அண்மையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் சிறப்புரை ஆற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் அழைக்கப்பட்டிருந்தார். நவீன காலகட்டத்தில் காந்திய சிந்தனையை தமிழக சூழலில் பல தளங்களில் கொண்டு செல்லும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். நானும் சென்றிருந்தேன். சிறப்பான அந்த உரை முடிந்த பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. ஒரு கல்லூரி மாணவன் எழுந்து அந்த சிறப்பு பேச்சாளரிடம், “ காந்தி, தன்னுடைய பனியா இனம் வளம் பெற வேண்டும் என்பதற்காக குறுகிய நோக்கில் அனைவரையும் நூல் நூற்கச் சொன்னார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, அப்படிச் சொல்லும் ஒரு புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன் , இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வி என்னை திடுக்கிட செய்தது. நம் வரலாற்று உணர்வையும் புரிதலையும் எண்ணி நம்மை நாமே மெச்சிகொள்ளத்தான் வேண்டும். அந்த மாணவனை நான் குற்றம் சொல்ல மாட்டேன், எதிர்மறையாகவேணும் காந்தி குறித்து ஏதேனும் ஒன்றை வாசித்திருக்கிறான், அதைப் பற்றிய ஐயத்தை அவனால் எழுப்ப முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய நிலைமை அதைவிட மோசம் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.
காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு இருபதாம் நூற்றாண்டின் வேறெந்த மனிதரின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டதில்லை என்று எனக்கு தோன்றுவதுண்டு. இதற்கு மிக முக்கியமான காரணம், தன்னுடைய வாழ்வை முழுமையாக அதன் அத்தனை கீழ்மைகளுடனும் நம்முன் பரப்பிக் காட்டும் துணிவு காந்திக்கு இருந்ததுதான்.
காந்தியின் வாழ்க்கை பற்றிய பதிவுகள் சிதறிக்கிடக்கும் உலோக உதிரி பாகங்களைப் போல், அதை வைத்து ஒரு இயந்திர துப்பாக்கியையும் நாம் உருவாக்கலாம், அல்லது நமது இலக்கை நோக்கி பயணிக்க ஏதுவான வாகனத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவையான துண்டு நிகழ்வுகளைக் கட்டமைத்து, அவரை கையை பிசைந்துக்கொண்டு மிரட்டலாக சிரிக்கும் வில்லனாக சித்தரிக்கலாம், அல்லது அத்தனை வில்லன்களையும் ஒரேயடியில் துவம்சம் செய்யும் புரட்சி நாயகனாகவும் சித்தரிக்கலாம். இத்தனை வாழ்க்கை வரலாறுகள் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன, ஆனால் ஒரு எளிய மனப்பதிவு மூலமே பெரும்பாலான இந்தியர்கள் அவைகளை பொருட்படுத்தாமல் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள்.
காந்தியின் சரிதைகள் எனக்கு அலுப்பு தட்டுவதே இல்லை ஒவ்வொரு சரிதையும் ஏதோ ஒருவகையில் காந்தியைப் புதிய கோணத்தில் காட்டுவதாகவே இருக்கிறது. அவ்வகையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் வின்சென்ட் ஷீன் எழுதி, சிவசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வ.வு.சி நூலக வெளியீடான மகாத்மா காந்தியின் சரிதை மிக முக்கியமான நூலாகும். ஷீன் , ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர், பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். காந்தியின் இறுதி காலத்தில் அவருடன் காலம் கழித்தவர். காந்தியின் மரண தருணத்தின் நேரடி சாட்சியாக இருந்தவர்.
இன்றைய நூல் அறிமுகம், ஒட்டுமொத்தமாக காந்தியின் வாழ்க்கையை பற்றிய பதிவாக இல்லாமல், என்னுடைய பார்வையில் ஷீன் முன்வைக்கும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பார்வைகளைக்கொண்டு காந்தியின் ஆளுமையை புரிந்துகொள்ள முயல்வதே இந்த கட்டுரையின் நோக்கம். ஷீனுக்கு உணர்ச்சிகரமான நடை எளிதில் கைகூடியிருக்கிறது என்பதை நிச்சயம் சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பாளர் சிவசாமியும் அதே நடையை தன்னுடைய எழுத்தில் ஓரளவிற்கு வெற்றிகரமாக கொணர்ந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.
வின்சென்ட் ஷீன்
முதல் அத்தியாயத்தில் , ‘இந்த இருபதாம் நூற்றாண்டில் பொதுமக்களின் மகானாக ஆகும் அந்த இணையற்ற துர்பாக்கியம் அவருக்குக் கிட்டியது’ என்றே தொடங்குகிறார் ஷீன். காந்தி வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் மீது கட்டி எழுப்பப்பட்ட தொன்மக்கதைகளை பற்றி சுவாரசியமாக குறிப்பிடுகிறார் ஷீன். காந்தியின் புகைப்படம் பொருந்திய டாலர் ஒன்றை அணிந்திருந்த வங்காளி ஒருவர் காந்தியை சந்திக்க வருகிறார், தனக்கு சில வருடங்களாக பார்ஸ்வ வாய்வு இருந்து அவதியுற்றதாகவும், அந்த டாலரை அணிந்து தினமும் காந்தியின் நாமத்தை செபித்துக் கொண்டிருந்ததால் அந்த நோயிலிருந்து மீண்டு எழுந்ததாகவும் காந்தியிடமே கூறுகிறார் அவர். உங்களை குணமாக்கியது கடவுளே அன்றி காந்தி அல்ல என்று மறுக்கிறார் காந்தி. காந்தி பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டியில் இருந்து தலைக்குப்புற கீழே விழுகிறார் ஒருவர். அவர் இறந்திருப்பார் என்று அனவைரும் அஞ்சுகிறார்கள், ஆனால் சிரித்துக்கொண்டே சிறு காயம் கூட இன்றி எழுந்து நடந்து வருகிறார் அவர். இதற்குக் காரணம் காந்தியின் அருகாமை என்று நம்பப்பட்டது. இறந்த குழந்தைக்கு காந்தி உயிர் கொடுத்தார் என்றார்கள் காந்தி கொடுத்தது என்னவோ எனிமா தான். ஆம் காந்தி சொல்வதுப்போல் “மகாத்மாக்களின் மனத்துயரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.”
இந்த மகாத்மா எனும் சட்டகம் அவருக்கு நன்மை செய்ததா இல்லையா என்பது மிக சிக்கலான கேள்வி. அவரை அப்படி அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லைதான் எனினும். மக்கள் சக்தி ஒன்று திரள நிச்சயம் அந்த சட்டகம் அன்றைய சூழலில் உதவியது என்பதையும் மறுக்க முடியாது. காந்தி தோட்டி வேலை உட்பட அனேக வேலைகளைத் தானே செய்தாலும், அவை எவர் கண்களையும் உறுத்தியதில்லை, ஏனெனில் அவர் மகான், மகான்கள் காலகாலமாக அப்படித்தான் இருந்திருக்கிறார்கள், மகான்கள் வணங்கப்பட வேண்டுமே அன்றி பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பதே மக்களின் மனோபாவமாக இருந்திருக்கிறது.
மகாத்மாவாகவே இருந்தாலும், அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்கள் ஆதரவை பெறவில்லை. சாதியை பற்றியும் தீண்டாமை பற்றியும் சமஸ்தான ராஜாக்கள் தொடங்கி காங்கிரஸ் தொண்டர்கள் வரை முழங்கிக்கொண்டே தானிருந்தனர், ஆனால் யாரும் ஒரு தீண்டத்தகாதவருடன் சமமாக அமர்ந்து உணவை பகிர்ந்துண்ண தயாராக இல்லை. காந்தி சபர்மதி ஆசிரமத்தில் அதைச் செய்தார். அவர் ஆசிரமத்திற்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருந்த ஜாதி இந்துக்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. நிதியுதவி நிறுத்தப்பட்டது. காந்தி இந்த சூழலில் ஆற்றிய எதிர்வினை அபாரமானது, அந்த ஒரு எண்ணமே சராசரியிலிருந்து அவர் மாறுபட்டவர் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது எனலாம், தனது ஆசிரமத்தையே தீண்டத்தகாதவர்கள் வாழ்ந்த சேரிக்கு மாற்ற யத்தனித்தார் காந்தி. யாரோ முகமறியாத முகமதியர் ஆசிரமத்திற்கு நிதியளிக்க முன்வந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஷீன் காந்தியின் மிக முக்கியமான அணுகுமுறையை பற்றி பேசுகிறார், காந்தி அடிப்படையில் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடப்பவர். அவர் ஆதர்சமாக கொண்ட கீதை, தால்ஸ்தாய், ரஸ்கின் என ஒவ்வொன்றுமே ஏற்கனவே அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை ஆழமாக்குவதாகவே இருந்தன. அவரது நம்பிக்கைக்கான ஆதாரங்களை தேடி சேகரித்து வலுபடுத்திக்கொண்டார் என்று.
வேறு பல நிலைப்பாடுகள் காலப்போக்கில் மாறியதுப் போல், ராணுவம் மற்றும் காவல் துறை பற்றிய பார்வையும் காந்திக்கு மாறியதாக சொல்கிறார் ஷீன். காந்தியின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காந்தி தன்னிடம் ‘பலமான ராணுவமும் போலீசும் இல்லாமல் அரசாங்கம் நீடிக்க முடியாது’ என்று தெரிவித்ததாக சொல்கிறார். அன்றைய மதக் கலவரங்கள், உயிர் சேதங்கள் அவரை வெகுவாக பாதித்தது. ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற கண்காணிப்பு அமைப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி அவரை சிந்திக்க செய்திருக்கக்கூடும்.
காந்தியின் மிக முக்கியமான தவறு என ஷீன் கூறுவது விவாதத்திற்கு உரியது, தன்னைப் போன்ற சாதாரண பிறவியால் பல ஒழுக்கங்களைக் கடைபிடித்து சாதிக்க முடியும் எனும் போது பிற அனைவராலும் தன்னைக் காட்டிலும் சிறப்பாகவோ அல்லது குறைந்தது தன்னளவிலோ சாதிக்க முடியும் என்று மண்ணில் வாழ்ந்த அனேக மகான்களைப் போல் அவரும் தவறாக கணித்தார் என்கிறார் ஷீன். டால்ஸ்டாய் ஒரு இலக்கியவாதியாக பல விஷயங்களை எழுதினாரே ஒழிய அவைகளை தன்னுடைய தனிவாழ்வில் அவர் கடைபிடித்ததில்லை என்பது அவருக்கு உறைக்கவே இல்லை என்கிறார். காந்தி அவருடைய நெருங்கிய சீடர்களை வேண்டுமானால் இப்படி அணுகியிருக்கக் கூடும், ஆனால் மக்கள் திரளை பற்றியும், பெருந்திரள் மக்களின் மனோபாவம் பற்றியும் உலகின் பிற தலைவர்களைக் காட்டிலும் அதிகமான புரிதல் காந்திக்கு இருந்தது என்றே நம்புகிறேன்.
ஷீன் காந்தியிடம் இருந்த அபாரமான நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தென்னாப்ரிக்காவில் கடுமையான கருப்பு பிளேக் பரவிய காலத்தில் சுரங்கத் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டார் அவர். அவர்களை கவனிக்க நியமிக்கப்பட்ட பெண் நர்சுக்கு நோய் தொற்று பரவி விடுமோ என்று அஞ்சி ஓரிரு நாட்களில் திரும்ப அனுப்பினார், ஆனால் அவரும் நோய் பீடித்து ஓரிரு நாட்களில் மரணித்தார். சுகாதாரம் குன்றிய, அசுத்தமான இடங்களிலும், நோயாளிகளுக்கும் இடையே காந்தி தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்தாலும் அவரை பெரும் நோய் தொற்றுகள் ஏதும் பாதித்ததில்லை என்பது ஆச்சரியமானது. ஒருமுறை நுரையீரல் பாதிக்கப்படுகிறது, குடல்வால் அழற்சி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆகாகான் சிறைசாலையில் மலேரியாவால் பீடிக்கப்பட்டார். அவருடைய நீண்ட வாழ்வையும், வாழ்ந்த சூழலையும் கணக்கில் கொண்டால் இது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறைசாலையில் குடல்வால் அழற்சி ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அறுவை சிகிச்சையில் மரணம் நேரிட்டால் அதை பொருட்டு கிளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்று ஆங்கிலேய அதிகாரிகள் பதறி சென்று காந்தியிடம் எழுதிவாங்கிக்கொண்டார்கள் என்கிறார் ஷீன்.
அடிப்படையில் காந்தி உள்முக ஆளுமை கொண்டவர் (introvert) இங்கிலாந்திலும் , பின்னர் இந்தியா வந்த புதிதிலும் அவர் பிறர் முன் பேசவே கூச்ச்சப்படுபவர்தான், தென்னாப்ரிக்காவில் அவரடைந்த மாற்றங்கள் நிச்சயம் அபாரமானவை. காந்தி வாதாடிய எழுபது வழக்குகளில், ஒன்றில் மட்டும்தான் தோற்றார் என்கிறார் ஷீன். காந்தி போராட்ட களத்திற்கு தயார்படுத்தும் முன்பு, அந்த போராட்டத்தில் பங்குபெறுவதால் நேரும் அதிகபட்ச இழப்புக்கான சாத்தியக்கூறுகளை விளக்கி புரியவைத்து அவர்களின் பூரண சம்மதத்துடன்தான் போராட்டத்தில் அவர்களை இணைத்துக் கொண்டார் என்பதையும் ஷீன் சுட்டிக்காட்டுகிறார்.
காந்தி தொடர்ந்து எதிர் தரப்பின் மனசாட்சியுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் குறும்பு நிறைந்த கோட்டி கிழவர்தான் இந்த காந்தி, தன்னை உளவு பார்க்க வந்த உளவு துறை போலீசாரை உபசரித்து நட்பாக்கிக்கொண்டது, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, தான் செய்தது உங்கள் சட்டப்படி மாபெரும் குற்றம்தான் என ஒப்புக்கொண்டு அதற்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு கேட்டு நீதிபதியையே குழப்புவது, இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த லார்ட் ரீடிங், வேலிங்டன், இர்வின், மவுண்ட்பேட்டன் என அனேக ஆங்கிலேய அதிகாரிகளின் நன்மதிப்பையும் நட்பையும் சம்பாதித்தது என எதிர்த்தரப்பை தொடர்ந்து மரியாதையுடனே நடத்தி வந்திருக்கிறார் காந்தி. அதேபோல் ரூஸ்வெல்ட், இந்தியா மீது எடுத்துக்கொண்ட அக்கறை பற்றியும், தொடர்ந்து இந்திய விடுதலை குறித்து சர்ச்சிலுக்கு ஏற்படுத்திய நிர்பந்தம் பற்றியும் ஷீன் பதிவு செய்துள்ளார், இந்த செய்தி எனக்கு புதிதாக இருந்தது. ஷீன், பகத் சிங் பிரச்சனை பற்றியோ அல்லது காந்தியின் பாலியல் சோதனைகள் பற்றியோ ஒருவரிக்கூட குறிப்பிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.
பொதுவாக காந்திக்கு கலை இலக்கிய ஆர்வம் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. வட்டமேசை மாநாடு முடித்து ஊர் திரும்பும் பொழுது ரோமைன் ரோலாந்தை முதன்முதலாக சந்திக்கிறார் காந்தி, ரோலாந்தை தனக்காக பியானோ வாசிக்கச் சொல்லி கேட்கிறார், அவரும் மகிழ்ந்து பீத்தோவனின் அந்தாந்தே எனும் பிரபலமான இசைக் கோர்ப்பை வாசித்து காட்டுகிறார். பின்னர் ரோம் நகரில், பெனிட்டோ முசோலினியை சந்தித்து இருபது நிமிடம் பயனற்ற பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் காந்தி. என்ன பேசியிருப்பார்?
உண்ணாவிரதத்தை அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக காந்தி பயன்படுத்தினார் என்பது அவர் மீது பரவலாக வைக்கப்படும் குற்றசாட்டுகளில் ஒன்று. காந்தி உண்மையில் அதை ஒரு பிரார்த்தனையாக, ஆன்மவலுவை அதிகப்படுத்தும் யுத்தியாக மட்டுமே பார்த்தார் என்கிறார் ஷீன். அதேபோல் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பேசியதைக் காட்டிலும், தம்மக்களின் துன்பங்களை பற்றியே சிந்தித்தார், பேசினார் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்தியா தன்னை ஆங்கிலேயர்களுக்கு சமானமான தளத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும், அதற்காக மக்களை தயார்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஷீனின் இந்த சரிதையைக்கொண்டே அட்டன்பரோ தன்னுடைய திரைப்படத்தை உருவாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. ஷீனின் சரிதையின் பாதிப்பை கணிசமாக திரைப்படத்தில் காண முடியும்.
காந்தியின் மரணத்திற்கு பின்னர், முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளால் ஆன சிறப்பு ரயில் ஒன்றில் அவருடைய சாம்பலைக் கொண்டு சென்று கரைத்தனர் என்று ஷீன் முன்வைக்கும் சித்திரம் மனதை பிசைகிறது. வாழ்க்கை முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் காலம் கழித்த அந்த கிழவர், அந்த மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்த தம்மக்களையும் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கும் சிந்தித்து செயல்பட்ட ஒரு மாமனிதனின் உடல் பிடி சாம்பலாக ஜல பிரவாகத்தில் சங்கமித்துவிட்டது. காந்தி, நெருப்பனைந்து நீர்த்த அந்த பிடி சாம்பல் அல்ல, தனது கீழ்மைகளை பொசுக்க முயன்று மேல்நோக்கி எழும் தழல். நேர்மையும், வாய்மையும் கொண்ட ஒவ்வொரு மனிதனின் ஆழத்திலும் அந்த தழல் சுடர்விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் வரை காந்திக்கு அழிவில்லை.
மகாத்மா காந்தி
வின்சென்ட் ஷீன்
சரிதை, ஆங்கிலம், தமிழ், மொழிபெயர்ப்பு,