருந்து விலகி வேடிக்கை பார்ப்பவனாக இருப்பதற்கு தாத்தாவும் ஒரு காரணம். அவர் குரல் ஓங்கி ஒலித்து நான் கேட்டதில்லை. பெரிய ஆரவாரங்கள் ஏதுமில்லை. அப்பா நேர்மாறானவர். கொண்டாட்டமும், ஆராவரங்களும், களியாட்டமும் சூழ வாழ்ந்தவர். தலைமுறைகள் முந்தைய தலைமுறைகளின் மிகைகளுக்கான முறி மருந்தாக குடும்பங்களில் செயலாற்றுகின்றன என தோன்றுகிறது. தன் பிரியத்துற்குரிய மகன், தன் கனவுகளை சுமந்து அடுத்த தலைமுறைக்கு சென்றவன் இளவயதில் மரித்ததின் துயரம் அல்லது குற்ற உணர்வு அவரை குடைந்திருக்க வேண்டும். தாத்தா, இன்றிருந்தால் ஒன்றை சொல்வேன், அது உங்கள் சுமையல்ல. அது என் தந்தை தேர்ந்த வழி. நீங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை.

எனது குரல் இன்று அவருடைய குரலாகவே ஒலிக்கிறது.கொஞ்சம் மேல் முதுகு கூனலும் கூட வந்துவிட்டது. தலைமுடி உதிர துவங்கிவிட்டது. சட்டையை கழட்டி திண்ணையில் அமரும் துணிவு எனக்கு இன்றில்லை. தாத்தா சித்த மருத்துவரின் பண்பாட்டு அடையாளம் எதுவோ அதையே சூடியிருந்தார், எவ்வித பாசாங்கும் மேட்டிமையும் இன்றி அப்படியே வெகுமக்களுடன் உரையாட முடிந்தது. நான் வேறு அடையாளங்களை சூடியிருக்கிறேன். அவர் அஞ்சியவற்றை நானும் அஞ்சி, அவர் கண்டதை நானும் கண்டு, அவர் சறுக்கிய தடையங்களில் காலூன்றி நானும் என் தாத்தாவாக, தந்தையாகத்தான் ஆகி கொண்டிருக்கிறேன். வாழ்விறுதியில் அவர் நின்ற படியிலிருந்து குறைந்தது ஒரு படி மேலேறி இருந்தேன் என்றால் அவரளித்தவைக்கு அவருக்கு நான் செலுத்தும் மனமார்ந்த நன்றியாக இருக்க முடியும். .  

1 comment:

  1. Naam ellorumae aetho oru vagaiyil nam munnorai nadithu konduthanae irukkirom suneel

    ReplyDelete