புத்தகங்கள்

Pages

Tuesday, January 3, 2017

நினைவசை

சற்றே தாமதமாகத்தான் சென்ற ஆண்டின் நினைவுகளை எழுதுகிறேன். புதுவருடம் எனக்கு ரயிலில் பிறந்தது. திருவண்ணாமலைக்கு பயணமாகி கொண்டிருந்தோம். சுதீருக்கு கரும்பு தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டி இருந்தது. ஆலயத்தினுள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். சுற்று சுவரை கரும்பு தொட்டிலோடு சுற்றி வந்ததோடு சரி. மலையையே ஈசனாக எண்ணி வணங்கி விடைபெற்று, சென்னை பயணம் முடித்து இன்று தான் வீடு திரும்பினேன்.

ஜனவரியில் வளைகாப்பு, அதன் பின்னர் மார்ச் 8 அன்று அதிகாலை பிறந்தான். முந்தைய நாள் காலை ஈற்றரையுள் அனுமதிக்கப்பட்டாள் மானசா, அந்த மகா சிவராத்திரி முழுவதும்  விடிய விடிய ஜிப்மர் மரத்தடியில் பதட்டத்துடன் கண்விழித்து கிடந்தேன். குழந்தை பிறப்பதற்கு முன் இரண்டு மூன்று முறையும், சுதீர் பிறந்த பிறகு இரண்டு மூன்று முறையுமாக இந்த ஆண்டு பாண்டிச்சேரிக்கு சென்றபடி இருந்தேன். இரண்டாவது இல்லம் என கூறும் அளவுக்கு அந்நகரை நேசிக்க துவங்கினேன். இரவுகளில் பொன்னொளி உமிழும் சோடியம் விளக்குகளில் கடலை காண்பதும், அங்கு வரும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பதும் அலாதியான அனுபவம். சில நேரம் பகல்களில் அம்பேத்கர் மண்டபத்தில் அமர்ந்துவிட்டு வருவேன். சிவாத்மா, ரமேஷ் போன்ற நண்பர்களை ஒருவேளையாவது சந்தித்து பேசி விட்டு ஊர் திரும்புவேன். 



மே மாதம் சுதீரும் மானசாவும் வீடு திரும்பினார்கள். வீட்டில் இருக்கும் பெரும்பான்மை நேரம் அவனோடு தான் கழிக்கிறேன். அவனுடன் இருக்கும், அவனை கவனிக்கும் ஒவ்வொரு கணமும் பெரும் உவகையை அளிக்கிறது. வாழ்க்கை ஒரு கொண்டாட்டடம் என மனம் துள்ளுகிறது. உறங்கிக்கொண்டிருக்கையில் அவன் புன்முறுவளிப்பதை காணும் போது, காரணமற்று மகிழ்ந்திருக்க, சிரிக்க ஏன் நம்மால் அத்தனை எளிதில் இயல்வதில்லை? காரணமற்று துன்புற்று இருப்பது எத்தனை இயல்பாக வருகிறது? குழந்தைகளை பெற்ற எல்லோரும் இப்படியாக எதையாவது சொல்லத்தான் செய்வார்கள், எல்லோரும் உணர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும், இந்த உணர்வை எழுதுவது கூட கிளிஷேவாக இருக்கலாம், நடந்து தேய்ந்த பாதை தான், மனிதன் தன்னை தானே நேசிப்பதை தாண்டி வேறொருவரை தனக்கும் மேலாக நேசிக்கிறான் என்றால் அவனது குழந்தைகளாகத்தான் இருக்கும். நிபந்தனையற்ற அன்பு கணங்களில் தோன்றி கணங்களில் மறைவது. சுதீரின் வழியாகவே நான் அதை உணர்ந்தேன். வெண்முரசு வரிசையில் நீலம் வாசிக்கும் போது எனக்கு பெரும் வாதையாக இருந்தது. எல்லா குழந்தைகளும் கண்ணன் தானே. இந்த வருடம் சுதீரின் வருகையால் ஆசிர்வதிக்கப்பட்ட வருடம்.
நடுவில் கொஞ்சகாலம் ஒருவித மரண பயம். இன்னதென்று வகைபடுத்த முடியாத பயம். சுதீரின் முகம் மனக்கண்ணில் ெதோன்றும்போதெல்லாம் அந்த பயம் அதிகமானது. சௌந்தர் 'ம்ருத்யஞ்சய' மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கொண்டு மலையை கடக்க முடியும் என புரிந்துகொண்டேன். நம்ப முடியாத அளவுக்கு மன திடத்தை அளித்தது.




புல்லட் எனது நெடு நால் கனவு. ஆனால் வாங்க வேண்டும் என்றெல்லாம் எண்ணியதில்லை. காந்தி வேண்டாம் என்று எச்சரித்து கொண்டிருந்தார். நுகர்வுக்குள் விழுகிறாய், எரிபொருளை வீணாக்குகிறாய் என்றார். கனவே வென்றது. வருத்தமில்லை.. என்னைப்பற்றிய கற்பிதங்கள் ஏதும் எனக்கில்லை. நண்பர் சிறில், "gandhi had bullet in chest and you had it in your butt" என்றார். புல்லட் வாங்கியதன் நோக்கம் இனி தான் நிறைவேற வேண்டும். பெரிய பயணங்கள் ஏதும் இதுவரை வாய்க்கவில்லை. நண்பன் வினோத்தை காண புதுகோட்டை வரை சென்றது தான் அதிகபட்ச தொலைவு. அங்கிருந்து சித்தன்னவாசல், குடுமியான் மலை கூட அவனுடைய ஆக்டிவாவில் தான் சென்றேன். இனிய பயணம். வினோத் பலானோவின் 'சேவேஜ் டிடக்டிவ்ஸ்' நாவலின் சில அத்தியாயங்களை மொழி பெயர்த்திருந்தான். தூயனையும் சந்தித்தேன். சித்தண்ணவாசலில் ஓவியர் ஆலங்குடி சுபிரமணியன் அறிமுகமானார். கொழுஞ்சி பழம், களாகாய் என பலவற்றை சுவைக்க தந்தார். ஒவ்வொரு மரத்தையும் செடியையும் அடையாளம் காட்டினார். பறவைகளையும் தாவரங்களையும் மருந்துகளாக அறிவேன், ஆனால் கண்டறிய முடிந்ததில்லை..இனியாவது அடையாளம் காண வேண்டும். 

குறுங்கதைகள் எழுதினேன். சிறுகதைகள் ஜெயமோகன் புண்ணியத்தில் கொஞ்சம் கவனம் பெற்றது. நல்லதோ அல்லதோ கவனம் பெறுவது மகிழ்ச்சி. நான் என்னை புனைவெழுத்தாளன் என்றே கருதுகிறேன். எண்ணிக்கையில் அவை குறைவென்றாலும். என்னால் மகத்தான கதைகளை எழுத முடியும் என நம்புகிறேன். எவரும் இக்கதைகளை பற்றி பெரிதாக ஏதும் சொல்லபோவதில்லை, எழுத்தாளரே அவருடைய கதைகளை பற்றி சொல்வது நாகரீக குறைவு என்றாலும் கூட, வேறு வழியில்லை. வேறு பெயர்களில் நானே சரியான வாசிப்புகளை சூட்டி கடிதங்கள் எழுதுவதை காட்டிலும் என் கதைகளை பற்றி நானே எழுதுவது மேல். இது அதற்கான நேரமும் இடமும் அல்ல. ஆகட்டும் பார்ப்போம்.  

அதிரடியாக ஏதாவது கிறுக்கு தனங்களை செய்து நாளாயிற்று. இந்த வருஷம் அப்படி இரண்டு அனுபவங்கள். ஃபிப்ரவரி கடைசியில் காரைக்குடி புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டால் எடுத்தேன். பத்துநாளும் அங்கு சென்று அமர்ந்தேன். லாபமும் இல்லை நட்டமும் இல்லை. இனியும் தொடர்வேன். அதன் பின் மூன்று மாதங்கள் இந்திய குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் வெறி என்னை ஆட்கொண்டது. தம்பி பூ.கொ. சரவணன் மே மாதம் தேர்வானதற்கு வாழ்த்து சொன்னபோது திடிரென்று முடிவெடுத்தேன். 32 வயது வரை எழுதலாம் என்றான். மூன்று முயற்சிகள் இருக்கின்றன. எழுதித்தான் பார்ப்போமே என மே மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் பரீட்சை வரை இதற்காக உழைத்தேன். காரைக்குடியில் அழகப்பா பல்கலைகழகம் சென்றாண்டு முதல் அரசு தேர்வுகளுக்கு என ஒரு படிப்பு வட்டத்தை உருவாக்கி இருக்கிறது. தரமான நூல்களும், இதழ்களும் போட்டி தேர்வு எழுதுபவர்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். சுரேஷ் குமார் எனும் அற்புதமான ஆளுமையை இங்கு தான் சந்தித்தேன். இளம் பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களை அழைத்து வந்து எங்களோடு உரையாட செய்தார். பிரமாதமான அனுபவம். மேகாலாயாவில் ஆட்சியராக இருக்கும் நண்பர் ராம்குமார் தொடர்ந்து ஊக்கமளித்தார். சனிக்கிழமைகளிலும் ஞாயிற்று கிழமைகளிலும் வகுப்புகளுக்கு சென்றேன். புவியியல், வரலாறு, சூழலியல் என படிக்க சுவாரசியமாக இருந்தது. நாள்தோறும் இரண்டு மணிநேரங்களுக்கு மேல் செய்தி இதழ்களை வாசித்தேன். நிகழ்வுகளின் தொடர்சிகளை, அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகளை ஊகிக்க முடிந்தது. முதற்கட்ட தேர்வில் தேர்வாகவில்லை. அத்துடன் இந்த முயற்சி முடிவுக்கு வந்தது. நான் ஆட்சியர் பணிக்கு உகந்த ஆள் இல்லை என தோன்றியபடி இருந்தது. மேலும் கிளினிக்கில் ஆட்கள் வரத்து இயல்புக்கு திரும்பியதால் கூட இந்த கிறுக்கு தனங்கள் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் இந்த மாதங்கள் மறக்க முடியாத நாட்கள். சுரேஷ் குமார் அவர்களை பற்றி நிறைய எழுத வேண்டும். தன்னலமற்ற அவர் பணி எப்போதும் தொடர வேண்டும்.

இவ்வாண்டு இருமுறை தஞ்சாவூர் பயணம், நானும் நண்பர் கடலூர் சீனுவும் கீரனூர் ஜாகிர்ராஜாவை காண ஒருமுறை தஞ்சாவூர் சென்றோம். அவர் வீட்டிலேயே உணவுண்டு வெகுநேரம் பேசிவிட்டு வந்தோம். ஜாகிர் ராஜா பகிர்ந்த விஷயங்களை வெளியே எழுதுவது சரியா என்று கூட தெரியவில்லை. மிகசிறந்த அனுபவம். உடல்நிலை இயல்புக்கு திரும்பி கொண்டிருந்தது. மீண்டு வந்து எழுதி கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சி. மற்றொரு முறை ராமின் அம்மா தவறிய போது. ராம் மனதிற்கு நெருக்கமானவர். அவர் அம்மாவை திருவனந்தபுரத்திலும் தஞ்சையிலும் சந்தித்திருக்கிறேன்.  

சென்னையில் நண்பர் சௌந்தரின் ஆசிரமத்தில் மாதாந்திர ஓபி இனிதே துவங்கி நிகழ்கிறது. ஆனால் என்னால் அங்கு இன்னும் சரியாக காலூன்ற இயலவில்லை. ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு செல்வது ஒரு இனிய சடங்காக ஆகிவிட்டது. இரண்டு மூன்று நோயாளிகளையும் இருபது முப்பது நண்பர்களையும் சந்திப்பதை வாடிக்கையாக கொண்டேன்:). சௌந்தர் வீட்டில் உரிமையுடன் புழங்க முடிந்தது. நான் பாட்டுக்கு சென்று உண்டு உறங்கி பேசி இன்புற்று திரும்புவேன். வெண் முரசு கூடுகைகளின் தேதியோடு இயைந்து வருவதாக இரண்டாவது ஞாயிறுகளில் அங்கு செல்வது தான் திட்டம். ஆனால் பல்வேறு காரணங்களினால் பல மாதங்கள் அப்படி நிகழாமல் போனது. இருந்தும் இரண்டு மூன்று முறை வெண் முரசு கூடுகைகளில் பங்கு கொண்டேன். ஒருமுறை வெண் முரசின் வெகு மக்கள் என்றொரு கட்டுரையும் வாசித்தேன். வெண் முரசு கூடுகைகள் முக்கியமான நிகழ்வு. எந்த ஒரு நவீன நாவலுக்கும் இத்தனை வகையான வாசிப்பு சாத்தியங்கள் சுட்டிகாட்டபட்டதில்லை. ரவி, சுரேஷ், சர்வோத்தமன், நட்பாஸ், காளி, பிரஷாந்த், ஜா ஜா, ரகு  போன்ற நண்பர்களை எப்படியும் சென்னை பயணத்தின் போது சந்தித்துவிடுவேன். காளியின் மகன் அஸ்வதின் ஆயுஷ் ஹோமத்தில் பங்குகொண்டு ஜா ஜா மற்றும் ரகு இல்லங்களுக்கு சென்றதும் இனிய நினைவுகளாக எஞ்சி இருக்கும். குறிப்பாக விஷ்வாவும் ஹர்சிதாவும் சொன்ன பேய் கதைகள். 

தொலைக்காட்சி தோன்றல்கள் ஏதும் இந்த வருடம் பெரிதாக இல்லை. சில அழைப்புகளை மறுக்க வேண்டியதாய் இருந்தது. ஜெயலலிதா அஞ்சலி நிகழ்வில் மட்டும் பங்கு கொண்டேன். அதிலும் மிகுந்த கவனத்தோடு பேசினேன். கட்சி முத்திரை விழுந்துவிட கூடாதே என. ஜெயலலிதா பற்றிய என் மதிப்பீட்டை இதே தளத்தில் எழுதி விட்டேன். அந்தோணி அவர்களை நெடு நாட்களுக்கு பின் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

உறவினர் ஒருவர் கிண்டில் டேப்லட் பரிசளித்தார். வாசிப்பையே மாற்றியது என்று சொன்னால் மிகையாகாது. bookzz dot org, gen dot rus dot ec போன்ற தளங்களில் mobi ஃபார்மட் கோப்புகளில் அனேக முக்கிய நூல்கள் கிடைக்கின்றன. நிறைய வாசிக்க முடிந்தது. அவ்வகையில் ஸ்வெட்லான அலேக்சிவிச்சின் 'second hand time' மிக முக்கியமான நூல். 

பல நாட்களாக பரணில் உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவின் ஓலைச்சுவடி சேகரிப்புகள் இப்போது ஆவணபடுத்த படுகின்றன. சித்த மருத்துவர் டாக்டர். திரு நாராயணன் மற்றும் ஃபிரெஞ்சு ஆய்வாளர் ப்ரிஜிட் செபாஸ்தியா இனைந்து 100 சுவடி கட்டுகளை வகைபடுத்தும்  முயற்சியில் ஈடுபடிருக்கிரார்கள். எங்கள் குடும்பத்தை பற்றி எனக்கு பல ஆச்சரியமான தகவல்களை அவை அளிக்கின்றன. ஒரு பெரு நாவலுக்கான களம் அதிலிருக்கிறது.

வருட இறுதியில்  வண்ணதாசன் விழா. நன்றாக ஒருங்கிணைக்கப்பட்ட விழா. வண்ணதாசன் படைப்புலகம் குறித்து நான் எழுதிய கட்டுரையும் அவரை பற்றிய "தாமிராபரணம்" நூலில் இடம் பெற்றிருக்கிறது. மச்சினன் திருமணத்தை மானசா வீட்டோரோடு சேர்ந்து நல்லவிதமாக நடத்தினோம்.  ஒரு பத்து நாளில், நாளுக்கு ஆறு எபிசொட் வீதம், game of thrones ன்  இது வரையிலான 60 பகுதிகளையும் வெறித்தனமாக கண்டு முடித்தேன். சில நிகழ்வுகளும், பாத்திரங்களும் இப்போதும் மனதில் தங்கியிருக்கின்றன.  நண்பர் ராட்டையை  முதன்முறையாக நேரில் சந்தித்ததும் இவ்வாண்டு தான். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி 150 குறித்து விவாத அரங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதில் பங்கு கொண்டு எனது கருத்துக்களை எடுத்து வைத்தேன். முதன்முறையாக அண்ணாமலை, பிரேமா அண்ணாமலை, வாத்தியார் மோகன், பாதமுத்து ஐய்யா ஆகியோர்களை சந்தித்தேன். காந்தியர் என என்னை அடையாளம் செய்துகொள்வது மாபாவம். அவர்களை கண்டபோது அதை உணர்ந்துகொண்டேன். 

பணமதிப்பு நீக்கம் நம் தலைமுறையில் நாம் சந்தித்த மிகப்பெரிய நிகழ்வு. ஆரம்ப நாட்கள் பெரும் மனகிளர்சியை அளித்தன. போக போக அயர்ச்சியும் சோர்வும் தான் எஞ்சியது. ஆனால் சூழலை மக்கள் நடவடிக்கையை கவனிக்க முடிந்தது. நடவடிக்கைகள் மீறல்கள் என அரசும் மக்களும் ஆடு புலி ஆட்டம் ஆடிகொண்டிருந்தார்கள். 

சென்ற ஆண்டு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்த ஆண்டாகவே இருந்திருக்கிறது. வருமாண்டாவது எழுதி முடிக்க திட்டமிட்டவைகளை முடிக்க வேண்டும். சுதீருடன் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வுடன் செலவிட வேண்டும். 

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

1 comment: