ஆயிற்று, இதோ மற்றொரு வருடம். நீரில் கரைந்த வெல்லம் என நாநுனியில் எஞ்சும் இனிமையை மட்டும் விட்டுசென்றுவிட்டு முழுமையாக கரைந்தே விட்டது. இனிமை தான் எஞ்சுகிறதா என்றால், அப்படி அது மட்டுமே எஞ்ச வேண்டும் என பூரணமாக விழைகிறேன். காலம் தன் பங்கிற்கு எல்லா ருசிகளையும், விரும்பினாலும் இல்லாவிட்டாலும் உணரசெய்து தான் புதிய வேறொன்றாக பிறப்பெடுக்கிறது. ஒற்றை ருசி நல்லதற்கில்லை, எல்லாமும் கலந்து தான் இருக்க வேண்டும் என்றாலும், நமக்கு உவப்பளிக்கும் விகிதங்களில் அவை பெரும்பாலும் இருப்பதில்லை என்பதே சிக்கல்.
இந்த தளமே கூட நினைவுகளை எழுதும் தளமாக ஆகிவிட்டதோ என்னவோ. இளைப்பாறவும் நிதானித்து நினைவகளை ஒழுங்கு படுத்தி மடித்து அதனதன் பெட்டிக்குள் வைக்க வேண்டும். சென்ற ஆண்டு இறுதியில் எடுத்த முடிவில் ஒன்றில் உறுதியாக இருந்திருக்கிறேன் என்பது பெரும் உவகையை அளிக்கிறது. இந்த வருடத்தில் அனேக நாட்கள் நாட்குறிப்பில் எழுதி இருக்கிறேன். அதிகபட்சம் பத்து நாட்கள் இங்கும் அங்குமாக விடுபட்டிருக்கலாம். கொண்டாட்டங்கள், துயரங்கள், நிகழ்வுகள் என்ன எல்லாமும் பதிவாகியுள்ளன. பழக்கங்களினால் நிறைந்த அன்றாடத்திற்கு அப்பால் எஞ்சும் நினைவுகளே நாம் வாழும் கணங்கள் என சொல்வார்கள். அத்தகைய கணங்கள் அதிகமாகவே வாய்க்கபெற்றன. துக்கத்தாலும் மகிழ்வாலும் மனம் விம்மி கண்ணீர் சொரிந்த நாட்களும் தூய அன்பின் மதர்ப்பில் மிதந்த நாட்களும், அமைதியாக உள்ளுக்குள் கொந்தளிக்கும் குமிழ்களை எங்கோ இருக்கும் நீர்நிலையை வேடிக்கை பார்ப்பது போல் விலகியிருந்து நோக்கிய நாட்களும் எல்லாமும் இவ்வாண்டு உண்டு.
இலக்கிய தளத்தை பொருத்தவரை என் அடையாளமாக இருந்துவரும் காந்தி இன்று தளத்தை சில மாதங்களாக தொடரவில்லை என்பது எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு மேலாக காந்தி இன்று தளத்தை நடத்தி வருகிறேன். நண்பர் நட்பாஸ் துணை நின்றதால் தான் அதுவும் கூட சாத்தியம் என இப்போது தோன்றுகிறது. ஆனால் இன்ன காரணம் என்ன விளக்கிக்கொள்ள முடியவில்லை, ஏதோ ஒரு விலக்கம் அல்லது சோம்பல். புதுப்பித்து வார இதழாக ஆறேழு இதழ்கள் கொண்டு வந்தோம். மாறுதல் கொஞ்சம் ஆர்வம் ஏற்படுத்தும் என நம்பினேன்.ஆனால் அந்த முயற்சியும் நின்றுபோனது. மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் காந்தி தளத்தை தொடர்வேனா என என்னால் உறுதியுடன் சொல்ல முடியவில்லை. ஏனெனில் எனக்கு இத்தகைய இடைவெளிகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இம்முறை தொடர முடியுமா என தெரியவில்லை. ஆயுர்வேத நூல் குறித்து வாசிக்கவும் எழுதவும் வேண்டி கொஞ்சம் காந்தியை விட்டு விலகினேன். பின்னர் சில புனைவு முயற்சிகள் அவ்விடைவேளியை மேலும் தொலைவாக்கியது. ஆனால் காத்திரமான கட்டுரைகள், எழுதியே ஆக வேண்டும் என உந்துதல் அளிக்கும் விஷயங்கள் தென்பட்டால் நிச்சயம் எழுதுவேன். காந்தி இன்று தளத்தை தான் தொடர ஆர்வம் குறைந்திருக்கிறதே தவிர காந்தியின் மீது அல்ல.
ஜோர்பா எனும் கிரேக்கன் நாவலை மொழியாக்கம் செய்து முடிக்க வேண்டும் என விரும்பினேன் அதுவும் நடக்கவில்லை. இரண்டு அத்தியாயங்களுடன் அப்படியே நிற்கிறது. அண்மையில் பாவண்ணன் அவர்களை சந்தித்தபோது கொஞ்சம் ஊக்கமளித்தார். நவம்பருக்குள் முடித்து தருவதாக உறுதியளித்த ஆயுர்வேத நூல் அப்படியே நிற்கிறது. அதற்காக வாசிக்க அனேக புத்தகங்கள் தரவிறக்கியும் வாங்கியும் வைத்திருக்கிறேன். வாசிக்கவும், குறிப்புகள் எடுக்கவும் செய்கிறேன். ஆனால் அது குறுகிய காலத்தில் முடியும் படைப்பாக இருக்காது என உணர்கிறேன். இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று தோன்றுகிறது. போதிய தரவுகளை சேகரித்தபடி இருக்கிறேன். உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் நேரம் ஒதுக்கி இவை இரண்டையும் செய்ய வேண்டும். வரும் வருடத்திற்குள் முடிக்க வேண்டும். பார்ப்போம்.
சில சிறுகதைகளை எழுதவும், கவனம் பெறவும் முடிந்தது இந்த ஆண்டின் நல்ல விஷயம். இரண்டு நாவல் கருக்கள் மனதில் முளை விட துவங்கியுள்ளன. வரும் ஆண்டு நிச்சயம் ஒரு நாவலாவது எழுத துவங்கிவிடுவேன் என தோன்றுகிறது. மேலும் சில கதைகளையும் எதிர்நோக்கலாம். சில கவிதைகளும் முயன்றிருக்கிறேன். கட்டுரைகள் எப்போதும் போல் தொடர்ந்து கொண்டே தானிருக்கின்றன. சென்ற ஆண்டை காட்டிலும் கொஞ்சம் அதிகம் வாசித்ததாக தோன்றுகிறது. ஆனால் ஆம்னிபஸ் தளத்தை நடத்திய காலம் போல் இப்போது முனைப்புடன் மதிப்புரைகளை எழுதவில்லை. தினமும் தொடர்ந்து வெண்முரசு வாசித்து வருகிறேன். அபாரமான அனுபவம். அதற்கும் ஓராண்டு ஆகப்போகிறது. வழக்கம் போல் சென்ற புத்தக கண்காட்சியில் வாங்கிய சரிபாதி புத்தகங்கள் தீண்டபடாமலே கிடக்கிறது. இதோ அடுத்த கண்காட்சிக்கு கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன். காரைக்குடியில் திறக்கப்பட்ட புதிய நூலகத்தில் உறுப்பினரானதால் வாரந்தோறும் வாசிக்க முடிந்தது.
இந்த வருடம் சிலபல தொலைக்காட்சி தோன்றல்கள் கொஞ்சம் ஒளிவட்டத்தை அளித்தது. நீயா நானா போன்ற நிகழ்ச்சியில் பங்குகொள்வதில் சில நன்மைகள் உண்டு. அது ஒரு திட்டமிடபடாத விவாத நிகழ்வு என்பதால் புதிய கோணங்கள் வெளிப்படும். அல்லது சமூக யதார்த்தம் புலப்படும். அதைவிட முக்கியமாக இன்று உள்ளூரில் நான் ஒரு சோட்டா பிரபலமாக / அறிவு ஜீவியாக அறியபடுகிறேன். காரைக்குடி போன்ற சிற்றூரில் இது ஒரு பெரிய நிகழ்வாகத்தானே இருக்க முடியும். அதை வணிகமாக மாற்றிக்கொள்ள எனக்கு தெரியவில்லை அல்லது விரும்பவில்லை என்பது வேறு விஷயம். சில ஆளுமைகளின் பரிச்சயம் நீயா நானா வழியாக நிகழ்ந்தது. பெரும்பாலும் குறுகிய கால திட்டமிடலில் வழியாகவே நிகழ்ச்சிக்கு பயணிக்க வேண்டியதாய் இருக்கும். காலை நாலரை மணிக்கெலாம் புறப்படும் பல்லவன் எக்ஸ்ப்ரசில் எதாவது ஒரு முன்பதிவற்ற பேட்டியில் ஏறிக்கொண்டு சென்னை வந்தடையும் வரை வாசித்தபடியே வருவேன். இரண்டு புத்தங்களையாவது வாசித்து விட முடியும். சாதாரணமாக அப்படி எழு மணிநேரம் ஒரு சேர வாசிக்க நமக்கு கிடைப்பதில்லை. துவக்கத்தில் நம் சிந்தனைகள் திடிரென்று லட்சகணக்கான மனிதர்களின் எண்ண ஓட்டத்துடன் ஊடாட போகிறது என்பதும், அதில் சிலரின் சிந்தனை விசையை அணுவளவேனும் மாற்றபோகிறேன் என்றும் தோன்றும்போது நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லிற்கும் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டியதாய் இருக்கிறது என எண்ணிக்கொண்டேன். எனக்கு அது அச்சமும் பதட்டமும் அளிக்கிறது. ஆனால் இது உண்மையில்லை என்பதை என்னால் உணர முடிகிறது. இது ஒரு குறுகிய கால பிரபல்யம் என்பதற்கு அப்பால் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரியவில்லை. ஒருவேளை எல்லாவற்றின் மீதிருக்கும் நம்பிக்கையும் எனக்கு குறைந்து வருவதன் வெளிப்பாடா இது என தெரியவில்லை. ஆனால் தொலைக்காட்சி தோன்றல்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நிச்சயம் உறுதியாக இருக்கிறேன்.
உடல் எடையை குறைக்கும் முயற்சி இந்த ஆண்டும் தோல்வி. இப்போது புதிதாக ஷெட்டில் ஆட துவங்கி இருக்கிறேன். நன்றாகவே இருக்கிறது. நிச்சயம் உடலை ஒழுங்காக பேணியாக வேண்டும். உடற்பயிற்சிகளை காட்டிலும் இத்தகைய விளையாட்டுக்கள் மனதிற்கும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்த ஆண்டாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். பார்ப்போம்.
தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு மேலும் மனம் பன்பட்டுள்ளது என்றே எண்ணுகிறேன். காயங்களில் இருந்து சட்டென மீண்டு வர இயல்கிறது. இந்த திறன் மேலும் பல்கி பெருக வேண்டும். எவரையும் காயபடுத்தாமல் இருக்க வேண்டும். சமரச போக்குகள் கூட சிலவேளைகளில் சுற்றியுள்ளவர்களை புண்ணாக்கி விடுகிறது. இங்கே ஒவ்வொரு மனிதனும் தான் எவாராலாவது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறான், எவரும் தன்னை புரிந்துகொள்ளவில்லை என வருந்துகிறான், ஆனால் அவன் எவனையும் புரிந்துகொள்ள முயல்வதே இல்லை. ஒருகால் அப்படி எவராலும் எவரையும் புரிந்துகொள்ளவே முடியாதோ என்று கூட தோன்றுகிறது. எங்கோ எல்லா மனிதர்களும் ஒன்று போல் ஆகிறார்கள். ஆனால் உற்று நோக்க ஒவ்வொருவரும் வேறுவேறானவர்கள் என தோன்றுகிறார்கள். ஒரு மணற்துகள் பிறிதொன்று இருப்பதில்லை. வரும் ஆண்டு மேலும் நுண்ணர்வு கொண்டவனாக, மனம் கனிந்தவனாக இருக்க வேண்டும்.
மருத்துவனாக இந்த ஆண்டு இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்றே எண்ண தோன்றுகிறது. பெரியளவில் தோல்விகள் என ஏதுமில்லை ஆனால் பெரிய அளவில் வளர்ச்சியும் ஏதுமில்லை. மருத்துவ முகாம் வைத்தால் கூட ஆட்கள் வருவதில்லை என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை. லயன்ஸ் க்ளப் போன்ற தண்ட செலவுகளில் இருந்து இந்த ஆண்டு என்னை விடுவித்துக்கொள்ள இருக்கிறேன். பிள்ளைபேறு எனும் நல்வரம் இவ்வாண்டு சித்திக்க வேண்டும் எனபதே இப்போது என்னுடைய தினப்படி பிரார்த்தனை.
நொடி தோறும் மலரும் அற்புத வாழ்க்கை அமைய வேண்டும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருப்பதை தவிர வேறு என்ன வேண்டும் இந்த வாழ்வில்? நண்பர்களுக்கு மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைவான வாழ்வமைய வேண்டுகிறேன்.
எளிமையாகவும் உண்மையாகவும் எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்
ReplyDelete