Wednesday, January 4, 2017

தம்பட்டம்

எழுத்தாளன் தனது கதைகளை பற்றி தானே பேசகூடாது தான். ஆனால் வேறு எவரும் எதையும் பெரிதாக பேசாத போது அவனே பேசும் துர்பாக்கியமான நிலைக்கு தள்ளபடுகிறான். பெரிய எழுத்தாளனோ தக்குனூன்டு எழுத்தாளனோ அவனுக்கு வாசிக்கப்படவில்லை அல்லது சரியாக வாசிக்கப்படவில்லை எனும் கவலை இருப்பது இயல்பே. எனக்கும் அது உண்டு. ஒருவேளை சரியாக வாசித்தால் இன்னும் கூட மதிப்பீடு கீழிrங்கலாம்: J

சுருக்கமாக எனது சிறுகதைகளை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன். இதுவரையில் தமிழில் பனிரெண்டு கதைகள் பிரசுரமாகி உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு அறிவியல் புனைவு எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். மற்றொரு தமிழ் சிறுகதை பிரசுரத்திற்கு உள்ளது. இரண்டு விதமான கதைகளை எழுதி இருக்கிறேன் என கூறலாம்.


நக்ர ரேதஸ், ஆரோகணம், காளிங்க நர்த்தனம், குருதி சோறு பிரசுரமாகாத கூண்டு ஆகிய கதைகள் கனவுத்தன்மையை அடிப்படையாக கொண்டவை. சால்வடார் டாலியின் ஓவியங்கள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஆரோகணம் கதையில் அனைத்து முகங்களும் காந்தியாக தெரியும் காட்சி, காளிங்க நர்த்தனத்தில் பெரும் சர்ப்பத்தை வெற்றிகொள்ள முயலும் மனிதர்கள் பற்றிய கனவு சித்தரிப்பு, குருதி சோறில் வரும் புராண கதை, நக்ர ரேதசில் வரும் இறுதி கனவு, கூண்டு முழுகதையையும் சொல்லலாம், அம்பு படுக்கையில் வரும் நாடி பற்றிய பகுதி – இவை அனைத்துமே ஒரு சர்ரியல் ஓவியமாகத்தான் உதித்தது. நான் ஒரு வரைய தெரியாத ஓவியன். கற்பனையில் கனவில் வந்த ஓவியங்களை அர்த்தபடுத்திகொள்ளும் முயற்சிகளே இப்புனைவுகள் என கூறலாம்.

நாற்காலி, ருசி, வாசுதேவன் மற்றும் இங்கர்சால் போன்ற கதைகள் வேறு வகையானவை. அவை நுண் சித்தரிப்புகள் கொண்டவை, வாழ்வை பற்றிய விசாரணையை உள்ளடக்கமாக கொண்டவை. இக்கதைகளை இப்போது வாசிக்கையில் கொஞ்சம் வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என தோன்றியது. நான் அணுக்கமாக கண்ட மனிதர்களின் நினைவுகளை தாங்கி செல்பவை. இங்கர்சால் கதையில் வரும் சவுண்ட் மாமா குறைந்தது நானறிந்த மூன்று வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளின் கலவையில் உருவானவர். இவை எப்படி நிகழ்கிறது? இதுவே எழுத்தின் ரசவாதம்.

திருமிகு. பரிசுத்தம், 934 ஆகிய இரு குறுங்கதைகளும் கவிதையாக எழுத உத்தேசித்து கதைகளாக உருவானவை. மிகுந்த மன நிறைவை அளித்தவை. மொழி அடர்த்தியையும் கொண்டவை. 2016 ஆர்வெலின் 1984 நாவலுக்கு மாறுபட்ட முறையில் விமர்சனமாக எழுத முயன்றேன், ஆனால் அது ஒரு கதையாகவே உருகொண்டிருக்கிறது. 2016 கதையிலிருந்து எனது எழுத்துமுறை மாறியிருப்பதை உணர்கிறேன்.

அடிப்படையில் நான் ஒரு கதைசொல்லி. குருதி சோறு, காளிங்க நர்த்தனம், அம்பு படுக்கை, இங்கர்சால் போன்ற கதைகளில் அதையே முயன்றிருக்கிறேன்.

வாழ்வின் பொருளின்மை அல்லது பொருள் தேடும் விழைவு என் கதைகளில் மீண்டும் மீண்டும் வருவதாக உணர்கிறேன். வாசுதேவன், இங்கர்சால், காளிங்க நர்த்தனம், 934, அம்புபடுக்கை என திரும்ப திரும்ப இதே கேள்வி எழுகிறது. விடுதலை வேட்கையையும் சேர்த்து கொள்ளலாம். ஆங்கில கதையிலும், கூண்டு கதையிலும் இதுவே மையமாக இருக்கிறது. ஆண் – பெண் உறவு சார்ந்து, அல்லது வலுவான பெண் பாத்திரங்கள் உடைய கதைகளை நான் இதுவரை எழுதவே இல்லை. தந்தை சார்ந்த வலுவான பாத்திர உருவாக்கம் பல கதைகளில் உருவாகி இருக்கிறது.

கவிதைக்கு நெருக்கமான கதைகளை எழுத வேண்டும் என தோன்றுகிறது. பகடி நிறைய கதைகளில் இயல்பாக வெளிபடுகிறது என்று எண்ணுகிறேன். யதார்த்த கதைகளை இன்னமும் வலுவாக எழுத வேண்டும். சம்பிரதாய இறுதி முடிச்சு எனும் வடிவை மீறி வாழ்வின் வலை பின்னலை காட்ட முடியுமா என்பதே என் நோக்கமாக இருக்கிறது. அயர்ச்சியை அளிக்காமல் நல்ல மொழியில் வாசிப்பு சுவாரசியத்துடன் இதை செய்ய முயன்றால் நன்றாக இருக்கும்.


சுய பிரதாபம் போதும். சொல்ல வேண்டியவை சொல்லிவிட்டேன் என நம்புகிறேன். 

No comments:

Post a Comment