(எனது தாத்தா அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியரின் நூற்றாண்டை முன்னிட்டு தொகுக்கப்படும் நூலுக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரை)
இப்போது கண்ணை மூடிக்கொண்டு தாத்தாவை நினைத்தால் என்னவெல்லாம் நினைவுக்கு
வருகிறது?
சற்றே கூனிய மேல் முதுகும், சிவப்பு
தோலில் படிந்த தேன் புள்ளிகளும், பளிங்கு நீல விழிகளும் தான் மனதை நிறைக்கின்றன.
பின்னங்கழுத்துக்கு கீழே தோல் தடித்த அரக்கு நிற அடையை அவ்வப்போது
சொறிந்துகொள்வார். கை எட்டாத போது சீப்பால் நாங்கள் யாராவது சொறிந்து விட்டதும் கூட
உண்டு. சட்டையணியாத வெற்றுடலுடன் திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார்.
நாங்கள் யாராவது ஊரிலிருந்து வந்தால் தெலுங்கில் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர்
பாட்டுக்கும் வைத்தியத்தை தொடர்வார். அவரிடம் இரண்டே இரண்டு சட்டைகள் தான்
இருந்ததாக நினைவு. வான் நீல நிற ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை ஒன்று, சந்தன
நிறத்தில் மற்றொன்று. மூன்றோ, நான்கோ தங்க நிற பித்தான்கள் இருக்கும்.
வெளியூர்களுக்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே அதை அணிவார். சிறிய
எவர்சில்வர் செவ்வக பெட்டி ஒன்று அவரிடம் இருக்கும். அதில் மூக்குபொடியை போட்டு
வைத்திருப்பார். அதன் துளைக்கும் நெடியை நாசி நுனி நன்றாக நினைவில்
வைத்திருக்கிறது, பொடி உறிஞ்சிய பிறகு வீடதிற எழும் தொடர் தும்மல் ஒலிகளையும்
கேட்க முடியும். முற்றத்தின் அலுமினிய கம்பிகளில் தொங்கும் பொடி கறை படிந்த வெள்ளை
கைக்குட்டைகளையும், கெளபீனங்களையும், அழுக்கேறிய குத்தால சிவப்பு துண்டையும்
நினைவில் கொள்கிறேன். ஒரு பெரிய அலுமினிய பெட்டி ஒன்றிருக்கும். அந்த காலத்தில்
பள்ளிக்கு கொண்டு செல்வார்களே அந்த மாதிரி. வெளியே வைத்தியத்துக்கு செல்லும்போது
அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தான் போவார். மனமார சிரிக்கும் ஒலி, கீழே அமர்ந்து
கல்வத்தில் அரைக்கும் போது எழும்’ டணங்’. கூடத்தில் சாய்வு நாற்காலியில் வாய்
பிளந்து உறங்கும் போது அடித்தொண்டையிலிருந்து எழும் குறட்டை என அவருக்கே உரித்த
ஒலிகளை செவி மீட்டு எடுக்கின்றன.