மாபெரும் வீழ்ச்சிகளுக்கும் தோல்விகளுக்கும் இயல்பாகவே ஒரு காவியத்தன்மை வந்துவிடுகிறது. வெற்றி நம்மை நிலைகுலைய செய்கிறது. அது நிச்சயமற்றது என எண்ண செய்கிறது. இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் வீழ்வோம் எனும் அச்சம் நம்மை துரத்துகிறது. வீழ்ச்சியில் தான் மனிதன் அமைதி கொள்கிறான் என கூட தோன்றுவதுண்டு. வீழ்ச்சி எத்தனைக்கு எத்தனை உயரத்திலிருந்து நிகழ்கிறதோ அத்தனைக்கு அத்தனை மாபெரும் காவியமாகிறது. உலகின் மாபெரும் காவியங்களும் பேரிலக்கியங்களும் வீழ்ச்சியின் ஆழத்தையும் அதை மீறி எஞ்சும் மானிட வாழ்வை பற்றி பேசுவதாகவே இருக்கிறது.
வசந்தபாலனின் காவியத்தலைவன் அப்படியான வீழ்ச்சியையும் அதற்கு அப்பால் என்ன எனும் கேள்வியையும் எழுப்புகிறது. நான் திரைப்பட நுட்பங்களை அதன் கலை நுணுக்கங்களை முறையாக அறிந்த விமர்சகன் அல்ல. ஒரு சினிமா ரசிகனாக என்னை உலுக்கும் படங்களை பற்றி எழுத வேண்டும் எனும் ஒரே நோக்குடன் தான் இதை எழுதுகிறேன். அதன் அத்தனை வணிக சமரசங்களுடனும் எனக்கு காவியத்தலைவன் மிக நல்ல அனுபவமாகவே இருந்தது.
பைரவனின் நடிப்பு முறையை சிலாகிக்கும் காட்சியில் கோமதிக்கும் காளிக்கும் இடையில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. பைரவனை போல் மாபெரும் நட்சத்திரமாக கைதட்டல்களை அள்ளி குவிக்கும் நடிகனாக பேர் பெற வேண்டும் என விழைகிறான். காளி நேர்மாறாக தான் அந்த இடத்திற்கு சென்று விட்டேன் எனும் உணர்வை அடைந்தால் போதும், கைதட்டல்களில் என்ன இருக்கிறது என்கிறான். கலை எதற்காக? யாருக்காக? காலங்காலமாக மீண்டும் மீண்டும் எழுப்பப்படும், விவாதிக்கப்படும் கேள்வி தான் காவியதலைவனின் மையம்.
கோமதி புகழின் படிகளில் விறுவிறுவென ஏறுகிறான். அதன் உச்சியில் இருந்து வீழ்கிறான். காளி குருவின் சாபம் பெற்று, குருவை சபித்து, காதலியை இழந்து சீர்கெட்டு திரும்புகிறான். காளி மரபை உடைத்து புதிய பாதைகளை தேர்வு செய்கிறான். கோமதி இல்லையேல் காளியில்லை. கோமதி வழியாகவே, அவனுடன் இயைந்தும் விலகியும் தனது இடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறான். காளி உள்ளூர தனது ஆதர்சமாக கோமதியையே எண்ணுகிறான். எல்லா தகுதிகளும் ஒழுக்கமும் இருந்தும் தான் வஞ்சிக்கபடுவதாக கோமதி நம்புகிறான். அவனால் தகுதியற்றவனாக அவன் எண்ணும் காளியின் வளர்ச்சியை, அவன் மீது எல்லோருக்கும் இருக்கும் ஈர்ப்பை, அவனது பெருந்தன்மையை, குருவின் மனதில் அவனுக்கு இருக்கும் இடத்தை, வடிவு அவன் மீது கொண்டிருக்கும் காதலை தர்க்கபடுத்திகொள்ள முடியவில்லை. அத்தனையும் இருந்தும் தான் இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டியதாக இருக்கிறது என மீண்டும் மீண்டும் கேட்டுகொள்கிறான். அதற்காக வன்மம் கொள்கிறான். சதிகளின் வழியாக அவனை அழித்து மேலெழ பார்க்கிறான். காளி மீது கோமதிக்கு இருக்கும் வன்மம் துவக்கத்தில் தனிப்பட்டதாக இல்லை என்பது கூடுதல் அடர்த்தியை அளிக்கிறது. அவனை மீண்டும் இணைத்து கொள்வது, அவனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர உதவுவது என அவன் மீது அக்கறையுடன் தான் இருக்கிறான். காளி கோமதியை மீட்கும் இடத்தில் அவனுடைய இடத்தை பற்றி இருந்த கவலை தனிப்பட்ட வன்மமாக மாறுகிறது. காளியிடம் இருக்கும் எது அவனை கோமதியிடம் இருந்து தனித்து காட்டுகிறது? நேர்மை என்றும் உண்மை என்றும் சொல்லலாம். வேறுவகையில் வெள்ளேந்திதன்மை என்றும் கூட சொல்லலாம். மேலான கலை என்றுமே உண்மையின் முகமாகவே இருந்து வந்திருக்கிறது. உள்ளீடற்ற போலியான கலை எத்தனை தூரம் உண்மையை போலி செய்தாலும் அது அந்த உயரத்தை தொடுவதில்லை. கலையில் உண்மை, நேர்மை என்பதை எப்படி விளக்குவது என தெரியவில்லை. அது உழைப்பு, ஆர்வம், முனைப்பு என்பதை தாண்டி வேறொன்று. கலையின் வழியாக கலைஞன் எதை அடைகிறான் எனும் மைய கேள்வி முக்கியமானது. காளி ஒருகால் எவரும் அறியாத நடிகராக இருந்திருந்தாலும் கூட அவனால் தான் மாபெரும் நடிகன் எனும் நிறைவை அடைந்திருக்க முடியும். ஒழுக்கமற்ற, நேர்மையற்ற பைரவன், ஒழுக்கமற்ற, நேர்மை கொண்ட காளி, ஒழுக்கம் கொண்ட. நேர்மையற்ற கோமதி எனும் மூன்று பாத்திரங்களின் வழியே இயக்குனர் சில கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்புகிறார்.
எனக்கு இந்த கேள்விகளே முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இது தமிழ் நாடக பின்னணியில் விவாதிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை நாடக உலகை ஆவணபடுத்தும் முயற்சி போன்ற எதிர்பார்ப்புகள் எனக்கில்லை. புராண நாடகங்களில் இருந்து சமூக நாடகங்களுக்கான தாவலின் சித்திரம், குரு - சீட உறவின் நுட்பங்கள், காளியின் காதல், வடிவின் காதல் ஆகியவைகளை கொண்டு ஓரளவிற்கு நம்பகமான நாடக உலகை சிருஷ்டித்து காண்பிக்கிறது என்றே எண்ணுகிறேன். இசை, வசனம் ஆகியவை மேடை நாடகத்திற்கு நியாயம் செய்யவில்லை எனும் குற்றசாட்டை பலரும் முன்வைக்கிறார்கள். என்னளவில் இவை இரண்டுமே இத்திரைப்படத்தின் மிகமுக்கியமான பலம். குறிப்பாக துருத்தாத வசனங்களும் அபாரமான பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது என்றே எண்ணுகிறேன். மேலும் காட்சிகளில் உள்ள நிறம் கடந்தகால கனவுலகை கட்டமைக்கிறது. நாடக உலகின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளே மிக முக்கியமான குறைகளாக சுட்டிகாட்டபடுகின்றன. அதில் நியாயம் இருக்கலாம், சமரசங்கள் இருக்கலாம், அவைகளை சீர்செய்வதன் வழியாக இதை காட்டிலும் மேலான சினிமாவை உருவாக்கியிருக்கலாம் என வேண்டுமானால் சொல்லலாம். வணிக சினிமா சட்டகத்திற்குள் காவியத்தலைவன் நிச்சயம் ஒரு மிக நல்ல முயற்சி. எந்த அளவிற்கு தீவிரத்தன்மையை அளிப்பது என்பதில் சில குழப்பங்கள் ஊசலாட்டங்கள் இயக்குனருக்கு இருந்திருக்கலாம். நாசரும், ப்ரித்வியும், சித்தார்த்தும் நல்ல நடிப்பை வெளிகாட்டி இருக்கிறார்கள். என்னளவில் நான் திரும்ப திரும்ப பார்க்கும் படமாகவே காவியத்தலைவன் இருக்கும். காவியத்தலைவன் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
ப்ருத்விராஜ் எவ்ளோ கத்தி பேசினாலும் மலையாளம் வாடை தான் அடிக்குது. அதுவும் தமிழ் நாடகத்தில் #கொடுமை
ReplyDelete